மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

அசுரன்


திண்ணையில் வெளியாகும் ஆக்கங்களை எழுத்து விடாமல் படிப்பவர்களில் திரு. ஜெயபாரதன் அவர்களும் ஒருவர் என்று நம்புகிறேன். அதற்காக முதலில் எனது நன்றி. (எனது உடல் நலன் குறித்த அக்கறைக்கும் சேர்த்துத்தான்). ஆனால், அவரே முதலிலேயே ஒரு தவறான தகவலை வெளியிட்டுள்ளார் (http://www.thinnai.com/sc1118041.html). அதாவது, அணுசக்தி அம்மன் (http://www.thinnai.com/st1111041.html) நாடகத்தை எழுதியது நான் என்று. அது நண்பர் எஸ்.பி. உதயகுமார் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பல்வேறு இணையதளங்களில் வெளியானது. அதனை நான் மொழிபெயர்ப்பு செய்தேன். என்றாலும், அதன் கருத்தை ஏற்றுக்கொண்டே மொழிபெயர்த்தவன் என்றவகையில் திரு. ஜெயபாரதன் அவர்களின் வினாக்களுக்கு விடையளிக்கவேண்டியது எனது கடமையாகிறது. (அவரது கருத்துகள் சிவப்பு வண்ணத்திலும் எனது விடைகள் கருப்பு வண்ணத்திலும் தரப்பட்டுள்ளன.)

இந்தியாவை இருட்டடிப்பில் தள்ள முற்பட்டு வருகிறார்கள், சூழ்மண்டலக் காப்பாளிகள், தயாராக மாட்டு வண்டியை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், பலவித வர்ணங்களால் வரையப் பட்ட, பொலிவுள்ள பாரத தேசத்தைத் தூரிகை கொண்டு, ஒரே பச்சை நிறமாக்கினால் கோரமாய்க் காட்சி தரும்.

கதிரியக்கமற்ற அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் வரும்வரை, இன்னும் 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு அணுஉலைகள் தேவை. பேரளவு மின்சக்தி உற்பத்தியை எவ்விதம் சிக்கனமாக, சீக்கிரமாக உண்டாக்கலாம் என்று எடுத்துக் காட்டவில்லை.

இந்தியாவை இருட்டில் தள்ளுவதில் யாருக்குத்தான் ஆசை இருக்கமுடியும் ?. சுற்றுச்சூழல்வாதிகள் மாட்டுவண்டியோடு நிற்பதாக அவர் கற்பனை செய்துகொண்டிருப்பது அதீதமான அச்சத்தால் ஏற்பட்டது என்றே நான் நம்புகிறேன். ஏதோ, இந்தியாவில் உள்ள அணுஉலைகள் எல்லாம் ஆண்டுமுழுவதும் முழுத் திறனோடு இயங்கி, பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்துகொண்டிருப்பதுபோலவும், அதை இன்னும் அதிகரிக்காவிட்டால் நாடே இருளில் மூழ்கிவிடும் என்றும் அவர் மக்களுக்கு அச்சமூட்டுகிறார்.

அவரது கூற்றின்படி பார்த்தாலும், ‘அடுத்த 20- 25 ஆண்டுகளுக்கு மட்டுமே நாம் பாதுகாப்பான வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்துவிட்டால் போதும். அதன்பின்னர் கதிரியக்கமற்ற அணுப்பிணைவு உலைகள் வந்துவிடும் ‘. அதுவரைக்கு மட்டுமல்ல அய்யா தொடர்ந்து பயன்படும் வகையில் நம்மிடம் மரபுசாரா ஆற்றல் வளங்கள் உள்ளன. மேலும், கடத்திச் செல்லப்படும்போது இழப்புக்குள்ளாகும் மின்சாரத்தின் அளவைக் குறைத்தாலே (அதாவது உற்பத்தியில் சுமார் 17%) போதும்.

இந்தியாவைப் பொறுத்தளவில் மரபுசாரா ஆற்றல் உற்பத்தி 2001 டிசம்பர் 31ல், 3387.08 மெகாவாட் ஆகும். ஆனால், மொத்தம் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள அளவு எவ்வளவு தெரியுமா ? 82,000 மெகாவாட்டுகள். இதில் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்ய வாய்ப்புள்ள அளவு மட்டும் 45,000 மெகாவாட் ஆகும். 2012ஆம் ஆண்டில் மரபுசாரா ஆற்றல் மூலம் 10,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய மத்திய மரபுசாரா எரியாற்றல்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுபோல 25 மெகாவாட் வரை திறனுடைய சிறிய நீர்மின் திட்டங்கள் மூலம் 15,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து பின்வரும் படம் தெளுவாக விளக்குகிறது.

இவ்வாறு மரபுசாரா ஆற்றல் வளங்க மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் 30, 2004 அறிக்கையின்படி தமிழகத்தின் காற்றாலை மின்னுற்பத்தியின் அளவு 1638.6 மெகாவாட் ஆகும். இது இந்திய காற்றாலை மின்னுற்பத்தியில் 57% ஆகும். (இந்திய அளவு 2884.75 மெகாவாட்).

மேலும், கரும்பாலை போன்றவற்றின் மூலம் மட்டும் தமிழகத்தில் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது. தற்போது இத்தகைய 16 நிலையங்கள் மூலம் 274.60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிலுள்ள 400 சர்க்கரை ஆலைகள் மூலம் இவ்வகையில் 3,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வாய்ப்பு உள்ளது.

இத்துடன் 3 உயிரி எரிபொருள் (Bio-mass) தயாரிப்பு நிலையங்கள் மூலம் தற்போது தமிழகத்தில் 31.6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், 24 உயிரி எரிபொருள் தயாரிப்பு நிலையங்களுக்கு தமிழக மின்சார வாரியம் அனுமதி அளித்திருக்கிறது. இவற்றின் திறன் 202.7 மெகாவாட் ஆகும்.

அணுஉலைகளை நிறுவ ஆகின்ற செலவுகளோடு கணக்கிட்டால் இவை மலிவானவையே. எனவே, திரு. ஜெயபாரதன் மாட்டுவண்டியில் பயணம் செய்யவேண்டியிருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை. மேலும், எல்லா வண்ணங்களும் தேவை என்பதற்காக நீரில் கலக்கும் சாயப்பட்டறைக் கழிவுகளை அனுமதிக்க முடியாது. நாங்கள் விரும்புவது ‘பச்சை ‘ அல்ல; ‘பசுமை ‘. சுற்றுச்சூழல்வாதிகள் ஓரினப் பயிரிடுதலையும்கூட எதிர்ப்பவர்களே என்பது தெரிந்ததுதானே!.

ஆனால், இதில் வெட்கப்படவேண்டிய அம்சம் என்னவென்றால், 2001ல் 3387.08 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்த மரபுசாரா ஆற்றலுக்காக 2003-2004 நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை வெறும் 828 கோடிகள் மட்டுமே. ஆனால் ஏற்கனவே பல்லாயிரம் கோடி ரூபாய்கள் செலவிடப்பட்டும் 2001ல் சுமார் 2191 மெகாவாட் (19200 மில்லியன் யூனிட்) மின்சாரம் மட்டுமே உற்பத்திசெய்த அணுவாற்றல் துறைக்கோ 4,416 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது எவ்வகையில் நியாயம் ?.

அணுமின் நிலையங்கள் அணு ஆயுதங்கள் போன்று வெடிக்கா! என்பது அவரது கருத்து.

ஆனால், 1945க்கும் 1987க்கும் இடையில் மட்டும் உலகில் 285 அணுஉலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன என்று ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. 1986 ஏப்ரல் 25ல் நடந்த செர்னோபில் விபத்தை நாம் மறக்க முடியுமா ?. சப்பானிலும் பல்வேறு விபத்துகள் நடந்துள்ளன. ஏன் கல்பாக்கத்திலும்கூட அண்மையில் விபத்து ஏற்பட்டதே!. (அணுஉலை விபத்துகள் குறித்து நீண்ட பட்டியலைத் தரமுடியும்).

செர்னோபில் குறித்த சில உண்மைகள்:

அணுஉலைகள் மிக ஆபத்தானவை என்பதை முதலில் தெளுவாக வெளிப்படுத்தியது 1986 ஏப்ரல் 25ல் நடந்த செர்னோபில் அணுஉலை விபத்து. இதனால் தைராய்டு புற்றுநோய் அதன் சுற்றுவட்டாரத்தின் சில பகுதிகளில் 100 மடங்கு அதிகமாகியுள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் (FDA) தெரிவிக்கிறது. கதிர்வீச்சினால் தைராய்டு பாதிக்கப்படுவதோடு நீண்டகாலத்தின் பின்னர் புற்றுநோய் ஏற்படுகிறது என்று அணுவாற்றல் ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் (NRC) அட்டர்ணி பீட்டர் கிரேன் தெரிவிக்கிறார். (அவர் குழந்தையாக இருந்தபோது 1950களில் உள்நாக்கு அழற்சி (டான்சில்) ஏற்பட்டபோது அவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் பின்னாளில் அவருக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டது.)

செர்னோபில் விபத்தால் சோவியத் குடியரசிலிருந்த பெலாரஸ், இரசியா, உக்ரேன் ஆகிய மூன்று குடியரசுகளிலும் வாழ்ந்துவந்த மக்களில் 70 இலட்சம் பேர் மருத்துவரீதியிலான பிரச்சினைகளைச் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. உக்ரேனில் மட்டும் 23 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் (இவர்களில் 4 இலட்சத்து 52 ஆயிரம் பேர் குழந்தைகள்) மேற்பட்டவர்கள் கதிரியக்கம் தொடர்பான தைராய்டு புற்றுநோய், இரத்த புற்றுநோய், புற்றுநோய் கட்டி வளர்ச்சி போன்றவற்றுக்காக மருத்துவம் பெற்றதாக உக்ரேனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் செர்னோபில் திட்ட இயக்குநரான நிகோலாய் நகோர்னி, பெலாரசிலுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் செர்னோபில் விபத்திற்கு முன்னர் இருவருக்கு மட்டுமே தைராய்டு புற்று நோய் இருந்ததாகவும் விபத்தின் 10 ஆண்டுகளின் பின்னர் இது ஆயிரமாக அதிகரித்ததாகவும் தெரிவிக்கிறார்.

செர்னோபில் விபத்தில் உடனடியாக கொல்லப்பட்டோர் 31 பேர் மட்டுமே என்றாலும் அப்போது பரவிய கதிர்வீச்சின் பாதிப்புகளால் பல்லாயிரக்கணக்கானோர் இன்னமும் உயிரிழந்து வருகின்றனர். ‘தொழிலாளியின் கவனக்குறைவு ‘, ‘உலை வடிவமைப்புக் கோளாறு ‘ என்ற சொற்களுக்குள் அதன் பாதிப்புகளை நாம் அடக்கிவிட முடியாது. அணுஉலை வெடித்த பின்னர் சிமின்ட், சுண்ணாம்பு முதல் பல்வேறு பொருட்கள் ெ ?லிகாப்டர் மூலம் சுமார் 5020 டன் அளவுக்கு கொண்டு சென்று உலையின் மீது கொட்டி ஒரு கல்லறை உருவாக்கப்பட்டது. அப்படியும் அடுத்த 10 நாட்களாக அந்த உலையிலிருந்த 71% கதிரியக்க எரிபொருள் (135 டன்) எரிந்து வளிமண்டலத்தில் கலந்தது. இதனால் ஏற்பட்ட புகை மண்டலம் கிழக்கு ஐரோப்பா முழுவதும் படர்ந்தது. உக்ரேன், பெலாரஸ், ரசியா ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. பெலாரசின் 23% பரப்பும், உக்ரேனின் 5% பரப்பும், ரசியாவின் 1.5% பரப்பும் கதிரியக்க பாதிப்புக்கு உள்ளாயின. மக்கள் தொகையில் பார்த்தால் 23 லட்சம் உக்ரேனியர்களும் 18 இலட்சம் ரசியர்களும் 16 இலட்சம் பெலாரசியர்களும் இதனால் பாதிக்கப்பட்டனர்.

செர்னோபில் அணுஉலையின் கதிர்வீச்சில் இருந்து மக்களைக் காப்பாற்றப் போராடியவர்களில், மீட்புப் பணியாற்றியோரில் இதுவரையிலும் 15,000 பேர் உயிர் இழந்துள்ளனர். 50,000 பேர் ஊனமுற்றனர் என்று கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அணுக்கதிர்வீச்சின்ன் அழிவுப் பணிக்கு தடை போட முடியவில்லை. முடியாது என்பதுதான் சோகம்.

விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, செர்னோபில் அணு உலையின் கல்லறை கூட இப்போது மக்களை மிரட்டி வருகிறது. அவசர அவசரமாக காங்கிரீட் கல்லறை கட்டப்பட்டதால் அது தரமானதாக இல்லை என்கிறார் குரோட்சின்ஸ்கி என்பவர். செர்னோபில் வட்டாரத்தின் நில அமைப்பும் உறுதியானதில்லை என்றும் கூறுகிறார் அவர்.

அவர் சொல்வதை உறுதிபடுத்துவது போன்ற கருத்தைச் சொல்கிறார் உக்ரேனிய விஞ்ஞானியான பேராசிரியர் டிமிட்ரோ ரோடின்ஸ்கி. அவர் உக்ரேன் அரசின் கதிரியக்க பாதுகாப்பு ஆணையத்தின் தலைவரும், செர்னோபில் கண்காணிப்புப் பொறுப்பு வாய்ந்தவருமாவார். அவர் ‘இஸ்வெஸ்தியா ‘ நாளிதழுக்கு, செர்னோபில் விபத்தின் 16 ஆம் ஆண்டையொட்டி வழங்கிய நேர்காணலில், ‘தற்போது உக்ரேனில் பிறக்கும் 24% குழந்தைகள் கோளாறுகளுடன் பிறக்கின்றனர். தைராய்டு நோய் 1000 மடங்கு அதிகரித்துள்ளது. மூடி, கல்லறை கட்டப்பட்ட செர்னோபில் உலை பகுதியில் இன்னமும் கதிரியக்க எரிபொருள் உள்ளதால் கதிரியக்கக் கசிவு ஏற்படும். செர்னோபில் உலை கல்லறையில் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு கீறலும் ஓட்டைகளும் காணப்படுகின்றன ‘ என்கிறார்.

கல்லறை கட்டுவதற்காக மேற்கத்திய நாடுகளிடம் உதவி பெற்றும் சரியாகச் செய்யவில்லை என்கிறார் பிபிசி நிருபர். இதனை பாதுகாக்க இன்னொரு அடுக்கு கான்கிராட் பாதுகாப்புக் கவசம் வேண்டும் என பல நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

செர்னோபிலில் இருந்து 9 நாட்களாக கதிரியக்க எரிபொருள் எரிந்து பரவிய கதிரியக்க மேகம் காற்று வீசும் திசையில் ஐரோப்பாவில் பரவியது. இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் அப்போது கதிரியக்க மழை பொழிந்தது.

ஆம் கதிரியக்க மேகத்திலிருந்த சீசியம் 137 மழை நீருடன் கலந்து தரையில் படர்ந்தது. இதனால் அப்பகுதியில் வளர்ந்த புல், தாவரம், மரங்கள் எல்லாம் அளவுக்கதிகமான கதிரியக்கத்தை ஏற்றன. அத்தழைகளை உண்ட ஆடுகளின் பால், இறைச்சியிலும் அதை உண்ட மனிதர்களுக்கும் கதிரியக்கம் பரவியது. எனவே, அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆடுகள் அங்கிருந்து வேறு பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடுகளையோ, விளைபொருட்களையோ விற்பதாக இருந்தால் வேளாண் அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்து, அதிகாரிகள் வந்து ஆராய்ந்த பின்னரே விற்க வேண்டுமாம். இன்னும் 15 ஆண்டுகளுக்கு இந்நிலை நீடிக்கும் என்கிறது இங்கிலாந்து வேளாண்துறை.

இதுபோல ஜெர்மனியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் தென்பகுதியில் உள்ள பவரியா பகுதியில் கிடைக்கும் காளான்கள், பெர்ரி பழங்கள், காட்டு விலங்குகளின் உடலில் கதிர்வீச்சு இருப்பதால் அவற்றை உண்பதைத் தவிர்க்குமாறு ஜெர்மன் அணுவாற்றல் பாதுகாப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அணுஉலை விபத்தின் தாக்கம் எவ்வளவு கோரமானது என்பதை மனச்சாட்சி உள்ள ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். நாம் மீளவே முடியாத மோசமான அழிவு அது. செர்னோபில் விபத்தின் பின் அது குறித்து உலகிற்கு விளக்குவதற்காக வியன்னாவுக்குச் சென்ற குழுவை தலைமை ஏற்றுச் சென்றவர் வாலெரி லேகசோவ் என்ற விஞ்ஞானி.

‘வியன்னாவில் நான் உண்மையைப் பேசவில்லை ‘ என்று மனந்திறந்து கூறிய அவர் ‘அணுசக்தியைப் பயன்படுத்த வேண்டாம் ‘ என்ற இறுதி வேண்டுகோளுடன், செர்னோபில் விபத்தின் இரண்டாம் நினைவு நாளில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செர்னோபிலில் இயங்கிவந்த 4 அணுஉலைகளில் ஒன்று 86-ல் வெடித்ததோடு அதற்கு சமாதி கட்டப்பட்டது. இரண்டாவது உலை 1991-ல் ஒரு பெரும் தீ விபத்தோடு கைவிடப்பட்டது. மற்றொரு உலை 1996 உடன் தன் வாழ்நாளை இழந்துவிட்டது. எஞ்சியிருந்த ஒரேயொரு உலைக்கும் 2000 டிசம்பர் 15-ஆம் நாளோடு முடிவு கட்டப்பட்டு விட்டது. இது ஒரு விழாவாகவே கொண்டாடப்பட்டது. செர்னோபில் அணு உலைக்கு முடிவுகட்டும் அந்த விழா உக்ரேனில் நாடு முழுவதும் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அதில் பேசிய உக்ரேன் அதிபர் லியோனிட் ருச்மா,

‘தேசிய முடிவை நிறைவு செய்யவும் சர்வதேச வேண்டுகோள்களை ஏற்றும் செர்னோபில் அணுஉலையின் மூன்றாவது உலையை அதன் ஆயுட்காலம் முடியும் முன்பே நிறுத்த ஆணையிடுகிறேன். செர்னோபிலில் ஏற்பட்ட திடார் விபத்து, அதன் தொடர்விளைவால் 35 லட்சம்பேர் பாதிக்கப்பட்டனர். நமது வட்டாரத்தில் ஏறத்தாழ 10 விழுக்காடு பேர் கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு லட்சத்து 60 ஆயிரம் மக்கள் தாம் பிறந்து, வாழ்ந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர் ‘ என்றார்.

2001 மே மாதம் இங்கிலாந்தின் இராயல் சொசைட்டி என்ற அமைப்பு விபத்தின் பின்னர் செர்னோபில் அணு உலையைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்குப் பிறந்த குழந்தைகள் மரபின மாற்றத்துக்கு (genetic mutation) ஆளாவதற்கு 600% அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கிறது.

கூடங்குளத்தில் அமைக்கப்பட உள்ள ரஷ்யன் VVER அணு உலைகளில் இந்தியா அணுகுண்டு ஆக்க முடியாது! ரஷ்யாவின் அனுமதியும், அகில அணுவியல் பேரவையின் (IAEA) ஆசியுமின்றி ரஷ்யன் அணு உலைகளின் புளுடோனியத்தை எடுத்து இந்தியா அணுகுண்டு செய்ய முடியாது.

