மடியில் நெருப்பு – 2

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

ஜோதிர்லதா கிரிஜா



அலுவலகத்துள் நுழைந்து, தன் பிரிவை யடைந்து இருக்கையில் உட்கார்ந்த சூர்யாவின் படபடப்பு வெகு நேரத்துக்கு அடங்கவே இல்லை. மாருதி காருக்குச் சொந்தக்காரனாக இருக்கும் அழகான, பணக்கார இளைஞனின் உள்ளத்தைத் தன்னால் கவர முடிந்திருக்கிறது என்பது அவளை நிலை கொள்ளாத பரபரப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. கடந்த ஒரு வாரமாகத்தான் அவள் அவனைப் பார்த்து வருகிறாள்.முதல் நாளே அந்த இரத்தச் சிவப்புக் காருக்குள்ளிருந்து அவளை நோக்கித் திரும்பிய அவன் முகம் காரின் சிவப்புக்கு மிகவும் பொருத்தமாய் ஒரு முழு நிலவைப்போல் ஒளிர்ந்த போது, அக்கம்பக்கத்து மனிதர்கள் கவனிப்பார்களே என்கிற சங்கோசத்தையும் கடந்து அவளையும் அறியாமல் அவளது பார்வை கணத்துக்கும் அதிகமாக அவன் மீது படிந்து மீண்டதை இப்போது அவள் வெட்கத்துடன் நினைவு கூர்ந்தாள். அவனது கம்பீரமும், பெண்ணினுடையவை போன்ற அகன்ற, கருமை நிறைந்த விழிகளும், கொங்கிணிக் காரர்களுக்குரிய மஞ்சள் நிறமும், சுருட்டைக் கிராப்பும், உதட்டுப் புன்னகையும் அவன் கார் தெருத்திருப்பம் வரை சென்று மறையும் வரை அவளது கவனத்தில் இருந்தாலும், அதற்குப் பிறகு அவள் அன்று முழுவதும் அவனைப் பற்றி நினைத்துப் பார்க்கவில்லை என்பது உண்மைதான்.
ஆனால், மறு நாளும் அந்தச் சிவப்பு நிறக் கார் அவளைக் கடந்த போது அவன் தன் கழுத்தைத் திருப்பி அவளைப் பார்த்தான். அவனது செய்கையில் தன்னைப் பார்க்கும் ஆவலிலேயே அவன் அவ்வாறு செய்தான் என்பது புரிய, அவளுள் ஒரு திகைப்பு ஏற்பட்டது. தான் ஒரு பேரழகியாக இருந்ததுதான் அதற்குக் காரணம் என்று நினைத்து அவள் தனக்குள் சிரித்துக்கொண்டதோடு அவன்பால் அவளது மனத்து எதிரொலி நின்றது. ஆனால், அதற்கு அடுத்த நாளும் அவன் அவளை ஆழமாக நோக்கியபோது, அவள் தன் தலையைத் தாழ்த்திக்கொள்ள நேர்ந்தது. ஏனெனில், அவனது ஆழமான பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. அதன் பிறகு தான் அவள் அவனைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாள்.
அதற்குப் பிறகான நாள்களில் அவளே தன்னையும் அறியாது அவனது கார் தெருத்திருப்பத்தில் தென்படுகிறதா என்று பார்க்கத் தொடங்கினாள். ‘இதென்ன பயித்தியக்காரத்தனம்!’ எனும் எண்ணமும் அவள் மனத்தில் எழாமல் இல்லை. அக்கம் பக்கத்தவர்கள் பற்றிய விழிப்போடு அவள் சாடையாய்ப் பார்க்க, அவன் மட்டும் கூச்சமே இல்லாமல் அவளைப் பார்வையால் விழுங்கியவாறு கடந்தான்…
தன் தோற்றம் அவளைக் கவர்ந்து விட்டதை அவன் ஊகித்துவிட்டான்! தனது இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்திருந்தாலும், கவரத்தான் பட்டிருப்பாள் என்று அவள் எண்ணினாள். அதே நேரத்தில், தோற்றத்தால் கவரப்படுவது மட்டுமே காதல் ஆகிவிடுமா எனும் கேள்வியும் அவள் மனத்தில் எழத்தான் செய்தது. எனினும் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் காதலில் புறக்கவர்ச்சிதானே மிகப் பெரிய அளவிலான அடிப்படையாக அமைகிறது என்றும் அவள் எண்ணிக்
கொண்டாள்.
“என்ன? நீங்களே தனியா உக்காந்து சிரிச்சுட்டிருக்கீங்க?” என்ற குரல் அவளது சிந்தனையில் குறுக்கிட்டு அவளை இந்த உலகுக்குக் கொண்டுவந்தது. அவள் தன் முகவாயைத் தாங்கிக்கொண்டிருந்த கையை ஒரு திடுக்கீட்டுடன் அகற்றிக்கொண்டு தலை உயர்த்திப் பார்த்தாள். எதிர் இருக்கை முரளி புன்சிரிப்புடன் தன் மேசையைத் தூசு தட்டிக்கொண்டிருந்தான். அவளது முகம் சிவந்து போயிற்று. அவள் பதிலேதும் சொல்லாமல், மேசை இழுப்பறையிலிறந்து பேனாவை எடுத்து வருகைப் பதிவேட்டில் ஒப்பமிடத் தலைமை எழுத்தரின் மேசையை நோக்கி நடந்தாள்..
தன் கேள்வியைக் காதில் வாங்காதவள் போல் அவள் சென்றதைப் புரிந்துகொண்டு முரளியும் தனக்குத் தானே சிரித்துக்கொண்ட நேரத்தில், பிரிவினுள் நுழைந்த பக்கத்து இருக்கையாளன் பாராங்குசம், “என்னையா, நீரே சிரிச்சுக்குறீர்? குட் மார்னிங் சொன்னது கூடக் காதுல விழல்லியா?” என்று வினவியதும், முரளி சிரித்துவிட்டு, ” இன்னைக்கு எல்லாரும் தனக்குத் தானே சிரிச்சுக்கிற நாள்னு நினைக்கிறேன்!” என்றான்.
பாராங்குசம் ஒன்றும் புரியாமல் விழிக்க, முரளி மேலே எதுவும் பேசாமல் சூர்யாவைப் பார்த்துச் சிரித்துவிட்டுத் தலைவாரலில் ஈடுபட்டான்.
“வெய்யில் கூட நேத்தை விட இன்னைக்குக் கம்மியாத்தானே இருக்கு?” என்று பாராங்குசம் தொடர, முரளி ஒரு சினிமாப் பாட்டை வாய்க்குள் முனகியபடி ஒரு கோப்பை பிரித்து வைத்துக் கொண்டான்.
“என்னையா! முரளி! நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன்! நீரானா பதிலே சொல்லாம இருக்கீர்?”
முரளி சூர்யாவை ஓரத்துப் பார்வை பார்த்தபடியே, பிறகு பேசுவதாக அவனுக்குச் சைகை செய்தான். சூர்யாவுக்குத் தடுமாற்றம் ஏற்பட்டது. கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். ‘முகத்தில் வழிகிற வேர்வை வேண்டுமானால் போகும். அதில் வழிகிற அசடு எப்படிப் போகும்?’
என்றும் தனக்குத்தானே கேட்டுக்கொண்டு மனத்துள் சிரித்தாள். ஆனால், இந்தத் தடவை மனத்துள் சிரித்த சிரிப்பு முகத்தில் தெரிந்துவிடாதபடி கவனமாக இருந்தாள்.
என்ன முயன்றும் சூர்யாவுக்கு வேலை ஓடவே இல்லை. பக்கத்து இருக்கைக்காரி பவானி நல்ல வேளையாக வராததில் அவளுக்கு அப்பாடா என்றிருந்தது. வந்திருந்தால், அவளது தடுமாற்றத்தை அவள் கண்டுபிடித்து இல்லாத பொல்லாத கேள்விகளெல்லாம் கேட்டு அவளைக் குடை குடை என்று குடைந்திருப்பாள் என்பதில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
‘… கார் இருக்கையின் உச்சியைத் தாண்டி எடுப்பாய் அவன் தலை உயர்ந்து தெரிந்ததிலிருந்து அவன் மிகவும் உயரமாக இருப்பான் என்று தோன்றுகிறது. ஏன்? நாம்தான் நல்ல உயரம் – வைஜயந்திமாலா மாதிரி! .. என் அழகுக்கு மட்டும் என்ன குறைச்சலாம்? அம்மா அடிக்கடி எனக்கு திருஷ்டி கழிக்கிறார்களே! கன்பட்டுவிடுமாம்! ..இன்றைக்கு பீச்சில் அவன்… சீ… அவர் என்ன பேசுவார்?… ‘ஐ லவ் யூ’ என்று தான் சொல்லப் போகிறார். வேறென்னவாம்? ஆனால் அதற்கு நான் உடனே அசடு வழிய, ‘நானும்தான்’ என்று தலை யாட்டிவிடக் கூடாது…’ யோசித்துச் சொல்லுகிறேன்’ என்றுதான் சொல்லவேண்டும். இல்லாவிட்டால், அவரது மதிப்பில் நான் தாழ்ந்து போவேன். எனது ஏழைமை, குடும்பம் என்னைச் சார்ந்திருப்பது இதையெல்லாம் சொல்லிவிட வேண்டும். ஏற்கெனவே அவருக்குத் தெரிந்திருந்தாலும் கூட இன்னும் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.பார்த்தால் பனக்காரரகத் தெரிகிறார்…அப்படி நான்தான் வேண்டுமென்றால் உதவி செய்யமாட்டாரா என்ன?’
“மிஸ் சூர்யா! அப்படி என்னம்மா யோசனை? நான் கூப்பிட்டது கூட காதுல விழாத அளவுக்கு?” என்ற தலைமை எழுத்தரின் குரல் அவளது சிந்தனையைக் கலைக்க, அவள் அசடு தட்டிப் போனாள்.
“சாரி, சார்!… எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகணும். இன்னைக்கு ரெண்டு மணி நேரம் பெர்மிஷன் வேணும், சார்…. அவங்களைப் பத்தித்தான் யோசிச்சிட்டிருந்தேன். .. எதுக்கு சார் கூப்பிட்டீங்க?”
“மன்த்லி ஸ்டேட்மெண்ட் போயிடிச்சான்னு கேக்குறதுக்குத்தான்.”
” போயிடிச்சு, சார். ” என்றபடி எழுந்த சூர்யா தலைமை எழுத்தரின் மேசையை நெருங்கி நின்றாள்.
“இன்னைக்கு மூணு மணிக்கு பெர்மிஷன் வேணும் சார்.”
“எடுத்துக்குங்க…எதுக்கும் செக்ஷன் ஆ·பீசர் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிடுங்க.”
“சரி, சார்!” என்ற சூர்யா நேரே மேல் தளத்தில் இருந்த அலுவலரின் அறை நோக்கி நடந்தாள்….
அவள் தலை மறைந்ததும், முரளி பாராங்குசத்தைப் பார்த்துக் கண் சிமிட்டினான். பிறகு, “அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். ஆனா மூஞ்சி முழுக்க சிரிப்பும் பிரகாசமுமா யிருக்காங்க. இன்னைக்குத் தனக்குத் தானே சிரிச்சிட்டிருந்தாங்க.. ” என்றான்
“ஓ! அதான் இன்னைக்கு எல்லாரும் தனக்குத் தானே சிரிச்சுக்குற நாள்னு சொன்னீரா?”
“ஆமா. பெர்மிஷன் போட்டுட்டு வேற எங்கேயோதான் போறாங்க…”
“அவங்க எங்கேயோ போகட்டும். அதைப் பத்தி உமக்கும் எனக்கும் என்ன, ஓய்! நம்ம ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம் ஆயிடுத்தே!”
“அதானே?” என்ற முரளி பாராங்குசத்தோடு ஒத்துப் போனான்.
… மூன்று மணிக்குத் தன் பிரிவைவிட்டு வெளியே வந்த சூர்யா, இரண்டிரண்டு படிகளாய்க் குதித்து இறங்கிக் கீழ்த்தளத்துக்கு வந்த பின் அலுவலக வாயிலில் ஒரே ஒரு கணம் நின்று தனக்குப் பின்னால் பார்த்துவிட்டு, உற்சாகத் துள்ளலுடன் சாலையைக் கடந்தாள்.
மாருதி காரில் ஏறியபோது அவளிடம் விளைந்த பரபரப்பு இப்போது சாலையைக் கடந்துகொண்டிருந்த கணம் வரையில் இம்மியும் குறையவில்லை. மாறாக, அவன், ‘ஐ லர் யூ’ சொல்லப்போவதைக் கேட்கப் போகும் மனக்கிளர்ச்சியில் அது மேலும் தீவிரமடைந்திருந்தது.
‘எப்பேர்ப்பட்ட அதிருஷ்டக்காரி நான் தான்! இப்பவாவது அவரோட பேரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கணும். என்னவா இருக்காருங்கிறதையும் தெரிஞ்சுக்கணும். ‘அழகான பொண்னைப் பெத்த அம்மா மடியிலே எப்பவுமே நெருப்புத்தான்’ அப்படின்னு அடிக்கடி புலம்புற அம்மாவுக்கு இது தெரிஞ்சா எம்புட்டு சந்தோஷமா யிருக்கும்! இப்படி ஒரு பணக்காரப் பையன் வந்து சிக்குவான்னு அம்மா நினைச்சே பார்த்திருக்க மாட்டாங்க… அவருக்கு என்ன வயசு இருகும்?..முப்பதுக்குள்ளே தான் தெரியறாரு. அம்மாடி! என்ன நிறம்! ஏன்? நான் கூடத்தான் நல்ல நிறம்! …’
…காலையில் குறிப்பிட்டுச் சொல்லியிருந்த இடத்தில் அவன் அவளுக்காகக் காரில் காத்துக் கொண்டிருந்தான். முகமெல்லாம் சிரிப்பும் சிவப்புமாய் அவள் காரை நெருங்கியதும், “என் மேலே அவநம்பிக்கைப் பட்டு எங்கே வராம இருந்துடுவீiகளோன்னு உள்ளூற பயந்துக்கிட்டிருந்தேன். சொன்னபடி வந்துட்டீங்களே! தேங்க்ஸ்!…முன் சீட்ல உக்கார்றீங்களா, இல்லாட்டி பின் சீட்லயா?” என்று அவன் வினவினான். அவனது கை மட்டும் முன் இருக்கைக் கதவின் கைப் பிடியில் இருந்தது.
அதைக் கவனியாதவள் போல் – முகத்துச் சிவப்பு அதிகரிக்க – அவள், ” பின் சீட்லயே உக்காந்துக்கறேன்,” என்றாள்.

jothigirija@vsnl.net

– தொடரும்

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா