மடியில் நெருப்பு – 17

This entry is part [part not set] of 33 in the series 20061221_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அந்தப் பெண்குரல் தொலைபேசியில் அவ்வாறு சொன்னதைக் கேட்டதும் எவ்வாறு எதிரொலிப்பது என்று ஜகந்நாதனுக்கு விளங்கவில்லை. தான் இன்னார் என்பதை வெளிப்படுத்தி அந்தப் பெண்ணைக் கலவரத்துக்கு உட்படுத்தவும் அவர் விரும்பவில்லை. அதே நேரத்தில் தம்மை ராஜாதிராஜனாய்த் தம்மைப் பொய்யாகக் காட்டிக்கொள்ளவும் அவர் விரும்பவில்லை. எனவே ஒன்றுமே சொல்லாதிருந்தார். அடுத்த கணமே தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஒலிவாங்கி கிடத்தப்பட்ட தினுசிலிருந்து தான் தப்பான ஆசாமியோடு பேசிவிட்டது அந்தப் பெண்ணுக்குப் புரிந்து விட்டிருக்க வேண்டும் என்று அவர் ஊகித்தார்.

‘யாரந்தப் பெண்? குரலில் ஒரு வெட்கமும் தயக்கமும் தெரிந்தனவே! வீட்டுக்குப் போவதால் அடுத்த நாள் சந்திக்கலாம் என்றால், இன்று சந்திப்பதாக இருந்தார்கள் என்றுதானே அர்த்தம்? அப்படியானால், அவர்களுக்குள் எந்த மாதிரியான உறவு?.. . . இப்ப்டி ஒரு ·போன் கால் வந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் வேடிக்கை பார்க்கலாமா, இல்லாவிட்டால் நேரடியாகவே கேட்டுவிடலாமா?’

அவர் யோசித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள், ராஜாதிராஜன் கதவைத் திறந்துகொண்டு அறைக்குள் வந்துவிட்டான்.

அவர் ஒரு திடீர் எண்ணத்தில், “நீ போனதும் உனக்கு ஒரு ·போன் கால் வந்தது, ராஜா!” என்று மட்டும் சொல்லி நிறுத்தினார். முகத்தில் எந்த மாறுதலையும் காட்டவில்லை.

0

“யாருன்னு கேட்டீங்களாப்பா?” – கூப்பிட்டது சூர்யாவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு உள்ளுணர்வாய்ப் புரிந்து விட்டது. முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாதிருப்பதற்குப் பெரிதும் முயல வேண்டியதாயிற்று.

ஜகந்நாதன், முகத்தைச் சாதாரணமாக வைத்துக்கொண்டு, “கூப்பிட்டது ஒரு பொண்ணுப்பா. யாருன்னு அது சொல்லல்லே. நானும் கேக்கல்லே. . . . ஆனா, ஹல்லோ சொன்னது நீன்னு நினைச்சுக்கிட்டு, ‘உங்கப்பா பக்கத்துல இருந்ததால அப்படி நருக்னு கத்திரிக்கிற மாதிரி பதில் சொன்னீங்களா? அப்புறம் நாளைக்குப் பார்க்கலாம்’ அப்படின்னிச்சு,” என்று தெரிவித்து விட்டு அதன் பிறகும் கூப்பிட்ட பெண் யாரென்று விசாரிக்காமலே இருந்தார். அவர் கண்கள் அவனையே பார்த்துக்கொண்டிருந்த போதிலும், அவற்றில் சந்தேகமோ அதை உணர்த்துகிற ஆழமோ இல்லாதபடி பார்த்துக்கொண்டார். மகனின் விழிகள் கணம் போல் தாழ்ந்து, பின் நிமிர்ந்ததைக் கவனிக்க அவர் தவறவில்லை. எனினும், ‘கூப்பிட்டது ஒரு பெண் என்பதற்காக நான் உன்னைத் தப்பாக நினைக்கவில்லை’ என்பது போல் அமைதியாக இருந்தார்.

ஆனால், ராஜாதிராஜனால் அமைதியாக இருக்க முடியாது போயிற்று. ஒரு நாகரிகப் பண்பு கருதி, அவள் யார், என்ன என்றெல்லாம் அவர் தன்னைக் கேட்காதிருந்தாலும், அவள் யார் என்பதைப் பற்றிச் சொல்லியாக வேண்டிய கட்டாயத்தில் தான் சிக்கிக்கொண்டதை எண்ணி அவன் கலவரமடைந்து போனான். ‘ஏதேனும் பொய்யைத்தான் சொல்ல வேண்டும். அந்தப் பெண்ணை நான் திருட்டுத்தனமாய் மணந்து கொண்டு சின்ன வீடு ஏற்படுத்திக்கொள்ள இருப்பது பற்றியா சொல்ல குடியும்!’ – நம்புகிற மாதிரி உடனடிப் பொய்களை உதிர்க்கும் அவனது இயல்பான கெட்டிக்காரத்தனத்தையும் மீறி இன்று காலதாமதம் விளைந்துவிட்டது!

வறண்டுவிட்ட உதடுகளை நாவால் நக்கி ஈரப்படுத்திக்கொண்ட ராஜாதிராஜன், “ கொஞ்ச நாளா ஒரு பொண்ணு நம்ம கம்பெனியில வேலை வேணும்னு சொல்லித் தொந்தரவு பண்ணிண்டிருக்காப்பா. என் ·ப்ரண்ட் ஒருத்தனோட கல்யாணத்துல பார்த்திச்சுப்பா. அப்ப ஒரு ஆளு, ‘இந்தப் பொண்ணுக்கு உன் கம்பெனியில ஒரு வேலை போட்டுக் குடேன்’ அப்படின்னு சொல்லிட்டான். அவ்வளவுதான்! அன்னையிலேர்ந்து வேலை வேலைன்னு என்னைப் போட்டு அறுஅறுன்னு அறுக்குது. ‘எங்க கம்பெனியில லேடீஸைச் சேர்க்கிறதில்லே’ ன்னு ஆன மட்டும் சொல்லிப் பார்த்துட்டேன். விட மாட்டேங்குதுப்பா. . . உங்களை நேர்ல சந்திக்கணுமாம். ஒரு அப்பாயிண்ட்மென்ட் வாங்கித் தரச் சொல்லித்து நேத்து. . .” என்றான்.

‘ஒரு பெண் தன்னோடு பேசுவதை இந்த அப்பா தப்பாக எடுத்துக்கொண்டிருப்பாரோ எனும் பயத்தில் இவன் இப்படிப் படபடவென்று பேசுகிறானா, இல்லாவிட்டால் தப்புக்காரியத்தின் விளைவான படபடப்பா?’ என்கிற கேள்வியில் கணம் போல் ஆழ்ந்தாலும், ஜகந்நாதன், இயல்பான பார்வையுடன், “அப்படியா? அது சரி. இப்ப அது வேற எங்கேயாச்சும் வேலை பார்த்துக்கிட்டிருக்குதா?” என்று அவனை விசாரித்தார்.

“ஆமாம்ப்பா. ஏதோ ஒரு கம்பெனியோட பேரு சொல்லிச்சு. நான் மனசில வாங்கிக்கல்லே. அவங்க குடுக்கிற சம்பளம் பத்தலையாம். அதான் நம்ம கம்பெனிக்கு வற்றேன்குது.”

மகன் முழு உண்மையைச் சொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது.

“ . . . ‘அப்பா பக்கத்துல இருந்ததாலதான் அப்படி கத்திரிக்கிற மாதிரி பதில் சொன்னீங்களா’ அப்படின்னிச்சே! நீ தண்டபாணி கிட்டதான் அப்படிக் கறாரப் பேசினதால்ல நினைச்சேன்?”

கணத்துக்கும் குறைவான நேரத்துள் தன்னைச் சுதாரித்துக்கொண்டு விட்ட ராஜாதிராஜன், “ முதல்ல ஒரு ஆம்பளைக் குரல்தாம்ப்பா லைன்ல ஹல்லோன்னிச்சு. இப்பதான் புரியுது அது டெலி·போன் ஆபரேட்டரோட குரல்னு. அந்தப் பொண்ணு கேட்ட நம்பரை டயல் பண்ணிக் குடுத்துட்டு முதல்ல அவன் லைன்ல வந்திருக்கான். நான் தண்டபாணிதானாக்கும்னு நினைச்சுக் கடுமையாப் பேசிட்டேன்!” என்றவன், “என்னப்பா இது? க்ராஸ் க்வெஸ்டின் எல்லாம் கேக்கறீங்க?” என்று சிரித்தான்.

அவர் சமாதானமடையா விட்டாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல், புன்னகை செய்து, “க்ராஸ் க்வெஸ்டின் இல்லேப்பா. ஜஸ்ட் கேட்டேன். அவ்வளவுதான். உனக்கு ஏன் அப்படித் தோணுது? ஒண்ணு பண்ணேன். ஒரு நாள் நான் நம்ம ஆ·பீஸ்ல இருக்கிறப்ப வந்து என்னைப் பார்க்கச் சொல்லேன். நானே அது கிட்ட சொல்லிட்றேன் இங்க வேலை எதுவும் கிடைக்காதுன்னு. . .” என்றார்.

உடனே அவனுக்குத் தொண்டை ஈரங்காய்ந்து போனாலும், “அப்படியே செய்யறேம்ப்பா. என்னிக்கு இங்கே வந்து உங்களைப் பார்க்கச் சொல்லட்டும்? நீங்க கொஞ்சம் கன்டிப்பாவே சொல்லிடுங்கப்பா அவ கிட்ட, இனிமே என் மகனைத் தொந்தரவு பண்ணாதே அப்படின்னு!” என்றான் புன்னகை செய்து.

“உனக்குத்தான் அது வேலை செய்யிற ஆ·பீஸ் தெரியாதுன்னியே! எப்படிக் கூப்பிட்டுச் சொல்லுவே?”

அவன் மின்னலெனத் தோன்றிய எண்ணத்தில், “நாளைக்குப் பார்க்கலாம்னு அவ சொன்னான்னீங்களேப்பா? அப்ப கண்டிப்ப அவ ·போன் பண்ணுவா. அப்ப சொல்லிட்றேன். . .” என்றான். அவனது புன்னகையின் அகலம் அதிகமாயிற்று.

“சரி. ஆனா, அது இன்னைக்குப் பண்ணின மாதிரி சாயங்காலம் அஞ்சு மணிக்கு ·போன் பண்ணிச்சுன்னு வச்சுக்க. அதுக்கு அப்புறம் என்னை அது நம்ம வீட்டில இல்லே சந்திக்கும்படி இருக்கும்? அப்புறம் அது திரும்பிப் போறப்ப ரொம்ப இருட்டிடும். அதனால, நீ என்ன பண்றே, வேற ஏதாச்சும் நாளுக்கு அப்பாய்ண்ட்மென்ட் குடுத்துடு. அஞ்சு மணிக்கு முன்னால இங்க வந்து என்னைப் பார்த்துட்டுப் போகட்டும்.”

“அவ ஒரு இடத்துல வேலை செஞ்சுக்கிட்டு இருக்காளேப்பா? அவங்க ஆ·பீஸ்ல பெர்மிஷன்ல கேக்கணும்? குடுப்பாங்களோ என்னமோ. ஏம்ப்பா, ஒரு ஞாயித்துக் கெழமையன்னிக்கு நீங்க சொல்ற நேரத்துக்கு நம்ம வீட்டுக்கே வரச் சொல்லிட்டா என்ன?”

“அதுவும் சரிதான். அப்ப அப்படியே செய்துடு.”

“ரொம்பக் கண்டிப்பா நீங்க அவ கிட்ட சொல்லிடணும்ப்பா., வேலை இல்லேன்றதை. பார்க்கலாம், அது, இதுன்னு வாய் தவறிக் கூடச் சொல்லிடாதீங்க. டூர் போக வேண்டியிருக்கும்கிறதால லேடீஸை வேலைக்கு எடுக்கிறதில்லேன்னு சொல்லிடுங்க.”

“நான் டூர் போக ரெடியா யிருக்கேன்னு அது சொல்லிடுச்சுன்னா?”

“நீ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு. அதெல்லாம் நல்லாருக்காதுன்னு அப்படின்னு தட்டிக் கழிச்சுடுங்க.”

“அதுக்குக் கல்யாணம் ஆகல்லேன்னு உனக்கு எப்படித் தெரியும்?”

“என்னப்பா இது! அவளை இன்ட்ரொட்யூஸ் பண்ணி வேலை வாங்கித் தரச் சொன்ன ·ப்ரண்ட்தாம்ப்பா சொன்னான். அவளோட சம்பாத்தியத்துலதான் அவங்க குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு, அப்பா படுத்த படுக்கை, தம்பி தங்கைங்க படிச்சிட்டு இருக்காங்கன்றதை யெல்லாம். . .”

“ரைட். அப்ப ஒரு ஞாயித்துக் கெழமையன்னைக்கு அவளை வரச் சொல்லிடு.”

“சரிப்பா.”

. . . அன்றிரவு பல்வேறு சிந்தனைகளால் ராஜாதிராஜனுக்கு உறக்கம் கெட்டுப் போயிற்று. சூர்யா அவன் மனத்தை ஆட்டி அலைக்கழித்துக் கொண்டிருந்தாள் என்பதால் மட்டுமல்லாது, அன்று மாலை அவள் தொலைபேசிய போது, ஜகந்நாதன் ஒலிவாங்கியை எடுத்துப் பேசிவிட்டதால் விளைந்துவிட்ட தேவையற்ற அக்கப்போரைச் சமாளிக்கத் தான் ஏதேதோ பொய்களை அடுக்க வேண்டியது வந்து விட்டது பற்றிய கசப்பிலும், தான் சொன்னவற்றை அப்பா நம்பினாரா என்பது பற்றிய சந்தேகத்திலும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. மறு நாளும் அவர் அலுவலகத்துக்கு வந்து மாலை ஐந்து மணி வரை உட்கார்ந்தால் என்ன செய்வது எனும் கேள்வியும் அவனைக் கலக்கியது.

அப்படி அவர் இருக்கும் போது அவள் தொலைபேசினால், “வேலை வேணும்னு கேட்டீங்கல்ல? எங்கப்பாதான் கம்பெனிக்கு எம்.டி. அவரையே சந்திச்சுப் பேசுங்க. . .” என்று பூடகமாய்ப் பேசி ஒரு சந்திப்புக்கான தேதியையும் சொன்னால், அவள் புரிந்துகொள்ள மாட்டாளா என்னும் எண்ணமும் அவனுள் தோன்ற, அதன் பின் அவன் கண்ணயர்ந்தான்.

. . . அவசரமாய்ப் பேசி முடித்துவிட்ட சூர்யா தொலைபேசியின் மறு முனையிலிருந்து ஒரு திகைப்பான மவுனத்தை உணர்ந்ததும் திடுக்கிட்டுப் போனாள். மறுமுனையில் இருந்த ஆள் ராஜாதிராஜன் அல்லன் என்பதை அந்த மவுனம் புரிய வைத்ததில், அவளுள் ஒரு படபடப்பு ஏற்பட்டது. அந்த நபர் தன் வருங்கால மாமனாராய்த்தான் இருக்க வேண்டும் எனும் நிச்சயமான ஊகத்தில் அந்தப் படபடப்பு அதிகரித்தது.

‘நாளைக்கு என்னைச் சந்திக்கும் போது அவர் என்னைக் கடிந்து கொள்ளூவாரோ? டெலி·போனை எடுத்துப் பேசியது யார் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் நான் உளறிக்கொட்டி விட்டது அவரை ஏதேனும் சிக்கலில் மாட்டிவைத்திருக்குமோ? ஆனால் அப்படி நடந்தால், அதுவும் நல்லதுக்குத்தானே? அந்தச் சாக்கில் அவர் தன் அப்பாவிடம் விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட முடியுமே! . . . எப்படியோ! எதுவானாலும் என் உளறலின் விளைவு இன்னதென்பது நாளைக்கு அவரை நேரில் பார்க்கும் போதுதான் தெரியும். நாளைக்கு ஆ·பீசில் வேலை அதிகமாக இருக்கும், அதனால் வீடு திரும்பத் தாமதம் ஆகும் என்று அம்மாவிடம் இன்றைக்கே ஞாபகமாய்ச் சொல்லிவைத்துவிட வேண்டும். . . . வேறு யாரோ என்னைத் தொலைபேசியில் அழைத்தது போல் பாவித்து வெடுக்கென்று பேசித் தொடர்பைத் துண்டித்த ராஜாதிராஜன் தான் திரும்பவும் கூப்பிட்ட நேரத்தில் இல்லாது போயிருப்பார் என்பது தனக்கு எப்படித் தெரியும் என்று கேட்டு அவன் தன் மீது மனத்தாங்கல்பட்டுப் பேசினால் சொல்லிவிடவேண்டும் என்று அவள் நினைத்துக்கொண்டாள். ஆனால், ‘நான் எப்போது பேசினாலும், ‘ராஜாதிராஜன் ஸ்பீக்கிங்’ என்று எடுத்த எடுப்பில் என்னை வெளிப்படுத்திக் கொள்ளுவேன் என்று நான்தான் உனக்குச் சொல்லி வைத்திருக்கிறேனே? அப்படி இருக்கும் போது இப்படி முட்டாள்தனமாய்ப் பேசிக் குளறுபடி பண்ணிவிட்டாயே!’ என்று அவர் என்னை மடக்கினால் என்னிடம் சரியான பதில் இருக்காதுதான்.. . . என் அவசரத்தில் அதை மறந்தே போனேன். . . . பேசியது அவர் அப்பாதான் என்று நான் நினைப்பது கூடத் தவறாக இருக்கக்கூடுமே. அவருடைய ஸ்டெனோவாய்க் கூட இருக்கலாமே!. . .’

பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த சூர்யா இப்படி யெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள். ஐந்துமணிக்குப் பிறகு ராஜாதிராஜனுடன் தொலைபேசக் கடை ஒன்றுக்குப் போனதால் ஐந்தேகால் மணி பேருந்தை அவளால் பிடிக்க முடியாது போயிற்று. ஆக, அவள் தன் வீட்டு வாசற்படியில் கால் வைத்த போது, முந்திய நாளின் அளவுக்கு இல்லாவிட்டாலும், வழக்கத்தை விட முக்கால் மணி நேரத் தாமதம் விளைந்துவிட்டிருந்தது.

அம்மா அனந்தநாயகி கண்ணிமைக்காமல் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னவோ கேட்கத் துடித்து, ஆனால் கேட்காமல் அடக்கிக்கொண்ட முக பாவத்தில் அவள் இருந்ததாய் சூர்யாவுக்குத் தோன்றிற்று. சுகன்யா குறும்பாக அவளை நோக்கியபோது, ‘நீ நினைக்கிற மாதிரி நான் ஒண்ணும் பீச்சுக்குப் போகல்லே இன்னிக்கு’ எனும் பொருள் ததும்பிய பார்வையை அவள் மீது பதித்துவிட்டு அவள் பின்கட்டுக்குப் போனாள்.

. . . மறு நாள் காலை அவள் கையில் காப்பியைக் கொடுத்துக்கொண்டே, “ஆ·பீஸ்லேர்ந்து கெளம்பினதும் நேத்து சாயந்திரம் மருந்துக் கடைக்குப் போனியா?” என்று அனந்தநாயகி கேட்டதும், சூர்யாவுக்குத் தூக்கிவாரிப்போட்டுவிட்டது.

அவள் சட்டென்று, “தலை வலிச்சிச்சும்மா. அதான் மாத்திரை வாங்குறதுக்காகப் போனேன்,” என்றாள். துணிச்சலுடன் தாயின் விழிகளையும் சந்தித்தாள்.

“அங்கேர்ந்து யாருக்கு ·போன் போட்டே?” என்பதாய் அனந்தநாயகியிடமிருந்து அடுத்த அம்பை அவள் சற்றும் எதிர்பார்க்காததால், அவள் வாயடைத்துப் போக நேர்ந்தது.


jothigirija!@vsnl.net –
தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா