ஜோதிர்லதா கிரிஜா
மறுபடியும் ஒரு மகா பாரதம்
அத்தியாயம் – 35
மாலதியின் மீது எனக்குக் கோபமே வரவில்லை. மாறாக, அவள் சிறுபிள்ளைத் தனமாக நடந்துகொண்டுவிட்டதாய்த் தோன்றியது,
“மாலதி! நீ எழுதின என்னோட சுயசரிதையில நீ விவரிச்சிருக்கிற சிவகுருவோட என்ணங்களும், நான் தற்கொலை பண்ணிக்கிறதுக்காக வீட்டைவிட்டுக் கெளம்பினதுக்கு அப்புறம் நடந்ததா நீ எழுதியிருக்கிற அந்த மார்கரெட்டோட சதியும், அவள் காதலன் அவளை ஏமாத்திட்டு ஓடினதாச் சொல்லியிருக்கிற சம்பவமும் நீயாக் கற்பனை பண்ணி எழுதினது. ஆனா நிஜமா நடந்தது என்னங்கிறது அவராச் சொன்னாத்தான் நமக்குத் தெரியும். அப்படி அவரு சொன்னாருன்னா, சுய சரிதையில மாறுதல் செய்யலாமா?”
“சுயசரிதை வடிவத்துல நான் அதை எழுதல்லியே, மேடம்! ஒரு கற்பனை நாவல் மாதிரிதானே எழுதியிருக்கேன்? அது அப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! ஆனா, உங்களுக்கு ஒரு ஆவல் இருக்கும். அவரு கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. அப்படியே, அது என்னன்றதையும் – உங்களுக்கு ஆட்சேபணை இல்லாட்டி – எனக்கும் சொல்லுங்க!” – நான் சிரித்தேன்.
.. .. .. சுமார் பதினொரு மணிக்கு மாலதி சிவகுருவை அவருடைய பேத்தியுடன் அழைத்துக்கொண்டு வந்தாள். பிறகு போய்விட்டாள். என்னைப் பார்த்ததுமே அவர் முகத்துச் சதைகள் அதிர்ந்து கண்களில் ஒரு மிரட்சியும் தோன்றியது. பார்த்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டாலும், அவர் கிழடு தட்டிப் போய் மாறி யிருந்த அளவுக்கு – நானும் ஒரு கிழவியே யாயினும் – என்னிடம் மாற்றாங்கள் இல்லை என்பது எனக்கே தெரிந்தது. படு பயங்கரத் தாத்தாவாகி விட்டிருந்தார்.
“யெஸ்?” என்ற நான் அவரை அடையாளம் தெரிந்ததாய்க் காட்டிக்கொள்ளவில்லை. அவர் வரப் போவது முன் கூட்டித் தெரியவராது போயிருந்தால், நானும் வெளிப்படையாய் அதிர்ந்திருப்பேனோ என்னவோ!
“நீ.. நீ.. நீங்க.. .. துதுதுர்க்கா தானே?”
“ஆமா. நீங்க?”
“என்ன, துர்க்கா! என்னைத் தெரியலியா? நான்தான் சிவகுரு!”
“ஓ! நீங்களா! . .. அடையாளமே தெரியல்லே. ரொம்பவே மாறிப்போயிட்டேள்!”
“நீயும்தான்! .. நீநீநீ .. நீங்களும்தான். ஆனா அடையாளம் தெரிஞ்சுக்க முடியாத அளவுக்கு மாறல்லே.”
என்னை ‘நீங்க’ என்று மரியாதைப் பன்மையில் விளிக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை!
“மாலதி சொன்ன பொண்ணு இவதானா?”
“ஆமா. நீ.. நீ.. நீங்க போனதுக்கப்புறம், மர்கரெட்டும் பயந்துண்டு என்னை விட்டுட்டுப் போயிட்டா. நீங்க் தற்கொலை பண்ணிண்டிருந்திருப்பேள்னு அவளுக்கு ஒரே திகில். அதுல சிக்கிக்க அவ விரும்பல்லே. அதான் போயிட்டா.. .. ..”
நான் ஒன்றும் சொல்லாதிருந்தேன்.
“உன்னை.. .. உஉ உ.. உங்களை நிறைய நாள் தேடினேன். கிடைக்கல்லே. அதுக்கு அப்புறம் இன்னொரு கல்யாணம் பண்ணிண்டு ஊரோடவே இருக்கத் தொடங்கிட்டேன். என்னோட பிஸ்நெஸ் பார்ட்னர்ஸ் (business partners) என்னை ஏமாத்திட்டா. எக்கச் சக்க நஷ்டம். பணமெல்லாம் போயிடுத்து. அதனால கிராமத்துலேயே வெவசாயத்தைப் பாத்துண்டு இருக்கத் தொடங்கிட்டேன். நான் கல்யாணம் பண்ணிண்டவ பத்தே வருஷத்துல காலமாயிட்டா. மூணு பொண்ணுகள் பொறந்தா. மூணு பேருமே இப்ப உசிரோட இல்லே. மூத்தவளை, அவளுக்குக் கொழந்தை இல்லேங்கிறதுக்காக, அவ ஆம்படையான் தள்ளி வெச்சான். ரெண்டாவது பொண்ணுக்குப் புருஷன் செத்துப் போயிட்டான். அவளும் கடேசி வரையில அவளும் எங்கிட்டதான் இருந்தா.. மூணாவது பொண்ணையும் அவ புருஷன் தள்ளி வெச்சுட்டான். எவளோடவே தனிக்குடித்தனம் வெச்சிருக்கான். அவளோட பொண்ணுதான் இவ. காது கேக்காது. கொஞ்சம் இழுத்து இழுத்து மெதுவாத்தான் பேசுவ. ஒரு காலும் கொஞ்சம் ஊனம். நீட்டி நீட்டித்தான் நடப்ப. அவ கர்ப்பத்துல இருந்தப்ப அப்பன்காரன் அதைக் கலைக்கிறதுக்கு எதையோ மருந்தை எம் பொண்ணுக்கு அவளுக்குத் தெரியாமயே குடுத்திருந்திருக்கான். அதிலதான் இப்பிடி ஆயிடுத்து. செவிட்டுக் காதை வெச்சிண்டு இவ என்னத்தைப் படிக்கிறது? எப்படியோ, இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு பாஸ் மார்க் வாங்கிப் பத்தாவது தாண்டிட்டா ஒரு வழியா. இதுக்கு மேல படிப்பு ஏறாது இவளுக்கு. மதுரைக்குப் போயிருந்தப்ப மிஸஸ் மாலதியைச் சந்திச்சேன். அவதான் இந்த ஹோம் பத்திச் சொன்னா. ஆனா அதை நடத்தறது நீதான்னு இன்னை வரைக்கும் தெரியாது.. .. ..”
மிக இயல்பாய ஒருமையில் விளிக்கத் தொடங்கிவிட்ட அவரை நான் ஒரு பார்வை பார்த்தேன் அவரது தலை உடனே தாழ்ந்துகொண்டது.
நான் இயல்பில் அகம்பாவக்காரி யல்லேன். ‘ஆனாலும், படித்து, நாகரிகங்கள் கற்று, மாதர் அமைப்புகள் சிலவற்றின் தலைவியாகவும், ஆதரவற்றோர் இல்லங்களின் தலைவியாகவும் இப்போது இருந்து வரும் இன்றைய துர்க்க்காவுக்குத் தன்னை ஒதுக்கிய – இன்னொருத்தியை வீட்டுக்கே கூட்டி வந்து கொட்டமடித்த – ஆணவக்கார ஆண்பிள்ளையைப் பார்த்ததும் அவளுள் உறங்கிக்கொண்டிருந்த ஒரு சின்ன ஆணவம் சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்றது!’ – ஆமாம். ஒரு சுய அலசலில் எனக்கு அப்படித்தான் தோன்றியது.
நான் எய்த பார்வையின் பொருள் இன்றைய மாறுபட்ட துர்க்காவை அவருக்குப் புரியச் செய்திருந்திருக்க வேண்டும். தொண்டையைக் கனைத்துக்கொண்ட பின், “எனக்கு உங்களை நேருக்கு நேராப் பாக்கிறதுக்கே வெக்கமாயிருக்கு. எல்லாம் சின்ன வயசுத் திமிர். ஒடம்பில இருக்கிற ரத்தம் சுண்டிப் போனதுக்கு அப்புறந்தான் மனுஷாளுக்கு ஞானம் வருது! .. .. அது சரி, நீங்க எப்பிடி இங்க வந்து சேந்தேள் – இந்த அளவுக்கு முன்னேறினேள்ங்கிறதை யெல்லாம் நான் தெரிஞ்சுக்கலாமா? .. .. சொல்லலாம்னா சொல்லுங்கோ!”
இன்றளவும் அன்றைய நிகழ்ச்சியை நான் அன்றாடம் நினைத்துக் குமுறாமல் இருந்ததே இல்லை. சொன்னேன். சொல்லி முடித்துவிட்டு, “என்னோட நல்ல காலம் – முத்துலட்சுமி சிஸ்டர் கையில நான் ஆப்புட்டேன். .. .. இல்லேன்னா நான் என்னிக்கோ செத்திருப்பேன். நான் அன்னிக்கு இருந்த மன நெலையில நான் வேற என்ன முடிவுக்கு வந்திருக்க முடியும்? சொல்லுங்கோ!” என்று கேட்டுப் புன்னகை புரிந்தேன்.
