மறைந்து கொண்டிருக்கும் ரசனைகள் !!!

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

அறிவன், சிங்கப்பூர்



மாற்றம் மட்டுமே உலகில் மாறாதது என்ற சொலவடை நினைந்து,நினைந்து ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.
டெக்னாலஜி எனச் சொல்லப்படுகிற அறிவியலின் வளர்ச்சி,வாழ்வில் நமக்கு பல்வேறுவிதமான காரியங்களை எளிதாக்கியிருக்கிறது;
உதாரணமாக
கணினி,
கணிப்பான் – கால்குலேட்டர்-,
கைத்தொலைபேசி
போன்ற உபகரணங்கள் நமக்களித்த சௌகர்யங்கள்(இந்த வார்த்தை தமிழ்தானா???) ஏராளம்.

அதுவும் இப்போதைய,பால்காரர் முதல் பாரவண்டிக்காரர் வரை, நம் அனைவருக்கும் கைத்தொலைபேசியை மறந்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்துவிட்டால்,கையொடிந்தது போலாகிவிடுகிறது.(இன்னும் கல்லூரிக் காளைகள்,கன்னிகள் கைத்தொலைபேசி இல்லாமல் வந்துவிடும் நாட்களில் தொடர் கை நடுக்கம் ஏற்பட்டு,கல்லூரியின் அன்றைய நாளில் நிறுத்தப் போராட்டம்-ஸ்ட்ரைக்- நடத்தலாமா என்று யோசிக்கும் அளவுக்கு சென்று விடுவதாகக் கேள்வி!)

இந்த உபகரண சௌகர்யங்கள் ஓசைப்படாமல்,நமது சிற்சில திறமைகளை,ரசனைகளை அழித்துக் கொண்டிருக்கிறது என்பது,நாம் அதிகம் சிந்திக்காத ஒரு கோணம்;

அழகாக எழுதும் கையெழுத்து,
மனக் கணக்காக கூட்டும் கணிதத் திறன்,
காதருகில் பேசுகின்ற சுகம் போன்ற கடிதங்கள்,
ஆகியவை இவற்றில் சில.

என்னுடைய மாமா,மற்றும் கல்லூரிக்காலத்திய நெருங்கிய சகதோழன் சுந்தரவடிவேல் (இன்றைய பதிவர் உலகிலும் அறியப்பட்ட அதே சுந்தரவடிவேல்தான்!) ஆகியோரின் அழகான கையெழுத்தைப் பார்த்து,அவர்களை விஞ்ச வேண்டும் என்ற உத்வேகமே என் கையெழுத்தைப் பெருமளவில் சீர்செய்தது.

ஆனால் இன்றைய நாட்களில் கையெழுத்துக்கள் மறைந்து,அருகி வரும் ஒரு விதயமாகின்றன….

சமீபத்தில் ஆவி.யில் ஒரு இளைஞர் ஒரு லட்சம் அஞ்சலட்டைகள் வாங்கி,மனதில் தோன்றுகின்ற நபர்களுக்கெல்லாம் வாழ்த்துக்கள் அனுப்பிக் கொண்டிருகிறார்,கடிதம் எழுதும் பழக்கத்தை மீட்டெடுக்க வேண்டி!
அடுத்ததாக 10 லட்சம் அஞ்சலட்டைகள் அனுப்பப் போகிறாராம் !!!

சமீபத்திய நியூயர்க்கர் இதழில் மும்பை தலைமைதபால் நிலைய வாசலில் ‘கடிதம் எழுதி’யாக வாழ்க்கையைக் கழித்த ஜி.பி.சாவந்த்’ன் படக்காட்சிப் பேட்டி பார்க்க நெகிழ்ச்சியாகவும்,மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மும்பையின் பல அடித்தட்டு மக்களுக்காக 10000’க்கும் மேற்பட்ட கடிதங்களை அவர் எழுதி இருக்கிறாராம்;அவை தாங்கிச் செல்லும் அன்பு,பாசம்,மிரட்சி,வேதனை ஆகிய அனைத்தையும் நினைவு கூர்ந்திருக்கிறார் அவர்.
அவர் பலருக்கு எழுதித் தரும் கடிதங்களில் பணம் வைத்து அனுப்ப நேரிடும்போது அரக்கு உருக்கி அவர் பெயரிட்ட உலோகஎழுத்துப் பதிப்பால் முத்திரை பதித்து அனுப்புவது வரை அனைத்தையும் பகிர்ந்துகொண்ட அவர்,காதல் கடிதங்களை மட்டும் என் தொழில் வாழ்க்கையில் யாருக்காகவும் எழுத மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

நான் சிறுவனாக பதின்ம வயதுகளில் இருந்த போது எங்கள் பெரியப்பா-அவர் கனரா வங்கியில் முதன்மை மேலாளராகப் பணி செய்தார்,வாழ்வின் சிறு ரசனைகளைப் பேணும் மனிதர்-எழுதும் கடிதங்கள் வரும்போது,சூடான பலகாரங்களுக்கு நடக்கும் சண்டையாய் வீட்டுக்குள்,அதை யார் முதலில் படிப்பது என்ற போட்டி நடக்கும.
அவ்வளவு ரசனையாகக் கடிதங்கள் எழுதும் ஒரு entertainer அவர்.

உதாரணமாக 80 களின் மத்தியில் சென்னையிலிருந்து,கல்கத்தா கிளைக்கு மாற்றலாகி,பிள்ளைகள் படிப்புக்காக குடும்பம் சென்னையிலேயே இருக்க,தனியாகக் கல்கத்தாவுக்குச் சென்ற பின் எழுதிய 15 பக்க முதல் கடிதம் “விமானம் 25000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது;பக்கத்தில் பெண்டாட்டி இல்லையாதலால் தைரியமாக ஏர்ஹோஸ்டஸ் பெண்ணுடன் சிரித்துப் பேச முடிந்தது…” என ஆரம்பித்து தெருவோரம் பீறிடும் தண்ணீர் குழாய்களில் குளிக்கும் மாநகர் வாசிகள்,சவரம் முதல்கொண்டு நடைபாதையில் நடக்கும் காட்சி என மொத்த கல்கத்தாவின் ஒரு ‘அவுட்லுக்கை’ அக்கடிதம் கொடுக்கும்.
ஆரம்ப நாட்களில் என்னுடைய அவதானிப்புகள் கூர்மையடைய அவரின் கடிதங்களும் ஒரு காரணம்.
அவரே நம்மைப் பாராட்ட வேண்டும் என்ற மன உந்துதல்கள்,எனது கடிதக் கலையின் நேர்த்திக்கு ஆரம்பக் காரணிகள்.(பின்னால் நான் எழுதிய கடிதங்கள் பல, பெரியப்பா உள்பட,என் உறவினர்கள்,நண்பர்களால் சிலாகிக்கப்பட்டதை இங்கே சொல்ல என் அவையடக்கம் தடுக்கிறது எனச் சொல்லிவைக்கிறேன்!)
இப்போது 2005’ல் கல்கத்தா செல்ல நேர்ந்த போது அவரின் கடிதமெழுதும் திறன் பற்றிய எனது எண்ணம் எனக்கு மேலும் வலுப்பட்டது.

சாவந்த் முத்தாய்ப்பாக சொன்ன செய்தி,கடைசியாக அவர் எழுதிய கடிதம் 3 ஆண்டுகளுக்கு முன் !

மின்மடல்கள்,குறுந்தகவல்கள் பெருகிவிட்ட இக்காலத்திலும்,10 மின்மடல்களுக்கிடையில் ஒரு கடிதமாவது எழுதப் பழகுவோம்….உறவுகளும்,ரசனைகளும் மேம்படும் !

அன்புடன்,

அறிவன், சிங்கப்பூர்.

தொடர்பு: en.madal@yahoo.com

வலைப்பூ : www.sangappalagai.blogspot.com

Series Navigation

அறிவன்

அறிவன்