மாத்தா-ஹரி – அத்தியாயம் 10

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


அத்தியாயம் 10

– ‘நான் சிறுமியாக இருந்தபோதே கங்கைக்கரையில் ராஜாக்கள் முன்பாக நடனமாடியிருக்கிறேன்….’, எனப் பாரீஸ் நகரக் கனவான்கள் அவளுடைய காலடியில் கிடந்தபோது பெருமையாக சொல்லிக்கொண்டவள்.

– யாரு?

– நீங்கள் குறிப்பிட்ட மாத்தா ஹரி.

– அப்படியா? அவங்க யாரு?

– பிறகு சொல்றேன். எனக்கு அதற்கு முன்பு சில தகவல்கள் வேண்டும். எதனாலே பவானி அம்மாவை, தேவசகாயம் மாத்தா ஹரியென்று சொல்லவேண்டும்? முதலிலே அன்றைக்கு நடந்தது எதுவுமே ஞாபகமில்லைண்ணு சொன்ன நீங்க, பிறகு மாத்தா-ஹரிங்கிற பேரை நினைவுல கொண்டுவரமுடியுமென்றால் அதற்கு ஏதாச்சும் காரணம் இருக்கணுமே?

– அப்படித்தான் வச்சுக்கோயேன். அன்றைக்கு நான், பத்மா, பவானி, தேவசகாயம் என்று ஓட்டலுக்குப் போனபோது, அங்கே தேவச்காயத்திற்குத் தெரிஞ்சவங்க என்று இரண்டு பேரை பார்த்தோம். ஒருவன் பிரான்சிலிருந்து வந்திருந்தான், பேரு என்னண்ணு ஞாபகமில்லை. ஆனால் இன்னொரு ஆளோட பேரு அருணாசலம் என்று ஞாபகம்.

– அவர் என்ன பாண்டிச்சேரியா, தேவசகாயத்திற்கு நண்பரா?

– ஒருவகையில் பாண்டிச்சேரிதான்

– விளங்கலை

– பேரைக் கேட்க நம்ம ஊரு பேரு மாதிரி இருக்கிறது, ஆனால் முகத்தைப் பார்க்க சீனாக்காரன் மாதிரி இருந்தான். ஆனா ரொம்ப காலமா பாண்டிச்சேரியிலதான் இருக்கிறானாம்.

– மாத்தா-ஹரிங்கிற பேரு எப்படி?

– பீச்சுல முதன்முதலில் நாங்க பார்த்துக்கொண்டபோது என்னைப் பவானிக்கு அறிமுகப்படுத்திய தேவசகாயம், அவளைப் பற்றி எதுவும் சொல்லலை. எனவே ஓட்டலுக்குள் நுழைந்து காலியாக இருந்த மேசையைத் தேடி அமர்ந்ததுமே நான் அவனிடம், இவங்க யாரென்று எனக்குச் சொல்லலையே என்று கேட்டேன். அதற்கு அவன், என்னை மன்னிக்கணும் ஷர்மிளா, என்றவன், இவங்கதான் பவானி அலியாஸ் மாத்தா ஹரி, பத்மாவுக்குப் பிரண்டு, எனக்கும் தெரிஞ்சவங்க, என்று முடித்தான். அவன் மாத்தா-ஹரி என்ற சொல்லை உச்சரித்தபோது, கண்ணைச் சிமிட்டினான். அதற்கு என்ன பொருளென்று எனக்குப் புரியவில்லை. பவானிக்கும் அப்படித்தான் நிலைமை என்பதை வியப்பில் பிரிந்த அவளுடைய இமைகளும் அகன்ற விழிகளும் தெரிவித்தன. பத்மா அமைதியாக இருந்தாள். அதே சமயம் தேவசகாயத்தின் பார்வை பக்கத்து மேசைக்காய் திரும்பியது, அங்கிருந்தவர்களும் இவனைத் திரும்பிப் பார்த்தனர். எதேச்சையாக நடந்ததென்று அந்த நேரம் நினைத்தேன்.

– பிறகு என்ன நடந்தது?

– பவானி தனக்குச் சிற்றுண்டி எதுவும் வேண்டாம், காப்பி மட்டும் போதுமென்று பிடிவாதமாக இருந்ததால், எல்லோருமே காப்பி வரவழைத்துக் குடித்தோம். எழுந்திருக்கும் நேரம், பக்கத்து மேசையிலிருந்து சீனாக்காரன் மட்டும், எழுந்து வந்தான், தேவாவை டாய்லெட்டுப் பக்கம் அழைந்து போனான். அப்போதுதான் தேவாவுக்கு முன்னமேயே அவன் தெரிந்தவனாக இருக்கவேண்டுமென்று நினைத்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு இருவரும் திரும்பி வந்தனர். அவர்கள் திரும்பிவரட்டும் என்று காத்திருந்ததுபோல, பக்கத்து மேசையில், எதிர்ப்பக்கம் அமர்ந்திருந்த பிரெஞ்சுக்காரன் அவர்களோடு சேர்ந்துகொண்டான். இம்முறை அவர்களிடம், தேவசாகயம், பவானியைக் காட்டி இவங்கதான் நான் சொன்ன மாத்தா-ஹரிண்ணு சொல்ல, அவர்கள் கண்களை அகலவிரித்து, சரியான தேர்வுதான் என பிரெஞ்சில் சொல்லிவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர்.

– அவர்கள் யார் என்னவென்று நீங்கள் கேட்கவில்லையா?

– பத்மா வாய் திறக்கவில்லை. அவளுக்கு அவர்களைப் பற்றிக் கொஞ்சமேனும் தெரிந்திருக்கலாமென்று நினைத்தேன்மா. பவானியை பொறுத்தவரையில், தான் இவர்களோடு சம்பந்தப்பட்டவள் அல்ல என்பதுபோல அன்றைய தினம் நடந்துகொண்டாள், நாந்தான் இவர்கள் யாரு தேவா என்று கேட்டேன். அப்போதுதான் அவர்கள் இரண்டுபேர் பெயரையும் சொல்லி, எனக்குத் தெரிந்த நண்பர்கள் என்றான்.

– பிறகு எப்போதவாது அந்த இருவரும் யாரென்று அறியும் சந்தர்ப்பம்.

– இல்லைம்மா.. அதற்குப் பிறகு இரண்டு மூன்று நாட்களில் காரைக்கால் திரும்பிட்டேன். அதுபற்றி விசாரிக்கணும்னு தோணலை.

– மாத்தாஹரிங்கிற பேரு உங்களுக்கு வித்தியாசமாகப் படலையா?

– இல்லை. ‘தேவா’வை தெரிஞ்சவங்களுக்கு அப்படித் தோண வாய்ப்பில்லை. அவன் வீட்டிலே என்ன மாதிரியான படங்களை மாட்டிவச்சிருப்பான்ணு நினைக்கிற, இந்து மதத்தில் இருக்கிற அத்தனை பெண் தெய்வங்களையும் மாட்டிவைச்சிருப்பான். முகவரி தெரியாம பூசாரிவீட்டிற்கு வந்து விட்டோமோ என்று நினைப்போம். அவன் வயதுக்கும், வெளியில் அவனைப் பார்க்கிறவர்களுக்கும், முரண்பாடாகத் தோணும். நிஜமா அப்படித்தான் நடந்துக்கொண்டான். சில நேரங்களில் அவேசம் வந்தவன்போல, இந்த உலகத்தில் அரக்கர்களும், பாவ ஆத்மாக்களும் பெருகிவிட்டார்கள், அவர்களை அழிப்பதில் நமக்கெல்லாம் பொறுப்பிருக்கிறது என்பான். மற்றபடி அவனை எதுவும் சொல்ல முடியாது. அதானால மாத்தாஹரிண்ணு சொன்னப்ப, அவன் வீட்டில் மாட்டிவைத்திருக்கிற பெண் தெய்வகளிலொன்று என நினைச்சுட்டேன். அவ்வளவுதான்.

– இல்லை. நீங்க நினைப்பதுபோல மாத்தாஹரி* பெண்தெய்வமில்லை.

– பின்னே?

– அவள் ஒரு நடனப்பெண்மணி, பெண் உளவாளி, மோகினிப்பிசாசு என அறிந்தவர்கள் வர்ணிக்கிறார்கள். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவளைப் பற்றிய ஒரு புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறேன், படித்தவரை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில அப்பெயருக்கு மிகப்பெரிய ஈர்ப்புச் சக்தி இருந்திருக்கிறது. கீழை நாடுகளின் மகத்துவத்திற்கும் மர்மத்திற்கும், கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும், கலைகளுக்கும் பரிணாமங்களுக்கும் அவள்தான் ஏகப்பிரதிநிதி என்பதுபோலே நடந்துகொண்டிருக்கிறாள். அவளுடைய முக தரிசனத்திற்கு ஏங்காத கனவான்கள் இல்லையென்று சொல்லலாம். அவளது கையை வாங்கி முத்தமிட ஐரோப்பிய ராணுவ அதிகாரிகள் வரிசையில் நின்ற காலமுண்டு. இந்து மதத்தின் புனிதவதிகளில் ஒருத்தியாக தன்னை பிரகடனப்படுத்திக்கொண்டு பாரீஸில் தங்கி கிமெ(1) அரங்கில் அவள் நடனமாட, பணக்காரர்கள் கூட்டம் நிரம்பிவழிந்தது. 1917ம் ஆண்டு பிப்ரவரிமாதம் பாரீஸில் கைது செய்யப்பட்டபோது, ஐரோப்பாவே வியப்பில் ஆழ்ந்தது. நம்ப மறுத்தது.

– நீ சொல்வதைப்பார்த்தால், அவள்..*.

– வேசியெனப் பரவலாகப் பேச்சு, முதல் உலகபோரில், ஜெர்மானியருக்கு ஆதரவாக உளவுவேளையில் ஈடுபட்டவளெனக் குற்றஞ் சாட்டப்பட்டாள். மாத்தா ஹரியை அறிந்தவர்கள், அவள் உளவுவேலை பார்த்தவள் என்பதை இன்றைக்கும் நம்ப மறுக்கிறார்கள். அவளைக் கைது செய்வதற்கும், குற்றஞ் சுமத்தவும் உண்மையில் போதிய ஆதாரங்கள் இல்லை. அவள் நிரபராதியா? குற்றவாளியா? என்ற விவாதம் அவள் இறப்புக்குப் பிறகும் தொடர்கிறது. அவளைச் சுற்றிலும் சுவாரஸ்மான, ஏராளமான வதந்திகள். எதை நம்புவது? எதை நம்பக்கூடாது என்பதில் கூட குழப்பம். குற்றஞ் சுமத்தியவர்கள் அவளது விசாரணையை ரகசியமாக நடத்தினார்கள். ஜெர்மானியர்கள், பிரெஞ்சுக்காரர்கள், ஹாலந்து நாட்டவர், ஸ்பானியரென விசாரிக்கப்பட்ட சாட்சிகளில் பல தேசத்தவரும் இருந்தனர். சாட்சிகளிலும் நிறைய முரண்பாடுகள். அவளைப்பற்றிய அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப நிறைய நாவல்கள் எழுதினார்கள், மேடை நாடகங்கங்கள் அரங்கேற்றினார்கள், திரைப்படங்கள் தயாரித்தார்கள். 1964ம் ஆண்டுவரை அவளைப்பற்றிய ஆவணங்களை பிரெஞ்சு அரசு மறைத்து வந்திருக்கிறது. இன்றைக்கு ஆவணங்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்டிருப்பது உண்மையென்றாலும், புதிர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறதே ஒழிய குறைந்தபாடில்லை. – என்ற ஹரிணி எதிரே, குடித்து முடித்த காப்பிக் கோப்பைகள் காய்ந்துபோயிருப்பதைப் பார்த்ததும், அவள் சொல்லிக்கொண்டிருந்தது தடைபட்டது.

– கோப்பைகளை கொண்டுபோய் வச்சுட்டு வந்திடுங்களேன்- தவிர காரைப் பார்க்கிங்கில் நிறுத்தும் போது, போக்கிரி பையன்கள் கும்பலாக நின்றிருந்தார்கள், பயமாக இருக்கிறது, எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடுகிறேன்.

– பர்தோம்மா.(2), நாம பேசிக்கொண்டிருந்ததுல கோப்பைகளைக் கவனிக்கவில்லை, ஆனால் காரைப் பற்றிப் பயப்பட ஒன்றுமில்லை, இரவு நேரங்களில்தான் ஏதாச்சும் செய்வார்கள், – என்ற மதாம் ஷர்மிளா, காலியாகவிருந்த காப்பிக்கோப்பைகளை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

அவள் உள்ளே செல்லவும், ஹரிணியின் கைத் தொலைபேசி ஒலித்தது. கைப் பையை அவசரமாகத் திறந்து என்னவென்று பார்த்தாள், ‘ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருப்பாயா? இருப்பாயென்றால் வீட்டிற்கு வருவேன்’- அரவிந்தன், என எஸ்.எம்.எஸ். அரவிந்தன்.. அரவிந்தன் இரண்டு முறை சொல்லிப்பார்த்துக்கொண்டாள். இரண்டு மாதத்திற்கு முன்பு ஸ்ட்ராஸ்பூரிலிருந்து பாரீஸ¤க்கு இரயிலில் போகிறபோது, இவளோடு அவன் பயணம் செய்தது நினைவுக்கு வந்தது. புதுச்சேரியைச் சேர்ந்தவனென்றும், தனது மூத்த சகோதரியைப் பார்க்க ஸ்ட்ராஸ்பூர் வந்ததாகவும் தெரிவித்திருந்தான். பயணத்தின் ஆரம்பத்திலிருந்த இடைவெளி பாரீஸை நெருங்கும்போது, குறைந்திருந்தது. இருவரும் கலகலப்பாக ஐஸ்வரியாராய், லகான், தேவதாஸ் என சமீபத்தில் பிரான்சில் ஏற்பட்டிருந்த இந்தியச்சினிமாவின் தாக்கம் பற்றி கலகலப்பாக பேசியதும், பேச்சின் இடையில், தொலைபேசி எண்களைப் பறிமாறிக்கொண்டதும் நினைவுக்கு வந்தது. பிறகு வழக்கம்போல பயணமும், அவனும் இவளது நினைவிலிருந்து தொலைந்துபோனார்கள். அவனுக்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்தாள். எதுவாக இருந்தாலும் இப்போது வேண்டாமென்று தீர்மானித்தாள். இவள் கவனத்தைக் கலைப்பதுபோல ‘கூ..கூ..கூ..கூ..கூ..கூ..வென்று ஆறுமுறை குருவி ஒன்றின் குரல். தலையை உயர்த்தி எதிரே சுவரைப் பார்த்தாள். அங்கே ஒவ்வொரு மணி நேரத்திற்கும் குருவியொன்று வெளிப்பட்டுச் சத்தமிடும் குக்கூக் கடிகாரமொன்று மாட்டப்பட்டிருந்தது. வீட்டுக்குள் நுழைந்தபோது வால் பேப்பரில் இருந்த கரப்பான் கறைகள்கூட தெளிவாகப் பட்டன, இந்தனை அழகாக இருக்கிற சுவர்க்கடிகாரம் கண்ணிற்படாதது ஆச்சரியம். அப்போதுதான் அங்கிருந்த பல பொருட்களும் மிகப் பழையதாகத் தெரிந்தன. அமர்ந்திருந்த சோபாகூட நைந்து, அதை விரிப்பொன்றின்மூலம் மறைத்திருப்பதைக் கவனித்தாள். சன்னலிற் தெரிந்த திரைகளில் தூசுமண்டிக்கிடந்தன. சன்னற் கதவுகளையும் துடைத்து நாட்களாகி இருக்கவேண்டும், நிறைய ஒட்டடைகள், வலைப்பின்னல்களாகத் தெரிந்தன. நிறுத்தி இருந்த கண்ணாடி அலமாரியின் நடுவில் ஒரு பழைய தொலைக்காட்சிப்பெட்டி, அதனருகே, வீட்டில் பெண்பிள்ளைகள் இருப்பதை அடையாளப்படுத்துவதைப்போல ஒரு டெடிபியர், கண்ணாடிப்பெட்டிக்குள் தஞ்சாவூர் பொம்மை, ரோஸ்வுட் யானைகள், அல்சாஸ் பிரதேசத்தின் பிரத்தியேக உடை அலங்காரத்துடன் கூடிய பெண் பொம்மை ஒன்று, லாமினேஷனில் சிரித்துக்கொள்டிருந்த சிறுமிகள், அருகில் தரையிலிருந்த சிறிய மண்ஜாடியில் ‘அமாரில்லி’ தாவரம்…எனப் பார்வையாற் தொட்டுக்கொண்டிருந்த ஹரிணியின் கவனத்தைக் கலைப்பதுபோல காலடிகள்.

மதாம் ஷர்மிளாவின் கையிலில் இந்த முறை ஒரு சிறிய சீனப் பீங்கான் தட்டு, அவள் பார்வை, கடிகாரத்தின் மீது படிந்ததைக் ஹரிணி கவனித்தாள்.

– யாரையாவது எதிர்பார்க்கிறீர்களா நான் போய்விட்டு, வேண்டுமானால் இன்னொரு நாளைக்கு வருகிறேனே, என்றாள்.

– அதெல்லாம் ஒன்றுமில்லை. நேரமானா சாப்பாட்டுக்கு மேசையை ஒழுங்கு பண்ணலாமே என நினைச்சேன். பிரெஞ்சுகாரர்கள் மாதிரி அநேகமாக நீங்க எல்லாம் ஏழுமணிக்கே சாப்பிட்டுவிடுவீங்க இல்லையா? கொண்டுவந்த தட்டை மேசை மீது வைத்தாள்.

– என்னங்க இது?

– தமிழ்க் கடைக்குப்(3) போயிருந்தேன். நெத்திலி மீன் வந்திருக்கிறதா சொன்னாங்க. வாங்கிவந்தேன். ரொம்பநாளாச்சு பஜ்ஜிபோட்டு, எனவே மதியம் செய்தேன். நீ வருகிறேன் என்று சொன்னதும் எடுத்துவச்சேன்.

– எதற்கு இப்படி சிரமப்படறீங்க. சாப்பாடெல்லாம் ஒன்று வேண்டாம். நான் போன்பண்ணவுடனேயே தயக்க மில்லாம, என்னை வீட்டுக்குக் கூப்பிட்டீங்க. அன்பா உபசரிக்கிறீங்க, இதுவே பெரிய விஷயம்.

– ஹரிணி, நீயும் எம்மகள்போல. உங்கிட்ட சொல்றதுக்கு என்ன? எம்புருஷன் வேற யாருமில்லை, சொந்த அத்தை பையன். கல்யாணத்துக்கு முந்தியே அப்படி இப்படிண்ணுதான் இருந்தார், மனிதர் திருந்திடுவார்னு சொன்னாங்க. சம்பாதிக்கிற காசெல்லாம் அல்கோலுக்குண்ணு(4) ஆனது. உனக்கு நம்ம பாண்டிச்சேரிக்காரங்களைப் பத்தி தெரியுமே. ஒரு சில நல்லவங்களும் இருக்கலாம், அவங்களைச் சொல்லலை, ஆனாப் நிறையபேரு, ஒருத்தன் மாத்தி ஒருத்தன், அடுத்தவங்க வீட்டுக்குப் போறதே, தன் வீட்டுலே குடிச்சது போதாதுண்ணு அங்கேயும் விஸ்கி பாட்டிலைத் திறந்து வச்சுக்கணும் என்பதற்காக. வந்தவுடனேயே ஆரம்பித்து விடுவார்கள். பெண்கள் குசினிக்குள்(5) இருப்போம். பிரெஞ்சு ராணுவத்துல பணிபுரிந்திருப்பார்கள், அவர்களை ராணுவ வீரர்கள் என்பதைவிட எடுபிடிகள்னு சொல்லலாம். துப்பாக்கியைத் தொட்டுப் பார்க்காதவன்கூட, தான் இல்லையென்றால் பிரெஞ்சு ராணுவமே இல்லையென்பதுபோல பேசுவான். பிறகு எம்.ஜி.ஆர் என்பான், சிவாஜி என்பான். வேற ஒரு மசுரும் தெரியாது. விடிய விடிய குடிப்பார்கள். பெண்களாகிய நாங்கள் மீனையும், கறியையும் அவ்வபோது வறுத்தோ, பிரட்டியோ, அவர்கள் தின்று முடிக்க தின்று முடிக்க, குசினிக்கும் சலோனுக்குமாக(6) நடந்து, அவர்கள் சாப்பிட்டு முடித்த தட்டை நிரப்பவேண்டும். எனக்கு அலுத்துப்போச்சு. நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கேத்தமாதிரி ஒரு சம்பவம்: ஒரு நாள் வந்திருந்தவர்களில் ஒருவன், இரவு பதினோரு மணிக்கு குஸ்கூஸ்(7) வேண்டுமென்றுசொல்ல, எங்க வீட்டுக்காரரும் தலையாட்டினார். செய்து முடிக்க பன்னிரண்டு ஆகிவிட்டது. வந்திருந்தவன் மனைவியும், நானுமாக மேசைமீது வைத்துவிட்டு, அருகிலிருந்த சோபாவில் அமர்ந்து டி.வியில் ஓடிக்கொண்டிருந்த தமிழ்ப் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆள், மதாம் கொஞ்சம் கிட்டவாங்க என்றான். நானும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அருகிற் சென்றேன். பல சமயங்களில் கல்மிஷமில்லாமற் பேசிக்கொள்வதுண்டு. அன்றைக்கும் அப்படித்தானென்று நினைத்தேன். அவன் பக்கத்தில் சென்றதும், என்னிடத்தில் ‘குஸ்கூஸ்’ ரொம்பப் பிரமாதம் என்றான், பிறகு சட்டென்று, என் முதுகிற் தட்டினான். பக்கத்திலிருந்த என் வீட்டுக்காரர் சிரிக்கிறார். அந்த ஆள் மனைவியும், இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது ஆச்சரியமாக இருந்தது. நான் பல்லைக் கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தேன். அந்த ஆள் விடுவதாக இல்லை. மறுபடியும் எழுந்து வந்தான், என் வீட்டுக்காரரும் அந்த ஆள் பெண்டாட்டியும் கெக்கே பிக்கேயென்று சிரிக்கிறார்கள். வந்தவன் இந்தமுறை என் பின்புறத்தில் கையைவைத்து, இங்கேதான் தட்டணுமென்று நினைத்தேன், தவறிப்போய் முதுகில் பட்டுட்டுது என்கிறான். எனக்கு வந்தது ஆத்திரம். பத்ரகாளியாக மாறிட்டேன், சாப்பிட்டுக்கொண்டிருந்த தட்டை அவன் தலையில் வீசினேன். கோபத்துடன் எழுந்துவந்த எம்புருஷனுக்கும் அதுதான் நடந்தது. வந்த ஆள் தலையிலிருந்து ரத்தம் கொடகொடவென்று கொட்ட எல்லோரும் பயந்துபோனார்கள். ‘ஆ.. ஊ.. என்றார்கள்’. நான் போலீஸைக்கூப்பிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்து, வீணா வம்பிழுக்க வேணாம், பத்து நிமிஷத்துலே, நீங்க வீட்டைக்காலி பண்ணலை என்றால் இங்கே கொலையே விழும்; என்று சொல்லிவிட்டு, எனது அறைக்குள் புகுந்துகொண்டேன். பத்து நிமிடம் கழிந்திருக்கும் வந்து பார்க்கிறேன். ஒருத்தரும் இல்லை. எங்க வீட்டுக்காரனும் அவங்களோட சேர்ந்து போனவர்தான். அதற்குப் பிறகு வரவில்லை. பிறகு கோர்ட் கேஸ் என்றாகி விவாகரத்து ஆனது. இப்போ எங்க வீட்டுக்காரர் அந்தப் பொம்பிளையோடுதான் இருக்கிறார். எங்க பெண்கள் ரெண்டுபேரும், இங்கேயும் அங்கேயுமா இருக்கிறாங்க. நான் வருடத்துல பாதி நாளு அநாதைபோலத்தான் இருக்கேன். என் அண்ணன் தம்பிகளெல்லாம் ‘பரி'(Paris)யிலதான் இருக்காங்க. அங்கே வந்துடச் சொன்னாங்க. எனக்கு இந்த ஊரு பழகிட்டது. நீ போன் பண்ணதும், பவானி பெண்ணுண்ணு சொன்னதும் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பேன் தெரியுமா? அதனால் இன்றைக்கு எங்கூட சாப்பிட்டுட்டுத்தான் போகணும். சாதம் சாப்பிட விருப்பமில்லைண்ணா, பிஸ்ஸா இருக்கிறது, இல்லை மெர்கெஸ்(8) பகத் (9)இருக்கிறது, எதுவென்றாலும் செய்துத் தறேன்

ஹரிணி சிரிது நேரம் அமைதியாக இருந்தாள். மதாம் ஷர்மிளாவின் முகத்தைப் பார்த்தாள், பேசி முடித்த உதடுகளில், உள்ளுணர்வின் ஈரம்மின்னிக்கொண்டிருக்கிறது. கண்களில் நிறைய எதிர்பார்ப்புகள். உறவு மழையை எதிர்பார்க்கும் தனிமைவறட்சி. சட்டென்று எதிரிலிருந்த அந்த அம்மாவின் கைககளை இறுகப் பற்றிக்கொண்டாள். இவளது கண்களிலும் ஈரம் தளும்பியது. சட்டென்று மதாம் ஷர்மிளாவின் மார்பிற் சாய்ந்தாள். சுகமாக இருந்தது. மதாம் ஷர்மிளா இவள் தலையைக் கோதினாள். “அம்மாவின் கைக்கான மகத்துவம் ஒருவேளை இதற்கும் மேலானதாக இருக்குமோ? அவளைப் பற்றிய நினைவே இதமானதா? பசியாற்றவல்லதா? வலிபோக்கக்கூடியதா? தலையை மெல்ல விடுவித்துக்கொண்டவள், விழிகளை உயர்த்தி மதாம் ஷர்மிளாவைப் பார்த்தாள், அம்முகத்தில் அல்லும் பகலும் இவளுடன் இருக்கும் பவானியின் முகம்: உதடுகளொட்டிய குறுநகை, கன்னத்திலிட்ட முத்தங்கள், கண்கள் தொட்ட வாழ்வாதாரம்…”

– எழுந்திரும்மா.. இந்தப் பஜ்ஜியை எடுத்துக்கோ. சூடா இருக்குபோதே சாப்பிடணும். இப்பவே ஆறித்தான் இருக்கணும். வேண்டுமானா இன்னொருமுறை ‘மைக்ரோவேவ் ஓவன்ல’ சுடவச்சி கொண்டுவரட்டுமா? – மதாம் ஷர்மிளா.

ஹரிணி அவளிடமிருந்து விலகி நேராக உட்கார்ந்தாள்.

– மன்னிச்சுக்குங்க ஏதோ அம்மா நினைப்புல உங்கமீது சாய்ந்துட்டேன்.

– அதற்கென்னம்மா, நீயும் எம்மகள்போலண்ணு ஆரம்பத்துலேயே சொன்னேனே. பஜ்ஜியை சாப்பிடு.

எதிரே இருந்த பஜ்ஜியில் இரண்டு எடுத்துச் சாப்பிட்டுவிட்டு போதுமென்றாள். தண்ணீர் கொண்டுவரச் சொல்லிக் குடித்தாள். பிறகு மீண்டும் மதாம் ஷர்மிளாவே உரையாடலைத் தொடர்ந்தாள்.

– எதிலோ ஆரம்பித்து என்னென்னவோ பேசிக்கொண்டிருந்துவிட்டோம். உங்க அம்மாவுக்கும், இந்த மாத்தாஹரிங்கிற பெண்மணிக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்?

– எனக்கும் அதுதான் கேள்வி? மாத்தா ஹரியே ஒரு கேள்விக்குறி. அவளைப்பற்றி எப்படி சொன்னா உங்களுக்குப் புரியுமென்று எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் உங்களிடம் சொல்வது அவசியமென்று நினைக்கிறேன். இந்தியப் புராணங்களில் சொல்லப்படுவதுபோல அவள் ஆண் அரக்கர்களை மயக்க, தேவர்கள் அனுப்பிய ரம்பை அல்லது ஊர்வசியாக இருக்கலாம். தந்திரசாலி ஆனால் பலவீனமானவள், ஏமாற்றுக்காரி ஆனால் ஏமாற்றப்பட்டவள். சட்டப்படி தண்டிக்கப்பட்டவள் ஆனால் உண்மையில் நிரபராதி. அசாதாரணமான வாழ்வைத் தேடிக்கொண்டவர்களில் ஒரு சிலர் அநியாயமாக தண்டிக்கப்பட்ட வரலாறு உண்டு? மாத்தாஹரி அதற்கான ஒரு பரிதாபமான உதாரணம். இந்த மாத்தா ஹரிக்கும் அம்மாவுக்கும் என்ன சம்பந்தம் இருக்குமென்று கேட்டீர்கள். இரண்டுபேருமே நல்ல அழகு, என்பதைத் தவிர குறிப்பிடும்படியாக எதுவுமில்லை. உறுத்தும் மற்றொரு விஷயம், அநீதியாக மாத்தாஹரி தண்டிக்கப்பட்டது. ஒருவேளை எனது அம்மாவுக்கும் அது பொருந்துமென்றால் அம்மாவுடையது தற்கொலை அல்ல கொலை என்றாகிறது.

– அம்மாவைப் பற்றிகூட ஏதேதோ வதந்திகளைக் கேள்விப்பட்டேன்மா.

– என்னவாக இருக்குமென்று ஓரளவு ஊகிக்கிறேன். மாத்தாஹரிக்கும் அதுதான் நிலைமை. எதையும் நம்மால் உறுதிபடுத்த முடியாது என்பதுதான் உண்மை. மாத்தா ஹரியை வேசி என்கிறார்கள். ஆனால் அவளோ, கணவரைப் பிரிந்து பாரீஸ¤க்கு வந்த ஆரம்பத்தில் நிர்வாண ஓவியத்திற்கான மாடலாக நிற்பதற்குக்கூடத் தயங்கியவள், பின்னர் அவளே மோசமான முன்னுதாரணமாகப் மாறிப்போனாள். அதற்கான காரணங்களையும், பார்க்கவேண்டும். நெருக்கடிகளையும் புரிந்துகொள்ளவேண்டும். இன்னுமொரு சேதி, இன்றைக்கும் பவானி அம்மா பெண்ணியல்வாதியாக இருந்ததன் அடையாளமாக அவள் வைத்திருந்த புத்தகங்கள் வீட்டில் இருக்கின்றன, அப்படியே மாத்தாஹரியின் வாழ்விலுங்கூட சராசரி பெண்களினின்று வேறுபட்ட ஒருத்தியைப் பார்க்கிறோம். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் பெண்களின் நிலைமை மிக மோசமாக இருந்தது. சமுதாயத்தில் கடைநிலையிலிருந்த பெண்களும், தொழிற்சாலைகளிலிருந்த பெண்களும், ஆண்களைவிட கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம். சரி, மேட்டுக்குடி பெண்களின் நிலைமையாவது நன்றாக இருந்ததாவென்றால் இல்லை. பெரும்பாலான நேரங்களில் மாளிகைகளில் அடைத்துவைக்கபட்டு, வாரிசுகளைப் பெற்றுத் தருவதே அவர்களுடைய கடமை, என்று உணர்த்தப்பட்டது. இங்கே அதாவது பிரான்சில் 1944வரை பெண்களுக்கு ஓட்டுரிமைகூட இல்லை. இந்திய நிலமைக்கு மாற்றாக பிரான்சில் விதவைப்பெண்களும், கணவரைவிட்டுப் பிரிந்துவாழும் பெண்களுமே சுதந்திரமாக இருக்கமுடியும் என்ற நிலைமை. அப்படி ஒரு சுதந்திரத்திற்காக கணவனை விஷம் வைத்துக் கொன்ற மதாம் லபார்ழ்(Madame Lafarge) வழக்கும் அப்போது மிகப் பிரசித்தம். அந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்தான் ப்ளோபெர்(Flaubert) என்ற எழுத்தாளர் மதாம் பொவாரி என்ற புகழ்பெற்ற நாவலையும் எழுதினார். இதை எதற்காக சொல்கிறேனென்றால், அன்றைய தேதியில் ஒரு சில பெண்கள் தாங்கள் சராசரிப் பெண்கள் அல்ல, என்பதை நிரூப்பிக்கவும், ஆண்களை விரலசைவில் வைத்திருக்கவும் முயன்றிருக்கிறார்கள், அவர்களில் நமது மாத்தாஹரியும் ஒருவளாக இருக்கலாம்.

– மாத்தாஹரி பேரைக் கேட்ட ஏதோ நம்ம ஊர்க்காரிமாதிரி தெரியுதே.

– உண்மை, தன்னை இந்துப் பெண்கடவுளாகக் கற்பிதம் செய்துக்கொண்டாள். அவளை ஐரோப்பியர்கள் மாத்தா ஹரி என்று உச்சரித்தாலும், நாம் அவளை மாதா ஹரி என்றே அழைக்கலாம், அதுதான் சரி.. அவள் மார்கரீத்தா, ம்கீரீத், கிரீத், மாத்தா என பலபெயர்களில் அழைக்கபட்டாலும், தன்னை மாத்தா ஹரியென்றே, உலகம் அழைக்கவேண்டுமென நினைத்தாள். ஆரம்பத்தில் சொன்னதுபோன்று,’சிறுமியாய் இருந்தபோதே கங்கைக்கரையில் ராஜாக்கள் முன்பாக நடனமாடியிருக்கிறேன்….’, என பாரீஸ் நகர கனவான்களிடம் கதைவிட்டவள், உண்மையில் அவள் பிறந்தது இந்தியாவிலல்ல, ஹாலந்து நாட்டில். அவளது உண்மையான பேரு மார்கெரித்தா-ஜீயர்ற்றுய்தா செல்(10). தகப்பன் பெயர் ஆடம் செல், அந்த ஆள் சின்னதாய் ஒரு தொப்பி கடை வைத்திருந்தான். வியாபாரமில்லை. வரவுக்குமேல் செலவு செய்தவன். ஆடம்பரப் பிரியன். மார்கெரித்தாவுக்கு பதினைந்து வயது ஆனபொழுது, வீட்டிலே அடைந்து கிடந்த அம்மா இறந்துபோனாள். கடன்காரர்கள் தொல்லை. பிள்ளைகளை வைத்துக்கொண்டு ஆடம் செல் படும் துன்பங்களையும், பிள்ளைகள் அவரை வெறுத்ததையும் கண்ட அரசாங்கம், அவளுடைய இரு சகோதரர்களையும், அவளையும், உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்தது. மார்கரித்தா ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்க்கப்பட விடுதியில் தங்கி படித்துவந்தாள். கட்டான உடல், வெல்வெட்டுபோல கண்கள், தலைமயிரை அவிழ்த்துவிட்டால், இடுப்பைத் தொடும், அத்தனை அழகு.

(தொடரும்)

—————————————————————————————————————–

1. Guimet Museum – பாரீஸிலுள்ள புகழ்பெற்ற அருங்காட்சியகம்
2. Pardon- மன்னிப்பு
3. தமிழர் நடத்துகிற உணவுப்பொருட்கள், மளிகைபொருட்களுக்கான அங்காடி.
4. மது
5. Cuisine -Kitchen -சமையலறை
6. Salone- Living-room -வரவேற்பு அறை
7. Couscous – பிரியாணியைப்போல, அரிசிக்குப்பதிலாக ரவையை உபயோகித்து சமைக்கப்படும் அரபு உணவு.
8. Merguez – பன்றி இறைச்சியில் செய்த சாசேஜ்
9. Baguette – குச்சிபோன்ற நீண்ட ரொட்டி
10. Margaretha-Geertruida Zelle

*. 1. Mata Hari -Sa veritable Histoire -Philippe Collas -Edition Plon -2003
2. Mata Hari – Anne Bragance – Edition Belfond – 1995
3. Dossir secrets de l’Histoire – Alain Decaux Edition Perrin -1966

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா