மடியில் நெருப்பு – 31

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

ஜோதிர்லதா கிரிஜா



31

சோதனை திருப்தியாக இருக்க, இருவரும் வெளியே வந்தார்கள். மேசைக்கு வந்ததும், “நீ என்னைச் சோதனை போட்டே. ஆனா, நான் உன்னைச் சோதனை போடல்லே, பாத்தியா?” என்ற தண்டபாணி சிரித்தான்.

ராஜாதிராஜன், “ சரி, வா. எந்திரி. நானும் சோதனைக்குத் தயார்!” என்றான்.

“வேணாம், ராஜா! உனக்கு என் மேல இல்லாத நம்பிக்கை எனக்கு உன் மேல இருக்குப்பா! சரி, விடு. இப்பவாச்சும் மனசு விட்டுப் பேசு. அந்த சூர்யாப் பொண்ணை நான் தொ¡டாம இருக்க்¢றதுக்காக அம்பதாயிரம் தர்றேன்னியில்லே? அதை இன்னைக்கே குடுத்துட்டா எனக்கு உதவியா யிருக்கும் “

“முப்பதாயிரம் முதல்லே தர்றேன், அப்பால பாக்கியைத் தவணை முறையிலே தர்றேன். “

“சரி. அந்த முப்பதாயிரத்தைத்தான் இன்னைக்குக் குடுத்துடேன். எனக்குத் தேவைப் படுது!”

“இன்னும் ரெண்டே நாள்லே குடுத்துடறேன். வழக்கமான கேஷியர் லீவ்ல போயிருக்காரு. அவரு வந்ததும் குடுத்துடறேன். . . “

“அப்ப, அந்தக் குட்டியை நீ சின்ன வீடா வெச்சுக்கிறதாத்தான் இருக்கியா?”

“இத பாரு, தண்டபாணி! நான் லவ் பண்ற பொண்ணைப் பத்திக் குட்டி கிட்டின்னெல்லாம் பேசாதே. எனக்குக் கெட்ட கோவம் வரும். ஆமா!”

“சரிப்பா, சரிப்பா! கோவிச்சுக்காதே. அப்படியே பேசிப் பேசிப் பழக்கமாயிடிச்சு. நீ ஏற்கெனவே கல்யாணம் ஆனவன்கிற விஷயம் அந்தப் பொண்ணுக்குத் தெரியும்னு தானே சொன்னே?”

“ஆமா. தெரியும்.”

` “ஆமா? உங்கப்பா என்னவோ போலீஸ்ல என்னைப் பிடிக்கப் போறாங்கன்றாப்ல சொன்னதாச் சொன்னியே, அதெப்படி உண்மையா யிருக்க முடியும்? முக்கியப்பட்ட போலீஸ் அதிகாரிங்கல்லாம் என் சட்டைப் பையில இல்லே இருக்காங்க!”

“இருக்கலாம். ஆனா எல்லாருமே அப்படி இல்லியே! உள்ளுர்ப் போலீஸ் உனக்குத் துணையா யிருக்கிறதால சி.பி.ஐ. அதிகாரிங்க முயற்சி பண்ணலாமில்லே?”

தண்டபாணி திடுக்கிட்டான்.

“அப்புறம் இன்னொண்ணு! லண்டன்லேர்ந்து ஒரு மாப்பிள்ளைப் பையனை இறக்குமதி பண்ணியிருக்கியே, சேதுமாதவன்னு, அவன் நிஜமான ஆளுதானா, இல்லாட்டி போலியான்னு பொண்ணு வீட்டுக்காரங்க விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க. அதுல வேற மாட்டிக்கப்போறே! ஜாக்கிரதை!”

முகம் மாறாதிருக்க முயன்றவாறு, தண்டபாணி, “ லண்டனுக்கே ·போன் போட்டு விசாரிச்சுக்கட்டுமே!” என்றான்.

“சரி. ஆனா நீ சேதுமாதவன்னு காட்டுற அந்த ஆளுதான் நிஜமான சேதுமாதவன்னு எப்படி நம்புறது?”

“அப்ப வேணாம்ப்பா. விட்றச் சொல்லு. நான் அந்த சேதுமாதவன் கிட்டவே சொல்லிட்றேன். அவன் வேற பொண்ணு பாத்துக்கிடட்டும். இவ்வளவு அவநம்பிக்கையோட தொடங்குற வாழ்க்கை சரியா அமையாது.”

தண்டபாணிக்குக் கிலி பிடித்துவிட்ட தென்பதை ராஜாதிராஜன் புரிந்துகொண்டான்.

“இத பாரு, தண்டபாணி! இந்தப் பொய் சொல்ற வேலையெல்லாம் ஏங்கிட்ட வேணாம். கல்யாணத் தரகு வேலைக்குப் பின்னாடி இருக்கிறது பொண்ணு கடத்துற வேலைதானே?”

“இல்லேப்பா. அதெல்லாம் இல்லே. அந்த அளவுக்கு எனக்குத் தகிரியம் கிடையாது. நீ சொல்றாப்ல எதுக்கு வம்பு? நான் இதிலேர்ந்து விலகிக்கப் போறேன். எனக்கு இந்த சேதுமாதவனைப் பத்தி நேரடியாத் தெரியாது. எவனோ தெரிஞ்சவன் சொன்னான்னு இதிலே நான் தலையிட்டுட்டு அப்பால மாட்டிக்கிட்டா வம்பு!” என்றான்.

சற்றுப் பொறுத்து, “அப்புறம் ராஜா! . . . நீ பொண்ணு கேட்டு ஒரு வாரம் ஆயிடிச்சே? வேணாமா? வேற எங்கேயாச்சும் போயிட்டிருக்கியா?” என்று கேட்டான்.

ராஜாதிராஜனுக்கு உடனே சூர்யாவின் நினைப்புத்தான் வந்தது. இருந்தாலும் அவள் கிடைக்கும் வரை விரதம் கடைப்பிடிக்க வேண்டுமா என்ன எனும் எண்ணம் எழ, “ஏற்பாடு பண்ணிட்டுச் சொல்லுப்பா,” என்றான்.

“என்னமோ அந்தக் குட்டி மேல . . . சாரி, சாரி! . . . அந்தப் பொண்ணு மேல லவ்வுன்னே? இதுதான் லவ்வா?”

ராஜாதிராஜனுக்கு முகம் சிவந்து போனது: “நீ கூடத்தான் சந்திரமதியை லவ் பண்ணிக் கல்யாணம் கட்டினே. அங்கே இங்கேன்னு போகாமயா இருக்கே? . . . சூர்யாவை அடையிறதுக்கு இன்னும் ஒரு அஞ்சாறு மாசமாவது ஆகுமேப்பா? அது வரையில நான் பட்டினி கிடக்க முடியுமா என்ன?”

“சரி, சரி. அப்ப இன்னைக்கு ராவுக்கே ஏற்பாடு பண்ணட்டுமா?”

“பண்ணுப்பா. ரேட் என்ன?”

“இந்தத் தடவை நான் குடுத்துட்றேம்ப்பா. சமயம் போதுன்னா எவ்வளவு ஒத்தாசை பண்றே?”

பில்லுக்குத் தண்டபாணியே பணம் கொடுத்தான். பிறகு இருவரும் வெளியே வந்தார்கள்.

“நான் ஏதாச்சும் கடுமையாப் பேசியிருந்தா மன்னிச்சுக்க, ராஜா. அந்தப் பொண்ணை ஒரு தடவைக்குக் கூட விட்டுக் குடுக்க மாட்டேன்னுட்டியேன்ற எரிச்சல்லே பேசிட்டேன். ஒண்ணும் மனசில வச்சுக்காதேப்பா!”

ராஜாஜாதிராஜனுக்குத் தன் மனம் இலேசாகி யிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. இருவரும் புன்னகைப் பரிமாற்றத்துடன் பிரிந்தார்கள்.

.. .. .. அன்று மாலை சரியாக ஐந்து-ஐந்துக்கு அவனது காரில் சூர்யா ஏறினாள். அவளது முகம் சிரிப்பற்று இறுகி யிருந்ததைக் கவனித்துத் தனக்குள் சிரித்தபடியே ராஜாதிராஜன் காரைக் கிளப்பினான். சற்றுப் பொறுத்து அண்ணா சாலையின் குறுக்குத் தெரு ஒன்றினுள் காரைச் செலுத்திய வாறே, “நான் கொண்டு வந்திருக்கிற ஆதாரத்தை இப்பவே பாக்குறியா? ரொம்பவே ஆவலா யிருப்பே இல்லே?” என்று வினவிய அவன் அவளது பதிலூக்குக் காத்திராமல் அந்தப் புகைப் படத்தை எடுத்துப் பின்புறமாக அவளிடம் நீட்டினான்.

அதை அவள் பறிக்காத குறையாக அவனிடமிருந்து வாங்கிப் பார்த்துவிட்டு, விழிகள் விரிய, “அட! ஆச்சரியமாயிருக்கே! ஒரே அச்சுல வார்த்த மாதிரி ரெண்டு பேரா! உங்களுக்குப் பக்கத்திலே வலது பக்கம் வகிடு எடுத்துக்கிட்டுத் திருட்டு முழி மாதிரி முழிச்சுக்கிட்டு நிக்கிறவரு யாரு? அப்படியே உங்க சாயல்லே இருக்காரே!” என்று கூவாத குறையாகக் கேட்டாள். அவளது குரலில் ஒரு நிம்மதி ஒலித்ததை அவன் கண்டுகொண்டான்.

“நாங்க ரெண்டு பேரும் ரெட்டைப் பிள்ளைங்க. கல்யாணம் ஆனவன் அவன்தான். உன் தங்கச்சியோட சினேகிதி சொன்ன ஆளு இவன் தான்!” – சூர்யாவை ஏமாற்றிவிட்ட உற்சாகத்தில் அவன் முகத்தில் ஒரு புத்தொளி வந்து உட்கார்ந்துகொண்டது.

“ஐம் சாரிங்க! இது மாதிரி நீங்க ரெட்டைப் பிள்ளைங்கள்ளே ஒருத்தருன்றதைச் சொல்லியிருந்தா, இப்படி ஒரு சந்தேகமே வந்திருக்காது. என்னை மன்னிச்சிறுங்க. வெரி வெரி சாரிங்க. எனக்கு மன்னிப்பே கிடையாது! “

“எனக்கு இப்படி ஒரு அண்ணன் – அவன் தான் முதல்லே பொறந்தான், அதனால அண்ணன் – இருக்கிறதை நாம ரெண்டு மூணு தரம் சந்திக்க வாய்ச்சிருந்தா நிச்சயம் சொல்லி யிருந்திருப்பேன். நாம பீசல கார்ல உக்காந்துக் கிட்டே பேசினது ஒரே ஒரு வாட்டிதானே? அதுக்குள்ளே ஊருக்கு வேற போயிட்டேன். எனக்கு ஒண்ணும் உன் மேல கோவம் இல்லே. ஆனாலும் வருத்தமாயிருக்கு.”

“வெரி வெரி வெரி சாரிங்க.பெரிய மனசு பண்ணி மன்னிச்சிறுங்க. உங்க கால்லே வேணும்னாலும் விழறேன். “

அவன் திரும்பிக் கண் சிமிட்டி “அப்ப, ஒரு தனியான இடத்துக்குப் போலாமா?” என்றான்.

அவள் முகம் சிவந்து பேசாதிருக்க, “நிஜமாத்தான். அப்படி விழற உன்னைத் தொட்டுத் தூக்கி . . . மேல சொன்னா உனக்குக் கோவம் வரும் . . . சமாதானப்படுத்த வேணாமா? நாலு பேருக்கு முன்னல எப்படி அதைச் செய்யிறது – நீயும் சரி, நானும் சரி? அதான் சொல்றேன்! “

“சீ! போங்க!” – தன் அக்கா ராஜலட்சுமி தனக்குப் பிடித்த அரிசனப் பையனுடன் ஓடிப் போனது பற்றித் தானும்தான் அவனுக்கு இன்னமும் சொல்லவில்லை என்பது அந்தக் கணத்தில் நினைவுக்கு வந்து அவளைக் குற்ற உணர்வில் அமிழ்த்தியது.

சற்றுப் பொறுத்து, “நீங்க சொல்ற மாதிரி நாம நிறைய சந்திச்சுப் பேசாததோட தப்புங்க இதெல்லாம். . . எனக்கு ஒரு அக்கா இருக்கு. அது ஒரு அரிசனப் பையனோட ஓடிப் போயிறுச்சு,” என்றாள்.

“அதை இப்ப எதுக்கு மொட்டைத் தலைகும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்ட மாதிரி திடீர்னு சொல்றே?”

“காரணமாத்தாங்க சொல்றேன். நானும் எங்க குடும்பம் பத்தி இன்னும் எவ்வளவோ சொல்ல வேண்டியது இருக்கு. அதிலே இது முக்கியமான ஒண்ணு. ஒண்ணு ஒண்ணாத்தானேங்க பேச்சுவாக்கிலே சொல்லத் தோணுது? அது மாதிரிதான் நீங்களும் உங்க அண்ணனைப் பத்திச் சொல்ல விட்டுட்டீங்க. . .” என்ற அவள் திடீரென்று விளைந்த ஞாபகச் சிலிர்ப்பில், “ஆனா, நீங்க உங்கப்பாவுக்கு ஒரே மகன்னு சொன்னீங்களேங்க? அதெப்படி?” என்று கேட்டாள்.

கணம் போல் முகம் வெளிறிப் போன அவன் உடனேயே சமாளித்துக் கொண்டான். பெரிதாய்ச் சிரித்தான். “ அவன் எங்களோடதான் இருக்கான். ஆனா அவனை தத்துக் குடுத்துட்டாரு எங்கப்பா. தன்னோட ஆப்த நண்பர் ஒருத்தருக்கு. அந்த நண்பர் அமெரிக்காவிலே பெரிய பிஸ்னெஸ்மேன். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமா பறந்துக்கிட்டே இருப்பான் அவன். எங்கப்பாவுக்கு வாரிசு நான் ஒருத்தன் தானே? அந்த அர்த்தத்திலே தான் ஒரே மகன்னு சொன்னேன். சட்டப் படி அது சரிதானே?”

“மறுபடியும் சாரிங்க!” என்ற சூர்யா கண் கலங்கினாள்.

“சீச்சீ எதுக்கு இப்ப கண் கலங்குறே?” என்ற ராஜாதிராஜன் தன் இடக் கையைப் பின்னுக்கு நீட்டி அவள் கண்களைத் துடைத்தான். அந்தச் சாக்கில் அவன் அவளுடைய கன்னத்தையும் வருட, அது தேவையற்ற செயல் என்று சூர்யாவுக்குத் தோன்றியது. ஏனோ அவன் கையைப் பிடித்து அப்பால் தள்ள வேண்டும் போல் அவளுக்குத் தோன்றியது. ‘ஏன் இப்படித் தோன்றுகிறது?’ என்று தன்னையே கடிந்துகொண்டாள்.

“இந்த ·போட்டோவை நானே வச்சுக்குறேன்.”

“வச்சுக்க. உன் தங்கச்சி கிட்டவும் காட்டு. . . அப்புறம் இன்னொண்ணு. உனக்கு எங்கப்பா நேர்லே அவரைச் சந்திக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லியிருக்காரில்ல? அப்ப நீ எந்தக் காரணத்தைக் கொண்டும் என்னோட இந்த அண்ணனைப் பத்திப் பேசக்கூடாது. பேசினா அப்செட் ஆயிடுவாரு. இன்னொரு விஷயம் சொல்லட்டுமா? இப்ப அண்ணனுக்கு மனநிலை சரியில்லே. திருட்டு முழி முழிக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னியே, அதனாலதான். இப்ப ஒரு மனநல மருத்துவ விடுதியிலே இருக்கான். கொஞ்ச நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துடுவான்.”

“ஏங்க? எதுனால இப்படி ஆச்சு அவருக்கு?”

“தெரியல்லே. டாக்டர்ஸால கண்டு பிடிக்கவும் முடியல்லே. சீரியஸ்ஸா ஒண்ணும் இல்லே. ஆனாலும் திடீர் திடீர்னு மவுனமா உக்காந்துடுவான். வேற எதுவும் ஏடாகூடமாப் பண்ண மாட்டான். நார்மலாத்தான் இருப்பான். இப்பதான் கொஞ்ச நாளா அப்படி. ஒரு சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட காட்டினோம். ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டிருக்கான். எங்க பரம்பரையிலே யாருக்கும் இப்படி வந்ததே இல்லையாம் – அம்மா வழியிலேயும் சரி, அப்பா வழியிலேயும் சரி. ஆனா கொஞ்ச நாள்லே பூரண குணம் அடைஞ்சுடுவான்னு டாக்டர் நிச்சயமாச் சொல்றாரு. பார்க்கலாம், ” என்ற ராஜாதிராஜன் சன்னமாய்ப் பெருமூச்செறிந்தான்.

. . . கடற்கரையில் காருக்குள்ளிருந்தபடியே காதலர்க்கே உரிய அர்த்தமற்ற பேசுசுகளில் ஈடுபட்ட பிறகு இருவரும் புறப்பட்டார்கள். அன்று காரை நிறுத்திய அதே தெரு முனையில் இன்றும் நிறுத்தி அவள் இறங்கியதும் அவன் கிளம்பிப் போனான்.

. . . ஒரு பொதுத் தொலைபேசிக் கூண்டுக்கு அருகே காரை நிறுத்திவிட்டு, ராஜாதிராஜன் தண்டபாணியோடு தொடர்புகொண்டான்.

“நான் தான் ராஜா பேசறேம்ப்பா. . . . எந்த இடத்துலே ஏற்பாடு பண்ணியிருக்கே? வழக்கமான தண்டையார்ப்பேட்டை பங்களா தானே? . . . ஒம்பதாம் நம்பார் ரூமா? சரிப்பா. ஒம்பது மணிக்குப் போலாமில்லே?” என்று கேட்டு நிச்சயப் படுத்திக்கொண்ட ராஜாதிராஜன் பின் வீடு நோக்கிக் காரைத் திருப்பினான்.

மறு முனையில் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்துவிட்டு, நாகதேவனைப் பார்த்து நமட்டுத் தனமாய்ச் சிரித்த தண்டபாணி, “நீ சொன்ன யோசனை இன்னைக்கி நிறைவேறப் போகுது. பய வசமாச் சிக்கிக்கப் போறான்! இனிமே அவனை மடக்குறது சுலபம்! சின்ன வீடு செட்-அப் பண்ணின பெறகும் கூட அடிக்கடி அந்த சூர்யாப் பொண்ணை அவன் எனக்கு விட்டுக் குடுத்தே ஆகணும்! இல்லியா?” என்று அட்டகாசமாய்ச் சிரித்தான்.

. . . சுகன்யாவைத் தனியாய்ப் பார்க்க முடிந்த கணத்தில் சூர்யா நடந்ததை யெல்லாம் அவளிடம் சொல்லிவிட்டு அந்தப் புகைப்படத்தையும் அவளிடம் காட்டினாள். அதைப் பார்த்ததும் சுகன்யாவின் கண்கள் விரிந்தன.

“அக்கா ! இந்த ஆள். . . சாரிக்கா. . . மிஸ்டர் ராஜாதிராஜன் இன்னைக்கு வெளிர் நீலத்துல முழுக்கைச் சட்டையும், கறுப்புப் பேன்ட்டும் போட்டிருந்தாரில்லே? பழுப்பு நிறத்துலே ப்ரீ·ப் கேஸ் வச்சிருந்தாரில்லே?”

“ஆமாண்டி. நீ எங்க பாத்தே அவரை? எப்படி இருக்காரு? உனக்குப் பிடிச்சிருக்காடி?”

“உனக்குன்னாக்கா பிடிக்கணும்? எனக்கு எதுக்குப் பிடிக்கணும்? . . . இன்னிக்கு எங்க வகுப்பு மாணவிகளை மவுண்ட் ரோட்லே இருக்கிற பெரிய ரெடிமேட் ஆடைங்க தயாரிக்கிற ஷாப்புக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அப்ப இந்தாளும், அன்னைக்கு மருந்துக் கடை வாசல்லே நம்ம ரெண்டு பேரையும் முறைச்சுப் பாத்துக்கிட்டே போனானே ஒரு தொங்கு மீசைப் பொறுக்கி, அவனும் சிரிச்சுப் பேசிக்கிட்டே ஓட்டல் ரம்யாவிலேர்ந்து வெளியே வந்தாங்க. தினத் தந்தியிலே பாத்த ·போட்டோ தெளிவாயில்லாததால அப்ப எனக்குப் புரியல்லே அவருதான் உன்னோட ஆளுன்னு. ஏங்க்கா உன்னோட ஆளு அந்தப் பொறுக்கியோடல்லாம் பழகுறாரு? நீ சொல்லுக்கா அவர்கிட்ட.””

‘அன்னிக்கு வழியிலே லி·ப்ட்டுக்காகக் காரை மடக்கின அந்த ஆளைத் தனக்குத் தெரியவே தெரியாதுன்னாரே?’ – சூர்யா பலத்த யோசனையில் மூழ்கிப் போனாள். கமலாவின் கொலைக்குக் காரணமானவன் என்று அவன் சந்தேகிக்கப்படுவதும் அவள் நினைவில் நெரடியது.

jothigirija@vsnl.net


தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா