மடியில் நெருப்பு – 20

This entry is part [part not set] of 26 in the series 20070111_Issue

ஜோதிர்லதா கிரிஜா


20

தண்டபாணியின் அப்பா மின் துறையில் பொறியாளராய்ப் பணி புரிந்தவர். அவனுடைய சித்தப்பா தொலைபேசி இலாகாவில் பணி புரிந்தவர். இருவரிடமிருந்தும் இரண்டு துறைகள் தொடர்புள்ள வேலைகளைத் தண்டபாணி கற்றிருந்தான்.

“நாகா! டேப் ரெகார்டரை எடுத்து அதிலே கேசட்டைப் பொருத்து. “

நாகதேவன் அப்படியே செய்தான். அதைத் தொலைபேசியருகே வைத்துக்கொண்ட தண்டபாணி ஒலிப்பதிவுக் கருவியின் மின்கம்பியோடு அதை இணைத்தான்.

“ஏதோ அவசரம்னு நெனைக்கிறேன். அதான் ·போன் பண்ணியிருக்கான். அவனே கூப்பிடட்டும்.”

இரண்டு நிமிடங்களில் தொலைபேசி மறுபடியும் சிணுங்கியது.

“ஹல்லோ!”

“ரெண்டே நிமிஷத்துல பேசறேன்னே?”

“ஹல். . .லோ! யாருங்க? ஒண்ணும் சரியாக் கேக்கல்லீங்க. எங்க டெலெ·போன்லே ஏதோ கோளாறு போல! . . யாருங்க? கொஞ்சம் சத்தமாப் பேசுங்க.”

“ராஜா பேசறேம்ப்பா!”

“ஓ! ராஜாதிராஜனா! இப்ப கேக்குது. சொல்லு, சொல்லு. நான் ரிசீவரை எடுக்கப் போனேன். மணி அடிச்சிச்சுப்பா. சொல்லு. என்ன விஷயம்? எப்ப உன் ஆ·பீசுக்கு வரட்டும்? வழக்கம் போல உங்கப்பா இல்லாத நேரமாப் பாத்து நீ ·ப்பொன் பண்ணுவே. அதுக்கு அப்புறமா நான் வரணும். இல்லியா?”

“என்னப்பா, கிண்டலா! . . . சரி. விஷயத்துக்கு வர்றேன். . . . நான் அவசரமா வெளியூர் போக வேண்டி யிருக்குது.”

“அதைப் பத்தி என்னப்பா? அப்புறம் உன்னோட தண்டையார்ப்பேட்டை பங்களாவிலே நாம் ரெண்டு பேரும் சேர்ந்து விபசார விடுதி நடத்துறோமில்ல? அதைப் பத்தின தகவல் போலீசுக்குப் போயிடிச்சோன்னு பயமாயிருக்குடா. உன்னால வேற வீடு எதாச்சும் பிடிச்சுக் குடுக்க முடியுமா? . . . இப்ப புதுசா ஒரு இன்ஸ்பெக்டர் வந்திருக்காராம். ரொம்பக் கண்டிப்பானவராம். . .”

‘நாம ரெண்டு பேரும் சேர்ந்து விபசார விடுதி நடத்துறோமில்ல’ எனும் வாக்கியம் சற்றும் தேவையற்ற அதிகப்படியான வாக்கியமாக மறுமுனையில் ஒலிவாங்கியைப் பற்றியிருந்த ராஜாதிராஜனுக்குத் தோன்றியது. இதற்கு முன்னால் அவனுக்கும் தனக்குமிடையே நடந்த உரையாடல்களில் அப்படி ஒரு சொற்பிரயோகம் நிகழ்ந்ததே இல்லை என்பது அவன் புருவங்களை உயர்த்தியது. அவன் உடனே உஷாரானான்.

“என்னப்பா இது, புதுசா என்னென்னமோ சொல்றே? தண்டையார்ப்பேட்டை பங்களாவில நீ என்ன தொழில் செய்யிறேங்கிறதைப் பத்தி எனக்கென்னப்பா? நீ செய்துட்டிருக்குற விபசாரத் தொழில்ல என்னை எதுக்குப்பா அநாவசியமா இழுக்குறே? எங்கப்பா செல்வாக்கு உள்ளவர்ன்றதால என்னையும் இதுலே மாட்டி விட்டுட்டா, நாளைக்குப் போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சாங்கன்னா, அவரோட இன்·ப்ளூயன்ஸ்லே நீயும் உன்னோட மத்தக் கூட்டாளிங்களும் தப்பிடலாம்னா?”

ராஜாதிராஜனின் மூளை வேலை செய்த அசுரவேகமும் , அவனது மிகச் சரியான ஊகமும் தண்டபாணியை அயர்த்தி அவன் வாயைக் கணம் போல் கட்டித்தான் போட்டன.

“நீதாம்ப்பா என்னென்னமோ பேசறே! வச்து. . .”

“வந்துமில்லே, போயுமிலே. இப்ப நான் அவசரமா வெளியூர் போயிட்டிருக்கேன். என்னோட மிஸ்ஸஸ் சீரியஸா யிருக்காங்களாம். குழந்தை செத்துப் பொறந்திச்சாம். அதனால நான் உடனே போயாகணும். போயிட்டு வந்ததுக்கு அப்பால பேசலாம். ஆனா ஒண்ணு. நீ என்ன பேசினாலும் நீ செய்துட்டிருக்குற நிழலான தொழிலகள்லே அநாவசியமா என்னைச் சம்பந்தப்படுத்தாதே. அப்புறம் நான் பொல்லாதவனாயிடுவேன். சரி. அப்புறம் பார்ப்போம்.”

“இன்னொரு புதுப் போண்ணூ. . .” என்று தண்டபாணி தொடங்கியதைக் காதிலேயே வாங்காமல் ராஜாதிராஜன் தொடர்பைத் துண்டித்தான்.

எரிச்சலுடன் ஒலிவாங்கியை ஏறிட்ட தண்டபாணியும் அதை ஆத்திரத்துடன் கிடத்தினான்.

“என்னண்ணே?”

“நான் மதுரை எத்தன்னா, அவன் தஞ்சாவூர் எத்தனாயிருக்கான்!” என்ற தண்டபாணி தனக்கும் அவனுக்குமிடையே நடந்த உரையாடலை நாகதேவனிடம் தெரிவித்தான்.

“அப்ப, நாம டெலெ·போன்ல டேப் ரெகார்டரைப் பொருத்தினதைக் கூட ஊகிச்சிருப்பான்றே?”

“அப்படி இருக்காது. ஆனா, பாக்கத்துல எவனையோ சாட்சியா வச்சுக்கிட்டு ப் பேசறான் போலிருக்குன்ற அளவுக்காவது ஊகிச்சிருப்பான். கெட்ட்க்காரன்தான்!”

“உன்னோட சினேகிதனுக்கு உன்னோட அறிவிலே பாதியாச்சும் இருக்குமில்லேண்ணே?”

.. .. ..”கவலைப்படாதே, ராஜா. கல்பனா பிழைச்சுக்குவா. அவங்கப்ப ஒரு பயத்துலேயும், முன் ஜாக்கிரதையிலேயும் தந்தி யடிச்சிருக்கருன்னுதான் எனக்குத் தோணுது. போனதும் முதல் வேலையா எனக்கு ·போன் பண்ணு.”

“சரிப்பா.”

“நானும் வரட்டுமா, ராஜா?”

“நீங்க எதுக்குப்பா, அநாவசியமா? போனதும் ·ப்பொன் பண்றேன். அப்ப வந்தாப் போதும்.”

“சரிப்பா.”

எதிர்பாராது வந்திருந்த தந்தி ராஜாதிராஜனைக் கலவரப்படுத்தியது. அவன் ஒன்றும் ‘ஏகபத்தினி விரதன்’ அல்லந்தான். ஆனால் தன் வயிற்றில் குழந்தையோடு சென்றவள் அதைப் பறிகொடுத்துவிட்டு மோசமான நிலையிலும் இருக்கிறாள் என்பது அவனைக் கலக்கியது. அதே நேரத்தில், நேரக்கூடாதது நேர்ந்தால் தன் காட்டில் மழை என்கிற நினைப்பும் வந்தது.

சென்னையைவிட்டுக் கிளம்புவதற்கு முன்னால், சூர்யாவை எப்படியாவது தான் ஒரு பத்து நாள்களுக்கு வெளியூர் செல்லுவதாய்த் தெரிவித்துவிட அவன் விரும்பினான். ஜகந்நாதன் தாமும் தன்னுடன் அலுவலகத்துக்கு வராதிருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டான்.

பெட்டியில் துணிகளை அடுக்கத் தொடங்கிய அவனெதிரில் வந்து நின்ற அவர், “ கவலைப்படாதே. கல்பனா சரியாயிடுவா,” என்றார் ஆறுதலாக.

“ராத்திரி எட்டு மணிக்குத்தானேப்பா ப்ளேன்? அதனால நான் இப்ப ஆ·பீசுக்குப் போறேன். நீங்க வீணா அலைய வேண்டாம். ரெஸ்ட்ல இருங்க. நான் நேரே அங்கேருந்தே ஏர்போர்ட்டுக்குப் போயிக்கிறேன். . .”

“மனசு சரியில்லாத நேரத்துல நீயும்தான் இன்னைக்குக் கம்பெனிக்கு எதுக்குப்பா போகணும்?”

“இல்லேப்பா. வேலையிலே ஈடுபட்டா டென்ஷன் கொஞ்சம் குறையும். அதுக்குத்தான்.”

“அதுவும் சரிதான். . .நான் தாத்தாவாகுற பாக்கியம் இபோதைக்கு இல்லைன்றதை லில்லிக்கு ·போன் பண்ணிச் சொல்லிட்றேன்.”

“சரிப்பா.”

சற்றுப் பொறுத்து அவன் புறப்பட்டான்.

வழியில் சூர்யாவின் அலுவலகத்துக்கு முன் காரை நிறுத்தி இறங்கி, வரவேற்பறையை அடைந்து, பணியாளரிடம், “மிஸ் சூர்யாவைப் பார்க்கணும்,” என்றான்.

“உக்காருங்க,” என்ற வரவேற்பாளர் சூர்யாவின் பிரிவுடன் தொடர்பு கொண்டு அவளைப் பார்க்க ஒருவர் வந்திருக்கும் தகவலைக் கூறினார். மூன்றே நிமிடங்களில் சூர்யா வந்தாள். ராஜாதிராஜன் அவளைப் பார்த்ததும் எழுந்து நின்றான்.

“வாங்க. வெளியிலெ போய்ப் பேசலாம்,” என்று அவள் சொல்லவும், அவன் உள்ளம் துள்ளியது.

“ஆ·பீஸ் டைமாச்சே?”

“அரை மணி நேரத்துக்கு அனுமதி வாங்கியிருக்கேன். வாங்க.”

இருவரும் வெளியே சென்றார்கள்.

“நான் தான் வந்திருக்கேன்னு எப்படி ஊகிச்சே?”

“எப்படின்னு சொல்லத் தெரியல்லே. ஆனா நீங்களாத்தான் இருக்கணும்னு மனசுக்குத் தோணிச்சு. அதான் உடனே ஹெட் க்ளார்க் கிட்ட பெர்மிஷனுக்குச் சொல்லிட்டு வந்துட்டேன்,”

“கார்லேயே ஏதானும் ஓட்டலுக்குப் போகலாம்னா, இப்ப நேரம் சரியில்லே. அப்பா இன்னைக்கு அசதியா யிருக்குன்னு ஆ·பீசுக்கு வரல்லே. அதனால, அப்பா ஆ·பீசுக்கு ·போன் பண்ணி. அப்ப நான் இருக்கல்லைன்னா பிரச்னையாயிடும். நான் அவசர வேலையா இன்னைக்கு பாம்பே போறேன். வர்றதுக்கு ஒரு வாரம் போல ஆகும். அதான் சொல்லிடலாம்னு வந்தேன்.”

“அப்ப, கார்லேயே உக்காந்து பேசலாமா?”

அவன் முன் கதவைத் திறந்தான். ஆனால் அதைப் பார்க்காதவள் போன்று அவள் பின் கதவைத் திறந்து அமர்ந்தாள்.

“ஹ். . .ம்! முன் சீட்டுக்கு வரமாட்டேயில்லே!”

“இப்போதைக்கு இல்லே. சரி. சொல்லுங்க. . . ஒருவாரம் வெளியூர்ல இருக்கிற அளவுக்கு என்ன வேலை?”

“ஆ·பீஸ் வேலைதான். . . . முடிஞ்சா கட் பண்ணிட்டு முன்னாலேயே வந்தாலும் வந்துடுவேன். என் தங்கத்தைப் பார்க்காம ஒரு வாரம் தள்ளணுமேன்னு நெனைச்சா வாழ்க்கையே வெறுத்துடும் போல இருக்கு. .. .. .. ஆமா? அதென்ன, அன்னைக்கு நீ பாட்டுக்கு ரெண்டாவது வாட்டி ·போன் பண்ணிட்டே? எங்கப்பா எடுத்துட்டாரு. வேற ஏதாச்சும் கம்பெனியான்னு கேட்டுட்டு, ராங் நம்பர்னு சொல்லி வைக்க வேண்டியதுதானே? நான் எடுத்தா, ‘ராஜாதிராஜன் ஸ்பீக்கிங்”னு சொல்லுவேன்னு சொல்லியிருக்கேனில்ல? அப்படி இல்லாதப்ப ஏன் அப்படி ஒளறிக்கொட்டினே?”

“சாரிங்க. மறந்துட்டேன்.”

“சரி. பரவால்லே. விடு. இனிமேற்பட்டு கவனமாயிரு.”

“அதனால ஏதாச்சும் பிரச்னை வந்திச்சா? சாரிங்க.”

“அப்ப பார்த்து நான் சீட்ல இல்லே. அப்பா என்னை எதுக்கோ கீழே அனுப்பினாரு. போயிட்டு வர்றதுக்குள்ளே நீ ·போன் பண்ணிட்டே. பதில் சொன்னது யாரு, என்னன்னு கூடக் கேட்டுக்காம, உளறிக் கொட்டியிருக்கே!~ நான் வந்ததும் அப்பா நாசூக்கா விசாரிச்சாரு. நம்ம கம்பெனியிலே வேலை வேணும்னு கேட்டு நச்சரிக்குதுப்பா ஒரு பொண்ணு. என் ·ப்ரண்ட் ஒருத்தனோட கல்யாணத்துக்கு அந்தப் பொண்ணும் வந்திச்சு. அப்ப என்னோட இன்னொரு ·ப்ரண்ட் அதுக்கு என்னை அறிமுகப் படுத்தினதோட நிக்காம், ‘இந்தப் பொண்ணு எனக்குத் தெரிஞ்ச குடும்பத்துப் பொண்ணு. இப்ப பார்க்குற வேலையிலே குறைச்ச சம்பளம் தர்றாங்க. நீ உன் கம்பெனியிலே சேர்த்துக்கோயேன்’ அப்படின்னான். அதுலேர்ந்து தொணப்பிட்டிருக்கு’ ன்னு ஒரு அடி அடிச்சேன். . . .”

“இப்ப பொய் சொல்லிச் சமாளிச்சுட்டீங்க. நாளைக்கு எப்படியும் நான் நீங்க செலெக்ட் பண்ணி வெச்சிருக்குற பொண்ணுன்றதை அவருக்குச் சொல்லும்படி இருக்குமே? அப்ப? மாட்டிப்பீங்கல்ல?”

“மாட்டிப்பேன்தான்! ஆனா, அப்ப உன் மேல எனக்கு லவ் இல்லே, அப்பாலதான் வந்திச்சுன்னு சொல்லிச் சமாளிச்சுடுவேன்!”

“தந்திரக்கார ஆளுதான் நீங்க!”

ராஜாதிராஜன் சிரித்துவிட்டு, “இன்னொரு முக்கியமான விஷயம். எங்க கம்பெனிக்கு எங்க அப்பாதானே எம்.டி.? அதனால, அவர்கிட்டவே ஒரு அப்பாய்ன்ட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்றேன். அதனால நீ எங்க வீட்டுக்கே ஒரு ஞாயித்துக் கிழமையன்னைக்கு வந்து அவரைப் பார்த்து உன் வேலைவிஷயமாப்பேசறே!.. ..”

“அய்யோ!”

“என்ன அய்யோ!” -அவனது வாய் இவ்வாறு சொன்னாலும், அவன் அவளைத் தன் வீட்டுக்கு ஒருபோதும் அழைப்பதாக இல்லை. பேச்சு வாக்கில் தான் மணமானவன் என்பது வெளிப்பட்டுவிடக்கூடிய ஆபத்தைத் தவிர்க்க எண்ணித்தான்.

“உன்னைப் பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு! ஆனா, நான் உடனே போயாகணும்.. .. அப்பா ·போன் பண்ணினாருன்னா வம்பு. அப்ப, நான் புறப்பட்றேன்.. ..”

சூர்யா கதவைத் திறந்துகொண்டு இறங்கினாள். அவள் நடந்து சென்ற அழகைப் பருகியவாறே இருந்த ராஜாதிராஜன், அவள் ம்றைந்ததும் காரைக் கிளப்பினான்.

.. .. .. நாலரை மணிக்குத் தண்டபாணியின் தொலைபேசி அழைப்பு வந்தது.

“நான் அவசரமாக் கிளம்பிட்டிருக்கேன். திரும்பி வந்ததும் பேசலாமேப்பா?”

“திரும்பி வந்ததுமே பேசலாம். பேசத்தான் போறேன். ஆனா அதுக்கு முன்னாடி ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிட்றேன். அதை மட்டும் கேட்டுக்க. உன்னோட பெர்சனல் லை·ப் பத்தி அந்த சூர்யாப் பொண்ணூ கிட்ட சொன்னா உன்னோட கதி என்னாகும்னு கொஞ்சம் யோசிச்சுப்பாருப்பா. ஒரு தரத்துக்காவது அந்தப் பொண்ணை எனக்கு விட்டுக் குடுத்துடுப்பா. நீ அந்தப் பொண்ணை லவ் பண்றேன்னு சொல்றியேன்றதுக்காக இப்படிச் சொல்லிட்டிருக்குறேன். இட்ல்லாட்டி என் வழியிலே அந்தப் பொண்ணை என்னால கடத்த முடியும். ·ப்ரண்ட்ஸ் ஆச்சே நாமன்னு பார்க்குறேன். . . . அது மட்டுமில்லே. உனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆயி, மனைவி இருக்குற சங்கதி அந்தப் பொண்ணூக்குத் தெரியணுமா? சொல்லு!”

ராஜாதிராஜன் கலங்கிப் போனான்.

jothigirija@vsnl.net –
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா