நாகரத்தினம் கிருஷ்ணா
ஸ்ட்ராஸ்பூர் காவற் துறையின் தலைமை அலுவலகம். சொன்னதுபோல பத்துமணிக்கெல்லாம் வந்தாயிற்று. காரின் வேகத்தைக்குறைத்து இரண்டாவது கியருக்கு ஹரிணி வந்திருந்தாள், கறுநீல திராட்சை பழ நிறத்தில் தொடருந்துபோல நீண்டிருந்த அடுக்குமாடி கட்டிடங்களுக்கு எதிரே கார் மெல்ல ஊர்ந்தது. கார்கள் நிறுத்துமிடம் கிட்டத்தட்ட காலியாக இருந்தது, நிறுத்தலாமென்று மனம் கட்டளையிட, காரை நிறுத்தி, எஞ்சினின் உறுமலை அடக்கி, சாவியைப் பிடுங்கினாள். டேஷ்போர்டுக்கு மேலே கிடந்த கைப்பையை எடுத்தவள், காரின் கதவை மூடிவிட்டு இறங்கிக்கொண்டாள். தலைக்கு மேலே சூரியனைத் தொலைத்திருந்த வானம் சாம்பல் நிறத்தில் இவள் மனதைப்போலவே, உறைந்துகிடந்தது. பிறந்ததிலிருந்து பார்க்கிற ஸ்ட்ராஸ்பூர் நகரம், குளிர்காலத்தில் சூரியனை மறந்து பனிமூட்டத்திற்கும் பனிக்கும் பழகிக்கொள்ளவேண்டும், பனியோடு கலந்த குளிர் உடலில் மூடமறந்த இடங்களையெல்லாம் இந்தியக் கொசுவைபோல தேடித் தேடிக் கடிக்கும், தலையை இறக்கியபோது பயந்ததுபோல குளிர்காற்று சுளீரென்று முகத்தில் விழுந்தது, உடலை சிலுப்பிக்கொண்டாள். அணிந்திருந்த கம்பளி ஆடையின் பொத்தான்களை சரிபார்த்துக்கொண்டு நடந்தாள்.
ஷர்மிளா, ட்ராம் எடுத்துப் போய்க்கொள்கிறேன் என்றாள். நேற்று வெகு நேரம், சொல்லப்போனால் பின்னிரவுவரை பத்மா, ஷர்மிளா, ஹரிணி மூவரும் உரையாடினார்கள். ஹரிணி, கடைசிவரை தலையாட்டியதோடு சரி. சிறையிலிருந்து விடுதலையானபிறகு தேவசகாயம் தன்னோடு இருக்க சம்மதித்திருப்பதாகப் பத்மா தெரிவித்தாள், தேவசாகயம் பற்றிப்பேசினாள், பவானியைப்பற்றி பேசினாள், புதுச்சேரியைப்பற்றி பேசினாள், தமிழ்சினிமாபற்றி பேசினாள், மீண்டும் தேவா பேச்சில் வந்தான், ஷர்மிளாகூட அலுப்புற்று, தூங்கவேண்டுமென்றாள். ஹரிணி அப்படியா? என்று கேட்டுக்கொண்டதோடு சரி. அந்த ‘அப்படியா? வில் இருந்தது நிச்சயம் துக்கமென்று வகைபடுத்த முடியாதென்றாலும், சந்தோஷமென்றும் எடுத்துக்கொள்ள முடியாது, தெளிவின்றி இருந்தாள். மற்ற இருவரும் வேறு ஏதாவது ஹரிணி சொல்வாளென்று எத்¢ர்பார்த்திருக்கக்கூடும். தேவாவின் புராணம் பாடிய பிறகு, பேச்சு ஹரிணியைப்பற்றியதாக இருந்தது, இனி தனக்கு எல்லாமே தேவாவும் ஹரிணியுமென்று பத்மா முடித்துக்கொண்டாள். பத்மாவின் ஆசையை அல்லது விருப்பத்தை எப்படி எடுத்துக்கொள்வதென்று தெரியாமல் ஹரிணி திணறினாள். பத்மாவின் இப்புதிய அவதாரத்தை நினைக்கிறபோதெல்லாம், தேவையின்றி க்ரோவும் தோன்றி பயமுறுத்துகிறாள்.
