This entry is part [part not set] of 8 in the series 20000514_Issue
எம் வி வெங்கட் ராம்
அன்று என்னுடைய தோழி ஒருத்தி வந்து சேர்ந்தாள். அந்த வீட்டில் என் சிநேகிதிகளில் யாரையுமே நான் வர விடுவதில்லை. தவறி வந்து விட்டாலும், ‘அது ‘ வெளியே வந்து விடாத படி ஜாக்கிரதை எடுத்துக் கொள்ளுவேன். ஆனால் எதிர் பாராத சமயத்தில் அவள் வந்து விட்டதால், என்னால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
அவள் ஏதோ ஊர் வம்பு அளந்து கொண்டிருந்தாள் சிறிது நேரம். விஷமக்காரியான அவளுடைய பார்வை, ‘அது ‘வும் நானும் சேர்ந்து கல்யாண சமயத்தில் பிடித்துக் கொண்ட படத்தின் மீது விழுந்து விட்டது. கேலியாகக் கூறினாள் : ‘சரியான ஜோடி தான்! ஏண்டி, இவ்வளவு அழகான புருஷனை விட்டு விட்டு ஊர் சுற்றுவதற்கு உனக்கு எப்படித் தான் மனசு வருகிறது ? ‘
எனக்கு சுரீர் என்றது; பேசவில்லை. அவள் மறுபடியும் நையாண்டி செய்தாள். ‘அவருக்குத் தான் உன்னை விட்டு விட்டு எப்படி இருக்க முடிகிறது ? இவ்வளவு வாசனையுள்ள புஷ்பமாச்சே, வேறு யாராவது முகர்ந்து பார்த்து விடப் போகிறார்களே என்ற பயமே அவருக்கு ஏற்படுவதில்லையோ ? ‘
அசட்டுச் சிரிப்புடன் , ‘ அவர் ஒரு புஸ்தகப் பைத்தியம் எப்போதும் ‘ என்றேன்.
‘சரிதான்; அதுக்குள்ளே இந்தப் புஸ்தகத்தை எவனாவது தட்டிக் கொண்டு போய் விடுவான். ‘ என்று சொல்லிக் கொண்டே அவள் என் கன்னத்தைத் தட்டினாள்.
அதே சமயத்தில் பின் புறம் யாரோ கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. அவள் திரும்பிப் பார்த்துச் சொன்னாள். ‘ யாரோ உனக்கு வேண்டியவர்கள்.. ‘
நான் பார்த்தேன். ‘அது ‘!
சேலையுடன் முகத்தில் ஸ்னோவையும் பவுடரையும் பூசிக் கொண்டு, கைகளில் வளையல்களை அணிந்து கொண்டு , தலையில் முக்காடு போட்டுக் கொண்டு.
பொறுக்க முடியாமல் எழுந்து ஓடி ‘அதை ‘ இழுத்துக் கொண்டு வெளியே வந்தேன். ஆத்திரத்தில் ஒன்றும் புரியாமல் சொன்னேன். ‘பிணமே இப்போது இங்கே ஏன் வந்தாய் ? உன் நாடகத்தை இப்போது தானா காட்ட வேண்டும் ? ‘
‘நீலா.. ‘ என்று ஆரம்பித்த ‘அதனு ‘டைய வாயைமூடி ஒரு அறையில் தள்ளிக் கதவைச் சாத்தினேன்.
ஒன்றும் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்த தோழியிடம் பாசாங்குச் சிரீப்புடன், ‘அவள் ஒரு பைத்தியம் ‘ என்றேன்.
‘அப்படியா ? நான் யாரோ ஒரு பெரிய மனுஷி என்று நினைத்தேன். ரொம்ப ஜோரா டிரஸ் பண்ணிக் கொண்டிருந்தாளே! ‘
பிறகு ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம்; பின்னர் அவள் போகும் போது சொன்னாள். ‘நாளைக்கு என் ஹஸ்பண்டுடன் நான் சினிமாவுக்குப் போகப் போகிறேன். நீயும் உன் புருஷனைக் கட்டாயம் கூட்டி வர வேண்டும், என்ன ? கட்டாயம். ‘ மிஸ் ‘ பண்ணக் கூடாது… ‘
அப்பா! அவள் போய் விட்டாள். எனக்கு மிகவும் ஆயாசமாக இருந்தது. புருஷனுடன் சினிமாவுக்கு! புருஷன் ஏது எனக்கு ? புருஷன் என்று ஒருவன் இருந்தால் தானே, அவன் என்னுடைய அழகில் மயங்கி, என்னை வெளியில் வைத்துக் கொண்டு பாதுகாக்கப் போகிறான் ? எனக்குத் தான் புருஷன் இல்லையே!
எதிரிலிருந்த கண்ணாடியில், அஸ்தமிக்கத் தொடங்கும் என் அழகைக் கண்டேன். என் அழகும் இளமையும் ஏன் வீணாக வேண்டியவை தானா ? நான் ஏன் வீணாக்க வேண்டும் ? இந்தப் பொய் வாழ்க்கையை ஏன் நடத்த வேண்டும் ?
வெகு நேரம் யோசித்தேன். கடைசியில் ஒரு குரூரமானதொரு எண்ணம் பிறந்தது. ஆம்; ஒன்று ‘அது ‘ தொலைய வேண்டும். இல்லாவிட்டால் நான் தொலைய வேண்டும். உறுதியுடன் எழுந்தேன். கடைவீதிக்குச் சென்று, சாப்பிட்டவுடன் கொல்லக் கூடிய ஒரு விஷத்தை வாங்கி வந்தேன்.
கொலை! நான் கொலை செய்ய முடிவு கட்டினேன். பாலில் அந்த விஷத்தைக் கலந்து அதைத் தீர்த்து விட வேண்டியது தான். இரவு நெருங்க நெருங்க என் நடுக்கம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
இன்னொரு நினைவு முளைத்தது. இறுதிக் காலத்திலாவது ‘அது ‘ கொஞ்சம் சந்தோஷப் படட்டுமே. ‘அதனி ‘டம் சென்று பிரியமாகப் பேச்சுக் கொடுத்தேன்.
‘அது ‘ மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. நான் அங்கே வந்ததிலிருந்து ‘அதனு ‘டன் நெருங்கிப் பேசினதே கிடையாது. ‘அதன் ‘ மீது எனக்கு அருவெறுப்பு ஏற்பட்டதால் நான் ஒதுங்கியே இருந்தேன். இன்று என்னுடைய மாறுதலைக் கண்டதும், பேரானந்தம் அடைந்தது.
ஏதேதோ பேசின பிற்பாடு, ‘நீலா, நீ ருக்மணியின் பரத நாட்டியம் பார்த்திருக்கிறாயா ? நான் அது போலவே செய்வேனே! நீ பேசுவதில்லை, பார்ப்பதில்லை. இல்லாவிட்டால் முன்பே காட்டியிருப்பேன். ‘ என்றது.
‘எங்கே , இன்றைக்குத் தான் பார்க்கலாமே. ‘
உடனே அது உள்ளே ஒடிச் சென்றது. கொஞ்ச நேரத்தில் நாட்டியத்துக்கு வேண்டிய சகல அலங்காரங்களுடன் வந்து நின்றது; மூக்குத்தி புல்லாக்கு, ஜடை பில்லை, காலில் சதங்கைகள் எல்லாம் மிக நேர்த்தியாய் இருந்தன்.
பாட்டுடன் பாவம் பிடித்து நடனம் செய்யத் தொடங்கியது, ‘பாலும் கசந்ததடா, கிளியே! ‘
நான் பார்த்தேன். அந்த நிலைமையில் பெண் உடையில், நாட்டியம் செய்யும் சமயத்தில், யாரும் ‘அதை ‘ ஆண் – அலி என்று கருத மாட்டார்கள். அழகான, மிகவும் அழகான ஒரு பெண் என்றே நினைப்பார்கள். அழகு மோகம் பிடித்த எந்த ஆண்மகனும் ‘அதன் ‘ மீது மையல் கொள்ளக்கூடும். அவ்வளவு அழகாய் இருக்கிறது. எதற்கும் உதவாத ‘இது ‘வும், அழகாகத் தான் இருக்கிறது. நான் ஏன் ‘இதை ‘க் கொலை செய்ய வேண்டும் ? உலகில் எவ்வளவோ வேண்டாத அழகுகள் இருக்கின்றன. இதுவும் இருந்து விட்டுப் போகட்டுமே! ‘அத ‘னால் என்னுடைய வாழ்க்கை குலைகிறது என்றால், ‘அதை ‘ என் பாதையிலிருந்து விலக்குவதற்குப் பதிலாக , நானே ‘அதன் ‘ பாதையிலிருந்து விலகி விட்டால் என்ன ? நினைவுக் குழப்பம்.
‘அது ‘ களைத்து நின்றது. நான் வைத்திருந்த பால் ‘கிளாஸை ‘ ஆவலுடன் கேட்டது. அதனால் நான் அதைத் தூக்கி தூர எறிந்தேன். அது உடைந்து தூளாகியது.
‘அதில் என்னவோ விழுந்திருக்கிறது. தண்ணீர் சாப்பிடலாம் ‘
‘அது ‘ சாப்பிட்டு கொஞ்ச நேரத்துக்கப்பால் படுத்து விட்டது.
நிச்சயம் செய்து கொண்டு படுத்தேன். நிச்சயம் கலையாமல் எழுந்தேன். தாலியையும் கழற்றி ‘பீரோ ‘வில் வைத்தேன். ‘அத ‘னிடம் எல்லாவற்றையும் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளும் படி சொல்லி , சாவியைக் கொடுத்தேன். விழித்துக் கொண்டு நின்ற அதைக் கவனிக்க வில்லை. உறுதியுடன் என்ன நேர்ந்தாலும் சரி, அப்பாவிடம் சரண் புகுவது என்ற முடிவுடன் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே வந்தேன்.
தாம்பத்திய சுகம் பெற அந்த வீட்டிற்கு வந்தேன். ஆனால், ஒரு சுகமும் இன்றி இருதயச் சுமையுடனும், தீராத ஏக்கத்துடனும் தான் செல்லுகிறேன்.