மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஒரு காட்டில் ஒரு சிங்கம் இருந்தது. அது மற்ற மிருகங்களையெல்லாம் கொன்று தின்று கொண்டிருந்தது. அஞ்சி, மிஞ்சியிருந்த மிருகங்களெல்லாம் ஒன்றுகூடின. தாங்களே ஒரு நாளைக்கு ஒரு மிருகம் என, சிங்கத்துக்கு உணவாக அனுப்பிவிடுகிறோம், மற்ற மிருகங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்களுடைய அழிவு அவ்வளவு விரைவில் வரவேண்டாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு இறப்பைத் தள்ளிப் போட்டு, ஆறுதலைந்து கொள்கிறோம் — என சிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தன. கருணையோடு சிங்கமும் அவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டது. அவ்வாறே தினம் ஒரு விலங்கு என பலியாகிக்கொண்டிருந்தது. முயலின் முறை வந்தது.

அறிவான அந்த முயலோ, வேண்டுமென்றே தாமதமாகச் சென்று, காட்டில் இன்னொரு சிங்கம் இருப்பதாகப் பொய்சொல்லி, இந்த சிங்கத்தை ஒரு கிணற்றுக்குள் எட்டிப்பார்க்க வைத்தது. கிணற்றின் உள்ளே தெரிந்த தனது பிம்பத்தை தனது எதிரி என்று நினைத்து முட்டாள் சிங்கம், கிணற்றினுள்ளே பாய்ந்து உயிரை விட்டது. எல்லா மிருகங்களும் முயலைப் பாராட்டின.

இது நம் அனைவருக்கும் மிகவும் நன்றாகத் தெரிந்த கதை. ஆனால் இந்தக் கதையில் நமக்குத் தெரியாதது பல உண்டு. இக்கதையின் ஆன்மீகப் பரிமாணங்களை நாம் அறியமாட்டோம். இது வெறும் சிங்கத்தையும் முயலையும் பற்றிய கதை என்றுதான் நாம் இன்றுவரை எண்ணி ஏமாந்துகொண்டிருக்கிறோம். இது நம் ஒவ்வொருத்தரையும் பற்றிய கதையே. நமக்குள்ளேயே இருக்கின்ற சிங்கத்தையும் முயலையும் மெளலானா ரூமி தெளிவாக அடையாளம் காட்டுகிறார்கள். இறைத்தூதர் மூஸாவின் கையிலிருந்த சாதாரண கோல் எப்படி இருளில் ஒளியாகவும், பகைவர் முன்னே பாம்பாகவும், செங்கடலை இரண்டாகக்கிழிக்கும் சக்தியாகவும் மாறியதோ அதுபோல, மெளலானாவுக்கு இந்த கதை பயன்படுகிறது. சிங்கமும் மற்ற மிருகங்களும் என்ன பேசின என்று தெரியுமா ? நீங்களே கேளுங்கள்.

சிங்கம் : மிருகங்களே! உங்கள் வாக்குறுதியை நீங்கள் காப்பாற்றுவீர்களேயானால், நான் உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்கிறேன். மனிதப் பாம்புகள், தேள்களிடத்தில் நான் பலமுறை கடிபட்டுள்ளேன். அவர்களைப்போல நீங்கள் அயோக்கியத்தனம் செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

மிருகங்கள் : ஓ எல்லாம் அறிந்த ஞானியே ! இறைவனை நம்புங்கள். அவனின் விதையை மீறி எதுவும் நடக்காது.

சிங்கம் : உண்மைதான். எனினும், முயற்சியை செய்வதும் பெருமானாரின் வழிமுறைதான். அல்லாஹ்வை நம்புங்கள். அதே சமயம், உங்கள் ஒட்டகத்தின் கால்களைக் கட்டிவையுங்கள் என்று உரத்த குரலில் பெருமானா நவின்றுள்ளார்கள்.