பிரதான வாயிலுக்கு வந்திருந்தாள். சமீபத்தில் ஸ்ட்ராஸ்பூர் தலைமைக் காவல்துறை அலுவலகம் இடம்பெயந்திருந்தது. போனவருடத்தில் ஒரு முறை தன்னுடைய அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டுப் புகார் கொடுக்க பழைய அலுவலகத்திற்கு சென்றிருந்தாள். புகாரைக்கொடுக்கவென்று அரைமணி நேரத்திற்கு மேல் காத்திருந்ததும், பதிவு செய்த காவலர் கடுகடுவென்று முகத்தை வைத்திருந்ததும் நினைவிலிருக்கிறது. தடித்த பெரிய கண்ணாடி கதவுகளுக்குமேல், வீடியோ கேமரா, பொத்தானை அழுத்தி, தான் வந்த காரணத்தைத் தெரிவித்தாள். இவள் பிம்பத்தை, உள்ளிருந்த திரையில் பார்த்து திருப்தியுற்றபிறகு அனுமதித்திருக்கவேண்டும். கதவு..ர்ர்ர்ர்ர்ரென்று சத்தமிட, திறந்த மாத்திரத்தில், வரவேற்பு மேசையின் பின்புறம் குனிந்திருந்த தலை நிமிர்ந்தது. ஒரு பெண். இவள் வயதிருக்கவேண்டும், புன்னகைத்தபடி, “உய்..” (யெஸ்)
– மிசியே பஸ்கால் என்பவரைப் பார்க்கணும், சைபர்கிரைம்.
– உங்கபேரு?
– மத்மசல் ஹரிணி.
– உட்காருங்க. கேட்டுச் சொல்றேன். வரவேற்பு மேசைக்கு எதிரில் வரிசையாகப் போட்டிருந்த மெத்தை தைத்த ·பைபர் நாற்காலிகளிலொன்றில் அமர்ந்தாள். பாலைக்குழைத்துக் கட்டியதுபோல சுவர்கள் வெள்ளைவெளேர் என்றிருந்தன, இதமான வெப்பம், விழிகளுக்குத் திகட்டாத ஒளிவெள்ளம், மூலையிலிருந்த தொட்டியில் வெப்ப மண்டல நாடொன்றிலிருந்து கப்பலேறி, ஐரோப்பிய தொட்டியில் அடைக்கலம் பெற்றிருந்த கள்ளிச் செடி, முற்களோடு பார்க்கையில் அழகாக இருக்கிறது. அவற்றிர்க்கு முற்களைக் கொடுத்து உயிர்வாழ்க்கைக்கு உத்தரவாதமளித்த இயற்கைதான், அவற்றைத் தின்று பசியாற ஒட்டகங்களையும் அனுப்பி வைக்கிறது, பொல்லாத இயற்கை.
– மத்மசல் ஹரிணி..
– உய்..
– பஸ்கால் உங்களுக்காகக் காத்திருக்கிறார். உள்ளே நுழைந்ததும் வலப்புறமிருக்கும் லி·ப்ட் எடுங்கள், முதற் தளத்தில் சைபர் கிரைம் அலுவலகம் இருக்கிறது, அறை எண் 118.
முதல் தளத்திற்கு வந்து அறை எண் 118த்தேடி கதவைத் தட்டினாள். ‘ஆந்த்ரே(உள்ளேவா)’ .. என்று கட்டையான குரல். இவள் கதவைத்திறந்ததும், ‘ போன்ழூர் மத்மசல் ஹரிணி’.. எப்படி இருக்கறீங்க பயணமெல்லாம் நல்ல படியா முடிஞ்சுதா?, என்ற காவல் அதிகாரியிடம் கை நீட்டினாள். ஆசாமி குள்ளமாக இருந்தான், நாற்காலிக்குள் அடங்காத உடல், சற்றுமுன்புதான் புகைத்திருக்கவேண்டும், அறையிலும், அவன் உதடுகளிலும் சாம்பலான சிகரெட்டின் மணம்.
– போன்ழூர் மிஸியே பஸ்கால், காலையில்தான் வந்தேன். செக்கண்ட் லை·ப் வலைதளத்துல நீங்க பிரியோலேண்ணு அறிமுகபடுத்திக்கிட்டீங்க. நேற்று போன் பண்ணபோது உங்க பேரு என்னண்ணு கேட்க மறந்துட்டேன். நல்ல வேளையா, நீங்க அனுப்பிய எஸ்.எம்.எஸ்ஸில் உங்க உண்மையான பேரிருந்தது.
– சிகரெட்?
– நோ(ன்) மெர்சி. அப்போ செகெண்ட் லை·பில் மாத்தா ஹரி வலைதளத்துல இருக்கிறவங்க பலருடைய உண்மையான பெயர்கள் உங்களுக்குத் தெரியும்.
– ஆமாம்.. ஆனா இதுலே சைபர் கிரைம்னு சட்டங்கள் சொல்கிற குற்றங்கள் எதையும் அவர்கள் செய்யலை, செகெண்ட் லை·ப்க்குள்ளே நான் நுழைஞ்சதுக்கு அது காரணமுமில்லை. சொல்லப்போனால், வேறொரு குற்றத்தில் இவர்கள் சம்பந்தப் பட்டிருப்பார்களென நினைத்தோம். ஜூலை 13, 2000த்தன்று, பாரீஸிலிருந்த அனாட்டமி மியூசியத்திலிருந்து மாத்தாஹரியின் மண்டயோடு திருடு போனது சம்பந்தமா வழக்கொன்று பதிவாகியிருந்தது. அதுசம்பந்தமா குற்றவாளிகளைத் தேடிவந்தோம். மாத்தா ஹரி பேருல இயங்குகிற சமயக்குழுவுக்கு அதில் பங்கிருக்குமென்ற சந்தேகம் எங்களுக்கிருந்தது.
– மாத்தா ஹரி தண்டிக்கபட்ட விதத்தை விமர்சிக்கிற அபிமானிகளைப் பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையென்று உங்களுடையதை எடுத்துக்கொள்ளலாமா?
– அரசாங்கத்தைப் பார்த்து கேட்கவேண்டிய கேள்வி, எங்களுக்குக் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய கடமையிருக்கு அதைத்தான் செய்யறோம்.
– மாத்தா ஹரியின் மண்டையோட்டிற்கு அப்படியென்ன முக்கியத்துவம். அதை திருடுவதற்கு ஏதேனும் பிரத்தியேகக் காரணம் இருக்கமுடியுமா?
– மாத்தாஹரி தன்னையொரு இந்து தேவதையாகச் சொல்லிக்கொண்டதின் அடிப்படையில், சில பைத்தியங்கள் அவளை விண்ணுலகத்தின் வாரிசென்றே நம்புகின்றன.
– ‘…’
– அதற்கு வேறொரு சுவாரஸ்யமான தகவலையும் காரணமென்று சொல்லவேண்டும். 1930ம் ஆண்டு ஓர் அமெரிக்க தம்பதியினர், மெக்ஸிகோவிலிருந்த தங்கள் பூர்வீகக் கிராமத்திற்குப் போயிருக்கிறார்கள். அப்போது அவர்களுடைய பதினெட்டு வயது மகளும் உடன் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் கிராமத்தைச் சுற்றிலும் நிறைய சுரங்கங்கள் இருந்திருக்கின்றன. இளம்பெண், தனது பெற்றோர்களின் எச்சரிக்கையையும் மீறி சுரங்கங்களை இறங்கி பார்த்திருக்கிறாள், அதிலொன்றில் இரண்டு எலும்புக்கூடுகள் அருகருகே கிடந்திருக்கின்றன.. பெற்றோர்களை நிர்ப்பந்தித்து அவற்றைக் கொண்டுசென்று வெகுகாலம் வைத்திருந்தாள். அவை இப்போது மற்றொரு அமெரிக்க தம்பதிவசமிருக்கின்றன. எலும்புக் கூடுகளை ஆராய்ந்தபொழுது அவற்றைவிட அவை சம்பந்தப் பட்ட செய்திகள் ஆச்சரியமானவை. இரண்டாவது மண்டையோடு ஒரு சராசரி இருபத்தைந்து வயது செவ்விந்தியப் பெண்ணுக்குச் சொந்தமானது. முதல் மண்டையோடு ஐந்து வயது குழந்தையுடையது. குழந்தையுடைய மண்டையோட்டில் பூமியில் வசிக்கிற மனிதரினத்தின் சாயலில்லை. தென்அமெரிக்க இந்தியர்களிடையே ஒருவித நம்பிக்கையுண்டு, அதன்படி விண்ணுலக ஆண்கள் அவ்வப்போது பூமிக்கு வந்து, தொலைதூர கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள பெண்களிடம் உடலுறவுகொள்கிறார்களென்றும்,. அப்படி பிறக்கிற குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதாகிறபோது குழந்தையைக் கேட்டு மீண்டும் பூமிக்குவரும் விண்ணுலக வாசியான தந்தையிடம் குழந்தையை, அப்பெண்கள் ஒப்படைத்துவிடுவதாகவும் சொல்கிறார்கள். அந்த நம்பிக்கையின்படி மெக்ஸிகோவில் கிடைத்த இரு மண்டையோடுகளும் தாயும் சேயும் என்றாகிறது: விண்ணுலகவாசி கேட்டபோது, குழந்தையைத் திருப்பிதர மறுத்து, தாயும் குழந்தையுமாக குகையில் ஒளிந்து வாழ்ந்திருக்கையில் இறந்திருக்கவேண்டுமென்று ஊகம். இதுபோன்ற மண்டையோடுகளுக்கு எல்லா சக்தியும் உண்டென்ற நம்பிக்கையிருக்கிறது. தென்னமெரிக்க நம்பிக்கையைப் போலவே இந்தியப் புராணங்களும் இதிகாசங்களுங்கூட, விண்ணுலக மாந்தர்கள் பூமிக்கு வந்து பெண்க¨ளை கர்ப்பமுறச்செய்ததாக சொல்கின்றன, மாத்தாஹரி தன்னை இந்து தேவதை என்று அறிவித்துகொண்டதால் அவள் விண்ணுலக வாரிசு, அவளுடைய மண்டையோடு சராசரி மண்டையோடல்ல, பூசைக்குரிய பொருள். அந்த நம்பிக்கையின் பொருட்டு, இந்தப் பைத்தியங்கள் எதையும் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
– “….”
-தவிர இச்சமயக்குழுவினருக்கு உபதொழில் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து ஓப்பியம் கடத்துதல். அமெரிக்காவில் உள்ள ஸ்கல் அன் போன்ஸ் குழுவினருக்கும், மாத்தா ஹரி மண்டை ஓட்டைத் தேடி அலைகிற இந்தக்கூட்டத்துக்கும் அதிசயக்கதக்கவகையில் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஸ்கல் அன் போன்ஸின் (Skull and Bones) தற்போதைய இலக்கு அரசியலும், பொருளாதாரமும் என்றாலும், அவ்மைப்பு இயங்குகிற யேல் பல்கலை கழகத்தின் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அதன் ஸ்தாபகருடைய பெயர் இன்கிரீஸ் மாத்தெர்( Increase Mather). அவ்வாறே பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் கவர்னராக சென்னையில் பணிபுரிந்த யேல் பல்கலைக் கழகத்தின் புரவலரான இலையு யேலுக்கும்(Elihu Yal) சரி, பின்னாளில் யேல் பல்கலைக் கழக வளாகத்தில் நிறுவப்பட்ட ஸ்கல் அன் போன்ஸ் அமைப்பு ஸ்தாபகர்களில் ஒருவரான ரஸ்ஸெல் குடும்பத்துக்கும் சரி, பிரதான வருமானம் கொக்கெய்னிலிருந்து வந்தது.
– கேட்க ஆச்சரியமாக இருக்கு. செகெண்ட் லை·ப்- மாத்தா ஹரி அனுதாபிகளின் உண்மையான பெயர்கள் தெரியவந்ததால ஏதாவது துப்பு கிடைச்சுதா?
– நிறைய, செகெண்ட் லை·ப்ல மாத்தா ஹரி விசுவாசிகள் குழுவைச்சேர்ந்த க்ளூனே என்ற அவதார் கொலையானதை அடுத்து நடந்த சம்பவங்கள் சுவாரஸ்யமானது, தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல உண்மைகளை தெரிஞ்சுகிட்டோம், அதிலே மிகவும் பரிதாபமான விஷயம், “மாத்தா ஹரி வழக்கினை நியாயமற்ற முறையில் நடத்தி, ஆதாரமற்ற குற்றச்சாட்டின்பேரில் அவளைக் கொன்றுவிட்டார்கள் என்று குரல்கொடுத்த கூட்டந்தான் ஒர் அப்பாவியோட உயிரையும் அநியாயமா முடிச்சிருக்கு.
– நீங்க என்ன சொல்றீங்க
– பவானிங்கிறது உன்னுடைய அம்மாதானே,
– ஆமாம்.
– சுமார் பதினைந்து வருடத்துக்கு முன்னே தற்கொலைண்ணு நினைத்து முடித்த வழக்கை, இப்போ வேறுவழியில்லாம தூசுதட்டி எடுத்திருக்கோம்.. மாத்தா ஹரியின் காதலனும், வழக்கறிஞனுமான க்ளூனேங்கிற பேரில் செகெண்ட்லை·பில் இருந்த அவத்தார் வேற யாருமில்லை, குளோது அத்ரியன். செகெண்ட் லை·ப்ல க்ளூனே கொல்லப்பட்ட அன்று, நிஜ வாழ்க்கையிலும் குளோது அத்ரியனும் கொல்லப்பட்டிருக்கிறான். அன்றைக்கு யார்யாரெல்லாம் மாத்தாஹரி தளத்துக்கு வந்திருக்கிறார்கள் என்று பார்த்தால், ஒருவன் பிராம்மணா, இன்னொருவன் மாண்ஸ்லோ·ப். முதலில் பிராம்மணாவுக்கு வருகிறேன், இவன் உண்மையானப் பேரு அருணாச்சலம். இவனது தாய்வழி பாட்டன் பிராம்மணா, இந்தோனேசியாவைச் சேர்ந்தவன், அவனது முதல் மனைவியை மாத்தாஹரியின் கணவன் ருடோல்ப் அபகரித்துக்கொண்டதில் மாத்தாஹரி குடுப்பத்தின் மீது தீராக்கோபம் கொண்டிருந்தவன், அவனது இரண்டாவது மனைவி இந்திய வம்சாவளி, டச்சு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்கு வட்டிக்குபணம்கொடுத்துக்கொண்டிருந்த தென்னிந்திய செட்டியார்கள் மரபைச் சார்ந்தவள். அருணாசலம் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து கொக்கெய்ன் கடத்தும் ஆசாமிகளில் முக்கியமானவன். அவனது ஆரம்பகால கூட்டாளி குளோது. தொழிலில் வளர்ந்த பிறகு இரண்டு பேரும் பிரிந்திருக்கிறாகள். க்ளூனே கொல்லபட்ட அன்று மாத்தா ஹரி வலைதளத்துக்கு வந்திருந்த மற்றொருவன் மாண்ஸ்லோ·ப், ஒரு ரஷ்ய ராணுவ அதிகாரி-இளைஞன், மாத்தா- ஹரியை நடனத்தைக் கண்டு அவள்மீது காதல்கொண்டவன், மாத்தாஹரியும் அவனை நேசித்தாள். இந்த மான்ஸ்லோ·ப் அவத்தாருடைய உண்மையான பெயர் பிலிப் பர்தோ.
– பிலிப் பர்தோ?
– ஆமாம். அவன் தேவவிரதன் என்கிற இன்னொரு ‘அவத்தார்’ ஆகவும் செகெண்ட் லை·ப்க்குள்ள நுழைந்திருக்கிறான்… குளோது அத்ரியன் கொலையில் அருணாசலத்திற்கும், பிலிப் பர்தோவுக்கும் பங்கிருப்பது நிரூபிக்கபட்டிருக்கிறது. கொலைக்கு மாத்தா ஹரி, கொகெய்ன் இரண்டுமே காரணங்களென்று சொல்லாம். இரண்டுபேரையும் கைதுபண்ணியிருக்கிறோம்
– என்ன நடந்தது
– உண்மையில் கடந்த டிசம்பர் மாதம் 20ந்தேதி அதாவது க்ளூனே செகெண்ட் லை·ப்பில் கொலைசெய்யப்பட்ட அன்று, கிரைம் பிராஞ்சுக்கு, குளோது அத்ரியன் மனைவியிடமிருந்து போன் வந்தது. தனது கணவன் படுக்கையில் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவித்தாள். ஆனால் எங்கள் தடவியல் ஆட்கள் அங்கே போனபோது, உடலருகே 22LR ரக ரை·பிள் இருந்ததும் உண்மை. ஆனால் தடயங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்க, எங்கள் ஆட்களுக்குச் சந்தேகத்தைக் கொடுத்தது. செகெண்ட் லை·ப்லிருந்து குற்றவாளிகள் யாரென்று ஓரளவு ஊகிக்க முடிந்தபோதும், எங்களுக்கு ஆதாரங்கள் தேவைபட்டன. முதற்கட்ட விசாரணையிலேயே, மதாம் குளோதுக்கு பிலிப் பர்தோ சொந்தச் சகோதரனென்று புரிந்துகொண்டதும், வழக்கில் அதிக சிக்கல்களில்லை என்பது விளங்கிற்று.. துப்பாக்கி வல்லுனர்களும், குற்றவியல் மருத்துவர்களும், தற்கொலைக்குச் சாத்தியமில்லையென்றார்கள். கொலையுண்ட குளோதும், கொலையாளிகளும் கட்டிப்புரண்டு சண்டையிருக்கிறார்கள், அப்போது க்ளோது கொலையாளிகளைக் கடித்திருக்கிறான்.. தடவியல் ஆதாரங்கள் அனைத்தையும் அழித்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த கொலையாளிகளுக்கு, கொலையுண்டவனின் பற்கள் காட்டிக்கொடுத்துவிடுமெனே நினைக்கவில்லை. DNA முடிவுகளூம் எங்களுக்குச் சாதமாக இருந்தன. விசாரிக்கவேண்டிய வகையில் விசாரிக்க, மதாம் குளோதும், தனது சகோதரன் பிலிப் பர்தோவும், அருணாசலமும் சேர்ந்தே கொலைசெய்தார்களென ஒப்புக்கொண்டிருக்கிறாள். பவானியுடைய இறப்பு தற்கொலை அல்ல கொலையென்று சொன்னவளும் அவள்தான். தனக்குத் தானே தீவைத்துக்கொண்டதாக நம்பப்படும் பவானி தேவசகாயத்தின் மூடியகையில், தீயில் கரிந்திடாமல் தப்பித்த தலைமயிர் கிடைத்தது, அதை அப்போது அலட்சியம் செய்திருக்கிறார்கள், அவற்றை லேபுக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவு இன்று மாலை தெரிந்துவிடும். இரண்டு கொலைக்குமே மாத்தா ஹரியின் மண்டையோடு காரணமாக இருந்திருக்கிறது.
– அதைப்பற்றிய தகவல் ஏதேனும். .
– இல்லை. தேவசகாயத்தையும் விசாரித்துவிட்டோம். குளோது அத்ரியனிடம் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறான். நீ எங்களுக்கு ஒத்துழைச்சா ஒருவேளை கிடைக்கலாம். முக்கியமா அதற்காகத்தான் உன்னை வரச்சொன்னேன். குளோது அத்ரியன் இறந்ததற்குப் பிறகு நாங்க சந்தேகிக்கிற ஆள் தேவசகாயம், அவன் எங்ககிட்டே உண்மையை மறைக்கிறானென்று நினைக்கிறோம்
– மன்னிக்கணும் மிஸியே பஸ்க்கால், இந்த விஷயத்திலே நான் செய்ய எதுவுமில்லை. பவானி அம்மாவின் இறப்புக்குக் காரணமானவங்க தண்டிக்கப்படணுமென்று நினைச்சேன். கிட்டத்தட்ட அது நிறைவேறிவிட்டது. இத்தனை தூரம் எங்கிட்ட நீங்க எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டுவந்தற்கு தேவசகாயமிமிருந்து என் மூலம் உங்களுக்கு ஆகவேண்டிய காரியத்திற்காக என்கிறபோது, வருத்தமாக இருக்கிறது. இனியும் நீங்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேட்கும் எண்ணமெல்லாமில்லை, நான் புறப்படறேன்.
காரை எடுத்தபோது தேவசகாயத்தை சிறையில் சென்று பார்த்தாலென்ன என்று தோன்றியது. கைக்கடிகாரத்தைப் பார்த்தாள், மணி பதினொன்றேகால், பத்து நிமிடம் ஓட்டம். பதினொன்றைரைக்கெல்லாம், அங்கிருக்க முடியும்.. முதன்முறையாக பதட்டத்துடன் காரை ஓட்டினாள்.
(தொடரும்)
nakrish2003@yahoo.fr
- ஜெயமோகனும் இயல் விருதும்
- தாகூரின் கீதங்கள் – 13 கண்ணீர்ப் பூக்கள் !
- கடைசி கிலோ பைட்ஸ் – 6 [ Last Kilo bytes -4 ]
- கருணாகரன் கவிதைகள்
- போய்விடு அம்மா
- சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )
- ஆச்சர்யகரமான அரசுவிழாவும் அரிதான அரசு யந்திரமும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலக் கதிர்கள் ! அடிப்படைத் துகள்கள் ! (கட்டுரை: 13)
- எழுத்துக்கலைபற்றி இவர்கள்………(9) – இந்திராபார்த்தசாரதி.
- பட்டுப்பூவே !
- கவிதைகள்
- இரு நாட்டிய நிகழ்வுகள்
- புதிய குரல்கள் புதிய தடுமாற்றங்கள் :தமிழ்ச் சிறுகதை , இன்று…
- திருப்பூரில் பரிசு பெறும் உஷா தீபன்
- கொட்டாவி
- மீராவின் கவிதை
- இரண்டில் ஒன்று
- கடிதம்
- சிங்கப்பூரில் 59வது இந்திய குடியரசுதினம்
- தாரெ ஜமீன் பர் (தரையில் நட்சத்திரங்கள் : அமீர்கானின் திரைப்படம் ) ::: ஓர் அற்புத அனுபவம்
- ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ – ஜெயானந்தன் எழுதிய புத்தக மதிப்புரை
- ஊர் சுற்றிய ஓவர் கோட்
- நீரின்றி அமையாது எங்கள் வாழ்க்கை!
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 4
- மொழி
- மாத்தா- ஹரி அத்தியாயம் -46
- தம்மக்கள்
- மாலதி மாற மாட்டாள்!
- வானபிரஸ்த்தாசிரமம்
- தைவான் நாடோடிக் கதைகள் – 10. மானின் கொம்புகளை நாய்மாமாவுக்குத் திருப்பிக்கொடு.
- திண்ணைப் பேச்சு – ஜனவரி 24. 2008
- மழை பிடிக்காது! மழை பிடிக்காது!
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்
- எண்ணச் சிதறல்கள் : திண்ணை, வைக்கோல்போர், போர்னோகிராஃபி, மலர்மன்னன், வஹ்ஹாபி, முகமதியம், புறங்கைத்தேன்.
- பங்குச்சந்தை வீழ்ச்சி, முதலீட்டியத்தின் தோல்வியா?
- இருப்பின் திறப்புகளும் அங்கீகாரமும்
- குடியரசுதின சிறப்புக் கட்டுரை
- இரவுமீது அமர்ந்திருக்கும் சிவப்புப் பறவை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 1 & -2
- காற்றினிலே வரும் கீதங்கள் – 3 மூச்சு விடுவதே பெரும்பாடு !