எஸ். ஷங்கரநாராயணன்
காமாட்சிநாதன் துவக்கப் பள்ளி ஆசிரியராக இருக்கிறார். அதல்ல முக்கியம் – அவர் ஓர் எழுத்தாளர். அதைவிட முக்கியம் இந்த ஆண்டின் சிறந்த எழுத்தாளர் என மண்டலவிருது அவருக்குக் கிடைத்திருக்கிறது.
பெரியப்பா இறந்துபோய் அந்தக் குடும்பம் கொஞ்சம் தத்தளித்துப் போனபோது காமாட்சிநாதன் அவர் மகனையும் பெரியம்மாவையும் பராமாரிக்க வேண்டியிருந்தது. நல்ல நாளிலேயே அந்தப் பையன் யார்பேச்சும் கேட்கமாட்டான். தான்தோன்றி. ஊர்சுற்றி. அவர் அவர்கள்வீட்டுக்குள் நுழைகையில் வாசலில் உட்கார்ந்து காலாட்டிட்டிருப்பான். சும்மா விருதே கிடக்கிற பொழுதை விளக்குமாத்தால் தள்ளுவதைப் போல காலால் தள்ளுகிறானாய் இருக்கும்.
நாய்க்கு வேலையில்ல, நிற்க நேரமில்ல, என்பது வசனம்.
அவன் கையில் ஆளுங்கட்சிப் பத்திரிகை. தலைவரின் அறைகூவல்களை ரசித்து வாசிப்பான். எதிர்க்கட்சிக்கு சவால்!… பிறகு வெளியே போனதும் அதைப்பற்றி நண்பர்களிடம் பேசவேண்டியிருந்தது. ”என்ன பிக்பிரதர்?” என்பான் சிநேகமாய். ”உங்களுக்கு எதும் வேணாச் சொல்லுங்க, நமக்குக் கட்சில ஆள் இருக்கு…” என்றான். அட நாயே, பெத்தவளுக்கு ஒருவாய்க் கஞ்சியூத்த நாதியில்லாமக் கெடக்கு, என் குறையைத் தீர்க்கறானாம், என்றிருந்தது. வீட்டுக்குள் போனால் பெத்தவள் மாலைமாலையாய்க் கண்ணீர் வடிக்கிறாள். அவர் போயிட்டாரே… இவன் போயிருந்தா நல்லாயிருந்திருக்கும், என்று வசனம் பேசினாள். வீட்ல சாமானா வாங்கிப் போடுங்க தம்பி. துட்டாக் குடுத்தீங்கன்னா, நீங்க வெளியே இறங்கின ஜோரில் காசைப் பிடுங்க வந்திருவான், பேதில போவான்… என்றாள். அவன் சகாக்கள் இவனைவிட உஷார். அவர்கள் அரிசியை வீட்டில் திருடி விற்றார்கள், என்பது அவளுக்குத் தெரியாது.
காமாட்சிநாதன் முதலில் சிறு துணுக்குகள் எழுதத் துவங்கினார். சீனப் பெருஞ்சுவரின் நீளம் இத்தனை மீட்டர், (கிலோமீட்டர் என்றால் எண் அளவு கம்மியா இருக்கும்!) கரிகால் சோழன் பட்டத்துக்கு வந்தபோது அவனுக்கு வயது எட்டு, தலையில் நரைமுடி ஒட்டி ஆட்சி புரிந்தான், அப்போதிருந்துதான் நிதிபதிகள் தலைக்கு முடி ஒட்டிக் கொள்கிறார்கள்… முதன்முதலில் தலைமுடியை வெட்டிக்கொண்டவன் பாப்லோ புருடா… என்றெல்லாம் அவர் நூறு எழுதி அனுப்ப ரெண்டு மூணு பிரசுரித்தார்கள். அதைவிட ஆனந்தம் அவற்றுக்கு சிறு துட்டும் அனுப்பி வைத்தார்கள்.
போதை தலைக்கேறினாப் போல கிறுகிறுத்த கணங்கள் அவை. பேரை அச்சில் பார்க்கிற பரவசப் பித்து! அவரது கற்பனை ஊற்று வெடித்துத் திறந்து கொண்டது. நகைச்சுவைத் துணுக்குகள் பக்கம் கவனம் திரும்பியது.
அப்பா நம்ம வீட்டுக்கு விருந்தாளிகள்லா வந்திருக்காங்க. போயி zoo பாத்திட்டு வருவமா?
சொந்தக்காரங்கள்லாம் வந்திருக்காங்க, இப்ப போயி மிருகங்களைப் பார்க்கன்னு zoo போணுமா!
அவர் நூறு அனுப்ப – இப்போது முன்னேற்றம் நாலைந்து பிரசுரம் ஆனது. துட்டும் வந்தது. பிறகு பத்திரிகை எதையெல்லாம் வெளியிடுமோ அத்தனையும் எழுத உந்தப் பட்டார். தினசரி அவர் தபால் அலுவலகத்துக்கு வந்து அஞ்சல்தலை வாங்கி ஒட்டி கட்டாயம் எதையாவது பத்திரிகைகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். வாசகர் கடிதம் கூட எழுதலாம். துட்டு தரார், என்றாலும் சிலர் ஒரு இதழ் ஓசி அனுப்பி வைக்கிறார்கள். அட அச்சில் பேர் வருகிறதே, லெட்சுமிபுரம் காமாட்சிநாதன், அவரால் துவக்கப் பள்ளிக்கே பெருமை, ஊருக்கே பெருமை அல்லவா இப்போது…
எதோ நம்மாலானது, என்று அடக்கத்துடன் நினைத்துக் கொண்டார்.
தபால்காரன் அவர்வீட்டுக்கு சில திரும்பிவந்த படைப்புகளுடன் ஒன்றிரண்டு பத்திரிகைப் பிரதியும் கொண்டு வருவது கௌரவமாய்த்தான் இருக்கிறது. சிலநாள் வெறும் படைப்பு மாத்திரம் திரும்ப வரும், வருத்தமாய்த்தான் இருக்கும்.
எழுத எதுவும் இல்லையென்றால், அவரே பொன்மொழி சொந்தமாய் எழுதி அனுப்பி வைத்துவிடுவார்.
வெற்றி பெறச் சிறந்த வழி தளராது உழைப்பதே – லூயி ஃப்ரெடரிக்
யாரது லூயி? அவரேதான்! அதிலும் சில பிரசுரமாகும். துட்டும் இதழும்கூட அனுப்பாத சில பத்திரிகைகளில் அவை வெளிவந்தன. என்றாலும் அவரது ‘புகழ்-இடுப்பு’ பெருத்து வருவதாக மனசில் ஆனந்தம். பள்ளிக்கும் ஊருக்குமில்ல பெருமை!
காமாட்சி நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லடா, என நினைத்துக் கொண்டார்.
எழுத்தாள பந்தாக்கள் சில இப்போது அவரில் சேர ஆரம்பித்து விட்டன. முகவரி என்று கையில் எழுதாமல் ரப்பர்ஸ்டாம்ப் போட்டார். பேசும்போது சற்று நிதானித்து, கேட்கிறாளைக் கூர்மையாய்ப் பார்த்து ஒரு புன்னகை.
பத்திரிகை விற்கிற கடையில் நின்று ஓசி அனுப்பாத இதழ்கள் எதிலும் தன் படைப்பு வந்திருக்கிறதா என்று பார்க்க கடைக்காரனிடம் சிநேகம் கொண்டார். பத்திரிகை வாங்காவிட்டாலும் வேறு எதாவது வாங்கியாக வேண்டியிருந்தது. சும்மா அங்கே போய் நிற்க இயலாது. மனுசாளுக்கும் நாய்க்கும் வித்தியாசம் இல்லியா?…
நாய்கிட்ட எவனும் என்ன நிக்கிறே, என்று கேட்பதில்லை.
மூக்குப்பொடி போடக் கற்றுக் கொண்டார். தேவை இல்லாவிட்டாலும் அங்கே தொங்குகிற பழத்தைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டார். பத்திரிகை வாங்க வருகிற ஆட்களிடம் புன்னகைத்துப் பழகிக்கொள்ள முயன்றார். அந்தாள் என்ன பத்திரிகை வாங்குகிறாரோ அதற்கு எதாவது எழுதிப் போட உத்வேகம் கொண்டார்.
அப்படி ஒருநாள் காத்திருந்தபோது ஒரு இளைஞன் வந்து ‘குஜாலக்கடி கோகிலா’ என்று செக்ஸ் புத்தகம் வாங்கினான். அவர் பக்கம் திரும்பி ”சார் இதுலகூட எழுதறாரா?” என்று கேட்டான் கடைக்காரரிடம்.
திடுதிப்பென்று பத்திரிகைகள் மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட ஆரம்பித்து விட்டன, மக்களைக் கைக்குழந்தைகள் என நினைத்தாப் போல ஊட்டி விடுகிறார்கள். நாளை உனதே, வெற்றி உன் கையில், மகிழ்ச்சியாக வாழுங்கள், என்றெல்லாம் அறிவுரைகளை வாரி வழங்கினார்கள். சாமியார்கள் எங்கிருந்தாலும் தேடி அவர்கள் படத்தைப் போட்டு, ரெண்டு கையும் உயர்த்தி அவர் ஆசிர்வதிக்கிற மாதிரி படம், அவர் கட்டுரையோ, அவர்பெயரில் இவர்களே எழுதிய கட்டுரையோ வெளியிட்டார்கள். சில சமயம் இவர்களே எதாவது சக்திசிவதாண்டவா என்று புனைப்பெயர் வைத்துக்கொண்டு தன்னம்பிக்கை வழங்கினார்கள்.
ஆலயம் தொழுவது, (மாட்டுத் தொழுவத்துக்கும் கோவிலுக்கும் என்ன சம்பந்தம்? ஆ, ஆலயம் என்பது மனுசத் தொழுவம் போல.) என்று கேள்வியே படாத கோவில்களைப் பற்றியெல்லாம் விநோத புராணங்கள். பஸ் ஓடாத, நாய் நரி ஓடுகிற காடு, பாழடைந்த கோபுரத்துடன் ஒரு படம், ரொம்ப சக்திவாய்ந்த மூர்த்தி, என்று கட்டுரை. நம்ம காமாட்சிநாதனும் தன் ஊரைச் சுற்றியுள்ள தெரிந்த கோவில் பற்றி அவருக்கே தெரியாத விவரங்களையெல்லாம் எழுதிப்போட்டார். இடிந்த சுவரில் எப்பவோ விழுந்த விதையில் முளைத்த செடியைத் தின்ன வந்த ஆடு சொர்க்கம் புகுந்த கதையை எழுதிப் போட்டார்.
நாட்டில் எத்தனை பக்திப் புத்தகங்கள் பெருகிவிட்டன, செக்ஸ் புத்தகங்களைப்போல!… இவரும் துட்டு தரார் என்றாலும் இடுப்பு பெருக்கிறதே. மேலும் எழுதும்படி கடிதம் போடுகிறார்களே! மனுசாளுக்கு மதிப்பு முக்கியம் அல்லவா?
புராணத்துக்குத் தனி புனிதம் உண்டு. நாய் லிங்கத்தின் மேல் கால் தூக்கினால் அபசாரம். மாடு மடுதிறந்து ஊற்றினால் புண்ணியம்.
இலக்கியப் பத்திரிகைகள் என்று ஒரு கோஷ்டி பெருங்கூத்தாய்க் கிளம்பியிருக்கிறது. புத்தகம் போடுகிற நபர்கள், அப்படியே அந்தப் பழக்க வழக்கத்தை விஸ்தரித்து வேண்டிய ஆட்களின் படைப்புகளாய் இதழ், அதைப் பாராட்டி கடிதங்களும் வெளியிட்டு, பதிப்பகத்தில் அதே எழுத்தாளர்களின் புத்தகம் உலகமுழுமைக்கும் விற்பது சமீபத்திய போக்கு. காமாட்சிநாதனிடம் சந்தா கேட்டு கடிதமும் முதல் இதழும் ஓசி அனுப்பி வைத்தார்கள். உடனே பரபரப்பாகி அவர் கடும் பிரயத்தனத்துடன் இலக்கியசாயம் பூசி அனுப்பி வைத்த கதை பிரசுரமாகவில்லை. ஒவ்வொரு இதழ் வெளியாகும்போதும் கடைக்குப் போய் தொங்கும் பிரதியை அப்படியே காற்றுக்குப் போலப் பிரித்துப் பார்ப்பதோடு சரி. அவை அப்படியே அதே தூசியுடன் தொங்குவதைப் பார்த்துவிட்டுத் திரும்புவார், இதுக்கெல்லாம் நம்பிச் செலவழிக்கிறார்கள். பழைய பேப்பர்க்காரனுக்கு யோக ஜாதகம்!
சிற்றிதழ்களுக்கு என எழுத வந்தபோதுதான் கதைகள் பக்கம் கவனப்பட்டார். அதுவரை தன்னம்பிக்கைக் கட்டுரை, கோவில் தரிசனம் கோடி புண்ணியம், என்றெல்லாம் கற்பனையை ஓட விட்டுக் கொண்டிருந்தவர், குதிரை லகானை இறுகப் பற்றித் திருப்பினார். பள்ளிக்கூடத்தில் பிள்ளைங்களுக்குச் சொல்லிக் கொடுக்கும் அறநெறிகளைக் கதையாக்குவதில் மோகம் கொண்டார். தன்வினை தன்னைச் சுடும், கெடுவான் கேடு நினைப்பான் – போன்ற வைர வரிகளை மனதில் வாங்கி அதை ஒரு கதைக்குள் நிருவுவதில் இறங்கினார். அம்மா கஷ்டப்பட்டு அப்பா இல்லாமல், நாலு வீட்டில் பத்து பாத்திரம் தேய்த்து, மகனை வளர்த்தாள், அவன் பொறுப்புணர்ந்து படித்து மாநிலத்திலேயே முதல் மாணவனாக வந்தான்.
ரெண்டாவதா எந்த மாணவனும் வருவதே இல்லை!…
கலெக்டர் கையால் அவன் பரிசு வாங்கியபோது அவன் அம்மா ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். ஒழுக்கம் உயர்வு தரும், என்று பல கோணங்களில் கருத்துமையமிட்ட கதைகள் அவரிலிருந்து கிளம்பின. நாளிதழ்களின் ஞாயிறு மலர்களிலும், உபரிக் காகிதத்தைப் பயன்படுத்தி அதே நாளிதழ்கள் வெளியிடும் வார, மற்றும் மாத(விலக்கு)நாவல் இதழ்களிலும் எப்போதாவது வெளியாகின. ஊரின் பெருமை பரந்து விரிந்துகொண்டே போவதாக அவர் பெருமிதம் கொண்டதில் நியாயம் உண்டு.
கோவில் கட்டுரைகளை இப்போது நிறுத்தி விட்டார்! இதானால் பல கோவில்வாசல் பிச்சைக்காரர்களின் வாழ்வு பாதிக்கப் பட்டது.
அவர் வாழ்வின் திருப்புமுனை என்றால் இப்படி ஒரு கதை ஒரு பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது, என்பதுதான். அவர்கதையில் கதாநாயக மாணவன் – இப்போதெல்லாம் அவன் தலித்தாக இருக்கிறான் – ஊரிலிருந்து விரட்டப்பட்டு நன்கு படித்து முன்னேறி அதே மாவட்டத்துக்கே கலெக்டராக வந்தான்.
அதிலிருந்து காமாட்சிநாதனுக்கு சீர்திருத்தக் கதைகளை எழுத தகுதி கிடைத்து விட்டது. சுதந்திரம் என்பது பேரளவில்தான் நாட்டில் இருக்கிறது, இன்னும் நாம் எத்தனையோ விஷயங்களில் அடிமைப் பட்டுக் கிடக்கிறோம், என ஒரு கதை எழுதி, அது ஒரு இதழின் சுதந்திரதினச் சிறப்பிதழில் வெளியானது.
சுதந்திர தினத்துக்கு எதுக்கு சிறப்பிதழ்? நிறைய விளம்பரம் கிடைத்தால் சிறப்பிதழ் போட்டு விடலாம். ஒரு புத்தகமோ, இரண்டு புத்தகமோ.
ஊனம் என்பது உடலில் அல்ல, மனதில் என்ற கதையை அவர் அடுத்து அதே இதழில் எழுதியபோது பத்திரிகைக்காரர்களே பாராட்டுக் கடிதமும் வெளியிட்டுக் கொண்டார்கள். பொதுவாக பெரிய எழுத்தாளர் கதைகள் தவிர வேறு கதைகளுக்கு அவர்கள் பாராட்டுக் கடிதம் வெளியிடுவது இல்லை, என்ற விவரம் அவருக்குத் தெரியும். ஆகா நாம இப்ப பெரிய எழுத்தாளர் என மனம் விம்மிய கணம் அது.
இதற்கிடையே அவரது பெரியப்பா மகன் ஆளுங்கட்சி இளைஞர் அணியில் பரபரப்பு பெற்றவனாய் ஆகியிருந்தான். பேரும் வெறும் மூர்த்தி என்றில்லாமல் லெட்சுமிபுரம் மூர்த்தி என்று மாற்றிக் கொண்டிருந்தான். எலேய், ஆராரு பேர்கூட ஊர் சேத்துக்கிர்றதுன்னு இல்லியா? – என நினைத்துக் கொண்டார். சொல்லவில்லை, அவன்ட்டப் பேச்சுவாங்க முடியாது. கெட்டவார்த்தைப் பிரியன். அவருக்குப் பொடிப்பழக்கம். அவனுக்கு இது. வாயில் பீடா போல எப்பவும் கெட்ட வார்த்தை ஒதுக்கியிருந்தாப் போலிருந்தது. அதை மேடையேறி மைக்கில் கத்திப் பேசினான். கூச்சம் எதுவும் கிடையாது. எதிர்க்கட்சித் தலைவரைக் கொச்சையாய் அவன் வர்ணிக்க கூட்டம் கொந்தளித்துக் கை தட்டியது. தனியே மேடையில் அவனுக்கு நேரம் ஒதுக்கித் தந்தார்கள். கடைசியாய்ப் பேசினான். பேச ஒரு கூட்டத்துக்கு இவ்வளவு என்று காசும் உண்டு.
”நாங்க கலைக் குடும்பம். எங்க அண்ணர் எழுத்தாளர். நான் பேச்சாளன்!” என்பான் அவரைப் பார்த்தபடி. அவருக்கு வேட்டியில்லாமல் நிற்கிறாப்போலிருக்கும். ”அவர் லெட்சுமிபுரம் காமாட்சி, நான் லெ. மூர்த்தி ஙொத்தா…” என்பான் சிரித்தபடி. லெ. ஙொத்தா பேர் நல்லதாண்டா இருக்கு, என நினைத்துக் கொள்வார்.
பேச்சிலும், அடிதடி ரகளை என்றும் காசு கொண்டு வந்தான். தேறியதில் நண்பர்களோடு குஜால் பண்ணுவதற்கும் தண்ணி சிகெரெட் என்று வாரியிறைத்ததும் போக மிச்சம் இருந்தால் வீட்டுக்கு. வெள்ளை உடுப்பு, வேட்டி சட்டை. கட்சிக்கரை வேட்டி. கையில் தலைவர் படம் பொறித்த மோதிரம். குளிர் கண்ணாடி அவன் அடையாளமாய் இருந்தது. கொஞ்சநாளில் தடதடவென்று போக பைக் வாங்குவானாய் இருக்கும்.
விறுவிறுவென்று அவன் காமாட்சிநாதனை விடப் பிரபலமாகிப்போனான். ”எங்க பிக் பிரதர் கூட சும்மா கதை கிதை எதும் எளுதும் ஙொ…” என்றான் ஒரு தடவை. ஙொ இல்லாமல் பேசத் தெரியாதவன். என் கதை எதையாச்சும் படிச்சிருப்பானா தெரியவில்லை. இந்த ஙொ-க்களுக்காகக் கடைகளில் குஜால் குமரிகள், கொக்கோகம் புத்தகம் எல்லாம் விற்கிறார்கள்.
அவர் கதைகளுக்கு வாசகர் கடிதங்கள் வெளியிடும் அந்தஸ்தைப் பத்திரிகைகள் வழங்க ஆரம்பித்திருந்தன. இப்போது கதை வந்த இதழ் பார்த்து, அடுத்த இதழும் பார்க்க வேண்டியிருந்தது. கடைக்கு அடிக்கடி போகவேண்டியிருந்தது. அ, மேலே மேலே போகிற பிரமை தாளவொண்ணாதிருந்தது. படிக்கிற பசங்களின் அம்மாக்கள் வீட்டு விலக்காகிறபோது படிக்க என்று அவர் கதை வந்த இதழ்களைக் கேட்டு வாங்கிப் போக ஆரம்பித்தார்கள்.
என்னடா நாளாவுதே குப்புசாமியோட அம்மா புத்தகம் கேட்கலியே, என நினைத்தார்.
ஒருவேளை முழுகாம இருக்குதோ என்னமோ!
”நேத்து வேர்க்கடலை வாங்கினேன் சார். பாத்தா…” என்றார் சக ஆசிரியர்.
”என்ன கடலைல சொத்தையா?”
”இல்லை. கடலை சுத்தி வந்த பேப்பர்ல, உங்க கதை!”
”ம்” என்றார். புகழ் மாலை தாளாமல் தோளே வலித்தது அவருக்கு.
”கடலைதான் சொத்தைன்னு பாத்தா… கதையும் சொத்தை!” என்றார் சக ஆசிரியர்.
இருந்த சபலத்தில் கைத்துட்டைச் செலவழித்து முதல் சிறுகதைத் தொகுதி வெளியிட்டார் லெட்சுமிபுரம் காமாட்சிநாதன். நான் சமுதாயத்தைக் கூர்ந்து பார்த்து ரசித்தவற்றை, பிடித்ததைப் பாராட்டியும், பிடிக்காததை விமர்சித்தும் எழுதுகிறேன். நான் சீர்திருத்தக்காரன். பேனா என் ஆயுதம். அப்டி இப்டி ஒரு முன்னுரை. தர்மாவேசம்.
எழுத்தாளன் இந்த நாட்டின் முதுகெலும்பு என்கிறார்கள். நாட்டில் அநேக எழுத்தாளனுக்கு முதுகெலும்புதான் மிஸ்சிங்!
வீடு நிரம்ப புத்தகம். பெண்டாட்டி வீட்டுக்கு ஒதுங்கிய நாளில் எடுத்துப் படிப்பாள் என நினைத்தார். ஒதுங்கும் அறையில்தான் புத்தகம் அடுக்கி யிருந்தது.
ஐந்தாறை எடுத்து தலைக்கு வைத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். நேரா அப்டியே மூளைக்கு அனுப்பிர்றா போல!
அச்சிட்ட ஜோரில் பெட்டிக்கடையில் விற்பனைக்குக் கொடுத்திருந்தார். வாலிப விருந்து புத்தகத்துக்கு அருகே அதை கிளிப்பினான் கடைக்காரன். பாக்கிறவர்கள் எல்லாம் வா.வி.யை வாங்கிப் போனார்கள்.
புத்தகம் போட்டதுதான் போட்டம் ஒரு வெளியீட்டு விழா இல்லாமல் எப்படி, என்று தலைமையாசிரியரை – அவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் – தலைமை போட்டு, சிறப்புரை என்று யாரைப்போடலாம் என்று யோசித்தவாறிருந்தார். இலக்கியவாதிகளைப் போட முடியாது. கிண்டிக் கிழங்கெடுத்துருவான்கள், ஷங்கரநாராயணன் உட்பட அவனவன், உலகத்திலேயே அவன் படைப்புதான் ஒஸ்தி, மத்ததோட போடு குஸ்தின்னு வாழறான்கள். மாசாமாசம் சிட்டையில் கடன் கொடுக்கிற பலசரக்குக் கடை முதலாளியைக் கூப்பிடலாம்.
கதை படிச்சியா, என்று கேட்டால், எவ்ள காசு கொடுத்தான், நம்ம கடனை அடைக்கப்டாதா, என்பான்…
விழாவுக்கு என துட்டு தருவானா? சிட்டைக் கணக்கில் கழிச்சிக்கிட்டாலும் சரிதான்.
முதுகிழமாய் ஊரில் ஒரு சுதந்திர தியாகி இருக்கிறார். வாய்க்குழி விழுந்து பேசும்போது பொஃப் பொஃப் என்று சத்தம் வரும். மேல்சடடை போடாத ஆசாமி, விழாவுக்குச் சட்டை போட்ட்டு வந்தால் நல்லது. அவரையும் கேட்டுப் பாப்பம்.
அப்போது பரபரப்போடு வந்தான் லெ. மூர்த்தி. ”என்ன பிக் பிரதர், புத்தகம் போட்டிருக்காப்லியா? கடைல பார்த்தேன்…” என்றான் மூச்சிறைக்க. அவன் கையில் தன்வினை – அவர் எழுதிய புத்தகம். கூடவே வா.வி.
”ஆமாம்” என்றார் சங்கடத்துடன். சிலாள் படிக்க மாட்டானா என்றிருக்கும், இவன் ஏன் பார்த்தான், என்றிருந்தது. ”ஒரு மூவாயிரம் ரூபாய் எடு பிரதர். விழா வெச்சி தூள் பண்ணிறலாம்” என்றான். அவர்பதிலுக்குக் காத்திராமல் ”அண்ணி…” என்று உள்ளேபோய்ப் புன்னகையுடன் பேச ஆரம்பித்தான்.
நம்ப பள்ளிக் கூடத்துலயே நடத்திறலாம். ஊர்ல அங்கங்க ஙொ நோட்டிஸ் அடிக்கணும். எங்க வட்டத்தலைவரைக் கூப்பிடுவோம். வருக வருக போஸ்டர், அதை நாங்க எங்க செலவுல பாத்துக்கறோம். முடிஞ்சா அவர் கையால இலக்கியச் செம்மல் அது இதுன்னு எதும் பட்டம் தரச் சொல்லலாம்…
விழாவும் மைக்கும் கிடைத்தால் நாய்க்குக் கூட பட்டம் தருவான்கள்.
அவர்பக்கம் திரும்பினான். ”இப்டியே இருந்தா எப்டி பிரதர். எப்ப ஙொ ஃபேமஸ் ஆறது?” என்றான். கையில் இருந்த ஆயிரத்தை அண்ணி தந்தாள். ”வூடுல மக்கள் நடமாட முடியல. எங்க பாத்தாலும் புஸ்தகம். எப்பிடி விக்க தெரியல. ஓசி குடுத்தாக் கூட தீராது. நீ ஒரு வழி பண்ணிவுடுப்பா. எங்கூட்டுக்காரருக்கு இதெல்லாம் அவ்ள பத்தாது…” என்று பெருமூச்சு விட்டாள்.
”ஒர்ரி வேணாம் அண்ணி. மீதி ரெடி பண்ணி வெய்ங்க. எல்லா நான் பாத்துக்கறேன். எங்க அண்ணனை முன்னேத்தறது எம் பொறுப்பு இல்லியா?” என்றுவிட்டுப் போனான்.
வந்ததும் போனதும் புயல் அடித்து ஓய்ந்தாப் போலிருந்தது. விவகாரம் கைமீறி சாக்கடை பொங்கினாப் போல ஆகியிருந்தது. இனி அவரால் இந்த வேகத்தைக் குறைக்கவோ நிறுத்தவோ முடியாது
தவிரவும் விழா என்று நாமளே எடுக்கறது அத்தனை சரியா வராது. இப்ப அவனே செய்யிறதானா செய்யட்டும், நல்லதுதானே?
முன்பே தெரிந்திருந்தால் இந்த ஹெச்.எம். கிழத்தைப் போடாமல் இருந்திருக்கலாம். மனுசனுக்கு நாக்ல சனி. கோவம் வந்தா இன்ன பேசுவார்னு தெரியாது. ”என்னடா பேர் இது, பேரோட ஊரைச் சேத்துக்கிட்டு, உன்னால ஊருக்கே அசிங்கம்டா” என்றுவிட்டார் ஒருநாள்.
விழாமேடையில் உட்கார்த்தி வெச்சி என் ஜம்பத்தைக் காட்டணும், என நினைத்துக் கொண்டார் லெ.கா.
நாள் நெருங்க நெருங்க ஜுரம் வந்தாப்போல ஆகியிருந்தது. அழைப்பிதழ் பார்க்க ஒரு பரவசம். பொன்னாடை, நினைவுப்பரிசு என மூவாயிரம் தாண்டியும் செலவு இழுத்துக் கொண்டு போனது. பெண்ணாட்டிக்காரி கழுத்து நகையை அடகு வைத்தாள். ஒர்ரி பண்ணிக்க முடியவில்லை. உலக்கைக்குள் தலை கொடுத்தாப் போலிருந்தது நிலைமை.
அவர் வழக்கமாக எழுதும் நாளிதழ் (ஞாயிறுமலர்) முகவரிக்கு அழைப்பு அனுப்பி வைத்தார். தலைமை தலைமையாசிரியர், ரெண்டு தடவை தலைமைன்னு வந்தது, பிழையோ என நினைத்தார். முதல் பிரதி வெளியிட்டுச் சிறப்புரை தன்மான இளவல் சிங்கை ஆ. முத்து. சோத்துக்கு சிங்கி அடிக்கிறதால் அந்தப் பெயர் போலும். முதல்பிரதி பெற்றவர் தியாகி சோமசுந்தரம். காந்தியடிகள் பாத யாத்திரை வந்தபோது தப்பா வேறு ஊருக்குக் கூட்டிப் போனவர் அவர். அவருக்கே அந்தப் பக்கம் அவ்ள நல்லாத் தெரியாது.
இலக்கியச் செம்மல் விருது வேறு. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள். லெ.கா.வின் வெற்றிக்குப் பின் அவர் மனைவியைப் பார்க்கிறேன், என்றார் சிறப்புரை. (நீங்க ஒண்ணும் எழுதி இங்க ஆகப் போறதில்லைன்னா கேட்டாத்தானே?) சிரித்தபடியே பெண்டாட்டி கழுத்தைத் தடவிப் பார்த்தாள். இந்த ஆம்பளையின் வெற்றிக்குப் பின் என் கழுத்துச் சங்கிலி, என நினைத்துக் கொண்டாள்.
புத்தகம் போட்ட காசை எடுக்க அவள் பார்த்தால் சங்கிலி போனதுதான் மிச்சம்.
காமாட்சிநாதன் ரொம்பக் குளிர்ந்திருந்தார். துட்டு மேடையில் ரோஜா இதழ்களாய் வீணாகிக் கிடந்தது. மேடையில் லெ. மூர்த்தி ”விரைவில் நம்ம காமாட்சி ஐயா அவர்கள் நாடு போற்றும் எழுத்தாளராவார்…” என (புத்தகத்தை வாசிக்காமலேயே) நம்பிக்கை தெரிவித்தபோது எல்லாரும் கைதட்டினார்கள். கீழே துவக்கப்பள்ளி மாணவர்கள் சிலரும் அவரது பிரிய வாசகிகளான அவர்களின் அம்மாக்களும்.
என் எழுத்துக் கடமையைத் தொடர்ந்து செய்வேன், என அடக்கத்துடன் ஏற்புரை மொழிந்தார்.
விழா முடிந்து வீடு திரும்ப மனசே இல்லை.
”பிக் பிரதர், அடுத்த புஸ்தகம் போடுங்க,” என்று வந்து ஊக்கினான் ஸ்மால் பிரதர். செலவு நுரை தள்ளிரும் போலிருந்தது. ”ஏல இருக்க பொஸ்தகம் விற்க வழி கேட்டா, அடுத்ததைப் போடச் சொல்றியே…” என்றாள் அண்ணி. ”கொஞ்சம் புகழ் வந்துட்டா இந்தப் புத்தகம்லாம் பர்றந்துரும் அண்ணி” என்று புன்னகைத்தான்.
அதெல்லாம் அவளுக்குப் புரியாது, என நினைத்துக் கொண்டார் கா.
பார்த்தால் குச்சியா ஒடிந்து விழுந்துர்றாப்போலத்தான் இருக்கிறான். நினைச்சா சில காரியம் செய்வான் போலத்தான் இருந்தது. ஆளுங்கட்சி இலக்கிய அணி என்று வைத்திருந்தார்கள். இலக்கிய ஆணி, என எழுதி ஒரு அழைப்பிதழ் வந்தது அவருக்கு. அவரைப் பேச அழைத்தார்கள். வெளியாள் கூப்பிட்டு மேடையில் பேச வாய்ப்பு. இப்போது அவர் பெரிய எழுத்தாளர். இ.செ. மேடைப் பேச்சாளர் அனைவரும் வந்திருந்த அனைவரையும், மேடையில் இருந்த அனைவரையும் பேர் சொல்லி அப்டி இப்டி என்று பாராட்டி தன் நெருக்கத்தை வெளிப்படுத்தி விட்டு பிறகு போனால் போகிறது என்று பொது வார்த்தை ரெண்டு வார்த்தை பேசிவிட்டு அமர்ந்தார்கள்.
சர்ச் பிரார்த்தனையில் திடீரென்று பைபிளில் ஒரு பக்கம் பிரித்து வாசிப்பார்கள். அதைப்போல திருக்குறள், பாரதியார் என்று நாலு எடுத்துவிட்டு அமர்ந்தார்.
எழுத்தும் பேச்சுமாக அந்த வட்டாரம் அவரை கவனிக்க ஆரம்பித்தபோதும் பேரிதழ்களும், சிற்றிதழ்களுமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. நடு இதழ்கள், ஞாயிறு மலர்கள் அவர் கதைகளை வெளியிட்டன.
ஆ அவரைக் கண்டு கொண்டார்களே!
ஆனால் அது நல்ல விஷயம் அல்ல. ஆண்டின் சிறந்த எழுத்தாளர் என மண்டல விருது, ஆளுங்கட்சியில் அவருக்கு வழங்கப்பட்டது. முன்பே மூர்த்தி வந்து புன்னகையுடன் சொன்னபோது அவர் நம்பவில்லை. எதோ லந்தடிக்கிறான் என நினைத்தார். ஆனால் ”காலைல நாளிதழ் பாருங்க…” என்றுவிட்டுப் போய்விட்டான் அவன்.
நாளிதழில் அவருக்கு மண்டலவிருது வழங்கப்பட்ட செய்தி ஐந்து வரிகளும், அதே பக்கத்தில் அதைக் கண்டித்து ஒரு பிரபல எழுத்தாளரின் கண்டனக் கட்டுரை நூறு வரிகளும் வெளியாகியிருந்தது. பகீரென்றது. அந்தக் கண்டனக் கட்டுரை வட்டாரத்தில் வெகு பிரபலமாகி விட்டது. வெளியே போகும்போதெல்லாம், அவர்தான், என்று சுட்டிக்காட்டி யாரோ எதோ பேசுகிறாப் போலவே இருந்தது.
”விடுங்க, அவருக்குக் கிடைக்காத வயித்தெரிச்சல்ல எதையோ எழுதறாரு” என்றான் மூர்த்தி.
”எம் பத்திரிகையே அதைப் போட்டிருக்கு பாருடா” என்றார். ”கண்டனம் எழுதினவன் என் கதையே படிச்சானோ இல்லையோ…”
”படிச்சிருந்தா அவன் இதை எழுதியிருப்பானா என்ன…” என்றான் மூர்த்தி. கிண்டலடிக்கிறானா தெரியவில்லை. சட்டென நிமிர்ந்து பார்த்தார். சுபாவமாவே இறுக்கமான முகம் அது.
எங்கும் யாரிடமும் விருது பற்றி வெளியே பேச முடியாமல் பயமாய் இருந்தது. விருது வாங்கும் அன்றைக்கு விழாவுக்கு வந்தே கலாட்டா செய்வார்கள் என்று தோணியது.
நியாயமான ஒருத்தனைக் கூட அவர்கள் பாராட்டுவதெல்லாம் இல்லை. அப்டியே விட்ருவாங்க. என்னைப் போல ஏப்ப சாப்பையின்னா எகிற ஒரு உற்சாகம்.
விருது வேணாம், என்று சொல்லிவிடலாமா என நினைத்தார். மூர்த்தியை எப்படிச் சமாளிப்பார் தெரியவில்லை. ஆனது ஆவட்டும், என விட்டுவிட வேண்டியதுதான்.
அதே நாளிதழில் அவரது புகைப்படமும் சிறு குறிப்பும் கேட்டு மறுநாள் அவருக்குக் கடிதம் வந்தது.
__
(நன்றி – வடக்கு வாசல் மாத இதழ் ஆகஸ்டு 2008)
storysankar@rediffmail.com
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – காலைக் கவிதை -1 காதலி : மாடில்தே உரூத்தியா (Matilde Urrutia)
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 6 (சுருக்கப் பட்டது)
- தாகூரின் கீதங்கள் – 46 நமது நெருங்கிய நட்பு !
- புன்னகையின் ஒளி ததும்பும் கதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐந்து
- செப்டம்பர் 2008 வார்த்தை இதழில்…
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 34. பிரபஞ்சன்
- தொட்டுப்பிடித்து விளையாடும் தொடுவானங்கள் (cosmic horizons) (ஐன்ஸ்டீன் அறிவாலயம்-1)
- விட்டில் பூச்சிகள்
- உங்கள் மழை தட்டுகையில்…
- “வையத் தலைமை கொள்” எனும் நூல் வெளியீட்டு விழா
- “இலக்கிய உரையாடல்” கே.டானியல் எழுதிய “பஞ்சமர்”
- மதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு நூல்கள் வெளியீட்டு விழா
- மண்ணின் பூத்த கவிப்பூ ஒன்றின் மரணம்
- பல்சமய உரையாடலை வலியுறுத்தும் எழுத்துக்கள் நம் காலத்தின் அவசியம்
- ஆழ்வார் பாசுரங்களில் பக்தி ரஸம் – 3
- சுப்ரபாரதிமணியனின் ‘ஓலைக்கீற்று’ நூல் விமர்சனம்- தாண்டவக்கோன்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூதக் கருந்துளைகள் விடுக்கும் புதிய மர்மங்கள் ! [கட்டுரை: 40]
- “நேராக நில்! கைகளைப் பக்கவாட்டில் வை”
- விவாதங்களும், வெட்டிக்கவிதைகளும்
- குழந்தைக் கதை
- “ஆற்றின் மௌனம்”
- புதிர்
- நகைப்பாக்கள்- சென்ரியு
- சென்ரியு – நகைப்பாக்கள்
- குற்ற உணர்வு இல்லா இந்தியர்கள்
- ஜ ந் து.
- ஆனந்த சுதந்திரம் ( ரஜித்)
- காஷ்மீர் பிரிவினைவாதத்தின் மொழியும், கண்ணன் வழியும்
- நினைவுகளின் தடத்தில் – 16
- மண்டலஎருது