என் கண்களை அவரால் சந்திக்கவே முடியவில்லை. ச்¢ல இறுக்கமான கணங்கள் மவுனத்தில் கழிந்த பின்னார், அவர் கம்மிப் போயிருந்த குரலில் தொடர்ந்தார்: “நான் பண்ணின காரியத்துக்கு எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் மன்னிப்பே கிடையாது. இருந்தாலும், கேக்கறேன் – என்னைப் பெரிய மனசு பண்ணி மன்னிச்சுடுங்கோ! நீங்க மீட்டிங்ல பேசினதை யெல்லாம் நான் தங்கி யிருக்கிற வீட்டுப் பொண்ணு ரெகார்ட் பண்ணி எடுத்துண்டு வந்து போட்டுக் காமிச்சா. எல்லாத்தையும் கேட்டேன். உங்க பேச்சில பறந்து சூடு ரொம்பவே நியாயந்தான். காலங்கடந்து என் மனசு இப்ப மாறியிருக்கிறதுனால எந்தப் பிரயோசனமும் இல்லேதான். மத்தவாளாவது – என்னை மாதிரி இல்லாம – காலா காலத்துல தப்பை உணர்ந்து திருந்தினா – ஏன்? தப்பே செய்யாமயே இருந்தாலும் கூடத்தான் – மனுஷாளோட வாழ்க்கை ஒரு சொர்க்கலோகமா மாறிடும்!.. .. .. ‘மகா பாரதம்’ ங்கிற பத்திரிகையை நடத்தறது நீங்கதான்னு தெரியாமயே நான் ரொம்ப நாளா அதைப் படிச்சுண்டு வறேன். அதுல வர்ற கட்டுரைகளைப் படிக்கிறப்ப ஆரம்பத்துல எனக்கும் நீங்க ஆம்பளைகளை ரொம்பவுந்தான் மட்டந்தட்டி எழுதறேள்னு நெனச்சுக் கோவம் கோவமா வரும். ஆனா, வயசாக வயசாக – என் பொண்ணுகள் வாழ்க்கை சீரழிஞ்சு போனதுக்கு அப்புறம் – அதுவு மில்லாம, இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்ஸ்ல பெண்கள் பட்ற பாட்டைப் பத்தி வர்ற உன்மைச் சம்பவங்கள் பத்தியும் தெரிஞ்சுண்டதுக்குப் பிற்பாடு – நீங்களும் உண்மையைத்தானே சொல்றேள்னு எனக்குத் தோண ஆரம்பிச்சுடுத்து.. .. “
“சரி. இப்ப நான் உங்களுக்கு என்ன செய்யணும்? அதைச் சொல்லுங்கோ.”
“இந்தப் பொண்ணுக்கு நீங்கதான் ஒரு நல்ல வழி காட்டணும். இவளுக்குக் கல்யாணம்னு ஒண்ணு ஆறதுக்கெல்லாம் சான்ஸே இல்லே. காது செவிடு. கால் வேற ஊனம். இழுத்து இழுத்து வேற பேசறா.. .. அதனால .. .. இந்த ஹோமுக்கு என்னால இப்ப சத்தியா இருபத்தஞ்சாயிரம் நன்கொடை குடுக்க முடியும். ஆனா, ஆயுசு பரியந்தம் நீங்க இவளை இங்கே வெச்சுக் காப்பாத்தறதுக்கு அந்தத் தொகை ரொம்பக் கொறைச்சல்தான். . .. இருந்தாலும் .. ..”
“சரி. நீங்க இவளை இங்கே விட்டுட்டுப் போகலாம்.. .. ..”
‘ரொம்ப தேங்க்ஸ். நாளைக்கு இங்கே இவளைச் சேர்த்துட்றேன். என்னோட பெரிய சுமையை எறக்கி வெச்சுட்டேள். கிராமத்துக்குப் போய்த் தனியா உக்காந்துண்டு மிச்ச வாழ்க்கையைக் கழிக்கணும் நான்.. ..” என்று அலுப்புடன் கூறியவாறே சிவகுரு ஆழமாக என்னை ஒரு பார்வை பார்த்தார். ‘நானும் இங்கேயே ஒரு ஓரமா இருந்துட்டுப் போயிட்றேனே!’ என்று அந்தப் பார்வை கெஞ்சியது.
“முதியோர் இல்லம் ஒண்ணை என்னோட சிநேகிதி ஒருத்தி நடத்தறா. அவாளுக்கு ஒரு லெட்டர் தறேன். அங்க போய்ச் சேந்துடுங்கோ!”
