முள்பாதை 15

This entry is part [part not set] of 31 in the series 20100128_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

ஆழமான உறக்கத்தில் இருந்த எனக்கு யாரோ தட்டி எழுப்பினாற் போல் விழிப்பு வந்தது. திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒரு நிமிடம் நான் எங்கே இருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. பிறகு நினைவுக்கு வந்தது, நான் இருப்பது மெலட்டூரில் அத்தை வீட்டில் என்று. படபடப்பு குறைந்து நிதானமாக மூச்சு விட்டுக்கொண்டேன். மறுபடியும் சுற்றிலும் பார்த்தேன். எல்லோரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்கள். கையில் வாட்ச் இல்லாததால் மணி என்னவென்று தெரியவில்லை. இதுவே எங்கள் வீடாக இருந்தால் தலையைத் திருப்பி வலது பக்கம் பார்த்தால் வேஜைமீது ரேடியம் டயல் கொண்ட அழகான கடியாரம் மணியைக் காட்டுவதற்குத் தயாராக இருப்பதுபோல் டிக் டிக் என்று ஓசைப்படுத்திக் கொண்டே இருக்கும். அதோடு நைட்டியுடன் உறங்குவதற்கு பழக்கப்பட்ட எனக்கு இந்த காட்டன் புடவை எவ்வளவு மெத்தென்று இருந்தாலும் உடம்பை துணியால் சுற்றிவிட்டது போல் இடைஞ்சலாகத்தான் இருந்தது.
ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டேன். திடீரென்று “அம்பா!” என்று மாடு கத்துவது கேட்டது. அந்தக் கத்தல் சாதாரண கத்தல் போல் இல்லை. ஏதோ ஆபத்தில் சிக்கிக் கொண்டு உதவிக்காகக் குரல் கொடுப்பதுபோல் உருக்கமாக இருந்தது. இரவு நேரத்தில் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு வந்த அந்த கத்தலைக் கேட்டு என் இதயம் வேகமாக துடித்தது. கத்தல் தொடர்ந்து இரண்டு மூன்று முறை கேட்டது. அடுத்த அறையில் ஆழமான உறக்கத்தில் இருந்த கிருக்ஷ்ணன் கட்டிலில் புரண்டு படுத்த ஓசை கேட்டது.
மற்றொரு முறை மாடு கத்துவது கேட்டது.
கிருஷ்ணன் சட்டென்று எழுந்து வெளியே வந்தான். நாங்கள் படுத்திருந்த ஹாலில் ஒரு மூலையில் இருந்த லாந்தர் திரியைத் தூண்டிவிட்டு கையில் எடுத்துக் கொண்டு ஓட்டமும் நடையுமாக கொல்லைப்புறம் சென்றான். நான் கண்களைத் திறந்துகொண்டு அவனைக் கவனித்துக் கொண்டிருக்கும் விஷயம் அவனுக்குத் தெரியாது.
கொல்லைப்புறம் போன பத்து நிமிடங்கள் கழித்து கிருஷ்ணன் “அம்மா! ராஜீ!” என்று உரத்தக் குரலில் அழைப்பது கேட்டது.
நான் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டேன். அத்தை புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து ராஜி என்று நினைத்துக் கொண்டு “ராஜி! அண்ணன் கூப்பிட்டாற்போல் இருந்ததே? என்னைக் கூப்பிட்டானா என்ன?” என்றாள்.
“ஆமாம் அத்தை. மாடு கத்துகிறது. கிருஷ்ணன் எழுந்து பார்க்கப் போயிருக்கிறான். உங்களையும் அழைத்தான்” என்றேன்.
“அப்படியா! மாடு கன்று போட்டு விட்டதோ என்னவோ.” அத்தையும் எழுந்துகொண்டு கொல்லைப்புறம் போனாள்.
அதற்குமேல் என்னால் தூங்க முடியவில்லை. ராஜேஸ்வரியைத் தட்டி எழுப்பினேன். எங்கள் பேச்சுக் குரலை கேட்டு மதுவும் எழுந்து கொண்டான். மூவரும் சேர்ந்து கொண்டு கொல்லைப்புறம் சென்றோம். வெளியே பொலபொலவென்று பொழுது விடிந்து கொண்டிருந்தது. பறவைகள் குரலை எழுப்பிக் கொண்டிருந்தன. கிழக்கு வானில் குங்குமம் கொட்டினாற்போல் செஞ்சிவப்பு வர்ணம் எங்கும் படர்ந்திருந்தது. வெளிச்சமும் இருளும் கலந்த அந்த சூழ்நிலை எல்லாவற்றையும் மறந்து அந்தப் பக்கமே பார்க்கத் தூண்டியது.
“அக்கா! மாடு கன்று போட்டுடுத்து.” எங்களுடன் நடந்து வந்து கொண்டிருந்த மது சட்டென்று முன்னால் ஓட்டமெடுத்தான்.
“காளையா? கிடாரியா? என்ன கன்று என்று அண்ணாவைக் கேள் மது.” ராஜேஸ்வரியும் நடையின் வேகத்தை கூட்டினாள். நான் கிழக்கு வானிலிருந்து பார்வையைத் திருப்பிக்கொள்ள முடியாமல் மெதுவாக நடந்து வந்து மாட்டுக் கொட்டகைக்குள் எட்டிப் பார்தேன்.
கிருஷ்ணன் அப்பொழுதுதான் பிறந்த கன்றுகுட்டியை பத்திரமாக பிடித்தபடி துடைத்துக் கொண்டிருந்தான். மாடு கன்றுகட்டியை சுற்றிச் சுற்றி வந்து நக்கிக் கொடுத்துக் கொண்டிருந்தது.
மது கிருஷ்ணனின் முதுகு பக்கம் நின்று கழுத்தைக் கட்டிக் கொண்டு உற்சாகத்துடன் முன்னும் பின்னுமாக ஆடிக்கொண்டே “அண்ணா! கன்றுக் கட்டிக்கு மல்லி என்று பெயர் வைப்போமா?” என்று கேட்டான்.
மதுவின் ஆட்டத்திற்கு ஈடுகொடுத்துக் கொண்டே “இருடா மதூ! இத்தனை நாட்களுக்குப் பிறகு நம் வீட்டில் காளை கன்று பிறந்திருக்கு” என்றான் கிருஷ்ணன்.
“உண்மையாகவா அண்ணா?” ராஜேஸ்வரியால் சந்தோஷத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை.
“ஆமாம் ராஜி.” அத்தை சொன்னாள்.
எல்லோரின் முகத்தை வரிசையாகப் பார்த்த எனக்கு காளை கன்று என்றதும் அவர்களிடம் எற்பட்ட மகிழ்ச்சியைப் பார்த்ததும் ஆத்திரமாக இருந்தது.
இந்த சுருஷ்டியில் ஆண் பெண் இருவரும் சமம்தான். உயர்வு தாழ்வு எல்லாமே மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். நம் வீடுகளில் பெண்குழந்தை பிறந்ததுமே “அய்யோ!” என்று உச்சு கொட்டுவதையும், ஆண் குழந்தை என்றதுமே “அட! அப்படியா!” என்று மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதிப்பதையும் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
ஆண்பெண் இருவருக்கும் தனித்தனி குணாதிசயங்கள் இருக்கு. ஒருவிதமாக யோசித்துப் பார்த்தால் பெண் இனத்திற்குத்தான் பொறுப்பும், கடமைகளும் அதிகம் என்று எனக்குத் தோன்றும்.
அதற்குள் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே “அம்மா! இதெல்லாம் உன் அண்ணன் மகள் காலடி எடுத்து வைத்த வேளையின் விசேஷம். எப்போதும் வராதவள் வந்ததால் இத்தனை நாளும் இல்லாத விதமாகக் காளை கன்று பிறந்திருக்கு” என்றான்.
அத்தை, ராஜி, மது என் பக்கம் பார்த்து சந்தோஷமாக சிரித்தார்கள். நான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டேன்.
“அத்தை! என் வருகையால் உங்கள் வீட்டில் காளை கன்று பிறந்திருக்கு என்று உங்கள் மகண் சொல்லி விட்டதற்காக நான் ஒன்றும் பூரித்துப் போய் விட மாட்டேன். ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு பெண் எவ்வளவு வேதனையை அனுபவிப்பாளோ, அந்தப் பொறுப்பு எவ்வளவு கஷ்டங்கள் நிறைந்ததோ புரிந்து கொள்ளாத மனிதர்களைக் கண்டால் எனக்கு எரிச்சல்தான் வரும். யோசித்துப் பார்த்தால் ஆண்களை உயர்வாக மதிக்க வேண்டிய அவசியம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.”
நான் என்ன பேசுகிறேன் என்று புரியாததால் அத்தை குழப்பமாக பார்த்தாள். ராஜேஸ்வரி ‘என்ன பதில் சொல்லப் போகிறாய்?’ என்பதுபோல் அண்ணனை முறுவலுடன் பார்த்தாள்.
கிருஷ்ணனின் முகம் சீரியஸாக மாறியது. கம்பீரமான குரலில் “பத்து மாதம் வயிற்றில் சுமந்து குழந்தையைப் பெறுபவள் பெண்தான் என்றாலும் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருப்பவன் ஆண்தான். அதனால் என்னதான் மறுத்தாலும் ஆண் இனம்தான் உயர்வானது” என்று மொழிந்தான்.
யதேச்சையாக மாடு இருந்த பக்கம் திரும்பிய எனக்கு திடீரென்று கிருஷணனின் குரல் காதில் விழவில்லை. அதிர்ச்சியடைந்தவள் போல் மாட்டையும், அந்த சூழ்நிலையையும் பார்த்தேன். பிறந்து வளர்ந்து இத்தனை வருடங்கள் ஆனாலும் தப்பித் தவறிகூட ஒரு பெண் பிரசவிப்பதையோ, ஆடுமாடுகள் குட்டிப் போடுவதையோ பார்த்ததில்லை.
அப்படி இருக்கும்போது திடீரென்று இந்தக் காலை வேளையில் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த நேரத்தில் அப்பொழுதுதான் ஈன்றெடுத்த மாட்டைப் பார்க்கும் போது பயமாக இருந்தது. வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. சுருஷ்டி என்பது இவ்வளவு பயங்கரமானதா? இவ்வளவு அருவருப்பான சூழ்நிலையிலா ஒரு பிராணி உலகத்திற்கு வருகிறது? அங்கிருந்து உடனே ஓடிப் போய் விடவேண்டும் என்று தோன்றியது.
அத்தையும், ராஜியும் எந்த அருவருப்பும் இல்லாமல், அது மிக இயற்கையானது என்பதுபோல் நின்றிருந்தார்கள். அவர்கள் பார்வை புதிதாக பிறந்த கன்றுக்குட்டியின் மீதே நிலைத்திருந்தது. கிருஷ்ணனைப் பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை. மடியிலிருந்த கன்றுக்குட்டியை அன்புடன் தடவிக் கொடுத்து சுத்தப்படுத்திக் கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்க்கும்போது எனக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்தது. அவன் கண்களில் கருணையும், முகத்தில் மகிழ்ச்சியும் ஸ்பஷ்டமாக தென்பட்டன. சட்டென்று உள்ளே ஓடி பெட்டியிலிருந்து கேமராவை எடுத்துக் கொண்டு மறுபடியும் கொல்லைப்புறம் வந்தேன்.
மது கழுத்தைக் கட்டிக் கொண்டிருக்கையில் மடியில் கிடந்த கன்றுக்குட்டியுடன் இருந்த கிருஷ்ணனை போட்டோ எடுத்தேன்.
“ஏய்… என்ன இது?” கேமராவுடன் நின்றிருந்த என்னைப் பார்த்ததும் கன்றுக்குட்டியை கவனமாக கீழே கிடத்தி, வேக்கோலுடன் கைகளை துடைத்துக் கொண்டே வெளியே வந்தான்.
“போட்டோ” என்றேன். அவனைத் தனியாக எடுப்பதற்காக வ்யூ பார்த்துக் கொண்டே
கிருஷ்ணன் கீழே குனிந்து சிறிய கல் ஒன்றை எடுத்து என்மேல் வீசுவதற்குத் தயாராகப் பிடித்துக் கொண்டு “மரியாதையாக சொன்னதை கேள். போட்டோ கீட்டோ எதுவும் எடுக்கக் கூடாது. நீ இங்கிருந்து எந்த நினைவுகளையும் எடுத்துக் கொண்டு போகக் கூடாது” என்றான்.
“நீ யார் என்னை ஆணையிடுவதற்கு?” வாயை மூடிக்கொள் என்பதுபோல் உரத்தக் குரலில் சொன்னேன்.
கிருஷ்ணன் கல்லை எறிப் போனான். எறிந்து விட்டான் என்றே நினைத்தேன். அவன் முகம் அவ்வளவு சீரியஸாக இருந்தது. அடிபட்டு விடுமோ என்ற பயத்தில் நான் பக்கவாட்டில் நகர்ந்தேன்.
கிருஷ்ணன் கல்லை எறியவில்லை. கீழே போட்டுவிட்டு கலகலவென்ற நகைத்தான். கேமெராவின் வழியாக பார்த்துக் கொண்ருந்த எனக்கு அந்தச் சிரிப்பு உற்சாகத்தைத் தந்தது. சட்டென்று பட்டனை அழுத்தினேன். பற்கள் எல்லாம் தெரிவதுபோல் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனின் உருவத்தை கேமெராவில் சாசுவதமாகப் பதிவு செய்து விட்டேன். அவன் அப்படி மனம் விட்டுச் சிரித்து நான் பார்த்ததே இல்லை.
கிருஷ்ணன் சிரிப்பதை நிறுத்திவிட்டு சிரியஸாக திரும்பிப் பார்த்தான். “அம்மா! உங்க அண்ணன் மகள் நான்கு நாட்கள் இங்கே இருக்க நினைத்தால் இது போன்ற பைத்தியக்காரத்தனமான வேலைகளைச் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிடு. இன்னொரு தடவை இந்த ஊரையோ, இங்கே இருக்கும் மனிதர்களையோ போட்டோ எடுக்க முயற்சி செய்தால் அடுத்த நிமிடமே வண்டியில் ஏற்றி ஊருக்கு அனுப்பி விடுவேன் என்று நான் சொன்னதாகச் சொல்லு. பிறகு நீ என்ன கோபித்துக் கொண்டாலும் சரி” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
அவன் போன திசையைப் பார்த்துக் கொண்டே இதழ்களை இறுக்கி பழிப்புக் காட்டினேன். அதென்னவோ தெரியவில்லை. பின்னாலிருந்து அவன் உருவத்தை எத்தனை முறை பார்த்தாலும் இன்னும் பார்க்க வேண்டும் என்று தோன்றுவது கூட ஒரு விசேஷம்தான்.
மறுநாள் அத்தை சீமப்பாலை திரட்டுப்பாலாகக் கிளறினாள். எல்லோரும் அமிருதத்தைச் சாப்பிடுவதுபோல் சந்தோஷமாக சாப்பிட்டார்கள். அத்தை எனக்கும் கொடுத்தாள். அதைப் பார்த்ததும் எனக்குக் குட்டிபோட்ட மாடுதான் நினைவுக்கு வந்தது. வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வந்தது. வேண்டாமென்று மறுத்துவிட்டேன்.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்