மிருகங்கள் : இறைவன்மீது நம்பிக்கை வைப்பதைவிட சிறந்த ஒரு முயற்சி இந்த உலகில் இருக்க முடியாது. எல்லாவற்றையுமே அவன் பொறுப்பில் விட்டுவிடுகின்ற நிலையைவிட அல்லாஹ்வுக்கு உகந்தது வேறெது ?

மனிதன் (தன் முயற்சியின் பலனாக) பாம்பிடமிருந்து தப்பித்து (இறைவிதிப்படி) ராட்சத மிருகத்தின் வாயில் அகப்பட்டுக்கொள்கிறான்.

மனிதன் தன் முயற்சி, அறிவின் செயல்பாடுகளின் விளைவால் தனக்கே வலைவிரித்துக்கொள்கிறான். எதை உயிர் என்று அவன் நினைத்தானோ, அதுவே அவன் உயிரைக் குடிப்பது என்பதை அவன் அறியவில்லை.

கதவுகளைப் பூட்டிய அவன், பகைவன் தனது வீட்டுக்கு உள்ளேயே இருந்ததை அறியவில்லை. பழிவாங்கத் துடித்த் ஃபிர் அவ்னின் கதை தெரியாதா ? ஆயிரக்கணக்கான அப்பாவிக் குழந்தைகளைஅவன் கொன்று குவித்தான். ஆனால் எந்த ஒரு குறிப்பிட்ட குழந்தையைக் கொல்ல நினைத்து அவன் அந்தக்காரியம் செய்தானோ, அந்தக் குழந்தை, பாதுகாப்பாக, ராஜ மரியாதையோடு, அவனது அந்தப் புரத்திலேயே வளர்ந்து வந்தது.

நமது பார்வையில் எண்ணற்ற குறைகள் உள்ளதால், நண்பனான அல்லாஹ்வின் பார்வையில் நம்முடைய பார்வையை அழித்து இல்லாமலாக்கிவிடுங்கள். பிறகு உங்கள் பார்வையெனபது அல்லாஹ்வுடையை பார்வையாகிவிடும். உங்கள் தேவைகளை முழுமையாக அடையமுடியும்.

எந்த இறைவன் வானத்திலிருந்து மழையைத் தருகிறானோ, அந்த இறைவன் நிச்சயமாக உங்களுக்கு தினசரி உணவையும் தருவான். நம்புங்கள்.

சிங்கம் : உண்மைதான். ஆனால் இறைவன் நமக்கு முன்னே ஒரு ஏணியைப் போட்டுள்ளான். அதில் உள்ள படிகளில் கால்வைத்து, படிப்படியாக நாம்தான் முன்னேற வேண்டும்.

கை கால்களை வைத்துக்கொண்டு, நாம் ஏன் முடவர்களைப் போல வாழவேண்டும் ? எதற்காக எஜமானன் தனது அடிமையின் கையில் மண் வெட்டியைக் கொடுக்கிறான் என்று அடிமை புரிந்துகொள்ள மாட்டானா ?

நீங்கள் சுதந்திரமாகச் செயல்படுகின்ற சக்தியை இறைவன் உங்களுக்கு அளித்துள்ளான். அதற்காக அவனுக்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களேயானால் அந்த சக்தி அதிகமாகும்.

நடுவீதியில் படுத்து உறங்கவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். வீடு வரும்வரை உறங்கலாகாது (பயணம் செய்ய வேண்டும்) என்று நான் சொல்கிறேன். பழுத்த மரத்தின் அடியில் வேண்டுமானால் படுத்து உறங்குங்கள். உங்கள் பயணக் களைப்பும் பசியும் தீர. காற்றடிக்கும்போதெல்லாம் அது கனிவகைகளைக் கொட்டும். அது உங்கள் பயணம் தொடர உதவும். இதைப்புரிந்துகொள்ளாத தலையெல்லாம் தலையல்ல, வால்தான்.

இறைவன்மீது நம்பிக்கை வைப்பதென்றால், அவன் தந்த வேலையின் மீது நம்பிக்கை வைப்பதுதான். விதையை நீங்கள்தான் விதைக்க வேண்டும். அறுவடையைப் பற்றிய கவலையை அல்லாஹ்விடம் விடுங்கள்.

