மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகள் (2000ஆம் ஆண்டுகள்)

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ரெ.கார்த்திகேசு


மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றம் அநேகமாக இந்த இலக்கிய வடிவம் தமிழ்நாட்டில் தோன்றிய காலத்திலேயே தோன்றி விட்டது. மலேசியாவில் தமிழ்ச் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஆய்வாளர்களால் ஏற்கனவே விரிவாக பதியப்பட்டுள்ளன. (எ-கா.: மா. இராமையா: மலேசியத் தமிழ் இலக்கியக் களஞ்சியம்; பால பாஸ்கரன்: மலேசியத் தமிழ்ச் சிறுகதை; வ.முனியன்: மலேசியத் தமிழ்ச் சிறுகதைகள் (மலேசியத் தமிழ் இலக்கியம் 2007; பக்.177)) முதலியவை.
இந்தக் கட்டுரையில் கடந்த பத்தாண்டுகளில் மலேசியாவில் சிறுகதை இலக்கியத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சிகள் பற்றியே சுருக்கமாகக் காணவிருக்கிறோம். அதுவும் இந்தப் பத்தாண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட முக்கிய சிறுகதைத் தொகுப்புக்களே இங்கு ஆய்வுக்காகவும் தகவலுக்காகவும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

மலேசிய வாழ்வின் பல்வேறு கூறுகளை கற்பனை வழியில் சிறுகதைகளாகப் பதிந்துவைக்கும் பணி 2000ஆம் ஆண்டுகளிலும் சிறப்பாகத் தொடர்ந்தது. பல முக்கிய எழுத்தாளர்கள் தங்கள் சிறுகதைத் தொகுப்புக்களைப் பதிப்பித்தார்கள்.

“பயாஸ்கோப்புக்காரனும் வான்கோழிகளும்” (சை.பீர்முகம்மது)

அந்த வகையில் மிகவும் குறிப்பிடத்தக்கப் படைப்பாக சை.பீர் முகமதுவின் “பயாஸ்கோப்புக்காரனும் வான்கோழிகளும்” (2008, தங்கமீன் பதிப்பகம்) (சுருக்கமாக ப.வா.) அமைந்தது. சை.பீர் மலேசியாவில் புகழ் வாய்ந்த இலக்கியவாதி. மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் தம்மைக் கரைத்துக்கொண்டவர். தாமே சிறந்த எழுத்தாளராகவும் கவிஞராகவும் இருந்து படைப்புக்களைக் கடந்த 50 ஆண்டுகளாககத் தொடர்ந்து தந்திருப்பதுடன் மற்ற எழுத்தாளர்களை விமர்சித்தும் ஊக்குவித்தும் கிரியா ஊக்கியாகவும் இருந்துள்ளார். இலக்கியக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்குவார். தமிழ்நாட்டு இலக்கியவாதிகளுடனும் அவருக்கு நெருங்கிய தொடர்புண்டு. மலேசிய இலக்கிய உலகை மேலும் வளப்படுத்த அவர் தமிழ்நாட்டு இலக்கியவாதிகள் பலரை அழைத்து வந்து இங்கே கலந்துரையாடல்கள் நடத்தியுள்ளார். அவர்களுள் முக்கியமானவர் ஜெயகாந்தன்.

இந்த ப.வா. தொகுப்பு சை. பீரின் இலக்கியப் பன்முகங்களைக் காட்டும் தொகுப்பாகும். வாசகர்களுக்கு முக்கியமான சமுதாயக் கருத்துக்களை உணர்த்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட அவரின் தொடக்க காலக் கதைகளும், கதைக் கலையில் அவர் வளர்ந்த பிறகு உருவான கலைப் படைப்புக்களும் இதில் அடங்கியுள்ளன. உதாரணமாக தொகுப்பின் முதல் கதையான “சிவப்பு விளக்கு” மலேசியாவின் முதன்மை இனங்கள் மூன்றின் வரலாற்று உண்மைகளைக் குறியீடாகச் சொல்லும் கதை. ஏழை மலாய்க்காரர்கள் அரசாங்கத்தின் அரவணைப்பில் முன்னேற, ஏழைச் சீனர்கள் அவர்களின் சொந்த இனச் சகோதரர்களின் அணைப்பிலும் சொந்த உழைப்பிலும் முன்னேற, தமிழர்கள் மட்டுமே எந்த ஆதரவும் இல்லாமல் உழைப்பின் சிறப்பையும் அறியாமல் அனாதைகளாக உழல்வதை இந்தக் கதை மூன்று கதாபாத்திரங்களை மையமாக வைத்துச் சொல்லுகிறது. மிகவும் ஆழமான, இன்றும் உண்மையாக இருக்கும் சமுதாய பொருளாதாரச் செய்தியை இது தாங்கியுள்ளது.
இது போன்றே “உண்டியல்”, “நெஞ்சின்நிறம்” போன்ற கதைகளும் தீவிரமான சமுதாயச் செய்திகளைச் சொல்வனவாக இருக்கின்றன.

