நுரவ் மார்க்கீவ்.
(அ. முத்துலிங்கம், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை – ரூ. 75)
வட்டார வழக்கு, நாட்டார் இலக்கியம் என வேர்களைத் தேடியலைவதாகக் கூறிக்கொள்ளும் சமகாலத் தமிழ் இலக்கிய உலகிற்கு சம்மந்தமில்லாத முயற்சியிது. அன்றாடம் நாம் படித்துச் சலித்துப்போகும் வழமையான கதைகள் அல்ல இவை. பன்னாட்டுப் புலங்களில் பல்வேறு மாந்தர்களின் நடப்புகள் இவை. காணத புதிய உலகங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும் ஆர்வமும் துணிவும் முத்துலிங்கத்திடம் நிறையவே இருக்கின்றன. பயணத்தில் நாம் சளைத்து/அலுத்துப் போகாமல் இருக்க அவரது நகைச்சுவை உணர்வு நிழற்குடை விரிக்கிறது.
புனைகளன்கள் ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவை. கதாமாந்தர்கள் தமிழுக்குச் சற்றும் அறிமுகம் இல்லாதவர்கள். இந்துகுஷ் மலையடிவாரத்தில் பிளாஸ்டிக் குடுவையை நிரந்தரமாக்கிவிட்டுச் செல்லும் யாத்ரிகன், இறைச்சித் துண்டுக்கு ஏங்கியலையும் பால்கன் குடாச் சகோதர்கள், கனேடியக் குளிரில் காசு பொறுக்கும் சிறுவன், கோலிக்குண்டுக்காகச் சகோதரனைத் தண்ணீரில் முழ்கவிடும் இலங்கைச் சிறுவன், இப்படியென உலகெங்கும் வியாபித்திருக்கின்றனர் முத்துலிங்கத்தின் கதாமாந்தர்கள். அவர்களது பெயர்களும், ஊர்களும் மாத்திரம்தான் புதியன. அவர்களது மானிட சோகங்களும், சோரங்களும், சோதனைகளும், சாதனைகளும், கவலைகளும் ஏக்கங்களும் நம்மால் முற்றிலுமாக இனங்காண முடிபவை. இதுதான் ஆசிரியரின் முழுமையான வெற்றி. இறைச்சிக்கு அலைதல், கோலிக்குண்டுக்குப் பழிவாங்கல், நிரந்தரத்தை அறியாது பிளாஸ்டிக்கை அள்ளிவீசல், உயர்வை (ஒயின்) இனங்கண்டு ருசிக்கும் இரசிப்புத்தன்மை, மனைவியின் பட்டியல்களைத் தொலைத்தல், எனக் கதாமாந்தர்களின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றிலும் நம்மைப் பொருந்தவைக்கும் சாகசம் அவருக்கு முற்றாகக் கைகூடியிருக்கிறது.
புலம் பெயர்தல் என்பது பலருடைய வாழ்வில் தவிர்க்க முடியாத சோகமாக ஆகிவிடுகின்றது. கால்பரப்பும் வெளியில் மனதை பறக்கவிட்டு அலைபவர்கள்தான் புலம்பெயர்ந்தவர்களில் அதிகம். அண்டையில் நடப்பது அவர்கள் கண்களுக்குத் தெரியாது. பார்க்கும் கண்கள் நிகழ்வுகளை மனதுக்குள் பதியவைக்க முயல்வதில்லை. இழந்த மண்ணும் மக்களுமே அவர்களது வாழ்க்கை என மாறிப்போகின்றது. அவர்களது படைப்புகளும் அவர்களது இழப்பையே சொல்ல முயற்சிக்கின்றன. அந்நிலையில் வேதனையின் புலம்பல்களே அவர்களது வார்த்தைகளாகிப் படிகின்றன. முத்துலிங்கம் அவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறார். காணும் ஒவ்வொரு காட்சியுடனும் அவரால் ஒன்றிப்போக முடிகின்றது. அவற்றின் ஒவ்வொரு சலனத்தையும் வடிக்கும் வார்த்தைகளுக்கு அவரிடம் தட்டுப்பாடே இல்லை. வாசகன் கண்டறியாத நடப்புகளைத் துல்லியமாக விளக்கும் பொறுமை அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் சில இடங்களில் காட்சி வருணனைகளின் அதீதம் தூக்கலாக, நடப்புகளினின்று கவனத்தைச் சிதறிப் போகின்றது. தான் கண்டன எல்லாவற்றையும் கண்கள் விரிய வாசகனுடன் பரிமாறிக்கொள்வதில் இருக்கும் ஆர்வம் சிலவிடங்களில் சொற்சிக்கனம் கைவராமல் போகவைக்கிறது.
கதைத் தொகுதியில் பலவகையான வாசனைகள் வருகின்றன. விடலையில் படிந்துபோன பெண்மையின் அண்மை வாசம், நாக்கை நனைத்து நாசியை நிறைக்கும் சிவப்பு ஒயினின் மணம், மலர்வதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் மல்லிகையின் மணம், பெயர்புலத்தில் தனித்திருக்கும் மாமனாரை நிறைக்கும் மருமகளின் செண்டு, குளிர்தேச நிலவறையின் அழுகிய தோடம்பழ வாசம், ஒருநாளைப் போல் ‘சுக்குமாவிக்கி ‘ சாப்பிடும் எமிலியின் வீச்சம், எனப் பலவகையான நறுமணங்களும் வீச்சங்களும் கதைகளை நிறைத்திருக்கின்றன. இதேபோல் ஒன்பது துளைகொண்டு சர்க்கரை தூவப்பட்ட பிஸ்கெட், அம்மா வைக்கும் முசுவட்டை வறை, என வகையான ருசிகளும் உண்டு. இவற்றில் சில நாம் புலன்களால் துய்த்தவை, பல நமக்குப் பரிச்சயமில்லாதவை. என்றாலும், அருகாமையின் வெப்பவாடையுடன் கலந்து வீசும் பொழுது சுக்குமாவிக்கியின் வாசத்தை நாம் ஊகிக்கச் செய்வதில் வெற்றியடைகிறார். இந்த வகையில் கதைகள் ஒவ்வொன்றும் நேர்த்தியுடன் கோர்க்கப்பட்டிருக்கின்றன. முன்னுரைக்கப்பட்டதுபோல் இந்தக் கதைகளுக்குக் கடுமையான உழைப்பு தேவைதான். செய்நேர்த்தியின் உன்னதம், புலப்படாத களன்களுக்கு இட்டுச்செல்வதில் அவரை வெற்றியடைய வைக்கிறது.
அவர் கண்டங்களைக் கடந்தாலும், பார்த்த மக்களை, வழக்குகளை, முரண்களைப் பகிர்வதில் ஆர்வம் காட்டினாலும், மனதோடு தொட்டு நிற்கும்படியாகத் தொகுப்பில் வாய்த்தது – அம்மாவின் பாவாடை எனும் கதைதான். தன் மண்ணோடும் மக்களோடும் முத்துலிங்கம் கொள்ளும் ஆத்மார்த்த உறவுகளுக்கு இக்கதை கட்டியம் கூறுகின்றது. புலம்பெயர்வு வழக்கமாக வித்திடும் கதைகளும் தொகுப்பில் உண்டு; கறுப்பு அணில், ஐந்தாவது கதிரை, கடன். அண்ணன்-தம்பி பரிவும் பகையும் குறித்த இரண்டு கதைகள் (தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், நாளை) செங்குத்துத் தளங்களில் படைக்கப்படிருக்கின்றன. கோலிக்குண்டை பகிர்ந்து கொள்ளவேண்டிய அவசியம் தவிர்க்க, குளத்தில் கணுக்கால் அளவுத் தண்ணீரிலிருந்து சரியும் தம்பிக்கு கைகொடுக்காது முழுகவிடுகிறான் ஒருவன். அகதிமுகாமில் அடுத்த நாள் கிடைக்கக் கூடிய இறைச்சித் துண்டுக்குக் கட்டியம் கூறி, பொழியும் குண்டுகளுக்கு இடையில் தம்பியை அணைத்துக் கொள்கிறான் மற்றவன். வசதியும் சூழ்நிலையும் மனங்களை மாற்றியமைக்கும் பாங்கு இரண்டு கதைகளிலும் முற்றாக வெளிப்படுகிறது. பாதுகாப்பில், சொகுசுகளில் திளைப்பவனுக்கு சகவயது சிறுமியின் கால்களை நாய் கடிக்காதா என்ற குரூர ஏக்கம் இருக்கிறது; கடிக்காதுபோக ஏமாற்றமாக இருக்கிறது. ஏந்திப் பெற்ற, அடுத்த நாளைக்கு உத்தரவாதமற்ற, ரொட்டித் துண்டை அண்டிவரும் நாய்க்குப் பிய்த்துப் போடுவதில் நிறைவடைகிறான் மற்றவன். வாழ்வின் கொடுரமும் நளினமும் இந்த இரண்டு கதைகளிலும் பிரகாசமாக வெளிப்படுகின்றன.
அணுவணுவாகச் செதுக்கும் துல்லியம் சிலவிடங்களில் பிழைபட்டுப் போகின்றது. தன்மையில் வாசக அனுபவங்களில் குறுக்கிடுதல் நெடுகிலும் நிரடுகின்றது. அம்மாவின் பாவாடை போன்ற அருமையான தற்புலக் கதையில் ‘அது ஒரு starter தன் ‘ – எனக் காளானாக முளைக்கும் ஆங்கிலம் வருத்துகிறது. அடைகுறிகளில் ஆங்கிலமும் கலைச்சொல்விளக்கங்களும் பலவிடங்களில் கதையோட்டத்தை மட்டுப்படுத்துகின்றன. சொல்ல விழைவது சென்றடையாது போய்விடுமோ எனும் ஐயம் பலவிடங்களில் விரவி நிற்கிறது. யாப்பருங்கலக்காரிகை நூலை யாப்பெருங்கலக்காரிகை என பாரிய பெண்ணை வருணிக்கப் பயன்படுத்தும் தவறு/அச்சுப்பிழை கண்ணை உறுத்துகின்றது.
சிறகடிக்கும் அனுபவங்களும், ஆர்வப் பகிர்வும், கைகோர்த்து அழைத்துச் செல்லும் பொறுமையும் முத்துலிங்கத்தை ஒரு முழுமையான படைப்பாளியாக்குகின்றன. இந்தத் தொகுப்பைத் தவறவிடும் தீவிர வாசகன் பெயர்புலங்களின் உன்னதங்கங்களை விளிக்கும் புதிய தமிழிலக்கியக் கூறினை இழப்பான் என்பது நிச்சயம். தங்கள் படிப்பாலும் பரப்பாலும் விரிந்த புதிய தமிழ் படைப்பாளிகள் காணாத உலங்களுக்குத் தமிழ் வாசகனை இட்டுச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள் – அந்த வகையில் முத்துலிங்கம் ஒரு முன்னோடி.
—————-
venkat@tamillinux.org
- சதுரம்.
- சில கேள்விகள்
- எதை நிறுத்த ?
- சிறுத்த இருத்தல்
- இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002
- பழைய பொன்மொழிகள்
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
- எனக்குப் பிடித்த கதைகள் – 16 – அளக்க முடியாத கடல் – மக்சீம் கோர்க்கியின் ‘சிறுவனின் தியாகம் ‘
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
- மதிப்புரை – மகாராஜாவின் ரயில் வண்டி – அ. முத்துலிங்கம்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தி செடிகளும் பருத்திப் புழுவும் உலக விவசாய நிறுவனங்களின் ஆயுதங்களாகின்றன
- ஏறத்தாழ பூமியில் மோத இருந்த விண்கல்
- சூரிய குடும்பத்தின் புதிய புறக்கோள்கள் யுரேனஸ், நெப்டியூன்
- அழகிப்போட்டி
- வெள்ளைக் காகிதம்
- வைகுண்டக் குடும்பம்
- சொந்தம்.
- காலத்தின் கணக்கு
- ஆலவிருட்சம்
- புலன்களின் சுகம்
- சொல்லமுடியாதது..
- கனவு
- இந்த வாரம் இப்படி – சூன் 23 2002 (கண்டதேவி, காவிரி, அலெக்ஸ் பெரி)
- அப்துல்கலாம் இந்தியாவின் குடியரசுத்தலைவராக ஆவது சிறப்பானது
- இந்த வாரம் சொன்னவைகள் – சூன் 23, 2002
- மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் – பகுதி :மூன்று – தளையசிங்கத்தின் முக்கியத்துவம் என்ன ?
- ‘தனிமைப்படுத்திக்கொண்டால் தேங்கித் தான் போவீர்கள் ‘
- மு .தளையசிங்கம் விமரிசனக்கூட்டம் பதிவுகள் – மூன்றாம் பகுதி
- இன்று நடிகர் சங்க கட்டிட நிதி – நாளை வருமான வாி பாக்கி… தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கலை நிகழ்ச்சியை மலேசிய ரசிகர்கள் புறக்கண
- ’20ஆம் நூற்றாண்டில் சீனா-இந்தியா போட்டி ‘ : ஜான் டபிள்யூ கார்வர் எழுதிய புத்தகத் திறனாய்வு
- கடவுளின் கடந்த காலம்