மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்

This entry is part [part not set] of 32 in the series 20020407_Issue

இரா மதுவந்தி


மாட்ரிக்ஸ் என்ற படம் இரண்டு வருடங்களுக்கு முன்னர் வந்தது. இந்தப்படத்தை நான் சுமார் 25 தடவைக்கு மேல் பார்த்துவிட்டேன். (எம்ஜியார் படம் மட்டும்தான் இத்தனை தடவைகள் பார்க்கப்படுமா என்ன ?) எனக்கு அலுக்காத படம் இது. அதற்கு முதல்காரணம், இந்தப்படத்தில் வரும் அமானுஷ்ய சண்டைக்காட்சிகள். இரண்டாவது காரணம் இந்தப்படம் கேட்கும் தத்துவக் கேள்விகள்.

ஒரு ஹாலிவுட் படத்தில் என்ன மண்ணாங்கட்டி தத்துவம் பேசப்போகிறார்கள் என்று நினைத்தீர்கள் என்றால், கட்டாயம் இந்தப்படத்தைப்பாருங்கள்.

நான் இங்கு மாட்ரிக்ஸ் கதையை எழுதப்போவதில்லை. எழுதப் பொறுமை இல்லை. விஷயத்துக்கு வருவோம்.

மார்பியஸ் நியோவிடம் ஒரு கேள்வி கேட்கிறான். ‘இந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால், நீ பழையபடி உன் வாழ்க்கையைத் தொடரலாம். பாதுகாப்பான வாழ்க்கை. ஆனால் சுதந்திரமான வாழ்க்கையா என்று தெரியாது. சிவப்பு மாத்திரையை எடுத்துக்கொண்டால், நீ திரும்பிப் போக முடியாது. ஆனால், மாட்ரிக்ஸ் என்றால் என்ன என்று தெரியும். பாதுகாப்பான வாழ்க்கை இருக்கவே இருக்காது. எதை எடுத்துக்கொள்கிறாய் ‘ என்று கேட்கிறான். கேள்வி கேட்கும்போது அதன் வீச்சு புரியாது. அது எவ்வளவு பெரிய எக்ஸிஸ்டென்ஷியலிஸக் கேள்வி என்பது இரண்டாம் முறை படம் பார்க்கும்போதுதான் புரியும்.

பிரதர்ஸ் கரமசோவ் புத்தகத்தில் கிராண்ட் இன்குவிஸிடர் இயேசு கிரிஸ்துவிடம் பேசுகிறார். ‘மக்களுக்கு பாதுகாப்பும் உணவும் தான் வேண்டுமே ஒழிய அவர்களுக்கு சுதந்திரம் வேண்டாம். அவர்கள் பலவேறு வாய்ப்புகள் வேண்டாம் என்று சொல்கிறார்கள். இதை எடுப்பதா அதை எடுப்பதா என்பதெல்லாம் அவர்களுக்குக் குழப்பம். நீயே முடிவு பண்ணி என்னிடம் ஒரு விஷயத்தைக் கொடு என்று இறைஞ்சுகிறார்கள். அதனாலேயே நான் சர்வாதிகாரியாக இருக்கிறேன் ‘ என்று கூறுகிறார்.

ஜான் ஸ்டூவர்ட் மில்லும், ஹென்றி டேவிட் தோரோவும், ‘சுதந்திரத்துக்காக தப்பித்தலை ‘ சொன்னார்கள் என்றால், கிராண்ட் இன்குவிஸிடர், ‘சுதந்திரத்திலிருந்து தப்பித்தலை ‘ சொல்கிறார். கிராண்ட் இன்குவிஸிடர் இல்லாமல், யூதர்களும், ரஷ்யர்களும், சீனர்களும், ஜெர்மானியர்களும் கொடுங்கோலாட்சியின் கீழ் சந்தோஷமாக இருந்ததை, இருப்பதை விளக்க முடியாது.

இதுவே திரும்பி வருகிறது.

சைபர் என்ற ஒரு கலகக்காரன் மீண்டும் மாட்டிரிக்ஸ் உள்ளே சென்று சந்தோஷமாக இருந்துவிட முடிவு செய்கிறான். அதற்காக, ஒரு ஏஜெண்டிடம் பேசுகிறான். எப்படி ? ஒரு கற்பனை ஒயினைக் குடித்துக்கொண்டு, ஒரு கற்பனை கறியை தின்றுகொண்டு அவனிடம் பேசுகிறான். இதுதான் சொர்க்கம் என்கிறான். இவனுக்கு எது நிஜம், எது கற்பனை என்று தெரிந்தே இருக்கிறது. இந்த மாயமான உலகம் எனக்கு வேண்டும் என்று தெளிவாக முடிவு எடுக்கிறான். (இவன் வில்லனாக சித்தரிக்கப்படுவது படம் எடுத்தவரின் மனச்சாய்வைப் பொறுத்தது). முக்கியமான சாக்ரடாஸின் கேள்வியை எழுப்புகிறது படம். நன்றாக வாழ எது சரியான தேர்வு ? மாயமான கற்பனை உலகத்தில் சந்தோஷமாக வாழ்வதா ? சந்தோஷமின்றி நிஜமான வாழ்க்கையில் வாழ்வதா ?

காயமே இது பொய்யடா என்றும் உலகே மாயம் என்றும், பழுதைப் பாம்பு மனம் மருகுதல் என்றும் பேசுவது நமக்குப் பழக்கம். அப்படி இன்னொரு உலகத்தை நிஜமாகவே கட்டினால், அந்த மாயையை நிஜமான மாயைக் கட்டினால், எதனை தேர்ந்தெடுப்பீர்கள் வாழ ? அவலமான நிஜத்தையா, சந்தோஷமான பொய்யையா ? கணினி மென்பொருளான மாட்டிரிக்ஸ் பொய் என்று தெரிந்தும் ஏன் அதனை தேர்ந்தெடுத்தான் சைபர் ?

மார்பிய்ஸ் நியோவிடம் அந்தக் கேள்வியைக் கேட்கும்போது, நியோவுக்கு தான் எடுக்கும் முடிவின் விளைவுகள் தெரியாது. அந்த விளைவுகள் தெரிந்திருந்தால், நான் நீல நிற மாத்திரையையே எடுத்திருப்பேன் என்று சைபர் சொல்கிறான். அதனால், நம்மை ஏமாற்றிவிட்டான் மார்பியஸ் என்று சொல்கிறான்.

**

இரண்டாவது கேள்வி, எது சுதந்திர எண்ணம், எது முன்னரே நிச்சயிக்கப்பட்ட விஷயம் என்ற கேள்வி. (Already determined or free will)

நியோ ஒரு கிழவியிடம் ஆலோசனைகேட்கச் செல்கிறான். அவன் உள்ளே வந்ததும், அவள் திரும்பிப்பார்க்காமலேயே, ‘அந்த ஜாடியைப் பற்றிக்கவலைப்படாதே ‘ என்கிறாள். நியோ ‘எந்த ஜாடி ? ‘ என்று திரும்பிப்பார்க்கிறான். அவன் அப்படித் திரும்புவதால் ஒரு ஜாடியில் இடித்து அந்த ஜாடி கீழே விழுந்து உடைகிறது. ‘அந்த ஜாடி ‘ என்று சொல்கிறாள் கிழவி.

இப்போது கேள்வி, ஜாடி உடையப்போகிறது என்று கிழவிக்குத் தெரியும். அவன் திரும்புவதால்தான் அந்த ஜாடி விழும் என்றும் தெரியும். அவன் திரும்ப வேண்டுமென்றால், கிழவி, அந்த ஜாடியைப் பற்றிப் பேச வேண்டும். அவள் அந்த ஜாடி உடைவதைப் பற்றி பேசுவதால் அது உடைகிறது. என்ன மாயச்சுழல்!

‘நான் அந்த ஜாடியை பற்றி பேசாமல் இருந்திருந்தால் ஜாடி உடைந்திருக்குமா என்று யோசித்துக்கொண்டே போ ‘ என்று சொல்கிறாள் கிழவி.

தன்னைத் தானே நிஜமாக்கிக் கொள்ளும் ஜோதிடம் என்று சொல்வது போன்றது இது. ஒருவனைப் பார்த்து, நீ ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வருவாய் என்று சொல்ல, அவன் நமக்கு அந்த திறமை இருக்கிறது போலும் என்று நினைத்து பயிற்சி செய்து அவன் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வருவது போன்றது. ஜோதிடம் சொல்லாமல் இருந்திருந்தால் அவன் ஓட்டப்பந்தயத்தில் முதலாவது ஆளாக வந்திருப்பானா ?

இரண்டாவது படம் முழுவதுமே வியாபித்திருக்கும் மாட்ரிக்ஸ் என்ற கணினி மென்பொருள்.

இந்த கணினி மென்பொருள் எல்லோருடைய சிந்தனைகளையும் வழிநடத்துகிறது. நாம் நினைக்கும் ஒரு விஷயம், நம்முடையதா, மாட்டிரிக்ஸ் சொன்னதா என்று எப்படி பகுத்துப்பார்ப்பது என்ற கேள்வி. அப்படி ஒரு மனித மூளை கணினி மென்பொருளைத் தாண்டிச் செல்ல முயற்சிக்கும்போது, அந்த மனித மூளையை அழிக்க ஏஜெண்டுகள் வருகின்றன. இந்த ஏஜெண்டுகளும், கணினி வைரஸ்கள் (அல்லது வைரஸ் அழிக்கும் வைரஸ்கள்) போன்ற சுதந்திர மென்பொருள்கள் போன்றவை.

ஒரு சூழலுக்குள் இருக்கும்போது, அந்த சூழலைத் தாண்டி சிந்திக்க முடியுமா என்ற அடிப்படைக் கேள்வியை மாட்ரிக்ஸ் படம் கேட்கிறது. மாட்ரிக்ஸ் மென்பொருளுக்குள் 1999தான் வருடம். வெளியே 2199 வருடம். மாட்டிரிக்ஸ் உள்ளே இருப்பவர்களது காலம் பற்றிய உணர்வு கணினி மென்பொருள் உருவாக்கியது.

இப்போது மாட்ரிக்ஸ் என்ற இந்த மென்பொருள், அளவிடமுடியாத சிக்கலும், பரப்பளவும், அமைப்பும் கொண்டது. யார் ஒருவராலும், ஒருமுடிவை யாரின் முடிவு என்று சரியாகப் பிரித்துப் பார்க்க இயலாது. முடிவெடுத்தலும், முடிவெடுப்பதாக தோன்றுதலும் வெளிப்பார்வையிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாதவை. மாட்டிரிக்ஸ் உள்ளே இருந்துகொண்டே ஒருவரால் இந்த வித்தியாசத்தை உணர முடியாது. அவருக்கு அவரது வாழ்க்கை வழி முடிவுகளும், வெளியே இருப்பவரின் வாழ்க்கை வழி முடிவுகளும் போலவே நிஜமானவை. அறியக்கூடிய மனத்தின் வழியேதான் உலகம். கிரிட்டிக் ஆஃப் ப்யூர் ரீசன் என்ற புத்தகத்தில் இம்மானுவல் காண்ட்டின் விமர்சனத்தை இங்கே பொறுத்திப் பாருங்கள். உணர்வுகளுக்கு வெளியே தனியாக பகுத்தறிவு இருக்க முடியுமா ?

உள்ளே இருப்பவனது வாழ்க்கையை ஏற்கெனவே மாட்டிரிக்ஸ் மென்பொருள் தீர்மானித்திருக்கலாம். ஆனால் அப்படி ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டது தெரியாத ஒருவரது மாட்டிரிக்ஸ் வாழ்க்கைக்கும் வெளியே இருப்பவரது ‘நிஜ ‘ வாழ்க்கைக்கும் வித்தியாசத்தைக் கண்டறிய முடியுமா ? அப்படி தீர்மானிக்கப்பட்ட நிலை மாட்ரிக்ஸ் உள்ளே இருப்பவரால் அறியமுடியாத ஒரு நிலை. ஏனெனில் அதில் இருக்கும் மாபெரும் பரந்த அமைப்பும் படு சிக்கலும் நிறைந்த மென்பொருள் வளமை. பல்லாயிரம் நிச்சயிக்கப்பட்ட வழிகளில் ஒருவழியை எடுத்துச்செல்லும் ஒருவரது முடிவு, சுதந்திர எண்ணம் எனவே கருதலாம். ஆக சுதந்திர எண்ணம் என்பதும், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டது என்பதும் ஒரு பரந்த சிக்கலான அமைப்பில் பிரித்தறிய முடியாதது.

ஒரு ஏஜெண்ட் சொல்கிறான் மார்பியஸிடம். ‘உங்களுக்காக முன்பு எல்லோரும் சந்தோஷமாக இருக்கும் ஒரு உலகத்தை நிர்மாணித்தோம். அதில் உங்களால் ஒரு மாதம் கூட இருக்க முடியவில்லை. உங்களுக்கு ஏதாவது பிரச்னை வேண்டும். கலவரங்கள் நடக்க வேண்டும். யாராவது வருத்தப்படாவிட்டால் உங்களால் சந்தோஷமாக இருக்க முடியாது ‘ என்று சொல்லிக்கொண்டே போகிறான்.

அவன் சொல்வது, மனித குலத்தைப் பற்றிய தீவிரமான விமர்சனம். சரியாகப் படம் பாருங்கள். அவன் சொல்வதில் இருக்கும் உண்மை புரியும்.

**

கிழவியைப் பார்க்கச் செல்லும் நியோ காத்திருக்கும் வேளையில் ஒரு திபேத்தியக் குழந்தையிடம் பேசுகிறான். அந்தச் சிறுவன் ஒரு ஸ்பூனை இரண்டு விரல்களால் பிடித்துக்கொண்டு கண்ணால் பார்த்தே வளைக்கிறான். நியோ முயற்சி செய்கிறான். குழந்தை சொல்கிறது, ‘அங்கே ஸ்பூன் இல்லை. அந்த ஸ்பூன் உன் மனத்தில் தான் இருக்கிறது. மனத்தில் இருக்கும் ஸ்பூனை வளை ‘ என்று.

மாட்டிரிக்ஸ் என்ற மென்பொருள் ஸ்பூனை உருவாக்குவதில்லை. ஸ்பூன் பற்றிய பிம்பத்தை உள்ளே இருப்பவனின் மனத்தில் உருவாக்குகிறது. ஒருவர் மனத்தில் தோன்றும் ஸ்பூன் என்ற பிம்பமும், இன்னொருவர் மனத்தில் தோன்றும் ஸ்பூன் என்ற பிம்பமும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அதனால் ஒரு பொய் உலகத்தை உருவாக்க முடியும். ஆக ஒருவர் மனத்தில் தோன்றும் ஸ்பூன் என்ற பிம்பத்தை வளைப்பதன் மூலம், மற்றவர் மனத்தில் தோன்றும் ஸ்பூன் என்ற பிம்பத்தை வளைப்பதற்கான சாத்தியம் இருக்கிறது.

இது மாட்டிரிக்சுக்குள். நம் உலகத்தில் இந்த நிகழ்வுகள் இல்லை எனச் சொல்லிவிட இயலுமா ? அந்த ஸ்பூனுக்கு ஒரு வரலாறு இருக்கிறது. யூரி கெல்லர் என்ற ரஷியர் இது போல எல்லோர் முன்னாலும் கண்ணால் பார்த்தே ஸ்பூனை வளைத்துக்கொண்டிருந்தார். பிறகு அவரை மிகவும் ஆராய்ந்து அவர் ஏமாற்று வேலை செய்கிறார். ஏற்கெனவே வளைந்த ஸ்பூனை விவரமாக இடம் மாற்றுகிறார் என்று சொன்னார்கள். அதற்கு அது உண்மைதான், ஆனால் முன்னாள் எனக்கு அந்த திறமை இருந்தது. விளம்பரம் மேடை காட்சிப்பொருளாக நான் ஆன பின்னால் அந்த திறமை போய்விட்டது என்று சொன்னார். எது உண்மை ?

மெளனி தன்னுடைய ஒரு கதையில், ‘யாருடைய நடமாடும் நிழல்கள் நாம் ? ‘ என்று கேட்டார்.

சரி நாம் இப்போது (அதாவது இதை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும்போது) மாட்ரிக்சுக்குள் இல்லை என்பதற்கு என்ன நிரூபணம் ?

***

Series Navigation

இரா மதுவந்தி

இரா மதுவந்தி