மாப்பிள்ளைமார் கலகமும், இந்துத்துவத்தின் இடியாப்பச் சிக்கலும்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

போனபெர்ட்


கட்டுரையின் தலைப்பு: நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும் மாப்பிள்ளைமார் கலகம் பற்றி.

மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இடது சாரி வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமும், வலது சாரி மத வெறிக் கலவரக் கண்ணோட்டமும் நிலவுகிறது. வலது சாரிக் கூற்றைப் பொருத்த வரை சிற்சில அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்ததாகக் கூறப்படும்(கூறப்படும்) சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டோ, அல்லது சில நேரங்களில் ஏதாவது பேர் தெரியாத பத்திரிகைகளில் வந்த தகவல்களின் அடிப்படையிலோதான் உள்ளது.

அதனால்தான் கடைசிவரை காந்தி அப்போராட்டத்தை மத வெறி என்ற அடிப்படையில் கண்டிக்கவில்லை. தனது கட்டுரைத் தொகுப்புகளிலும் அதையே அவர் கூறுகிறார். 1940-களில் கூட அதை ‘சுயராஜ்ஜியத்திற்கான போராட்டம்’ என்றுதான் கூறுகிறார். எத்தனையோ மக்கள் போராட்டங்களை, அவை வன்முறைப் பாதையை மேற்கொண்டதால் கடுமையாகக் கண்டித்துள்ளார். காந்தி அந்தக் காலகட்டத்தில் என்ன கூறுகிறார்:
“But many letters have since been received by me, some from well-known friends telling one that I was responsible even for the alleged Moplah atrocities,”

அதாவது ‘alleged Moplah atrocities’.

சிலர் சொல்லுவது போல் முஸ்லீம், இந்து பகையின் மூலவேர் மாப்பிள்ளைமார் கலகம் என்பதும் நம்பும்படியாக இல்லை. ஏனெனில் அதற்கு முன்பே Divide and Rule தந்திரத்தின் பிரகாரம் இந்து முஸ்லீம் ஒற்றுமையை பிளவுபடுத்த British அரசு வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டது.

இவை எல்லாவற்றுக்கும் முன்பே மலபார் பகுதியில் நடந்த பல போர்களில் மாப்ளா முஸ்லீம்கள் தங்களது வீரம் செறிந்த பங்களிப்பைச் செய்துள்ளனர். இப்படிப் பல காலமாக மாப்ளா முஸ்லீம்கள் அந்த பகுதியில் இருந்து வரும் வேளையில், மலர்மன்னன் 1921 – மாப்ளா கலகத்தின் போது தான் முஸ்லீம் மத மாற்றம் ஏற்பட்டு நாயர், நம்பூதிரிகளின் எண்ணிக்கை குறைந்ததாகக் கதை விடுகிறார்.

மாப்ளா விவசாய, உழைக்கும் மக்களின் கலை இலக்கிய பங்களிப்பும் கேரள வரலாற்றில் மிக முக்கியத்துவமிக்கதாக இருக்கிறது. மாப்ளா நாட்டுப்புறப் பாரம்பரியக் கலைகள், அவற்றின் சாரமாக உள்ள வீரத்திற்கும், காதல் ரசத்திற்கும் பெயர் பெற்றவை. இப்படி செழுமையான வரலாற்றுப் பின்னணியில் நிகழ்ந்த ஒரு கலகத்தை, அதுவும் அந்த கலகம் நான்கு, ஐந்து தலைமுறைகளாக அந்தப் பகுதியில் தொடர் கொந்தளிப்பில் இருந்து, கிலாபத் இயக்கத்தின் கடைசிக் கட்டத்தில் வீரியம் அடைந்த ஒன்றைத் தனது இந்துத்துவப் பசிக்கு இரையாக்கப் பார்க்கிறார்.

ஒரு விசயத்தை அது நடந்த சூழல், அந்த சூழல், கடந்து வந்த பல்வேறு வரலாற்று கட்டங்கள், அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரிவினரின் சமூக, பொருளாதாரப் பின்னணிகள், அந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அவர்களின் நலன்கள் என்று அனைத்து அம்சங்களையும் கணக்கில் எடுத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் இந்துத்துவ வெறியர்களுக்குத்தான் மத வெறி போதை ஏற்ற ஏதாவது ஒரு துணுக்கு துக்கடா பெட்டிச் செய்தி போதுமே. காமாலைக் கண் பார்வையோடு சாயமடிக்கத் தொடங்கிவிடுவார்கள். அதைக் கேட்டு நம்புவதற்கு ஒரு கூட்டம் காத்திருக்கிறது என்றால் அது நம் புத்தகங்களில் வரலாறு என்ற பெயரில் ஒன்றை போதிக்கிறார்களே அதனால் ஏற்பட்ட விளைவு.

முதலில் மலபார் கலகத்தின் உண்மையான பின்ணனி என்ன என்று பார்த்து விட்டு, பின்பு அதைப் பற்றி மலர்மன்னன் தனக்கு ஆதாரமாகக் கூட்டி வந்த கோஷ்டிகளின் லட்சணம் என்ன என்று பார்த்து விடலாம்.

மலபார் கலகம் – தெளிவுரை:

இந்த எழுச்சி குறிப்பாக 1836ல் தொடங்கி தனது முழு வீச்சில் 1921ல் வெடிக்கிறது. ஆனால் 1836க்கு முன்பு இருந்தே அந்தப் பகுதி, தொடர் பிரிட்டிஷ் எதிர்ப்பு / கொந்தளிப்புப் பகுதியாக இருந்து வந்துள்ளது. அதனால்தான் 1800-ஜுலை மாதத்தில் மலபார் பகுதியை, பம்பாய் மாகாணத்திலிருந்து, சென்னை மாகாணத்திற்கு மாற்றினார்கள். தெற்குப் பகுதியில் இருந்த மாப்ளா விவசாயிகள் உன்னிமுத்தா, அட்டான் குருக்கள், மற்றும் செம்பான் போக்கர் இவர்களின் தலைமையின் கீழ் கிளர்ச்சி செய்தார்கள். இந்தத் தெற்கு பகுதி மலபார் மக்களுடன் வடக்குப் பகுதி கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதமும், வேறு பல உதவிகளும் செய்து ஒத்துழைக்கிறார்கள். விவசாயிகளின் பொருளாதாரக் கஷ்டங்களுக்குக் காரணமான பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் வரிவிதிப்பு முறைகளால் பாதிக்கப்பட்ட நிலப்பிரபுக்களும் ஆதரவாக உள்ளனர்.

ஆரம்ப காலங்களில் பிரதானமாக நாயர்களும் விவசாயிகளும் இணைந்து பிரிட்டிஷாரை விரட்டி விடுவது என்ற நோக்கில் நடத்தப்பட்டவை தான் இந்தக் கிளர்ச்சிகள். அவற்றின் நோக்கம் பொருளாதார மாற்றமோ, புரட்சியோ அல்ல. மாறாக பிரிட்டிஷாரின் வரிவிதிப்பு முறைக்கு முன்பு இருந்த பழைய நிலப்பிரபுத்துவத்தை மீண்டும் நிலை நாட்டும் நோக்கம்தான் காரணமாக இருந்தது. அதனாலேயே ஆரம்பத்தில் விசுவாசம், சாதிக்கட்டுப்பாடுகள் போன்றவை இந்தக் கிளர்ச்சிகளுக்கான கலாச்சார ஊற்றுக்கண்ணாக இருந்தன. பிரிட்டிஷ் அதிகாரத்துக்கு எதிரான இந்த கலகம் மெதுவாக வர்க்கப் போராட்ட வடிவத்தை மேற்கொள்ளத் துவங்கியது. 1800 லிருந்து 1836க்கு உள்ளேயே மாப்ளா விவசாயிகள் தங்களது கலகத்தை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மட்டுமின்றி தங்களை ஆண்டாண்டு காலமாக அடிமைப் படுத்தி வைத்திருந்த நாயர், நம்பூதிரி நிலப்பிரபுக்கள், பெருவிவசாயிகள் பக்கமும் திருப்பினர். அதாவது தங்களது அரசியல் அதிகாரத்துவ தலைமைக்கு எதிராகவும் விவசாயிகள் போராடத் தொடங்கினர். நிலபிரபுக்கள் மீதான மாப்ளா விவசாயிகளின் தாக்குதலை ‘Social Banditry’ என்று E.J. Mobsbawm என்பவர் கூறுகிறார்.

(இந்த மேற்சொன்ன விவரங்கள்: Report of the Malabar Committee on the Cotiote Rebellion, (Tamilnadu Archives))

வயநாட்டில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அந்த கலகம் நசுக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் வெல்லஸ்லி பிரபு மலாபாருக்கு வந்து கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான போர்த் தந்திரங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.

ஏற்கெனவே மேலே சொன்னதுபோல் அந்த இயக்கம் ஆரம்ப்பத்தில் ஒரு பிற்போக்குத்தனமான இயக்கமாக இருந்து குறுகிய காலத்தில் வர்க்க போராட்ட வடிவை பெற்றது. ஆனால் அந்த இயக்கத்தின் ஆரம்பத்தில் ஆளுமை செலுத்திய பிற்போக்குத்தனங்களிலிருந்து அது முழுமையாக விடுபடவில்லை. அதனால் சில இடங்களில் மத அடிப்படையில் தாக்குதல்கள் நடந்தன. ஆனால் அத்தகைய சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்(முஸ்லிம்கள்தான்) தண்டனைக்கு உள்ளானார்கள்.

இவை சில விதிவிலக்கான சம்பவங்கள்தான் என்பதையும், அங்கு ஒரு கம்யூனிஸ்ட் கட்சி போன்ற வர்க்க உணர்வு பெற்றதோர் உயர்ந்த அமைப்பின் கீழ் விவசாயிகள் திரளவில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் ஆய்வு செய்ய நம்ம மலர்மன்னன் கோஷ்டிகளுக்கு என்றைக்குமே விருப்பம் கிடையாது. தீர்ப்பை எழுதிவிட்டு பஞ்சாயத்து செய்வதுதானே இவர்களின் மரபு(மனு தர்மம்).

இக்கலகம் பற்றிய அன்றைய பிரிட்டிஷாரின் மாவட்ட கெசட்டியர் என்ன கூறுகிறது:
“A gigantic popular upheaval the like of which has not been seen in Kerala before or since”.

மலபார் உழவர் எழுச்சியை சித்தரித்த ஐ வி சசியின் ‘1921’ எனும் மலையாளப் படம்,சரியாகவே அவ்வரலாற்றினை வர்க்கப் போராக சித்தரித்துள்ளது.

ஒரு மலபார் கலகத்தைப் பற்றிய ஒரு பார்வை:
(மேற்சொன்ன விசயங்களை உறுதிப்படுத்தும் வரலாற்று ஆதாரங்கள்)

* மலபார் மாவட்டங்களில் ஜன்மி (janmi) என்றழைக்கப்பட்ட ஜமீன்தார்களிடம்தான் விளை நிலங்கள் பெரும்பாலான அளவில் இருந்தன. 1881ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, அங்கிருந்த 511 ஜன்மிகளில் (ஜமீன்தார்கள்) 12 பேர் மட்டுமே மாப்ளா முஸ்லிம்கள். ஏனையோர் உயர்சாதி இந்துக்களான நம்பூதிரிப் பார்ப்பனரும், நாயர்களுமே. மலபாரில் 19ஆம் நூற்றாண்டில் சாதி ஒடுக்கு முறை உச்சகட்டத்தில் இருந்ததால் தாழ்நிலையில் இருந்த இந்துக்களான திய்யர்கள், செருமர்கள் மற்றும் முக்குவர் ஆகியோர் பெருமளவில் முஸ்லிம்களாக மாறி விட்டனர்.

ஜன்மிகள், இருவேறு வகை குத்தகை முறைகளில் விவசாயிகளுக்கு விளைச்சல் நிலங்களைக் குத்தகைக்கு விட்டிருந்தனர். அவை 1) காணம் (kanam) எனப்பட்ட 12 ஆண்டுகள் வரை ஒருவரே தொடர்ந்து பயிர் செய்தல் 2) வெறும்பட்டம் எனப்பட்ட குறுகிய கால வரம்புக்குள் சாகுபடிக்கு விட்டுப் பின் சம்சாரியை வெளியேற்றுதல்.

* தென்னை,பலா, பாக்கு ஆகிய பணப்பயிர் மகசூல், நெல் மகசூல் ஆகியவற்றில் மூன்றில் ஒரு பாகம் மட்டுமே பயிரிடும் விவசாயிக்கு சொந்தமாகும். மீதம் உள்ள இரண்டு பாகங்களை ஜன்மிக்களும், பிரிட்டிஷ்-கிழக்கிந்தியக் கம்பெனியும் எடுத்துக் கொள்ளும்.

* மலபார் மாவட்ட நிர்வாகத்தின் ஆவணங்கள் குறிப்பிடும் 19ஆம் நூற்றாண்டு உழவர் நிலை மிகவும் பரிதாபமானது.
1813ஆம் ஆண்டு, மலபார் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவில், அரசால் விதிக்கப்பட்ட அதீத நிலவரியை மாப்ளா விவசாயிகளால் கட்ட வழியில்லாததால், அந்தத் தாலுகாவில் மட்டும் 203 குத்தகை விவசாயிகளின் சொத்துக்கள் அரசால் ஏலம் விடப்பட்டுள்ளன.

* 1813லிருந்து 1821 வரை உள்ள காலகட்டத்தில் வரி கட்ட முடியாமல் விற்கப்பட்ட நெல் சாகுபடியாகும் நன்செய் வயல்களின் எண்ணிக்கை மட்டும் மலபார் மாவட்டங்களில் 1225 ஆகும்.

* கஷ்டப்பட்டு உழைத்த விவசாயிகளின் உழைப்பை பிரிட்டிஷாரும், உள்நாட்டு நம்பூதிரி ஜன்மிகளும் வகைதொகை இன்றிச் சுரண்டினர். திப்பு சுல்தானிடமிருந்து, மைசூர் போர்களின்போது மலபார் பகுதி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்ட பிறகு விளைச்சல் நிலங்களோ, விளைச்சலோ அதிகரித்திடாதபோதிலும் கூட திப்புவின் அரசைக் காட்டிலும் கூடுதலாக வரி வசூலிக்கப்பட்டது. 1821ஆம் ஆண்டில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருவாய்த்துறை ரூ94,749 ஐயும், அதே நிலங்களில் இருந்து 1900 ஆம் ஆண்டில் 77சதவீதம் கூடுதலாக பிரிட்டிஷ் இந்தியாவின் கீழ் இருந்த சென்னை மாகாண வருவாய்த்துறை ரூ 1,353,890 ஐயும் மலபார் பகுதியில் வசூலித்தது என்பதில் இருந்து எந்த அளவுக்கு அவ்விவசாயிகள் ஒட்ட உறிஞ்சப்பட்டனர் என்பது புலனாகும். கொடுமையான இவ்வரிவிதிப்பு விவசாயிகளின் நிலைமையை மேலும் மோசமாக்கி வந்தது.

* கம்பெனி ஆட்சியில் உழுபவர்கள் விளைச்சலில் 33% (மூன்றில் ஒன்று) அனுபவித்தனர். ஆனால் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்-கம்பெனி ஆட்சி மாறி பிரிட்டிஷ் இந்திய அரசின் ஆட்சி வந்த பின் இன்னும் மோசமானது. இப்போது உழவருக்கு கிடைத்த அறுவடையின் பங்கோ 12 சதவீதம் மட்டுமே. இந்தச் சரிவும் உழவர் கலகத்துக்கு வலுவான காரணியாய் அமைந்தது.

* மலபாரில் 1862க்கும் 1880க்கும் இடைப்பட்ட காலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நிலத்தில் இருந்து துரத்தப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை 91,720 ஆகும். ஒவ்வொரு வருசமும் 20 குத்தகை விவசாயிகளில் ஒருவர் ஜமீன்தார்களால் விளைநிலங்களில் இருந்து வெளியேற்றப்பட்டார். சாகுபடியில் ஈடுபட்ட இவ்வுழவர்களுக்கு, முறையான ரசீதோ அல்லது பத்திரமோ தரப்படாததால், நீதிமன்றத்தில் படிப்பறிவற்ற இவர்களின் குரல் எடுபடவில்லை.

* லோகன் எனும் பிரிட்டிஷ் அதிகாரி 1881ல் மலபார் விவசாயிகளிடம் நிகழ்த்திய நேர்காணலின்படி 7994 குத்தகையாளர்களில் 4401 பேர் கடனாளிகளாய் ஆகி விட்டனர். அவர்கள் 12 முதல் 36 சதவீதம் வரை வட்டியுடன் கட்ட வேண்டிய கடன் தொகை மட்டும் ரூ 17 லட்சம் என்பதும் தெரிய வந்தது.

* 14,அக்டோபர் 1880 ல் அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள், நாயர்கள், திய்யர்கள் கூட்டாக சேர்ந்து மனு ஒன்றை அனுப்பினர். அம்மனுவில் மலபார் ஜமீன்களின் சுரண்டலும், அதனால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஏழைக் குடியானவர்களின் பரிதாப நிலைமையும் விவரிக்கப்பட்டிருந்தன. அச்சுரண்டலைக் கட்டுப்படுத்திடவும் ஜமீன்களின் அராஜகத்தைத் தடுத்திடவும் மாட்சிமை தாங்கிய மன்னரின் தயவையும் நாடி இருந்தனர் அவர்கள். உடனே சில விசாரணைக்கமிசன்களும் அதன் பின்னர் 1887ல் மலபார் குத்தகைதாரர் மேம்பாட்டுச் சட்டமும் இயற்றப்பட்டது. (இச்சட்டம் 1920களில் நிறைவேற்றப்பட்ட மலபார் குடிவாரச் சட்டத்தில் இருந்து வேறுபட்டது. அச்சட்டம், மலபாரில் இருந்த நம்பூதிரிகளின் வைப்பாட்டிகளுக்கும், வைப்பாட்டிகளின் பிள்ளைகளுக்கும் குடிவார உரிமை தரக் கொண்டுவர உதவியது.)

இக்குத்தகைதாரர் மேம்பாட்டுச் சட்டத்தை, நம்பூதிரி ஜமீன்கள், கழிவறைக் காகிதமாகவே மதித்தனர். இச்சட்டம் வரும் முன்னர், குத்தகை நிலத்தில் உரிமை பறிக்கப்பட்ட உழவர்களின் எண்ணிக்கை 2039 ஆக இருந்தது. (1862 ஆம் வருடக் கணக்கு). சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகோ, துரத்தப்பட்ட உழவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாகி 4620 ஐத் தொட்டது. (இது 1892 ஆம் ஆண்டுக் கணக்கு). இதிலிருந்தே இச்சட்டத்தை நம்பூதிரிகள் எந்தளவு நடைமுறையில் மதித்தனர் என்பது தெளிவாகும். நட்ட ஈடு ஏதும் தராமல் 1890ல் 77 சதவீதம் பேரையும்,1891ல் 76 சதவீதம் பேரையும், 1892ல் 75% பேரையும் குத்தகை உரிமையில் இருந்து விரட்டினர், ஜமீன்கள். சில இடங்களில் விதி விலக்காகத் தரப்பட்ட நட்ட ஈடோ சராசரியாக ரூபாய் 169 ஆக மட்டுமே இருந்தது. (இது 1890 -92 ஆம் வருசக் கணக்கு. இதே காலகட்டத்தின் பண மதிப்பைத் தெரிந்து கொள்ள பின்வரும் தகவல் உதவலாம். 800 சதுர அடி கொண்ட ஒரு குடிசை வீடு அக்காலகட்டத்தில்-1885ல்- ரூபாய் 100க்கு அடமானம் வைக்கப்பட்டது, திருநெல்வேலி மாவட்டம் ஒன்றில்). இத்தொகை, கந்து வட்டிக்காரனுக்குத் தரக்கூடப் போதவில்லை என்பது வெளிப்படை.

* இவ்வாறு பலவழிகளிலும் சுரண்டலுக்கு ஆளான மாப்ளா விவசாயி, தம்மை நேரடியாகச் சுரண்டி வந்த ஜன்மிகளை அழித்து ஒழித்திட முயன்றனர். அம்மோதல்களில் அடையப்போகும் சாவை ‘வீரச் சாவாகவும்’, அவ்வாறு அநியாயவான்களை அழித்து விட்டு மாண்டு போனால் சொர்க்கம் உறுதி என்றும் மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நம்பினர். அவ்வாறு முடிவு செய்து மோதலுக்குக் கிளம்பும் முன் தன்னைச் சார்ந்துள்ள மனைவியை ‘மணவிலக்கம்’ செய்துவிட்டு, யாரைக் கொல்லப்போகிறோம் என்பதையும் பகிரங்கமாக அறிவித்து விட்டுக் கிளம்பிய செயலை பிரிட்டிஷ் ஆவணங்கள் ‘நேர்ச்சை’ சடங்குடன் ஒப்பிடுகின்றன. நிலப்பிரபுவை அவனுடைய வீட்டுக்குள்ளோ அல்லது கொல்வதற்குத் தோதானதொரு இடத்திலோ நேருக்கு நேர் பொருதி அழித்தனர். காரியத்தை முடித்த பின்னர் போலீசுக்குப் பயந்து ஓடிய சம்பவங்கள் ரொம்ப சொற்பமே. எல்லா இடங்களிலும் அநேகமாய் போலீசின் துப்பாக்கிக் குண்டில்தான் வீரச் சாவை அடைந்தனர் அந்த ஏழை விவசாயிகள்.

* மலபார் உழவர் எழுச்சியை அவர்கள், 1837 ஏப்ரல் 15ஆம் நாள் எரநாடு தாலுகாவிலுள்ள செங்கர அம்சம் ஜமீன்தாராய் இருந்த ஒரு நம்பூதிரிப் பார்ப்பனரைக் கொன்றதில் ஆரம்பித்து வைத்தனர். பின்னர் கிட்டத்தட்ட நாலு தலைமுறைகளாய் அது தொடர்ந்தது.

1885 ல் செம்பரச்சேரியிலும், 1894, 1898 ஆகிய இரு ஆண்டுகளில் பந்திக்காடிலும், 1896ல் வாண்டூரிலும் பெரிய அளவில் கலகங்கள் நடந்தன.

இக்கலகங்களில் போலீசால் கொல்லப்பட்ட விவசாயிகள், ‘வீரத் தியாகிகள்’ ஆகி, வெகுஜனங்களிடையே ஆதர்ச நாயகர்களாய்ப் புகழ் பெற்றனர். அவர்களைப் புகழும் பல நாட்டார் கதைப் பாடல்கள் இன்னும் காற்றில் கலந்து நிறைந்துள்ளன.

* நிலப்பிரபுக்கள் தாக்கப்படுவது 1837 முதல் அதிகரித்த வண்ணம் இருக்கவே, அப்பிரபுக்களின் நலன் காத்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி, தாக்கிய விவசாயிகளின் கிராமத்திற்கு ஒட்டு மொத்தமாய் தண்ட வரி விதித்தது. தனிப்பட்ட உபயோகத்திற்காக உழவர்கள் வைத்திருந்த வெட்டுக்கத்தியைத் தடை செய்தது. (அத்தடை இன்னமும் தொடர்கிறது – அதாவது 30 செண்டி மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட கத்திக்கு லைசென்சு வாங்க வேண்டும்-கம்பெனி ஆட்சி மாறி,பிரிட்டிஷ் இந்திய அரசு வந்து, பின்னர் டில்லியை மையம் கொண்ட ஏகாதிபத்திய அடிவருடி ஆட்சி வந்தும், சென்னை மாகாணம், தமிழ்நாடாக மாறியும், ஆளும் வர்க்க நலன் காக்கும் ‘வெட்டுக்கத்தி’த் தடை இன்னும் நீடிக்கத்தான் செய்கிறது) அந்தத் தடையையும் இன்னபிற ஒழுங்கு நடவடிக்கையையும் செய்ய 1854ல் சென்னை மாகாண அரசு (அதாவது கிழக்கிந்தியக் கம்பெனி) ‘மாப்ளா போர்க்கத்திச் சட்டம்’ ஒன்றை இயற்றியது. இச்சட்டம் கடுமையாக அமுலுக்கு வந்ததும் மாப்ளாக்களின் கோபம், கம்பெனியார் மீது திரும்பியது. அப்போது மலபார் பகுதியில் ஜில்லா மாஜிஸ்திரேட்டாகப் பணிபுரிந்த H.V.கனோல்லி 1855 ஆம் ஆண்டில் மாப்ளாக்களால் கொல்லப்பட்டார்.

* சாகுபடி நிலத்திலிருந்து துரத்தப்பட்ட 19 மாப்ளாக்கள், குளத்தூர் எனுமிடத்தில் ஆகஸ்ட் 1851ல், சுரண்டலில் திளைத்துக் கொழுத்த இந்து நிலப்பிரபுக்கள் நால்வரைக் கொன்றனர். இந்துக்கள் பெருமளவில் செறிவாய் வசிக்கும் பகுதியில் நுழைந்த இவர்கள் அங்கிருந்த ‘கொட்டுப்பரம்பத்து கோமு மேனனை’ முதலிலும், குளத்தூர் வாரியரை இறுதியிலும் அழித்தொழித்தனர். அவர்கள் அழிந்த பிறகு முதற்காரியமாய் அவர்களிடம் இருந்த அனைத்து ஆவணங்களையும், வரவு செலவுப் புத்தகங்களையும் தீயிட்டுப் பொசுக்கினர். அந்நால்வரின் குடும்பத்தினர் எவருக்கும் சிறு அளவில் கூட காயம் ஏற்படுத்தவில்லை. குளத்தூர் வாரியர் அழிக்கப்படும் முன் அவரின் குழந்தைகளையும், மற்ற உறவினரையும் அவ்வீட்டை விட்டு வெளியேறச் செய்து விட்டே வந்த காரியத்தை முடித்தனர்.

1921லே அது மிகவும் பெரிய அளவில் பிரிட்டிஷ் அரசையே ஆட்டிப் போடும் அளவிற்குப் பெரிதானது. மலபாருள் பிரிட்டிஷ் ராணுவம் நுழைந்து அதன் ராட்சச பலத்தினால், ரத்தச் சகதியுள் அந்த ஏழை விவசாயிகளைச் சுட்டுப் பொசுக்கும் வரை அந்த நாலு தலைமுறைக் கோபம் தீயாய்ப் படர்ந்து வந்தது. 1837லில் ஆரம்பித்த எழுச்சித் தீ, தான்தோன்றித்தனமாய் அங்கொன்றும், இங்கொன்றுமாய் தனி நபர்களைக் கொல்வதும், உடன்விளைவாய் அரசு அடக்குமுறைக்குப் பலியாவதும் தொடர்ந்தது. ஆனால் 20, ஆகஸ்ட் 1921ல் திரூரங்காடியை மையமாகக் கொண்டெழுந்த அப்புயலில், உழவர்களின் கோபத்தை முறைப்படுத்தி அவர்களுக்கு தலைமை தாங்கிட மத குருமார்கள் முன்வந்தனர். அப்போது அது ‘கிலாபத்’ இயக்கத்தின் விளைவாக ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும் ஏந்தி இருந்தது. அன்றைய சூழலில் காந்தியின் ‘தேசிய’ இயக்கம், கோழிக்கோட்டின் புறநகர் எல்லையைக் கூடத் தாண்டிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது. காங்கிரசுக் கட்சி அப்போது மலபாரின் காடுகளிலோ, குக்கிராமங்களிலோ அறியப்பட்டதில்லை. எனவே காங்கிரசுக் கமிட்டியால் அத்தனை தெளிவாய் நடந்ததை உணர வாய்ப்பே இல்லை.

* வரியம்குன்னத்து குன்ஹாமது ஹாஜி, காலத்திங்ஙள் முகம்மது, சித்திகோயா தங்ஙள் மற்றும் இம்பிச்சிக்கோயா தங்ஙள் ஆகியோர், நிலப்பிரபுக்களிடம் இருந்து விடுவிக்கப்பட்ட சுதந்திர சுயராஜ்ஜியத்திற்கு தலைமை ஏற்று, கட்டுப்பாடான சுய நிர்வாகத்தை ஏற்படுத்தினர். பிரிட்டிசாரிடம் இருந்து நாட்டை மீட்டு, மக்கள் அரசை நிர்மாணம் செய்ய அழைப்பு வ்ச்டுத்தனர்.

*தாங்களே ஏற்படுத்திக் கொண்ட காவல் துறைக்குப் புதிதாக ஆள் எடுத்தனர். குற்றவியல் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. வருடாந்திர வரி நிர்ணயம் செய்யப்பட்டது. சாகுபடியாளர்களே, ஜமீன் நிலங்களை அனுபவித்து, அறுவடை செய்ய உரிமை வழங்கப்பட்டது. மலபார் மக்களுக்கு தனியாக பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்து,முஸ்லிம் பாரபட்சம் இல்லாத ஒரு அரசு ஸ்தாபிக்கப்பட்டது.

*1921 எழுச்சியில் சில இடங்களில் நடந்த அத்து மீறல்களும், கொள்ளைச் சம்பவமும் விசாரிக்கப்பட்டுத் தண்டனை வழங்கப்பட்டது. அப்பாவி மக்களிடம் முறைகேடாக நடந்தவர்கள், பொது வீதிகளில் வைத்து உதைக்கப்பட்டனர். கொள்ளைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. குன்ஹம்மது ஹாஜி, எரநாடு தாலுகாவிற்கு நேரில் சென்று, இந்துக்களுக்கு எதிரான அத்துமீறல்களை விசாரித்தார். அப்போது சாத்தன்கோடு எனும் ஊரைச் சேர்ந்த C.கோபால பணிக்கர் என்பவர் எழுதிய ஆவணத்தில் இருந்து:

“வரியம்குன்னத்து குன்ஹம்மது ஹாஜி, மாப்ளாக்களிடம், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களைத் தன் முன் கொண்டு வரும்படி உத்தரவிட்டார். குஞ்சாலி என்பவனைத் தவிர மற்றவர்கள், தாம் கொள்ளையிட்ட பொருட்களை ஹாஜி முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைத்தனர். குஞ்சாலி மட்டும், தாம் கொள்ளையடிக்கவில்லை எனப் பிடிவாதம் செய்தான். அவனுக்கு 125 கசையடிகள் கொடுக்கப்பட்டதும், உள்ளதை ஒத்துக் கொண்டு பொருட்களைத் திருப்பித் தந்தான். அவை மாரத்து நம்பூதிரியிடமும்,காவுக்கள் நம்பூதிரியிடமும் காட்டப்பட்டு, அவை அவர்களுக்கு உரியவைதானா என்பதும் விசாரிக்கப்பட்டுத் திருப்பித் தரப்பட்டன. குன்ஹம்மது ஹாஜி, இந்துக்களுக்குப் பாதகமாய் ஏதும் செய்திடவில்லை”

* சென்னை உயர்நீதி மன்றத்தில் 1921 கலகத்தினை அடுத்து நடந்த 100 குற்றவியல் வழக்குகளில், 14 வழக்குகள் இந்து விவசாயிகளுக்கு எதிராக நடந்தன. அவர்கள் செய்த குற்றமாக, இந்து ஜமீன்தார்களைத் தாக்குவதில் இறங்கியதும், அந்த ஜமீன்தார்களின் வீடுகளைக் கைப்பற்றியதும் அரசால் வழக்கில் சொல்லப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இக்கலகத்தின்போது ஜமீன் / பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாகவும், மாப்ளாக்களுக்குத் துரோகம் செய்தும் இருந்த நபர்கள் கலகக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அல்லது கடும் தண்டனைக்கு உள்ளாயினர். அவ்வாறு தண்டிக்கப்பட்ட / கொல்லப்பட்ட மக்களில் முஸ்லிம்கள் பின்வருமாறு.

1) கான் பஹதூர் ஷேக் குட்டி (ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர்)
2) இத்தூரு ஹாஜி (புகழ் பெற்ற அலோபதி மருத்துவர்)
3) அட்டன்
4) இஸ்மாயில்
5) கம்முண்ணி ஹாஜி
6) மம்மூ
7) குன்ஹம்மூ ஷேக்
8) கயிசேரி மொயிதீன்
9) காக்கப்ப வீரன் ஹாஜி
10) காரேத்து குன்ஹிகோயா

இவர்களைத் தவிர துரோகம் / காட்டிக்கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்காக செம்பரச்சேரி தங்ஙள், இந்துக்கள் 38 பேருக்கு மரண தண்டனை விதித்தார்.

(மேற்கண்ட ஆதாரங்களைக் கொண்டுள்ள நூல் “Peasant Protests and Revolts in Malabar” Edited by K.N.Panikkar – people’s publishing House)

இவ்வெழுச்சியை மத துவேசமாகப் பார்க்கும் மாலைக்கண் பார்வைக்கு மேற்சொன்ன புள்ளிவிவரமே அருமருந்தாகட்டும்.

* ஒரு வரலாற்றை வெறும் துணுக்குகளாக மட்டும் பார்த்துவிட முடியாது (கருத்துக்கு “பி.ஏ.கிருஷ்ணனுக்கு” நன்றி). 40 வருசத்துக்கு முன்னாடி, சினிமா என்றால் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்ள ஒரு முதியவர் சினிமா தியேட்டருக்குப் போனாராம். அப்போது தியேட்டரில் ஜெமினி நிறுவனம் தயாரித்த படம் ஓடிக்கொண்டிருந்ததாம். படம் ஆரம்பிக்கும்போது இரு சிறுவர்களின் சிலை, குழல் ஊதும் காட்சி வந்திருக்கிறது. பெரியவர் உடனே நல்ல தூக்கம் போட்டு விட்டாராம். படம் முடியும்போது எழுப்பி விட்டார்களாம், பக்கத்தில் இருந்தவர்கள். படம் முடியும்போதும் அதே குழல் ஊதும் காட்சி வந்திருக்கிறது. வீட்டில் மனைவியிடம் “ரெண்டு சின்னப்பயலுவ கோவணம் கட்டிக்கிட்டு குழல் ஊதறதப் போயி படம் எடுக்கானுவ.இதப் போயியும் நம்மாளுக பாத்துட்டு வருது. காலக் கொடுமை” எனச் சொன்னாராம். ம.ம.வும் மலபார் எழுச்சியை இப்படித்தான் பார்த்து இருக்கிறார்

+++++++++++++++++++

சாட்சிகளின் தராதரம்:

அன்னி பெசன்ட் அம்மையார் Theosophical society-ல் தன்னை இணைத்துக் கொண்ட காலம் முதற்கொண்டு பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஒத்து ஊதுகின்ற வேலையை, திலகருடன் சேர்ந்து மிகச் சிறப்பாக செய்கிறார். அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது ‘இந்துத்துவ மறுமலர்ச்சி’ என்ற குண்டுச் சட்டிக்குள் ஓடிய குதிரைதான். இந்த கருத்தாக்கத்தை முதல் உலகப்போரை ஒட்டிய அவரது பல்வேறு கட்டுரைகளில் காணலாம். பிரிட்டிஷ் வெள்ளை-இன பண்பாட்டு மாயையிலிருந்து இந்தியா துயிலெழ வேண்டிய நேரம் இதுதான் என்று அழைக்கிறார்(அது நல்ல விசயம்தான் ஆனால் அதற்கு மாற்றாக அவர்கள் வைக்கும் கலாச்சாரம் இன்னொரு வெள்ளையாக (பார்ப்பன வெள்ளை) இருந்ததுதான் பிரச்சனை).

அன்னி பெசன்ட் அம்மையார் தனது home rule இயக்கத்துக்காகவும், சமூக சீர்த்திருத்த கருத்துக்களுக்காகவும் பிரபலமானவர். அந்த இரண்டு பிரபலமான விசயங்களுக்கு பின்புலமாக இருந்த இயங்கியல் என்ன என்று பார்ப்போம்:

1904-ல் பண்டித ராமாபாய் அம்மையார் அன்னி பெசன்ட் பற்றி என்ன கூறுகிறார்:
“Sometimes it looks as if the world is going backwards, when one hears an English woman like Mrs. Besant declaring that Hindu widows should never marry again.”

இந்த அன்னி பெசன்ட்தான் ஐரோப்பாவில் பெண்ணுரிமைகளுக்காக முன்னோடியாக நின்று போரடினார். அன்னி பெசன்டின் இந்த முரண்பட்ட நிலையை அவரைப் பற்றிய பின்வரும் சில கருத்துக்கள் விளக்கும்:

Nethercot wrote, she knew “how to wear sandals in India and shoes in the rest of the world.”
In Sri Lanka, the Buddhist ideologue Anagarika Dharmapala also noticed this difference and said that while Besant was preaching “gentleness and obedience” to Indians, she supported the militant suffragettes in England”.

இந்தியாவுக்கு அன்னிபெசன்ட் homerule இயக்கம் கண்ட லட்சணம் இதுதான். அதாவது ‘preaching “gentleness and obedience” to Indians’. அதே நேரத்தில் இங்கிலாந்துக்கு அவர் கூறுவது தீவிர போரட்ட நடவடிக்கைகள்.

மேலும் அவர்களிடையே homerule இயக்கத்தை பெரும் மக்கள் இயக்கமாக நடத்துவதா அல்லது பிரிட்டிஷ் அரசிடம் சலுகைகள் பெற்று ஓட்டு சீட்டு அரசியல் நடத்துவதா என்று குழப்பம் வேறு இருந்தது.

அன்னி பெசன்ட் தனது homerule இயக்கத்தில் பெண்களின் விடுதலைக்கு ஒரு குரல் கொடுக்கக் கூட தயாராயில்லை. இதே நேரத்தில் இங்கிலாந்து சென்று அம்மையார் என்ன கூறுகிறார்: “the only live movement in the world today is the Women’s Movement”. ஆக அந்த அம்மையாரின் கண்களுக்கு homerule இயக்கம்(movement) கணக்கிலேயே வரவில்லை. அதனால்தான் முகமூடி என்கிறோம்.

home rule இயக்கம் என்பது பொருளாதார பிரச்சனை என்பதலிருந்து பிரதானமாக ‘cultural rejuvenation’- கலாச்சார மறுமலர்ச்சி என்ற அன்னி பெசன்டின் agenda வுக்கு சென்றதுதான் அது மிகப் பெரிய மக்கள் இயக்கமாக மலரவில்லை.

அன்னி பெசன்டே அந்த இயக்கம் மதச் சாயம் பூசத் தொடங்கிவிட்டதை கூறுகிறார்:
“Home Rule has become so intertwined with Religion, by the prayers offered up in the great Southern Temples, — sacred places of pilgrimage – and spreading from them to village temples, and also by its being preached up and down the country by Sadhus and Sanyasins.”

இந்தியாவைப் பொறுத்தவரை அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு இப்படி இந்துத்துவ ஓட்டுக்குள் ஒடுங்கிய நத்தையாகிப் போனதில் யாருக்கு லாபம் இருந்ததோ இல்லையோ பிரிட்டிஷ் அரசுக்கு நல்ல லாபம். ஏற்கெனவே ஒரு நல்ல முகமூடி தேடி அலைந்தவர்களுக்கு காங்கிரசு முகமூடி, பிடித்து தரும் ஏஜன்ட் ஆக மிகச் சிறப்பாக வேலை செய்த வந்த நிலையில். அப்படி கிடைத்த ஒரு சிறப்பான முகமூடிதான் அன்னி பெசன்ட்(அதற்கு அப்புறம் ever shining முகமூடியாக பாவம் காந்தி சிக்கிக்கொண்டார்).

அவரது ஏகாதிபத்திய சேவையை பின்வரும் விசயங்கள் நன்கு அம்பலப்படுத்துகின்றன்:

வாஞ்சி நாதன், கலெக்டர் ஆஷைச் சுட்டுக் கொன்ற ‘ஆஷ் கொலைச் சதி’ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர்களில் 26 பேர்கள் திருவாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்களாய் இருந்ததாலும், கொலைச் சதியில் திருவாங்கூரின் செங்கோட்டை ஊர் இடம்பெற்றதாலும், பிரிட்டிஷ் அரசர் தம் மீது கோபமுற்றிடக் கூடாதே எனும் அக்மார்க் ராஜபயத்தினால் திருவாங்கூர் அரசர் இவ்வழக்கில் பிரிட்டிஷாருக்கு உதவிட 1911லே ரூபாய் பத்தாயிரம் பணம் தந்து ஒரிஜினல் பிரிட்டிஷ் விசுவாசியான வக்கீல் ஒருவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பினார். அதே வக்கீல்தான், ‘அச்சமில்லை, அச்சமில்லை’ எனப்பாடிப் பின் கடலூர் சிறையில் 3 வார மன உழைச்சலைப் பொறுக்க மாட்டாமல், ‘மாட்சிமை தாங்கிய மன்னருக்கு’ மன்னிப்புக் கோரி வெளியில் வந்திடப் பாரதிக்கும் உதவினார். அப்பேர்ப்பட்ட ராஜ விசுவாசி யார் தெரியுமா?சர் சி.பி.ராமசாமி அய்யர்தான்.

அன்னாரின் பல சேவைகளைப்(!!) பாராட்டி பிரிட்டிஷார் கொடுத்த ‘சர்’ பட்டத்துடனே, சிபி ராமசாமி அய்யர், அன்னிபெசண்ட் நடத்திய All India Home Rule League ன் செயலாளராகவும், பெசண்ட் அம்மையாருக்காக பல வழக்குகளிலும் ஆஜராகியவர் என்பதில் இருந்தும், இந்தியாவெங்கிலும் மக்களைப் பெருந்துயரில் ஆழ்த்திய ஜாலியன்வாலாபாக் படுகொலையைக் கூட நியாயப்படுத்திட பெசண்டால் முடிந்தது என்பதில் இருந்தும் இந்த அம்மையாரின் தேசீயப் பற்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பும் எம்மைப் புல்லரிக்க வைக்கிறது.

ஜாலியன்வாலாபாக் படுகொலையை பற்றி அம்மையார் சொன்னது என்ன:
”ஜாலியன்வாலாபாக்கில் நிரபராதிகளை டயர் சுட்டது சரிதான்; இவர்கள் கல்லு போட்டார்கள்; அதற்கு டயர் குண்டு போட்டார்; இதிலொன்றும் தப்பில்லை”.

இன்னும் அவரது பார்ப்பன துதிபாடும் நடவடிக்கைகளுக்காக பெரியாரால் கடுமையாக விமரிசிக்கப்பட்டவர்தான் இந்த அம்மையார்.

பெசண்ட்டின் பல காட்டிக்கொடுத்தல்களை சுப்பிரமணியம் சிவாவும் வ.உ.சிதம்பரம் பிள்ளையும் தனியாய் ஒரு பொதுக்கூட்டம் போட்டு மக்களிடையே அம்பலப்படுத்தி உள்ளனர் என்பதையும், பெசண்டின் நாடகங்களால் போலித் தேசியவாதிகள் உருவாவதை வ.உ.சி., தனது தலைவரான திலகரிடமே முறையிட்டு, ‘இந்த அம்மாளை நம்பக்கூடாது’ எனக் கண்டித்ததையும் திரு வி.க. குறிப்பிட்டுள்ளார்.

அவரது மக்கள் விரோத பார்ப்பன பண்பாட்டு அடிப்படையை, அவரது உழைக்கும் வர்க்கம், ஏழைகள் பற்றிய இழிவான கண்ணோட்டத்தை அவரது ‘Indian Review’ – February 1909 பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை தெளிவுபடுத்துகிறது. இக்கட்டுரையின் பகுதிகள் “காந்தியும், காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கு செய்தது என்ன? ” என்ற அம்பேத்கரின் புத்தகத்தில் வெளிவந்துள்ளன.

அன்னி பெசன்டுக்கு நிலையான ஒரு சித்தம் கிடையாது. இவரது வாழ்க்கையைப் பார்த்தாலே அது தெரியவரும். ஒரு 14 வயது சிறுவனைப் பார்த்து அவர்தான் கடவுளின் பிரதிபிம்பம் என்றவர்தான் இந்த அம்மையார். காந்தி ஒரு சக்தியாக வளர்ந்து வரும் நிலை(காந்திக்கும் இவருக்கும் இடையிலான சண்டை ஒரு கிளைக்கதை), இவரது homerule இயக்கம் மறைந்து வரும் நிலை, நிலையற்ற, தெளிவற்ற முன்னுக்கு பின் முரணான இவரது சிந்தனை, இவரது இந்துத்துவ அடையாளம் இவையெல்லாவற்றையும் சேர்த்துதான் இவரது வார்த்தைகளை எடை போட வேண்டியுள்ளது.

ஆக இதுதான் அன்னி பெசன்ட். அவரது எந்த ஒரு நடவடிக்கையும் அந்த வட்டத்தை தாண்டி வந்ததேயில்லை. இந்த பின்னணியில்தான் அவரது மாப்ளா கலகத்தைப் பற்றிய கூற்றை நாம் ஆராய வேண்டியுள்ளது.

காங்கிரசு பிரமுகர் மாதவன் நாயர் எப்படிப் பட்டவர். அவர் homerule இயக்கத்தின் தீவிர விசுவாசி. ஆக அவரையும் அன்னி பெசன்டையும் தனித் தனியாக உளவியல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுய அவசியம் இல்லை.

அவர் மற்றும் மாதவன் நாயரினுடைய அறிக்கைகளில் உள்ள மத வெறி தாக்குதல் என்று கருதக்கூடிய சம்பவங்கள் ஒரு சில ஆதாரமில்லா கூற்றுகளின் அடிப்படையில் தான் உள்ளன. அப்படிப் பட்ட குற்றச்சாட்டுகளை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். ஆனால் அவை உண்மையா என்று ஆராயப்படும் போது குற்றச்சாட்டுகளை வைத்தவர்களின் யோக்கியதையும் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

இடியாப்பத்தின் இன்னொரு முனை:

வலதுசாரிகள், கூர்மையடைந்த வர்க்கப்போரையும், ஏகாதிபத்திய எதிர்ப்புப்போரையும் சாதி, மதச் சாயம் பூசி அதனைத் திரிப்பது வழக்கமான ஒன்றுதான். செங்கொடியின் கீழ் திரண்ட கீழ் வெண்மணித் தோழர்களை, இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு எனும் நிலப்பிரபு கொளுத்திய 1968 நிகழ்வைக் கூட ‘ஏதோ சாதிக் கலவரம்’ போன்று திரிக்க முயல்பவர்கள்தான் இவர்கள். ம.ம. கூட இச்சம்பவத்தினை ‘ராமமூர்த்தி மீதான சந்தேகமாக’த் திரிக்க முயன்றார். அதாவது அன்றைய முதல்வர் அண்ணா வெண்மணிப் படுகொலைக்கு விசாரணைக் கமிசன் வைக்க முன்வந்தபோது பி.ஆர். (மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் – பி.ராமமூர்த்தி) அதைத் தடுத்தமைக்கு உள்நோக்கம் இருந்ததாகவும், அதாவது சிபிஎம் கட்சியின் தில்லுமுல்லுகள் அம்பலமாகிடும் என்பதால் அதை எதிர்த்ததாயும் அளந்திருக்கிறார். தோழர் பி.ஆர். இன் ‘ஆரியமாயையா? திராவிட மாயையா?’ நூல் தெளிவாகவே ‘விசாரணைக்கமிசனை எதிர்த்ததன் நோக்கத்தை’க் கூறிவிட்டது. விசாரணைக் கமிசன்களின் வழக்கமான முடிவுகளும், அதனைக் காரணம் காட்டி நீதியைக் காலதாமதமாக்குவதும் ஆளும் வர்க்கத்தின் வழக்கம் என்பதால்தான் அதனை சிபிஎம் எதிர்த்ததாக பி.ஆர். சொல்லி இருந்தும், கீழ்வெண்மணி சோகத்தில் உண்மைகளை மறைக்க பி.ஆர். முனைந்தார் என ம.ம. அவதூறு செய்திருந்தார்.

இந்தக் கோடூரக் கொலைகளுக்குக் காரணமான நிலப்பிரபுவை பின்னர் வெட்டி கொன்றவர்கள் கம்யூனிஸ்டுகள்தானேயொழிய, ‘பெரும்பான்மை’, ‘பெரும்பான்மை’ என்று தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் தன்னுடன் சேர்த்து ஆள் கூட்டும் இந்துத்துவ அமைப்புகள் இந்த பெரும்பான்மைக்காக இதுவரை தங்களது மயிரைக் கூட தியாகம் செய்தது இல்லை என்பது வரலாறு.

மலபார் மாப்பிள்ளை விவசாயி கலகத்தை, முஸ்லிம் கலகம் என்றால், பகத்சிங்கின் சட்டசபைத் தாக்குதலை ‘சீக்கிய மத எழுச்சி’ என்றும் ம.ம. சொல்லக் கூடும்!

பிரிட்டிஷ் காரர்கள், இந்து முஸ்லிம் கலவரத்தை எப்போதுமே வரவேற்றவர்கள்தானே! அவர்களின் பிரித்தாளும் கொள்கைக்கு அது அல்வா மாதிரி இல்லையா? வங்கப்பிரிவினையினைக் கூட இந்து-முஸ்லிம் பிளவிற்காகத்தானே அவர்கள் செய்தார்கள்!

இவ்வாறான குணம் கொண்ட பிரிட்டிஷாருக்கு, மாப்ளா முஸ்லிம்கள், நம்பூதிரி இந்துக்களைத் தாக்கும்போது ஏனய்யா கோபம் வர வேண்டும்? ஏன் பிரிட்டிஷ் ராணுவமும், மலபார் போலீசும், ஆயிரக்கணக்கில் முஸ்லிம்களை வேட்டையாடிக் கொல்ல வேண்டும்? ஏன் சரக்கு ரயிலில் மூட்டை முடிச்சுக்கள் மாதிரி முஸ்லிம்களை அடைத்து வைத்து, போத்தனூர் ரயில் நிலையத்தில் வங்கொடுமையாய் சாகடிக்க வேண்டும்?

வேறு எந்த இந்து-முஸ்லிம் கலவரத்திலும் பிரிட்டிஷார் இவ்வாறு கடுமையாக நடந்துள்ளனரா?

பிரிட்டிசாரின் கடும் சினத்திற்கான காரணமே, முஸ்லிம் விவசாயிகளின் கலகம் மதக்காரணத்தினால் அல்லாமல், அது அரசின் வருவாய்த் துறையையும், அரசு பகிர்ந்தளித்திருந்த ஜமீன் நிலங்களையும் பாதித்து, அரசைத் தூக்கி எறியும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராக அது இருந்ததே ஆகும்.

மக்கள் விரோதமாக செயல்படுவது என்றால் மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையெல்லாம் களைந்து பாசிச சக்திகள் ஒன்றுபடும் என்பதற்கு இந்த வரலாற்றுச் சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது

**********************************
bonapertn@yahoo.com

Series Navigation

போனபெர்ட்

போனபெர்ட்