ஜோதிர்லதா கிரிஜா
இன்ஸ்பெக்டர் சத்தியானந்தம் மற்றவர்களினின்று மிகப் பெரிய அளவில் மாறுபட்டவர். செய்யும் தொழிலைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் பிறிதொன்று அவருக்கு இல்லை. கடமையை ஒழுங்காய்ச் செய்ய வேண்டுமென்னும் ஆசையுள்ளவராதலால், அவ்வாறு இல்லாத சக ஊழியர்களின் ஒத்துழைப்பைப் பெற முடியாமல் போய் அடிக்கடி ஊர் விட்டு ஊர் மாற்றப்பட்டுக்கொண்டே இருப்பவர். சுருக்கமாய்ச் சொல்லவேண்டுமானால், நேர்மை மிகுந்த காவல் துறை ஊழியர் என்னும் காரணத்தால் சகபாடிகள் பலரின் எதிர்ப்புக்கு ஆளாகி வந்துள்ளவர்.
திருமணம் ஆகாத ஒரு பெண் அநியாயமாய்த் தூக்குப் போட்டுக்கொண்டு செத்ததை அவரால் சகிக்கமுடியவில்லை. அந்த வட்டாரத்துக்கு மிக அண்மையில்தான் மாற்றப்பட்டு வந்தவராதலால், தண்டபாணியின் செல்வாக்கைப் பற்றி அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. சக ஊழியர்கள் பற்றிய சரியான கணிப்பும் அவருக்கு இல்லை.
எனினும் தண்டபாணி எனும் ஒருவன் விபசாரவிடுதி நடத்திவருவது பற்றிய செய்தி அரசல் புரசலாக அவர் செவிகளை எட்டியிருந்தது. கமலாவின் சாவுக்குக் காரணமானவன் என்று தான் சந்தேகிக்கும் தண்டபாணியும் இவனும் ஒரே ஆளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவருக்கு உள்ளுணர்வாய்த் தோன்றியது. தண்டபாணியின் விபசாரவிடுதி பற்றிய தகவல் தற்செயலாக ஓர் உரையாடலைக் கேட்க நேர்ந்ததால் அவருக்குத் தெரியவந்த ஒன்றே தவிர சக ஊழியர்களில் எவரும் சொல்லி அவர் தெரிந்துகொண்ட ஒன்றன்று. எனவே அவ்வட்டாரக் காவல்துறை ஊழியர்களின் ஒத்துழைப்பு அவனுக்கு இருந்தாக வேண்டும் என்று அவர் ஊகித்தார். அதனால், ஒற்றை ஆளாக, யாருடைய உதவியையும் நாடாது, கமலாவின் சாவின் மர்ம முடிச்சை அவிழ்க்க அவர் புறப்பட்டார்.
ஞாயிற்றுக் கிழமை காலையில் வேட்டி, சட்டை, கறுப்புக் கண்ணாடியுடன் குஞ்சம் வைத்த குல்லாயும் சாடை மாற்றத்துக்காக அணிந்துகொண்டு இரவல் வாங்கிய பக்கத்து வீட்டு மோட்டார் பைக்கில் அவர் கமலாவின் வீட்டுக்குப் புறப்பட்டார்.
கதவு திறந்த கமலாவின் தம்பி, “நீங்க யாரு?” என்றதும் தமது மாறு வேடத்தின் மீது அவருக்கு மகிழ்ச்சி கலந்த நம்பிக்கை ஏற்பட்டது.
“என்னை அடையாளம் தெரியல்லே? நாந்தாம்ப்பா இன்ஸ்பெக்டர்.. . சரி, இப்ப வீட்டிலே வாற யாராரு இருக்காங்க?நான் உன்னோட கொஞ்சம் தனியாப் பேசணுமே?” ” என்றவாறு அவர் உள்ளே போனார்.
“எங்க ஒண்ணுவிட்ட அத்தை இருக்காங்க. ஆனா அவங்களுக்குக் காது கேக்காது. கண் பார்வையும் அவ்வளவாப் பத்தாது, சார். . . உக்காருங்க, சார்.. . .”
“இதோ பாருப்பா, விஜயகுமார்! உங்க அக்கா லெட்டர் ஏதாச்சும் எழுதி வெச்சிருந்து, அதை நீ எடுத்திருந்தியானா, அதை எங்கிட்ட குடுத்துடு. இல்லே, படிச்சுட்டுக் கிழிச்சுப் போட்டிருந்தியானா, அதுலே என்ன எழுதியிருந்திச்சுங்கிறதையாவது எங்கிட்ட மறைக்காம சொல்லிடுப்பா. ஏன்னா, படிச்ச பொண்ணாயிருக்கிறதால, இதுமாதிரி தற்கொலை பண்ணிக்கிட்டா கண்டிப்பா லெட்டர் எழுதிவைக்காம போகாது. இன்னொரு விஷயம்! இந்த வட்டாரத்துப் போலீஸ் ஆளுங்க குற்றவாளிகளுக்குத் துணை போறதாக் கேள்வி. அதனால ரகசியமான எந்தத் தகவலையும் என்னைத் தவிர வேற யார் கிட்டேயும் சொல்லாதே. என்ன? தெரிஞ்சுதா?”
“அக்கா லெட்டர் எதுவும் எழுதி வைக்கல்லே, சார்!”
“இத, பாருப்பா, விஜயகுமார்! அக்கா பேருக்குக் களங்கம் வருமோன்னு கவலைப்பட்டுக்கிட்டு எங்கிட்டேருந்து எதையும் மறைக்காதேப்பா!. . .எதுவானாலும் நான் எனக்குள்ள வெச்சுப்பேன். . .குற்றவாளியைத் தண்டிக்கணுமா வேண்டாமா? சொல்லு!”
“ லெட்டர் எதுவும் கிடையாது, சார்.”
சத்தியானந்தம் தாம் அவனை நம்பவில்லை என்பது போல் ஒரு பார்வை பார்த்தார். ‘ஒருவேளை இவனை யாராவது ப்ளேக்மெயில் பண்றாங்களோ?’ எனும் கேள்வியும் அவருள் எழுந்தது.
“சரிப்பா. நான் நாளைக்கோ, நாளைக்கு மத்தா நாளோ வர்றேன். அதுக்குள்ளே நீ இன்னொரு தடவை இன்னும் அதிக கவனத்தோட ஒரு இண்டு இடுக்கு விடாம தேடிப் பாரு. கிடைச்சா எங்கிட்டேருந்து மறைக்காதே, விஜயகுமார்! இன்னைக்கு உன் அக்கா. நாளைக்கு உங்கக்கா மாதிரி மத்தப் பொண்ணுங்க. நல்லா யோசிச்சு வை. . .” என்று கூறிவிட்டு, அவன் முதுகில் ஆதரவாய்த் தட்டியபின் அவர் விடை பெற்றார்.
. . . “காலங்கார்த்தால டி·பன் கூடச் சாப்பிடாம எங்கே போயிட்டீங்க?.” எனும் ஆத்திரமான சொற்களுடன் ரமா கதவைத்தட்டிய கணவனுக்கு முகமன் கூறி வரவேற்றுவிட்டு விடுவிடுவென்று உள்ளே போனாள். .
“கோவிச்சுக்காதே, ரம்மி! அந்தப் பொண்ணு – அதான் தற்கொலை செய்துக்கிட்டுதே, அந்தப் பொண்ணு – வடு வரைக்கும் போய் அவ தம்பியைப் பாத்துப் பேசிட்டு வர்றதுக்காகப் போனேன்,” என்றவாறு சத்தியானந்தம் அவளுக்குப் பின்னால் போனார். தமது மாறு வேடத்தைக் கலைத்த பின் வழக்கமான உடைகளுக்கு மாறி, ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார்.
“நெனச்சேன். அதான் தற்கொலைன்னு திட்ட வட்டமாத் தெரிஞ்சிடிச்சில்ல? அப்புறமென்ன? கேசைச் சட்டுப் புட்டுனு முடிக்க வேண்டியது3தானே? முடிஞ்சு போனதை யெல்லாம் ஏன் கெளர்றீங்க? அவ தற்கொலைக்குப் பின்னால குற்றவாளிங்க இருந்தாலும், அவங்களைக் கண்டு பிடிக்கிறதால யாருக்கு என்னங்க லாபம்? அந்தப் பொண்ணோட உசிரு திரும்பி வருமா?”
“ரம்மி! நீ படிச்சவ தானே? நீயே இப்படிப் பேசலாமா? குற்றவாளியைக் கண்டு பிடிச்சுத் தண்டிக்க வேண்டியது என்னோட கடமை! அதுக்குத்தானே எனக்குச் சம்பளம் தர்றாங்க?”
“பொல்லாத சம்பளம்! நான் உங்களை லஞ்சம் வாங்கச் சொல்லல்லே. சக ஊழ்யர்களையெல்லாம் பகைச்சுக்காதீங்கன்னுதான் சொல்றேன். மாயவரத்துல இப்படித்தான், உங்க மேலதிகாரிங்க மூடி வெச்ச கேசைத் தூசி தட்றேன் பேர்வழின்னு ட்ரன்ஸ்·பர் வாங்கினீங்க. பசங்க படிப்புக் கெட்டதுதான் மிச்சம். . .உங்களைக் கட்டிக்கிட்டதுலேர்ந்து நான் வயித்துலே நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கேன்! . . .”
“ சரி, சரி. பொலம்ப ஆரம்பிச்சுடாதே. . என்ன டி·பன் பண்ணியிருக்கே?”
“சேமியா உப்புமா.” – போய் எடுத்துவந்து கொடுத்தாள்.
“முந்திரிப்பருப்புப் போட்டிருக்கியில்ல?”
“கடுகு உளுத்தம்பருப்புத் தாளிச்சதே அதிகப்படி! நீங்க என்ன லஞ்சமா வாங்கிட்டு வந்து தர்றீங்க? முந்திரிப் பருப்புப் போடுறதுக்கு?”
“இத பாரு, ரம்மி. உன் திரு வாயால லஞ்சம் வாங்குங்கன்னு சொல்லிடு. நானும் வாங்கத் தொடங்கிர்றேன்.”
“நான் அப்படிப் பட்டவ இல்லைன்ற தகிரியம்! பேசறீங்க!. . .உங்க எஸ்.பிக்குகூடத் தெரியாம ம·ப்டியில் கெளம்பிப் போறீங்க! கண்டு பிடிச்சுக் கேட்டாருன்னா?”
“ அவரால கண்டுபிடிக்கவே முடியாது! நீ போய் அவரு கிட்டப் போட்டுக்குடுத்தாத்தான் உண்டு.”
“ போதும் உங்க ஹாஸ்யம்!. . . அது சரி. ஏதாச்சும் தெரிஞ்சிச்சா? எதுக்குத் தற்கொலை பண்ணிக்கிட்டாளாம் அந்தப் பொண்ணு?”
“வம்பு மட்டும் வேணும்!”
“சரி, சரி. வம்புதான். சொல்லுங்க.”
“நான் சொன்னேனே, அந்த தண்டபாணியும் இவளோட லவர் தண்டபாணியும் ஒரே ஆள்தான்னு என் உள் மனசு சொல்லுதுன்னு. . . அதை இனிமேதான் கண்டுபிடிக்கணும்.. . நேத்து அவங்க ஆ·பீசுக்குப் போனதுல இன்னொரு முக்கியமான தகவல் கிடைச்சுது.”
“என்னது?”
“சமீபத்துல கட்டின தன்னோட வீட்டை அந்தப் பொண்ணு விக்க முயற்சி பண்ணியிருக்கு. அப்படி என்ன கஷ்டம்னு புரியல்லே.”
“வேற என்ன? எவனோ அவளை ப்ளேக்மெயில் பண்ணப் பாத்திருக்கான்!”.
“அட! பரவாயில்லையே! சரியான போலீஸ்காரன் பொண்டாட்டிதான்!”
“சரி. விஷயத்துக்கு வாங்க.”
“அது கண்டிப்பா லெட்டர் எழுதி வெச்சுட்டுத்தான் செத்திருக்கும்னு எனக்குத் தோணுது. ஆனா தம்பிக்காரன் இல்லவே இல்லைன்னு சாதிக்கிறான். . . பொய் சொல்றான்னு தோணுது.. எதுக்கும் இன்னொரு வாட்டி நல்லாத் தேடிப் பாரு. ரெண்டொரு நாள்லே வர்றேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்.”
“எதுக்கு இப்படிக் குப்பையைக் கிளர்றீங்க? எதுக்குங்க இப்படி எல்லா ஊர்கள்ளேயும் ரவுடிங்களோட விரோதத்தைச் சம்பாதிச்சுக்குறீங்க?”
“ . . . ‘கண்ணே பாப்பா’ன்ற சினிமாவில் போலீஸ் உடுப்பில வர்ற மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி இருக்கீங்கன்னு ஒரு கடுதாசியில எழுதினியில்ல? அதனோட பலனை இப்ப அனுபவி!”
“உங்களுக்குச் சிரிப்பா யிருக்கு!” என்ற ரமா எழுந்து போய்க் காப்பி எடுத்துவந்து கொடுத்தாள்.
உப்புமாவைச் சாப்பிட்டு முடித்திருந்த சத்தியானந்தம் எழுந்து போய்க் கை கழுவிக்கொண்டு வந்த பின் காப்பிக் கோப்பையைக் கையில் எடுஹ்துக் கொண்டு வாய் வாயாக நிதானமாய்ப் பருகிய பின், “இத பாரு, ரம்மி! உரலுக்குள்ளாற தலையைக் குடுத்துட்டு, உலக்கைக்கு பயந்தா முடியுமா? எதுக்கு இப்ப காலங்கார்த்தால கண் கலங்குறே? உன்னைப் பொண்ணு பாக்க வந்தப்பவே நான் என்ன சொன்னேன்? நேரங்கெட்ட நேரத்துல வெளியே சுத்துவேன், நேரங்கழிச்சுத்தான் வீட்டுக்கு வருவேன், கடமைதான் எனக்கு முக்கியம், லஞ்சம் வாங்கிப் பணம் சேர்த்து வீடு, வாசல், சொத்து, சுகம்னு தேடிக்கிறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுன்னு சொன்னேனில்ல? மத்தா போலீஸ்காரங்களோட என்னை ஒப்பிட்டுப் பாத்துப் பெருமுச்சு விட்க்கூடாதுன்னு சொன்னேனில்ல? அப்ப தலையைத் தலையை ஆட்டினியே!” என்று அமைதியான குரலில் வினவிய சத்தியானந்தம் அவளை இழுத்துத் தம்மருகே உட்கார்த்தி வைத்துக்கொண்டு அவள் கண்களைத் துடைத்தார்.
அவள் ஒரு பெருமூச்சுடன் எழுந்து கொண்டாள்: ”சொன்னீங்கதான்! நான் மறுக்கல்லியே! என்னிக்காச்சும் மத்தவங்களோட உங்களை ஒப்பிட்டுப் பேசி யிருக்கேனா? லஞ்சம் வாங்குங்க எல்லாரையும் போலன்னு சொல்லியிருக்கேனா? நீங்க குடுக்கிறதை வெச்சுக் குடும்பத்தை நடத்திட்டிருக்கேனில்லே? மாசக் கடைசியிலே என்னைக்காச்சும் இல்லைப்பாட்டுப் பாடியிருக்கேனா? . . . நான் உங்களைக் கேட்டுக்கிறதெல்லாம் இது தான். உங்க மேலதிகாரிங்களோட கசப்பைச் சம்பாதிச்சு உங்களுக்கு நீங்களே கெடுதலைத் தேடிக்காதீங்க! அநாவசியத் தலையீடெல்லாம் பண்ணாதீங்க!”
“இரு, இரு. போகாதே. . . குற்றவாளியைக் கண்டு பிடிச்சுத் தண்டிக்கிறது அநாவசியத் தலையீடா? நீயா இப்படிப் பேசறே?”
“அதில்லீங்க. அந்தப் பொண்ணு தூக்குப் போட்டுக்கிட்டுச் செத்துப் போயிறுச்சு. வயித்துல கர்ப்பம் எதுவும் இல்லைங்குறதும் தெளிவாயிறுச்சு. அது முழுக்க முழுக்கத் தற்கொலைதான்கிறதும் தெரிஞ்சு போயிறுச்சு. அதோட சொந்தக்காரங்க யாரும் குற்றாவாளியைக் கண்டு பிடிங்க்னனு கேக்கல்லே. அந்தத் தம்பி கூட எதுவும் சொல்ல் மாட்டேங்குது. யாரைப் பத்தியும் புகாரும் இல்லே. அப்படி யிருக்குறப்ப, செத்த பாம்பை அடிக்கிற மாதிரி எதுக்குங்க இந்த வேண்டாத ஆராய்ச்சி யெல்லாம் பண்ணிக்கிட்டிருக்கீங்க? அந்தப் பொண்ணு உசிரு திரும்பி வரவா போகுது?”
“மறுபடியும் பறுபடியும் அதையே சொல்லிட்டிருக்குறியே, ரம்மி? உனக்கே நல்லாருக்கா? நாளைக்கு நம்ம பொண்ணுக்கே இப்படி ஒரு அநியாயம் நடக்குதுன்னு வச்சுக்க. அப்ப இப்படித்தான் பேசுவியா? குற்றவாளியைக் கண்டுபிடிச்சுத் தூக்குல போடணும்னு துடிக்க மாட்டே? . . . இப்பா நீயே சொன்னே – எவனாச்சும் ப்ளேக் மெயில் பாண்னியிருப்பான்னு. அவன் யாரு, என்ன, எதுக்கு ப்ளேக் பண்ணினான்னெல்லாம் கண்டு பிடிக்க வேண்டாமா? நாளைக்கு அவன் மத்தப் பொண்ணுங்களையும் இப்படிப் பண்ணலாமில்ல?”
ரமா காப்பிக் கோப்பையையும், சிற்றுண்டித் தட்டையும் எடுத்துக்கொண்டு ஒன்றும் சொல்லாமல் எழுந்து போனாள். சத்தியானந்தம் அவளது முதுகை வெறித்தாவாறு பெருமூச்செறிந்தார்.
அப்போது அழைப்பு மணி ஒலித்தது. எழுந்து சென்று கதவைத்திறந்த அவர் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த பெண்ணைப் பார்த்த்து வியப்படைந்தார்.
jothigirija@vsnl.net
தொடரும்
- ஜெனரல் பர்வேஸ் முஷர்ரஃபின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா
- பழமைவாதமும், புதுமைவாதமும் – இரு கண்காட்சிகள்
- அன்பர் தினம் துணையே
- விவசாய சங்கத்தலைவர் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் பேட்டி 2 – தொடர்ச்சி
- மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றிப் பாரிஸ் கருத்தரங்கு-2 (IPCC)
- In response to Jadayus atricle
- இத்தருணத்தின் கடைசி நொடி
- பன்னாட்டுக் கருத்தரங்கம் – அண்ணாமலை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம்
- மனத்தில் எழுந்த அலைகள் (கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது – கட்டுரைத் தொகுதி அறிமுகம்)
- கடித இலக்கியம் -45
- அலாஸ்கா கடற் பிரயாணம் – மூன்றாம் பாகம்
- இலை போட்டாச்சு! – 15 கறி (பொரியல்) வகைகள்
- நெஞ்சோடு புலம்பல்!
- போரில்லா உலகுக்காய்ப் போரிடும் கவிஞர்கள் – தொடர்ச்சி
- மடியில் நெருப்பு – 25
- தாஜ் கவிதைகள்.
- தப்பூ சங்கரின் தப்பு தாளங்கள்.
- இது கூட இயற்கை தானா?….
- கோவில் சன்னதி
- காதல் நாற்பது (9) – என்ன கைம்மாறு செய்வேன் ?
- பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
- பச்சைத் தமிழரைப் பற்றிச் சில பசுமையான நினைவுகள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:5&6)
- நீர்வலை (11)