மலேசிய இலக்கியங்களின் சுய அடையாளம்.

This entry is part [part not set] of 30 in the series 20050616_Issue

ரெ. கார்த்திகேசு


தமிழிலக்கியத்தின் அனைத்துலக அடையாளங்களைப் பற்றி தமிழவன் கொண்டுள்ள அக்கறைக்கும், அந்த அக்கறைக்குள் மலேசியத் தமிழ் இலக்கியங்களையும் அவர் கணக்கில் எடுத்துக் கொண்டதற்கும் என் நன்றி (திண்ணை, ஜூன் 3).

தமிழவனின் மதிப்பீடு பற்றிகள் பற்றி நான் அதிகம் சர்ச்சை செய்யப் போவதில்லை. அவர் சொல்வதில் அதிகம் நான் ஒத்துப்போகும் கருத்துக்களே. னால் அதை இவ்வளவு மேம்போக்கான பார்வையில் செய்திருக்க வேண்டாம் என நினைக்கிறேன்.

மலேசியத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய அவரது கருத்து 1996-இல் வெளிவந்த மா.இராமையாவின் நூலை (அநேகமாக இந்த ஒரு நூலை மட்டுமே) வைத்துச் செய்யப்பட்டிருக்கிறது. அது தவிர மலேசிய தமிழ் எழுத்துலகு பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றிய எந்த முயற்சியும் தேவையில்லை என்பது போல அவர் செயற்பட்டிருக்கிறார். இந்த நூலில் கூட மலேசியாவில் எழுதப்படும் எழுத்து இந்த மண்ணின் அடையாளங்களையும் இயல்புகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதில் நாங்கள் கொண்டுள்ள அக்கறை பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது. நூலின் பெயரையே ‘நினைவிலிருந்து எழுதுகிறேன் ‘ என்று சொல்கிறவருக்கு நான் அத்தியாயமும் பக்கமும் சொல்லிப் பயனில்லை.

அவரின் ஒரு கருத்து தீவிரமாக மறுக்கத் தக்கது. இல்லாவிடில் வாசகர்களின் மனதில் அவர் ஏற்படுத்திய தோற்றப் பிழையைச் சரி செய்ய முடியாது:

‘மலேசிய – சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் அந்த மண்ணின் இயல்புக்கு ஏற்ற இலக்கியமாக வந்தால் உலகத் தமிழ் அடையாளம் அதன் அடிப்படைகளைக் காண எளிதாகும் ‘ என்கிறார். மலேசியாவில் வெளிவரும் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் கியவை மலேசிய மண்ணின் இயல்புக்கு ஏற்ற இலக்கியமாகத்தான் இன்று திகழ்கின்றன. அப்படி இல்லை என தமிழவன் ஊகம் செய்வதற்கு என்ன அடிப்படைகள் வைத்திருக்கிறார் என விளக்கினால் தேவலை.

மலேசியாவில் ஒரு இருபதாண்டுகளுக்கு முன் வரை தமிழர் வாழ்வு ரப்பர் தோட்டத்து கூலி வேலைகளின் அடையாளங்களைத்தான் தாங்கி இருந்தது. அந்த வாழ்க்கையை யதார்த்தம் குலையாமல் சித்தரிக்கும் கவிதைகள், சிறுகதைகள் ஏராளம். இவற்றில் பல நூல்களாக்கப்பட்டுள்ளன. இந்நூல்களில் பல தமிழ் நாட்டு நூலகங்களிலும் கிடைக்கும். அந்த வாழ்க்கையை மிக யதார்த்தமாகச் சித்தரிக்கும் நாவல்கள் சிலவும் வந்துள்ளன.

இந்த நடப்பு இருபதாண்டுகளில் தமிழர்கள் வாழ்வு பொருளாதார மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மலேசிய அரசாங்கமே நாட்டின் பொருளாதாரத்தை ஒரு விவசாயத் தன்மையிலிருந்து உற்பத்தித் தன்மைக்கு மாற்றியிருக்கிறது என்பதுதான். இந்த மாற்றத்தினால் தமிழர் வாழ்வில் ஏற்படும் சுகதுக்கங்களைக் கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நாவல் கியவை பேசி வருகின்றன.

அனைத்திலும் எங்கள் நாட்டின் இயல்புத் தன்மைதான் உண்டு. புத்திலக்கியத்தின் உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை தமிழ் நாட்டு இலக்கியத்தின் கருப்பொருள்களிலிருந்து நாங்கள் தொப்புள் கொடியறுத்துக் கொண்டு நீண்ட நாட்கள் கிவிட்டன.

மலேசியத் தமிழ் இலக்கியத்தை கூர்ந்து பார்த்து அறிந்தவர்களாக நான் சில தமிழக இலக்கியவாதிகளை அடையாளம் கூற முடியும். இவர்களில் இந்திரா பார்த்தசாரதி, மாலன், சுந்தர ராமசாமி, திலிப் குமார் கியோர் அடங்குவார்கள். எஸ்.பொ. எங்கள் நூல்களில் பலவற்றைப் பதிப்பித்தவராதலால் அவருக்கும் அறிமுகம் உண்டு. இவர்களில் சிலர் எங்கள் இலக்கியங்களில் வடிவத்தையும் சொல்முறையையும் பற்றிய குறைகளைப் பற்றிக் கூறியிருந்தாலும், எங்கள் நாட்டின் அடையாளத்தை விட்டுவிட்டு தமிழ் நாட்டின் இலக்கியங்களைப் பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று (இதுதான் இந்த இலக்கியங்களைப் படிக்காமலேயே தமிழவன் எடுத்துள்ள முடிவு எனக் கொள்கிறேன்) சொன்னதில்லை.

எங்கள் நாட்டில் எழுதப்படும் தமிழ் இலக்கியம் என்ன அடையாளங்களைக் கொண்டிருக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ள தமிழவன் எந்த முயற்சியையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் தன் கருத்துக்களைத் தீர்க்கமாக முன்வைப்பதில் அவருக்கு எந்தத் தயக்கமும் இல்லை. தமிழவன் ராய்ச்சியாளர். ராய்ச்சியின் கொள்கைகள் என்ன என்பதை நான் சொல்லி அவர் அறிந்து கொள்ள வேண்டியதில்லை.

அவருக்கு எங்கள் இலக்கியம் பற்றி அறிந்து கொள்ளும் வேட்கை இருக்குமானால் இந்த மண்ணிலேயே பிறந்து இந்த மண்ணிலேயே தமிழ் படித்து இந்த மண்ணின் இயல்போடு தமிழில் நீண்ட நாள் எழுதிக் கொண்டிருக்கும் இந்த எளிய எழுத்தாளனோடு தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,

ரெ.கார்த்திகேசு

karthi@myjaring.net.

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு