மடியில் நெருப்பு – 11

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

ஜோதிர்லதா கிரிஜா


அந்தச் சதுரமுகக்காரனின் பார்வையில் ஓர் அசாதாரணத்தை சூர்யா உணர்ந்தாள்.பேரழகும், கவர்ச்சியும், வாளிப்பும் நிறைந்த ஓர் இளம் பெண்னை ஓர் ஆண் பார்க்கிற பார்வை மட்டுமே அன்று அது என்று எதனாலோ அவளுக்கு நிச்சயமாய்த் தோன்றியது. இதைத் தவிர, இன்னோர் உணர்ச்சியும் அந்தப் பார்வையில் அவளக்குப் புலப்பட்டது. தன்னை அடையாளம் கண்டுகொண்ட பார்வையாக அது அவளுக்குப் பட்டது. ஆயினும், தன்னை இவனுக்கு எப்படித் தெரியும் என்னும் கேள்வி அவளுள் எழுந்தது. எங்கேயாவது பார்த்திருக்கக்கூடும் என்று தனக்குள் கூறிக்கொண்டாள். தன்னை ஒரு முறை பார்ததவர்தான் மறக்கவே முடியாதே என்றும் எண்ணிப் பெருமைப்பட்டுக்கொண்டாள்.

அவளும் சுகன்யாவும் இறங்குவதற்கு முன்னால் அவன் கடையின் குறுகலான நுழைவில் கால்வைத்துவிட்டதால், முட்டி மோதிக்கொண்டு இறங்க விரும்பாத சூர்யா அவன் ஏற வழிவிட்டு ஒதுங்கி நின்றாள். சுகன்யா அவளுக்குப் பின்னால் நின்றாள். கடையின் வாயில் மேல்படியில் அவன் கால்வைத்த போது அவன் அவளைக் கடக்க நேர்ந்தது. இதற்குள் அவள் தன் பார்வையைத் தாழ்த்திக் கொண்டு விட்டிருந்ததால், தன் மீது பதித்த பார்வையை அவன் அகற்றிக்கொள்ளவே இல்லை என்பது அவளுக்குத் தெரியாமல் போயிற்று. ஆனால், சுகன்யா அதைக் கவனித்துத் தனக்குள் “தூ” என்று முனகிக்கொள்ளவும் செய்தாள். சூர்யாவைக் கடந்ததன் பிறகு தன்னைக் கவனித்த அவன் தன்னையும் விழுங்கிவிடுவான் போல் பார்த்துக்கொண்டு சென்றது அவள் மனத்தில் மற்றுமொரு “தூ” வை உற்பத்திசெய்தது. அவன் தங்களைக் கடந்த பின்னர் இருவரும் இறங்கலானார்கள்.

இறங்கியபின் திரும்பிப் பார்த்த சுகன்யா அந்த ஆள் திரும்பி நின்று தங்களைப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டாள். முகத்தில் கடுமை காட்டி முறைத்துவிட்டு விரைந்து நடந்தாள்.

“அந்தத் தொங்குமீசைக் காரனைக் கவனிச்சியாக்கா?”

“கவனிச்சேன். உர்ர்ர்னு பார்த்துக்கிட்டே போனான். பொறுக்கி ராஸ்கல்னு அவன் மூஞ்சியிலே எழுதி ஒட்டி வைக்கலாம். அவ்வளவு அப்பட்டமான பொறுக்கித்தனம்.”

“கடைக்குள்ளே காலை வெச்சதுலேர்ந்து நம்மளைத் தாண்டிப் போற வரைக்கும் உன் மேல வெச்ச கண்ணை அவன் எடுக்கவே இல்லேக்கா! … பின்னால நின்னுக்கிட்டு இன்னமும் நம்மளைப் பார்த்துக்கிட்டே இருக்கான்க்கா!”

“சரி, சரி. நீ வேற அவனை முறைக்காதே. பொல்லாத ஆளுன்னு தோணுது..வா, வா.” –

சூர்யா சுகன்யாவின் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு நடக்கலானாள் .

… அன்றிரவு சூர்யாவுக்குத் தூக்கமே வரவில்லை. திரும்பத் திரும்ப அவள் மனம் அன்றைய நிகழ்வுகளை அசை போட்டவாறு இருந்தது. தன் வாழ்க்கையில் உண்மையாகவே அப்படி நடந்ததா எனும் வியப்பில் அவள் அமிழ்ந்துகொண்டே இருந்தாள். எதிர்பாராத திருப்பங்கள் – அதிலும் இன்ப மயமான திருப்பங்கள் – சிலருடைய வாழ்வில்தான் நிகழும் என்பதை நினைத்துப் பார்த்த போது தன்னைவிடவும் அதிக அதிருஷ்டசாலி இன்னொருத்தி இருக்க முடியாது என்று அவள் எண்ணினாள்.

‘என்னதான் ராஜாதிராஜன் அப்பா கையிலே ஒரு தொகையைக் குடுத்துட்டு, கல்யாணச் செலவையும் தானே ஏத்துக்கிட்டாலும், அந்தத் தொகையை வெச்சு இவங்க எத்தினி நாளுக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? இப்ப நான் வாங்குற மாசச் சம்பளம் எட்டாயிரத்துச் சொச்சம். அதாவது ஒரு வருஷத்துக்குக் கிட்டத்தட்ட ஒரு லட்சம். அவரு ரெண்டு லட்சம் குடுக்கிறதா வெச்சுக்கிட்டாலும், அது ரெண்டே வருஷத்துல காலியாயிடுமே! அதனால, கல்யாணத்துக்குப் பெறகும் கொஞ்ச நாள் நான் வேலைக்குப் போறேன்னு கேட்டுப் பார்க்கணும்…ஆனா, அது நல்லாருக்குமா?… பார்க்கலாம்…’

என்னென்னவோ குருட்டு யோசனைகளுக்குப் பிறகு இரண்டு மணிக்கு சூர்யா தன்னையும் அறியாது உறங்கிப் போனாள்.

… மறு நாள் காலை ஐந்து மணிக்கெல்லாம் விழித்துக்கொண்டுவிட்ட சூர்யா காலைக்கடன்களை முடித்தபின் காப்பி போடலானாள். முந்திய நாளைய உடல் நலக் குறைவால் அனந்தநாயகி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தாள். ஆறு மணிக்கு சுகன்யா காப்பிக்காகச் சமையற்கட்டுக்கு வந்தாள். அதிகாலையின் பளீரென்றிருந்த சூரிய வெளிச்சத்தில் தங்கையின் முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதற்கு சூரியா சங்கடப்பட்டாள். அதைக் கவனித்த சுகன்யாவுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அடக்கிக்கொண்டு இயல்பாக இருந்தாள்.

காப்பியைப் பருகிய பின், “அக்கா! இன்னைக்கு காலேஜ்லே என்னைப் பார்த்ததும் அந்த சாவித்திரி இல்லாத பொல்லாத கேள்வியெல்லாம் கேக்குமே? என்ன சொல்லட்டும்?” என்று சுகன்யா கேட்டதற்கு, சூர்யா, “உண்மையையே சொல்லிடு. ஆனா ரகசியமா வெச்சுக்கச் சொல்லு.” என்றாள், கிசுகிசுப்பாக.

அப்போது, “என்னங்கடி? அக்காளும் தங்கையும் காலங்கார்த்தாலே குசுகுசுன்னு பேசிட்டிருக்கீங்க?” என்றவாறு அனந்தநாயகி அங்கு வந்து சுவரோரம் கால் நீட்டி உட்கார்ந்தாள்.

“ஆ·பீஸ் சமாசாரம்மா,” என்ற சூர்யா அம்மாவுக்குக் காப்பி கலக்கலாணாள்.

“இத பாருடி, சூர்யா! நீ பாட்டுக்குப் பெர்மிஷன் போட்டுட்டு வீட்டுல சொல்லாம அங்க இங்க சுத்தாதே. ஆமா! வீட்டை விட்டா ஆ·பீஸ், ஆ·பீஸை விட்டா வீடுன்னு இருக்கணும். நான் ஏற்கெனவே மடியில நெருப்பைக் கட்டிக்கிட்டிருக்கேன். அக்கா போன வழி ஆவாரம் பூப் பூத்திருக்குன்னு அவ வழியில போகாம நீங்க ரெண்டு பேரும் ஒழுங்கா யிருக்கணுமேன்னு நான் கடவுளை வேண்டாத நாளு இல்லே…”

சூர்யாவும் சுகன்யாவும் ஒருவரை யருவர் ஜாடையாகப் பார்த்துக் கொண்டார்கள்.

அனந்தநாயகி தொடர்ந்தாள்: “கோவிச்சுக்காதேடி, சூர்யா! ஒரு தாயார்க்காரிக்கு உண்டான கவலையைப் புரிஞ்சுக்கடி. நாளைக்கு நீயும் ஒரு மகளுக்குத் தாயாகுறப்ப, என்னோட கவலையை நீ புரிஞ்சுப்பே…தங்கச் சிலைங்க மாதிரி இருக்கீங்களேடி! அதான் கவலையா யிருக்கு. நேத்திக்கு பேப்பர்லே போட்டிருக்கான், பாரு. ஒரு அழகான பொண்ணை லவ் பண்றதாச் சொல்லி அவளை நம்ப வெச்சு ஏமாத்தி, அந்த ஆளும் அவனோட சிநேகிதப் பசங்க மூணு பேருமாச் சேந்து ஒரு டாக்சியில் இட்டுட்டுப் போயி நாசம் பண்ணிட்டாங்க! ஆம்பளைங்க ஆசை வார்த்தை பேசுறதுல யமகாதகனுங்க. அந்தப் பசப்புக்கெல்லாம் ஏமாறக் கூடாதுடி….. அந்தச் சண்டாளி – உங்க அக்காக்காரி – எங்கே இருக்குறாளோ என்னவோ! அநதச் சண்டாளன் அவ கூட இருக்குறானோ, இல்லாட்டி அவளை அம்போன்னு கை கழுவிட்டுப் போயிட்டானோ! ஒரு தகவலும் இல்லே… இந்த மெட்ராஸ்லயேதான் இருக்குறாளோ, இல்லாட்டி வேத்தூர் எங்கேயாச்சும் இருக்குறாளோ. எட்டாம் கெளாசுக்கு மேலே படிக்கவும் இல்லே. நாலு பேத்துக்குத் துணிதெச்சுக் குடுத்துச் சம்பாரிப்பான்னு தையல் கெளாசுக்கு அனுப்பினேன். வீட்டு வாசப்படி தாண்டினவ எவனோ கீழ்ச் சாதிக்காரனோட ஓடிட்டா…”

‘மகள் ஓடிப் போனதை விடவும் ஒரு “கீழ்ச் சாதிக்கார”னுடன் ஓடிப்போனதுதான் அம்மாவை அவமானப் படுத்துகிறது’ என்று சூர்யா தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

காப்பியை வாங்கிக் குடித்த அனந்தநாயகி, “இப்ப எனக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லே.நானே குளிச்சுட்டு வந்து சமைக்கிறேன்,” என்றாள். ஆனால் சூர்யா ஒத்துக்கொள்ளாமல் அவளை வலுக்கட்டாயமாக ஓய்வு எடுத்துக்கொள்ளப் பணித்தாள்.

.

அனந்தநாயகி ஒரு பெருமூச்சுடன் எழுந்து சென்றாள்.

அம்மாவுக்குத் தன் மேல் உள்ளூற ஓர் ஐயம் தோன்றிவிட்டதென்பதை சூர்யா புரிந்துகொண்டாள். சாமி மாடத்தில் இருந்த சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் முகம் பார்த்துச் சின்னதாய் ஒரு பொட்டுவைத்துக் கொண்டாள். தன் முகம் வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக ஒளிர்ந்ததைக் கண்டாள். கண்களில் ஒரு மகிழ்ச்சியும் பளபளப்பும் அதிகப்படியாய் வந்து உட்கார்ந்திருந்தன. அதனால் தான் அம்மாவுக்குச் சந்தேகம் வந்துவிட்டது போலும் என்று எண்ணிச் சிரித்துக்கொண்டாள். என்னதான் இப்போது தன்னை விரட்டு விரட்டென்று விரட்டினாலும், அம்மாவும் ஒரு காலத்திய இளம் பெண்ணாய் இருந்து தன்னைக் கிளர்த்திக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளைக் கடந்து வந்தவள்தானே என்றும், எனவே சரியாகவே தனது மன நிலையை அவள் ஊகித்துவிட்டிருக்க வேண்டும் என்றும் நினைத்தாள். சிரிப்பு வரும் போல் இருந்தது. அடக்கிக்கொண்டாள். இனித் தான் முகத்தில் மகிழ்ச்சியையோ, உற்சாகத்தையோ வெளிப்படுத்தாதிருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தாள். ‘உதடுகளில் வேண்டுமானால் சிரிப்பைக் காட்டாதிருக்க இயலும்; கண்களில் உடனுக்குடனாய்த் தோன்றிவிடும் சிரிப்பை எப்படி மறைத்துக்கொள்ள முடியும்? விழிகளைத் தாழ்த்திக் கொள்ளுவது ஒன்றுதான் வழி… அப்படிச் செய்தால் அதிலும் ஓர் உள்ளர்த்தத்தைக் கெட்டிக்காரர்கள் கற்பித்துக்கொண்டு விடுவார்கள்’ என்று அவள் எண்ணங்கள் ஓடின.

… அன்று பிற்பகல் நான்கு மணிக்கு அவள் தன் அலுவலகத்தை விட்டு வெளியேறி அருகில் இருந்த ஒரு கடைக்குள் நுழைந்து ராஜாதிராஜனோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டாள்.

“ராஜாதிராஜன் ஸ்பீக்கிங்!” எனும் காந்தக் குரல் அவள் செவிகளில் ஓர் இன்னிசையாய்ப் பாய்ந்த்தும், அவள் இதயம் தன் இயல்பான தாளம் தப்பித் துடித்தது. எச்சில் விழுங்கியபடி, “நான் தாங்க, சூர்யா பேசறேன்,” என்றாள் சன்னமாக.

“ஒரு மீட்டிங் என் ரூம்லே நடந்துக்கிட்டிருக்கு. எங்க அப்பாவும் நானும் பிஸியாப் பேசிக்கிட்டிருக்கோம். ஒரு அரை மணி கழிச்சுப் பேசு!” என்ற அவன் அவளது “சரிங்க” வுக்குக்கூடக் காத்திராமல் தொடர்பைத் துண்டித்தான். ஒலிவாங்கி பொட்டென்று கிடத்தப்பட்ட தினுசில் ஒரு கண்டிப்புத் தெரிந்தது. அவள் ஏமாற்றத்துடனும் திகைப்புடனும் ஒலிவாங்கியை வைத்துவிட்டு அலுவலகம் நோக்கிப் புறப்பட்டாள்.

… அவள் தன் பிரிவுக்குள் புகுந்த போது, பவானி, “தனியா எங்கேடி போயிட்டு வர்றே? அஞ்சு நிமிஷம் வெளியே போறதா யிருந்தாலும் என்னையும் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போவியே?” என்று கேட்டாள். பவானியின் பார்வைக் கூர்மையை எதிர்கொள்ள முடியாமல், சூர்யா தலைகுனிந்தபடி தன்னிருக்கையில் உட்கார்ந்தாள். இப்படி ஒரு கேள்வி புறப்பட்டால் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்று யோசித்திராததால் என்ன பதில் சொல்லுவதென்று அவளுக்குத் தெரியவில்லை.

(தொடரும்)


jothigirija@vsnl.net –

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா