மன்னரும் மல்லரும்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

கோ. தில்லை கோவிந்தராஜன்


“மாரத வீரர் மலிந்தநன் னாடு
மாமுனி வோர் பலர் வாழ்ந்த பொன்னாடு”
– என்பது தீர்க்கதரிசியாம் பார்வுலக தமிழின் சாரதி பாரதியின் வரிகள்.

வீரம் நிறைந்த இவ்விந்தியாவில் பல்வேறு வீரவிளையாட்டுக்கள் நடைபெற்றன. இவ்வீர விளையாட்டின் ஒருவகைதான் மல்யுத்தம்.

மல்:என்பதற்கு வலிமை, மற்றொழில், எனப் பொருள் வழங்கின்றன தமிழில், இம் மல்யுத்தம் தமிழ் இலக்கியங்களில் ‘மல்லாடல்’ என வழங்கப்படுகின்றன. மேலும் இவ்வாடல் இதிகாசங்கள், புராணங்களிலும் குறிக்கப்படுகின்றன.

மன்னர்கள் தங்கள் எதிரிகளை களத்தில் கண்டு மல்யுத்தம் புரிந்துள்ளனர். போர்க்காலங்கள் அல்லாத காலத்தில் தம் அரசவையின்கண் மல்யுத்தம் செய்யும் வீரர்களை யுத்தம் செய்ய செய்து அவர்களின் திறமைகளை கண்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

சங்க இலக்கியத்தில் ‘மல்லாடல்’

“இன்கடுங் கள்ளி னாமூ ராங்கன்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகான் மார்பொதுங் கின்றே யொருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே
நல்கினு நல்கா னாயினும் வெல்போர்ப்
போரருந் தித்தன் காண்கதி லம்ம
பசித்துப்பணை முயலும் யானை போல
இருதலை யொசிய வெற்றிக்
களம்புகு மல்லற் கடந்தடு நிலையே”

என்பதை ஆமூர் மல்லனுக்கும் உறையூரில் வாழ்ந்த தித்தன் என்ற சோழனுக்கும் இடையில் ஏற்பட்ட மல்யுத்தத்தினைப் பற்றி நிகழ்ச்சியைப் இப்புறபாட்டில் காணலாம்.1

“பொய்கை நீர்நாய்ப் புலவுநா றிரும்போத்து
வாளை நாளிரை தேரும் ஊர
நாணினென் பெரும் யானே பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர்தலைக் கொண்ட வாரியப் பொருநன்
இறைத்திரண் முழவுத்தோள் கையகத் தொழிந்த
திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணைய நாணி யாங்கு மறையினண்
மெல்ல வந்து நல்ல கூறி
மையீ ரோதி மடவோ யானுநின்
சேரி யேனே யயலி லாட்டியே
னுங்கை யாகுவெ நினக்கெனத் தன்கைத்
தொடுமணி மெல்வீரற் றண்ணெனத் தைவர
நுதலுங் கூந்தலு நீவிப்
பகல்வந்து பெயர்ந்த வாணுதற் கண்டே2.

என்பதையும் ஆரியபொருநனை பாணன் என்ற அரசன் மல்யுத்தம் செய்து வெற்றிபெற்றான் என்ற நிகழ்ச்சியை அகப்பாடலில் காணலாம்.

பிற இலக்கியங்களில் மல்லாடல்

கோமகன் இயற்றிய கோவலன் கதைகூறும் காப்பியமாம் சிலம்பில்

“அவுணற் கடந்த மல்லின் ஆடலும்” என மல்லாடல் வாணனுக்கும், கண்ணனுக்குமிடையில் நிகழ்ந்ததை விளக்கும்.3

“மல்லொடு கஞ்சனுந் துஞ்சவென்ற மணிவண்ணன்”4

கலித்தொகை நெய்தற்கலியில்

“மல்லரை மறம் சாய்ந்த மலர்தண்தார் அகலத்தோன்
ஒல்லாதார் உடன்றுஓட, உருத்து, உடன் எறிதலின்
கொல் யானை அணிஙதல் அழுத்திய ஆழிபோல்”5

மாயவனுக்கும், அசுரர்களுக்குமிடையில் நடைப்பெற்ற மல்லாடல் விளக்கப்பட்டுள்ளது.

மல்லன் முன் மறம் செய்யவந்தவன் தோற்றம்

“கண்டான் மலைந்தான் கதிர்வானம் காட்டியே
கொண்டான் பதாகை மறமல்லன் – வண்டார்கும்
மாலை துயலும் அருவிய மாமலை
போலுந் திரள்தோள் புடைத்து”

மல்லன் முன் மறம் செய்ய வந்தவன் அருவிநீர் வீழ்கின்ற மலையினை ஒத்தவனாகவும், வண்டினங்கள் சூழ்ந்துள்ள மாலையை அணிந்த திரண்ட தோள்களை கொண்டவனாக இருந்தான் என புறப்பொருள் வெண்பாமாலை இயம்புகின்றது.6

சோழர்காலத்தில் தட்டுப்போர்

சுந்தரசோழனின் கல்வெட்டொன்று மறவன் தூங்கானை என்ற பராந்தக வளநாடுடையானும் அவன் மைத்துனன் வானராயர் அரவிந்தன் இராசாதித்தனும் தங்களுக்குள் தட்டுப் போர் தொடங்க அதில் வாணராயர் தோற்கடிக்கப்பட்டு மாண்டு போனான். அவன் ஆன்மா அமைதி பெற வாலிகண்டபுரம் கோயிலில் அவனை அழிந்தவனான மறவன் தூங்கானை என்பவன் நொத்தாவிளக் கொன்று எரிக்க வேண்டுமென ஆணையிடப்பட்டது.7

உத்தம சோழனும் மல்லனும்

“தஞ்சாவூர் மஞ்சனத்தார் வேளத்து மல்லன் அரங்கன்” என்ற கல்வெட்டில் காணப்படும் செய்தியிலிருந்து சோழர் காலத்திலேயே மற்போர் வீரர்கள் அடங்கிய பகுதி இருந்ததை அறியலாம்.8

காப்பியங்களில் மல்லர்

“மல்லலைத் தெழுந்து வீங்கி மலைதிரண்டனைய தோளான்
அல்லலுற் றழுங்கி வீழ்ந்த வமிர்தமன் னாளை யெய்திப்
புல்லிக்கொண் டவல் நீக்கிப் பொம்மல்வெம் முலைமி னாட்குச்
சொல்லுவா னிவைகள் சொன்னான் சூழ்கழற் காலி னானே”

மற்றொழிலை வருத்தி எழுத நீண்ட மலைதிரண்டனைய தோளானாகிய கழற்காலினான் என (மற்றொழிலை) சிறப்பித்து கூறப்படுகிறது.9

சீற்றத் துப்பிற் செருவனைப் புகலும்
ஆற்றல் சான்ற வரசரு ளரிமாத்
துன்னரு நீண்மதிற் றுவரா பதிக்கிறை
மன்னரை முருக்கிய மதிய வெண்குடைப்
பொங்கு மலர் நறுந்தார்ச் சங்கர வரசனும்
மல்லனென்றும் வெல்போர் விடலையும்
தானை மன்னரை மானம் வாட்டிய
ஊனிவர் நெடுவே லுருவக் கழற்காற்
பொங்குமயிர் மான்றேர்த் திருநகர்க் கிறைவன்

– விடலை என்பது இளமையானவனை குறிக்கும்.10

“பண்டம் புதைத்த வண்டுபடு வளநகர்
மடையரு மகளிரு மல்லரு மமைச்சரும்”11

மல்லர்களின்மற்ற பணிகள்

மல்லர்கள் மல்யுத்தம் செய்வது மட்டுமின்றி மன்னர் குலத்தினருக்கு மஞ்சனமாட்டுதலும், உடம்புதவி (அபிடேகஞ் செய்து) நீராட்டுதல் முதலியவற்றை செய்தனர்.

“முலைமுகஞ் சுமந்த முத்தத் தொத்தொளிர் மாலையாரும்
மலை முகந் தனைய மார்பின் மன்னனு மிகுந்த போழ்திற்
கொலைமுகந் களிற னாற்கு நாழிகை சென்று கூறக்
கலைமுக மல்லர் புல்லிக் கமழுந் ராட்டி னாரே”12

மல்லர்கள் பல்லக்கு தாங்குதல்

‘மல்லர் பூண்ட மாடச் சிவிகை
பல்வளை யாயத்துப் பைந்தொடியேறலும்’

பலவகையான வளையல்களை அணிந்த13 பைந்தொடியால் ஏறும் பல்லக்கினை மல்லர்கள் தாங்கிவந்தனர்.

மராட்டிய அரசர்களின் அவையில் மல்லர்கள்

போன்ஸ்லே வம்சத்து அரச வம்சத்தினரான மராட்டிய அரசர்கள் அவையில் மல்லர்கள், மல்லுஜெட்டி, மல்லுகஜெட்டி, வள்தாத் என்று அழைக்கப்பட்டனர். மல்லுகஜெட்டி என்பது குடிபெயராகும், வஸ்தாத் என்பது சிறப்பின் காரணமாக வந்தது.

இம் மல்லர்களைப் பற்றிய மராட்டிய ஆவணங்களான மோடி ஆவணங்கள் மூலம் பல தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.

“கி.பி.1803 மகாராஜா சபையில் 10ஜோடி மல்லுஜட்டிகள் குஸ்தி போட்டதற்கு இனாம் 720சக்கரமும், 1846-ல் நவராத்திரியில் திவான் சாகேப் மகாராஜ சபையின் மேற்குப் பக்கம் மேடையிட்டுச் சண்டையிடும் குத்துச் சண்டை வீரர்கள் சண்டையிடச் செய்த வகையில் இனாம் 350 கொடுக்கப்பட்டுள்ளது.14

“சகம் 1208 கி.பி.1807ஆம் ஆண்டு நவராத்திரி சதரை (தர்பார்) ஒட்டிய மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்ட மல்யுத்த வீரர்களுக்குச் செலவு செய்ய இசை வாணை – போட்டியாளர்கள் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜெட்டிகள் (வஸ்தாத் இன ஆண்கள்) மங்களுரிலிருந்து வந்த மல்யுத்த வீரர்கள் ஜெட்டி மல்யுத்த வீரர்கள் பத்து ஜோடிக்கு 76 சக்கரமும், ஜுலானி மல்யுத்த வீரர்கள் 3 ஜோடிக்கு 12 சக்கரமும் அன்பளிப்பாக கொடுத்தார்கள்.15

“கி.பி.1845 ரெஸிடெண்ட் சாஹேப் மூலாம் ஜோல்ஜர்கள் சண்டை போடுகிற விதத்தைப் பயிற்சி செய்ய கோவிந்த ஜெட்டி, சுப்பாஜெட்டி என்பவர் திருச்சினாப்பள்ளிக்கு போனதற்கு படிச்சிலவு இனாம் ரூ.5”

– எனக் குறிப்பிட்டப்படுகிறது.16

“இரண்டாம் சரபோஜி காலத்தில் அவரிடம் வேலை பார்த்தவர்களில் மல்லு ஜெட்டிகள் 147 பேர்கள்” என ஒரு ஆவணம் கூறுகின்றது.17

இம்மல்லர்கள் மல்யுத்தம் மற்றும் அல்லாமல் காவல் காக்கும் பணியிலும் அமர்த்தப்பட்டதாக ஒரு ஆவணம் பகர்கின்றது. “அன்னசத்திரம் கோட்டை தஞ்சாவூர் சாமான்கள் கிடங்கிலும் மேலும் பிராம்மண போஜனம் நடக்குமிடத்திலும் பாராதருவது” நாளுக்கு இருவர் வீதம் அமர்த்தப்பட்டிருந்தனர்.18

மல்லர்கள் பயிற்சி செய்யுமிடம்

இவ்விடம் கவாத்துகானாயை பெற்றது “தாலிம்கானா” என்பது குஸ்தி செய்யுமிடமெனப்பட்டது19. “கி.பி.1849-ல் நவ வித்தியாகலாநிதி பள்ளிக்கூடத்திற்குப் போதி பௌர்ணிமைக்காக கவாத்துப் (மல்லர்கள் செய்யும் பயிற்சி) பூஜைக்காக ரூ.0.13 கொடுக்கப்பட்டதை ஒரு ஆவணம் சுட்டுகின்றது.20

இக்கவாத்துக்கு “கெருடி” என்ற பெயரும் வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை நகரில் அமைந்துள்ள சாமந்தான் குளத்தின் தென்கரையில் இம்மல்லர்கள் பயிற்சி செய்யும் ‘கெருடி’ ஓன்று சில காலம் வரை இருந்தது.21

ஓவியத்திலும் – சிற்பத்திலும்

மராட்டிய மன்னரின் அவைகளத்தில் (தர்பார்ஹாலில்) சுவற்றில் வடக்கு தெற்கு ஆகிய ஜன்னல் அமைந்துள்ள இடத்தில் மல்லர்கள் கையில் ‘வஜ்ஜிரமுஷ்டி’ எனப்படும் முள்ளு போன்ற ஆயுதம் தாங்கி சண்டை செய்வதாக வரையப்பட்டுள்ளது.

மேலும் இம்மண்டப தூண்களில் சுதைச் சிற்பங்களில் இம்மல்லர்கள் உருவங்கள் காட்டப்பட்டுள்ளன இவர்களுக்கு கீழ் சிறிய உருவில் இவர்களின் உதவியாளர்கள் சுட்டப்பட்டுள்ளனர். இவ்விரு சுதை உருவங்களும் கிழக்கு திசை நோக்கி காண்பிக்கப்பட்டுள்ளன. ஓவியத்தில் நெற்றியில் சிவ (பட்டை) சின்னமும், சுதையில் காணும் சிற்பத்தின் நெற்றியில் வைணவ சின்னமும் அணிந்துள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில்

இக்கோயிலில் முருகன் சந்நிதியில் முகமண்டபத்தில் சுவரோவியத்தில் இம்மல்லர் உருவம் தீட்டப்பட்டுள்ளது.

இராமநாதபுரத்தில்

இராமநாதபுரம் சேதுபதிகளின் அரண்மனையில் முகமண்டபம் மேற்கு சுவற்றில் கிழக்கு நோக்கி இம்மல்லர்களின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன.

குடந்தையில்

கும்பகோணம் கும்பேஸ்வரர் திருக்கோயில் விமானத்தில் தெந்திசை பகுதியில் தென்மேற்காக இம்மல்லர்கள் உருவம் சுதையினால் வடிக்கப்பட்டுள்ளதை இன்றும் நாம் காணலாம்.

பாபர் நாமாவில்

பாபரின் வாழ்க்கைக் குறிப்புகள் அக்பர் காலத்தில் 16 நூற்றாண்டில் இறுதிப் பத்தாண்டுகளில் இந்நூலுக்குச் சிறந்த சித்திரங்களுடன் கூடிய நகல்கள் செய்யப்பட்டதில் மல்லர்களின் மற்போரையும், விலங்குகளின் சண்டைகளையும் பாபர் பார்ப்பதாக வரையப்பட்டுள்ளது.22

தமிழ்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரின் நினைவு மஞ்சரியில் மல்லர்

உ.வே.சாமிநாதைய்யர் தமது நினைவு மஞ்சரி முதல் பாகத்தில் “மல்லரை வென்ற மாங்குடியார்” என்ற தலைப்பில் மல்லரைப் பற்றியும் அவரை வெற்றி பெற்ற மாங்குடி சேர்ந்த கைலாசையர் பற்றி விவரித்துள்ளதின் சுருக்கத்தினை கீழே குறிப்பிட்டுள்ளேன்.

“அரண்மனையில் நவராத்திரி உத்ஸவம் நடைபெறும் ஒரு வருஷம் நவராத்திரி விழாவிற்கு வட நாட்டிலிருந்து மல்லர் ஒருவர் தம்பரிவாரங்களுடன் வந்திருந்தார். மல்லர் மற்றபகுதியிலிருந்து வந்த மல்லர்களை தம்முடன் யுத்தம் செய்ய அழைத்தார். பொது மக்களும் பார்வைக்கும் அனுமதிக்கப்பட்டனர்.

அந்த வடநாட்டு மல்வீரரது வெற்றி யுத்ஸாகத்தையும் கண்டபோது அரசரது உள்ளத்தே வருத்தமுண்டாயிற்று; ‘இவரை ஜெயிப்பதற்கு நமது ஸமஸ்தானத்தில் ஓர் ஆள் இல்லையே என்ற எண்ணமே அதற்கு காரணம்.

“அரசரோ மல்விளையாடும் இடத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் திடீரென்று அவர், “அவர் அந்தக் கூட்டத்துக்கு நடுவில் ஒரு பெரிய மூட்டை தெரிகிறதே; அங்கே சுமைதாங்கி இல்லையே. அங்கே அவ்வளவு பெரிய மூட்டை இருக்க காரணமென்ன? எனக் கேட்பார்.”

மந்திரியாரை விட்டு அங்கே பார்த்துவர செய்தார். அப்பொழுது அரசுக்கு செலுத்த வேண்டிய நெல்மூட்டை சுமந்துள்ளார் எனவும் அவர் அதைச் சிறிதும் கஷ்டமில்லாமல் சுமந்து கொண்டு நிற்கிறார். கீழே இறக்க வேண்டியது அவசியமில்லை என்று சொல்லுகிறார்.

அத்தகைய மனிதரை நாம் பார்க்க வேண்டும் என அரசர் உத்தரவிட்டார்.

அரசரின் அழைப்பையேற்ற கைலாசரும் சென்றார். அரசர் நீர் மல்யுத்தம் செய்வீரா எனக் கேட்டார். அதற்கு கைலாசரும், பேஷாகச் செய்வேன் என்றார். அரசர் இப்பொழுதே செய்வீரா? என கேட்டார். அதற்கு அவர் மகாராஜா உத்தரவிட்டால் செய்யத்தயார் என்றார்.

அரசர் அதற்கு வேண்டிய உடுப்பு ஒன்றும் இல்லையே; சட்டை சல்லடம், வஜ்ர்முஷ்டி முதலியவை வேண்டாமா? எனக்கேட்டார். கைலாசையர் சிரித்தார் “அவையெல்லாம் அநாவசியம். வேஷ்டியை வரிந்து கட்டிக் கொண்டு இவனுக்கு முன்னே நின்றால் அடுத்த நிமிஷமே இவன் மண்ணைக் கவ்விக் கொள்வதில் சந்தேகமில்லை என்றார்.

மல்லரும் கைலாசய்யரும்

கைலாசரை நோக்கி மல்லர் ஆரவாரம் செய்து கொண்டு வேகமாக ஓடி வந்து வஜ்ர முஷ்டியணிந்த தம் வலக்கையை அவருடைய இடப்பக்கத்தில் குத்தினார். அந்தக் குத்துத் தம் மேல் படுவதற்கு முன் அக்கையை அப்படியே தம் இடக்கையால் கைலாசையர் பற்றிக் கொண்டார். மல்லர் வலப்பக்க விலாவில் இடக்கையைக் கொடுத்து அவரைத் தள்ள முயன்று கையை நீட்டினார். அந்தக் கையைக் கைலாசையர் தம் கட்கத்தில் இறுகச் சிக்க வைத்துக் கொண்டார். இரண்டு கைகளையும் அவர் பற்றிக் கொள்ளவே மல்லர் தம் வலக்கை இழுத்து மீட்டும் குத்த எண்ணினார் கை வந்தால் தானே மேலே போராடலாம்?

அவரால் போராட முடியாத நிலை வந்ததும் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டார். அப்படியே மகராஜவிடமும் ஒப்புக் கொண்டார்.

அரசருக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதால் கைலாசைய்யரை புகழ்ந்து பாராட்டினார். அவரிடம் நீர் இன்று முதல் ராஜாங்கத்தைச் சேர்ந்தவர்களாகி விட்டீர்கள் என்று மனமுவந்து கூறி பலவகையான பரிசுகளை வழங்கினார்.

பரிசுபெற்ற மல்லரும், கைலாசரும் சிலகாலம் அரசவையில் தங்கினர். பின்னர் இருவரும் அரசரிடம் விடைப் பெற்றுக் கொண்ட போது மல்லர் அரசரைப் பார்த்து, “ஒருபிராத்தனை” என்றார்.

இவ்வளவு பலம் பொருந்திய இந்தப் பிராமண சிரேஷ்டருடைய ஊரையும் உறவினர்களையும் பார்க்க வேண்டுமென்றார். அதற்கு அரசரும் உத்தரவு அளித்தார்.

மாங்குடியும் மல்லரும்

கைலாசைய்யர் தம்முடன் மல்லரும் 20 பேர்களும் மாங்குடி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பழையது ஸ¤த்தம் செய்து வைக்கும்படி சொல்லியனுப்பினார். அப்படியே அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் முன்னதாகவே நிறை அன்னம் வடித்து நீரிற் போட்டிருந்தார்கள்.

வந்தவர்களுக்கெல்லாம் இலைகள் போடப்பட்டன உப்பும், மாங்காய், நார்த்தங்காய், இஞ்சி முதலிய ஊறுகாய்களும், பழங்களிலும் பரிமாறப்பட்டன. அதற்கு பிறகு பழையதைப் பரிமானார்கள். பிறகு ஒருவர் ஊறின எள்ளைக் கொணர்ந்து ஒவ்வோர் இலையிலும் ஒருகைப் பிடி எடுத்து வைத்துச் சென்றார்.

வந்தவர்கள் சாதத்தைப் பிசைந்து கொண்டார்கள். ஊறுகாயையும் சுவைத்துப் பார்த்தார்கள். அந்த எள்ளை என்ன செய்வது என்பது அவர்களுக்கு விளங்கவில்லை. ஒருவரையொருவர் பார்த்து விழித்தார்கள். தலைவராகிய மல்லர் கைலாசையரைப் பார்த்து “இதை என்ன செய்வது?” என்று கேட்டர்.

“அதுதானே உடம்புக்குப் பலம்? அப்படியே எடுத்துச் சாதத்தில் பிழிந்து கொண்டால் எண்ணெய் வரும். இந்தப் பழையதும் எண்ணெயும் சேர்ந்தால் நரம்புக்கு அதிக வன்மை உண்டாகும்.”

விருந்தினர்கள் எள்ளையெடுத்துப் பிழிந்தார்கள். ஊறின ஜலந்தான் வந்ததேயொழிய எண்னெய் வரவில்லை. அதற்குரிய பலம் அவர்களிடம் இல்லை. மல்லர் தலைவராலும் பிழிய முடியவில்லை. அதைப் பார்த்துக் கொண்டேயிருந்த கைலாசையர் அங்கே நின்ற ஒரு பையனைப் பார்த்து, “அடே, இந்த எள்ளைப் பிழிந்து வை” எனக் கட்டளையிட்டார். அவன் ஒவ்வோர் இலையிலும் இருந்த எள்ளை எடுத்து அப்படியப்படியே சாதத்தில் பிழிந்து சக்கையைப் போட்டுவிட்டான். அவன் சரசரவென்று வரிசையாக எல்லோருடைய இலையிலும் இருந்த எள்ளை இவ்வாறு பிழிந்து சென்றதைப் பார்த்த போது அவர்களுக்கு, ‘அடேயப்பா! இங்கே எல்லோரும் இரும்பால் உடம்பு படைத்தவர்கள் போலல்லவோ தோன்றுகிறது என்று தம்முள் நினைத்துக் கொண்டார்கள்.

‘ராஜாங்கம்’ என்ற பட்டமும்

கைலாசையர், அவருக்குப்பின் அவர் மகன் அண்னாவையருக்குப் பின் அப்பரம்பரையில் உதித்தவர்களும் ‘ராஜாங்கம்’ என்ற பட்டத்தை வகித்து வருகின்றனர்.

இவ்வரலாறுகள் தஞ்சாவூர் ஜில்லாவில் ஊர்தோறும் வழங்கும். இளமையில் இவற்றைப் பலர் வாயிலாகக் கேட்டதோடு இப்பரம்பரையினரும் சிவபக்திச் செல்வருமாகிய ராஜாங்கம் ஸ்ரீபிரணதார்த்திஹர ஐயர் என்பவர் கூறவும் கேட்டிருக்கிறேன் என உ.வே.சாமிநாதைய்யர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வட இந்தியாவில் மல்லா அல்லது மல்லர்

வட இந்தியாவில் மல்லர் இனமக்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டு பல அரசுகள் உருவாக்கப் பெற்றிருந்ததாகவும் புத்த சமய நூல்களிலிருந்து அறிய முடிகின்றது. அவ்வரசுகள் மொத்தம் 16 அரசுகள் இருந்தன. அவை மகாசனபதங்கள் (Mahajanapadas) எனப்பட்டனவென்றும் வடமொழியில் அவற்றை சோ மகாசனபதங்கள் எனக் (Sodasa mahajanapadas or 16 kingdoms) கூறினர். அவற்றில் 6வது அரசு மல்லா (கோரக்பூர் மாவட்டத்தில்) இருந்துள்ளது.

மல்லர்கள் பாவா நகரத்தினர் எனவும் குசி நகரத்தினர் எனவும் இருவகைப்பட்டனர். மகாவீரர் பாவாவிலும், புத்தர் குசி நகராவிலும் இறந்தனர். பாவா மல்லர்கள் புதிய பாராளுமன்றத்தை ஏற்படுத்தினார் அது உவாதகா எனப்பட்டது. ஆனந்தா போன்ற புத்தமதத் தலைவர்கள் மல்லர்களைச் சார்ந்தவர்களே. குசிநகரம் மல்லர்களின் தலைநகராகும். மகதப் பேரரசர் அசாதசத்துருவை எதிர்க்க விரிச்சி இன மக்களும் மல்லர் இன மக்களும் ஒன்றாகக் கூடினர் என்று தெரிகின்றது.24

ஸ்ரீமல்லாரி மஹாத்மியம்

மல்லன் என்ற அசுரன் மார்த்தாண்ட பைரவரிடம் (சிவனை) சண்டை செய்ய வந்தான்.

விஷ்ணு மல்லஅசுரனிடம் சென்று சிவனின் சார்பாக பேசினார் நீ இறைவனிடம் தஞ்சம் அடைந்து பிதுர் உலகத்திற்கு (பாதாள லோகத்திற்கு) சென்றுவிடு என்று கூறினார். ஆனால் அசுரர் அதனை ஏற்காமல் மார்ஹ்த்தாண்ட பைரவரிடம் சண்டை செய்தான். மார்த்தாண்ட பைரவரின் கால் மல்லனின் தலையில் தொட்டதும் அவனின் உள் மனம் விழித்துக் கொண்டதால் இன்னிசையால் அழகாக இறைவனை துதித்தான்.25

மல்லர்கள் தஞ்சை, பட்டீஸ்வரத்தில் குடியமர்வு

தஞ்சையில் மல்லுகஜெட்டி, வஸ்தாத் என்ற பெயரில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பட்டீஸ்வரத்திலும் இவர்கள் தற்பொழுதும் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் மருத்துவர், மற்றும் உயரிய பதவிகள் வகித்து வருகின்றனர்.

இவ்வினத்தினை சேர்ந்த திரு.ராஜன் என்பவர் முன்னாள் செய்தி சேகரிப்பாளர், அகில இந்திய வானொலி நிலையத்தில் பணியாற்றியவர். இவர் முன்னோர்கள் விஜயதசமி காலத்தில் வஜ்ரமுஷ்டி போன்ற ஆயுதங்களை சாமி படத்திற்கு முன்பு வைத்து படையல் இடுவார்கள் என்றும் அவரின் வீட்டிற்கு பின்புறம் கெருடி இருந்ததாக உரையாடலில் தெரிவித்தார்.

மன்னர் காலத்தில் வஸ்தாசாவடி

மராட்டிய மன்னர் காலத்தில் இம்மல்லர்களுக்கு தானமாக சில இடங்களை அளித்துள்ளனர். இவ்விடம் இன்றும் கீழ வஸ்தாசாவடி, மேல வஸ்தாசாவடி என்று இம்மரபினரின் பெருமைகளை தஞ்சாவூரில் எடுத்து இயம்புகின்றன.

அடிக்குறிப்புகள்

1. புறநானூறு; உ.வே.சாமிநாதைய்யர், பாடல் 80, வரிகள் 9, பக்கம் 193.
2. அகநானூறு; பாடல் 386, மருதம், பரணன், வரிகள் 1-15
3. சிலம்பு: கடலாடு காதை: 3 மாதவியின் பதினோர் ஆடல்வரிகள் 44-45, தமிழர் வளர்த்த அழகு கலைகள், மயிலை.சீனி.வேங்கடசாமி பக்கம்.126
4. திவ்.பெரியந்தாதி 11-2-3 லெக்ஸிகன் Vol.V
5. கலித்தொகை – நெய்தற்கலி – வரிகள் 1-3
6. புறப்பொருள் வெண்பாமாலை; 13, ஒழிபு, 345 – பக்கம் 304
7. எழில் கொஞ்சும் எறும்பியூர், டாக்டர் இரா.கலைக்கோவன் பக்கம். 181
8. கல்வெட்டு கலைச் சொல் அகரமுதலி சி.கோவிந்தராஜனார் பக்கம்.405 S.I.I Vol XIX No.193
9. சீவகசிந்தாமணி, உ.வே.சாமிநாதைய்யர் 1. நாமகளிலம்பகம், பாடல் 268, பக்கம்.139.
10. பெருங்கதை; உ.வே.சாமிநாதைய்யர் ந.மகதகாண்டம் 17.இரவெழுந்து வரிகள் 27-35
11. மேற்படி நூல் 1.உஞ்சைக் காண்டம், 32 கரடுபெயர்த்தது வரிகள் 80-81 பக்கம்.8.
12. சீவகசிந்தாமணி; உ.வே.சாமிநாதைய்யர், 3.முத்தியிலம்பகம், பாடல் 2733, பக்கம்.1343.
13. பெருங்கதை உ.வே.சாமிநாதைய்யர், 1.உஞ்சைக்காண்டம் 38 விழாவாத்திரை, வரிகள் 255-256, பக்கம்.111
14. தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்; கே.எம்.வேங்கடராமையா, பக்கம்.357
15. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும்; பா.சுப்பிரமணியன், கே.எம்.வேங்கடராமையா, விவேகானந்த கோபாலன் Vol I பக்கம் 357
16. மேற்படி நூல் Vol. பக்கம் 38
17. மேற்படி நூல் Vol. பக்கம் 223
18. மேற்படி நூல் Vol. பக்கம் 292
19. தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்; கே.எம்.வேங்கடராமையா, பக்கம் 357
20. தஞ்சை மராட்டிய மன்னர் மோடி ஆவணத் தமிழாக்கமும் குறிப்புரையும் Vol I; பக்கம் 44
21. ஓணன் காரிக்குடியும் சில வரலாற்று தடயங்களும், கோ.தில்லை கோவிந்தராஜன் (வெளியிடப்படாத ஆய்வுக்கட்டுரை)
22. இந்திய ஓவியம்; சி.சிவராமமூர்த்தி, தமிழாக்கம்; மே.சு.இராமசுவாமி, படம் 19.
23. நினைவு மஞ்சரி (முதற்பாகம்) உ.வே.சாமிநாதைய்யர் பக்கம் 128-140.
24. வாழ்வியற்களஞ்சியம் தொகுதி 12. பக்கம்.8 (தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு)
25. மேற்படி நூல் தொகுதி 13. பக்கம்.517
26. Sri mallari mahatmya of Sri Mahdhava Swami T.B.Nagarajan Page 122, 123, Preface (Tanjore maharaja ferfoji’s Saraswati mahal library publication at Tanjore in 1985)
நிழற் படங்கள் நன்றி தமிழ்நாடு அரசு தொல்லியல் ஆய்வுத்துறை, தஞ்சை

thillai.g@gmail.com

Series Navigation

கோ. தில்லை கோவிந்தராஜன்

கோ. தில்லை கோவிந்தராஜன்