சிவகுரு, எச்சில் விழுங்கினார். ஏதோ சொல்ல வந்து அடக்கிக்கொண்டது புரிந்தது. சொற்களை அவர் சிரமப்பட்டு விழுங்கிக்கொண்டதில் தொண்டக் குமிழ் ஏறி இறங்கிற்று.
அப்போது தொலைபேசி கிணுகிணுக்க, என் செயலர்ப் பெண் பேசினாள் : “உங்களுக்கு ·போன்கால், சிஸ்டர்! யாரோ சுந்தரமாம்.. ..”
“சரி, குடு.”
சுந்தரம் என்பவர் பேசினார்: “ஹல்லோ, மேடம். உங்களோட கொஞ்சம் பேசணும். ஒரு அஞ்சு நிமிஷம் ஒதுக்க முடியுமா?”
“ஓ! முடியுமே! அது சரி, நீங்க யாரு?”
“என் பேரு சுந்தரம். வயசு இருபத்து ஏழு. வேலை வெட்டி இல்லாதவன். அதாவது பட்டதாரியா யிருந்தும் எந்த வேலையும் கிடைக்காதவன். .. பெண்களுக்காக ரொம்பவுந்தான் மாஞ்சு மாஞ்சு எழுதித் தள்றீங்க. பெண்கள்ளாம் ஆயிரக் கணக்குல படிச்சுட்டு வேலைக்கு எங்களோட போட்டிக்கு இப்பல்லாம் வர்றதால எங்களுக்கு வேலை கிடைக்க மாட்டேங்குது. அவங்கவங்க வேலையை மட்டுந்தான் அவங்கவங்க செய்யணும், மேடம்! இப்படி எங்களோட அவங்க போட்டி போட்றதால, நியாயப்படி எங்களுக்குக் கிடைக்க வேன்டிய வேலைகளை அவங்க தட்டிப் பறிச்சுக்குறாங்க. உத்தியோகம் புருஷ லட்சணம்கிறதுதான் பழமொழி!.. ..”
“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னு ரெண்டாங் கிளாஸ்லயே படிச்சோம். அது கூடப் பழமொழிதான். அதும்படிதான் நடக்கறோமா, மிஸ்டர் சுந்தரம்? முதியோர் இல்லத்துலதானே இப்பல்லாம் விட்டுட்டு இருக்கோம்? சரி. அத விடுங்க. இப்ப என்ன சொல்ல வர்றீங்க? பொண்ணுகளும் படிச்சுட்டு வேலைக்கு வர்றதால ஆம்பளைங்க உங்களுக் கெல்லாம் வேலை கிடைக்க மாட்டேங்குதுன்றீங்க. உத்தியோகம் புருஷ லட்சணம் மட்டுந்தான் – பொம்பளைங்க லட்சணம் இல்லே – அப்படிங்கறீங்க. அதானே?”
“கிண்டலாத்தானே கேக்கறீங்க?”
“ஆமாமா. கிண்டலாத்தான் கேக்கறேன், மிஸ்டர் சுந்தரம்! நீங்க சொன்ன பழமொழியை மாத்தி எழுத வேண்டிய காலம் வந்தாச்சுப்பா. இந்தக் காலத்துல எத்தனை குடும்பங்கள் பொண்ணுகள் சம்பாத்தியத்துல வயிறு வளத்துக்கிட்டு இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமா? மூத்த பொண்ணு சம்பாத்தியத்துல, அவளோட தம்பி, தங்கைகள்ளாம் படிக்கிறாங்க. பயனடையறாங்க. வரதட்சிணைக்குக் காசு சேக்கிறதுக்காகவும் பொண்ணுங்க சம்பாதிக்க வேண்டியிருக்கு. ஆக, அவ வேலைக்குப் போறதுக்கு வரதட்சிணை கேக்கிற ஆம்பளைங்களும் ஒரு காரணம்! அந்த அம்சத்தைப் பத்தி நீங்க யோசிச்சுப் பாத்ததுண்டா, மிஸ்டர் சுந்தரம்? அது மட்டுமா? இன்னைக்கு ஏழைக் குடும்பங்களும், நடுத்தரக் குடும்பங்களும் பெண் சிசுக் கொலை செய்யறாங்க. ஏன்? பொண்ணுன்னாலே செலவுன்னு ஆயிட்டதால. இதனோட விளைவு சில நூறு வருஷங் கழிச்சு என்ன வாகுனு யோசிச்சுப் பாத்திருக்கீங்களா? ஆண்களோட எண்ணிக்கை ரொம்ப அதிக மாயிடும். பொண்ணுகளோட எண்ணிக்கை ரொம்பவே குறைஞ்சுடும். அப்ப என்ன வாகும்? பொண்ணுகளுக்கு மவுசு அதிகமாயிடும். அப்ப? பொண்ணு வரதட்சிணை கேப்பா! ஆம்பளைங்க நீங்க குடுப்பீங்க! .. .. சரி. இப்ப இப்படிப் பேசற நீங்க, நாளைக்கே உங்களுக்கு ஒரு வேலை கிடைச்சதும், வீ¢ட்டுல கல்யாணத்துக்குப் பொண்ணு தேடுறப்ப, ‘வேலை பாக்குற பொண்ணா’த் தேடச் சொல்லுவீங்க. இல்லாட்டி, நீங்களே தேடிக்குவீங்க! சுயநலம்னு வந்ததும் உங்க இப்போதைய நியாயமும் சட்டமும் தலை கீழா மாறிடும், மிஸ்டர் சுந்தரம்!”
தொலைபேசியின் மறு முனை சில கணங்களுக்கு அமைதியானது.
“சரி. அதை விடுங்க.. .. பெண்கள்லே எத்தனையோ ராட்சசிங்க இருக்காங்க. உங்க பத்திரிகையில வர்ற கதைகள்லேயும் பெண்களை தேவதைகளாவும் ஆண்களை அரக்கர்களாவுமே சித்திரிக்கிறாங்க. ஆண்கள் கண்ணு0ல விரலை விட்டு ஆட்டுற எத்தனை ராட்சசிங்க இருக்காங்க, தெரியுமா?”
“தெரியும், மிஸ்டர் சுந்தரம். நல்லாவே தெரியும். ஆனா ஒண்ணை நீங்க கவனிக்கணும். பெண்கள்லே ராட்சசிங்க சிறுபான்மை. ஆண்கள்லே ராட்சசங்க பெரும்பான்மை! இந்த அடிப்படை வித்தியாசத்தை மறக்காதீங்க. விதிவிலக்கான ஆண்-பெண்களைப் பத்தியும் எழுதணும்தான். அப்படியும் நாங்க கதைகளை வெளியிட்றோமே?”
“வெளியிட்றீங்கதான். ஆனா ரொம்ப அபூர்வமாத்தான்!”
“ஏன்னா, அப்படிப்பட்ட நல்ல ஆம்பளைங்க அபூர்வமா யிருக்கிறதால!.. மிஸ்டர் சுந்தரம்! எங்க மேல கோவப்படாம நிதானமா யோசிச்சுப் பாருங்க. . ஒண்ணும் மட்டும் சொல்றேன். ஒருக்கா, ஆம்பளைங்களை யெல்லாம் பொண்ணுங்க அடிமைப் படுத்திக் கொடுமையும் படுத்துற காலம் ஒண்ணு வந்தா – அது என் காலம் முடியறதுக்குள்ள வரவே போறதில்லே – ஏன்னா நம்ம நாட்டுப் பொண்ணுகள்லாம் மொத்தத்துல நல்லவங்க.. அப்படியே வந்துட்டாலும், என்னோட பேனா பெண்களைக் கண்டிச்சும், ஆண்களுக்கு ஆதரவாவும் எழுதும்! எனக்கு வேண்டியதெல்லாம் நியாயம், நியாயம், நியாயம்! அது மட்டுமே! சரி, அதை விடுங்க. இப்ப உங்க விஷயத்துக்கு வறேன்.. .. உங்க படிப்பு விவரம், விலாசம் – அதாவது உங்க பயோ-டேட்டா (bio-data) – இதையெல்லாம் எனக்கு உடனே அனுப்பி வையுங்க. உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க நான் முயற்சி பண்றேன்.. .. .. ஆனா, கட்டாயம் வாங்கித் தருவேன்னெல்லாம் என்னால வாக்குறுதி எதுவும் தர முடியாதுப்பா!”
“.. .. .. மே..மே..மேடம்!”
“சொல்லுங்க.”
“நான் யாருன்னு தெரிஞ்சா எனக்கு உதவி செய்ய மாட்டீங்க!”
“நீங்க யாராயிருந்தாலும் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க முயற்சி செய்வேன், மிஸ்டர் சுந்தரம்!”
“நேத்து கூட்டத்துலே உங்க மேல குறி வெச்சுக் கல்லை எறிஞ்சு காயப் படுத்தினது நான்தான்!”
கணம் போல் எனக்குத் திக்கென்றுதான் ஆயிற்று. இருப்பினும் சமாளித்துக்கொண்டு வாய்விட்டே சிரித்தேன் .
“பரவால்லே. உங்களுக்குக் குறி பாத்து அடிக்கிற திறமை இருக்கு. கரெக்டா என் மேல கல்லு விழும்படியா குறி தவறாம வீசி யிருக்கீங்க. அந்தத் திறமைக்கு ஏத்த மாதிரியான வேலையாக் கூட நான் உங்களுக்குத் தேடிக் குடுக்க முடியும்னு நெனைக்கிறேன்! பாக்கலாம். நேர்ல வந்து என்னைப் பாருங்க, மிஸ்டர் சுந்தரம். நான் உங்களை வரவழைச்சுப் போலீஸ்ல மாட்டி வெச்சுடுவேனோன்ற பயமெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நான் நடத்தற ‘மகா பாரதம்’ பத்திரிகை மேல ஆணையா இதைச் சொல்றேன்.. .. அப்புறம் இன்னொண்ணு.. .. இந்த வாரத்து ‘இண்டியன் எக்ஸ்ப்ரெஸ் சப்ளிமென்ட்’லே ஒரு கட்டுரை வந்திருக்கு. ‘ப்ரௌலிங் அரவ்ண்ட் வித் இம்ப்யூனிட்டி’ (Prowling around with impunity) ன்ற தலைப்பில ஒரு ஆர்ட்டிகிள் (article). தயவு பண்ணி அதைப் படிங்க. பதவியில இருக்கிற சில அரசியல்வாதிகளோட படு மட்டமான நடத்தை பத்தியும் அதுல வந்திருக்கு. நேத்தைய கூட்டத்துல அதைப்பத்தி யெல்லாம் விலாவாரியாப் பேசறதுக்கு என் நாக்கு கூசித்து. அதான் சொல்லல்லே. அதைப் படிச்சீங்கன்னா எங்க கோவம் சரியா, தப்பான்னு உங்களுக்குப் புரியும்.. .. சரி. அப்ப என்னிக்கு வர்றீங்க?”
“ நிஜமாவே என்மேல உங்களுக்குக் கோவம் இல்லியா, மேடம்?”
“.. .. .. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்!”
“அப்ப, ஆம்பலைங்களை மட்டும் ஏன் மேடம் தாக்கு தாக்குன்னு தாக்குறீங்க? அவங்கல்லாம் நாணும்படியா நன்னயம் செய்யலாமில்ல?”
“இத்தனை வருஷங்களா பொம்பளைங்க அதைத்தானே செய்துட்டு வர்றாங்க! எத்தனை ஆயிரமாயிரம் ஆண்டுகளாப் பொறுமையா இருந்துட்டிருக்குறாங்க! ஆனா அவங்களுக்குச் சூடு சொரணையோ நாணமோ வரல்லியே! .. .. விட்டா, வெள்ளைக்காரனைக் கூட, அவனுக்கு நாணம் வர்ற வரைக்கும், தொடர்ந்து ஆளா வ்¢ட்டிருக்கணும்னுவீங்க போல!”
சுந்தரம் சிரித்தான்: “அப்ப, கூடிய சீக்கிரம் – அதாவது உங்களைத் தலை நிமிர்ந்து பாக்குறதுக்கான தைரியம் என்னைக்கு வருதோ அன்னைக்கு – உங்களைச் சந்திக்கிறேன், மேடம்!”
“இப்பவே வாங்கப்பா! என் மேல கல்லு வீசி எறிஞ்சப்ப எவ்வளவு தைரியத்தோட இருந்தீங்களோ, அதே தைரியத்தோட வாங்க!”
“இல்லீங்க, மேடம். எனக்கு அசிங்கமா யிருக்கு. நான் இன்னொரு நாள் அப்புறமா வர்றேன்.”
“உங்க இஷ்டம்!” – ஒலிவாங்கியை வைத்துவிட்டு நிமிர்ந்தேன்.
என் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த சிவகுருவின் கண்களில் குற்ற, அவமான உணர்வுகள் துல்லியமாய்த் தெரிந்தன.
“முதியோர் இல்லத்துக்கு சிபாரிசு லெட்டர் தறேன்னேள்.”
“இதோ. ஒரு நிமிஷம்.”
தொலைபேசியின் முரலை (buzzer) நான் அழுத்தி நீண்ட ஒலி எழுப்பியதும் என் செயலர் வந்தாள். அவளிடம் ஒரு சிபாரிசுக் கடிதத்தை வாய்மொழிந்த பின், “உங்க பேத்திக்கு மொதல்ல ஒரு க்ளெர்க்குக்கு (clerk) உதவியாளர் வேலை தறேன். போகப் போக, அவளோட திறமை எந்த அளவுக்கு இருக்குன்றது வெளிப்பட்ட பிற்பாடு, அவளுக்கு ஏத்த மாதிரியான ஒரு வேலையில அமர்த்திக்கிறேன். பெரிசா சம்பளமெல்லாம் எதிர்பார்க்க வேண்டாம். சாப்பாடு, இருக்க இடம், துணிமணிகள் தருவோம். கடைசி வரையில பாதுகாப்பா இங்கேயே இருந்துக்கலாம். திறமைகள் இருந்தா வளர்த்துக்கலாம். அதோட அடிப்படையில உபரியாச் சில கைத் தொழில்கள் இங்கேயே செஞ்சு சம்பாதிக்கலாம். அது அவளோட பணம். “
“இது போறும். கொள்ளையோ கொள்ளை. இது மாதிரி யாரு சொல்லப் போறா! தேங்க் யூ வெரி மச்! .. .. ..”
