முத்தமிடுங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


(நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்
உங்களின் பிள்ளைகளை
நசுக்கிவிடாதீர்கள்
அந்த நல்ல உள்ளங்களை

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம்

இந்தக் கருத்தின் அடிப்படையில் ஒரு சிறு கதை)

இளவரசு. உயர்நிலை மூன்று மாணவன். தரை வீடு. நல்ல வசதி. ஆனாலும் பள்ளிப் பேருந்தில்தான் தினமும் பள்ளிக்கு வருகிறான். அன்றும் அப்படித்தான் வந்து இறங்கினான். இறங்கியவன் அப்படியே நின்றான் சிலையாக. அசையவில்லை அவன் கால்கள். பேருந்து ஓட்டுநர் வண்டியை பின்னால் நகர்த்த வேண்டும். ‘இளவரசு தள்ளி நில்’ சப்தம் போட்டார் ஓட்டுநர். ‘என்னால் நகரமுடியவில்லை. காலைத் தரையோடு ஆணி அடித்ததுபோல் இருக்கிறது.’ வெடவெடத்தன அவன் கால்கள்.
முதல்வருக்கு தகவல் பறந்தது. பள்ளி மருத்துவர் அடுத்த நொடியில் வந்து சேர்ந்துவிட்டார். ஒரு நாற்காலி கொண்டு வரப்பட்டது. நின்ற இடத்திலேயே உட்கார வைக்கப்பட்டான் இளவரசு வெகு சிரமத்துடன். சோதனைகள் தொடர்ந்தது. வெப்பநிலை 37. இரத்த அழுத்தம் மிகச் சீராக ஓடியது. நாடித் துடிப்பு நலம் என்றது. மூட்டுக்களில் தசைகளில் உணர்வுகள் சரியாகவே இருந்தது. எதிலும் எந்தக் குறையும் இல்லை. மண்டை குடைந்தது மருத்துவருக்கு. ‘நடிக்கிறானோ? இருக்கலாம்’ . கொஞ்சம் பலவந்தமாக காலை நகர்த்தினார். ‘அய்யோ, அய்யய்யோ, சாவதுபோல் வலிக்கிறது.’ கத்தினான் இளவரசு. அவசர சிகிச்சைக்கான வண்டி அடுத்த சில நொடிகளில் வந்து சேர்ந்தது. மருத்துவக் குழு ஒன்று முகமூடிகளுடன் இறங்கியது. மீண்டும் அதே சோதனைகள். பள்ளியின் மருத்துவர் நடந்ததை ஒப்பித்தார். சரி. மேற்கொண்ட சோதனைகளை உடனே செய்ய வேண்டும். அதற்கிடையே இன்சூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அம்மா பத்மா. கணக்குத் தணிக்கையாளர் அப்பா சுந்தர்ராஜ் அனைவருக்கும் தகவல்கள் பறந்தன. இளவரசின் கால்களுக்கு மறமறப்பு ஊசி ஏற்றப்பட்டது. மறத்துப் போகும்வரை காத்திருந்தனர். கால்களை நகர்த்தினர். அலாக்காகத் தூக்கி வண்டியில் படுக்க வைத்தனர். பள்ளிக்கு வந்த பத்மாவும் சுந்தர்ராஜும் இறங்காமலேயே யூ திருப்பம் எடுத்து மருத்துவமனைக்கு விரைந்தனர்.
ஈ.சி.ஜி கிறுக்கவில்லை. ஓவியமாக நீண்டது. சிறுநீர் சோதனைக்கு அனுப்பப்பட்டது. மலத்தில் ஏதும் வைரஸ். இருக்கலாம். அதுவும் சோதனைக்கு அனுப்பப்பட்டது. எக்ஸ்ரேக்கள். ஜீரணப் பாதையில் மாவு செலுத்தி குடல்பாதை ஆராயப்பட்டது. பாதத்தில் மெல்லிய கம்பியில் A எழுதினார்கள். எழுதி முடிப்பதற்குள் எழுத்தைச் சொல்லிவிட்டான். துல்லியமான உணர்வுகள். காலை 9க்கு துவங்கிய சிகிச்சைகள். இதோ மாலை 4 மணி. இன்னும் தொடர்கிறது. வெளியே வந்த சிறப்பு மருத்துவர் சுந்தர்ராஜிடம் சொன்னார். ‘மருத்துவ உலகில் இது பெரும் புதிர்தான். எதுவும் சொல்ல முடியவில்லை. கொஞ்சம் பொறுங்கள்.’ சென்னையிலிருந்து சங்கரன் தாத்தா, ருக்மணி பாட்டி தகவல் கிடைத்ததும் புறப்பட்டுவிட்டார்கள். மலேசியாவிலிருந்து அக்கா நளினியும்
அத்தான் சேகரும் கூட வந்துவிட்டார்கள். பள்ளியின் முக்கிய ஆசிரியர்கள் மௌனமாய் நின்றார்கள். முதல்வர் மருத்துவர்களிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். ‘நினைவு இருக்கிறது. நன்றாகப் பேசுகிறான். மீண்டும் நிற்க பயப்படுகிறான். கடவுள் ஆணி அடித்துவிடுவார் என்று அலறுகிறான்.’ சிறப்பு மருத்துவர் சொன்னார். ஒன்றுதான் பாக்கி மனோவியல் மருத்துவரின் கருத்தைக் கேட்க வேண்டும். மனோவியல் மருத்துவர் மரகதவேல் வந்தார். எல்லாரையும் வெளியேற பணித்தார். இளவரசோடு அவர் மட்டும். சிரித்தார். அழுதார். இளவரசும் சிரித்தான் அழுதான். ஒரு மணி நேரம் ஓடியது. கதவு திறக்கப்பட்டது. உறவினர்கள் அனைவரையும் உள்ளே அழைத்தார். ‘ யாரும் அழாதீர்கள். அவனுக்கு ஒன்றுமில்லை. சும்மா பாருங்கள். ‘ உனக்கு ஒன்னுமில்லேப்பா. நாங்க இருக்கோம்’ என்று ஆறுதல் மட்டும் சொல்லுங்கள். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, அக்காள், அத்தான். அடேங்கப்பா! எத்தனை நாளாகிவிட்டது. இத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பார்த்து. மரகதவேல் சொன்னார். ‘ இதோ பார் நீ அனாதையில்லை.’ இளவரசு ஆமோதித்தான். காலை அசைக்காமல் எழுந்தான். அம்மாவை இடுப்புக்குக் கீழே கட்டிப்பிடித்தான். சேலை முந்தானையை முகத்தில் பரப்பிக் கொண்டான். சுந்தர்ராஜ் நெற்றியில் முத்தமிட்டார். ‘அப்பா, இன்னொன்று’. மீண்டும் மீண்டும் முத்தமிட்டார் சுந்தர்ராஜ். மரகதவேல் சொன்னார். ‘அம்மா அப்பா மட்டும் இருங்கள். எல்லாரும் போய்விடுங்கள்.’ மனோவியலின் மன்னர் ஆணையிட்டார். முதல்வருக்கு தகவல் தரப்படும் என்று உறுதி கூறினார்.

இளவரசும் மரகதவேலும் தனியாக வெறொரு அறையில் இருந்தார்கள். கண்ணாடிக் கதவுகள். உள்ளே நடப்பதை வெளியிருந்து பார்க்கலாம். பத்மாவும் சுந்தர்ராஜும் பார்த்தார்கள். அழுகிறான். சிரிக்கிறான். நெஞ்சைத் தடவினார் மரகதம். மீண்டும் பேசினார்கள். இப்போது பூரண அமைதி. சில ஊசி மருந்துகள் ஏற்றப்பட்டன. அத்தனையும் மன உளைச்சலுக்காக உள்ளது. தூங்குவதற்கு ‘வேலியம்’ குறைந்த டோஸ் கொடுக்கப்பட்டது. நிம்மதியாகத் தூங்கினான்.

அடுத்த அறையில் இப்போது மரகதவேல், பத்மா, சுந்தர்ராஜ்.
‘உங்களுக்கு இளவரசு ஒரே மகனா?
‘ஆம்’
‘சில அதிரடி முடிவுகளை உடனே எடுக்காவிட்டால் உங்க பையனுக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.’
அதிர்ந்தார்கள் இருவரும்.
‘ இளவரசு தன்னை அனாதை என்று நினைக்கிறான். உங்களைப் பார்த்து மூன்று மாதங்களாகிறதாம். பணிப்பெண்கள், செல்ல நாய்க்குட்டி ஜாக்கி, பாதுகாவலர் பரசு இந்த முகங்களையே பார்த்துப் பார்த்து நொந்து போயிருக்கிறான். ரொட்டியும் பாலும் குமட்டுகிறதாம். பல நாட்கள் அவன் சாப்பிடவே இல்லை. எதைக் கொடுத்தாலும் பிடிக்கவில்லை. நீங்கள் எப்போதோ அவனுக்குச் செய்து தந்த பூரியும் மஞ்சள் நிறமான உருளைக் கிழங்கு கறியும் தேடிவருகிறதாம். விடிந்தவுடன் பணிப்பெண்ணைப் பார்க்கிறோம். ஏன் விழித்தோம் என்று அழுகிறான்.’
‘இத்தனை உளைச்சலா. எங்களுக்கு எதுவுமே தெரியாது டாக்டர். அவனுக்காகத்தான் இரண்டு பணிப்பெண்களை ஏற்பாடு செய்தேன் டாக்டர்.’
‘எல்லாம் சரிதான். உணவில்லை. அதிக தூக்கமில்லை. விழித்திருக்கும்போதே கனவில் வாழ்கிறான். அவன் என்னிடம் சொன்ன தகவல்களின் அடிப்படையில் சொல்கிறேன். மகன் வேண்டுமானால் நீங்கள் மாறவேண்டும்.’
‘இனி அவன் விழிக்கும்போது பத்மா, உங்களின் முகத்தைத்தான் அவன் முதலில் பார்க்க வேண்டும். இன்று இரவு அந்த பூரிக் கிழங்கு நீங்களே செய்து கொடுங்கள். அவன் தூங்கும்வரை அருகிலிருங்கள். தூங்கிய பிறகு நகருங்கள். சுந்தர்ராஜ் இனி நீங்களே அவனை பள்ளிக்கு உங்கள் காரில் அழைத்துச் செல்லுங்கள். கைச் செலவுக்கு ஐந்து வெள்ளி நீங்களே கொடுங்கள். நெற்றியில் முத்தமிட்டு ‘பைபை’ சொல்லுங்கள். மீண்டும் கையசைத்துவிட்டுச் செல்லுங்கள். அவன் தாத்தாவும் பாட்டியும் இங்கேயே இருக்கட்டும். அனுப்பிவிடாதீர்கள்.’
வீட்டுக்கு அழைத்து வரப்பட்டான் இளவரசு. அன்று இரவு பூரியும் கிழங்கும் அவனைப் பார்த்து சிரித்தது. இரண்டு கையாளும் எடுத்து கடித்தான். அதக்கி அதக்கி விழுங்காமல் ருசித்தான். அம்மாவைப் பார்த்து சிரித்தான். அடுத்த நாள் அப்பா காரில் அழைத்துச் சென்றார். ஜாக்கி வேடிக்கை பார்த்தது. பரசு சல்யூட் அடித்தார். இளவரசு இறங்கியதும் 5 வெள்ளி கைமாறியது. நெற்றியில் ஒரு முத்தம் ‘பசக்’ என்று விழுந்தது. விடை பெற்றான் இளவரசு. தொடர்ந்தது இந்த சுகவாழ்க்கை. அசுர பலத்துடன் ஆனந்தக் கூத்தாடினான் இளவரசு.

இப்படியே ஓடின இரண்டு ஆண்டுகள். இன்று சிறப்பாக வெற்றி பெற்றோருக்கு பள்ளியில் சிறப்பு விழா. ஆறு பாடங்களில் ஏ1 மதிப்பெண் பெற்ற இளவரசுதான் அன்றைய விழாவின் கதாநாயகன். கல்வி அமைச்சர் வெற்றிக் கோப்பையைத் தந்துவிட்டு தழுவிக் கொண்டார். ஊடகங்களின் கேமராக்கள் மின்னின. பத்திரிகை நிருபர்கள் விதவிதமாக செய்திகளை தொகுத்தார்கள். முதல்வர் அறிவித்தார். ‘ தன் வெற்றியை இப்போது இளவரசு நம்முடன் பகிர்ந்து கொள்வார்.’
இளவரசு பேசினான். ‘தயவுசெய்து இந்தக் கோப்பையை என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கொடுங்கள்.’
கூட்டம் கலங்கலாகத் தெரிந்தது. வெகு நேரம் தேங்கி நின்ற இரண்டு சொட்டுக் கண்ணீர் அவன் காலணியில் விழுந்து தெறித்தது. சுந்தர்ராஜ் பத்மா மேடைக்கு வந்தார்கள்.
‘இளவரசின் இந்த வெற்றியை இளவரசின் பெற்றோர்கள் இப்போது பகிர்ந்து கொள்வார்கள்.’ முதல்வர் மீண்டும் அறிவித்தார்.
பத்மா சொன்னார். ‘உங்கள் பிள்ளை எழுந்திருக்கும்போது உங்களின் முகத்தை முதலில் பார்க்கட்டும். தூங்கும்போது முடிந்தவரை பக்கத்தில் இருங்கள்’
சுந்தர்ராஜ் சொன்னார். ‘ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு சந்திப்பிலும் முத்தமிடுங்கள்.’
கூட்டம் கலைந்தது. பள்ளி வாயிலில் சிண்டா என்கிற சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுக் கழகம் இப்படி அறிவித்தது.

‘நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்
உங்கள் பிள்ளைகளை
நசுக்கிவிடாதீர்கள்
அந்த நல்ல உள்ளங்களை’

Series Navigation

யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்