மாற மறுக்கும் மனசு

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

சுஜாதா சோமசுந்தரம்


ரொம்ப நாள் கழித்து இன்றுதான் இளவெயில் இதமாக எரித்தது.கிட்டதட்ட ஒரு வாரமாக மழை வானத்தை கழித்துக்கொண்டு கொட்டியது.வெளியே செல்வதற்கே பிடிக்காத நசநசப்பு.காலம் முழுவதும் எரிக்கிற வெயிலை தாங்கி கொள்கிற உடம்புக்கு தொடர் மழையால் தொல்லைகள்தான் மிச்சம்.

அன்றைய தினம் காலையில் எழுந்ததிலிருந்தே மீரா என்றும் இல்லாத அளவுக்கு சந்தோசத்துடன் இருந்தாள்.ஏதோ எழுதுவதும் சரிபார்பதுமாக யோசிப்பதுமாக நிமிடங்கள் தொலைந்துக்கொண்டிருந்தது.உலகின் ஒட்டு மொத்த மகிழ்ச்சியையும் தன்னிடம் கொட்டி கொடுத்ததைப் போல அள்ளி இறைத்தாள்.

ஆளுயர கண்ணாடியின் முன் நின்று தன் அழகை ரசித்தபடி,மீரா….நீ ரொம்ப அதிர்ஸ்டகாரிதான் நினைத்ததை சாதிச்சிட்டே தன்னிடமே சொல்லியபடி கன்னத்தை கிள்ளி உதட்டில் ஒத்தினாள்.

நம் வாழ்நாளில் ஒவ்வொருவருமே நிறைய நினைக்கிறோம், செயல்படுத்துவது குறைவு.காரணம் சந்தர்ப்பங்களோடு சறுக்கி விழுவதுதான்.ஆனால் மீரா அப்படியில்லை.அவளின் இலட்சியமே இங்கிலாந்து சென்று மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பதுதான்.அந்த இலட்சிய கனவு நிறைவேறி கையில் பயணச்சீட்டுடன் துள்ளி குதித்துக்கொண்டிருந்தாள்.

மீராவுக்கு நமது கலாச்சாரத்தை பற்றிய கவலையில்லை.மேலைநாட்டு நாகரிகத்தை மதித்து பின்பற்றுபவள்.நமது பண்பாட்டை விட்டு விலக நனைக்கும் போதெல்லாம் நம் பெண்களுக்குரிய நான்கு பண்புகளும் இறுக பிடித்துக்கொண்டு இம்சை செய்வதை அவளால் மறுக்க முடியாது.

மீரா….விட்டுப்போன சாமான்கள் ஏதாவது இருந்தால் எமுதி வை.வேலைக்கு போயிட்டு வர்றயில வாங்கிட்டு வர்றேன்.

சரிம்மா என்றவள் தயங்கியபடி,அம்மா….நான் அப்பாகிட்ட பயணம் சொல்லிட்டு வரட்டுமா ?கேட்பதற்குள் வார்த்தைகள் தடுமாறியது.

தாரளமா போயிட்டு வா.நீ விருப்பபட்றவங்ககிட்ட பயணம் சொல்லுறதுக்கு நான் தடையேதும் சொல்லமாட்டேன்.ஆனா ஒண்ணு,போற விசயத்தை மட்டும் பேசிட்டு நேரத்தோடு வீடு வந்து சேர்ந்துடு என்ற சாந்தாவின் வார்த்தையில் அர்த்தம் விளங்காமல் ஆச்சரியத்துடன் நின்றாள் மீரா.

ரொம்ப நன் றிம்மா.எங்கே போகக்கூடாதுன்னு சொல்லிடுவீங்களோன்னு பயந்துண்டு இருந்தேன்.பழசையெல்லாம் பட்டுன்னு மறந்துட்டு சட்டுன்னு போன்னதை எதிர்பார்க்கல.

மீரா…நீ நினைக்கிற அளவுக்கு நான் அரக்கியோ,கல் நெஞ்சக்காரியோ கிடையாது.என்னோட சுயநலம் கலக்காத வாழ்க்கையில உறவுகளை மட்டும்தான் நேசித்தேன்.நம்பி போன உறவு உபத்திரமா ஆனபிறகு உல்லாசமா வாழ முடியுமா ?அவமானங்களையும்,அட்டுழியங்களையும் சகித்துக்கொண்டு தன்மானத்தை இழந்து பன்னிரண்டு ஆண்டு காலம் வாழ்ந்தது உங்களுக்காகதான்.அன்றைக்கு உங்களோட எதிர்காலம் கருகிட கூடாதுங்கிறதுக்காக விவகாரத்து வாங்கினதும் நான்தான்.இப்ப உன்னோட மனசு நோககூடாதுங்கிறதுக்காக அனுமதிக்கிறதும் நான்தான்.நாம மரமா இருந்தா இருந்த இடத்திலேயே இருந்திடலாம்.ஆனா மனுசங்களா பிறந்திட்டோமே என்றவள் மகனை திரும்பி பார்த்தாள்.

ஆதித்தா….பொழுதனைக்கும் கம்பியூட்டர்ல கேம்ஸ் விளையாடாம புத்தகத்தை கொஞ்சம் திருப்பி பாரு.கடிகாரத்தில் மணியை சரிசெய்தபடி வேலைக்கு ஓடினாள்.

மீராவுக்கு ஒன்பது வயதாயிருக்கையில் பெற்றோர்கள் சட்டபூர்வமாக பிரிந்தனர்.மீராவையும்,ஆதித்தனையும் வளர்க்கும் சாந்தாவே ஏற்றுக்கொண்டாள்.மீராவுக்கு தந்தையின் மீது கொஞ்சம் ஈர்ப்பு உண்டு.பெற்றோரின் பிரிவு ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும்,போக போக சுகமானதாக தோன்றியது.

அக்கா..அப்பாவை பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு ரிகர்சல் பார்த்திடலாமா ?மூக்கு கண்ணாடியை முகத்தில் அழுந்த பொருத்தியபடி கேட்டான் ஆதித்தன்.

என்ன நக்கலா.தலைசீவிக்கொண்டிருந்த சீப்பை தம்பியின் மேல் எறிந்தாள்.நீயும் என்கூட வாயேண்டா பேசிக்கிட்டே போகலாம்.மனம் சங்கோஜப்பட்டதை தவிர்க்க இயலாமல் அழைத்தாள்.

முகம் மறந்து போனவரை முகமன் விசாரிக்க கூப்பிடுறீயா ?நான் அப்பாங்கிற உறவால அதிகமா பாதிக்கபட்டவன்.அடிபட்டவனுக்குதான் வலியோட வேதனையும்,வடுவோட ஆழமும் புரியும்.பாசங்கிற பேர்ல வேசம் போட்றவங்கள பார்க்கிறதே பாவம்.இதுல குசலம் வேறயா…ஒருதலைபட்சமான பாசம் உறவுக்கு ஒத்துவராது.

ஆதித்தா…பழைய சம்பவங்களையெல்லாம் பாதுகாக்கிறது ஆரோக்கியமானது இல்லை.

அக்கா….நான் அவரோட வாகனத்துல இல்லை,வாழ்க்கையில பயணம் செய்தவன்ங்கிறதை மறக்க முடியாது.அவரை காலம் கண்டிப்பா மாத்திருக்காது.பாம்புக்கு பாசத்தோட பால் வார்த்தாலும் கொத்தனுங்கிற இயல்புல இருந்து பாறிடாது.அவரும் அப்படித்தான்.

அப்படின்னா…அவரு நடவடிக்கையில மாற்றம் இருக்கிறதா சொல்லுறது பொயயிங்கிறீயா ?

உண்மையா..பொய்யாங்கிற ஆராய்ச்சி என்னை பொருத்தவரை தேவையில்லாத விசயம்.மற்றவர்களுடைய வாழ்க்கையை கூறுபோட்டு விமர்சிக்கிற அளவுக்கு நான் ஈன புத்திக்காரன் கிடையாது.ஒருத்தரை வேண்டாம்னு மனசுல இருந்து தூக்கி எறிஞ்ச பிறகு உறவை ஒட்ட வைக்க நனைக்கிறது கடவுள நம்பாதவங்கிட்ட நம்பு நம்புன்னு சொல்ற மாதிரி இருக்கு.

மீராவுக்கு ஆதித்தனின் கருத்தில் முரண்பாடு கிடையாது என்பதால் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.

அக்கா….நின்னுக்கிட்டு இருந்தியன்னா நேரம்தான் ஓடும்.சீக்கிரம் போய் பிரியாவிடை வாங்கிட்டு வர வழியை பாரு.

நொடிப்பொழுதில் உடைகளை மாற்றிக்கொண்டு மழை வந்துவிடுமோ என்ற பயத்தில் வானத்தில் கவிழ்ந்திருந்த மேக கூட்டத்தை கவனித்தபடி கதவை திறந்தவள் தடுமாறி விழப்போய் சமாளித்துக்கொண்டு சுவற்றை அழுந்த பிடித்தாள்.

அக்கா..உன்னோட அரசாட்சி வானத்துல இல்லை,பூமியிலதான் பார்த்து நட.தலைகால் புரியாம நடந்தியன்னா கட்டோடதான் விமானம் ஏற வேண்டிருக்கும் என்ற ஆதித்தனை தன் அகன்ற விழிகளால் முறைத்துவிட்டு கம்பீரமாக நடந்தாள்.

பேருந்தில் ஏறி சுற்றும் முற்றும் இருக்கைக்காக திரும்பனாள்.ஒரு சன்னல் பக்கத்து போய் இருக்கையில் அமர்ந்தாள்.எண்ணங்கள் ஊற்று நீரைப்போல பெருக்கெடுத்து மூளை முழுவதும் பாய்ந்து அவளை திக்குமுக்காட செய்தது.பத்து வருடங்களுக்கு பிறகு தந்தையை நேரிடையாக சந்தித்து பேச போகிறாள்.எப்படி ஆரம்பிப்பது ?என்ன பேசுவது ?போன்ற சின்ன சின்ன கேள்விகள் தலைதூக்கி சித்ரவதை செய்தது.வெகு நாட்களாக பயன்பாட்டில் இல்லாத அப்பா என்ற வார்த்தையை பலமுறை ஒத்திகை பார்த்த போது உதடுகள் ஒட்ட மறுத்து விலகியது.

நாம் புதியவர்களையோ,பிரிந்தவர்களையோ,எதிரியையோ சந்தித்து பேசுவதில் சங்கடங்கள் இருப்பதில்லை.ஆனால் பத்து வருடங்களுக்கு முன் விடைக்கொடுக்கப்பட்ட உறவிடம் உறவை சொல்லி அழைத்து உரையாடுவது என்பது தர்மசங்கடமான நிலை.

பேருந்தை விட்டு இறங்கிய மீரா பழக்கப்பட்ட பாதையில் நடந்த போது இளம்பிராயத்து இன்ப நினைவுகள் நாலா பக்கமும் இழுத்தது.தன்னை கட்டுபடுத்திக்கொண்டு மின்தூக்கியின் வரவுக்காக காத்திருந்தாள்.

அன்றொரு நாள் இதே இடத்தில் ஆதித்தன்,அம்மா…அப்பா வேண்டாம்மா என்று கதறி அழுத காட்சி கண்ணுக்குள் நிற்பதை கிரகிக்க முடியாமல் படிகளில் வேகமாக ஏறினாள்.என்னதான் காலத்திற்கு தகுந்த மாதிரி சுற்றுசூழல் மாறியிருந்தாலும் ஒவ்வொரு இடமும் பழைய நினைவுகளில் விழுந்து எழுந்தது.

