பாவண்ணன்
தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கத்தின் முயற்சியால் பன்மொழிக்கதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்த நூல். இக்கதைகளை மொழிபெயர்த்திருப்பவர் திருவைகாவூர் கோ.பிச்சை. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மொழிபெயர்ப்புத் துறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர். எண்பது வயதைக் கடந்த பெரியவர். அவருடைய முயற்சிகளுக்கு தமிழ் வாசக உலகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. தமிழின் முக்கிய மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான அமரந்த்தா இக்கதைகளைத் தொகுத்திருக்கிறார்.
இத்தொகுப்பில் காணப்படும் பதினாறு கதைகளும் இந்தியாவின் பிறமொழிகளில் எழுதி வெளிவந்தவை, தம் தரத்தின் காரணமாக வாசகர்கள் நினைவில் அழுத்தமான தடம் பதித்தவை. இதனாலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெவ்வேறு காலகட்டங்களில் வெளியானவை. கோ.பிச்சை ஆங்கிலத்திலிருந்து இக்கதைகள் அனைத்தையும் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். இதுவரை இவரது மொழிபெயர்ப்புகள் ஆறு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. ஏழாவது தொகுப்பாக இந்நூல் வந்துள்ளது. மொழிக்கு ஒரு கதை என்கிற கணக்கில் குஜராத்தி, வங்காளம், பஞ்சாபி, இந்தி, அசாமி, ஒரிய, சிந்தி, கன்னடம், போடோ, காஷ்மீரி, தெலுங்கு ஆகிய மொழிகளிலிருந்து 11 சிறுகதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மலையாள மொழியிலிருந்து மூன்று கதைகளும் டோக்ரி மொழியிலிருந்து இரண்டு கதைகளும் இடம்பெற்றுள்ளன.
காரூர் நீலகண்டப்பிள்ளையின் ‘மரப்பொம்மைகள் ‘ சிறுகதையை தொகுப்பின் முக்கியமான சிறுகதையாகச் சொல்லலாம். மனம் செயல்படும் விதத்தின் நுட்பத்தை இக்கதை சித்தரிக்க முயற்சி செய்கிறது. இளம்பெண் ஒருத்தி வீட்டில் தனியாக இருக்கிறாள். மக்கள்தொகை கணக்கெடுப்பாளன் ஒருவன் அந்த வீட்டுக்கு வருகிறான். இருவரிடையே நிகழும் உரையாடல்கள் வழியாக இருவருடைய வாழ்க்கைச் சம்பவங்களும் கதைநெடுக தகவல்களாக முன்வைக்கப்படுகின்றன. திருமணம் ஆனவள்தாள் அவள். ஆனால் ஆறு மாதங்களுக்குள் அவளுக்கு அந்த இல்வாழ்க்கை கசந்துவிடுகிறது. தன் வீட்டுக்கே திரும்பி வந்துவிடுகிறாள். வாழ்க்கைச் செலவுக்காக மரப்பொம்மைகளைச் செதுக்கி விற்கிறாள். ஆணின் உருவத்தை¢தான் முதலில் அவள் செதுக்குகிறாள். அவள் செய்ய நினைத்தது கிருஷ்ணன் உருவப்பொம்மை. இடையில் அவள் கணவன் ஞாபகம் வந்துபோகிறது. அவன் நினைவு படரும்போதெல்லாம் கோபம் பொங்குகிறது. அக்கோபம் இறுதியில் அந்தப் பொம்மைகளின் முகத்தில் இறங்கிவிடுகிறது. மக்கள் அப்பொம்மைகளை வாங்குவதை நிறுத்திவிடுகிறார்கள். இதனால் ஆண் உருவப்பொம்மைகளைச் செய்வதையே அவளும் நிறுத்தவேண்டியதாகிவிடுகிறது. பிறகு பெண் உருவப்பொம்மைகளைச் செய்யத் தொடங்குகிறாள். இவற்றை உருவாக்கும்போது தன்னையே நினைத்துக்கொள்வதால் அவளைப்போலவே அச்சிற்பங்கள் உருக்கொள்கின்றன. ஒரே முகச்சாயலில் ஏராளமான மரப்பொம்மைகள் உருவாகின்றன. விற்பனையும் நன்றாக நடப்பதால் வாழ்க்கைக்குத் தேவையான செலவைச் சமாளிக்க முடிகிறது. சம்பிரதாயமான கேள்வி பதில்களே என்றாலும் அந்த உரையாடல் ஒருவர்மீது ஒருவர் ஈடுபாடு கொள்ளத்தக்க அளவில் இயற்கையாக அமைந்துவிடுகின்றது. பாசாங்குத் திரைகள் ஏதுமற்ற அவளது பேச்சு அவனைக் கவர்கிறது. தன்வசமிருந்த பொம்மைகளில் ஒன்றை அவனுக்கு அன்பளிப்பாகத் தருகிறாள் அவள். அதுவரை தானும் ஓர் ஓவியன் என்பதை அறிவிக்காமலேயே உரையாடிக்கொண்டிருந்த போதே ஒரு தாளில் வேகவேகமாக தீட்டிய அவளுடைய உருவப்படத்தை அவளுக்கே அன்பளிப்பாகக் கொடுக்கிறான் அவன். இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். இங்கே மரப்பொம்மைகள் யார் என்கிற கேள்வியை முன்வைத்து அசைபோடும்போதுதான் கதை விரிவாக்கம் பெறுகிறது. மரபான கேள்விகளையும் பதில்களையும் தரமுடிகிற இருவரும் அவற்றுக்கும் அப்பால் உள்ளூரக் கொந்தளிக்கிற எதையும் வார்த்தைகளால் வடிக்க முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். உயிர்த்துடிப்பு மிகுந்த பொம்மையையும் சித்திரத்தையும் பரஸ்பரம் அன்பளிப்புகளாகக் கொடுத்துவாங்குகிற இருவரும் தம் மனத்துடிப்புகளைப் பேச முடியாதவர்களாக உறைந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களே மரப்பொம்மைகள். ஒருத்தி சிற்பக்கலைஞர். இன்னொருவர் ஓவியக்கலைஞர். நெகிழ்ச்சி உள்ளம் கொண்டவர்கள். தம்மை மரப்பொம்மைகளாக ஆட்டிப்படைக்கும் எதார்த்தத்தின் நிறம் புரிந்துகொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். எல்லாரையும் ஆட்டிப்படைப்பது எதார்த்தத்தின் இரும்புக்கைகள். அனைவரும் அது உருட்டி விளையாடும் மரப்பொம்மைகள். கண்ணுக்குத் தெரியாமல் ஆட்டிப்படைக்கிற அந்த எதார்த்தத்தின்மீது ஒரே நேரத்தில் அச்சமும் வெறுப்பும் ஒருவித இயலாமையுடன் மனத்தில் குவிகின்றன. கதையின் வேகத்தை மொழியாக்கத்தில் கச்சிதமாகக் கொண்டுவந்திருக்கிறார் பிச்சை.
புரிந்துகொள்ள முடியாத மனத்தின் புதிரைச் சித்தரிக்கும் ‘சஞ்சாலோ ‘ தொகுப்பின் இன்னொரு முக்கிய சிறுகதை. சஞ்சாலோ பூடானிய இளம்பெண். சில நாட்கள் மட்டுமே பழகி, வாக்களித்துவிட்டு பிரிந்துபோன காதலனை எண்ணியபடி ஆற்றங்கரையில் பாறைகளையும் மலைகளையும் உற்றுப் பார்த்தபடி நேரத்தைக் கழிக்கிறவள் சஞ்சாலோ. அதே ஆற்றில் வேறொரு கரையில் முகாமிட்டிருக்கிற ராணுவக் குழுவைச் சேர்ந்தவன் கியான். தற்செயலாக ஆற்றங்கரையில் நடந்துவரும் அவனுக்கு அவள்மீது நாட்டம் ஏற்படுகிறது. தற்செயலாக முகாமில் சமையல் வேலைகள் செய்வதற்கு வருகிறாள் அவள். இரவில் தாமதமாகும் சமயங்களில் அவளுடைய வீடுவரைக்கும் சென்று விட்டுவருவது அவனுடைய வேலையாகிறது. இப்படி உரையாடிக்கொண்டே செல்கிற ஒரு சந்தர்ப்பத்தில் தன் காதலனைப்பற்றிய விவரத்தையும் பகிர்ந்துகொள்கிறாள். காலம் மெல்லமெல்ல நகர்கிறது. அகன்ற பனந்தோப்பின் வழியாக ஒருநாள் இரவுவேளையில் சாஞ்சாலோவுக்குத் துணையாக நடந்துசெல்லும்போது யாரோ ஒருவன் நடுவில் பாய்ந்து சாஞ்சாலோவின் கையைப் பிடித்து இழுக்கிறான். உடனே அவனைக் கைத்துப்பாக்கியால் சுட்டுவிழ்த்திவிட்டு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான் கியான். மறுநாள் பகல்வெளிச்சத்தில் பார்த்தபிறகு இறந்தவன் தன் காதலனே என்று தெரிந்துகொள்கிறாள் சஞ்சாலோ. இதையறிந்து அதிர்ச்சியில் உறைகிறான் கியான். ஆற்றுப் பாலத்தின் நடுப்பகுதிவரைக்கும் துாக்கிச் சென்று சடலத்தை ஆற்றில் வீசிவிடலாம் என்று ஆலோசனை வழங்குகிறாள் அவள். அதன்படியே இருவரும் இரவுநேரத்தில் சடலத்தைச் சுமந்துசென்று பாலத்தின் மையத்தில் கிடத்துகிறார்கள். சிறிதுநேரம் இளைப்பாறலாம் என்று சொல்லி கியானை சிறிது தொலைவு உரையாடியபடி அழைத்துவருகிறாள் அவள். பிறகு சடலத்தைத் தானே தள்ளிவிட்டு வருவதாகச் செல்கிறாள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே சடலத்தை அணைத்தபடி அவளும் ஆற்றில் பாய்ந்துவிடுகிறாள்.
சஞ்சாலோவின் மனம் அத்தகு முடிவைநோக்கி நகர்ந்த கணத்தை அசைபோடுவதன் வழியாக வாசிப்பு அனுபவத்தை விரிவாக்கிக்கொள்ள முடியும். வாக்குறுதி கொடுத்தபிறகு காணாமல்போன காதலன்மீது கோபமும் காதலும் ஒருசேரக் கொண்டிருந்த மனம் மரணத்தைக் கண்டதுமே கோபத்தை முற்றிலும் கரையவிட்டு காதலைமட்டும் தக்கவைத்துக்கொள்கிறது. வழங்கமுடியாத, திரும்பப் பெறவும் முடியாத காதலின் பாரம் அவள் மனத்தைக் கல்லாக்கி மரணத்தைநோக்கித் தள்ளிவிடுகிறது. இது ஓர் ஊகம்தான். மனத்தின் புதிரை இத்தகு ஊகங்களின் வழியாகவே விடுவித்து விளங்கிக்கொள்ளமுடியும்.
மன ஆழத்தைத் தொட்டு மீளும் இவ்விரண்டு கதைகளையும் இத்தொகுப்பின் முதல்தரமான கதைகளாகக் குறிப்பிடலாம். ஒரிய மொழிக்கதையான ‘மூன்று வாழ்த்தட்டைகள் ‘ என்னும் சிறுகதையை அதற்கடுத்த நிலையில் சிறப்பாக வந்துள்ள சிறுகதை என்று குறிப்பிடலாம். கேக் தயாரிக்கிற சுஜாதா என்னும் பெண்மணியைப்பற்றிய கதை இது. அந்த வட்டாரத்தைச் சேர்ந்த பல பிள்ளைகள் அவளிடம் கேக் வாங்குகிறார்கள். அவளோடு அன்போடு பேசுகிறார்கள். சிரிக்கிறார்கள். அவள் வீடும் தோட்டமும் அவர்களுடைய விளையாட்டுக் களங்களாகின்றன. அவளுடைய அன்பான உலகில் ஓர் இரவுவேளையில் மூன்று தீவிரவாதிகள் குறுக்கிடுகிறார்கள். கொல்வதைக் குறிக்கோளாகக் கொண்டதைப்போல உலகில் வாழ்பவர்கள் அவர்கள். இருவேறு விதமான உலகைச் சேர்ந்தவர்களையும் விதி ஓர் இரவில் ஒரே கூரையின்கீழே சந்திக்கவைக்கிறது. முதலில் கடுமையாக இருந்தாலும் சுஜாதாவின் மனத்தில் படிந்திருக்கும் அன்பையும் இரக்கத்தையும் புரிந்துகொள்கிறார்கள் தீவிரவாதிகள். தீவிரவாதத்தைத் தவிர தன் வாழ்வில் அதுவரை பார்த்தறியாத அன்பின் முகத்தை அவர்கள் திகைப்போடும் குழப்பத்தோடும்தான் காண்கிறார்கள். ஆனால் விடியல் கருக்கலில் கதவுக்கு வெளியே கேட்க நேரும் குழந்தைகளின் குரல்கேட்டபிறகு தெளிவடைகிறார்கள். அந்த ஓர் இரவு இரு தரப்பினருக்கும் மறக்கமுடியாத அனுபவமாகிறது. அந்த இரவை மறக்காமல் நினைவில் வைத்திருக்கிறார்கள் அவர்கள் என்பதற்கு அடையாளமாக எங்கிருந்தோ ஆண்டுக்கொருமுறை வருகிற வாழ்த்தட்டைகள் உணர்த்தியபடி இருக்கின்றன. கத்தி விளிம்புகள் உரசிக்கொள்வதைப்போல இருதரப்பு மனப்புள்ளிகளும் உரசி, தத்தம் எல்லைக்கு மீளும் தருணங்களைப் படம்பிடிப்பதில் சிறுகதை வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்லவேண்டும்.
ஏனைய கதைகள் படிக்கச் சுவையாகவும் புதியபுதிய பிரதேசங்களின் வாழ்க்கைச் சம்பவங்களை உணர்த்துபவையாகவும் இருப்பினும் வார்ப்புமுறையில் சிறுசிறு சரிவுகளைக் கொண்டவையாக உள்ளன. ஆகவே வாசிப்பில் இக்கதைகளால் எதிர்பார்த்த சலனங்களை உருவாக்க முடியவில்லை.
ஆங்கிலத்தின் வழியாக மொழிபெயர்க்கும்போது தமிழில் உருவாகக்கூடிய ஒரு தடுமாற்றம் இத்தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பிடவேண்டும். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தின் he-ஐ தமிழில் அவன் என இடம்பெறவைப்பதா அல்லது அவர் என இடம்பெறவைப்பதா என்னும் தடுமாற்றத்தைச் சொல்லலாம். கதையின் சூழலை ஒட்டி மொழிபெயர்ப்பாளரே முடிவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. சஞ்சாலோ கதையின் கியான் பாத்திரத்தை பிச்சை அவர் என்று குறிப்பிடுகிறார். மாறாக அவன் என்று குறிப்பிடுவதே நெருக்கமாக இருப்பதாகப் படுகிறது. ‘உனக்காக சம்பாதிக்க என் கை புளியம்பழம் பறிக்கப்போகாது ‘ (பக்கம்-31), ‘இந்தப் பெட்டை நாய்க்கு இங்கு என்ன வேண்டுமாம் ? ‘ (பக்கம்-164) என்னும் உரையாடல்கள் முன்னும் பின்னுமான வாக்கியங்களுடன் பொருந்திவருதில் சற்றே தடை இருப்பதைப்போலத் தோன்றுகிறது. மொழிபெயர்ப்பின் சிக்கல்களாக இவை அடையாளப்படுத்தப்படுகிறதே தவிர, குறைசொல்லும் நோக்கத்தில் அல்ல.
மூலப் படைப்பாளிகள் பற்றிய விவரங்கள் தொகுத்து வழங்கப்பட்டிருப்பின் தொகுப்பு முழுமையடைந்ததாக இருக்கும். மேலும் மொழிபெயர்ப்பில் இக்கதைகள் பிரசுரமான விவரங்களும் எங்கும் இல்லை. ஆங்கில மொழியில் இக்கதைகள் வெளிவந்த விவரங்களும் இல்லை. இத்தகு குறிப்புகள் இப்படிப்பட்ட ஒரு பன்மொழித் தொகுப்பில் இடம்பெறுவது மிகவும் அவசியம். ஆர்வம் கொள்ளும் வாசகர்கள் அத்தகு ஆதார நூல்கள் வழியாக வேறு உலகத்தை நாடிச் செல்லும் வாய்ப்புகளை இவையே ஊக்கப்படுத்தக்கூடும். அமரந்தாவின் முன்னுரைக் குறிப்புகள் வழியாக பிச்சைபற்றிய சில விவரங்கள் மட்டுமே தெரியவருகின்றன. அவரைப்பற்றிய முழு விவரப்பட்டியலும் இடம்பெற்றிருப்பின் பயனுள்ளதாக இருக்கும்.
( அனைத்தும் கடந்து-பன்மொழிக் கதைத் தொகுதி. மொழியாக்கம் : திருவைகாவூர் கோ.பிச்சை. தொகுப்பு: அமரந்த்தா, சந்தியா பதிப்பகம், 57ஏ, 53 ஆம் தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை. ரூ75)
paavannan@hotmail.com
- பட்டு
- ஓடுகிறேன் ஓடுகிறேன்
- காகிதம்
- தமிழோவியத்தின் தீபாவளி மலர்
- கிருஷ்ணனின் நிலங்களில் கிருத்துவ அறுவடை பற்றி அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்
- மனப்புள்ளிகள் உரசி மீளும் தருணங்கள் – (அனைத்தும் கடந்து-பன்மொழிக் கதைத்தொகுதி அறிமுகம்)
- நவீன இலக்கியத்தின் காலியிடத்தில் உடைத்த அழுகிய கோழி முட்டை
- இருப்பு தெரிந்தாலல்லவா இழப்பு வருத்தும் !
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிட்கள் – 1 (The Great Pyramids of Egypt)
- உலகின் அதி பழமையான டைனசோர் முளையம்.
- நவ நவமாய்….
- புண்ணாடை
- சேணம் காத்திருக்கிறது
- யாரும் இங்கு மரணிக்கவில்லையே!
- கீதாஞ்சலி (38) என்னிதயம் நாடுவது உன்னை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- /ா/
- கவிதை
- கோடி கோடி ஆண்டுகளில்…
- பெரியபுராணம் – 54 – ( திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி )
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் – (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 01 யானைகள் (Elephants)
- கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம்
- தமிழ் சினிமாவும் அதில் பெண்கள் நிலையும்
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2005 – உலக ஆயுத விற்பனைச் சந்தை
- ஆறு பள்ளமாகி வாய்க்கால் மேடான கதை
- திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2, 2005 – தமிழ்நாட்டின் சுயநிதிக் கல்லூரிகள்
- நடை -புத்தூரில் கட்டு – பாகம் 3
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-6)
- பிறழ்வு
- வரையப்படாத கடவுள்