முள்பாதை 14

This entry is part [part not set] of 35 in the series 20100121_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

முக்காலியின் மீது வைத்திருந்த அரிக்கேன் விளக்கை எடுத்துக்கொண்டு சூட்கேஸிலிருந்து காட்டன் புடவையை எடுக்கப் போனேன். சூட்கேஸின் மீது நான் ஊரிலிருந்து வரும் போது கொண்டு வந்த “விமென் அண்ட் ஹோம்” பத்திரிகை இருப்பதை பார்த்துவிட்டு அதை எடுத்து கட்டில் மீது வீசிவிட்டு சூட்கேஸைத் திறக்கப் போனேன்.
கட்டில்மீது வீசப்பட்ட பத்திரிகை பிரித்தாற்போல் திறந்த நிலையில் விழுந்தது. அது நடுப்பக்கம்.அந்தப் பக்கத்தில் தொடர்கதை இருந்தது. அந்தப் பத்திரிகை நான் ஊருக்குக் கிளம்பும் நாளன்று தான் வந்தது. அதில் ரொம்ப அருமையான காதல் கதைகள் தொடராக வந்து கொண்டிருந்தன. படிக்க நேரம் இல்லாததால் பத்திரிகையைக் கையோடு கொண்டு வந்திருந்தேன்.
இன்று மதியம் படிப்பதற்காக சூட்கேஸிலிருந்து வெளியே எடுத்தேனே தவிர நேரமே இருக்கவில்லை. பூச்சூட்டலுக்குப் போகும் முன் சூட்கேஸ்மீது வைத்துவிட்டு கிளம்பிவிட்டேன்.
அந்தப் பத்திரிகையில் கதைக்கு ஏற்றவாறு ஆர்டிஸ்டுகள் படம் போடுவார்கள். காதல் தொடர்கதை என்பதால் காதலனும், காதலியும் நெருக்கமாக இருப்பதுபோல் படங்கள் வரையப்பட்டிருக்கும். அந்தத் தொடர்கதை பிரசுரிக்கப்பட்ட பகுதியில் படங்களை மட்டும் யாரோ கவனமாகக் கத்தரித்து எடுத்து விட்டிருந்தார்கள்.
பத்திரிகையைக் கையில் எடுத்துப் பார்த்தேன். ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருந்த படங்கள் நான்கு களவாடப்பட்டிருந்தன. எனக்கு அழுகை ஒன்றுதான் பாக்கி. உண்மையைச் சொல்லப் போனால் அந்தக் கதைகளைவிட அந்தப் படங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உயிரோட்டத்துடன் காதல் உணர்வுகள் பிரதிபலிக்கும் வகையில் ரொம்ப அற்புதமாக வரையப்பட்டிருக்கும்.
யார் செய்திருப்பார்கள் இந்தக் காரியத்தை? கீழ் உதட்டை பற்களால் அழுத்தியபடி யோசித்தேன். யாராக இருக்கும்? இந்தப் படங்களால் யாருக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டிருக்கும்?
திடீரென்று எனக்கு நினைவு வந்தது. அத்தைக்கு இங்கிலீஷ் படிக்கத் தெரியாது. குழந்தைகளும், ராஜேஸ்வரியும் என்னுடன் பூச்சூட்டலுக்கு வந்துவிட்டார்கள். இனி எஞ்சியது யார்?
கிருஷ்ணன்!
என் முகம் செக்கச் சிவந்துவிட்டது. ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. எதற்காக இந்தக் காரியத்தைச் செய்தான்? கண்ட்ரி ப்ரூட்! இப்பொழுதே கேட்டு விடவேண்டும். ஒரு கையில் அரிக்கேன் விளக்கையும் இன்னொரு கையில் பத்திரிகையை, எடுத்துக் கொண்டு வாசற்பக்கம் திரும்பிய எனக்கு வெளியே இருந்து “அண்ணீ! புடவையை மாற்றிக் கொண்டு விட்டாயா? நான் உள்ளே வரலாமா?” என்று ராஜேஸ்வரியின் குரல் கேட்டது.
“வரலாம்” என்றேன். வெறுமே சாத்தியிருந்த கதவைத் தள்ளிக்கொண்டு ராஜேஸ்வரி உள்ளே வந்தாள்.
உள்ளே வந்தவள் என்னவோபோல் நின்றிருந்த என்னைப் பார்த்து “என்ன நடந்தது? ஏன் அப்படி இருக்கிறாய்?” என்று கேட்டாள்.
“இப்படி வாயேன்.”
அருகில் வந்தாள்.
“பார் உங்க அண்ணன் செய்த காரியத்தை?” என்றேன் பத்திரிகையைக் காண்பித்துக் கொண்டே.
ராஜேஸ்வரிக்குப் புரியவில்லை. நான் விவரமாக எடுத்துச் சொன்னேன்.
“அண்ணாவா! ஒருநாளும் அப்படிச் செய்ய மாட்டானே?” என்றாள் நம்பிக்கை இல்லாதவள்போல் பார்த்துக் கொண்டே.
“செய்தான் என்பதற்கு அத்தாட்சியாக இதைவிட வேறு என்ன சாட்சியம் வேண்டும்?”
“அண்ணா காரணம் இல்லாமல் எந்த வேலையும் செய்ய மாட்டானே?” அவளால் இன்னும் நம்ப முடியவில்லை.
“காரணம் இல்லாமல் என்ன?” என்றேன்.
“என்ன காரணம்?
“நான் இங்கே வருவது உங்க அண்ணாவுக்குப் பிடிக்கவில்லை. வந்த முதல்நாளே எனக்கு அந்த விஷயம் புரிந்துவிட்டது.”
“ச்ச… ச்ச… அப்படி எதுவும் இருக்காது. இரு… நான் இப்பொழுதே போய் கேட்டுவிட்டு வருகிறேன்.” ராஜேஸ்வரி வேகமாக போகப் போனாள்.
கையைப் பிடித்து அவளைத் தடுத்து விட்டேன். “நீ போய் கேட்பானேன்? நானே போய் கேட்கிறேன். அவனுடைய உண்மையான எண்ணம் என்னவென்று முகத்திற்கு நேராகவே கேட்டு விடுகிறேன். முட்டாள்களைக் கண்டு பயப்படும் அப்பாவி இல்லை நான்.”
ராஜேஸ்வரி யோசனையில் ஆழ்ந்தபடி அப்படியே நின்று விட்டாள். நான் புடவையை மாற்றிக் கொண்டேன். உடுத்திக் கொண்டு போன புடவையை பத்திரமாக மடித்து வைத்தேன். ராஜேஸ்வரியும் உடைகளை மாற்றிக் கொண்டாள். இருவரும் வெளியே வந்தோம்.
கிருஷ்ணன் முன் அறையில் தென்படவில்லை. வாசலில் இல்லை. சமையலறையிலும் தென்படவில்லை.
“எங்கே உன் அண்ணன்?” ஆவேசமாக கேட்டேன். உண்டு இல்லை என்று அவனை உலுக்கி எடுத்தால் தவிர மூச்சு விட முடியாத அளவுக்கு ஆத்திரத்தில் இருந்தேன்.
“அம்மா! அண்ணன் எங்கே?” ராஜேஸ்வரி அத்தையிடம் கேட்டாள்.
“காராம் பசுவைப் பார்க்க மாட்டுக் கொட்டகை பக்கம் போயிருக்கிறான். என்ன விஷயம்?” என்றாள் அத்தை. ராஜேஸ்வரி பதில் சொல்லவில்லை.
அத்தை வாழைக்காய் கறியை அடுப்பில் கிளறிக் கொண்டிருந்தாள். நான் கொல்லைப்புரம் வந்தேன். ராஜேஸ்வரியும் என் பின்னாலேயே வரப்போனாள். வேண்டாமென்று தடுத்துவிட்டேன். கொல்லைப்பக்கம் இருட்டாக இருந்தது. மாட்டுக்கொட்டகையில் வைக்கப் பட்டிருந்த அரிக்கேன் விளக்கின் வெளிச்சம் ஓரளவுக்கு வழியைக் காண்பித்துக் கொண்டிருந்தது.
மாட்டுக் கொட்டகையின் அருகில் சென்றேன். கிருஷ்ணன் புல்லை எடுத்து மாட்டுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தான். நான் வந்தது அவனுக்குத் தெரியவே இல்லை. இன்றோ நாளையோ ஈன்றுவதற்கத் தயாராக இருந்த சினைமாட்டை தட்டிக் கொடுத்து அதன் கழுத்தைத் தடவிக் கொடுத்தான். கிளம்புவதற்காக அரிக்கேன் விளக்கை கையில் எடுத்துக்கொண்டு திரும்பியவன் இருளில் வெள்ளைப் புடவையில் இருந்த என்னைப் பார்த்து அடையாளம் புரியாமல் திடுக்கிட்டு “யார்?” என்றான்.
“நான்தான்” என்றேன் அழுத்தமான குரலில். என் கோபம், ஆவேசம் அந்தக் குரலில் வெளிப்பட்டது.
என் குரலை கேட்டதும் ஓரடி பின் வாங்கினான். “இருட்டில் இங்கே எதற்காக வந்தாய்?”
“இதன் பொருள் என்னவென்று தெரிந்து கொள்ளத்தான்.” கையிலிருந்த பத்திரிகையில் படங்களைக் கத்தரித்தப் பக்கத்தைப் பிரித்து அவன் கண்ணில் படும் விதமாக நீட்டினேன். லாந்தரை தூக்கிப் பிடித்துக் கொண்டதால் கிருஷ்ணனின் முகம் எனக்குத் தெளிவாகத் தென்பட்டது. பத்திரிகையைப் பார்த்ததும் அவன் முகத்தில் பலவிதமான உணர்வுகள் தோன்றி மறைந்தன. ஆனால் அத கண்ணிமைக்கும் நேரம்தான். பிறகு அந்த முகம் சலனமற்று வெறுமையாகக் காட்சியளித்தது.
ரொம்ப நிதானமாக, மென்மையான குரலில் கிருஷ்ணன் சொன்னான். “இதோ பார் மீனா! நீ இங்கே நான்கு நாட்கள் சந்தோஷமாக கழிப்பதற்காக வந்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும். அதில் யாருக்கும் எந்த ஆட்சேபணையும் இல்லை. மேலும் நீ இங்கே வந்ததில் எங்கள் எல்லோருக்கும் சந்தோஷம்தான். நீ ஜாலியாக பொழுதைப் போக்குவதற்காக வந்திருக்கிறாய். உன் இந்தப் பயணம் எங்களில் யார் மீதும் எந்த விதமாகவும் வேண்டாத பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. அந்தப் பத்திரிகையை சற்று முன் உன் அறையில் பார்த்ததும் எனக்கு என்னவோ போல் இருந்தது. அது படிக்கக் கூடாத புத்தகம் என்றோ, அந்தப் படங்கள் பார்க்கத் தகாதவை என்றோ நான் நினைக்கவில்லை.”
“பின்னே எதற்காக அந்தப் படங்களைக் கிழித்தாய்?”
“எனக்கு ராஜியின் நினைவு வந்தது. இளம் பருவத்தில் இருப்பவள். அந்தப் படங்கள் அவள் மனதில் வேண்டாத எண்ணங்களை, நினைப்புகளை எப்படி தூண்டிவிடுமோ ஊகித்துப் பார்த்தபோது அச்சம் ஏற்பட்டது. உன் விஷயம் வேறு. சிறுவயது முதல் இது போன்ற புத்தகங்கள் பார்த்து ஓரளவுக்கு பழக்கபட்டு விட்ட உனக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கலாம். என் தங்கையின் விஷயம் அப்படி இல்லை. கல்யாண வயதை எட்டியும் சில பல இடைஞ்சல்களால் கல்யாணம் பண்ணி வைக்க முடியாத சூழ்நிலை. சிறியவர்கள் மனதில் வேண்டாத எண்ணங்கள் புகுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டிய பொறுப்பு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் மீது இருக்கிறது. நான் செய்தது தவறுதான். அந்தப் புத்தகத்தின் விலையைத் தந்து விடுகிறேன். ஊருக்குப் போனதும் வேறொன்று வாங்கிக்கொள். தயவு செய்து இதைப்பற்றி எந்த ரகளையும் செய்யாதே.”
நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன். ஓரளவுக்கு இங்கிதம் இருக்கும் எனக்கு அவன் சொன்னத சரி என்றுதான் பட்டது. ஆனால் அவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் அவமானமாக இருந்தது.
“ராஜியின் மனம் பாதிக்கப்படுமே என்றா? அல்லது அந்தப் படங்களைப் பார்த்ததும் உன் மனதில் வேண்டாத எண்ணம் ஏதாவது துளிர் விட்டதா?” வேண்டுமென்றே நக்கலாக கேட்டேன்.
போகப் போனவன் சட்டென்று நின்று என் பக்கம் பார்த்தான். அவன் முகம் கடினமாக மாறியது. ஒரு வினாடி கண்ணி¡மக்காமல் என் கண்களுக்குள் ஊடுருவுவது போல் பார்த்துவிட்டு “உன் விருப்பம். எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்” என்றான்.
அப்படிச் செல்லும்போது அவன் குரலில் தொனித்த அலட்சியமானது என் அகங்காரத்தைப் பழி வாங்கிவிட்டது போல் இருந்தது. என் பதிலுக்காகக் காத்திருக்காமல் அரிக்கேன் விளக்கை அங்கேயே வைத்துவிட்டு வேகமாகப் போய்விட்டான். இருட்டில் மறைந்துகொண்டிருந்த அவன் உருவத்தைப் பார்த்தபடி அங்கேயே நின்றிருந்தேன்.
சுயநினைவு இல்லாதவள் போல் நின்றிருந்த என் அருகில் ராஜேஸ்வரி வேகமாக வந்தாள். என் கையைப் பற்றிக் கொண்டு “அண்ணீ! அண்ணா என்ன சொன்னான்?” என்று கேட்டாள்.
“ஒன்றும் சொல்லவில்லை” என்றேன்.
ராஜேஸ்வரி அரிக்கேன் விளக்கை கையில் எடுத்துக் கொண்டாள். இருவரும் வெளியே வரும்போது மறுபடியும் கேட்டாள். “அண்ணாவிடம் கேட்டாயா?”
“கேட்டேன். அந்தப் படங்களைப் பார்த்ததும் அவன் மனதில் வேண்டாத எண்ணம் ஏதோ வந்ததாம்.”
“வேண்டாத எண்ணமா?”
“ஆமாம்.”
ராஜேஸ்வரி குழப்பமாக என் முகத்தைப் பார்த்தாள். நான் கலகலவென்று சிரித்துவிட்டேன். அவளும் வலுக்கட்டாயமாகச் சிரித்தாள். இருவரும் உள்ளே வந்தோம்.
கொல்லை வாசற்படியில் எங்களுக்கு எதிரே வந்த கிருஷ்ணனை பார்த்ததும் நான் சிரிப்பை நிறுத்திவிட்டு முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டேன்.

***********

நாங்கள் சாப்பிட உட்காரும்போது கிருஷ்ணன் “அம்மா! ராஜிக்கு திருஷ்டி சுற்றி போடச் சொன்னேன். போட்டாயா?” என்று கேட்பது காதில் விழுந்தது.
“இல்லை. மறந்துவிட்டேன். இப்பவே செய்து விடுகிறேன்.” பதில் சொன்னாள் அத்தை.
அத்தை எங்க இருவரையும் அழைத்து முதலில் எனக்கு திருஷ்டி கழித்துவிட்டு பிறகு ராஜிக்கு கழித்தாள். விளக்கு வெளிச்சத்தில் துக்கத்தை அடக்கிக் கொண்டதுபோல் தென்பட்ட அத்தையின் முகத்தைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமும், திகைப்பும் ஏற்பட்டன.
நானும், ராஜியும் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிட்டோம். கிருஷ்ணன் எப்போதும் எங்களுடன் சேர்ந்து சாப்பிட்டதில்லை. அத்தையும் அவனும் சேர்ந்து சாபிடுவது வழக்கம்.
சாப்பாடு முடிந்ததும் முன் அறையில் பாயைப் போட்டு படுத்துக்கொண்டு விட்டேன். பகல் முழுவதும் ஓடியாடி களைத்துவிட்ட குழந்தைகள் படுத்த உடனே தூங்கிவிட்டார்கள். ராஜேஸ்வரி உள்ளே ஏதோ காரியம் செய்து கொண்டிருந்தாள். தூக்கம் வராததால் நான் வெறுமே கண்களை மூடி படுத்திருந்தேன்.
சமையல் அறையிலிருந்து தாழ்ந்த குரலில் கவலையுடன் அத்தை ஏதோ சொல்வது கேட்டது. அதற்கு பதில் தருவதுபோல் கிருஷ்ணனின் குரல் திடமாக ஒலித்தது. “அம்மா! அந்தப் பெண் இங்கே இருக்கும் நான்கு நாட்களில் நீ இது போன்ற விஷயங்கள் எதுவும் பேசாதே. சம்மா கவலைப்படுவதால் மட்டும் என்ன நடந்துவிடும்? நான்தான் இருக்கேனே. நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் நிம்மதியாக இரு.”
நான் காதுகளை தீட்டிக் கொண்டேன். அதற்குப் பிறகு அவர்கள் உரையாடலை தொடரவில்லை. ரொம்ப நேரம் யோசித்தேன்.
“என்ன நடந்திருக்கும்? அத்தை ஏன் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்? ராஜியைக் கேட்டால் சொல்லுவாளாய் இருக்கும். ஆனால் தெரிந்துகொண்டு மட்டும் நான் என்ன செய்யப் போகிறேன்? நான்கு நாள் தங்கிவிட்டுப் போவதற்காக வந்திருக்கும் விருந்தாளி என்ற விஷயத்தை நான் மறந்துவிடக் கூடாது.”
யோசனைகளை வலுக்கட்டாயமாக உதறிக் கொண்டு தூங்குவதற்கு ஆயத்தமாக கண்களை மூடிக் கொண்டேன். ராஜேஸ்வரி எப்போ வந்து என் பக்கத்தில் படுத்துக் கொண்டாளோ எனக்குத் தெரியாது.

(தொடரும்)

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்