முதலில் ஒப்பந்தம் கையெழுத்திட்டபோது கூடங்குளத்தின் கதிரியக்கக் கழிவுகளை தானே எடுத்துக்கொள்வதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. ஆனால் அது இரசியாவான பின்னர் மறுத்து, கழிவுகளை இந்தியாவே கையாளவேண்டும், எங்களுக்கு வேண்டாம் என்று தெரிவித்துவிட்டது ?. அணுகுண்டுகளைச் செய்வதற்கு எல்லாம் இந்தியா யாருடைய அனுமதியையும் பெற்றுக்கொண்டுதான் இறங்கும் என்று யாரும் சொல்லமுடியாது. ஏற்கனவே இந்தியா அணுகுண்டுகள் செய்ததும், வெடித்ததும் இப்படி அனுமதி பெற்றுக்கொண்டுதானா ?. அதற்கான மூலகங்கள் இந்திய அணுஉலைகளில் இருந்து அல்லாமல் வேறெங்கிருந்து கொண்டுவரப்பட்டன ?.

அணுஉலையிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம் வடிகட்டப்பட்ட சாதா நீர் சோதிப்புக்குப் பிறகே கடலில் கலக்கிறது. அதில் அதிக அளவு கதிரியக்கம் உள்ளது என்பது தவறு.

இது முழுப்பொய். ஏனென்றால் நீடித்த, நிலைத்த சென்னைக்கான வளர்ச்சித் திட்டம் என்று அரசால் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கையில் கல்பாக்கம் அணுஉலையிலிருந்து வெளியாகும் கழிவுநீரினால் கடலில் கலக்கும் கதிர்வீச்சின் தாக்கம் மெரினா கடற்கரைவரை உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வியன்னாவில் இருக்கும் அகில அணுவியல் பேரவை (IAEA), உலக அரங்குகளின் அணு உலைகளைக் கண்காணித்து வருவதை அறிய வேண்டும். பாரதம் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடாவிட்டாலும், அகில அணுவியல் பேரவையின் நியதிகளையே, அணுமின்சக்தி இயக்கங்களுக்குப் பின்பற்றி வருகிறது!

அனைத்துலக அணுவாற்றல் நிறுவனத்தின் கண்காணிப்பு எந்த லெட்சணத்தில் இருக்கிறது என்பது நமக்குத் தெரிந்ததுதானே!. கையெழுத்து போட்ட ஒப்பந்தங்களையே சரியாகக் கடைபிடிப்பதில்லை இந்தியா. இந்நிலையில் கையெழுத்து போடாத விதிமுறைகளை எப்படி ஒழுங்காகக் கடைபிடிப்பார்கள் ?.

அணுவிஞ்ஞானிகள் அணுமின் நிலையங்களின் அண்டை நீர்வளத்தில் பிடித்த மீன்களைச் சமைத்து உண்டு வருகிறார்கள். யாரும் அதனால் நோய்வாய்ப்பட வில்லை! ஏரியிலோ, கடலிலோ கதிரியக்கத்தால் மீன்கள் செத்து மடியவில்லை.

அப்படியானால், இரசியாவிலிருந்து வந்த விஞ்ஞானிகள் ஏன் சென்னையில் பிடிக்கப்பட்ட மீனை உண்ண மறுத்தார்கள் ?. (இச்செய்தியை நக்கீரன், ஜூனியர் விகடன் இதழ்களில் படித்த நினைவு). மேலும், கல்பாக்கம் மீன்களிலும் பிற உணவுப் பொருட்களிலும் கதிர்வீச்சு சீசியம், ஸ்ட்ரான்சியம், பொலோனியம் அதிகம் உள்ளது 1980-ல் செய்த ஆய்வுகளிலேயே தெரியவந்துள்ளது.

2002 சூலை 30 ஆம் தேதியன்று தனியார் தொலைக்காட்சிக் குழுவொன்று கல்பாக்கம் பகுதியில் உள்ள மருத்துவப் பிரச்சினைகள் குறித்து செய்திப்படம் ஒன்றைத் தயாரிப்பதற்காக அந்தப் பகுதிக்கு சென்றிருந்தது. கல்பாக்கத்திற்கு இரண்டு கிலோமீட்டர் வடக்கில் உள்ள கொக்கிலமேடு என்ற ஊரில் உள்ள மீனவர்கள் அந்தக்குழுவிடம் அதிர்ச்சி தரும் செய்தியொன்றைக் கூறியிருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் முன்பு, அதாவது சூலை 27 ஆம் தேதியன்று, அந்தப் பகுதியில் கடலில் இலட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன என்பதே செய்தி. கடந்த 25 ஆண்டுகளில் இந்த அளவு பாதிப்பை அவர்கள் கண்டதில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். நிகழ்ச்சி நடந்து மூன்று நாட்களுக்குப் பிறகே அறிந்த காரணத்தால் இந்த அழிவினை அந்தத் தொலைக்காட்சிக் குழுவினால் படம்பிடிக்க இயலவில்லை. மேலும், வலை 30ஆம் தேதியன்றும் கல்பாக்கம் அணுஉலைகளின் கடல்நீர்க்குழாய்களை ஒட்டி மீன்கள் செத்து மிதந்து கொண்டிருந்த செய்தியை மீனவர்கள் அவர்களிடம் சொன்னபோதிலும் கூட கல்பாக்கம் அணுஉலையை சுற்றி போடப்பட்டிருக்கும் பலத்த பாதுகாப்பு காரணமாக கடல் மார்க்கமாக உலைக்கு அருகே சென்று செத்த மீன்களைப் படம் பிடிப்பதும் இயலாத காரியமாகிவிட்டது.

பின்வரும் செய்தியை இத்துடன் சேர்த்துப் படித்துப் பாருங்கள் உண்மை தெரியும்.

‘கல்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் அட்டாமிக் பவர் ஸ்டேஷனின் இரண்டாவது அலகில் 2002 சூலை மாதம் 24 ஆம் தேதியன்று கதிரியக்கக் கனநீர்க் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பணியாளர் ஒருவர் கதிரியக்கப் பாதிப்பால் அந்த இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் மேலும் ஒருவர் மிக அதிக அளவு கதிரியக்கத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது ‘.

வேகப்பெருக்கி அணுமின் நிலையங்களை [Fast Breeder Power Stations] இந்தியா விருத்தி செய்கிறது. ஆனால் அமெரிக்க என்றைக்கோ அவ்வழியைப் புறக்கணித்து விட்டது!

அமெரிக்காவே இது நமக்கு ஒத்து வராது என்று கழித்துக்கட்டிய, அபாயகரமான இத்தகைய உலைகளை அமைத்துவிட்டு, அதிலேயே பெருமை வேறா ?. கல்பாக்கத்திலுள்ள இத்தகைய சோதனை உலை எந்தளவுக்கு வெற்றிகரமாகச் செயல்பட்டது என்று திரு. ஜெயபாரதன் அவர்களுக்குத் தெரியாதா ?.