ஆனால் பீர் முகமதுவின் அண்மைய கதைகள் இந்தச் சமுதாயச் செய்தி என்ற சுமையைத் தோளில் இருந்து இறக்கிவிட்டன என்றே தோன்றுகிறது. உதாரணமாக தலைப்புக் கதையான “”பயாஸ்கோப்புக்காரனும் வான்கோழியும்” என்ற கதையில் இந்த பயாஸ்கோப் காட்டுகிற மாரிக்கும் அவன் மனைவிக்கும் அவன் நண்பர்களுக்கும் உள்ள ஒரு நயமான உறவே அதிகம் பேசப்படுகிறது. மனித நேயம், அன்பு ஆகிய பொது விழுமியங்களைத் தவிர்த்து சமுதாய விழுமியம் என்ற ஒன்று இதில் இல்லை. “இப்படி இருக்க வேண்டிய தேவையில்லை” என்ற விடுதலை உணர்வே எழுத்தாளர் சிறுகதையின் வடிவத்திலும், உட்செறிவிலும் கவனம் செலுத்த பெரும் வாய்ப்பளிக்கிறது.

ஆனால் இந்தக் கலைநயம் குலையாமல் ஒரு முக்கியச் சமுதாயச் செய்தியையும் கொண்டு உருவாகியிருக்கும் முழுமையான படைப்பு “பாதுகை”. பாதுகை என்பது இங்கு இராமனின் பாதுகையே ஆகும். நமது காவியமான இராமாயணத்தில் இராமன் காட்டுக்குப் போயிருந்த 14 ஆண்டுகளின் போது அது அரியணையில் இருந்து அயோத்தியை ஆண்டது என்பது நாம் அறிந்த தொன்மம்.

இந்தத் தொன்மத்தை கதைக்குத் தலைப்பாகவும் ஒரு முக்கிய குறியீடாகவும் சை பீர் ஆக்கியுள்ளார்.
ஆனால் ஒரு நவீன எழுத்தாளனுக்குத் தேவையான தன்மையான தொன்மைத்தை உடைத்துப் புதுப்பித்தல் என்னும் தன்மைக்கேற்ப, இந்தக் கதையிலும் அந்தத் தொன்மம் உடைக்கப்பட்டு இந்தத் தலைமுறை தமிழர் வாழ்க்கையில் அது சீரழிவதை அவர் காட்டுகிறார். பள்ளிக்கூடம் போகும் தன் தங்கையின் காலணிகளில் ஓட்டை விழுந்து விட, அவள் பள்ளிக்கூடத்தில் ஆசிரியரின் தண்டனைக்கும் கேலிக்கும் உள்ளாகியிருக்கும் வேளையில், அவளுக்கு ஒரு புதுக் காலணி வாங்கிக் கொடுக்க நேரமும் முயற்சியும் இல்லாத அவளுடைய அண்ணன், பெரு முயற்சி எடுத்து வீடியோ கடைக்குச் சென்று சம்பூர்ண ராமாயணம் படக் கேசட் வாங்கிவந்து அதில் சிவாஜி கணேசனின் நடிப்பை வியந்து பாராட்டி, “பாதுகையே துணையாகும்” என்ற பாட்டை ஓயாமல் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறான்.

ஒரு தொன்மம், எவ்வாறு புதிய சூழ்நிலையில் அதன் பொருட்செறிவு குலையாமல் நவீன வாழ்க்கையைக் குறிக்கப் பயன் படுத்தப்பட முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதையாகும்.

“மு.அன்புச்செல்வனின் அரைநூற்றாண்டுச் சிறுகதைகள்”

சை.பீரைப் போலவே மலேசியாவின் சிறுகதையுலகில் தம் பெயரை நிலைநாட்டியுள்ள இன்னுமொரு எழுத்தாளர் மு.அன்புச்செல்வன். தாம் கடந்த அரை நூற்றாண்டுகளில் எழுதிய சிறந்த சிறுகதைகளைப் பொறுக்கி “மு.அன்புச்செல்வனின் அரைநூற்றாண்டுச் சிறுகதைகள்” (2008, மதன் எண்டர்பிரைஸ்) என்னும் தலைப்பில் வெளியிட்டிருக்கிறார்.

அன்புச்செல்வனும் மலேசிய வாழ்க்கையை யதார்த்தமாகச் சிறுகதைகளில் பதியும் நல்ல எழுத்தாளர். பல காலம் எழுதிப் பண்பட்ட எழுத்து அவருடையது. மலேசியப் பொருளாதாரம், கல்வியின் அருமை, கூட்டுறவின் உயர்வு இப்படியாக வாசகர்களுக்குப் பிரச்சாரம் செய்யும் கதைகளும் அன்புச்செல்வனின் படைப்புக்களில் உண்டு. இவற்றில் பல கதைகள் நல்ல கலைநயத்துடனும் வந்திருக்கின்றன. ஆனால் ஏதாகிலும் ஒரு நல்ல கருத்தை வாசகனுக்குச் சொல்லாமல் கதைக்குப் பிரயோஜனமில்லை என்னும் சுமையை இந்தக் கதைகள் ஏந்தியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்.

ஆனால் வாழ்வின் மிக நயமான தருணங்களை சரியான வார்த்தைகளில் பதிந்து வைக்கும் அவருடைய கதைகள் சிலவும் இந்தத் தொகுப்பில் உள்ளன. உதாரணத்துக்கு “அந்தந்த வயதில்” கதையைச் சொல்லலாம். ஓய்வு பெற்ற ஒரு மனிதர் தன் குடும்பத்தார் மேல் அதிருப்தி கொள்கிறார். தம்மை மதிப்பதில்லை என்ற கோபத்தோடு வாழ்கிறார். ஆனால் தன்னைப்போல் ஓய்வு பெற்ற ஒரு நண்பரையும் குடும்பத்தாரையும் போய்ப் பார்த்த போதுதான் அவர்களின் தான்தோன்றி வாழ்க்கைக்குத் தன் குடும்பமே மேல் என்ற உணர்வு அவருக்கு வருகிறது. இந்த மனமாற்றத்தைச் சொல்ல அவர் தேர்ந்தெடுக்கிற சம்பவங்கள், சொற்கள் மிகப்பொருத்தமானவை.

தொன்மங்களைப் பயன்படுத்தி நிதர்சன வாழ்க்கையை வாசகர்களுக்கு ஒரு முரணாகக் காட்டுவதிலும் அன்புச் செல்வன் சிறக்கிறார். “ஆண்ட பரம்பரை” கதையில் தமிழர்களின் இக்கால மூர்க்க உணர்வு பேசப்படுகிறது. ஆனால் நம் வரலாற்றில் மூர்க்கம் என்பது வீரமாக சேரன் செங்குட்டுவன் போன்றோர் மூலம் ஒளிர்ந்தது. அது இன்று வெறும் முரட்டுத்தனமாகக் ஆகியிருப்பதை குறியீட்டு ஒப்பீடுகளின் மூலம் காண்பிப்பது நல்ல சிறுகதை உத்தி.

“கம்பி மேல் நடக்கிறார்கள்” (ஆ.நாகப்பன்)

மலேசியாவில் தமிழரின் வாழ்நிலை மற்ற இனங்களுடன் ஒப்பிடும்போது தாழ்நிலையில் இருக்கிறது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்படும் கூறு. இது இரண்டு காரணங்களால் நிகழ்கிறது. தலையாய காரணம் தமிழர்களில் இடை மட்டும் கீழ்த் தட்டுக்களில் இருப்பவர்கள் ஊக்கமும் முயற்சியும் இல்லாமல் இருப்பது. ஏனெனில் ஊக்கமும் முயற்சியும் உள்ளவர்கள் முன்னேற மலேசியாவில் சமுதாய வாய்ப்புக்கள் நிறையவே உண்டு. இரண்டாம் காரணம் அரசாங்கத்தின் அலட்சியம். மலாய்க்காரர்களைத் திட்டமிட்டு முன்னேற்றுகின்ற அரசாங்கம், தமிழர்களின் பொருளாதார நிலைபற்றிக் கொஞ்சமும் அக்கறை கொள்ளாமல் அலட்சியமாக இருப்பது.

சிறுகதைகளில் சமுதாய உணர்வு இருக்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு இவை இரண்டும்தான் கதைகளுக்கான முக்கிய கருக்கள். அந்தக் கருக்களை வரித்துக் கொண்டு எழுதுபவர்களில் முக்கியமானவர் ஆ. நாகப்பன். அவருடைய “கம்பி மேல் நடக்கிறார்கள்” (2006; சிவா எண்டர்பிரைஸ்) அவருடைய எழுத்துக்களுக்குச் சிறந்த உதாரணம்.

இந்தத் தலைப்புக் கதையில் பல்லினப் பிள்ளைகள் படிக்கும் ஒரு தேசிய மொழிப் பள்ளியில் உள்ள தமிழ் இன ஆசிரியர், தன் இன மக்கள் படிப்பிலும் ஒழுங்கிலும் பின் தங்கி தலைமை ஆசிரியரால் தண்டிக்கப்படுவதைப் பார்த்து இரக்கப்படுகிறார். இந்த மாணவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்னும் பின்னணியைக் கண்டறிய அவர்கள் வீட்டுக்குப் போகிறார். அங்கேதான் குடும்பத்தின் வறுமையும் இயலாமையும் அவலமும் தெரியவருகிறது. தோட்டத்தில் வேலை செய்யும் அப்பனுக்கு உடல் நலம் இல்லை; சரியான சம்பளம் இல்லை. அதைக் கேட்க வேண்டிய தொழிற் சங்கம் முதலாளிக்கு வாலாட்டி நிற்கிறது. அரசாங்கம் இரண்டு தரப்பினரையும் கண்டு கொள்வதில்லை. இந்த அவலத்துக்கு எந்தத் தீர்வும் இல்லை. இறுதியில் பலியாகுபவர்கள் தமிழர்கள்.

ஆனால் அரசாங்கக் கொள்கை வகுப்பில் புதிய பொருளாதாரக் கொள்கை எல்லாருக்கும் பொது என்றுதான் சொல்கிறார்கள் என்ற முரணில் கதையை முடிக்கிறார்.

ஒருவகை சோகம் கவியும் முடிவுதான். இந்தச் சோகக் கதையை தீவிரமாகச் சொன்னாலும் அதில் ஒரு கட்டுமானமும் கலை நயமும் உள்ளதால் அது சிறக்கிறது.

சமுதாயச் செய்திகளைச் சொல்ல வரும் நாகப்பனுக்கு, அந்தக் கதைகள் வெறும் பிரச்சாரங்களாக மாறிவிடாமல் கவனமாகப் பாதுகாக்க முடிகிறது. பாத்திரங்களின் வார்ப்பு, அவர்களுக்குள் உள்ள எண்ண ஒட்டம், சம்பவங்களை முறைப்படுத்தும் திறமை ஆகியவற்றால்தான் அவர் தமது கதையின் கலைத் தன்மையைக் காப்பாற்றுகிறார்.

ஆனால் சில வேளைகளில் அது அவரைக் கைவிடுவதும் உண்டு. உதாரணமாக “மறுபக்கம்” எனும் கதையில் அரசாங்க நிலத் திட்டத்துக்கு ஒரு இந்தியத் தம்பதிகள் போகிறார்கள். அங்கு போய் தங்களுக்குரிய வசதிகள் இல்லாததைப் பார்த்துச் சோர்ந்து போகிறார்கள். இதைப் பற்றி மட்டுமே பேசி, சோகத்தையும் ஏமாற்றத்தையும் பூசி இந்தக் கதை பொசுக்கென்று முடிந்து விடுகிறது. இந்தச் சம்பவக் கோவையைக் கதையாக்கும் முயற்சி இங்கு தோல்வியடைகிறது. அதே போல இந்த மக்களுக்கு ஏன் சிரமத்தை வென்று கிடைத்த நிலத்தையும் வாழ்வையும் வளப்படுத்தும் முன்னூக்கம் (pioneer spirit) இல்லாமல் போனது என்பதற்கும் எந்த விளக்கமும் இல்லை.

“சிறை”: கோ.புண்ணியவான்

மலேசியத் தமிழ் வாழ்க்கையை அதன் சுகங்கள், சிக்கல்கள், சோகங்களுடன் யதார்த்தமாக வடிக்கும் இன்னொரு சிறுகதை எழுத்தாளர் கோ.புண்ணியவான். அவரின் “சிறை” (2005, சுய பிரசுரம்) அவரது எழுத்துத் திறனுக்கு நல்ல எடுத்துக் காட்டு.

மலேசியக் கதைகளில் நீண்ட காலமாக தோட்டப்புறப் பின்னணியே இருந்து வந்தது. இதற்குக் காரணம் காலனித்துவ காலத்தில் இங்கு குடியேறிய தமிழ் மக்கள் தோட்டப்புறங்களில்தான் வாழ்ந்தார்கள். அதன் பின் மலேசியாவின் வளர்ச்சியில் தோட்டப்புறங்கள் தங்கள் பொருளாதாரச் செழிப்பை இழந்தன. மலேசியா நவீன உற்பத்தித் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்த போது தோட்டங்கள் நசித்துப் போயின. அங்கிருந்த மக்கள் நகர்ப்புறங்களுக்கு குறைந்த வருமானங்கள் உள்ள வேலைக்குச் சென்று அவதிப்பட்டார்கள். நகர்ப்புறங்களில் குந்துகுடிசைவாசிகளாக அவர்கள் ஆனார்கள். அவர்களின் அடுத்த தலைமுறை வாரிசுகள் சிலர் நகர வாழ்க்கையால் வாழ்வில் ஊக்கம் பெற்று முன்னுக்கு வந்ததும் உணடு.

பண்ணியவான் தோட்டப்புறங்களில் வாழ்வைத் தொடங்கி, அங்கே தோட்டப் பள்ளிகளில் ஆசிரியராக இருந்த பின்னர் நகர்புறப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக வந்தவர். ஒரு வகையில் மேலே சொன்ன தமிழர் ”புலம் பெயர்” வாழ்வில் அவரும் ஓர் அங்கம்.

இந்த அனுபவங்கள் அவருடைய கதைகளில் நன்கு பிரதிபலிக்கின்றன. “சிறை” தொகுப்பில் தோட்டப்புற, நகர்ப்புறப் பின்னணியும் இடைப்பட்ட மயங்கிய கால வாழ்க்கையும் இருக்கிறது.

இந்தப் பின்னணிகளை தாம் அறிந்த தமிழ்ப் பள்ளிக்கூடங்களைத் தளமாக அமைத்துக்கொள்வதன் மூலம் புண்ணியவான் மேலும் யதார்த்தமாக்குகிறார். தமிழ்ப்பள்ளிகளில் பிள்ளைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதனை அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகள் ஆகிய அனைவரையும் பற்றி புண்ணியவான் கதைகளில் அதிகமாக அறிந்துகொள்ளலாம். “சுமை” கதையில் ஒரு பள்ளித் தலைமை ஆசிரியரைப் படைத்து, பள்ளிக்கு வருகைபுரியும் அரசியல்வாதியை உபசரிக்க அவர் காட்டும் ஆர்வத்தையும் பரபரப்பையும் காட்டி, அதே பள்ளியின் மாணவன் ஒருவன் உடல் நலமில்லாது இருப்பதை அவர் கண்டுகொள்ளாமல் விடும் அவலத்தைக் காட்டுகிறார். பள்ளியின் இயல்பான பரபரப்புக்கள், ஆசிரியர்களின் உணர்வுகள் அழகாக வந்துள்ளன.

ஆனால் புண்ணியவானின் கதைகளில் பின்னணிகள் யதார்த்தமாக இருந்தாலும் பாத்திரங்களே முதன்மை பெருகிறார்கள். பின்னணியைப் பற்றிக் கொஞ்சமாகவும் தனது பாத்திரங்களைப் பற்றியே அதிகமாகவும் அவர் பேசுகிறார். இது அவரின் கதைகளுக்குச் செறிவான வடிவ நேர்த்தியைக் கொடுக்கிறது. நனவோடை உத்தியில் பாத்திரங்களின் மனங்களைப் பேசவிடுவதில் அவர் தனித்து நிற்கிறார்.

“சிறை” என்னும் தலைப்புக் கதையில் ஒரு ஆண் முதலில் முரடனாக இருக்கிறான். மனைவியை உதாசீனம் செய்கிறான். பின்னர் ஒரு விபத்தில் சாய்ந்து படுக்கையில் வீழ்கிறான். வாழ்வின் வீரியம் குறைந்த நிலையில் மனைவியை அணுக்கமாகப் பார்ப்பதோடு, அவளின் உழைப்பு அவன் மனதுக்குப் படுகிறது. இந்த மன உணர்வுகளிலேயே கதை ஓடி முடிகிறது.

இந்த நனவோடை உத்தியைப் பல கதைகளில் நாம் காண முடிகிறது. “மனசுக்குள்” கதையில் மரணப்படுக்கையில் இருக்கும் மகள் பற்றித் தகப்பன் நினைந்து உருகுவதும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டே.

புண்ணியவானின் பாத்திரப் படைப்புக்குச் சிறந்த எடுத்துக் காட்டு “குப்புச்சியும் கோழிகளும்”. இவள் மலேசியாவில் சிதைந்து போகும் தமிழர் குடும்பங்களின் பிரதிநிதியாக, அந்த நிலைமையின் சகல சிக்கல்களுக்கும் சோகங்களுக்கும் உரியவளாகப் படைக்கப்பட்டிருக்கிறாள். இதில் அவர் காட்டும் களப் பின்னணியும் சுவாரஸ்யமானது. அவர் வார்த்தைகளிலேயே:

“பட்டணங்களின் தூரத்தில் – கிராமங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத, மனித நடமாட்டமே இல்லாத அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித்துருவித் தேடினாலும் காணப்படாத முகவரியே இல்லாத அந்தப் பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள்.”

இதைப் பின்னணி என்றும் கொள்ளலாம். இவர் சொல்ல வருகிற தமிழர்களின் சிதைவுண்ட வாழ்க்கையின் குறியீடு என்றும் சொல்லலாம். இங்கே குப்புச்சி ஒரு கோழிப் பண்ணையில் வேலை பார்க்கிறாள். கணவன் இறந்து போனான். பெற்ற பிள்ளைகள் கைவிட்டார்கள். கோழிப் பண்ணையின் உரிமையாளனான சீனன் அவளை மேலும் பாலியல் முறையில் சிதைக்கிறான். எல்லாம் தன் பாவப்பட்ட வாழ்வின் ஒரு பகுதி என்ற தத்துவ மனப்பான்மையோடு குப்புச்சி இருக்கிறாள். ஆனால் கதையின் இறுதியில் அவளை விட்டுப் போன மகன் தன் 16 வயது மகளைக் கொண்டு வந்து ‘நீ வைத்துப் பார்த்துக் கொள்’ எனச் சொல்லிவிட்டுப் போகிறான். ருசி கண்ட பண்ணை உரிமையாளன் அந்தச் சின்னப் பெண்ணையும் காமத்துடன் பார்க்கிறான். “கோழிகள் ஏதோ சில சூப்பர் மார்க்கெட் விறபனையின் அறுப்புக்காக ஏற்றுமதியாகிக் கொண்டிருந்தன” என்ற முடிவு வாக்கியம் ஏராளமான அர்த்தங்களைச் சுமந்து நிற்கிறது.

புண்ணியவான் மலேசியத் தமிழ்க் கதைகளில் இதுவரை அதிகம் தொடப்படாத ஒரு கருப்பொருளையும் அபூர்வமாகத் தொட்டிருக்கிறார். “புர்வாண்டி” என்னும் இந்தக் கதை அந்தப் பெயரைக் கொண்ட இந்தோனேசிய வீட்டுப் பணிப் பெண்ணைப் பற்றியது. மலேசியா இப்போது தீவிர பொருளாதார வளர்ச்சி அடைந்திருப்பதால் வீடுகளில் வேலை பார்க்க உள்ளூரில் ஆள் கிடைப்பதில்லை. ஆனால் வளர்ச்சி குறைந்த இந்தோனேசியப் பகுதிகளிலிருந்து இந்த மாதிரி வேலைகளுக்கு மலிவாக பெண்கள் கிடைக்கிறார்கள். இவர்கள் வாழ்வு ஏழைத் தமிழர்களைக் காட்டிலும் கீழானது.

புர்வாண்டி ஒரு வீட்டுக்கு வேலைக்குக் கொண்டுவரப்படுகிறாள். அவளுடைய முகவர் அவளை எஜமானர் வீட்டில் விட்டுப்போகும் ஒரே காட்சிதான் இந்தக் கதையில். ஏஜண்டு அவளை அறிமுகப்படுத்தும் விதம், அவளுடைய நலன்களைக் கவனிப்பதை விட வீட்டு எஜமானர்கள் உடைமையை அவள் திருடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற உபதேசமே அதிகம் இருக்கிறது. அவளுடைய கைப்பையைத் திறந்து உதறி அதில் என்னென்ன இருக்கிறது என்று கணக்கு எடுக்கிறார்கள். ஏனெனில் இடையிடையே சோதிக்கும் போதோ அவள் திரும்பும்போதோ அந்தப்பையில் இதற்கு மேல் எதுவும் இருக்கக்கூடாது. நிறைந்த மிரட்டல்கள், எச்சரிக்கைகளுடன் அவள் அங்கு விடப்படுகிறாள். அதே நாளில் சமுகத் தலைவரான அந்த வீட்டுத் தலைவருக்கு வரும் கடிதத்தில் “பெண்ணடிமைக்கும் பேதைமைக்கும் எதிர்ப்பான போர்க்கொடி” என்ற தலைப்பில் அவர் சொற்பொழிவாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வந்திருக்கிறது. இந்த முரண் அணியுடன் கதையை முடிக்கிறார் கோ.புண்ணியவான்.

“ஏணி” (நிர்மலா ராகவன்)

மலேசியப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத் தக்கவரான நிர்மலா ராகவன், தனது கதைக் கருப் பொருள்களை தான் வாழும், பணியாற்றும் சமுகத்திலிருந்தே பெறுகிறார். அவர் ஓர் ஆங்கிலப் பள்ளியில் அறிவியல் பயிற்றும் ஆசிரியர். ஆனால் அந்தப் பள்ளியின் இந்திய மாணவர்கள் மீது அவருக்கொரு பரிவு மிக்க நோக்கு உண்டு. அந்தப் பரிவு, அதன் விளைவுகள், ஏமாற்றங்கள், கோபம் ஆகியவற்றை அவருடைய கதைகளில் காணலாம்.

சமுதாயம் பற்றியும் பெண்கள் பற்றியும் நிர்மலாவின் நோக்கும் புதுமையானதும் முன்னேற்றகரமானதும் ஆகும். பழமையைப் புறந்தள்ளி தைரியமான புதிய உலகை அவர்கள் காணவேண்டும் என்ற தொனி அவரின் எல்லாக் கதைகளிலும் உண்டு.

இந்தத் தொகுப்பின் முதல் கதையும் தலைப்புக் கதையுமான “ஏணி” இந்தப் போக்குகளைக் காட்டும் கதை. இந்தக் கதையில் பல இனப் பிள்ளைகள் படிக்கும் தேசியப் பள்ளிக்கூடத்தின் ஆசிரியை தமிழ்ப் பிள்ளைகள் மீது தனி அக்கறை கொண்டவளாக இருக்கிறாள். இந்த அக்கறையினாலேயே அந்தப் பிள்ளைகள் அந்தப் பள்ளியின் பொது நாகரிகத்துக்குப் புறம்பாக நடந்துகொள்ளும்போது எரிச்சலும் கோபமும் அடைகிறாள். பெண் பிள்ளைகள் பட்டையாகத் திருநீறு பூசி வருவது, நிறைய வளையல்கள் போட்டுக்கொண்டு வருவது, மஞ்சள் பூசிக்கொண்டு வருவது போன்றவை பிற இனப் பெண்களின் கேலிக்கு ஆளாவதால் அவற்றைத் தவிர்ப்பதே நலம் எனச் சொல்லிக் கொடுக்கிறாள். இப்படிக் கோபம், எரிச்சல், பரிவு, திருத்தல், மகிழ்தல் என்பதாக இந்த ஆசிரியையின் வாழ்வு கழிகிறது. ஆனால் பிற்காலத்தில் தன்னால் திருத்தி வளர்க்கப்பட்ட ஒரு மாணவியே ஓர் அரசியல் தலைவி ஆன பிறகு தன்னை உதாசீனம் செய்யும் ஏமாற்றத்தில்தான் கதை முடிகிறது.

இந்தப் பதின்ம வயதுப் பிள்ளைகளுடனான பள்ளிக்கூட அனுபவம் இயற்கையாகவே அவர்களுடைய பாலுணர்வு பற்றிய பிரச்சினைகளுக்கும் இவரை இட்டுச் செல்லுகிறது. “காதலியின் சிரிப்பிலே” என்னும் கதையில் தன் தாத்தாவைப் பார்க்க மருத்துவமனைக்குச் செல்லும் ஒரு மாணவன் அங்குள்ள நர்ஸ் ஒருத்தியின் மேல் ஒருதலைக் காதல் கொள்கிறான். இந்தக் கருவை இன்னும் நயமான களத்துக்கு உயர்த்திச் சென்றிருக்கலாம். ஆனால் அதனை ஒரு வேடிக்கையிலேயே அவர் முடித்து விடுவது ஏமாற்றமளிக்கிறது.

ஆனால் இதே பாலியல் விஷயத்தை இன்னொரு கதையில் மிக ஆழமான மனப்பிரச்சினையாகக் கொண்டு செல்கிறார். “நல்ல பிள்ளை” என்னும் இக்கதையில், மாயா என்னும் பெண் இளவயதில் ஒரு வீட்டில் வேலைக்காரியாகப் போய் அங்கு குடும்பத்து ஆண்களால் பாலியல் ரீதியில் கொடுமைப் படுத்தப்படுகிறாள். இதனால் மனரீதியாக நோயுற்று ஒரு குழந்தையையே கொலை செய்கிறாள். இந்தக் கதை இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதப்பட்டிருந்தால் ஒர் நல்ல மனோதத்துவ நாவலாக ஆகியிருக்கும். ஆனால் சிறுகதையாக முடங்கிவிட்டதால் சொல்ல வந்த விஷயத்தை முழுமைப்படுத்த முடியாமல் திணறுகிறது.

நிர்மலாவின் இந்தக் கதைகளில் வாசகனின் உள்ளத்தைத் தொடும் அளவிலான உணர்ச்சிமயமான கதை ஒன்று இருக்கிறது. “காந்தியும் தாத்தாவும்” என்னும் இக்கதையில் ஒரு நேர்மையான தாத்தாவுக்கும் வழிதடுமாறிப் போகும் பேரனுக்கும் உள்ள உறவு காட்டப்படுகிறது. இறுதியில் தாத்தாவின் தியாகம் பேரனைக் காப்பாற்றுகிறது. இந்தக் கதையின் நிகழ்வுகளை அவர் கோத்துள்ள முறை சிறப்பாக உள்ளது. இந்தக் கதையில் உணர்வு நிலையையும் அளவாக உச்ச கட்டத்திற்கு நிர்மலா எடுத்துச் செல்லுகிறார்.

“தாமரை இலைகள்” (பாவை)

மலேசியப் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் பாவை. நெடுங்காலமாக எழுதிவரும் பாவை முக்கியமாகத் தன் இனிமையான தமிழ் நடையினாலேயே வாசகனைக் கவர்பவர்.

“தாமரை இலைகள்” என்னும் தலைப்புக் கதை ஆரம்பிப்பது இப்படி:

“காற்றில் மிதந்து வந்த அந்தப் பவள மல்லிகைப் பூக்களின் நறுமணம் நாசியை வருடியது. அழுத்தமான மணம்தான். ஆனால் அங்கே இருந்த யாரும் அதை ரசித்ததாய்த் தெரியவில்லை.

ஹா.. இந்த வாசனையை மூச்சுக் குழாய்களில் நிறைத்து அடிவயிறு வரை மெதுவாய் உள்ளிழுத்து நெஞ்சுப் பகுதிகளில் பரவவிட்டபின் துளித்துளியாய் அதை வெளியே அனுப்பி ரசித்து மகிழ்ந்தால் எவ்வளவு இன்பமாக இருக்கும்?”

இவ்வாறான சுகமான வார்த்தைகளாலும் வருணனைகளாலும் வாசகனை வசீகரித்த பிறகு உலக இன்பங்களிலிருந்து துறவு பூண்ட ஓர் உன்னத இளைஞனையும் அந்த இளைஞனைத் தங்கள் குடும்பத்துக்குள் லோகாயத வாழ்வில் அடைக்கப்பார்க்கும் ஒரு தாயையும் காட்டுகிறார்.

பொதுவாகப் பாவையின் கதைகளில் வலியுறுத்தப்படும் விழுமியங்கள் – பழமையானவை ஆனாலும் – சமுதாயம் போற்றும் விழுமியங்கள். ஆங்காங்கே சமுதாயத்திலும் பெண்கள் நிலையிலும் மாற்றங்கள் வேண்டும் என்று பேசினாலும், அடிப்படையில் ஸ்திரமாகிவிட்ட சமுதாய அமைப்புக்குள் உழல்வதும் அதன் அமைதியைப் பாதுகாப்பதுமே அவர் கதைகள் ஆகும்.

“வேர்களைத் தேடும் விழுதுகள்” என்னும் கதையில் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்த பெண்ணும் இந்து சமய இளைஞனும் காதலில் விழுவதை அவர் பேசுகிறார். இந்து இளைஞன் காதலுக்காகத் தன் குடும்பத்தையும், முக்கியமாகத் தன் சமயத்தையும் துறக்கத் தயாராகிவிட்ட வேளையில் கிறித்துவக் காதலி தன் தகப்பனின் சொல் கேட்டு சமயத்தை மாற்றிக் கொள்ள முடியாது எனக் காதலை துறந்து விடுகிறாள். இளைஞனுக்கு ஞானோதயம் பிறக்கும்போது “ரோஸிக்கு மட்டும்தான் பண்பாடும் பெற்றோரும் உண்டா? எனக்கு அவை இல்லையா? அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்காக காதலையே புறக்கணிக்க அவள் துணியும்போது நான் ஏன் அதனைத் தாண்ட நினைத்தேன்?” என மனதுக்குள் புலம்புகிறான்.

அந்தக் கதையை முடிக்கையில் ஆசிரியர் கூற்று இப்படி இருக்கிறது: “…மனோவின் மனக் கதவு மெல்லத் திறக்கையில் அவன் புதிதாய்ப் பிறக்கிறானோ? அந்தப் புதிய ஜனனத்தில் வேர்கள் பாதுகாக்கப்படுமோ?”

சமுதாய கட்டுமானத்தைக் குலைக்கக் கூடாது என்பதே இவருடைய கதைகள் பலவற்றின் அடிநாதமாக இருக்கிறது.

இந்தக் கொள்கைகளின் இன்னொரு உச்சமாக, பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதுமைப் பெற்றோர் இறுதிக் காலத்தில் அரசாங்க முதியோர் இல்லத்தை நாடும் “விழிக்க மறுக்கும் இமைகள்” கதையில் இந்த வசனமும் வருகிறது: “பரவாயில்ல கனகம். சொந்தமும் பந்தமும் நம்மைக் கைவிட்டாலும் நம்ம நாட்டு அரசாங்கம் நம்மைக் கைவிடல. அது முதியோர்களுக்கு இருக்க இடமும் உடுக்கத் துணியும் உண்ண உணவும் கொடுத்து ஆதரிக்கத்தானே செய்யுது? இந்தக் கட்டைக்கு அது போதும்!”

ஒரு வகையில் தமிழ் இனம் இந்தநாட்டில் சரிந்து போனதற்கான காரணங்களில் ஒன்றான இந்த மனப்போக்கை, ஆக்ககரமான ஒன்றாக பாவை காட்டுகிறார்.

பிற நூல்கள்

இந்த 2000ஆம் ஆண்டுகளில் வேறு பல எழுத்தாளார்களும் தங்கள் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்கள். அவற்றில் சில:

நாயனின் நாட்டம் (ஸெய்யது முஹம்மது மைமுன்னி),
உள்ளே வாருங்கள் (பி.கோவிந்தசாமி)
வினோத மனிதன் (கே.எம்.முருகேசன்)
வானம் என்ன நிறம்? (கே.எம்.முருகேசன்)
அங்கீகாரம் (நிலாவண்ணன்)
தந்தையின் தாய்மை (ருக்மணி லோகா)
விலங்குகள் (நிர்மலா பெருமாள்)
தான் மட்டும் (வே.ம.அருச்சுனன்)
காலைக் கதிரும் மாலை மதியமும் (மனோகரன்)
மகாலட்சுமி (மு.மணிவண்ணன்)
வெற்றிப் படிகளில்ஒரு வாழ்க்கைப் பயணம் (ந.வரதராசன்)
பூவுக்கும் பொட்டுக்கும் விடுதலை கிடையாது (வீ.கோவிமணாளன்)
வாழ வேண்டும் வாச மலரே (என்.துளசி அண்ணாமலை)
என் வானில் நான்கு நிலவுகள் (முருகையா முத்துவீரன்)

முடிவுரை

பொதுவாகவே இரண்டாயிரமாம் ஆண்டுகளில் சிறுகதை எனும் இலக்கிய வடிவத்தின் உற்பத்தி செழுமையாகவே இருந்திருக்கிறது. அவற்றில் சில சிறுகதைகளேனும் தமிழ் உலகத் தரத்தில் இருக்கின்றன என்று கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்டிலும் புலம் பெயர்ந்த பிற பிரதேசங்களிலும் சிறுகதை வடிவமும் உள்ளடக்கமும் கண்டுள்ள பெரும் மாறுதலும் முன்னேற்றமும் மலேசியாவில் நடந்திருப்பதாகச் சொல்ல முடியாது. இரண்டிலும் அது தனது மலேசிய முன்னோர்கள் போட்ட பாட்டையிலேயேதான் உறைந்து நின்றிருக்கிறது. மலேசிய வாழ்க்கையை அவை சுவையாகப் பதிந்து வைத்திருப்பதைத் தவிர சிறுகதையைக் கலையை வளர்க்க அவை ஏதும் செய்திருப்பதாகச் சொல்ல முடியாது.

(முடிந்தது)

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு