மறத்தலும் மன்னித்தலும் (எனக்குப் பிடித்த கதைகள் – 41- மாப்பஸானின் ‘மன்னிப்பு ‘)

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

பாவண்ணன்


ஞாயிறு அன்றைய காலை நடையின் முடிவில் நானும் நண்பர்களும் சேர்ந்து தேநீர் அருந்தும் பழக்கம் உண்டு. மற்ற நாள்களில் நடக்கும் வழியிலேயே பார்த்துச் சிரிப்பதோடும் கையசைப்பதோடும் முடிந்து விடுகிற நடை ஞாயிறு மட்டும் கூடிப் பேசாமல் முடிவதில்லை. இதமான காலைக்காற்றின் வருடலுக்கிடையே, அவ்வளவாக கூட்டம் சேராத கடைமுகப்பில் நின்றபடி தேநீர் பருகுவது சந்தோஷமான அனுபவம். அப்போதுதான் ‘மன்னிப்பு என்றால் என்ன ? ‘ என்று கேட்டார் நண்பரொருவர். ‘ஒருவர் செய்த குற்றத்தையோ தவறையோ முழுக்க மறந்து ஏற்றுக் கொள்வதுதான் மன்னிப்பு ‘ என்றேன்.

‘குற்றத்தை எப்படி மறக்க முடியும் நண்பரே ? ஆறாமல் அப்படியே தங்கி விடும் நாவினால் சுட்ட வடுவைக் கூட மறக்க முடியுமா ? ‘

‘நன்றல்லதை அன்றே மறப்பது நல்லதல்லவா ? எதை எதற்கு பெரிய மூட்டையாக மனத்தில் சுமந்துகொண்டே திரிய வேண்டும் ? ‘

‘ஞாபகம் என்பதே கசப்பு மூட்டைதானா ? ‘

‘இனிய ஞாபகங்கள் தண்ணீரில் உப்பைப் போலவோ சக்கரை போலவோ மனத்துடன் இரண்டறக் கரைந்து விடுகிறது. கசப்பான ஞாபகங்களோ தண்ணீரில் எறியப்பட்ட கற்களைப் போல அடியில் தங்கிவிடுகின்றன. அல்லது பிளாஸ்டிக் பைகளைப் போல மிதந்து நாறத் தொடங்கி விடுகின்றன. தண்ணீரைச் சுத்தப்படுத்த மிதப்பவற்றையும் அடியில் தங்கி விடுபவற்றையும் அகற்ற வேண்டியது எந்த அளவுக்கு அவசியமோ, அதே அளவு மனத்தைச் சுத்தப்படுத்த கசப்புகளை மன்னிப்பதும் அவசியம் ‘

‘தவறுக்குத் தண்டனைதானே தீர்ப்பாக முடியும் ? மாறாக, தவறை மன்னிப்பதால் தவறு செய்தவன் மேலும் ஊக்கம் கொள்ள மாட்டானா ? ‘

‘தவறுக்குத் தண்டனை என்பது தீர்ப்பாகலாம். ஆனால் தவறை மன்னிப்பது என்பது திருந்தி வாழ மற்றொரு வாய்ப்பாக அமையும். தண்டிக்கப் பட்டவன் திருந்த வேண்டும் என்கிற அவசியமில்லை. திருந்தக்கூடும் என்கிற நம்பிக்கையும் இல்லை. ஆனால் மன்னிக்கப்பட்டவன் திருந்துவதற்கான வாய்ப்பு விழுக்காடு அதிகம் ‘

‘மன்னிக்கப்பட்ட கதைகள் ஏராளம் உண்டு. பாதிரியார் ஒருவர் வீட்டில் இரவு தங்க நேர்கிற திருடனொருவன் வெள்ளிக் குத்துவிளக்கைத் திருடிச் சென்று சந்தையில் விற்க முயற்சி செய்து காவலர்களிடம் அகப்பட்டு இழுத்துவரப்பட்ட போது, தானே அவ்விளக்கை அவனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்ததாகப் பாதிரியார் சொல்லி மன்னித்ததை மறக்க முடியுமா ? தன்னைக் காட்டிக் கொடுத்த சீடனை ஏசு மன்னித்த வரலாற்றை மறக்க முடியுமா ? ‘

எடுத்துச் சொன்ன பல உதாரணங்களை அரைகுறையாக நண்பர் கேட்டுக் கொண்டாரே தவிர நம்பியதற்கான அடையாளம் அவர் முகத்தில் தென்படவில்லை. ‘இதெல்லாம் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. செயல்முறையில் சாத்தியமா என்று புரியவில்லை ‘ என்று உதட்டைப் பிதுக்கினார்.

ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் அவராகவே இந்தப் பேச்சைத் தொட்டுத் தொடங்கினார். மாபெரும் தவறானாலும் மனிதர்களுக்கு மன்னிக்கிற குணமும் மனமும் இருப்பதைத் தெரிந்து கொண்டதாகப் பூரிப்புடன் சொன்னார். அவருடைய நண்பன் வாழ்வில் நடந்த சம்பவமொன்றே இந்த மனமாற்றத்துக்குக் காரணமென்று சொன்னார். அவன் தொழிற்சாலையில் வேலை செய்பவர். கிராமத்திலிருந்து சொந்தக்காரப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். தொடக்கத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மெதுமெதுவாக ஆடம்பரத்தின்பால் அவளுக்கிருக்கும் அளவுகடந்த ஆசையைப் புரிந்து கொண்டிருக்கிறான். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பயனில்லை. ஆனமட்டும் அவள் விரும்புகிற ஆடம்பரங்களுக்கெல்லாம் வசதிகளைச் செய்து கொடுத்திருக்கிறான். அவளுக்கு மேலும் மேலும் உயரே செல்லுகிற ஆசை. தொழிற்சாலையில் சாதாரண வேலையில் இருப்பவனுக்கு அந்த அளவு உயரத்துக்குத் துாக்கிச் செல்கிற சக்தி குறைவு. தற்செயலாக அருகில் இருந்த வீட்டில் வாடகைக்குக் குடிவந்த இளைஞனோடு அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த அறிமுகம் மெல்ல மெல்ல இருவர்களிடையேயும் நல்ல நெருக்கமாக வளர்ந்து விட்டது. அவளுடைய ஆடம்பரப் பிரியத்தைத் தீர்த்து வைக்கிற சக்தி அவனுக்கிருந்தது. ஏதோ ஒருநாள் திட்டமிட்டு இருவரும் ஒன்றாக ஊரைவிட்டுக் கிளம்பிச் சென்று விட்டார்கள். கணவன் மனம் உடைந்து போயிருக்கிறான். உறவுக்காரர்களின் வசைகள், கிண்டல்கள், கேலிகள் எல்லாவற்றையும் பல்லைக் கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டான். திடாரென சிலமாதங்களுக்குப் பிறகு அவள் மனம் திருந்தி வந்துவிட்டாள். உருக்குலைந்த கோலம். அவன் மனம் உருகி விட்டது. மன்னித்து எல்லாவற்றையும் மறந்து அவளை மீண்டும் மனைவியாக ஏற்றுக் கொள்வதில் அவனுக்கும் தயக்கமில்லை. அவனால் எப்படி மன்னிக்க முடிந்தது என்று நண்பருக்கு ஆச்சரியம். அடக்கிக் கொள்ள முடியாமல் கேட்டுமிருக்கிறார்.

‘கிராமத்துப் பொண்ணு சார். ஏதோ புதுசா பாத்ததும் கண்ணுமண்ணு தெரியாம தப்பு பண்ணிடுச்சி. நெருப்புன்னு தெரியாம கைய வச்சிட்டா, சுட்ட பிறகு அம்மான்னு கைய ஒதறிட்டு அழுவுற கொழந்த மாதிரி அழுதுகிட்டே வந்துட்டா. எல்லாம் அனுபவம்தானே. நா மன்னிக்கலன்னு வைங்க, தெரிஞ்சே மறுபடியும் நெருப்புலதான் உழணும். நாம ஆசைப்பட்டு கட்டி வந்த பொண்ணு நம்ம கண்ணு முன்னால அப்பிடி இருந்தா பாத்துட்டு நம்மால சோறு சாப்பட முடியுமா ? ‘ என்றானாம். இரவெல்லாம் அதையே யோசித்துப் பார்த்த நண்பர் அவனுடைய பெருந்தன்மையான மனத்தை நினைத்து வியந்து போனாராம். முன்பு பேசியதன் தொடர்ச்சியாக இதைச் சொல்ல வேண்டும் என்கிற ஆவலுடன் எல்லாவற்றையும் சொன்னார்.

மனைவியை மன்னித்த நண்பரின் விஷயம் நினைவுக்கு வரும்போதெல்லாம் மாப்பஸானுடைய ‘மன்னிப்பு ‘ என்கிற சிறுகதையும் நினைவில் படர்கிறது. ஒரே வித்தியாசம். இதில் மனைவி தவறு செய்த கணவனை மன்னிக்கிறாள். கதையில் ஒரு தம்பதியினர் இடம்பெறுகின்றனர். மனைவி பெர்த்தி அப்பாவி. அவ்வளவாக வெளிஉலக வாழ்வு தெரியாதவள். ஆனால் கணவன் ஜார்ஜ் மீது அளவு கடந்த பிரியமுள்ளவள். திடாரென்று ஒருநாள் காலை ஒரு மொட்டைக்கடிதம் அவளுக்கு வருகிறது. நகரிலேயே வசிக்கக் கூடிய இளம்விதவையான ஜூலி என்பவளுடன் ஜார்ஜூக்கு இருக்கும் கள்ள உறவைப் பிரஸ்தாபிக்கிற கடிதம் அது. படித்ததும் சுக்குநுாறாகக் கிழித்தெறியும் மனைவி மனக்குமுறலோடு அறைக்குள் படுத்துக்கிடக்கிறாள். மாலையில் வீடு திரும்பும் கணவனிடம் செய்தியைச் சொன்னதும் உள்ளூரப் படர்ந்த அதிர்ச்சியைக் காட்டிக் கொள்ளாமலே அவளுடைய கூச்ச சுபாவத்தின் காரணமாகவே பல ஆண்டுகளாக தோழியாக உள்ள ஜூலியை அறிமுகப்படுத்தவில்லை என்று சொல்லிவிட்டு அன்று மாலையே அவளிடம் அழைத்துச் செல்கிறான். கணவனின் கபடற்ற அன்பை நினைத்து மனம் பூரிக்கிறாள் பெர்த்தி.

எதிர்பாராத விதமாக ஜூலியின் வீட்டு மாடிக்கே வாடகை¢குச் செல்கின்றனர் தம்பதி. ஜூலியை உயிர்த் தோழியாக நினைத்து உறவாடுகிாறள் பெர்த்தி. தோழிகளின் பேச்சு நாள்தோறும் உல்லாசமானதாக இருக்கும். இரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் காய்ச்சலில் படுத்த படுக்கையாகிறாள் ஜூலி. மருத்துவம் பார்த்த டாக்டர் பிழைப்பது அரிதென்று சொல்லி விடுகிறார். தோழியைக் கட்டித் தழுவி அழுகிறாள் பெர்த்தி. அல்லும் பகலும் உண்ணக் கூடச் செல்லாமல் நோயாளிக்குத் துணையாக நிற்கின்றனர் இருவரும். குறிப்பிட்ட நாள் மாலை தன் உடல்நிலை சற்றே தேவலாம் என்றும் இருவரையும் சாப்பிட்டு வருமாறு சொல்லி அனுப்பி வைக்கிறாள் ஜூலி. வீட்டுக்கு வந்து சாப்பிட உட்கார்ந்த வேளையில் வேலைக்காரி ஒரு கடிதத்தைக் கொண்டு வந்து ஜார்ஜிடம் தருகிறாள். கடிதத்தைப் படித்ததும் அவன் முகம் வெளுக்கிறது. பதற்றத்துடன் ஒருநொடியில் வருவதாகச் சொல்லி விட்டு வெளியேறுகிறான். அவளை எங்கும் செல்ல வேண்டாம் என்றும் சொல்லி விட்டுச் செல்கிறான். குறித்த நேரத்தில் அவன் வராததால் எங்கும் வெகுதுாரம் போயிருக்கிறானோ என்பதைக் கவனிக்க அவனுடைய அறைக்குச் செல்கிறாள். வெளியே எங்கே சென்றாலும் கையுறைகளை அணிந்து செல்லும் பழக்கமுள்ள ஜார்ஜ் கையுறைகளை அன்று அணியாமல் சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியுறுகிறாள். அதே சமயத்தில் கீழே கசக்கி எறியப்பட்டிருந்த கடிதத் துண்டையும் பார்க்கிறாள். கடிதத்தை அவசரமாக நீவிச் சரியாக்கிப் படித்துப் பார்த்து அதிர்ச்சியுறுகிறாள். அது ஜூலி எழுதிய கடிதம். ஏஅன்பே, நான் சாகப் போகிறேன். ஒரே ஒரு நொடி, நீங்கள் மட்டும் தனியாக வாருங்கள். உங்கள் மடியில் தலைவைத்து உயிர்விட வேண்டும்ஏ என்று எழுதப் பட்டிருக்கிறது. பெர்த்தியின் நெஞ்சம் நடுங்குகிறது. இடைக்காலத்தில் இருவரும் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்ட பல பழைய விஷயங்கள் ஞாபகத்தில் எழுந்து குழப்பியடிக்கின்றன.

திரும்பி வந்த கணவனுடன் சகஜமாக அவளால் பேச முடியவில்லை. ஜூலியும் மரணமுறுகிறாள். பெர்த்தியின் வாய் அதன்பிறகு ஒரேயடியாக அடைபட்டு விடுகிறது. கண்களால் தன் கணவனை ஏறிட்டும் பார்ப்பதில்லை. வெறுப்பையும் கோபத்தையும் மறக்க சதாகாலமும் இறைவனைத் தொழத் தொடங்குகிறாள். ஓராண்டுக் காலம் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரிடையே எந்தப் பேச்சும் இல்லை. அவனை மன்னிக்கவும் முடியாமல் மறக்கவும் முடியாமல் அவஸ்தைப் படுகிறாள். கடுமையான மனஉளைச்சலுக்குப் பிறகு, எந்த ஜூலியால் தன் மனஅமைதி கெட்டதோ அதே ஜூலியின் கல்லறைக்குக் கணவனுடன் சென்று மலர்மாலை வைத்துப் பிரார்த்தனை செய்த பிறகு இருவரையும் மன்னிப்பதாகச் சொல்கிறாள். புது வாழ்க்கையைத் தொடரக் கணவனை அழைக்கிறாள்.

பரத்தையர் வீட்டுக்குச் சென்று திரும்பும் கணவன்மார்களைச் சலித்துக் கொண்டும் வசைபாடியும் மன்னித்து ஏற்றுக் கொள்ளும் மனைவிமார்களின் மனக்குமுறல்களைச் சங்கப் பாடல்களில் ஏராளமாகப் பார்க்கலாம். பெர்த்தியின் மனக்குமுறலைப் படிக்கும் போது உலகெங்கும் வாழும் பெண்களின் பெ முச்சே இலக்கியமாக மாறியிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஒருபுறம் துடிப்பும் கோபமும் மிகுந்த குமுறல். மறுபுறம் அனைத்தும் தணிந்த மன்னிப்பு.

பெண்கள் மட்டுமல்ல, ஒருவிதத்தில் ஆண்களும் இந்த இரண்டு புள்ளிகளுக்கிடையே மாறிமாறித் தாவிப் பறக்கும் பறவைகளாக இருக்கிறார்கள்.

*

உலகச் சிறுகதை எழுத்தாளர்களில் பிரெஞ்சு எழுத்தாளரான மாப்பஸானுக்கு முக்கியமான இடமுண்டு. பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு மக்களின் மனஉலகம் இவரது கதைகளெங்கும் பரந்திருக்கிறது. ‘மன்னிப்பு ‘ என்னும் இக்கதை உள்ளிட்ட மாப்பஸான் எழுதிய ஒன்பது கதைகள் கொண்ட தொகுப்பொன்றை 1955 ஆம் ஆண்டில் ‘முழுநிலவு ‘ என்கிற தலைப்பில் அன்புப்பண்ணை என்னும் பிரசுர நிறுவனம் வெளியிட்டது. மொழிபெயர்ப்பாளர் அகிலன்.

****

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்