ஏற்கனவே கல்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சோதனை அடிப்படையிலான வேக அணு ஈனுலையானது பிரான்சின் ரேப்சோடி வேக அணு ஈனுலையின் வடிவமைப்பைத் தழுவியது. இது 1985 அக்டோபர் 24 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இது பெரும்பாலும் இயங்காமல் மூடியே கிடந்தது. இயங்கும் போதும் அதன் உற்பத்தி ‘வழக்கம்போல ‘ மிகக் குறைவே. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக 1987 முதல் 1989 வரை அது மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் 1989இல் இயங்கத் தொடங்கியபோதிலும் 1992 வரை அது உற்பத்தி செய்தது வெறும் ஒரு மெகாவாட் மின்சாரமே. 1997 ல் மட்டுமே மிக அதிகமாக (!!!) 12.5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தது. ஆனால், திட்டமிடப்பட்டபடி அதன் திறன் 40 மெகாவாட்.

கடந்த ஆண்டு (2000) அக்டோபரில் 52 நாட்கள் இந்த உலை தொடர்ந்து இயங்கியதை அணு ஆற்றல்துறை பெருமையாக செய்தியாக வெளியிட்டது. அது கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அதிக நாட்கள் இயங்கியதும் இதுவே முதல்முறை. 15 ஆண்டுகளில், 52 நாட்கள் அணுஉலை தொடர்ந்து இயங்கியதையே ‘கொண்டாடுகிறார்கள் ‘ என்றால் இது எந்தளவு ‘வெற்றிகரமான ‘ திட்டம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த இலட்சணத்தில்தான் இதை முன்மாதிரியாகக் கொண்டு, இதைவிட பன்னிரெண்டரை மடங்கு பெரிதாக முன்னோடி வேக அணு உலை நிறுவப்பட்டுவருகிறதுி. மேலும் புளூட்டோனியத்தை பயன்படுத்தி தயாரிக்கப்படும் வேக அணு ஈனுலைக்கான எரிபொருள் சாதாரண யுரேனியத்தை விட 5 முதல் 10 மடங்கு விலை அதிகமாகும். இந்த வெட்கக்கேட்டை எங்கே போய்ச் சொல்ல ?

கன்னியாகுமரி, கேரளாக் கடற்கரைகளில் கதிரியக்கம் கொண்ட தோரியம் என்னும் மூலகம் கலந்த ‘மானஸைட் மணல் ‘ [Thorium Monazite Sand] பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. அங்கு கதிர்வீச்சால் எந்த வித நோய்களும் தாக்கப்பட்டதாக இதுவரை நிரூபிக்கப் படவில்லை!

இத்தகைய நிரூபித்தல் வேலைகளை எல்லாம் அறிவியலாளர்கள்தான் செய்யவேண்டும். ஆனால், நம்நாட்டு அறிவியலாளர்களுக்கு இதைவிட சம்பாதிப்பதுதான் முக்கியம். என்றாலும், கேரளாவைச் சேர்ந்த திரு. வி.ற்றி. பத்மநாபன் என்பவர் கேரளத்தின் சவேரா மற்றும் தமிழகத்தில் கன்னியாகுமரியில் உள்ள மணவாளக்குறிச்சி மணல் ஆலைகளை, அவ்வட்டாரத்தில் கதிர்வீச்சினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்னரே ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் வீடியோ வடிவமும் உள்ளது. நான் சிறு வயது முதல் இன்றுவரையிலும் மணவாளக்குறிச்சி பகுதிகளைச் சுற்றித்திரிகிறவன் என்றளவில் அப்பகுதியில் பெருமளவில் காணப்படும் புற்றுநோய், மனநலப் பாதிப்பு, உடல் ஊனம் போன்ற பாதிப்புகளை நேரில் கண்டுவருகிறேன். அவ்வட்டாரத்திலுள்ள எந்தவொரு ஊருக்குச் சென்றாலும் எப்போதும் மரணப்படுக்கையில் இருக்கும் சில புற்று நோயாளிகளைக் காணமுடியும். இதுகுறித்தும் Frontline, The Week, நக்கீரன், ஜூனியர் விகடன் போன்ற இதழ்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சட்டைக்குள் புது ரூபாய்களைத் திணிப்பது என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பது, மட்டரக எழுத்தாகத் [Cheap Shots] தெரிகின்றது. திட்டமிட்டு அணுசக்தி அதிகாரிகளைத் திட்டியிருப்பது கண்ணியமான எழுத்தாகத் தோன்றவில்லை!

இது மட்டரக எழுத்து என்றால் யாரும், யாரையும் கருத்துப்படம்கூட வரைய முடியாது. உண்மையில் அவர்கள் நடந்துகொள்ளும்விதம் அதைவிட மோசம். எடுத்துக்காட்டாக, 2002 மார்ச் 27 அன்று கூடங்குளத்தில் ‘பூமி பூஜை ‘ நடத்தி, உலைக்கான வேலைகளைத் தொடங்குவதற்காக இரசியாவிலிருந்து விஞ்ஞானிகள் வந்திருந்தனர். இடத்தை நேரில் பார்வையிட்ட அவர்கள் தாங்கள் சொன்ன இடத்திலிருந்து மாற்றி வேறு இடத்தில் உலைக்கான பணிகள் செய்யப்பட்டிருப்பதால் தாங்கள் அதனை ஒப்புக்கொள்ள இயலாது என்று கூறிவிட்டு கோபத்தில் சென்றனர். தொடக்கவிழா நடக்குமா என்பதே பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பான செய்தியாக இருந்தது. பின்னர் அவர்கள் சமாதானம் செய்யப்பட்டு அந்த விழா நடந்தது. இதற்கிடையில் முதல்நாள் இரவில் கேரள ‘அழகிகள் ‘ உதவியுடன் இந்த சமாதானம் நடந்ததாக சில உள்ளூர் அரசியல்வாதிகள் குரல் எழுப்பினர். இதழ்களிலும் இது செய்தியானது.

(அணுவாற்றல் துறையின் நீதியான, நேர்மையான தன்மையை, சனநாயகத்தன்மையைப் பற்றி தனிக்கட்டுரை எழுத உள்ளேன்).

சூழ்மண்ட காப்பாளி அசுரன் பாரதத்தின் அணுமின் நிலையங்களில் சிலவற்றுக்கு விஜயம் செய்து, அவற்றின் காலனியில் வாழும் ஊழியர், அதிகாரிகளுடன் நேராக உரையாடி, அங்குள்ள நீர்வளம், நிலவளம், வாயு மண்டலம், சாப்பாடு, பயிரினம், புல் தின்னும் பசுக்கள் ஆகியவை மாசுபட்டு நாசம் அடைந்துள்ளனவா என்று கண்டு வந்து எழுதினால், திண்ணை வாசகர்களுக்கு மெய்யான அறிவு விருந்தாக இருக்கும்!

இதற்கு நான் நேரில் செல்வது இருக்கட்டும். சென்று வந்தவர்களில் அனுபவங்களைக் கேட்டால் நாள் முழுக்கச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்.

அதாவது, கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு எதிர்ப்பு பெருமளவில் இருப்பதால் உள்ளூர் மக்களை அமைதிப்படுத்தும் நோக்கில் அணுவாற்றல் துறையால் மக்கள் பேருந்துகளில் சென்னைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள். அங்கு முதலில் அவர்களுக்கு வடசென்னை அனல்மின்நிலையப் பகுதி சுற்றிக்காட்டப்பட்டதாம். பின்னர் அவர்கள் கல்பாக்கத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்களாம். அப்போது, ‘பார்த்தீர்களா அனல்மின்நிலையம் எவ்வளவு மோசமாகப் புகைவிட்டு, அழுக்கானதாக இருக்கிறது. கல்பாக்கத்தைப் பாருங்கள் எவ்வளவு சுத்தமாக, அழகாக இருக்கிறது! ‘ என்று ஒப்பிட்டுக் காட்டினார்களாம். கதிரியக்கம் என்ன கருகருவென்றா வெளிவரும் ?.

மற்றொரு விசயம், ‘பாருங்கள் காய்கறிகள் எல்லாம் எவ்வளவு பசுமையாக இருக்கின்றன ? ‘ என்று காட்டினார்களாம். வேடிக்கை என்னவென்றால், அதில் கேரட், பீட்ரூட், காலிஃபிளவர் போன்றவையும் அடக்கம். அதோடு, இவற்றையெல்லாம் கவனித்து கேள்வியெழுப்பிய பேராசிரியர்கள் அடுத்த கட்டப் பயணங்களில் அழைத்துச்செல்லப்படவில்லை. கதிர்வீச்சினால் புல்லும் பாலும்கூட மாசாகுமா என்பதற்கான பதிலை செர்னோபில் குறித்த பகுதியில் பார்க்கவும்.

தமிழகத்தின் கிணற்றுக்குள்ளே கிடந்தவர் பலருக்கு வடநாட்டு மாந்தரைப் போல போரின் அனுபவங்களும், இன்னல்களும் நேரில் அறிவதற்கு வாய்ப்புக்கள் எவையும் இல்லை.

என்னவோ போரென்றாலே அது வட நாட்டில்தான் நடப்பது போலவும் தென்னகத்தில் எப்போதுமே அமைதி கொலுவிருந்தது போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார் திரு. ஜெயபாரதன். போரின் கொடுமை தெரிந்ததால்தான் (ஊழலுக்காகவே நடத்தப்பட்டதோ என்று ஐயமெழுப்பும்) கார்கில் போருக்காக இந்தியாவிலேயே அதிக நிதி திரட்டிக் கொடுத்தார்கள் தமிழர்கள். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பெருமளவில் தமிழர்கள் இருந்தார்கள் என்பதும் வரலாறு. புலித்தேவன்ி முதலாக வ.உ.சி. வரையிலும் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியவர்கள் யார் ?. வேலூர் சிப்பாய்க் கலகம் என்பது என்ன ?. இமயத்தில் புலிக்கொடியைப் பறக்கவிட்டவர்களும், கடாரம் கொண்டவர்களும், பெரும் கடற்படையை வைத்திருந்தவர்களும் யார் ?.

இமயத்தின் உச்சியில் போலியான போர் விளையாட்டுகளை நடத்தி மக்கள் பணத்தைக் கோடிகோடியாகக் கொள்ளையடிப்பதும் காஷ்மீரில் நடப்பதும்தான் போர் என்று திரு. ஜெயபாரதன் நினைப்பாரேயானால், அதைவிட ஆயிரம் மடங்கு அதிக வலியையும், வேதனையையும் ஈழத்தில் நடக்கும் போரின் விளைவாக தமிழர்களாகிய நாங்கள் அனுபவித்து வருகிறோம். எனவே போரும், அதன் வலிகளும் எமக்கு அந்நியமல்ல!.

தேசப்பற்று, தேசப் பாதுகாப்புச் சிந்தனை இல்லாத மனிதர்தான் இரகசியப் பாதுகாப்புத் திட்டங்களை எள்ளி நகையாடுவார்! பாதுகாப்பு இல்லாத நாடுகளும், போர் ஆயுதங்கள் இல்லாத படைகளும் உலக வரலாறுகளில் என்ன பாடுகள் பட்டுள்ளன என்று தெரிந்து கொள்ள வேண்டும். 2500 ஆண்டுகளாக பாரத நாடு அலெக்சாண்டர் முதல், கஜினி, பாபர் போன்ற முகமதியர், பிறகு பிரான்ஸ், பிரிட்டன், பாரத விடுதலைக்குப் பின்பு சைனா, பாகிஸ்தான் ஆகிய படையெடுப்புகளால் இந்தியர் பட்ட இன்னல்களையும், சிதைக்கப்பட்ட இந்திய காலாச்சாரங்களையும், கோரம் செய்யப்பட்ட நமது கோயில்களையும் இந்தியன் ஒருவன் மறக்க முடியுமா ?

இந்த இரகசிய பாதுகாப்புத் திட்டங்களில் அணுகுண்டுகளும் அடக்கம்தானே!. (முதலில் அணுஉலைகள் மின்சாரம் தயாரிப்பதற்கு மட்டும்தான் என்றாரே!). ஆயுதங்களின் மூலம் எந்தப் பிரச்சினையையும் தீர்த்துவிடமுடியாது என்று இந்தியப் பிரதமர் திரு. மன்மோகன்சிங் தனது மணிப்பூர், அசாம் சுற்றுப்பயணத்தின்போது சுறியிருக்கிறாரே!. பொய்யா சொன்னார் ?. அவரும் இரகசிய பாதுகாப்புத் திட்டங்களை எள்ளி நகையாடுகிறவர்தானோ ?!.

பெளத்த விகாரைகளையும் சமணப் பள்ளிகளையும் இந்துக் கோயில்களாக்கிய அநியாயத்தையும் கூடத்தான் எங்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. என்ன செய்யலாம் ?. பா.ஜ.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தைப் படிப்பதுபோல இருக்கிறது இந்தப்பகுதி.

எதிர்ப்பாளிகள் யாவரும் தேசப் பற்றில்லாத பிற்போக்குவாதிகளே! அணுசக்தி அம்மன் நாடகத்தில் பாரத அன்னையின் படம் போட்டு அசுரன் அவமதித்துள்ளது அதற்கு ஓர் உதாரணம்! தேசப் பற்றில்லாத தனித் தமிழர்கள் பலர் பாரத நாட்டின் பாதுகாப்பில் முழுப் பலாபலன்களை அனுபவித்து வந்தாலும், அவற்றை காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள்!

தனது அனைத்துக் கட்டுரைகளிலும் இந்தியா என்பதை ஒப்புக்கொள்ளாமல் பாரதம் என்றே குறிப்பிட்டு வருகிறார் திரு. ஜெயபாரதன். இந்தியா – பாரதம் என்பவற்றிற்கு இடையிலான தெளுவான வேறுபாடு அவருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன். பாரதமாதா என்பவர் கையில் காவிக்கொடி வைத்திருப்பவரா அல்லது மூவர்ணக்கொடி வைத்திருப்பவரா என்றும் தெரிந்துகொள்ள நான் ஆசைப்படுகிறேன்.

இந்தியக் கொடியிலுள்ள தர்மச்சக்கரமாம் அசோக சக்கரத்தை எடுத்துவிட்டு விஷ்ணு சக்கரத்தை அமைக்கவேண்டும் என்பது இந்துத்துவவாதிகளின் விருப்பம். அதையே, இந்திய முத்திரையிலுள்ள அசோக சக்கரத்தை எடுத்துவிட்டு அணு சக்கரத்தை ஒட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார் திரு. ஜெயபாரதன்.

இந்தியாவில் தமிழர்கள் என்ன பாதுகாப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் ?. திருப்பதி, கோலார் தங்கவயல், வெங்காலூர் (பெங்களூர்), தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இந்தியாவோடு இணைந்ததற்காக ஆந்திராவுக்கும், கர்நாடகத்திற்கும், கேரளத்திற்கும் விட்டுக்கொடுக்க நேர்ந்தது. நெய்வேலி மின்சாரம் இங்கிருந்து செல்கிறது, நரிமணம் பெட்ரோல் இங்கிருந்து செல்கிறது, ஏன் மணலும்கூட இங்கிருந்து செல்கிறது. ஆனால், தமிழர்களுக்கு உரிமைப்பட்ட காவிரி நீர் வந்ததா ?, பெரியாறு அணையைத்தான் உயர்த்த முடிந்ததா ?. எலிக்கறியும் தற்கொலையும்தான் கிடைத்த ஆதாயம். இவர்களின் பாதுகாப்பில்தான் பல நூறு தமிழக மீனவர்களின் உயிர் சிங்களப் படையினரால் நடுக்கடலில் பறிக்கப்பட்டது; பறிக்கப்பட்டுவருகிறது. கல்பாக்கம் அணுஉலைக்கு மேலே அமெரிக்க ெ ?லிகாப்டர் 2 மணி நேரத்திற்கும் மேலாக வட்டமிட்டு, நோட்டமிட்டபோது இந்திய பாதுகாப்புப் படையினர் என்னதான் செய்தார்கள் ?.

இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளாக அணுமின்சக்தி ஆக்குவதற்கு மகத்தான சாதனைகளை நுணுக்கமாகச் செய்துவரும் விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்களைக் கேலி செய்து, அணுசக்தி அம்மன் கோரஸ் பாட்டைப் பாடுவதாய் நாடகத்தில் காட்டுவது, அற்பப் புத்தியைக் காட்டுகிறது. ஆக்கத் துறைகளில் எதையும் வாழ்க்கையில் சாதித்தவர் எவரும், இந்திய வல்லுநர்களை இவ்விதம் இழிவாகக் கேலி செய்து ஆனந்திக்க மாட்டார்!

நமது நாட்டில் அறிவியலாளர்கள் ஏராளம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அறிவாளர்கள்தான் குறைவு. மா.சா. சுவாமிநாதன் பெரிய அறிவியலாளர்தான் (அதிலும் கருத்து வேறுபாடு உடையவர்கள் உள்ளனர்) ; ஆனால் அறிவாளர் அல்ல. அதனால்தான் அன்று பசுமைப்புரட்சி என்ற பெயரில் வேளாண்மைக் கெடுத்தார்- இன்று தாய்ப்பாலிலும், குளிர்பானத்திலும் பூச்சிக்கொல்லி இருக்கும் நிலை உருவானது. இது அனைத்துத் துறைகளுக்கும் பொருந்தும். ஆக, நுணுக்கமான சாதனைகள் யாருக்காகச் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம்.

அணுவாற்றல் குறித்து என்றில்லாமல் திரு. ஜெயபாரதன் பல விசயங்களையும் தொட்டுச்சென்றதால்தான் பரவலாக விளக்கமளிக்க நேர்ந்தது. கடைசியாக, அணுவாற்றலைப் பொறுத்தளவில் அதில் விபத்து ஏற்படவே ஏற்படாது என்பதே அவரது நிலைப்பாடாக இருக்கிறது. அதுதொடர்பாகச் சில செய்திகள்.

கொலம்பியாவிலுள்ள மிசெளரி பல்கலைக்கழக அணுப் பொறியியல் பேராசிரியரான வில்லியம் மில்லர், ‘ஒரு பெரிய விபத்து ஏற்பட்டால் உலையிலிருந்து வெளியேறும் அயோடின் வாயு காற்றில் அருகிலுள்ள பகுதிகளுக்குப் பரவும். அது, வாசமற்றது, வெறும் கண்களால் காண இயலாதது, கதிரியக்கத் தன்மை வாய்ந்தது ‘ என்கிறார்.

ஒருவர் ஓராண்டில் 20 மில்லி சீவெர்ட் அளவு வரையிலான கதிரியக்கத்தைத் தாங்கலாம் என்று பொதுவாகத் தெரிவிக்கப்படுகிறது. உடனடியாக 50 சீவெர்ட் கதிரியக்கத்தைப் பெறுபவர்கள் இரு நாட்களிலும், 10-20 சீவெர்ட் கதிரியக்கத்திற்கு ஆளானவர்கள் 3 மாதங்களிலும் உயிரிழப்பார்கள். 6-10 சீவெர்ட் கதிரியக்கத்திற்கு ஆளானவர்கள் உடனடி மரணத்திலிருந்து தப்பினாலும் எலும்பு மஜ்ஜை பாதிக்கப்படுவதால் இரு மாதங்களில் உயிரிழக்கும் ஆபத்து இருக்கிறது. 2-6 சீவெர்ட் வரையிலான கதிரியக்கத்திற்கு ஆளானவர்கள் இரத்த மாற்றம், நோய் எதிர்ப்பூக்கி மருந்துகள் போன்றவற்றின் உதவியால் வாழும் வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் பொதுவில் கதிரியக்கத்தில் பாதுகாப்பான அளவு என்று எதுவுமே இல்லை என்பதே உண்மை.

1945ல் ?ிரோசிமாவைக் கைப்பற்றச் சென்ற ஆஸ்திரேலிய படை வீரர்கள் இருவர் பின்னர் புற்றுநோயால் இறந்ததைச் சுட்டிக்காட்டி 2001ஆம் ஆண்டு இத்தகவலைத் தெரிவிக்கிறது ஆஸ்திரேலிய நீதிமன்றம். ஏனென்றால், அந்தப் படைவீரர்கள் 5 மில்லி சீவெர்ட்டிற்கும் குறைவான கதிர்வீச்சாலேயே தாக்கப்பட்டிருந்தனர். மிகக் குறைந்தளவு கதிரியக்கம்கூட மிகப் பெருமளவு தீங்கு விளைவிக்கக்கூடியதே என்று பல சர்வதேச அமைப்புகள் எடுத்துரைத்துள்ளன.

உடலில் வேகமாக வளரும் செல்கள் கதிர்வீச்சினால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. அவ்வகையில் எலும்பு மஜ்ஜை போன்ற பகுதிகளில் மும்மடங்கு வேகத்துடன் கதிரியக்கம் உடலைப் பாதிக்கிறது. உடலிலேயே மிகப் பாதிப்பு குறைந்த பகுதி மூளை என்று கருதப்படுகிறது. ஏனெனில், அதுதான் உடலில் மிக மெதுவாக வளர்கிறது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்க அரசு கதிரியக்கத்தின் மோசமான பாதிப்பை தடுக்க உதவும் வகையில் பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளைப் பயன்படுத்துவது குறித்து அறிவித்தது. ஒரு அணுஉலை விபத்து ஏற்பட்டால் அதன் கதிரியக்க நச்சை மக்கள்- குறிப்பாக குழந்தைகள் எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அமெரிக்கப் பேராயம் அணுஉலைகளுக்கு அருகில் வாழ்கிற, 40 வயதுக்கு உட்பட்ட அனைவரும் எப்போதும் தயாராக கையில் இந்த மாத்திரைகளை வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அரசு அறிவித்தது.

2001 டிசம்பர் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை அமெரிக்க அரசு ஒரு கோடி மாத்திரைகளை வாங்குவதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது என்கிறார் அணுவாற்றல் ஒழுங்குபடுத்தல் வாரியப் பேச்சாளர் டேவ் மெக்இன்டயர். அமெரிக்காவில் 33 மாகாணங்களில் அணுஉலைகள் உள்ளன அல்லது மக்கள் உலைகளுக்கு நெருக்கமாக வாழ்கின்றனர். இவற்றில் 19 மாகாணங்கள் மாத்திரைகளை வேண்டியுள்ளன, அணு விபத்தால் ‘புகழ் ‘ பெற்ற மூன்று மைத் தீவு உள்ளடங்கிய பென்சில்வேனியா மாகாணம் 19 இலட்சம் மாத்திரைகளுக்கும், நியூயார்க் 12 இலட்சம் மாத்திரைகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளன. மாத்திரை தேவைப்படும் மாகாணங்களில் 14 மாகாணங்கள் மட்டும் ஒப்புதல் அளிக்கவில்லை. (விபத்து ஏற்படும் சாத்தியம் இல்லை என்றால் இந்த நடவடிக்கை எதற்காக ?).

மேலும், மசாசுசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) பேராசிரியர்களான ஜாண் டியூட்ச், எர்னெஸ்ட் மோவிட்ஸ் ஆகியோர் தற்போது உலகை அச்சுறுத்தி வரும் பசுமை இல்ல விளைவுகளை (Green house gases) ஏற்படுத்தும் கரியமிலவாயு உள்ளிட்டவைகளின் வெளியீட்டைக் குறைப்பதற்கான சிறந்த ‘நிவாரணியாக ‘ அணுசக்தியை முன்வைக்கின்றனர். ஆனால், அவர்களே அதிலுள்ள தீர்க்க முடியாத சிக்கல்கள் என்று பின்வருவனவற்றைப் பட்டியலிடுகின்றனர். அவையாவன,

– ஒப்பீட்டளவில் அதிகபட்சமான நிதித்தேவை

– பாதகமான பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகள்

– பெரியளவிலான பாதுகாப்பு சவால்கள்

– அணுகழிவுகளை நீண்டகாலம் பாதுகாப்பாக வைத்திருப்பதிலுள்ள தீர்க்க இயலாத சவால்கள் ஆகியனவாகும்.

மொத்தத்தில், ஏராளமான மாற்று வாய்ப்புகள் இருக்கும் இன்றைய நிலையில் தேவையில்லாமல் பல்லாயிரம்கோடி ரூபாய்களை அணுவாற்றல் துறையில் முதலீடு செய்வது என்பது வீணானதே.

செர்னோபில் அணுஉலை விபத்தின்போது மீட்புப் பணியாற்றிவிட்டு, அவ்விபத்தின் இரண்டாவது நினைவு நாளான 1988, நவம்பர் 27ஆம் நாள் தற்கொலை செய்துகொண்ட ரசிய விஞ்ஞானி வாலெரி லேகசோவ் கடைசியாக எழுதிய சில வரிகள்…. ‘அணுவாற்றல் என்பது கட்டுப்படுத்த முடியாத பேரபாயம். அதைக் கட்டுப்படுத்த இதுவரை விஞ்ஞானிகளால் முடியவில்லை. முடியுமா என்பதும் சந்தேகமே. இதன் பேரழிவிலிருந்து மனித குலம் விடுதலை பெற ஒரே வழி அணுவாற்றலைப் பயன்படுத்தாமல் இருப்பதே! ‘.

மேலும் படிக்க:

இரசியாவை மிரட்டும் கதிர்வீச்சு ஆபத்து -ஒரு இரசிய விஞ்ஞானியின் பேட்டி -அசுரன்(http://www.thinnai.com/pl0624044.html)

….

தகவலுக்கு உதவிய சில இணையதளங்கள்:

http://www.wired.com/news

http://www.teriin.org/opet/articles/art10.htm

http://www.financialexpress.com/fe_full_story.php ?content_id=73827

http://www.healthatoz.com/healthatoz/Atoz/ency/radiation_injuries.jsp

http://news.yahoo.com/news ?tmpl=story&u=/ap/20041114/ap_on_sc/living_with_chernobyl_1

மேலும் Inge Schmitz-Feuerhake, Michael Schmidt ஆகியோர் எழுதிய Radiation Exposures by Nuclear Facilities- Evidence of the Impact on Health என்ற நூலில் இதுதொடர்பான விரிவான தகவல்கள் உள்ளதாகத் தெரிகிறது.

***

(asuran98@rediffmail.com)

Series Navigation

அசுரன்

அசுரன்