ரெ கார்த்திகேசு
மலேசிய இலக்கிய நிகழ்வுகள் சிலவற்றைத் திண்ணையில் பகிர்ந்துகொள்ள விருப்பம்.
1. பி.ஏ.கே. வருகை.
பி.ஏ.கிருஷ்ணனின் அமெரிக்க வருகை பற்றி பல அன்பர்கள் எழுதியிருந்தார்கள்.
அவர் அமெரிக்கா போகுமுன் மலேசியா வந்திருந்தார். இரா. முருகனின் அறிமுகத்தால் அவர் வருகை பினாங்குக்கும் அமைந்தது.
‘புலி நகக் கொன்றை ‘ வழியாக மட்டுமே அவர் எனக்கு அறிமுகம். என்னை அவருக்குத் தெரியாது. பினாங்கு என்னும் இந்த அழகிய தீவுக்கு வர நான்
முருகன் மூலம் கிடைத்த ஒரு டிக்கெட் மட்டுமே. ஆகவே எங்கள் தொடர்பு துடைத்த புதுக் கரும் பலகை போலத் தொடங்கிற்று. ஆனால் விரைவில் அந்தக் கரும்பலகை புதிய கருத்துக்களால் நிறைந்து வழிந்தது.
கிட்டத்தட்ட அமெரிக்க சந்திப்பின் போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள்தாம்.
ஆகவே நான் அவற்றைத் திரும்ப கூற வேண்டியதில்லை. கூற வேண்டிய இரண்டு
விஷயங்கள்:
மார்க்சிசத்திற்கு இனி வாழ்வில்லை என்பது எனது கருத்து; மூலதனத்துவத்துக்கு ஒரு மாற்று அமைப்பு வரலாம். ஆனால் அது மார்க்சிசமாக இருக்காது என்பேன். ஆனால் அவர் இன்னும் மார்க்சிசத்திற்கு வாழ்வுண்டு என்று நம்புகிறார். ( ‘மார்க்சிசம் ‘ என்னும் பெயரே இனி வரலாற்றுக்கு மட்டுமே உரியது என்பது எனது நம்பிக்கை.)
இரண்டாவது, இந்தியாவில் ஊழல் ஒழிப்பு நிறுவனம் (அவர் அதில் ஓர் உயர் அதிகாரி)
பயனற்றது என்ற என் கருத்திற்கு அவர் பதில். அது பயனுள்ளது; அது இருப்பதினால்
ஊழல் மடை திறந்த வெள்ளமாகப் பெருகுவதைத் தடுக்க முடிகிறது என்பது. கிண்ணம்
பாதி நிறைந்திருக்கிறதா, பாதி காலியாகவிருக்கிறதா என்ற கேள்வி போலத்தான் இது.
எங்கள் தீவின் பழமையான Botanical Garden-இல் நடப்பதற்குக் காலை 5.30-க்குப் போனோம். இருட்டோ இருட்டு. 6.30 வரை பாதி இருளில்தான் நடந்தோம். ஆனால்
ஒளி பாய்ச்சும் கருத்துக்கள். கூட்டம் கூட்டமாக சலசலவென்று சீனர்கள் பேசிக் பேசிக்கொள்வதின் மத்தியில் எங்கள் தமிழாங்கிலப் பேச்சு பலரைத் தலை திரும்பிப் பார்க்க வைத்தது. நேரம் ஓடியது தெரியவில்லை.
பினாங்கின் கடற்கரைகள், Goddess of Mercy-இன் பிரம்மாண்டமான சிலை, சயன புத்தர், தண்ணீர் மலை முருகன் எல்லாரும் பி.ஏ.கே.-யை சேவித்துக் கொண்டார்கள்.
இயற்கை செழிப்பும் இலக்கிய வறட்சியும் உள்ள பினாங்கில் பி.ஏ.கே.-யின்
சந்திப்பு ஒரு இலக்கிய நீரூற்றாய் மனதில் நிற்கிறது.
பி.ஏ.கே.யுடன் அவருடைய அன்பு மனைவியும் கட்டைப் பிரமச்சாரி மைத்துணரும் வந்திருந்தார்கள். எங்கள் உரையாடல்களை அவர்கள் அதிகம் பகிர்ந்து கொள்ளாவிட்டாலும் என் பேரப்பிள்ளைகளின் குறும்புகளையும் என் மனைவியின் உபசரிப்பையும் பகிர்ந்து கொண்டார்கள்.
2. நாவல் போட்டி முடிவுகள்:
ஓராண்டுக்கு முந்தி மலேசிய எழுத்தாளர் சங்கமும் அஸ்ட்ரோ-வானவில் தொலைக்காட்சியும் தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கமும் சேர்ந்து மலேசியத் தமிழ் நாவல் போட்டி ஒன்றினை நடத்தின. அந்த நாவல் போட்டி முடிவுற்று அதற்கான முடிவுகள் அறிவிப்பும் பரிசளிப்பும் நவம்பர் இறுதியில் நடைபெற்றன.
போட்டிக்கு 34 நாவல்கள் வந்திருந்தன. இந்த நாவல்களை நான்கு உள்ளூர் இலக்கியவாதிகளுக்குப் பிரித்துக் கொடுத்து பதர் நீக்கம் செய்யப்பட்டு 16 நாவல்கள் இரண்டாம் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. (எல்லா நிலைகளிலும் நீதிபதிகளுக்கு எழுத்தாளர்களின் பெயர்கள் அறிவிக்கப் படவில்லை. நாவல்கள் கணினிப் பிரதிகளாக சமர்ப்பிக்கப் பட வேண்டும் என்னும் விதி இருந்ததால் கையெழுத்தை வைத்துக் கண்டு பிடிக்கும் சாத்தியமும் இல்லை.) இரண்டாம் கட்ட நீதிபதிகளாக டாக்டர் சண்முக சிவா, முனைவர் கிருஷ்ணன் மணியம், முனைவர் முல்லை இராமையா மற்றும் நான் இருந்தோம். கதையின் கரு, கதைப்பின்னல், நடை, உத்திகள் என்று பிரித்து எண்கள் போடப்பட்டு பின்னர் நாங்கள் கூடிப்பேசி இணக்க அடிப்படையில் இவற்றை வரிசைப் படுத்தினோம்.
இந்த வரிசையில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த நான்கு நாவல்கள் மூன்றாம் கட்ட நீதிபதிகளுக்கு அனுப்பப் பட்டன. மூன்றாம் கட்டத்தில் தமிழக எழுத்தாளர்களான பிரபஞ்சன், சிவசங்கரி, திலீப் குமார் ஆகியோரும் மலேசியாவைச் சேர்ந்த முனைவர் சபாபதியும் நீதிபதிகளாக இருந்தார்கள். இவர்கள் அனைவரும் குவால லும்பூருக்கு வரவழைக்கப்பட்டு தங்கள் கருத்துக்களை ரகசியக் கூட்டம் ஒன்றில் பரிமாறிக் கொண்டு இணக்க அடிப்படையில் இவற்றை தரவரிசைப் படுத்திக் கொடுத்தார்கள்:
முதல் பரிசு; டாக்டர் பி.பி. நாராயணன் விருது: ‘லங்காட் நதிக்கரையில் ‘ – எழுதியவர் அ. ரங்கசாமி. (மலேசிய ரிங்கிட் 10,000.) பழுத்த எழுத்தாளரான ரங்கசாமி இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் மலேசியாவின் இந்தியர் வாழ்வை காமுனிச பயங்கரவாதப் பின்னணியில் எழுதியிருந்தார். சுவையான வரலாற்று நிகழ்வுகளும் பிசிறில்லாத கதைப்பின்னலும் உடைய நல்ல நாவல்.
இரண்டாம் பரிசு: ‘மண் புழுக்கள் ‘ – எழுதியவர் சி.முத்துசாமி. (மலேசிய ரிங்கிட் 7,500.) மலேசியத் தோட்டப் புற வாழ்க்கையை கொஞ்சம் கட்டுடைப்புப் பாணியில் சொல்லும் நல்ல நாவல். இவரும் நாடறிந்த மூத்த எழுத்தாளர்.
மூன்றாம் பரிசு: ‘ஞானத்தின் வாசலிலே ‘ – எழுதியவர் நவீன். (மலேசிய ரிங்கிட் 5,000.)
புதிய இளம் எழுத்தாளர். ஓர் இளைஞனின் மன உணர்வுகளைச் சொல்லும் நல்ல முயற்சி.
நான்காம் பரிசு: ‘நொய்வப் பூக்கள் ‘ – எழுதியவர் கோ. புண்ணியவான்.( மலேசிய ரிங்கிட் 2,500.) நாடறிந்த எழுத்தாளர். மலேசியத் தோட்டப்புற வாழ்க்கை பற்றிய கதை. (நொய்வம் = ரப்பர்).
மற்ற 12 நாவல்களுக்கும் ஆறுதல் பரிசாக 800 ரிங்கிட் மதிப்புடைய சலவை இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழா Palace of the Golden Horses என்னும் ஆறு நட்சத்திர தங்கும் விடுதியில் பிரமுகர்கள் முன்னால் நடை பெற்றது. அதில் பிரபஞ்சன், சிவசங்கரி, திலிப் குமார் ஆகியோர் உரையாற்றினார்கள். பிரபஞ்சனும் திலிப் குமாரும் இன்றைய தமிழ் நாவல் பற்றிப் பேச, சிவசங்கரி இந்திய நாவல்கள் பற்றிய அழகிய உரையாற்றினார். முனைவர் சபாபதி பரிசு பெற்ற நான்கு நாவல்கள் பற்றிக் கருத்துரை ஆற்றினார்.
பரிசு பெற்ற நாவல்கள் பதிப்பிக்கப்படுவது பற்றி இன்னும் எந்தப் பேச்சும் இல்லை. பதிப்பிக்கப்பட்டால் மலேசிய நாவல் உலகிற்கு நல்ல சேர்ப்புக்களாக இருக்கும்.
இவற்றைப் படித்து மதிப்பெண் போட்டுள்ள தமிழக / புதுவை எழுத்தாளர்கள் பாராட்டியே பேசினார்கள். ஆனால் இவை பற்றித் தமிழக இதழ்களில் எழுதி அறிமுகப் படுத்த இவர்களுக்கு மனம் வருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
3. தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆண்டு தோறும் மலேசியாவில் பதிப்பக்கப்படும் புத்தகங்களில் சிறந்த ஒன்றுக்கு தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசை அளித்து வருகிறது. காலஞ் சென்ற தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் மலேசிய இந்திய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவர் பெயரில் அவர் குடும்பம் நிறுவியுள்ள அறக்கட்டளை இந்தப் பரிசை வழங்குகிறது.
1998 முதல் வழங்கப்பட்டு வரும் இந்தப் பரிசு முதலில் குறிப்பிட்ட ஆண்டில் வெளிவந்த எல்லா புத்தகங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு அவற்றுள் சிறந்த ஒன்றுக்குப் பரிசு வழங்கியது. ஆனால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு குறிப்பிட்ட வகை தேர்ந்தெடுக்கப்பட்டு (நாவல்/சிறுகதை/கவிதை/கட்டுரை) அந்த வகை நூல்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த ஆண்டில் விடுபட்ட மற்ற வகைகள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்த வகைத் தொகுதிகளில் பரிசீலிக்கப்படும். ஆகவே இது முழுமையாகச் செயல் படும் போது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு குறிப்பிட்ட வகை இலக்கியம் முந்தைய நான்கு ஆண்டுகளில் வெளி வந்த அந்த வகை இலக்கிய நூல்கள் அனைத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்.
2005-ஆம் ஆண்டு சிறுகதைக்கான ஆண்டு. 2003/2004 ஆகிய ஆண்டுகளில் வெளிவந்த அனைத்துச் சிறுகதைத் தொகுப்புகளும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றுள் 2003-இல் வெளிவந்த எனது (ரெ.கார்த்திகேசு) ‘ஊசி இலை மரம் ‘ என்னும் தொகுப்புக்கு இந்தப் பரிசு வழங்கப் பட்டுள்ளது. ஒரு விடுதியில் நடை பெற்ற விழாவில் சான்றிதழும் 7,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.
சக எழுத்தாளரான நா.மகேஸ்வரி எழுதிய ‘நா.மகேஸ்வரியின் கதைகள் ‘ என்னும் நூலுக்கு ஆறுதல் பரிசாக 2,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியான செய்தியையும் இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.
அன்புடன்
ரெ.கா.
- வனத்தின் அழைப்பு – அஸ்வகோஸ்: ‘மகனும்,ஈ கலைத்தலும் ‘ (சிறு குறிப்பு)
- காலத்தை எரித்த சுடர் தொலைவிலிருக்கும் கவிதைகள் – சுந்தர ராமசாமியின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் அறிமுகம்
- சுப்ரபாரதி மணியனின் ஆதாரக்கவலைகள்
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – IV
- சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – III
- காளபைரவி, நாகவல்லி, சந்திரமுகி மற்றும் கொஞ்சம் உங்
- நியூ யார்க் திரைப்படவிழாவில் ‘ஒருத்தி ‘ திரைப்படம்
- வானகமே. . வையகமே. . .சுற்றுச் சூழலுக்கென்று முதன் முதலாக தமிழில் நடத்தப்படும் இலவச இரு மாத இதழ்
- புஷ்ஷாரே இணையகுசும்பனின் இலவசச் சேவை
- வெள்ளமும் நிவாரணமும்
- ராஜ் கவுதமன் எழுதிய ‘க. அயோத்திதாசர் ஆய்வுகள் ‘: ஒரு திறனாய்வு
- 108 வது கவிதை எங்கே ?
- ‘சொற்களிடமிருந்து மெளனங்களுக்குள் ‘
- மலேசிய இலக்கிய நிகழ்வுகள்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஜோன் எரிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து) (ஏழாம் காட்சி பாகம்-2)
- சோபா சக்தி: ‘ம் ‘ – அதிகாரம் கோலாச்சும்போது ‘ம் ‘ மக்கள் மொழியாகும்! ‘…. ‘, ம்…. ஆமா,ஓம்-ஓம்! ம்….இது ?
- சுந்தர ராமசாமியின் வாழ்க்கை -படிமங்கள் நிறைந்த அழகிய கவிதை!
- ஜெயமோகனின் காடு
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் உன்னத ஓவியக் கலைத்துவம் -5 (Ancient Great Egyptian Paintings)
- கீதாஞ்சலி (47) – எழிலான வளைகாப்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 63 -29. பெருமிழலைக் குறும்ப நாயனார் புராணம்
- காட்சில்லா
- முரண்
- தீபாரயா
- நியூயார்க் நியூயார்க்
- அடித்து நொறுக்க வேண்டாமா ஆண்கள் படைத்த உலகை. ?
- மறுபக்கம்
- காலை