பசுவய்யா
யார் சொன்னது
நான் பாஸிஸ்ட் என்று ?
வரலாற்றில் நாங்கள்
கருத்து வேற்றுமை கொள்பவர்களை
நிர்மூலமாக்கி வருவது
சிந்தித்துப் பார்
யாருக்காக ?
உங்களுக்காகத்தானே ?
ஆகச் சரியான சிந்தனைகளை
எங்களிடம் கூடிவந்து
இறுதி விடைகளை நாங்கள்
வார்த்தெடுத்து வரும்போது
வெண்ணெய் திரள தாழியை உடைப்பதுபோல்
நேர் எதிர்நிலையில் நின்று நீ மறித்தால்
உன் உயிரை வாங்குவதில் தவறென்ன ?
நாற்று நட்டு களைப் பிடுங்கி
பயிர்காத்து கதிர் காணும்
எங்கள் மனித நேயம்
கோணல் கலைஞர்களுக்கு
ஒரு போதும் புரிவதில்லை
கோணல் கலைஞர்களின்
வக்கிர புத்திகள்
எப்போதும் ஏந்திப் பிடிப்பது
மாறுபடும் சிந்தனைகளைத்தானே
தம்பி அன்புடன் உன்னைக் கேட்டுக்கொள்கிறேன்
என் சீரிய சிந்தனைகளை உருப்போடு
என் தடங்களை மோப்பம் பிடித்து
முன்னால் போய் உறுதிப் படுத்து
என் குரலுக்கு வாயசைத்துப் பழகு
அப்போது தெரியும் உனக்கு
நான் எவ்வளவு பெரிய
ஜனநாயகவாதி என்று.
***
சிலேட், பிப்ரவரி 1994