அந்த வீட்டை நெருங்க நெருங்க சித்தமே சிதறிவிடும் போலிருந்தது.அழைப்பு மணியை அழுத்திவிட்டு கேட்டை தடவி பார்த்தாள்.எத்தனை நாள் இந்த கம்பிகளுக்கு இடையே கண்களை ஓடவிட்டு அம்மாவின் வருகைக்காக காத்திருந்திருக்கிறாள்.கதவு படக்கென்று திறக்கும் சத்தத்தில் கையை வெடுக்கென்று இழுத்துகொண்டாள்.

நீங்க….உற்று பார்த்த சேகருக்கு உடல் கனத்து,வயிறு தொப்பை விழுந்து,தலைமுடி ஆங்காங்கே நரைத்து முதுமையின் வரவை எடுத்துக்காட்டியது.

நான்தான்ப்பா மீரா சொல்வதற்குள் வார்த்தைகள் தட்டு தடுமாறியது.

நெற்றியை உயர்த்தி ஆச்சரியத்துடன் மீராவா….ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு நல்லா வளர்ந்துட்டே.அப்பாவே மறந்துட்டாயோன்னு நனைச்சேன். ஞாபகம் வைச்சிட்டு பார்க்க வந்ததுல ரொம்ப சந்தோசம்மா பேசிக்கொண்டே உட்கார இருக்கையை காண்பித்தார்.

தானும்,ஆதித்தனும் ஓடி ஆடி விளையாடிய வீடு பொழிவையும் பிரகாசத்தையும் தொலைத்துவிட்டு சோகத்தை அப்பியிருந்தது.வெறுமையை மட்டும் உணர முடிந்த அவளால் வெகுநேரம் அமரமுடியாது என்பது தெளிவாக விளங்கியது.

அப்பா….கூவிக்கொண்டு வந்த எட்டுவயது பெண்பிள்ளை தழைய தழைய பாவாடை கட்டி,தலைநிறைய பூ வைத்து,கைகள் குழுங்க வளையல் அணிந்து ஓடிவந்து தந்தையின் மடியில் அமர்ந்துக்கொண்டு அடுக்கடுக்காய் கேள்வி கேட்க தொடங்கியது.மீராவுக்கு அந்த மடியில் நாட்டமில்லை என்றாலும் அதிகப்படியாய் தெரிந்தது. தானும் அப்பாவோடு இருந்தியிருந்தால் தழைய தழைய பாவாடை தாவணியில் நனைக்கவே பயங்கரமாக இருந்தது.

சேகர் தன் இரண்டாவது மனைவியை சித்தி என்றும்,மகளை தங்கை என்றும் அறிமுகப்படுத்திய விதம் அருவருப்பைத் தந்தது.எதையும் வெளிக்காட்டிக் கொள்ளளாமல் மரியாதை நிமித்தம் காரணமாக சின்னதாக சிரித்து வைத்தாள்.

சற்று நேரத்திற்குள் காபி,நொறுக்குத்தீனி வகையாறாக்கள் மேசையில் நிரப்பப்பட்டு சாப்பிட சொன்னார்கள்.

மீரா எதிலும் கை வைக்காமல்,அப்பா…நான் நாளைக்கு மேற்படிப்புக்காக இங்கிலாந்து போறேன்.எனக்கு என்னமோ உங்ககிட்ட சொல்லனும்னு தோணுச்சி அதான் வந்தேன்.

அப்படியா…! மகிழ்ச்சியின் உச்சத்தில் குரல் உயர்ந்து வந்தது.அதே நேரத்தில் தன்னிடம் சவால் விட்ட சாந்தா ஜெயிச்சிட்டாளேங்கிற வெறியும் அவனையும் அறியாமல் எழுந்து நின்றது.

மீரா….செலவு அதிகமாகுமே ? கேட்டு வைக்க வேண்டும் என்பதற்காகவே கேட்டான்.

அதெல்லாம் அம்மா பார்த்துகுவாங்க என்றாள்.

படிச்சி முடிச்சிட்டு திரும்ப இங்கே வருவியா ?இல்லை அங்கேயே செட்டல் ஆயிடுவியா ?தந்தையின் கேள்வியில் புதைந்து கிடந்த அர்த்தத்தை புரிந்து கொள்ள இயலாமல் சற்று நேரம் யோசித்தாள்.

அதை எப்படி இப்பவே சொல்ல முடியும்.நாம் போற இடம்,பழகுற மக்கள்,பழக்கவழக்கங்கள்னு நிறைய பார்க்க வேண்டி வரும்.நான் வாழ்ற வாழ்க்கையை முன்னாடியே முடிவு பண்ணிட்டு முறைப்படுத்த வாழ்றதைவிட,என்னை சுற்றி உள்ளவர்கள் மனம் நோகாமல் வாழனும்னு ஆசைப்பட்றேன்.அப்படி ஒரு வாழ்க்கை அங்கே கிடைத்தாலும் நிறைவுடன் ஏற்றுக்கொள்வேன் என்ற மீரா எட்டி நின்று தன்னையே கண் கொட்டாமல் விழுங்கி கொண்டிருந்த சித்தியை பரிதாபத்துடன் பார்த்தாள்.

மீரா….உன் அம்மா முன்னையவிட இப்ப நல்லா இருக்கா இல்ல ?

ஆமாம் என்ற மீரா,நீங்களும்தான் புதிய உறவுகளோட சந்தோசமா இருக்கீங்க.வாழ்க்கையில இழப்புகளை எண்ணி கவலைப்பட்ட காலம் எல்லாம் மலையேறிப்போச்சி.நான் சொல்லுறது சரிதானப்பா.

இருந்தாலும் உங்களுக்குதான் அப்பாக்கிட்டயிருந்து வாழ கொடுப்பினை இல்லை என்றபடி குட்டி மகளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

மீராவுக்கு எங்கிருந்துதான் அப்படியரு கோபம் வந்ததோ, அப்பா…குடும்பங்கிற நந்தவனந்துல உங்களுக்குதான் எங்ககூட வாழ கொடுப்பினையில்லை.

எனக்கா….என்னம்மா வேடிக்கையா பேசுறே.பொண்ணுன்னா அடக்கமும்,மனிதர்களை மதிக்கிற பண்பும் கூடவே ஒட்டி பிறந்திருக்கனும். பெரியவங்களோட போட்டி போட்டு பேசுறது நல்ல குடும்பத்து பெண்களுக்கு அழகு அல்ல.உங்க அம்மாவோட இந்த பண்புதான் எங்கூட வாழ விடாம செய்தது என்ற சேகரின் அலட்சியமான சிற்றுரைக்கு சடாரென்று திரும்பினாள் மீரா.

அப்பா….பெண்களுக்கு அடக்கம் வேணுமே தவிர அடங்கி போகனும்னு தேவையில்லை.பெண்களுக்கு எது வேணும்,வேண்டாம்னு அவள்தான் முடிவு பண்ணனும்மே தவிர நீங்கயில்லை.

உங்கம்மா நல்லா ட்ரெயினிங் கொடுத்து பேச அனுப்பியிருக்கா.பயணத்தோட போட்ட பந்தயத்துல செயிச்சிததை பறைசாற்றிட்டு வரச்சொல்லிருக்காளா ?என்னோட அம்பையே திருப்பி என் மேல பாய வைச்சிருக்கானா எவ்வளவு பெரிய சாமார்த்தியம்.வாழ வழி தெரியாதவ வளர்த்த பிள்ளை எப்படி இருக்கும் ?

அப்பா…வார்த்தையில நிதானம் இருக்கட்டும்.விட்டுப்போன உறவை விடாது இழுத்து வைத்து விமர்சனம் பண்ணுறது நல்லதில்லை.சில விசயங்களை என் நினைவுல இருந்து எடுத்துட்டுதான் உங்ககிட்ட பேசிட்டு இருக்கேன்.நான் இங்கு வந்தது பயணம் சொல்லதானே தவிர பழைய கதையை பேசயில்லை.எனக்கு உங்களுடைய கடந்த காலத்தை தோண்டி எடுத்து துடைக்கிறதுல விரிப்பமோ,உடன்பாடோ கிடையாது.என்னை பொருத்தவரை என்னோட நிகழ்காலம் மட்டுந்தான் முக்கியம்.

அப்படின்னா…நான் இரண்டாவது கல்யாணம் கட்டிக்கிட்டதுல உனக்கு என்மேல வெறுப்பு.

நான் அப்படி எதுவுமே சொல்லலையே.உங்க கற்பனைக்கெல்லாம்,என்னால கதை கரு தேட முடியாது.

உன் அம்மாதான் போட்டி போட்டு வாழ்றவளாச்சே.என்னை மாதிரி இரண்டாவது கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே ?

ஸ்டாபிட் அப்பா.போட்டி போட்டு வாழறதுக்கு பேர் வாழ்க்கையில்லை.உங்களை மாதிரி அவுங்களும் நினைச்சிருந்தா எங்க நிலைமை கேள்விகுறியாதான் ஆகிருக்கும்.உங்களுக்கு ஒரு மனைவி கிடைச்சமாதிரி அவுங்களுக்கு ஒரு கணவன் கிடைக்கிறது பெரிய விசயமே இல்லை.ஆனா,எங்களுக்கு பெத்தவளால மட்டுந்தான் நல்ல தாயாகவும் தந்தையாகவும் நண்பனாகவும் இருக்க முடியும்.நீங்க திருந்திருப்பீங்கிற நம்பிக்கையிலதான் ஆதித்தன் சொன்னதையும் பொருட்படுத்தாமல் வந்தேன்.நீங்க ஆணவம் பிடிச்ச வட்டத்திலிருந்து வெளிவர மறுக்குறீங்கங்கிறது தெளிவா தெரியுது நான் வரேன் என்றபடி எழுந்தவள் திரும்பி தந்தையை பார்த்தாள்.

அப்பா…எங்கம்மா உங்களை பிரியாம் இருந்திருந்தா,எனக்கும் ஆதித்தனுக்கும் இப்ப வாழ்ற வாழ்க்கை கண்டிப்பா கிடைச்சிருக்காது.அம்மா பயந்து பயந்து இதே மூலையில நின்னுருந்தா,நாங்க மென்டல் டார்ச்சர் தாங்க முடியாம படிக்க வேண்டிய வயசுல மனநல காப்பகத்துலதான் இருந்தருப்போம்.உங்களுக்கு மனம் மாற வாய்ப்பும்,நல்ல உறவுமுறைகளும் கிடைச்சதை மீண்டும் புழுதியில தூக்கி வீசிடாதீங்க.பெரிய மனுசனுக்கு அழகு பெருந்தன்மையா நடந்துக்குறதுதான்.நான் பாசத்துக்காக பயணம் சொல்ல வரலை,பழகிய தோசத்துக்காகதான் வந்தேன்.

மீரா கதவை திறந்துக்கொண்டு செல்வதை பார்த்த சேகருக்கு எண்ணங்கள் மனம் மாற இடங்கொடுக்க வில்லை.தான் அர்த்தமில்லாமல் ஏதேதோ பேசியது தவறு என்று உள்ளுணர்வு ஓங்கியடித்தாலும் எதையும் நியாயப்படுத்த விரும்பாமல் மடியிலிருந்த மகளை இறக்கிவிட்டு சோபாவில் சாய்ந்துக்கொண்டான் சேகர்.

***

சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர்.

s_sujathaa@yahoo.com.sg

Series Navigation

சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்