நாகரத்தினம் கிருஷ்ணா
– அடுத்து என்ன செய்தீர்கள்?
– இந்த நிலைமையில், மேற்கொண்டு என்ன செய்யலாம்? அரசாங்கத்தின் உதவியை நாடலாமா என்று கேட்கிறேன். பவானிக்கு விருப்பமில்லை. என்னை மீண்டும் எங்கள் வீட்டிலேயே சேர்ப்பித்துவிடுங்கள். நான் சமாளித்துகொள்கிறேன், என்றாள். எனக்கும் அதில் உடன்பாடு. மாலை மணி ஐந்தளவில் உங்கள் வீட்டிற்குப் போனதாக ஞாபகம். தேவசகாயம் கதவைத் திறந்தான், அவன் முகத்தில் பதட்டம் தெரிந்தது. மிகவும் பயந்திருந்தான். எங்கள் இருவரையும் பார்த்துவிட்டு ஒதுங்கி வழிவிட்டான். நீ விளையாடிக்கொண்டிருக்கிறாய். உன்னை முதலில் அன்றைக்குத்தான் பார்த்தேன். என்னை உனக்கு நினைவிருக்கிறதா. இருக்காது, நினைவுபடுத்தக்கூடிய வயதிலும் நீ இல்லை. பவானி என் பக்கம் திரும்பி, உள்ளே வாங்க உட்காருங்க, என்கிறாள். நான் நிலைமையைப் புரிந்துகொண்டு, புறப்படலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மீண்டும் ஏதேனும் விபரீதம் நடந்துவிடுமோ என்ற அச்சம், பவானி அவனை எப்படிச் சமாளிப்பாள் என்று மனதிற்குள் கேள்வி, தயக்கத்துடன் சென்று வரவேற்பறை சோபாவில் அமர்ந்தேன்.
– மிசியே யாரு? – தேவசகாயம்.
– மன்னிக்கணும் என்பேரு பிலிப் பர்தோ, டாக்டர். நேற்றிரவு எதிர்பாராதவிதமா உங்கள் மனைவியைப் சாலையில் பார்க்க நேர்ந்தது.
– நீங்கள் பரிதாபப் பட்டு உங்கள் வீட்டுக்குச் அழைத்து சென்றீர்கள் அப்படித்தானே?
– காவல் நிலையத்திற்குத்தான் அழைத்து சென்றிருக்கவேண்டும். உங்கள் மனைவி அதை விரும்பவில்லை போலிருக்கிறது, பிறகு எனது சகோதரிவீட்டில் அவளைத் தங்கவைத்தேன்.
கணத்தில் முகத்தை மாற்றிக்கொள்ள தெரிந்திருந்தான். சற்று முன்புவரை அவனது கண்களில் தெரிந்த அலட்சியம், குரலில் வெளிப்பட்ட கசப்பு, பாம்பினைப்போல நழுவி சட்டென பதுங்கிக்கொண்டது. மாறாக கையும் களவுமாக பிடிபட்ட கள்வர்களின் வழக்கமான கடைசி உத்தி அவன் பேச்சிலும் வெளிப்படுகிறது.
– மிசியே பிலிப் என்னை மன்னிச்சிடுங்க. ஏதோ ஒரு வேகத்துலே அப்படி நடந்துகொண்டேன். பெரிய உதவி பண்ணியிருக்கீங்க. பவானி ரொம்ப நல்லவ. என்னுடைய நிலைமையை நீங்க புரிஞ்சுக்கணும், மிசியோ பர்தோ. நிறைய எதிர்பார்ப்புடன் பிரான்சுக்கு வந்தேன், மிஞ்சினது ஏமாற்றம். கடந்த ஒரு சில மாதங்களில் எனக்கு இழைக்கப்பட்டக் கொடுமைகள் அப்படி. நிறவெறியை அன்றாட வாழ்க்கையில் நிறைய பார்க்கிறேன். நான் பட்ட ஏமாற்றங்களும் அவமானங்களும் அதிகம்.
– அந்தக் கோபத்தை உங்க மனைவிமேல காட்டறீங்க.
– தப்புதான், புரியுது. இனி கூடாதுண்ணூ நினைக்கிறேன். முடியலை. எத்தனை முறை அவமானப்படுவது.
– அதற்காக உங்கள் கோபத்தை, பவானிமேலே காட்டறதும் சரியில்லை.
– நீங்க கொஞ்சம் பரவாயில்லை. உங்க நிறத்துக்குப் பிரச்சினைகளில்லை.
– நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. எனக்குப் பிரச்சினைகள் குறைவென்று வேண்டுமானால் சொல்லலாம்.
– உங்களுக்குச் சொந்த ஊரு.
– மர்த்தினிக். இந்தியாவுக்கு லட்சத்தீவு, அந்தமான நிக்கோபார் தீவுகள் இருப்பது மாதிரி, இந்தியப் பெருங்கடலில் பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் நாங்கள் இருக்கிறோம். அந்தத் தீவு மக்களை இந்திய அரசாங்கம் எப்படி நடத்ததுண்ணு எனக்குத் தெரியாது. ஆனால் எங்கள் தீவுகளில், நிலைமை வேற. பிரதான பிரெஞ்சு தேசத்து மாநிலங்களின் வளர்ச்சி அங்கே இல்லை என்பதும் தெளிவு. ஆனால் இதற்கெல்லாம் பிரெஞ்சு அரசாங்கத்தையோ, ஐரோப்பிய மக்களை மாத்திரம் குற்றம் சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியாது. உங்கள் வருத்தம் எனக்குப் புரியுது. அதற்காக கோபத்தை உங்கள் மனைவி மீது காட்டுவதை நியாயப்படுத்தமுடியாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், இரவு பன்னிரண்டு மணிக்குமேல், தன்னதனியே ஒரு பெண்மணியைச் சாலையில் இறக்கிவிட்டுவிட்டுவருவது எத்தனை கொடூரமானது. ம்.. முதலில் உங்கள் மனைவியைச் சமாதானப் படுத்தப்பாருங்கள்
உங்கள் அம்மா அதாவது பவானி காப்பி கலக்கிக் கொண்டுவந்தாள். தேவசகாயமும் காப்பியைக் குடித்துவிட்டு புறப்படலாமே என்று வற்புறுத்தினான். அவனிடம் இன்னொருமுறை கலகலப்பாக நாம் மூவருமாக உரையாடுகிறபோது காப்பியை குடிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். அவ்வாறு திடீரென்று நான் பயணப்பட்டதில் இருவருக்குமே விருப்பமில்லை என்பது, அவர்கள் முகங்களைப் பார்க்கத் தெரிந்தது.
– பிரான்சில் உள்ள நிறவேற்றுமை, அன்னியர்கள் மீதான கசப்பு எதுவும் உங்களை அதிகம் பாதித்ததில்லை என நினைக்கிறேன். எனக்கும் நிறைய பிரெஞ்சுக்காரர்கள் அதாவது ஐரோப்பிய வழிவந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆண்களும், பெண்களுமாக நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை மதிக்கிறேன். ஆனாலும் மற்ற ஐரோப்பிய நாடுகள்போலவே இங்கேயும் நிறவெறி இருப்பதை மறுக்கவா முடியும்.
– இல்லண்ணு சொல்லலை. பிரான்சென்று இல்லை, கடந்தத ஐம்பது ஆண்டுகளாக ஐரோப்பாவின் நிலைமை இதுதான். ஒரு நாடு, ஒத்த மனிதர்கள் என்ற புவியியல் அடிப்படையிலான பண்புகள் சிதைந்து இங்கே வெகுகாலமாயிற்று. நிறம், மதம், மொழி, எனத் திரிந்த ஒரு புதுக் கலவையில், பன்முகங்கொண்ட ஒரு புதிய ஐரோப்பாவை இன்றைக்குப் பார்க்கிறோம். நேற்றுவரை நான் கண்ணாடியில் பார்த்துப் பழகிய முகத்தை திடீரென்று ஒருநாள், நீண்ட மூக்கு, தடித்த உதடுகள், மொச்சையாய் சுருங்கிப்போன கண்கள், நீண்டு வளர்ந்த கூந்தல் என்ற நானற்ற முகமாகப் பார்க்க எனக்குக் குமட்டிக்கொண்டுவருகிறது. துருக்கியரின் கெபாபும், சீனர் சூப்பும், இந்தியர்களின் மசாலாவும் எப்போதாவது ஒரு முறை ருசிக்கக் கூடும். ஆனால் வீதியில் நடக்கிறபோதெல்லாம் அவற்றின் மணமென்றால் மூக்கைப் பிடித்துக்கொள்வோமா இல்லையா? ஐரோப்பியர்களுடைய, தங்கள் அடையாளம் தேய்வதுக் குறித்த நியாயமான கவலைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும். தத்தெடுத்த பிள்ளைமீது தாய் அதிக அக்கறைகொண்டிருக்கிறாளோ என்று சந்தேகிக்கிற சொந்தப் பிள்ளையின் வருத்தங்களும் பரிசீலிக்கப்படவேண்டியவை. தவிர இதுபோன்ற கலகக்குரல்கள் எக்காலங்களில் எழுப்பப்படுகின்றன, என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும். இரண்டுபிள்ளைக்கும் இரண்டு அப்பமிருந்து ஆளுக்கொன்று கொடுக்கிறபோது பிரச்சினைகள் வருவதில்லை, இருக்கிற ஒரு அப்பத்தை இருவருக்குப் பிய்த்துக் கொடுக்கிற காலங்களில் எழுப்பப்படுபவை.
– அப்படிப்பார்த்தால் நீங்கள் நான் உட்பட இன்றைக்கு இங்குள்ள சிறுபான்மை மக்கள் அனைவருமே தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகள்தான். சொந்தப் பிள்ளைகளுக்கு நிகராக தத்தெடுக்கப்பட்ட பிள்ளைகளும் நடத்தவேண்டுமென்கிற நமது எதிர்பார்ப்பில் தவறேதுமில்லையே. இவர்கள் மதிக்கும் சட்டமும் அதைத்தானே வலியுறுத்துகிறது. அதற்கான மனமில்லையென்றால், தத்தெடுத்திருக்க வேண்டாமே. வீட்டைக் கூட்டவும் பெருக்கவுமே உன்னைத் தத்து எடுத்தோம், எனக்கிணையாக உன்னை நாற்காலியில் உட்காரவைப்பதற்கில்லை என்கிற காலனீய கால குரூர மனம் நிறம்மாறாமல் இன்றைக்கு பிரான்சில் இருக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்னு வாய் கிழிய சொல்கிறார்கள், ஆனால் நிஜத்திலே என்ன நடக்கிறது? ஏதோ நம்ம மாதிரி ஒன்றிரண்டுபேருக்கும் வேலையும், ஒண்டுவதற்கு இடமும் கொடுக்கப்பட்டிருப்பதாலேயே இங்கே நடப்பதெல்லாம் சரியென்று ஆகிவிடுமா? மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பதினெட்டு சதவீதமிருக்கும் சிறுபான்மை மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இங்கே வழங்கப்பட இல்லை என்பதுதானே உண்மை.
– கோபப்படும்போது உங்க அப்பா மாதிரியே இருக்கிறே. நீ சொல்வதெல்லாம் உண்மை, எதையும் நான் மறுக்கவில்லை. எனக்குங்கூட அந்த அனுபவமுண்டு. என்னுடைய அம்மா மேற்கிந்தியர் வம்சாவளி, தகப்பனார் துலூஸ் நகரத்தைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சுக்காரர். கடல் கடந்த மர்த்தினிக் பிரதேசத்தில் இருக்கும்வரை பிரெஞ்சுக் காரனாக இருந்தவன், பிரதான பிரெஞ்சு மண்ணுக்கு வந்தவுடன் என்னை அந்நியனாக உணர்ந்தேன், பிரெஞ்சு பூமிக்கு நான் சொந்தமில்லை என்ற உணர்வு. பிறகு படிப்படியாக அந்த உணர்வை விலக்கிக்கொண்டேன். நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும், மற்றவர்களைபற்றி நாம் ஏன் கவலைப்படவேண்டும். நாம் வேறானவர்கள் ஆனாலும் பிரெஞ்சுகாரர்கள் என்கிற நம்பிக்கைவேண்டும், அதைத்தான் நான் செய்கிறேன். இவர்கள் சட்டத்தை மதிக்கிறவர்கள் என்பது ஆறுதலான விஷயம். நீயோ நானோ களவாய் இங்கே வந்தவர்களல்ல, உரிமைகளோடு வந்தவர்கள். பிறகென்ன கவலை. மர்த்தினிக், ரெயூனியன் போன்ற பிரதேசங்களின் அப்போதைய காலனி ஆட்சியை நியாயப்படுத்தி இங்கே 2005ல பாராளுமன்றத்துலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்னையும் வெகுவாக பாதிக்கிறது. ஜெர்மானியர்களின் பிடியில் பிரான்சு இருந்ததை ஆக்ரமிப்பு என்று எழுதும் இவர்கள், இவர்களது காலணிகால ஆட்சியையும் அதே தளத்தில் நிறுத்த மறுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எங்கள் பிரதேசத்தைப் பற்றியும், எங்கள் மக்களைப் பற்றியும் புத்தகமொன்று எழுதத் தீர்மானித்திருக்கிறேன்.
– அப்படியொரு புத்தகம் எழுதத் தூண்டியது எது?
– பவானி. என்னை அப்படியொன்று எழுதத் தூண்டினவள் அவள்தான். ‘சிங்கங்களுக்கென வரலாற்றாசிரியர்கள் இல்லாதவரை, வேட்டை பற்றிய வரலாறுகளென்பது, வேட்டைக்காரர்களின் வீரதீரத்தை மெச்சுவதாகவே இருக்கும்’, என்ற ஆப்ரிக்க பழமொழியும் காரணம். சிங்கங்கள் தங்கள் வரலாற்றைச் சொல்லவேண்டிய நேரம். சொல்லத் துணிந்தேன்.
– அம்மாவை அடிக்கடிச் சந்திச்சிருக்கீங்க?
– ஆமாம் வாரத்தில் ஒருமுறையாவது பாவனியைப் பார்த்தாகணும். பவானி ஓர் அறிவு ஜீவி. தேவசகாயத்தை அவள் திருமணம் செய்துகொண்டதை விபத்தென்றுதான் சொல்வேன். தேவசகாயம் அவளுக்குப் பொருத்தமானவனல்ல.
– ஏன், எப்போதாவது பவானி உங்களிடத்தில் அதுபற்றி சொல்லி வருந்தினாங்களா?
– இல்லை. தேவசகாயத்தைப் பற்றிய விஷயங்களை சாமர்த்தியாக ஒதுக்கிவிடுவாள். குடும்பப் பிரச்சினைகளையும் கூடுமானவரை என்னிடத்தில் தவிர்த்திருக்கிறாள். இலக்கியம், அரசியல், அவைசார்ந்த கோபம், சந்தோஷம், எரிச்சலென்று மணிக்கணக்கில் உரையாட நிறைய எங்களுக்கு விஷயங்களிருந்தன. அழகும் அறிவும் சேர்ந்து வாசம் செய்வது வெகு அபூர்வம், அவளிடம் அந்த இரண்டுமிருந்தன. சுவாரஸ்யமான பெண்மணி. அவள் இறந்த செய்தி எனக்குத் தாமதமாகத்தான் மதாம் குரோ மூலம் தெரியவந்தது. தனிப்பட்ட முறையில் பவானியின் அகால மரணம் என்னை மிகவும் பாதித்தது எனலாம். எனக்கேற்பட்ட மிகப்பெரிய இழப்பு.
பிலிப் பர்தோவின் கடைசிவாக்கியம் அடங்கி ஒலித்தது. அவர் கண்களில் நீர் சுரப்பதைக் கண்டாள். ஹரிணி கையிலிருந்த பாக்கெட் கைக்குட்டையிலிலிருந்து ஒன்றை உருவிக் கொடுத்தாள். கையில் வாங்கிக் கொண்டு நன்றி என்றார். போட்டிருந்த கண்னாடியை கழட்டியவர் கண்களைத் துடைத்துக்கொண்டபின் மீண்டும் அணிந்தார். சிறிது நேரம் கண்ணாடி தடுப்பின் ஊடாக கவனம் வெளியில் சென்றது. ஹரிணியின் பார்வை அவரைத் தொடர்ந்தது. கொட்டிக்கிடந்த சருகுகளில், ஊமை வெயிலில், இள நீல வான்வெளியில், பசுமை மங்கிய புற்தரைகளில் பார்வையை ஓட்டியபின், போதுமென்று தீர்மானித்தவர்போல, இவள் முகத்தில் மீண்டும் தனது பார்வையை நிறுத்தினார்.
– பவானியை நீங்க விரும்பனீங்க இல்லையா?
பிலிப் பர்தோ எழுந்துகொண்டார். மெல்ல நடந்து மீண்டும் கண்ணாடி தடுப்பருகே நின்று வெளியைப் பார்த்தார். இவளிடமிருந்து விடுதலை பெற நினைத்தவர்போல தெரிந்தார் அல்லது ஹரிணி எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல விருப்பமில்லாதவர் என்ற எண்ணத்தை வலியத் திணிப்பவராக இருந்தார். ஹரிணியும் எழுந்துகொண்டாள். உரையாடலில் ஏற்பட்ட வெற்றிடத்தை தன் பங்குக்கு நிரப்ப கவனத்தை அங்கிருந்த புத்தக அலமாரிகளில் செலுத்தினாள். உளவியல் புத்தகங்கள், பிரெஞ்சு, ஆங்கில இலக்கியங்கள், உலகக் காப்பியங்கள் வரிசையில் மகாபாரதத்தையும் இராமயணத்தையும் பார்க்க முடிந்தது. இவள் கவனத்தைத் துண்டிப்பதுபோல, பிலிப் பர்தோ இவள் பக்கம் திரும்பி பேசினார்.
– சொன்னது யார் க்ரோவா? குரல் தடித்திருந்தது. சற்றுமுன்புவரை உரையாடலில் கலந்திருந்த மிருதுத்தன்மையும், ஞானமும் தொலைந்துபோனது. நீர்கோர்த்திருந்த கண்கள் உலர்ந்திருந்தன.
– இல்லை அம்மா அதாவது அம்மாவின் டைரியில் படித்தது.
– வேறு என்ன எழுதியிருந்தாள்?
– இரண்டொருவரிகளில் முடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதிகமான விபரங்கள் இல்லை.
– இதில் மறைப்பதற்கென்ன இருக்கிறது. நான் விரும்பினேன். அதை பவானியிடம் தெரிவிக்கவும் செய்தேன். அவளுக்கு அதில் விருப்பமில்லை என்கிறபோது நான் வற்புறுத்தவில்லை.
– ஆனால் தொடர்ந்து பவானியைச் சந்தித்து வந்திருக்கிறீர்கள்
– ஆம். இடையில் என்னால் ஏற்படுத்திய சலசலப்பினால், சிறிதுகாலம் நாங்கள் சந்திக்காமலிருந்தோம். பிறகு நானே அவளைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவளிடத்தில் பேசினேன். எங்கள் இருவருக்குமான நட்பின் அவசியம் அவளுக்கும் புரிந்தது. தொடர்ந்து சந்தித்தோம்.
– தேவசகாயத்தின் குணம் தெரிந்துமா?
– இக்கேள்வியை நட்பாய் நாங்கள் பழகிய தொடக்க காலத்திலேயே கேட்டுக்கொண்டதுண்டு. பவானிமீது நான் காதலை வளர்த்துக்கொண்டதற்குக்கூட, தேவசகாயத்திடமிருந்து விலக நினைத்தே அவள் என்னிடம் நட்பு வைத்திருக்கிறாள் என்ற தவறான ஊகமாக இருக்கலாம்.
– ஆக அத்தனையும் சகித்துக்கொண்டு தேவசகாயத்தோடு இருந்திருக்கிறாள். அதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று தோன்றவில்லையா?
– உன்மேலுள்ள பிரியமென்று சொல்லலாமா, இந்தியாவிலிருந்தவரை, பெண்ணியம் பெண்கள் சுதந்திரமென்று வாழ்ந்தவள் இங்கே வந்தபிறகு சராசரி இந்தியபெண்ணாக அடையாளபடுத்திகொள்வதில் ஏற்பட்ட விருப்பமா, எதைச் சொல்ல?
– அம்மாவுடைய இறப்பு தற்கொலையாக இருக்காதென்று நினைக்கிறேன். அம்மாவை என்னுடைய தேவசகாயம் கொடுமைபடுத்தினதுக்கு நீங்களெல்லாம் சாட்சிகளாக இருந்திருக்கீங்க, அதுவும் தவிர பவானிமேலே மரியாதையும், அன்பும் வச்சிருந்த நீங்க எதனாலே அவர்கள் இரண்டுபேருக்குமிடையே இருந்த பிரச்சினைகள் பற்றி வாய்திறக்காம இருந்திருக்கீங்க?.
– தேவசகாயம் பவானிக்குக் கொடுத்த துன்பங்கள் அவளை தற்கொலைசெய்துகொள்ள தூண்டியதென்று வேண்டுமானால் சொல்லலாம். அப்படித்தான் போலீஸ¤ம் நம்பியது.
– அப்போ நீங்கள் அதைக் கொலையா நினைக்கலை.
– இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அது கொலையா தற்கொலையா என்று விவாதித்து என்ன ஆகப்போகிறது. போலீஸ் அதை தற்கொலையென்றே முடிவு செய்தது. நாங்கள் என்ன செய்ய முடியும். தேவசகாயம் கொடுமைபடுத்தினது உண்மைதான், ஆனால் கொலை பண்னக்கூடிய ஆளல்ல. அவன் பயந்தாங்கொள்ளி.
– உங்களுக்கு மாத்தா ஹரி மீதான அபிமானம் எப்படி?
(தொடரும்)
nakrish2003@yahoo.fr
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)
- வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- இனியொரு விதி செய்வோம்
- நிச்சயிக்கப்பட்ட திருமணம்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
- தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்
- சிறுகதை எழுதப் போய் ..
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி
- சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
- ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்
- ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு
- ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை
- பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்
- கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )
- குற்றாலச் சிற்றருவி
- சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…
- கடிதம்
- கடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா
- கடிதம்
- பட்டிமன்றம் 25 நவம்பர் 2007
- கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்
- பள்ளிக்கூடம்
- மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை
- ஒரே கேள்வி
- மாத்தா ஹரி அத்தியாயம் -36
- இறந்தவன் குறிப்புகள் – 2
- மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்
- மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)
- படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
- புன்னகைக்கும் பெருவெளி
- ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ
- கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்
- திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்
- நாம் எப்படி?
- தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !
- கவிதைகள்
- கல்யாணம் பண்ணிப்பார்!
- இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)