ஞாநி
“இயற்கையிலேயே ஒரு மனிதனை நீண்ட காலம் வாழ வைப்பதற்கு நினைவை விட மறதிதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. மறதிதான் ஒரு மனிதனை வாழ வைக்கும். என் வீட்டில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியை நான் நிமிடத்துக்கு நிமிடம் நினைத்துக் கொண்டேயிருந்தால் அது என்னை நிம்மதியாக வாழவைக்காது. அதை மறந்து விடுகின்ற ஒரு நிலைமை ஏற்படும்போதுதான் , அறவே அல்ல, அவ்வப்போது அதை மறந்து விடுகின்ற ஒரு நிலைமை ஏற்படுகின்ற போதுதான் மனிதனால் தொடர்ந்து வாழ முடிகிறது.
மறதி இல்லாவிட்டால் மனிதனால் சுகமாக வாழ முடியாது. மறதி இல்லாமல் நினைவாற்றலே தொடர்ந்து இருக்குமேயானால், அடிக்கடி நினைவுகள் வந்து துன்புறுத்தும். எனவே அந்த நினைவுகளை விட்டொழித்து மறதியை நாம் வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறோம். மறதி வாழ்க.”
என்ன அற்புதமான வரிகள். ஒரு அசலான வாழ்வியல் தத்துவம்.
இவற்றைச் சொன்னவர் முழு நேர எழுத்தாளராக மட்டும் தன் நீண்ட வாழ்க்கையை செலவிட்டிருப்பாரேயானால்.. .. அவரை இலக்கியவாதியல்ல என்று சொல்லும் ஜெயமோகன்கள் எல்லாம் நிச்சயம் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள்.
தன் நீண்ட ஆயுளின் ரகசியத்தை இப்படி அண்மையில் வெளியிட்டவர் கலைஞர் கருணாநிதிதான். திருமண வீட்டில் அரசியல் பேசலாமா என்று ஜெயலலிதாவை ஒரு முறை கண்டித்தவர் தானே திருமண வீட்டு வாழ்த்துக் கூட்டங்களையெல்லாம் அரசியலுக்கு பயன்படுத்தியதை வசதியாக மறந்துவிட்டார். மறதிதான் தன்னை வாழவைக்கிறது என்று அவரே சொல்லிவிட்டாரே.
இந்த அற்புதமான வாழ்வியல் தத்துவத்தை அவர் 2004 நவம்பர் 3 அன்று பழக்கடை ஜெ.அன்பழகன் இல்லத் திருமணத்தில் வெளிப்படுத்தக் காரணம் என்ன ?
ஜெயலலிதா தன் நினவாற்றல் பற்றி அதற்கு ஓரிரு நாட்கள் முன்பு பெருமையடித்துக் கொண்டதுதான் காரணம். ஆளுநர் மாற்றம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் தன்னுடன் தொலைபேசியில் உரையாடியதை தான் டேப்பில் பதிவு செய்யவில்லை. நினைவாற்றலினால்தான் சொன்னேன் என்றார் ஜெயலலிதா. அவருடைய நினைவாற்றல் மீது எனக்கு ஐயமில்லை. சினிமாவில் ஒரு முறை கேட்டு விட்டு நீண்ட வசனங்களைப் பேசிய பயிற்சி உடையவர் என்பதால் அது சாத்தியம்தான். (சினிமாவில் நடித்திராத, வேத பாராயணம் செய்திராத, மெமரி ப்:ளஸ்கள் சாப்பிட்டிராத நெப்போலியனுக்கு அது எப்படி வாய்த்தது என்பதுதான் எனக்குப் புரியவில்லை.)
எனினும் ஜெயலலிதாவுக்கு செலக்டிவ் அம்னீஷியா உண்டு என்பதை கலைஞரே சுட்டிக் காட்டியது போல கோர்ட் விசாரணை பதில்கள் காட்டுகின்றன. பல கேள்விகளுக்கு ‘தெரியாது ‘ என்பதெ பதில். மறதி இருந்தால்தான் மனிதன் சுகமாக வாழ முடியும் என்ற தத்துவம் கலைஞருக்கு மட்டும் உரியது அல்லவே.
அனுபவத்திலிருந்து பெற்ற அறிவாகவே கலைஞர் அந்தத் தத்துவ முத்தை உதிர்த்தார் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. ஏனென்றால் பல கடந்த கால விஷயங்களை வசதியாக அவரும் மறந்துவிட்டு நாமும் மறந்திருப்போம் என்ற நம்பிக்கையிலேயேதான் அவரது இன்றைய அரசியல் ஓடிக் கொண்டிருக்கிறது. செலக்டிவ் அம்னீஷியா நமது அரசியல்வாதிகளின் தொழில் முறை வியாதி போலும்.
மத்திய உள்துறை அமைச்சருடன் பேசியதை ஜெயலலிதா வெளியிட்டிருப்பது அரசு ரகசியத்தை சத்தியப் பிரமாணத்தை மீறி வெளியிட்ட செயல். எனவே ஜெயலலிதா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கலைஞர் கருணா நிதியும் தி.மு.கவும் கோரின. தலைவருக்கு அம்னீஷியா இருந்தால் தொண்டர்களுக்கும் இருப்பதுதானே உண்மையான விஸ்வாசம். எனவே தன் அபாரமான நினைவாற்றலிலிருந்து காமராஜர் காலத்துக் கடந்த கால் சமபவங்களையெல்லாம் மேற்கோள் காட்டும் வல்லமை படைத்த சின்னக் குத்தூசிக்கும் ஜூனியர் விகடனில் இது பற்றி எழுதும்போது செலக்டிவ் அம்னீஷியா ஏற்பட்டு விடுகிறது. தி.மு.க தரப்பில் எல்லாரும் 1982ல் கலைஞர் கருணாநிதி எதிர்க் கட்சித் தலைவராக இருந்து கொண்டு அரசு ரகசியத்தை வெளியிட்டதை மறந்து விடுகிறார்கள். அரசு ரகசியத்தை அரசுதான் வெளியிடக்கூடது. மற்றவர்கள் வெளியிடலம் என்று ஒரு புதுத் தத்துவம் புறப்பட்டு வந்தாலும் வரலாம்.
அப்போது எம்.ஜி.ஆர் முதலமைச்சர். இப்போது கலைஞரை ஆதரிக்கும் ஆர்.எம்.வீரப்பன் அற நிலைய அமைச்சர். திருச்செந்தூர் கோயில் விடுதியில் கோவில் அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உண்டியல் பணத்தை அவர் திருடி மாட்டிக் கொண்டதாகவும் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஆர்.எம்.வீ முதல் அ.தி.முகவினர் எல்லாரும் பிரசாரம் செய்தார்கள். கலைஞர் கருணாநிதியும் தி.முகவும் இதை மறுத்தார்கள். உண்டியலில் இருந்த வைர வேலைத் திருடிக் கொண்டது வீரப்பன்தான் என்றும் அதைத் தட்டிக் கேட்ட நேர்மையான அதிகாரி சுப்பிரமணியப்பிள்ளை கொலை செய்யப்பட்டதாகவும் தி.மு.க குற்றம் சாட்டியது. உடனே விசாரணைக் கமிஷன் போட்டார் எம்.ஜி.ஆர். நீதிபதி சி.ஜெ.ஆர்.பால் அறிக்கையைக் கொடுத்துவிட்டு அடுத்த விமானத்தில் ஒரேயடியாக அமெரிக்கா சென்று செட்டிலாகிவிட்டார். கோவில் அதிகாரியின் மரணம் தற்கொலை அல்ல என்றும் கொலை என்றே சந்தேகிக்க இடமிருப்பதாகவும் அவர் அறிக்கை தெரிவித்தது. எம்.ஜி.ஆர் இந்த அறிக்கையை சட்டசபை முன்பு வைக்க மறுத்துவிட்டார். கலைஞர் கருணாநிதி அறிக்கையின் பிரதியைக் கைப்பற்றி நிருபர்களிடம் வெளியிட்டார். நீதி கேட்டு நெடிய பயணமாக மதுரையிலிருந்து திருச்செந்தூருக்கு 150 கிலோ மீட்டர் நடந்து சென்றார்.
அரசு ரகசியமான பால் கமிஷன் அறிக்கையை வெளியிட்டதாக எம்.ஜி.ஆர் குற்ரம் சாட்டினார். அதற்காக அரசு அதிகாரிகள் சதாசிவம் ( மொழி பெயர்ப்புத் துறை), இப்போதும் கலைஞரின் செயலாளராக இருக்கும் அன்றைய அரசு அதிகாரி சண்முக நாதன் இருவர் மீதும் எம்.ஜி.ஆர் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது.
அப்போது அரசு ரகசியத்தை கருணாநிதி வெளியிட்டதன் நியாயம் என்ன ? மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதுதான். அதை அரசு ரகசியம் என்ற பெயரில் மறைக்கக்கூடாது என்பதுதான். சரியான காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போதும் ஆளுநர் நியமனம் விஷயமாக மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நடக்கும் பேச்சுக்களில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதனால், அதை ( ரக்சியமாகவே இருந்தாலும்) வெளியிடுவதை நாம் நிச்சயம் வரவேற்க வேண்டும். அப்போதுதான் மத்திய- மாநில உறவுகள் உரிமைகள் பற்றி விவாதிக்க முடியும். இது போலவே ஜெயலலிதா தொடர்ந்து அதிரடைப்படை வீரப்பனை சுட்ட ரகசியங்கள், ராஜ்குமார் விடுதலைக்காக பணம் கை மாறிய ரகசியங்கள், அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது ஏன் என்ற ரகசியங்கள் எல்லாவற்றையும் வெளியிட வேண்டும் என்பதே நம்து கோரிக்கை.
அரசு ரகசியம் என்பதே அபத்தமானது. மக்களிடம் ஒரு அரசு எதையும் மறைக்கக் கூடாது என்ற நிலை இல்லாவிட்டால் அதற்கு ஜனநாயகம் என்ற பெயர் பொருத்தமற்றது. ராணுவ ரக்சியம், தேசப்பாதுகாப்பு ரகசியம் என்பதெல்லாம் கூட ஒரு வரம்புக்குள் இருக்க வேண்டியவை.
ராஜீவ் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் உள்துறை இணை அமைச்சராக இருந்தபோது பஞ்சாப் தீவிரவாதிகளுக்கு அனுப்பப்பட்டது என்று கருதப்பட்ட ஆயுத சரக்குப் பெட்டகம் டெல்லி விமான நிலையத்திற்கு ஆப்கானிஸ்தனிலிருந்து வந்தது. விமான நிலைய காவல் துறை இதை சோதனை போட்டுக் கொண்டிருந்தபோதே அதை ‘ரா ‘ உளவுத்துறை அதிகாரிகள் வந்து தங்களுக்கானது என்று எடுத்துச் என்று விட்டார்கள். அந்த பெட்டகத்தில் இருந்த ராக்கெட் லாஞ்சர் போன்ற சில ஆயுதங்கள் அடுத்த சில வாரங்களில் பஞ்சாபில் ஒரு தீவிர வாத குழுவால் பயன்படுத்தப்பட்டன. அவை வெடித்த சமயம்தான் நடாளுமன்றத்தில் பஞ்சாப் மாநில நெருக்கடி நிலை நீடிப்புக்கு ஒப்புதல் தீர்மானம் நிறைவேற வேண்டிய நாள். ஒப்புதல் தரப்பட்டுவிட்டது. இந்த ஒப்புதலுக்காக உளவுத்துறை ஏற்பாடு செய்த வேலை இது என்று அப்போது பத்திரிகையாளர் திரேன் பகத் அம்பலப்படுத்தினார். ( பின்னால் அவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார்.) அது பற்றி அவையில் கேள்வி எழுந்ததும், ப.சிதம்பரம் ஓர் அரசு தேசப் பாதுகாப்புக்காக சில விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். அவற்றைப் பற்றி அவையில் விவாதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக சொன்னார். அத்துடன் நம் பிரதி நிதிகள் அதை விட்டுவிட்டார்கள். எதெல்லாம் அரசு ரகசியம் பார்த்தீர்களா ? தீவிரவாதிகளுக்கு எதிரி நாடுகள் மட்டும் அல்ல நம் அரசே கூட உதவி செய்யும் என்ற விசித்திரங்கள் அரசு ரகசியம்தானே.
கல்பாக்கத்தில் அணுகுண்டுக்கான மூலப்பொருள் தயாராகிறது என்பதற்காக அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அன்றாட வேலையில் எந்த அளவு கதிர் வீச்சு ஏற்படுகிறது என்ற உடல் நல விவரங்களைக் கூட ராணுவ ரக்சியமாக ஆக்கி ஊழியர்களுக்கு நிர்வாகம் தர மறுப்பது மனித உரிமை மீறலே ஒழிய அரசு ரகசியம் அல்ல. விருதுக்கான திரைப்படத் தேர்வானாலும் நூலகத்துக்காக புத்தகம் வாங்கும் தேர்வானாலும், தேர்வுக் குழுவினர் யார் எவர், தேர்வின் அடிப்படை என்ன, விண்ணப்பித்த சினிமா/புத்தகப்பட்டியல், தேர்வானவற்றின் பட்டியல் எல்லாவற்றையும் அரசு பகிரங்கப்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு துறையிலும் அரசு ரகசியம் என்ற பெயரில் பலவற்றை மறைத்து வைப்பது மக்கள் நலனுக்கு எதிரானது.
ஆனால் தனக்குத் தேவைப்படும்போது அரசு ரகசியம் என்று கூக்குரல் எழுப்புவது, தேவைப்பட்டால் தானே அதை வெளியிடுவது என்பது நேர்மையான அரசியல் அல்ல.
மறதி இல்லாவிட்டால் நீண்ட நாள் வாழ முடியாது. நிம்மதியாக வாழ முடியாது என்ற கலைஞர் தத்துவம்தான் நமது அரசியலில் எல்லாருக்கும் வசதியான தத்துவமாக இருக்கிறது. மக்களும் மீடியாவும் கூட பலவற்றை மறந்துவிட்டால் அவ்ர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பல அபத்தங்களிலும் அராஜகங்களிலும் ஈடுபடுகிறார்கள்.
தமிழ் சினிமா பல தருணங்களில் செலக்டிவ் அம்னீஷியாவை நம்பியிருக்கிறது. படங்கலைப் பார்க்கும்போதே ரசிகர்களுக்கு ஓரளவு செலக்டி அம்னீஷியா இல்லையென்றால் பல படங்களைப் பார்த்து முடிக்க முடியாது.
எனவே சினிமக்காரர்கள் நடத்தும் விழாக்களிலும் செலக்டிவ் அம்னீஷியா இருக்கத்தானே செய்யும். ஜெயலலிதாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் சோ-சிதம்பரம் ஆகியோரின் அரசியல் நம்பிக்கை நட்சத்திரமான ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கும் அடிப்படை இதே மறதி தத்துவம்தான். ஜெயலலிதாவுக்கு எதிராக கடந்த காலத்தில் தான் பேசியது, சவால் விட்டது, மக்களை எச்சரித்தது எல்லாம் நமக்கு மறந்துபோய்விட்டிருக்கும் என்று நினைக்காமல் இப்போது அவர் ஜெயலலிதாவை அஷ்டலட்சுமியின் அருள் பெற்ற முதல்வராக வர்ணித்துப் பேசியிருக்க முடியுமா ? இந்த செலக்டிவ் அம்னீஷியாவின் விசித்திரம்தான் என்னே. போன வருடம், அதற்கு முன் வருடம், ஐந்தாண்டுகள் முன்பு நடந்தது எல்லாம் சுத்தமாக மறந்து போய் விடுகிறது. ஆனால் 30 வருடங்களுக்கு முன்னால் ரஜினி பிலிம் சேம்பரில் இன்ஸ்டிட்யூட் மாணவனாக ஜெயலலிதாவை ‘சைட் ‘ அடித்தபோது, அவர் அணிந்திருந்த கறுப்பு பார்டர் வைத்த புளூ புடவை, புளூ ரவிக்கை என்று துல்லியமாக எல்லாம் நினைவுக்கு வந்து விடுகிறது.
ரஜினி மட்டும் அல்ல. மற்ற சினிமாக்காரர்களுக்கும் இதே மறதி வியாதிதான். மன்னிக்கவும் அது வியாதி அல்ல வசதி அல்லவா. கலைஞர் கருணா நிதிக்கு பொது வாழ்க்கை பொன் விழா என்று இதே போல பல மணி நேரம் அசட்டு ஆபாச நடனங்களை நடத்தி அவரை கெளரவித்தது மறந்து போய் விடுகிறது. அந்த விழாவில் அவரைப் புகழ்ந்து தள்ளி சினிமாக்காரர்கள் பேசிய அத்தனை வசனங்களும் அன்றைய தினம் இரண்டு பேருக்கு மட்டும்தான் மறக்காமல் இருந்திருக்கும் – ஒருவர் கலைஞர். இன்னொருவர் ஜெயலலிதா.
கலைஞர் திருமண வீட்டில் தன் தத்துவ விளக்கத்தின் முடிவில் அண்ணாவின் புகழ் பெற்ற பொன்மொழியை விளக்கியிருக்கிறார். மறப்போம். மன்னிப்போம். மறந்தால்தான் மன்னிக்கமுடியும் என்பதால்தான் அண்ணா முதலில் மறக்கச் சொல்லிவிட்டு அப்புறம் மன்னிக்கச் சொல்லியிருக்கிறாராம்.
சிலவற்றை மறந்தும் மன்னிக்க முடியாது. சிலவற்றை மன்னித்தாலும் மறக்க முடியாது.
தீம்தரிகிட – நவம்பர் 16-30
dheemtharikida@hotmail.com
- கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
- கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!
- கடிதம் நவம்பர் 25,2004
- தமிழ் அரசியல்
- லீனா மணிமேகலையின் நான்கு ஆவணப்படங்களும் கலந்துரையாடலும்
- விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் நூல் வெளியீடும் விமர்சனக்கூட்டமும்
- கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்
- அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)
- கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்
- கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி
- சேதுசமுத்திரம் திட்டம் தொடர்பாக
- ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!
- தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்
- 2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி
- Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்
- பழைய சைக்கிள் டயர்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- தொலைந்து போன காட்சிகள்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- இந்த ஆண்டின் நாயகன்
- நரகல் வாக்கு
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005