இரா முருகன்
இது விஷுக்காலம்.
மீன மாதச் சூடே பொறுக்க முடியாமல் தகித்துக் கொண்டிருக்க, இன்னும் பெரிய அனல் அலையை கட்டியம் சொல்லிக்கொண்டு மேட மாதம் வந்து சேர்ந்தது. புது வருடத் தொடக்க விஷு தினத்து மேடப் புலரியில் (விடிகாலை) கணிகாணப் போகமுடியாமல் இரண்டு நாள் கழித்து நேற்று சாவகாசமாக மகாலிங்கபுரம் ஸ்ரீகிருஷ்ணன் ஐயப்பன் அம்பலத்தில் தொழுதுவரக் கிளம்பியபோது பத்திரிகைச் செய்தியில் கொச்சி மகாராஜாவான சாமுதிரி.
அவர் எனக்கு ஒரு நாள் முன்னாள் அம்பலத்தில் பூரண கும்ப மரியாதை சகிதம் தரிசனம் நடத்திப் போயிருந்தார். புகைப்படத்தில் கோவில் மேல்சாந்திக்காரனான நண்பர் நம்பூத்ரி ஆஜானுபாகுவாக முக்கால் இடத்தை அடைத்துக் கொண்டு நிற்க, ஓரத்தில் சாதுப் பிராணியாக மேற்படி சாமுதிரி மகாராஜாவு.
திருமேனியோடு கூட ஒரு கெச்சலான வயசன் படத்தையும் தினப் பத்திரத்தில் கண்டேனே என்று சந்தனம் கொடுத்த நம்பூதிரியிடம் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு விசாரிக்க, அவர் உரக்கச் சிரித்து, ‘எய், அப்படியில்லை. புள்ளிக்காரன் வல்ய ராஜாவு. அதிலும் கொச்சி ராஜாவல்லே ‘ என்றார்.
கொச்சி ராஜா ஒரு ரிடையர்ட் தொலைபேசி இலாகா டெபுடி ஜெனரல் மேனேஜர். 1958-ல் சென்னையில் தான் ஜூனியர் எஞ்சினியர் ஆக வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். 1998-ல் ஓய்வு பெற்ற பிறகு, பட்டத்துக்கு வந்திருக்கிறார். அரண்மனை எல்லாம் தேவைப்படாமல், சென்னையில் மகளின் கோட்டூர்புரம் பிளாட்டில் தான் ஒரு வார வாசம். அவருக்கு அடுத்த கொச்சி மகாராஜாவும் நியமிக்கப்பட்டாகி விட்டதாம். இவர் ஆவடி கோச் ஃபாக்டரியில் வேலை செய்து கொண்டிருக்கிறார்.
****
ராஜாக்கன்மார் எல்லாம் தரையில் நடக்கும் கேரளத்தில் இது ஊர்வலங்களின் காலம். கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸ் லீடர் கருணாகரனின் மகன் முரளீதரனை ஆறு வருடம் கட்சியிலிருந்து நீக்கி வைத்து மேலிடத்துத் தூதர் அகமத் பட்டேல் வந்து அறிவித்துப் போனதோடு தொடங்கியது இது.
மேகலா றாலி என்ற பெயரில் கருணாகரனின் ஐ குரூப் போன மாதம் வடக்கன், தெற்கு மலையாளப் பிரதேசத்திலும், திருவனந்தபுரத்திலும் பேரணி நடத்தி எங்களை விலக்கி வைக்க இந்த அலுமினியம் பட்டேல் யார் ? எங்க பலம் தெரியுமா என்று நீண்ட ஊர்வலங்களின் முடிவில் ஆவேசமாக மேடையேறிப் பேசினார்கள்.
பழைய பந்தங்களை முடித்துக் கொண்டு, புது உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளக் காலம் கனிந்து கொண்டிருக்கிறது என்று முரளி அனந்தையில் சூசகமாகச் சொன்னதில் புதிய பந்தம் மார்க்சிஸ்ட் கட்சியோடு, அதுவும் அச்சுதானந்தன் அணியோடு இருக்கும் என்று ஊகிக்கப் படுகிறது.
மே ஒண்ணில் புதுக் கட்சி உருவாகும் என்று பத்திரிகைகள் ஆரூடம் சொல்கின்றன. கருணாகரன் சாரின் மகளும் காங்கிரஸ் பிரமுகருமான பத்மஜா வேணுகோபால் அச்சனோடும், சேட்டனோடும் போகாமல், கட்சியிலேயே இருக்க முடிவு செய்திருப்பது என்ன விதமான ராஜதந்திரம் என்று அரசியல் நோக்கர்கள் எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
ஐ குரூப் றாலிகளைத் தொடர்ந்து உம்மஞ்சாண்டியின் அதிகாரபூர்வ காங்கிரஸ் அதேமாதிரி இரண்டு பேரணிகளைத் தலைநகர் அனந்தையிலும், நேற்று கொச்சியிலும் நடத்தி எமக்கே பூரண பலம் என்று நிரூபித்திருக்கிறது.
‘தொம்மனும் மக்களும் வேண்டா, வேண்டா ‘ என்று கோஷம் எழுப்பிக் கொண்டு போன இந்தப் பேரணியில் பங்குபெற்ற பலரும் பத்து நாள் முன்னால் நடந்த கருணாகரன் பேரணியிலும் கலந்து கொண்டு சிறப்பித்திருப்பார்கள் என்று ஆலப்புழை நண்பர்கள் சொன்னார்கள். ( ‘தொம்மன்டெ மக்கள் ‘ அண்மையில் வெளிவந்த புதுத் திரைப்படத்தின் பெயர். இதில் தொம்மனாக வரும் ராஜன் பி.தேவ் அவருடைய மகன்களான மம்மூட்டி, லால் என்று குடும்பமே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்.)
இரண்டு தரப்புக்கும் உப்புச் சத்தியாக்கிரகத்தின் எழுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு கொடி பிடித்து ஊர்வலம் போகச் சாதகமான சாக்காகக் கிடைத்திருக்கிறது.
உப்புப் பெறாத அரசியல் மோதல்களுக்காக உப்புச் சத்தியாக்கிரகம் பயன்படும் என்று தெரிந்திருந்தால், மகாத்மா தண்டியில் எடுத்த உப்பைக் கடலிலேயே திரும்ப வீசிவிட்டுப் போயிருப்பார்.
****
இது அரசியல் மாநாடுகளின் காலம்.
மாநில மாநாட்டை முஸ்லீம் லீக் கோட்டையான மலைப்புரத்தில் வெற்றிகரமாக நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய மாநாட்டையும் தில்லியின் பொறிவெயிலில் நாலு நாள் முன் நடத்தி முடித்தது. மலப்புரம் மாநாடு கட்சியின் ‘அதிகாரபூர்வமான ‘ கைரளி டிவியில் லைவ்-இன் ஆக ஒளிபரப்பப்பட்டது. முக்கியமாக கடைசி நாள் ராத்திரி எட்டிலிருந்து ஒன்பது வரை அச்சுதானந்தனின் உக்ரன் பிரசங்கம். தமிழ்நாட்டில் ஆளும் எதிர்க் கட்சிகள் கைவசம் தொலைக்காட்சி சானல் வைத்திருந்தாலும், ராத்திரி சீரியல் அழுகையை நிறுத்தி தலைவர்கள் சொற்பொழிவை ஒளிபரப்பத் துணிவதில்லை என்பது நினைவு வந்தது.
தில்லி தேசிய மாநாட்டில், கட்சியின் பொலிட் பீரோவுக்கு முதல் தடவையாக ஒரு பெண் உறுப்பினர் – விருந்தா காராட் – தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். மூத்த தலைவர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மூப்பின் காரணமாக விலக, புதுச் செயலராகப் பதவியேற்ற ஐம்பத்தேழு வயது பிரகாஷ் காராட், விருந்தாவின் கணவர்.
இன்னொரு ராத்திரி பிரைம் டைம் நேரத்தைக் கைரளி டிவி கட்சிக்காகச் செலவிட்டு, விருந்தாவின் ஆங்கிலப் பேட்டியை இந்த வாரம் ஒளிபரப்பியது.
ஏர் இந்தியாவில் ஹோஸ்டஸாகத் தொடங்கி, லண்டனில் நாடகத் துறைக் கல்வி பயின்ற விருந்தா, திரும்பி வந்தபோது ஜவஹர்லால் நேரு யூனிவர்சிட்டி (ஜே.என்.யூ) மாணவர் தலைவராக இருந்த பிரகாஷைக் காதலிக்க, அப்படியே செங்கொடியையும் பற்றிக் கொண்டார். கொஞ்சம் வயதான அமலா போன்று தோற்றம் தரும் விருந்தா (அமலாவுக்கே வயதாகி விட்டது) சமீபத்தில் ஒரு கலைத் திரைப்படத்தில் அம்மாவாக நடித்திருக்கிறார். வங்காளி – பஞ்சாபி குடும்பப் பின்னணி அவருக்கு உண்டு. பிரகாஷ், அசல் கேரளத் தரவாட்டு நாயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். விருந்தாவின் சகோதரி கணவர் தேர்தல் அலசல் நிபுணர் – பெஸ்பாலஜிஸ்ட் – பிரணாய் ராய் என்பதால், அடுத்த தேர்தல் முடிவு நேரத்தில் பிரகாஷை சின்னத்திரையில் அடிக்கடி பார்க்க வாய்ப்பு இருக்கும்.
தொழிலாளர், மகளிர் உரிமைக்காக நெருக்கடி நிலைக்காலம் தொடங்கிக் குரல் உயர்த்திவரும் விருந்தா, மூன்றாண்டுகள் முன்னால் கட்சியின் கல்கத்தா காங்கிரஸில், கட்சி பெண் உறுப்பினர்களைப் புறக்கணிக்கிறது என்று குற்றம் சாட்டியதற்காக விலக்கி வைக்கப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டியது.
பொலிட்பீரோவில் ஹர்கிஷன்சிங்க் சுர்ஜித்தும், முதுபெரும் சகாவு ஜோதிபாசுவும், சீத்தாராம் யெச்சூரியும் தொடர்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து டபிள்யூ.ஆர்.வரதராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். காலம் சென்ற சகாவு நாயனார் பொலிட் பீரோவில் வகித்த இடம் கேரளத்துக்குக் கிட்டாமல் ஆந்திரத்து ராகவலு வந்து சேர்ந்திருக்கிறார்.
****
இது உற்சவங்களின் காலம். கேரளக் கோவில்களில் பூரம் ஆராட்டு உற்சவம் கனகம்பீரமாக நடப்பது இப்போதுதான். பூரம் உற்சவம் நடக்கும் க்ஷேத்ரத்து உற்சவ மூர்த்தி யானையில் ‘எழுந்நள்ளிப்பு ‘ செய்வதோடு (எழுந்தருளுவதோடு) , பக்கத்து ஊர் அம்பலங்களிலிருந்து மற்ற உற்சவ மூர்த்திகளும் ‘திடம்பு ‘ என்ற தெய்வ முத்திரை உருவாக, அந்தந்தக் கோவில் யானை அல்லது வாடகைக்கு எடுத்த யானைகள் மேல் எழுந்தருளுவார்கள். நேற்று கொல்லம் ஸ்ரீகிருஷ்ணசாமியின் ஆராட்டு எழுந்நள்ளிப்பில் பதினைந்து ஆனைகள் கலந்து கொண்டு சிறப்பித்தன.
யானை அணிவகுப்பு மாத்திரம் இல்லாமல், தாயம்பகம் என்ற செண்டை மேளம் (இதில் டபிள் தாயம்பகம், டிரிபிள் தாயம்பகம் என்று கோஷ்டிகள் இணைந்து வாசிக்கிறதும் உண்டு), சிங்காரி மேளம், பாண்டி மேளம் (நம்மூர் நாதஸ்வரம்), வாணவேடிக்கை என்று ஆரவாரமாக நடக்கும் இந்தப் பூரம் உற்சவங்களில் மாதக் கணக்காக ஓய்வு ஒழிச்சல் இன்றிப் பங்கு பெற்று அசதி ஏற்பட்ட யானைகள் தொகை பெருகிக் கொண்டிருக்கிறது.
‘ஆன இடஞ்ஞு பாப்பானைச் சவிட்டி மிதிச்சுக் கொன்னு ‘ (யானை மதம் பிடித்து, பாகனை மிதித்துக் கொன்றது) என்று இந்த ஒரு மாதத்தில் மூன்று பத்திரிகைச் செய்திகள் வந்திருந்தன. யானைகளை வாடகைக்கு விடும் கோவில் நிர்வாகிகள் காசே குறியாக இருக்காமல் நிரந்தர ஊழியர்களான இந்த சாது மிருகங்களுக்கும் விடுப்பு தரவேண்டியது அவசியம் என்று பரவலான கருத்து உயர்ந்து வருகிறது.
இதிப்படி இருக்க, திருச்சூர் வடக்கநாத அம்பலத்தில் குடமுழுக்கு வேலைகள் தொடங்கியிருக்கின்றன. இரிஞ்ஞாலக்குட பணிக்கர் வைத்துப் பார்த்த பிரஸ்னத்தில், வேட்டைக்காரன் என்ற தெய்வத்தின் சந்நிதி, கோவில் நடைக்கு வெளியே அமைய வேண்டும் என்று உத்தரவு கிடைத்ததால், வேட்டைக்காரன் வெளியேறுகிறார்.
‘ஜெஜூரி ‘யில் ‘யஷ்வந்த்ராவ் ‘ பற்றி அருண் கொலட்கர் எழுதிய கவிதை நினைவு வருகிறது. http://www.thinnai.com/pm1014041.html
****
பாரதப் புழையில் கரைத்தது போக எஞ்சிய அஸ்தியாக மலையாள, ஆங்கில எழுத்தாளர் ஒ.வி.விஜயன் காத்துக் கொண்டிருக்கிறார். சிதைக்குத் தீக்கொளுத்திய அனந்தரவனான (nephew) கார்டூனிஸ்ட் ரவிசங்கர் சிதாபஸ்மத்தைக் கங்கையில் ஒழுக்கிவிட (கரைக்க) ஏற்பாடுகள் செய்தபோது, விஜயனின் மனைவி தெரசாவும், மகன் மதுவும் தில்லி நீதிமன்றத்தில் தடையுத்தரவு வாங்கியிருக்கிறார்கள். விஜயனின் புத்தகங்களைப் பிரசுரித்த கோட்டயம் டி.சி.புக்ஸ்காரர்கள் விஜயனுக்காக மணிமண்டபம் எழுப்பி அதில் இந்த அஸ்தியை வைக்க வேண்டும் என்கிறார்கள். மலையாளக் கவிஞரும், விஜயனின் சகோதரியுமான ஒ.வி.உஷா இந்த விவகாரம் மத அடிப்படையிலான மோதலாகத் தொடராமல், விஜயனின் அஸ்தி கங்கையில் கலப்பதே விஜயனுக்குப் பிடித்த செயலாக இருக்கும் என்கிறார்.
மாத்ருபூமி வாரப் பத்திரிகை விஜயனின் கசாக்கிண்டெ இதிகாசம் நாவலை மீண்டும் பிரசுரிக்கத் தொடங்கியிருக்கிறது. காப்பிரைட் உரிமை அவர்களுக்கு என்பதாலோ என்னமோ, தமிழில் அந்த நாவலைக் குமுதத்தில் தொடராக மொழிபெயர்க்க நண்பர் சுகுமாரன் மேற்கொண்ட நடவடிக்கைகள், மூன்று அத்தியாயத்தோடு முடிந்து போனது நினைவு வருகிறது.
மற்றப்படி, எண்பது திகைந்த இலக்கிய விமர்சகர் கிருஷ்ணன் நாயர், கலாகெளமுதியில் தொடங்கி அப்புறம் மலையாள நாடு பத்திரிகைக்கு மாறி, முப்பது வருடமாக வாராவாரம் தொடர்ந்து எழுதிவரும் ‘சாகித்ய வாரபலம் ‘ கட்டுரையில் புத்தலை இலக்கிய விமர்சகர்களை வழக்கம்போல் சாடியிருக்கிறார். இவர்களுக்கு கேரள அரசு தயவாயிட்டு அனந்தை உயிரியல் பூங்காவில் புலிகளுக்குப் பல்லுத் தேய்த்துவிடுகிற உத்தியோகம் கொடுத்து, மலையாள இலக்கியத்தை ரட்சிக்க வேணும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
இன்னொரு விமர்சகர் நாராகொல்லேரி பாரிஸ், விமர்சகர்களில் பீஷ்ம பிதாமகரான கிருஷ்ணன் நாயர் சாருக்கே இந்தப் புலிக்காரியம் முதலில் ஏற்பாடு செய்து கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்று வேண்டுகிறார். நாயர் பிடித்த புலிவால் (அல்லது பல்) இப்படியாகத் தொடர, புலிகள் டூத்பிரஷ்ஷோடு காத்திருக்கின்றன.
இரா.முருகன்
ஏப்ரல் 17, 2005
—-
eramurukan@yahoo.com
- நெடுந்தீவு ஆச்சிக்கு
- நெருக்குவாரம் + சுவாரஸ்யம் = புனிதம்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-7
- பிரக்ஞையின் தளங்கள் : மாண்டூக்ய உபநிடதமும் யூத கபாலாவும்
- டென்மார்க்கின் தனிப்பெரும் இலக்கியவாதி கிாிஸ்ாியன் அண்டர்சன்
- தன்னலக் குரலின் எதிரொலி
- சருகுகளோடு கொஞ்ச துாரம்
- சந்திரமுகி க(வ)லையா ? – அறியா விஷயம் ஆயிரம் புரியும்
- மெல்லக் கொல்லும் விஷங்கள் …
- அறிந்தும் அறியாத அண்டார்க்டிகா கண்டம் (9)
- கீதாஞ்சலி (19) பேராசைப் பிடியிலிருந்து விடுவிப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் ( வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் ) ஆங்கில மூலம்: கரோலின்ரைட்
- மழைக்குடை மொழி
- சிறுவாயளைந்த அமிர்தம்
- தூங்கலாமா தம்பி தூங்கலாமா… பேருந்தில்
- வாரம் ஒரு குறுங்கதை – ஈசல்கள்
- பெரியபுராணம்-37
- 21 ஆம் நூற்றாண்டு மரபணுவியலும் 18 ஆம் நூற்றாண்டு இனக்கட்டுமானங்களும்
- பாவேந்தரின் பதறல்கள்!
- கடந்த வரலாறும் கண்முன் விரியும் வரலாறும்:பயங்கரவாதம் வரிக்கும் சமாதானப் பாயிற் படுப்பவரெல்லாம் பாடையிற்போவர்! ( பகுதி:4)
- மீனம் போய் மேடம்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 1
- அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஆண்களே காரணம்
- கடப்பாரை
- அவர்கள் வரவில்லை
- மழலைச்சொல் கேளாதவர் ( அறிவியல் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- கிருஸ்ணபிள்ளை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது)
- மரண வாக்குமூலம்