மகா அண்ணா!

This entry is part [part not set] of 28 in the series 20080918_Issue

வீ.சு.இராமலிங்கம்


(ANNA THE GREAT)

ஒரு அழகிய தடாகம். தாமரைக் கொடிகள் அடர்ந்திருக்கின்றன. அத்தாமரைக் கொடி மொட்டு விடுகின்றது. மொட்டு வளர்கிறது. ஒரு நாள் மொட்டு விரிந்து தாமரை மலராகிறது. மணம் பரப்புகிறது, ஒளி வீசுகிறது. அதைப் பார்க்கிற மக்கள் அதைப் பறித்து மடியில் வைத்துக்கொள்கின்றனர் அல்லது தலையில் வைத்து மகிழ்கின்றனர். தாமரை மொட்டாகி மலராவது அதன் இயற்கைத் தன்மை. தான் மலர்வதற்கு அது யாருடனும் சண்டையிடுவதில்லை, யாரையும் வீழ்த்துவதும் இல்லை, வஞ்சிப்பதும் இல்லை. தன்னை எடுத்துவைத்துப் போற்றுங்கள் என்று மக்களிடம் வேண்டுவதும் இல்லை. ஆனால் அம்மலரின் வனப்பும், ஒளியும், மணமும் மக்களை ஈர்க்கின்றன; மக்கள் அதை எடுத்துப் போற்றுகின்றனர். தாமரை மலர்வது போல் தன் இயல்பால் தலைவர்களாய் வளர்ந்து மலர்ந்தவர்கள் இந்தியாவில் இருவர்தாம். அவர்கள் அண்ணல் மகாத்மாவும், பேரறிஞர் அண்ணாவும். இவர்கள் தங்களை மக்களின் மீது தலைவர்களாகத் திணித்துக் கொள்ளவில்லை. தலைமையைப் பிடிக்க யாரையும் அழுத்தவில்லை, யாரையும் வஞ்சிக்கவில்லை, யாரையும் இடித்துக்கொண்டும் தள்ளிக்கொண்டும் முன்னேறவில்லை. இவர்கள் தங்களுடைய கொள்கைகளில் ஊன்றி நின்று மக்களுக்குத் தொண்டே இயற்றினார்கள். மக்களாகவே இவர்களைத் தலைவர்களாக மனமுவந்து ஏற்று இவர்கள் பின் நடந்தனர். இவ்விருவரைத் தவிர மற்ற தலைவர்கள் எல்லோரும் தலைமைய முயன்று பிடித்தவர்களே. இப்போது நாம் பேச இருப்பது அண்ணாவைப் பற்றி.
அண்ணா எளிய நெசவாளர் குடும்பத்திலே பிறந்தவர். அவர் பொருளாதாரத்தில் பி.ஏ.(ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். சட்டப்படிப்பு வசதியின்மையால் தொடரமுடியாமல் நின்றுபோனது. இவர் படிக்கவைக்கப்பட்டது படித்தபின் குடும்பத்தைத் தாங்குவார் என்பதற்காக. ஆனால் இவர் இரண்டாவதுகூட முழுமையாகப் படிக்காத பெரியாரைத் தலைவராக ஏற்றுப் பொதுவாழ்வுக்குத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக்கொண்டார். இது அவருடைய முதல் தியாகம். இவர் பொது வாழ்வில் நுழைந்தது 1937 இல். அந்தக்காலத்தில் இவருடைய படிப்பைக் கொண்டு நல்ல சமூக அந்தஸ்தும் வருமானமும் தரக்கூடிய அரசாங்க வேலைக்குப் போயிருக்க முடியும். அந்த வாய்ப்பை விட்டார். நீதிக்கட்சி என்று அறியப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தலைவர்களைப் போல் ஆங்கிலேய ஆதரவு அரசியல் பதவிகளைப் பெறவும் முயலவில்லை. மக்களிடம் புகழ் பெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியிலும் சேரவில்லை. அன்றைய தமிழ் மக்களின் வெறுப்புக்கு ஆளாகியிருந்த பெரியாருடன் தன்னை இணைத்துக்கொண்டது தியாகமல்லாமல் வேறு என்ன? பெரியாராவது வசதி படைத்தவர். அண்ணாவோ ஏழை. எதிர்கால வாழ்க்கை வளமாக இருக்கும் என்று கற்பனைகூட செய்ய முடியாத நிலை. அந்தச் சூழ்நிலையில் பொதுத் தொண்டுக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டதுதான் மேன்மையான தியாகச் செயல். இந்தத் தியாக உள்ளத்துடனேயே அண்ணா தன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார்.
இருபதாம் நூற்றாண்டு தமிழக, ஏன் தென்னிந்திய வரலாற்றை அண்ணா இல்லாமல் சிந்திக்க முடியாது. தமிழக வரலாற்றை அவர் செதுக்கினார். 1944க்குப் பின் அண்ணா வளர்ந்துகொண்டே இருந்தார். அவர் வளர வளர தமிழ் நாட்டின் மற்ற பெரிய தலைவர்கள் அனைவரும் பரிதி முன் விண்மீன்கள் போல் ஒளி குன்றி வேகமாக மறைந்தனர். அண்ணாவின் வளர்ச்சி அவருடைய மேதையாலும் அவருடைய அருள்நிறைந்த உள்ளத்தாலும் அவருக்குக் கிடைத்தது. செயற்கையான விளம்பரத்தாலும் சாமர்த்தியத்தாலும் ஏற்பட்ட வளர்ச்சியன்று. அண்ணா முழுமையாக மக்களுடன் இருந்து அவர்களை வழி நடத்தினார். தமிழ் மக்களுடைய உயிரென அவர் வாழ்ந்தார். தனக்காக மக்களைப் பயன்படுத்தவில்லை; மக்களுக்கு அவர் பயன்பட்டார். இந்தப் போக்குதான் தமிழ் மக்களை அவருடன் இறுக்கமாகப் பிணித்தது. அது தமிழர்களுடைய அண்ணன் ஆனார்.
அண்ணா தமிழ் மக்களுக்கு அவர்களுடைய பண்டைய வரலாற்றைக் கூறி அவர்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தார். பண்டைத் தமிழ் இலக்கியங்களை தமிழ்ப் புலவர்களும் தமிழ் அறிஞர்களும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லி வந்தனர். அவை பற்றி நூல்கள் எழுதினர். ஆயினும் மக்களிடம், வெகு மக்களிடம் தமிழ் உணர்ச்சியை ஊட்டி எழுச்சியை உருவாக்கியவர் அண்ணாவே. அண்ணாதான் தமிழர்களிடம் அவர்களுடைய மொழியைப் பற்றிய பெருமிதம் கொள்ளச் செய்தார். அண்ணா மொழி உணர்ச்சியை வைத்து மக்களை ஏமாற்றி செல்வாக்கு பெற்றார் என்னும் தவறான பிரச்சாரம் இன்று வரை தொடர்கிறது. அண்ணா தமிழ் பற்றி பேசத் தொடங்கியபோது மக்கள் உணர்ச்சியற்று இருந்தனர். இருந்த உணர்ச்சியை அவர் பயன்படுத்தி லாபம் பெறவில்லை. அண்ணாவின் பிரச்சாரத்தால்தான் தமிழ் ஆசிரியர்களுக்கு தனி மதிப்பு ஏற்பட்டது. தமிழ் எழுச்சியை அண்ணா உருவாக்கியதால்தான் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு கிளர்ச்சி வலுததது. தமிழ், தமிழரின் பெருமையை தமிழ்நாட்டில் மட்டும் பேசவில்லை. அதை மாநிலங்கள் அவையில் தனி மனிதனாக நின்று முழங்கினார். தமிழ்நாட்டின் பாமரன்கூட தன் மொழிக்காக உயிரைவிடத் துணிந்தது அண்ணாவால்தான். அவர் உருவாக்கிய எழுச்சி இன்று இல்லை. காரணம் இன்று தமிழைப் பற்றி உரத்துப் பேசுபவர்களிடம் அண்ணாவின் உண்மையும் நேர்மையும் இல்லை. அண்ணா தமிழ்மொயின் பெருமையைக் கூறிய போதெல்லாம் அவரே உணர்ச்சி வசப்பட்டு பேசினார். மாநிலங்கள் அவையிலே பேசும்போது தமிழுக்கு உரிய இடத்தைப் பெறும் வரையில் ஓயமாட்டேன் என்று முழங்கினார். அவரிடம் உண்மையான தமிழ் உணர்ச்சி இருந்ததால்தான் அவரால் தாழ்ந்த தமிழகத்தைத் தட்டி எழுப்ப முடிந்தது. தமிழ் இனம், மொழி என்றெல்லாம் இன்றும் பேசுகின்றார்களே, இவர்களால் ஏன் அந்த எழுச்சியைக் கொண்டு வர முடியவில்லை? ஏனெனில் அண்ணாவின் உண்மையும், நேர்மையும் இவர்களிடம் இல்லாமைதான். இதிலிருந்து அண்ணா தமிழ் உணர்ச்சியை வைத்து ஆதாயம் தேடவில்லை; மக்களை எழுச்சிபெறச் செய்ய தமிழ் உணர்ச்சியை ஊட்டினார் என்பது. தமிழ் மொழி எழுச்சியுணர்வு அண்ணாவின் தனிக்கொடை; பெரியாரிடம் இருந்து பெற்றதில்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் சொன்னதிலிருந்து இது தெரியவரும்.
அண்ணா தமிழுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தார். அண்ணாவே கூறியுள்ளது போன்று அவர் இலக்கண வரன்முறையுடன் தமிழ் படிக்கவில்லை. அவருடைய ஆங்கிலப் புலமை தமிழைவிட அதிகம். அவர் தாமே தமிழ் இலக்கியங்களைப் பயின்றார். தமிழ் மக்களை உயர்த்த சீரிய கருத்துக்களை அவர்களுக்கு கூற தமிழிலே பேசினார், எழுதினார். தான் கற்றதனாலும் சிந்தித்ததாலும் உருவான கருத்துக்களை கதைகளாக, கட்டுரைகளாக, நாடகங்களாக எழுதி வெளிப்படுத்தினார். அப்படி அவர் எழுதும்போது ஒரு தமிழ் நடை புதிதாகத் தோன்றியது. அவர் எழுதிய பின்னர் தமிழே ஒரு புதிய வடிவம் கொண்டது. அது அண்ணாவின் தமிழாக மாறி அவருடைய மாற்றாரையும் அவருடைய தமிழைக் கையாளவைத்தது. புலவர் கல்லூரிகளில் முறையாகப் பயின்ற மாணவர்களும், ஆசிரியர்களும் அண்ணாவின் திராவிடநாடு இதழின் தமிழைப் பின்பற்றினர். இன்றைய தமிழிலே அண்ணா கலந்திருக்கிறார். அண்ணாவை எதிர்ப்பவன் கூட அவர் கலந்திருக்கும் தமிழில்தான் பேசுகிறான். எழுதுகிறான். அவர் தமிழையே மாற்றும் வகையில் எழுதியிருந்தாலும அவர் கல்கியைப் போல், புதுமைப்பித்தனைப் போல் எழுத்தாளர் என்று பெயர் வாங்க எழுதவில்லை. மக்களை வழி நடத்த கருத்துக்களை வெளியிடவே எழுதினார். அவ்வெழுத்துக்கள் இலக்கியமாய் மலர்ந்தன. மகாத்மா காந்தி எழுதியதைப்போல். அண்ணா மேடையில் ஏறி நடிக்கவும் செய்தார். நடிகனாவதற்கா? இல்லை, மக்களுக்கு அறிவு புகட்ட.
அண்ணா ஒரு முழுமையான ஜனநாகயவாதி. ஜனநாயகத் தத்துவத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஜனநாயகம் என்பது வெறும் ஆட்சிமுறை மட்டுமன்று, அது ஒரு வாழ்கை நெறி என்று மக்களுக்கு அறிவுறுத்தினார். அது ஒப்புக்கு சொல்லப்பட்டது இல்லை. அவரே அதை வாழ்நெறியாகக் கடைபிடித்து ஒழுகினார். தான் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு ஜனநாயக அமைப்பாகவே உருவாக்கினார். இந்த ஜனநாயக உணர்வே அவரைப் பெயரியாரைவிட்டு பிரிய காரணமானது. பெரியாருடைய கட்சியில் ஜனநாயகம் கிடையாது. பெரியார் வாழ்நாள் தலைவர். அங்கு தேர்தல் கிடையாது. ஆனால் அண்ணா உண்டாக்கிய தி.மு.க.வில் பொதுச்செயலாளரும் மற்றவர்களும் கழக உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு யாராவது ஒருவர் தன்னுடையது என்று உரிமை கொண்டாட முடியும் என்றால் அது அண்ணாதான். தி.மு.க. அண்ணாவின் சிந்தையில் தோன்றி உருப்பெற்றது. அவருடைய அறிவால், ஆற்றலால், உழைப்பால், தியாகத்தால் வளர்ந்த இயக்கம். ஆயினும் அதைத் தன்னுடைய கட்சி என்று அண்ணா சொன்னதில்லை. கழத்தோழர்கள் அனைவருக்கும் அது உரிமையுடையது என்றே அவர் கூறினார்; தோழரகளை அவ்வாறு எண்ணப் பழக்கினார். கழகத் தோழர்களை ஜனநாயக நெறி முறைகளுக்குப் பயிற்றுவித்தார். ஒவ்வொரு கழகத் தோழனும் கட்சி வளர்ச்சியில் பங்குபெறவேண்டும் என அவர் விரும்பினார். தன்னுடைய வாழ்நாளிலேயே தன்னால் உருவாக்கப்பட்ட நாவலர் நெடுஞ்ழியனை கழகத்தின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கச் செய்தார். திருச்சியில் நடந்த இரண்டாவது மாநில மாநாட்டுக்கு அவரைத் தலைமையேற்கச் செய்து வரவேற்புரை கூறும் முகத்தான் அவர் பேசிய பேச்சு வரலாற்றுச் சிறப்புடையது. அவருடைய வரவேற்புரை இதுதான்.
தம்பி வா! தலைமை தாங்க வா. ஆணையிடு, உன் வழி நடக்கிறோம் இது வெறும் பேச்சு அன்று. அண்ணாவின் ஜனநாயகப் பண்பை வெளிக்காட்டும் பேருரை. அவரைத் தனக்கும் தலைவராக ஏற்றார். அவருடைய ஆணைக்கு மற்ற கழத்தோழர்கள் போலவே தானும் கட்டுப்படுவதாக அறிவிக்கிறார். தன்னை மற்ற கழத் தோழர்களுக்கு மேலாகக் காட்டாது சமமாகவே காட்டுகிறார். இதுவன்றோ உண்மையான ஜனநாயகம்! இப்படி ஒரு தலைவரை இன்று காட்ட இயலுமா? கழகப் பொதுக்குழுவைக் கூட்டி கருத்துக் கேட்காமல் அண்ணா தானாக தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொண்டதில்லை.
ஜனநாயகப் பண்பின் ஒரு முக்கியமான கூறு அருத்தவர்கள் கூறும் கருத்துக்களை மதித்துக் கேட்பது, எல்லாம் எனக்குத் தெரியும் என்பது எதேச்சாதிகாரப் போக்கு. மற்றவர்களுக்கும் அறிவு உண்டு என்று நம்பவேண்டும். இந்த ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தவே அண்ணா சொன்னார் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று. அது வெறும் அலங்கார வசனம் இல்லை. ஆழ்ந்த ஜனநாயக உணர்வின் வெளிப்பாடு. இந்த ஜனநாயகப் பண்பை நடைமுறையில் கடைப்பிடித்தார் என்பதை அவர் முதல்வராக இருந்தபோது அவருடன் தோடர்பு கொண்ட அனைத்துக் கட்சியினரும் நான்றாக அறிவர்.
அண்ணாவின் அனைத்துச் செயல்களுக்கும் அடிப்படையாக அவருடைய அன்புள்ளமும் மனிதாபிமானமும் இருந்தன. ஒரு முறை டி.கே.சீனிவாசன் பேசும்போது குறிப்பிட்டார். அண்ணா பிரச்சனைகளை அறிவுடன் பார்த்தார். மனிதர்களை அன்புடன் பார்த்தார் என்று அண்ணாவே ஒரு முறை கூறினார் அரசியலில் பாசத்துக்கு இடமில்லை என்று கூறுகின்றனர். அது சரியோ தவறோ எனக்குத் தெரியாது. ஆனால் என்னால் எந்தப் பிரச்சனையையும் மனிதத்தன்மை கலவாமல் பார்க்க முடியவில்லை என்று. அந்த ஆழ்ந்த மனிதாபிமானம் அவர் முதல்வராக இருந்து எடுத்த ஒவ்வொரு நடவடிக்கையிலும் வெளிப்பட்டதை எல்லோரும் அறிவர். அதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு மாணவர் போராட்டத்தில் ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட நடவடிக்கை. வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களைச் சுடுவதற்கு அண்ணா அனுமதிக்கவில்லை. அதுபற்றி சட்டமன்றத்தில் கேள்வி எழுந்தபோது அண்ணா சொன்னார். ரயில் பெட்டிகள் எரிந்தால் மீண்டும் செய்துகொள்ளலாம். மாணவன் உயிர் போனால் வருமா? என்று. இன்னொரு செய்தியும் அவருடைய அருள் உள்ளத்தை, மனிதாபிமானத்தைக் காட்டும். 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரிந்தது. அப்போதைய காங்கிரசு அரசாங்கம் இராணுவத்தை வைத்து போராட்டத்தை அடக்கும் நடவடிக்கை எடுத்தது. கோவையில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதைக் கண்டித்து இராஜாஜி போன்ற தலைவர்கள் அறிக்கை வெளியின்னர். அண்ணா எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. டி.கே.சீனிவாசன் அண்ணாவிடம் சென்று ஆளில்லாத தலைவரெல்லாம் அறிக்கை வெளியிடுகிறார்கள். நீங்கள் ஏன் கண்டன அறிக்கை வெளியிடவில்லை? என்று கோபமாக கேட்டார். அதற்கு அண்ணா சொன்னார் இவ்வாறு, கோவையில் சுடுவது இராணுவம். அவர்கள் சுடுவது நிற்கவேண்டும். நான் கண்டன அறிக்கை வெளியிட்டால் உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகரிக்கும்; சுடுவதும் தொடரும். மக்கள் சாவார்கள். என்னால் பிணங்களை வைத்து அரசியல் நடத்த முடியாது. முதலில் மக்கள் சாவது நிற்கவேண்டும். அரசியல் லாபம் பெரிதல்ல, மக்கள் நலனே முதன்மையானது என்பது அண்ணாவின் அணுகுமுறை.
இந்த மனிதநேய உணர்வு அண்ணாவின் அரசியல் நடவடிக்கைகள் அனைத்திலும் அறாமல் இழையோடியதை கூர்ந்து நோக்கியவர்களுக்குத் தெளிவாக விளங்கியிருக்கும். இந்த மனித நேயம் அவருடைய கட்சிக் கட்டுமானத்திலும் துலங்கியதைக் காணலாம். எல்லோரும் ஒரு கட்சியை உருவாக்கியபோது தலைவர், தொண்டர்கள், உறுப்பினர்கள் என்ற புற உறவுகளையே ஏற்படுத்தினர். ஆனால் அண்ணா மட்டுமே கழகத்தைக் குடும்பமாக பாசப்பிணைப்புடையதாக உருவாக்கினார். அவர் வெறம் அரசியல் கட்சித் தலைவராக இல்லாமல் குடும்பத் தலைராகத் திகழ்ந்தார்; கழகத் தோழர்களின் அண்ணனாகவே வாழ்ந்தார். இந்தப் பாசக் கதகதப்பை அண்ணா காலத்தில் வாழ்ந்த அனைத்துக் கழகத் தோழர்களும் தங்கள் அனுபவத்தில் உணர்ந்திருந்தனர். இந்தப் பாச உணர்ச்சி அண்ணாவின் பலமும் பலவீனமும். இந்தக் குடும்ப உறபு வேறு எந்தக் கட்சியிலும் காணமுடியாத ஒன்று.
அண்ணா மாளிகையில் இருந்த அரசியலை மண் குடிசைகளுக்கு கொண்டுவந்தார். மிக மிகச் சாமானிய மனிதர்களைக் கொண்டுதான் தன்னுடைய வலிமையான கட்சியைக் கட்டினார். சாமானிய மனிதர்களைத் தலைவர்களாக உறுவாக்கினார். தன்னுடைய அறிவாலும் அன்பாலும் சாதாரண மனிதர்களை சாதனையாளர்களாக மாற்றினார். இந்த ரசவாதத்தை அவர் நிகழ்த்தினார் என்பதை திருமதி சத்தியவாணிமுத்து அண்ணாவின் மாறைவுக்குப் பின்னர் திருச்சியில் கூடிய மாநில சுயாட்சி மாநாட்டில் இவ்வாறு கூறினார். தெருவோரத்தில் கூழாங்கற்களாக கிடந்த எங்களையெல்லாம் அண்ணா பட்டைதீட்டி வைரங்களாக ஜொலிக்கவைத்தார் என்று. இந்தக் கூற்று முழு உண்மை. அண்ணா எந்தப் பணக்காரனுக்கும் அடிமையாகவில்லை. பணக்காரன் கையிலிருக்கும் பணம் குஷ்டரோகியின் கையில் இருக்கும் வெண்ணைக்கு சமம் என்றார். இது அலங்கார மயக்கு வாரசகம் அன்று; அவருடைய அழுத்தமான கொள்கை வெளியீடு. அவர் இருந்தவரை கழகத்துக்கென்று எந்தப் பணக்காரனிடமிருந்து பெருந்தொயைக நன்கொடை பெற்றதில்லை. ஏழைகளின் பணத்தில்தான், ஏழை எளியவர்களின் முயற்கியில்தான் கழகம் வளர்ந்தது. 1967 தேர்தல் நிதியாக கழகம் திரட்டியது வெறும் 11 லட்சம்தான். அப்போது எம்.ஜி.ஆர் கொடுத்த 2 லட்ச ரூபாயை அண்ணா வாங்க மறுத்துவிட்டார். காரணம் எந்தத் தனிமனிதனுக்கும் கழகம் அடிமையாகக் கூடாது என்னும் கொள்கைதான். ஏழையாகப் பிறந்த அண்ணா பணக்காரனாகாமலேயே மறைந்தார்.
இன்னும் ஆயிரம் செய்திகள் சொல்லவேண்டியுள்ளன. இது ஒரு அறிமுகம்தான் இறுதியாக ஒரு தலைசிறந்த பண்பைக் கூறி இக்கட்டுரையை முடிக்கலாம். அது அண்ணாவின் எளிமை. முதலமைச்சரான பின்பும் அவருடைய எளிமை மாறவில்லை. எந்த ஆடம்பரத்தையும் அவர் மேற்கொண்டதில்லை. புற்றுநோய்க்கு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பியபோது மருத்துவர்கள் அவரைக் குளிரூட்டப்பட்ட அறையிலேதான் இருக்கவேண்டும், குளிரூட்டப்பட்ட ஊர்திகளில்தான் பயணம் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தினர். இல்லையேல் அவர் ஆயுள் நீடிக்காது என்றனர். அதற்காக தனியாக குளிரூட்டப்பட்ட வீடு ஒன்றை அரசாங்கம் ஏற்பாடு செய்தது. ஆனால் அவற்றை ஏற்காது பழைய வீட்டிலேயே இருந்தார். தனக்காக மக்களின் வரிப்பனம் செலவாவதை அவர் விரும்பவில்லை. விளைவு அவர் விரைவில் மாண்டார். அவருடைய சாதனைகளுக்கு அவர் பணபலம், மதபலம், ஜாதிபலம், அந்தஸ்துபலம் எதையும் பயன்படுத்தவில்லை. அவருடைய சாதனைக்குப் பயன்பட்டவை அவருடைய அறிவு, உண்மையான அன்பு, அயரா உழைப்பு ஆகியவைதாம். அவருடய அறிவு வறண்ட அன்று அருளில் குழைந்த அறிவு. அந்த மகா அண்ணாவின் நூற்றாண்டிலாவது அவரைச் சரியாக அறிவோம். அவர் வழி நடப்போம்.

வாழ்க அண்ணா!

வீ.சு.இராமலிங்கம்
வழக்குரைஞர்
தஞ்சாவூர்.
08.09.2008

Series Navigation

வீ.சு.இராமலிங்கம்

வீ.சு.இராமலிங்கம்