முகமிருக்கையில் முகமூடி எதற்கு ?

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

கி. உமாமகேஸ்வரி


சரசு. என்னைப் புரிஞ்சுக்கோ சரசு. நீ நினைக்கற மாதிரி அவளுக்கும் எனக்கும் எந்தவித தப்பான உறவுமில்ல. வி ஆர் வெரிகுட் பிரண்ட்ஸ். தயவுசெஞ்சு இப்படியெல்லாம் பேசி என்னை இன்சல்ட் பண்ணாத. இங்க பாரு. என் முகத்தப் பாரு. என்னைப் பாத்தா உனக்குத் தப்புப் பண்றவன் மாதிரியா இருக்கு.

மோவாயைப் பிடித்துத் திருப்பிய கணவனை உற்றுப் பார்த்தாள் சரஸ்வதி. சதைப்பிடிப்பான முகமும், கண்களில் தெரிந்த வசீகரமும், அதில் தெரிந்த பாவமும் அவளைச் சலனப்படுத்தினாலும் அடிமனதிலிருந்த சலனம் தலைதூக்கப் பட்டென்று கணவனின் கையைத் தட்டிவிட்டாள்.

இங்க பாருங்க. ஊரார் பார்வைக்கு வேணா நீங்க புத்திசாலியாவும் நல்லவனாவும் இருக்கலாம். ஆனா, உங்க மனசுல இருக்கற சபலபுத்தி எனக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்கும் அந்தப் பொண்ணுக்கும் நடுவுல ஏதோ இருக்கு.. இருக்கு… இருக்கு…. வெறிபிடித்தவள் போல் கத்தியவளை அடிபட்ட பார்வை பார்த்தபடி நின்ற அரவிந்தனை கட்.கட் என்ற டைரக்டரின் குரல் நிஜத்துக்குக் கொண்டு வந்தது.

நினைவை உலுக்கி முகத்தைச் சாதாரணமாக்கி அருகிலிருந்த சேரில் உட்கார்ந்தான் அரவிந்தன்.

கதாநாயகியாய் நடித்த நந்தினி ரொம்ப சுவாதீனமாய் அருகில் வந்து அமர்ந்தாள்.

என்ன அரவிந்த். இன்னிக்கு ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க. ஆனா, ஆக்ஷன்னு சொன்னதும் சட்னு கதைல இன்வால்வ் ஆகி நடிச்சிடறீங்க. அதுதான் எனக்கு உங்ககிட்ட ரொம்பப் பிடிச்ச விஷயம்.

மெல்லப் புன்னகைத்தான் அரவிந்தன். நிஜம்தான் நந்தினி. நம்ம ரெண்டு பேருக்குள்ள இருக்கற உறவை வெச்சு தினம் தினம் என்வீட்ல நடக்கற சண்டையை நினைச்சுக்கிட்டேன். அதனாலயே இந்த ஷாட்டை என்னால ரொம்ப இயல்பா பண்ண முடிஞ்சது.

நந்தினியின் முகமும் சோகத்தில் விழுந்தது. சுற்றிலும் இருந்த படக்குழு அடுத்த ஸீனுக்குத் தகுந்த விதத்தில் செட்டை மாற்றியமைக்கும் மும்முரத்தில் இருந்தது. கிரேனை அட்ஜஸ்ட் செய்து டிராலியை இடம்மாற்றி அஸிஸ்டன்ட் டைரக்டர் உத்தரவு பிறப்பித்துக் கொண்டிருக்க, உள்ளே நுழைந்த புகைப்பட நிருபர் ஒருவர் அவர்களது அனுமதியுடன் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஒரு சின்ன பேட்டி எடுத்துக்கலாமா சார்

ம்.

இப்ப நீங்க நடிச்சிட்டிருக்கற படத்துல நீங்க ரெண்டு பேரும் ரொம்ப இன்வால்வ் ஆகி நடிச்சிட்டிருக்கீங்கன்னு பேசிக்கறாங்களே.

ஏன் யாரோ பேசிக்கறா மாதிரி சுத்தி வளைச்சுக் கேக்கறீங்க. இது உங்க மனசுல இருக்கற கேள்வின்னு எனக்கு நல்லாத் தெரியும். நேரடியாவே கேளுங்க.

லேசாக நெளpந்த நிருபர் சரி எப்படி வேணா வெச்சுக்கங்க. இந்தக் கேள்விக்கு உங்க பதில்

அப்படி ஏதும் எங்களுக்குள்ள இல்ல. அப்படி இருக்கற பட்சத்துல அதை நேரடியா ஒத்துக்கற தைரியம் கண்டிப்பா ரெண்டு பேர்ட்டயும் இருக்கு. என்ன நந்தினி,

லேசான புன்னகையுடன் நந்தினி தலையசைத்தாள்.

அப்படியா. ஆனா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிச்சிருக்கற படங்கள்ல மட்டும் ரெண்டு பேருமே ரொம்ப இன்வால்வ் ஆகி நடிச்சிருக்கற மாதிரி இருக்கு. அதுவும் இந்தக் கிசுகிசுவுக்கு ஒரு காரணம் இல்லையா

லேசாய் எரிச்சலானான் அரவிந்தன். இங்க பாருங்க. நான் ஒரு எம்பிஏவோ, இல்ல எஞ்சினியரிங்கோ படிச்சிருந்தா என் இம்ப்ருவ்மெண்ட்ஸ் எல்லாம் அதைச் சுத்தியே இருந்திருக்கும். ஒரு ரைட்டராகியிருந்தா, பேனாவும் வாசகர்களும் படிப்பும் எனக்குப் பிரதானமா ஆகியிருக்கும். ஒரு டாக்டராகியிருந்தா பேஷண்ட்ஸூ;ம் மெடிக்கல் டெர்மினாலஜியும் எனக்கு முக்கியமாகிப் போயிருக்கும். என்ன பண்றது நடிக்க வந்துட்டேன். காதல்,, நடிப்பு, சண்டை, டான்ஸ்னு இதிலதான் நான் என்னை நிருபிக்க முடியும். நடனம், சண்டை, எழுத்துன்னு எல்லாத்துக்கும் இங்க தனித்தனியா ஆட்கள் இருக்காங்க. நான் குறைந்தபட்சம் நல்லா நடிச்சாவது என்னை நிருபிக்க வேண்டாமா

நிருபர் இந்த சாமர்த்தியமான பதிலில் ஒருகணம் அசந்து போனார். நந்தினியின் கண்களில் ஙசபாஷ்ங தெரிந்தது. நிருபர் சமாளித்துக் கொண்டு அடுத்த கேள்விக்குப் போனார்.

நீங்க உங்க முதல் மனைவிய விவாகரத்து செய்து இப்ப உங்க மனைவியா இருக்கறவங்கள திருமணம் செஞ்சப்போ கூட ரெண்டுபேரும் அறிவால ஈர்க்கப்பட்டிருக்கோம். ஒரே அலைவரிசைல இருக்கோம். நிறையப் படிச்சுப் புரிஞ்சுட்டு இருக்கோம். இண்டலக்சுவல் கம்பானியன், அது, இதுன்னு சொல்லியிருக்கீங்களே.

யெஸ். அப்பவும் இப்பவும் அவங்க எனக்கு இண்டலக்சுவல் கம்பானியன்தான்.

மேலும் சில கேள்விகளுடன் நிருபர் எழுந்து போக இருவரும் அடுத்த ஸீனுக்குத் தயாரானார்கள்.

அரவிந்தன், சகல வித்தகன். நல்ல கவின். டான்ஸ், பாட்டு, நடிப்பு அனைத்திலும் கரைகண்டவன். சினிமாவில் மட்டுமின்றி, நிஜவாழ்க்கையிலும் உண்மையான திறமைகள் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தன்னைத் தானே செதுக்கிக் கொண்டவன். அவனது இருபதாண்டு கால சினிமா வாழ்க்கை அவனுக்குத் தரமான ரசிகர்களைப் பெற்றுத் தந்திருந்தது. நல்ல சினிமா என்ற கனவைத் தொடர்ந்து செயல்படுத்தி வருபவன். இளமை மாறாத தோற்றத்தைப் பெற்றிருந்த அவனுக்குத் தோளுக்குமேல் வளர்ந்த குழந்தைகள் உண்டு. (இதை அவனது ரசிகைகள் மறந்து விடவே முயற்சிக்கிறார்கள்). அந்தக் குழந்தைகள் மேல் அபார பிரேமை கொண்டவன். அவனது திரையுலக வாழ்க்கையில் ஏராளமான நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்திருந்தாலும், இம்முறை வந்த கிசுகிசு அவனது உண்மையான ரசிகர்களை நிறையவே வேதனைப்படுத்தி இருந்தது. ஏனெனில்,,, இம்முறை அவனது நடிவடிக்கைகள் குழப்பமாகவே இருந்தன. பேட்டிகளில் இந்த வதந்தியை அறவே மறுத்தான். ஆனால், நிஜத்தில் அவனது அசைவுகள் அவ்வுறவை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது. அவர்கள் இருவரையும் இவை எதுவும் சலனப்படுத்தியதாகவே தெரியவில்லை.. நந்தினி ரொம்ப அல்ட்ரா மாடர்னாக வளர்க்கப்பட்டவள். அவளை இவை எதுவுமே பாதிக்கவில்லை.

என்ன அரவிந்த். ஷூட்டிங் முடிஞ்சு ஒரு அவுட்டிங்…. டூ

நோ சான்ஸ் நந்தினி. இது முடிஞ்சதும் ஒரு டப்பிங் இருக்கு. சாயந்திரம் ஏழு மணிக்கு தயாரிப்பாளர் ஒருத்தரோட டிஸ்கஷன் இருக்கு. இன்னிக்கு எங்கயும் முடியாது.

ஓகே. ஷாட் ரெடி என்ற குரல் வர இருவரும் எழுந்தனர்.

***

டப்பிங் முடிந்ததும் தாஜ; கொரமண்டல் ஓட்டலின் ருமில் கையிலிருந்த பொன்னிற திரவத்தைச் சுவைத்தபடி தயாரிப்பாளர் சுந்தரத்துடன் அமர்ந்திருந்தான் அரவிந்தன். மெல்லப் பேச்சு எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் நந்தினி மேட்டருக்குத் தாவியது.. சுந்தரம் அரவிந்தனுக்கு வெகுகாலமாய்ப் பழக்கம். அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் அரவிந்தன் அவரிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தான். அனைத்து விஷயங்களையும் அவரிடம் அவன் விவாதிப்பதுண்டு.

அப்புறம்…. அந்த நந்தினியை என்ன பண்ணப்போறே

மெல்லப் புன்னகைத்தான் அரவிந்தன். உங்ககிட்ட உண்மையைச் சொல்றேன் சார். நந்தினியை எனக்குப் பிடிச்சிருக்கறது உண்மை. அவ கண்களா, அழகா, பழகும் விதமா…. எதுன்னு சொல்லத் தெரியல. என்னவோ அவகிட்ட எனக்குப் பிடிச்சிருக்கு. அவகூட சேர்ந்து நான் சுத்தறதும் உண்மை. வீட்ல ஒய்ப் ரொம்ப சண்டை போடறா. ஆனா, நான் என் இயல்புபடிதான் இருப்பேன். என்னால என்னை மாத்திக்க முடியாது.

ஆனா, கொஞ்சநான்தான் பழகிட்டு விட்டுடப் போறேன்னு நந்தினிக்குத் தெரியுமா.

தெரிஞ்சிருக்கும் சார். அவ என்கிட்ட எந்தவித எதிர்பார்ப்பும் வெச்சிருக்கற மாதிரி தெரியல. எந்தக் கண்டிஷனும் போடல. நோ கமிட்மெண்ட்ஸ். ஸோ, நோ பிராப்ளம்.

அது சரி அரவிந்த். கேக்கறேன்னு கோச்சுக்காத. உன் திரையுலக வாழ்க்கைல இது உனக்கு எத்தனையாவது பொண்ணுன்னு யோசிச்சுப் பாரு. இது உனக்குத் தேவையில்ல. உன் இமேiஜ இது பாதிக்கும்.

கொஞ்சநேரம் மெளனமாக இருந்தான் அரவிந்தன். பிறகு, அது இருக்கட்டும் சார். இதுக்கு நான் அப்புறமா பதில் சொல்றேன். இந்தப் படத்த முடிச்சிட்டு அடுத்த படத்த சீக்கிரமா ரிலீஸ் பண்ணலாம்னு இருக்கேன். உங்ககிட்ட கைவசம் ஏதாவது கதை இருக்கா

தயாரிப்பாளரின் கண்களில் பிரகாசம் தெரிந்தது. இருக்கு. என்கிட்ட ஒரு புதுப்பையன் சேர்ந்திருக்கான். என்னமா கதை சொல்றான் தெரியுமா ?

எங்கே. கொஞ்சம் சுருக்கமா ஒரு கதை சொல்லுங்க பார்ப்போம்.

இது ஒரு போலீஸ் ஆபீஸரோட கதை. நம்ம ஹீரோ ஒரு சப் இன்ஸ்பெக்டர். வீடு, குடும்பம், ஸ்டேஷன்னு சந்தோஷமா போயிட்டிருக்கற அவரோட சேவையைப் பாராட்டி பிரமோஷனோட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாற்றல் உத்தரவு வர, அங்கே தொடங்குது போராட்டம். பத்தி பத்தியாக அரசியல் புள்ளிகளின் வீடுகளில் ரெய்டு நடத்தி பரபரப்பு செய்யும் இவருக்குக் கறுப்புப் புள்ளி வைக்கிறார்கள் இவரது எதிரிகள். இந்தப் போராட்டத்தில் அவரது மனைவி எதிரிகளின் சூழ்ச்சியால் தீயில் சிக்கி இறத்துபோக, மகள் தீயவரது கரங்களில் வதைக்கப்படுகிறாள். பதவியை ராஜினாமா செய்தால்தான் மகளை விடுவிப்போம் என்று சதிக்கும்பல் பிளாக்மெயில் செய்ய, அந்தச் சதியை மகளின் காதலன் உதவியுடன் எப்படி அவர் முறியடிக்கிறாார் என்பதுதான் கிளைமாக்ஸ்

புன்னகையுடன் அவரை நிறுத்தினான் அரவிந்தன். டைரக்டர் சார். நான் ஒன்று கேக்கறேன். கோச்சுக்க மாட்டாங்களே.

சொல்லுங்க அரவிந்தன் .

நீங்க இப்ப சொன்ன கதையில எத்தனை திருப்பங்கள் இருந்ததுன்னு யோசிச்சுப் பாருங்க. எத்தனை கற்பனைகள். எத்தனை வன்முறைகள். எவ்வளவு நெகட்டிவ் சிந்தனைகள். டைரக்டர்னு ஒரு அந்தஸ்தை விட்டுட்டுப் பார்த்தா நீங்க ஒரு சாதாரண மனிதர் நீங்க யோசிக்கற கதையிலயே இத்தனை விஷயங்கள் இருக்குன்னா, கடவுள் எத்தனை பெரிய சக்தி. அவர் எழுதற நாடகத்துல நடிக்கிற நாமெல்லாம் எம்மாத்திரம். உலகத்தைக் காப்பவரான கடவுள் எழுதற கதைல எவ்ளோ திருப்பங்கள் இருக்கணும். நீங்க இப்ப என்னைக் கேட்டாங்களே. நான் ஏன் நிறையப் பெண்களுடன் சேர்த்துப் பேசப்படறேன்னு. கடவுள் என்னை அப்படி எழுதிட்டார். அதை நானே விரும்பினாலும் மாத்த முடியாது. வாழ்க்கை நாடகத்துல நான் ஏற்ற ரோல் அப்படி. என்னை ஒரு கலைனா நினைச்சுப் பார்க்க எவ்வளவோ விஷயம் இருக்கு. என் ஒவ்வொரு படமும் நிறைய விதங்கள்ல மற்ற படங்கள் போல இல்லாம ஓரளவு முழுமையடைந்ததா இருக்கு. நானே ஒரு நடனன். கவின். ஓவியன். இன்னும் எனக்குள்ள எத்தனையோ முகங்கள் இருக்கு. அதையெல்லாம் ரசியுங்களேன். என்னை இப்படியே விட்டுடுங்களேன். நான் முன்னமே சொன்னபடி நானே விரும்பினாலும் என்னை மாத்திக்க முடியாது. கடவுளோட படைப்பை யாராவது திருத்த முடியுமாடூ. என்னைப் பொறுத்தவரை நந்தினி நல்ல தோழி. சினிமாத்துறையில அறிவுக்கூர்மையுள்ள நடிகைகள் ரொம்பக் கம்மி. நந்தினி ஒரு அறிவான பொண்ணு. இதுதான் அவளிடம் என்னை ஈர்த்தது. அதுக்காக எங்களுக்குள்ள வேற ஏதும் கிடையாதான்னு கேக்காதீங்க. இல்லன்னு நான் பொய் சொல்ல விரும்பல. நான் சொல்ல வர்றது என்னன்னா, இதை ஒரு பெரிய விஷயமா பேசிட்டிருக்காதீங்க அப்படிங்கறதுதான். என்னை குறையே இல்லாத, பலவீனமே இல்லாத ஒருத்தனா கற்பனை பண்ணிக்காதீங்க அப்படிங்கறதுதான். குறைகளோட என்னை ஏத்துக்கங்க.

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமாகச் சொல்லிவிட்டான் என்ற பிரமிப்பிலிருந்து விடுபட தயாரிப்பாளருக்கு வெகுநேரம் ஆகிற்று.


Series Navigation

கி. உமாமகேஸ்வரி

கி. உமாமகேஸ்வரி