ரிச்சர்ட் டாக்கின்ஸ்
(உலகத்தை மதத்தால் நிரப்புவது என்பது, அதுவும் ஆப்ரஹாமிய மதங்களால் நிரப்புவது ( ஆபிரகாம் யூதமதம், கிருஸ்தவ மதம், இஸ்லாமிய மதம் இவற்றின் ஆதி கர்த்தா – மொ பெ) என்பது தெருக்களெங்கும் குண்டுகள் நிறைந்த துப்பாக்கிகளை போட்டு வைப்பது போன்றது. அவைகள் உபயோகப்படுத்தப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.)
வழிசெலுத்தப்படும் ராக்கெட் குண்டுகள் (guided missile) முன்னால் செல்லும் ஜெட் விமானத்தின் பின்னால் தோன்றும் சூடான புகையை அடையாளமாக வைத்துக்கொண்டு, தன்னுடைய வழியை மாற்றிக்கொண்டு பின் தொடரும். இது என்னதான் முன்னாடகளில் உபயோகித்த தொலதூர குண்டுகளை விடச் சிறந்தவை என்றாலும் , ஒரு குறிக்கும் இன்னொரு குறிக்கும் இதனால் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியாது. பாஸ்டன் நகரத்திலிருந்து ஒரு குண்டை அனுப்பி, சரியாக ஒரு நியூயார்க் அடுக்குமாடிக்கட்டடத்தை நொறுக்க முடியாது.
நவீன ராக்கெட் குண்டுகள் இதைச் செய்யக் கூடியவை. சிறிய கணினியும், அதில் செலுத்தப்படும் வரைபடமும், வரைபடம் போன்ற ஒரு கட்டடத்தை அடையாளம் கண்டுகொள்ளும் மென்பொருளும், நியூயார்க்கின் மண்ஹாட்டன் வரைபடமும் அதில் இருக்கும் உலக வர்த்தக மையத்தின் வடக்கு கோபுரமும் வரைந்து கொடுத்து எப்படி அடிப்பது என்பதையும் எழுதிக்கொடுத்தால், துல்லியமாக அடிக்கும் இந்த புத்திசாலி ராக்கெட் (smart missile). அமெரிக்கா நடத்திய வளைகுடாப்போரின் போது அமெரிக்கா செய்து காண்பித்த இந்த புத்திசாலி ராக்கெட் தொழில்நுட்பம், அவ்வளவு பணம் இல்லாத சாதாரண பயங்கரவாதிகளுக்கும், மதவாத அரசாங்கங்களுக்கும் வெகு தொலைவில் இருக்கலாம். இதற்கு எளிய, விலை மதிப்பு குறைந்த மாற்று இருக்கிறதா ?
இரண்டாம் உலகப்போரின் போது, மின்னணுவியல் இந்த அளவுக்கு மலிவாகவும் , சிறியதாகவும் ஆவதற்கு முன்பு, பி எஃப் ஸ்கின்னர் என்னும் அமெரிக்க மனமருத்துவர் புறாக்களைக் கொண்டு ராக்கெட்டுகளை வழிநடத்த முடியுமா என்று பரிசோதனை செய்து பார்த்தார். இதற்காக ஒரு புறாவை ஒரு சின்ன நாற்காலியில் கட்டிப்போட்டு, ஒரு சின்ன மேஜையில் இருக்கும் புள்ளிகளைக் தன் அலகால் குத்தி எதிரே இருக்கும் திரையில் இருக்கும் குறியை மையத்திலேயே வைத்திருக்கப் பழக்கப்படுத்தமுடியுமா என்று பரிசோதித்துப் பார்த்தார். உண்மையான ராக்கெட் குண்டில், குறி உண்மையானதாக இருக்கும்.
இது உண்மையில் வேலை செய்தது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இதனை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. இவைகளைப் பழக்கப்படுத்துவதற்கான செலவையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், இன்றைய கணினிகளுக்கு இந்தப்புறாக்கள் விலை குறைவானவை, லேசானவை. ஸ்கின்னர் பரிசோதனைகளில் இந்தப்புறாக்களைக் கொண்டு நிச்சயமாக மண்ஹாட்டனில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தைத் தாக்கலாம் என்பது நிச்சயமானது. புறாவுக்கு தான் ஒரு செலுத்தப்படும் ராக்கெட் குண்டில் இருக்கிறோம் என்பது நிச்சயமாகத் தெரியாது. இது வெறுமே தனக்கு முன்னால் இருக்கும் நீளச்சதுரங்களை குத்திக்கொண்டே இருக்கும். அவ்வப்போது பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் இது தின்ன அரிசி விழுந்துகொண்டே இருக்கும். திடாரென்று முடிவு வரும் வரை..
புறாக்கள் மிகவும் விலை குறைந்த வழிகாட்டும் அமைப்புக்கள். ஆனால் ராக்கெட்டின் விலையோ மிகவும் அதிகம். அமெரிக்காவின் பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி உள்ளே வந்து, இவ்வளவு அதிகமாக அழிவை ஏற்படுத்தும் ஒரு ராக்கெட் குண்டு இதுவரை இல்லை. எனவே வெடிப்பதற்கு சற்று முன்பு வரை இதுதான் ராக்கெட் குண்டு என்று தெரிந்துவராத ஒரு ராக்கெட் குண்டு தான் தேவை . பெரிய பொதுமக்கள் பிரயாணம் செய்யும் விமானம், வெளியே அப்பாவித்தனமாக எழுதப்பட்ட வார்த்தைகளும், உள்ளே நிறைய பெட்ரோல் கொண்டதுமான விமானம். இதுவரை வந்தாயிற்று. சரி, எப்படி உள்ளே தேவையான வழிநடத்தும் அமைப்பை கடத்திச் சென்று உள்ளே அமைப்பது ? ஒரு புறாவிடமோ அல்லது ஒரு கணினியிடமோ விமானத்தை வழிநடத்தும் பொறுப்பை எந்த வித எதிர்ப்பும் இன்றி, விமானிகள் கொடுத்துவிடுவார்கள் என்று நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.
புறாக்களுக்குப் பதிலாக, மனிதர்களைப் பயன்படுத்த இயலுமா ? மனிதர்கள் புறாக்களைப் போலவே ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களது மூளையும் ஒரு புறாவின் மூளையைவிட அதிகம் விலை இல்லை. பல வேலைகளுக்கு அவர்களது மூளை புறாவின் மூளையை விட அதிக பலம் பொருந்தியது. மனிதர்களுக்கு ஏற்கெனவே பயமுறுத்தி, விமானங்களைக் கடத்திய நல்ல அனுபவமும் இருக்கிறது. இந்த பயமுறுத்தல் வேலை செய்யும் காரணம், சட்டப்பூர்வமான விமானிகளும் பயணிகளும் தங்கள் உயிர்களை மதிப்பதுதான்.
இதன் இயற்கையான அனுமானம், இவ்வாறு கடத்துபவரும் தன் உயிரை மதிக்கிறார் என்பதுதான். கடத்தல்காரரும் பகுத்தறிவோடு தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வார் என்ற அனுமானத்திலேயே, பயணிகளும், தரையில் இருக்கும் கட்டுப்பாட்டு நிலையத்தாரும் கணக்குப்போட்டு அவர்களை மீட்க உதவுகிறது. இந்த கணக்கெல்லாம், இப்படிப்பட்ட ‘விமானம் கடத்தும் அமைப்புக்களுக்கு ‘ தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் எண்ணம் இல்லை என்றால் வேலை செய்யாது. உங்கள் விமானம், ஆயுதம் தாங்கிய ஒருவரால் கடத்தப்பட்டால், அவர் என்னதான் ஆபத்தை மேற்கொள்ளத் தயார் என்றாலும் , தன் உயிரையும் காப்பாற்றிக்கொள்ளும் விருப்பம் இருக்கும் வரைதான் பேச்சுவார்த்தைக்கும் இடம் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பகுத்தறிவுள்ள விமானி, கடத்தல்காரர் சொல்படி விமானத்தை ஓட்டி அவர் சொன்ன இடத்தில் தரை இறங்கி, பயணிகளுக்குச் சூடான உணவைத் தருவித்து, பேச்சுவார்த்தை நடத்துவதில் நிபுணர்களான ஆட்களிடம் பேச்சுவார்த்ைதைப் பொறுப்பை விட்டுவிடுவார்.
மனித வழிநடத்தும் அமைப்பில் இருக்கும் பிரச்னையே இதுதான். புறா அமைப்பு போலன்றி, மனித அமைப்புக்கு வெற்றிகரமான திட்டம் அந்த ராக்கெட் குண்டின் அழிவு தனது அழிவில் தான் முடிகிறது என்பது தெரியும். நம்மால், ஒரு உயிரியல் வழிநடத்தும் அமைப்பை, புறா போல விலைகுறைந்த, தூக்கி எறியும் அமைப்புடனும், மனிதனுடைய புத்திசாலித்தனத்துடனும் உருவாக்க முடியுமா ? அடிப்படையில் நமக்கு வேண்டியது, தானே வெடித்துச்சிதறுவதைப்பற்றி அக்கறைப்படாத மனிதன். இந்த மனிதன் மிகச்சிறந்த ராக்கெட் குண்டு வழிநடத்தும் அமைப்பாக இருப்பான். ஆனால், தற்கொலைக்கு ஆர்வமாக இருக்கும் மனிதர்களைக் கண்டுபிடிப்பது கடினம். சொல்லப்போனால், இறக்கும் தருவாயில் இருக்கும் கான்ஸர் நோயாளிகள் கூட, எதிரே வரும் வெடியைக் கண்டால் அஞ்சத்தான் செய்வார்கள்.
ஒரு விமானத்தை ஓட்டிச்சென்று ஒரு அடுக்குமாடிக்கட்டத்தை அடித்தால், அவர்கள் உண்மையிலேயே செத்துப்போகமாட்டார்கள் என்று சாதாரண மனிதர்களை நம்ப வைக்க முடியுமா ? யாரும் அந்த அளவுக்கு முட்டாளாக இருக்கமாட்டார்கள். சரி இது எப்படி ? சாகத்தான் போகிறார்கள், ஆனால், செத்த பின்னால் அவர்களுக்கு உயிர் கொடுக்கப்படும் என்று நம்பவைத்தால் எப்படி ? ஓடாதீர்கள். இன்னும் கொஞ்சம் கேளுங்கள். ஒரு வேளை இது வேலை செய்யலாம். வானத்திலே ஒரு பெரிய பாலைவனச்சோலை இருக்கிறது. அதிலே தண்ணீர் குளிர்ந்து தெளிவாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாழ் இசையும், இறக்கைகளும் ஒரு வேளை இந்த இளைஞர்களுக்கு அவ்வளவு ஆசையாக இல்லாமல் இருக்கலாம். ஆகவே இவர்களிடம், தியாகிகளுக்கு ஸ்பெஷலாக 72 அழகான, ஆர்வமுள்ள கன்னிப்பெண்கள் கிடைப்பார்கள் என்று சொல்லலாம்.
இதற்கு ஏமாந்து வருவார்களா ? ஆமாம். இந்த உலகத்தில் எந்தப் பெண்ணையும் கவர முடியாத டெஸ்டோஸ்டரோன் நிரம்பிய இளைஞர்கள், அடுத்த உலகத்திலாவது 72 தனிப்பட்ட கன்னிப்பெண்கள் கிடைப்பதைப் பெற்றுக்கொள்ள ஆர்வமாக வரலாம்.
கொஞ்சம் நம்பமுடியாத கதைதான். ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம். இதற்காக உங்களுக்கு இளைஞர்கள் வேண்டும். இவர்களுக்கு முழுமையான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய பெரிய மாயக்கதைக்கொத்து (Mythology) வேண்டும். தேவைப்படும்போது நம்பும்படி இருக்க. அவர்களுக்கு ஒரு புனிதப்புத்தகத்தைக் கொடுத்து அதனை மனப்பாடமாக படிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, இது உண்மையிலேயே வேலை செய்யும் என்று நான் நினைக்கிறேன். அதிர்ஷ்டமாக, நம்மிடம் அதுவே கையில் இருக்கிறது. இது தயார் நிலையிலுள்ள மனத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்பு. இது பல நூற்றாண்டுகளாக செழுமை செய்யப்பட்டு வந்திருக்கிறது. பல கோடி மக்கள் இதனுள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதற்குப் பெயர் மதம். இதில் பல கோடி மக்கள் விழுகிறார்கள். ஏன் அப்படி விழுகிறார்கள் என்பதை எதிர்காலத்தில் ஒருவேளை நாம் புரிந்துகொள்ளலாம் (அமெரிக்காவில் தான் இது மிகவும் அதிகம். இதை நாம் அவ்வளவாக கவனிப்பதில்லை). நமக்குத் தேவையானதெல்லாம் இப்போது இப்படி மூளைச்சலவை செய்யப்பட்ட சில இளைஞர்களை கூட்டி அவர்களுக்கு விமான ஓட்டுநர் பயிற்சி அளிப்பதுதான்.
பேசமுடியாத கொடுமையைக் கொச்சைப்படுத்துகிறேனா ? இல்லை. கொச்சைப்படுத்துதல் என்னுடைய நோக்கத்துக்கு நேர்மாறானது . என்னுடைய நோக்கம் மிகவும் தீவிரமானது; ஆழமான சோகமும், அடக்கமுடியாத கோபமும் உந்திப் பிறந்தது. அறையினுள் இருக்கும் யானையை நோக்கி கை காட்டுகிறேன். இந்த யானையை மிகுந்த மரியாதையாலோ (மிகுந்த பக்தியாலோ) எல்லோரும் குறிப்பிடாமல் இருக்கிறார்கள். மதமே, மனித உயிரை கேவலப்படுத்துகிறது. மற்ற மக்களின் உயிரை மதம் கேவலப்படுத்துவதை குறிப்பிடவில்லை ( மதம் அதையும் செய்கிறது ). தன்னுடைய உயிரையே தானே கேவலப்படுத்தவும் அது தூண்டுகிறது என்பதைத்தான் குறிப்பிடுகிறேன். இறப்பு முடிவல்ல என்ற ஆபத்தான முட்டாள்தனத்தை மதம் போதிக்கிறது.
இறப்பு முடிவானது என்றால், பகுத்தறிவு உள்ளவன் எவனும் தன்னுடைய உயிரை மதித்து அதனை விட்டுவிடுவதற்கு அஞ்சுவான். இது உலகத்தை மிகவும் பாதுகாப்பான இடமாக்கும். எப்படி விமானம் கடத்துபவன் தன் உயிரைக் காப்பாற்ற விரும்புவது விமானத்தை பாதுகாப்பானதாக ஆக்குகிறதோ அதுபோல. இதற்கு எதிர்முனையில், ஒரு குழு மக்கள், தங்களது பூசாரிகளால் போதிக்கப்பட்டு, ஒரு தியாகியின் மரணம் என்பது, ஒரு பட்டனை அமுக்கி, இன்னொரு பேரண்டத்தில் இருக்கும் இன்னொரு கிரகத்துக்கு செல்வது போலத்தான் என்று, தங்களை நம்பவைத்துக்கொண்டார்கள் என்றால் உலகம் ஆபத்தான இடமாகத்தான் இருக்கும். அதுவும், இந்த உலகத்தின் பிரச்னைகள் இல்லாத சொர்க்க பூமியாக அந்த கிரகம் இருக்கும் என்று நம்பினால் இன்னும் ஆபத்து. இதற்கும் மேலாக, பெண்களை அவமானப்படுத்துவதாகவும், பாலுறவு வாக்குறுதிகளும் கொண்ட இந்தக் கொள்கைகளால், அப்பாவிகளும், உலகத்தின் மீது வெறுப்புகொண்ட இளைஞர்களும் இந்த தற்கொலை திட்டங்களுக்குப் போட்டி போட்டுக் கொண்டு முன்வருவது ஆச்சரியமா என்ன ?
இறந்த பிறகு வாழ்க்கை என்ற நம்பிக்கையால் செல்லரிக்கப்பட்ட, தற்கொலை எண்ணம் கொண்ட மனித மூளை மிகப்பெரிய சக்தியும் ஆபத்தும் கொண்டது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது ஒரு புத்திசாலித்தனமான ராக்கெட் குண்டு. இதன் வழிநடத்தும் அமைப்பு எந்த ஒரு விலையுயர்ந்த பிரமாதமான மின்னணு மூளையை விடப் பல மடங்கு உயர்ந்தது. இருப்பினும், ஒரு கேவலமான அரசாங்கத்துக்கோ, அமைப்புக்கோ, பூசாரிக்கோ இது வெகு மலிவான பொருள்.
நம் தலைவர்கள் இந்த சமீபத்திய படுகொலைகளை வழக்கம்போல ‘ மூளையற்ற கோழைத்தனம் ‘ என்று குறிப்பிட்டார்கள். மூளையற்ற (mindless) என்பது தேவையில்லாமல் ஒரு பொது தொலைபேசிப்பெட்டியை உடைப்பதைk குறிப்பிட சரியான வார்த்தையாக இருக்கலாம். நியூயார்kகில் செப்டெம்பர் 11இல் வெடித்ததை இந்த வார்த்தை கொண்டு விளக்க முடியாது. இவர்கள் நிச்சயமாக mindless அல்லர், இன்னும் நிச்சயமாகk கோழைகள் அல்லர். இவர்களது மூளை மிகவும் சக்திவாய்ந்த சாதனம். இவர்கள் பைத்தியக்காரத்தனமான தைரியத்தால் உந்தப்பட்டவர்கள். இந்த தைரியம் எங்கிருந்து வந்தது என்பதை நாம் புரிந்து கொள்வது நமக்கு மிகவும் பிரயோசனமானது.
இது மதத்திடமிருந்து வந்தது. மதம் எப்போதுமே மத்தியக்கிழக்குப் பிரதேசங்களில் முக்கியான பிரிவுச்சிந்தனையைத் தோற்றுவித்திருக்கிறது. இதுவே இந்த ஆபத்தான ஆயுதத்தை உபயோகப்படுத்தத் தூண்டியிருக்கிறது. அது வேறுகதை. இங்கு நான் அதைப் பேசப்போவதில்லை.உலகத்தை மதத்தால் நிரப்புவது என்பது, அதுவும் ஆப்ரஹாமிய மதங்களால் நிரப்புவது என்பது தெருக்களெங்கும் குண்டுகள் நிறைந்த துப்பாக்கிகளை போட்டு வைப்பது போன்றது. அவைகள் உபயோகப்படுத்தப்பட்டால் ஆச்சரியப்பட வேண்டாம்.
(குறிப்பு: ரிச்சர்ட் டாகின்ஸ், ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர். இவர் சுயநல ஜீன், குருட்டு கடிகாரம்செய்பவன், வானவில்லை பிரிப்பது என்ற புத்தகங்களின் ஆசிரியர். மேற்கண்ட கட்டுரை கார்டியன் பத்திரிக்கையில் செப்டம்பர் 15,2002 வெளியானது)
- இரவு வான்!
- பரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )
- கொரில்லாவின் பூர்வகுடி வரலாறு -நிகழ்வும் புனைவும் குறித்து
- நிப்பிட்டு (அரிசி, கருப்பு உளுந்தம்பருப்பு சிப்ஸ்)
- கோடுபலே (வறுத்த அரிசி வளை)
- காந்த குளிர்சாதனப் பெட்டி (Magnetic Refrigerator) உருவாக்கப்பட்டிருக்கிறது.
- பாரதத்தின் நண்பர் அணுஉலை விஞ்ஞான மேதை டாக்டர் W.B. லூயிஸ்
- கன்னிகைத் தைக்கோர் கண்ணூறு!
- பூமியெல்லாம் பூ
- அடிமை விடியல்
- காற்றின் அனுமதி
- தைமகளே! காக்க வருக,வருகவே!
- இந்த வாரம் இப்படி -டிசம்பர் 14 – 2002 (ஐந்தாம் வகுப்பு, முஷரஃப், போப், கமல்-ரஜினி ரசிகர் சண்டை, மூன்றாமணி)
- உரையாடல் : பின்னணியும் எதிர்பார்ப்பும்
- மொழிச்சிலை அமைப்பு! மொழித்தாய் வாழ்த்து!- போலித் தமிழர்கள்
- கயிற்றில் நடக்கும் பாகிஸ்தானிய விமர்சகர்கள்
- மதத்தின் வழிதவறிய ஏவுகணைகள்
- மெக்காவில் துருக்கிய கோட்டை இடிக்கப்பட்டதற்கு துருக்கிய அரசு பலத்த கண்டனம் தெரிவித்திருக்கிறது.
- விநோத உணர்வுகள்