“அதெல்லாம் ஒண்ணும் சொல்ல வேண்டாம். நான் ஒண்ணும் பெரிசா எதுவும் செஞ்சுடல்லே. யாரு வந்தாலும் செய்யற உதவிதான்… .. “
சிவகுரு எதிரே கண்களின் கலக்கத்துடன் அமர்ந்திருக்க, நான் கோப்புகளில் கையெழுத்துப் போடத் தொடங்கினேன். ஐந்து நிமிடங்கள் கழிந்ததும் என் செயலர் என அறைக்கு வந்து எனது சிபாரிசுக் கடிதத்தில் என் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டாள். அவளை அனுப்பிவிட்டு நான் அதை அவர் புறம் நகர்த்தினேன். சற்றே அதிர்ந்த விரல்களால் அதைப் பற்றி எடுத்துத் தம் கைப் பையில் பத்திரப்படுத்திக்கொண்டார்ர். பின்னர் எழுந்தார். கை கூப்பினார். நானும் எழுந்து நின்று, கை கூப்பி, “சரி!” என்று விடை கொடுத்தேன். பேத்தியுடன் நடந்தார்.
தளர்ந்த நடையில் கதவு நோக்கிச் சென்றவர், அது தானியங்கிக் கதவுதானென்றாலும், தேவையற்றுத் திரும்பி நின்று அதைச் சாத்துகிற முயற்சியில் போல் அதில் கை பதித்தவாறு ஆழமாக என்னை நோக்கினார். தலையை உயர்த்திப் பாராமலேயே அவர் என்னைப் பார்த்தது எனக்குத் தெரிந்தது. தலையை உயர்த்தி நான் அவரது பார்வையைச் சந்திக்கவில்லை. அவர் சென்று, கதவும் சாத்திக்கொண்ட பின்னர், கதவை வெறித்தேன்.
எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகான சந்திப்பு அது! மூன்று ஆண்டுகள் அவருக்கு மனைவியாய் வாழ்ந்த ஞாபகமே அருவருப்பைத் தந்தது. அந்த மனிதரைப் பிரிந்ததால் நான் எதையும் இழந்துவிடவில்லை என்று தோன்றியது. மாறாக, சில நல்ல சாதனைகளைப் புரிய முடிந்துள்ளது. அவரைப் பிரிந்த நிகழ்வால்தான் அது சாத்திய மாயிற்று! ஆண்டவன் என்னை வேறொரு நல்ல நோக்கத்துக்காகப் படைத்திருக்கையில், மண வாழ்க்கை நல்ல முறையில் எனக்கு எப்படி வாய்க்கும் என்றெண்ணிச் சிரித்தேன்!
வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நிகழும் ஓர் ஏமாற்றம் பின்னாளில் அதன் பிறிதொரு கட்டத்தில் மாபெரும் வெற்றியின் அறிகுறியாகவும், அதன் முதல் படியாகவும் ஆகிவிடுகிறது!
மாலதி எட்டிப் பார்த்தாள்.
“என்ன, மேடம்? மிஸ்டர் சிவகுருவும் நீங்களும் என்ன பேசினீங்கன்றதைச் சொன்னா, நாவலோட கடைசி அத்தியாயமா அதை எழுதிடுவேன்!”
இவ்வாறு சொல்லிவிட்டு மாலதி புன்னகை செய்தாள். நானும் சிரித்துவிட்டு எல்லாவற்றையும் அவளிடம் சொன்னேன். சொல்லிவிட்டு, “அந்த மார்கரெட் விவகாரம் பத்தி நீ கற்பனையா எழுதினது அப்படியே இருக்கட்டும். அவர் சொன்னதை எழுதிக் கதையை இப்ப மாத்தினா சுவாரசியம் கெட்டுடும். சரியா?”
அப்போது தொலைபேசியின் முரல் ஒலித்தது. எடுத்தேன்.
“மேடம்! நான் அசிஸ்டன்ட் எடிட்டர் (Assitant Editor) சக்திவேல் பேசறேன். நம்ம மகா பாரதம் ஆ·பீசைச் சுத்தி ஒரே ரவுடிக் கும்பல். நீங்க நேத்து ஒரு மினிஸ்டரோட நடத்தை பத்தி மாதர் மாநாட்டுக் கூட்டத்தில பேசினீங்கல்ல?. அதுக்காக நீங்க நேர்ல வந்து மன்னிப்புக் கேக்கணுமாம்! இல்லாட்டி நம்ம ஆ·பீசை அடிச்சு நொறுக்கிடுவாங்களாம்! .. .. ..”
“சரி. நீங்க வெச்சுடுங்க. நான் வறேன்னு சொல்லுங்க.”
நல்ல வேளையாக இப்போது பதவியில் இருக்கும் காவல்துறை ஆணையாளர் நேர்மையானவர். புதிதாக மாற்றலாகி வந்துள்ளவர். அமைச்சர்களுக்கே அவர் என்றால் சிம்ம சொப்பனம் என்று சொல்லுவார்கள். அவரோடு தொலைபேசினேன்.
“கவலையே படாதீங்க, மேடம்! துப்பாக்கியைக் காட்டினா குருவிக்கூட்டம் மாதிரி கலைஞ்சு பறந்துடுவாங்க! இதோ, இப்பவே ஆளுங்களோட கெளம்பறேன். நீங்க அந்த எடத்துக்கெல்லாம் போகாதீங்க. நான் போயிட்டு வந்து உங்களோட பேசறேன்!” என்றார் சியாமசுந்தர்லால் நட்கர்னி.
நான் கவலையுடன் நாற்காலி முதுகில் சாய்ந்துகொண்டு காவல்துறை ஆணையரின் தொலைபேசி அழைப்புக்குக் காத்திருக்கலானேன்.
/ முடிந்தது /
jothigirija@vsnl.net
- கடித இலக்கியம் – 19
- அதிநவீன மின் துகள் நட்சத்திரங்கள்
- பேச்சு
- திருப்பெரும்புலியூர் தலப்பெருமை
- கடிதம்
- மங்கையராகப் பிறப்பதற்கே..
- மக்களின் மொழி சம்ஸ்க்ருதம்
- நாசா விண்வெளித் தேடல் நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள்
- தமிழ் மக்களின் பழமொழிகளைத் தொகுத்துப் பதிப்பித்த தரமிக்கவர்கள்
- புதுக்கோட்டையின் இலக்கிய இயக்கங்கள் – ஆய்வு முன்னோட்டம்
- மெய்ப்பாட்டு நோக்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள் – (ஆய்வு முன்னோட்டம்)
- தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி -தொடர்ச்சி
- ஏலாதி இலக்கிய விருது 2006
- நளாயினி தாமரைசெல்வன் எழுதிய ‘நங்கூரம்’, ‘உயிர்த்தீ’ ஆகிய நூல்கள் வெளியீடும் ,அறிமுகமும்
- செங்கடலை தாண்டி- வஜ்ரா ஷங்கர் அறிய
- கடிதம்
- கள்ளர் சரித்திரம்
- நியூ ஜெர்சி திரைப்படவிழா
- பயங்கரவாதம் – பல தலையுள்ள பாம்பு – தேவை பலமுனை யுத்த தந்திரம், ஆயத்தம்
- என் – ஆர் – ஐ
- மூவேந்தரும் முக்குலத்தோரும் – சில விளக்கங்கள்
- வ னா ந் தி ர ரா ஜா
- மறுபடியும் ஒரு மகா பாரதம் – அத்தியாயம் – 35 ( முடிந்தது )
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-15)
- திண்ணை வாசகர்களுடன் தொடரும் உறவுகள்
- பின்நவீன ஜிகாத்தும் தலித்தும்
- எண்ணங்கள் – இந்துக்களின் நற்குணத் திரிபு, இஸ்ரேலின் தார்மீகப் போர், அரபு-அமெரிக்க பெண் உளவியலாளர், ஜிகாதுக்கு எதிராக முஸ்லீம்
- எண்ணச் சிதறல்கள் – நளினி ஜமீலா, அரவக்காவு, பெஸண்ட் நகர் டாபா, மாமியார்-மருமகள், மீன் குழம்பு, அம்மி-உரல்-குடக்கல்..
- வந்தே மாதரம் படும் பாடு
- கேட்பாரில்லாமல் கீழ்சாதிகளாக்கப்பட்ட சங்கத் தமிழர்
- ஓதி உணர்ந்தாலும்!
- சுதந்திர தேவியின் மகுடத்தில் ஒரு தூத்துக்குடி முத்து
- வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்
- பறவையின் பாதை
- மெய் காட்டும் பொய்கள்
- கீதாஞ்சலி (87) அவளைத் தேடிச் செல்கிறேன்!
- பெரியபுராணம் – 101 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (1-20)
- என்ன செய்து கொண்டு இருக்கிறோம்