மிருகங்கள் : பேராசை கொண்டு பல விதைகளை விதைத்த மனிதர்கள் எத்தனையோபேர் உண்டு. அவர்களில் எத்தனைபேர் வாழ்ந்தார்கள் ? ஆனால் அவர்களுக்கென்று எதை இறைவன் விதித்தானோ அதற்குமேல் ஒரு குண்டுமணிகூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்களுடைய திறமைகளும் திட்டங்களும் என்னாயிற்று ?

ஒரு நாள் பகல் ஒரு மனிதன் சுலைமான் நபியவர்களின் சபைக்கு வந்தான். எனக்கு பயமாக உள்ளது. உயிரை வாங்கும் வானவராகிய இஸ்ராயீல் என்னை கோபமாக முறைத்துப் பார்த்தார். தயவுசெய்து காற்றுக்குக் கட்டளையிடுங்கள். என்னை இங்கிருந்து வெகு தொலைவில் உள்ள இந்திய நாட்டில் கொண்டுபோய் சேர்க்கச் சொல்லுங்கள். அங்கே நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று வேண்டினான்.

வறுமையைக் கண்டு பயந்து ஓடுவதும் அந்த மனிதனின் பயத்தைப் போன்றதுதான். பேராசையும் அதற்கான முயற்சியும் இந்தக்கதையில் வரும் இந்தியாவைப் போன்றது. அறிந்து கொள்ளுங்கள்.

அந்த மனிதனின் வேண்டுகோளை சுலைமான் நபியவர்களும் நிறைவேற்றினார்கள். மறு நாள் இஸ்ராயீலிடம், ‘ நேற்று அந்த மனிதரை முறைத்தீர்களா ? ‘ என்று கேட்டார்கள்.

‘இல்லையே! நேற்று நான் அவரை ஆச்சரியத்தோடல்லவா பார்த்தேன் ? அவரின் உயிரை இந்தியாவில் வைத்து இன்று வாங்கவேண்டுமென்று இறைவன் என்னைப் பணித்திருந்தான். ஆயிரம் சிறகுகள் கொண்டு அவர் பறந்தாலும் இந்தியா வெகு தூரமாயிற்றே… எப்படி அவர் அங்கு போய்ச்சேருவார் என்று வியப்பில் அல்லவா பார்த்தேன் ‘ என்றார் இஸ்ராயீல்!

இந்த உலகத்தின் எல்லா விஷயங்களையும் இந்த ரீதியில் அணுகுங்கள். கண்ணைத் திறந்து பாருங்கள். யாரிடமிருந்து நாம் தப்பித்து ஓட முடியும் ? நம்மிடமிருந்தேவா ? இறைவனிடமிருந்தா ?

சிங்கம் : சரிதான். எனினும் இறைத்தூதர்களும் உண்மையான நம்பிக்கை கொண்டவர்களும் எடுத்த முயற்சிகளை எண்ணிப் பாருங்கள். அவைகள் யாவும் அற்புதமானவை. அவர்கள் வைத்த கண்ணியில் சுவனத்துப் பறவைகளே சிக்கின. முயற்சி என்பது விதியை எதிர்ப்பதல்ல. ஏனெனில் முயற்சி என்பதே நமக்கு விதிக்கப்பட்டதுதான். ஆனால் இந்த உலக ஆதாயங்களைப் பெறுவதற்கான முயற்சிகள் யாவும் பயனற்றவை. இந்த உலகைத் துறப்பதற்கான முயற்சிகள் யாவும் இறைவனால் தூண்டப்பெறுபவை.

சிறையில் அகப்பட்ட கைதி, அதில் குழி ஒன்றைத் தோண்டி, அதன் வழியே தப்பிக்க முயன்றால் அது சரியான முயற்சியாகும். குழியை அடைக்க முயல்வது முட்டாளதனமாகும்.

இந்த உலகம் என்பது ஒரு சிறை. நாமனைவரும் கைதிகள். குழி தோண்டி சீக்கிரமே தப்பித்துக் கொள்ளுங்கள். இந்த உலகம் என்பது என்ன ? இறைவனை மறந்திருக்கும் ஒரு இடம்.

படகினுள் நீரிருந்தால் அது படகின் அழிவு. படகுக்குக் கீழே இருந்தால் அது படகுக்கு ஆதரவு. சாலைகளெல்லாம் தங்கத்தால் செய்யப்பட்ட ராஜ்ஜியத்தை ஆண்ட நபி சுலைமான் தன்னை ஒரு ஏழை என்றே அழைத்துக் கொண்டார்கள். இந்த உலக ஆசைகளைத் துறந்ததன் பொருட்டு.

காற்று நிரம்பிய வாயடைக்கப்பட்ட பாட்டில் நீரின் மேலே மிதக்கும். வறுமையின் காற்று நிரம்பியவர்களெல்லாம் இந்த உலகம் என்ற தண்ணீரின் மேல்மட்டத்தில்தான் மிதப்பார்கள். எனவே, உங்கள் இதயத்தின் வாயை அடையுங்கள். உள்ளேயுள்ள காற்றுப்புழைகொண்டு அதை நிரப்புங்கள். முயற்சி என்பது நிஜம். நோய்களையும் மருந்துகளையும் போல. முயற்சி தேவையில்லை என்று வாதிடுவதும் ஒரு முயற்சியே.

0 0 0

சிங்கத்தோடு வாதட முடியாத மிருகங்கள் தவறாமல் தினசரி உணவை சிங்கத்துக்கு அனுப்பி விடுவதாக உறுதியளித்தன. குலுக்கல் முறையில் யார் பெயர் வருகிறதோ அந்த மிருகமே சிங்கத்தின் அன்றைய உணவு என்ற அடிப்படையில் முயலின் முறை வந்தது.

முயல் : எவ்வளவு காலம்தான் நாம் இந்த அநியாயத்தை சகிப்பது ? நான் என் உபாயத்தின் மூலம் உங்களையெல்லாம் தப்பிக்க வைப்பேன். அது நம் சந்ததிகளுக்கும் நல்வழி வகுக்கும்.

மிருகங்கள் : உண்மைக்காகவும் நேர்மைக்காகவும் நாம் இதுவரை நம் உயிர்களைத் தியாகம் செய்து வருகிறோம். இப்போது நீ கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டாம்.

முயல் : நண்பர்களே! எனக்கு விதிவிலக்கு அளியுங்கள். என் பேச்சைக் கேளுங்கள். நாம் அனைவரும் காப்பாற்றப்படுவோம். ஒவ்வொரு இறைத்தூதரும் தம்முடைய மக்களை இப்படித்தான் காப்பாற்றினார்.

மிருகங்கள் : முயலே, பிடித்த முயலுக்கு மூனு கால் என்று வாதிடாதே. முட்டாளே! உன்னைவிட பெரியவர்களுக்குத் தோன்றாதது உனக்கு எப்படித் தோன்றமுடியும் ?

முயல் : சகோதரர்களே! இறைவன் தான் எனக்கு இந்த உதிப்பைக் கொடுத்தான். இந்த பலவீனமாவனுக்கு எல்லாம் வல்ல இறைவனிடமிருந்து வந்த பலமான அறிவுரை! இந்த சின்னவனுக்கு அந்த பெரியவனிடமிருந்து வந்த பேருரை!

தேனீக்களுக்கு இறைவன் எதைக்கற்றுக் கொடுத்தானோ, அதை சிங்கமோ காட்டுக் கழுதையோ அறியுமா என்ன ? தேன் நிரம்பிய வீட்டை தேனீ கட்டுகிறதென்றால், அந்த அறிவின் கதவுகளை அதற்கு ஆண்டவே திறந்து வைத்தான். பட்டுப்புழுவுக்கு இறைவன் கற்றுக்கொடுத்த அறிவு எந்த யானைக்காவது தெரியுமா ?

மண்ணால் படைக்கப்பட்ட ஆதம் (நேரடியாக) இறைவனிடமிருந்தே அறிவு பெற்றார்கள். அந்த அறிவின் கதிர்கள் ஏழு வாங்களையும் ஏழு உலகங்களையும் சென்றடைந்தன.

உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள். உயிர் இன்றி உருவத்தில் ஒன்றுமில்லை. உருவத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் அஹ்மதும் அபூஜஹ்லும் மனிதர்களே. எனவே, எல்லாம் ஞானத்தைப் பொறுத்ததே. உண்மையான அறிவென்பது இறைத்தூதர் சுலைமானுடைய ராஜ்ஜிய முத்திரை. இந்த உலகம் முழுவதும் உடலானால் அறிவே அதன் உயிராகும்.

மனிதனுக்குள்ள சிறப்பெல்லாம் அறிவை வைத்துத்தான். அதன் பொருட்டுத்தான், நீர், நிலம் வாழ் பிராணிகள் யாவும் அவனுக்கு அடங்கிப் போகின்றன. சிங்கமும் சிறுத்தையும் அவனுக்கு பயப்படுகின்றன. பரியும் பேயும் அவனைக் கண்டு ஓடுகின்றன. ஆனால் மனிதனுக்கு ரகசியமான எதிரிகள் நிறைய உண்டு. ஆற்றின் ஆழத்தில் உள்ள முள் பாதத்தில் குத்தி காயப்படுத்தும்போதுதான் அது இருப்பதே தெரியும்.

எனவே, உங்கள் புறப்புலன்களை மீறிய அறிவை அடையும் காலம்வரை காத்திருங்கள். அப்போதுதான் மறைந்திருப்பவற்றையெல்லாம் நீங்கள் காணமுடியும். பிரச்சனைகள் தீரும். அப்போதுதான், யாருடைய வார்த்தையை நீங்கள் நிராகரிக்கிறீர்கள், யாரை நீங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளீர்கள் என்பது விளங்கும்.

மிருகங்கள் : அப்படியானால், உன் மனதில் உள்ள திட்டம்தான் என்ன என்று சொல்லேன்.

முயல் : எல்லா ரகசியங்களையும் ஒருவர் சொல்லிவிடக் கூடாது. சமயங்களில் ஒற்றைப்படை எண்கள் ரெட்டைப்படையாகவும், ரெட்டைப்படை ஒற்றைப்படையாகவும் மாறிவிடும்.

உங்கள் ஏமாளித்தனத்தில், கண்ணாடிமுன் நின்று நீங்கள் பேசினாலும் சரி, உங்கள் வார்த்தைகளின் காற்றால் கண்ணாடி மங்கிவிடும். நீங்கள் போகின்ற இடம், உங்கள் செல்வம், உங்கள் நம்பிக்கை இவை மூன்றையும் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது. ஏனெனில், இந்த மூன்றிற்கும் பல எதிரிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

காசிம் நபிகூட குறிப்புகளில்தான் பேசுவார்கள். அவர்களுடைய வார்த்தையின் உண்மையான பொருளை புரிந்துகொள்ளாமலேயே, தோழர்கள் பதிலளிப்பார்கள். பெருமானார் தனது கருத்தை ஒரு கதைக்குள் சுற்றிச் சொல்லுவார்கள். கேட்கும் பகைவருக்கோ, தலையும் புரியாது, வாலும் புரியாது. தனது உட்கருத்தின் வாசனையை பகைவர் முகர்ந்து பார்க்கும் முன்பே, அவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான பதிலை, அவர்களுக்கே தெரியாமல் பெற்றுவிடுவார்கள் பெருமானார் !

இவ்வாறு பேசிய முயல், பின் வேண்டுமென்றே தாமதமாக சிங்கத்திடம் சென்றது.

— தொடர்ச்சி அடுத்த வாரம்…

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி