ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

ஆல்பர்ட் பெர்னாண்டோ


அடையார் என்றதுமே எல்லோருக்கும் நினைவில் வருவது அந்த அதிசய லமரம்தான்.

னால் கிரிக்கு மட்டும் அடையார் ‘போட் கிளப் ‘பை ஒட்டி ஆரவாரமின்றி, அமைதியே

உருவான அந்த நூலகம்தான். அவன் வசிக்கும் பெசண்ட் நகர் பகுதி நூலகத்தைவிட

இந்த நூலகம்தான் கிரிக்குப் பிடித்துப் போயிருந்தது. விடுமுறை என அவன்

வீட்டுக்கு வந்தால் தவறாமல் ஆஜராகி விடுவான்.

‘கவிதைக் களஞ்சியம் ‘ என்று எழுதப்பட்டிருந்த பகுதியில் அவன் கண்கள்

சுழன்று கொண்டிருந்தது. பாக்கெட்

நாவல் சைஸிலிருந்த ஒரு புத்தகத்தை உருவி எடுத்தான். நார்வே நாட்டுக்

கவிஞனின் ‘ ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து… ‘ என்கிற கவிதைத் தொகுப்பு

அது. புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஜன்னலோரமாகப் போய் உட்கார்ந்து

கொண்டான். ஜன்னலுக்கு வெளியே பார்த்தான். நூலகத்தின் பின் பகுதி,

அடையார் ஆற்றின்

பக்கம் நீண்டு கிடந்தது. உச்சி வெய்யிலிலும் அடர்ந்து கிடந்த

வேப்பமரங்களாலோ என்னவோ மனதுக்கு இதமான தென்றல் காற்று சீராக வந்து ஒரு

புத்துணர்வை விசிறியது. வசதியாக சாய்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டத்

துவங்கினான்.

‘சொர்க்கம் பார்த்தேன்.

உன் கண்களில்….

சொக்கிப் போய்விட்டேன்! நான்

கண்டு பிடித்த உலகம் நீ !

மாண்டு போகாத அன்பு – என்னுள்

பொங்கிப் பிரவகிக்கிறது. உன்

விழியில் நிறைந்து

வழியும் அன்பு என்

இருதயத்தை நிறைத்திருக்கின்றது ! ‘ – வாசித்த வரிகள் அவனுக்குள்

சுகமாக நாற்காலி போட்டு ஜம்மென்று உட்கார்ந்து கொண்டது. சட்டென்று மன

வலிகள் மறைந்து இதயம் இலவம் பஞ்சாய் மாறி உயர, உயர பறப்பது போன்றதோர்

மென் சுகம். அடுத்தடுத்த பக்கங்களை அவன் மனம் உள்வாங்கிக் கொண்டிருந்தது.

அனிச்சையா அவன் விரல் அடுத்த பக்கத்தை வருடிப் புரட்டியபோது,

வில்லிலிருந்து வெளிக்கிளம்பிய அம்பு போல

சர்ரென்று சறுக்கிக் கீழே விழுந்தது ஓர் துண்டுக் காகிதம். கிரி, அதைக்

குனிந்து எடுத்தான்.

நம்மை வினோதமாகப்

பார்க்கிறவர்களைப் பற்றி

நான் கவலைப் படவில்லை – உன்

கையை என் கையோடு கோர்த்து

நட; திரும்பிப் பாராமல் நட; உலகமே

நம் பின்னால் திரண்டு வருகிறது! – அந்தத் துண்டுத் தாளில் முத்து,

முத்தான கையெழுத்தில் இந்த வரிகள். வரிகளுக்குக் கீழே இடது ஓரத்தில்

‘ரோஸி ‘- எம்.எஸ்.14. என்றிருந்தது. இந்தக் கையெழுத்தைப் பிரசவித்த

கையை எடுத்து என் கையில் கோர்த்துக் கொண்டால்… நினைவுகள் இனிப்பாக

நரம்புகளில் ஊர்வலமாக ஊர்ந்து

இனம் புரியாத கிளர்ச்சியில்… ‘ கிரியின் உடம்பு சிலிர்த்துக்கொண்டது.

புத்தகத்தில் அவன் பார்வை மீண்டும்

விழ… அட துண்டுக் காகிதத்திலிருந்த அதே வரிகள்… மீண்டும் வாசித்தான்

கிரி. அதற்கு மேல் அவனுக்குப் பொறுமை இல்லை.

ரோஸியின் முகவரியை நூலகத்தில் பெறுவதில் அவனுக்கு எந்தச் சிரமும்

இருக்கவில்லை. அந்தப் புத்தகத்தையும்

பதிவு செய்து வாங்கிக் கொண்டு கிளம்பினான். வீட்டுக்கு வந்ததும் கடிதம்

எழுத ரம்பித்தான். வேறு யாருக்கு ?

உருவத்தைப் பார்க்காது எழுத்துக்களை மட்டுமே தரிசித்து, நூலகத்தில்

கருக்கொண்டு மனதில் வரித்துக்கொண்ட

வசீகரிக்குத்தான்.

வார்த்தைகளை நாகரீகமாகக் கையாண்டு, வாக்கியங்களில் ஒருவித வரையறைக்

கட்டுப்பாட்டோடு, அவள்

எழுத்துக்களில் மிளிர்ந்த கவிதை வரிகளில் இவன் மனம் கோர்த்துக் கொண்டதை

நயமாக வெளிப்படுத்தியிருந்தான்.

முகவரியை எழுதி அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு வந்தபோது அவனுக்கு

வந்திருந்தது ஒரு அவசர ஓலை

தந்திவடிவில். இலங்கைக்குச் செல்லும் விமானப்படையின் ஒரு பிரிவுக்கு அவன்

பொறுப்பேற்று இன்று இரவே

புறப்படவேண்டும், என்றது அந்தச் செய்தி. படித்துக் கொண்டிருந்தபோதே

தொலைபேசி சிணுங்கியது. மேஜர்.

சுரீந்தர் கோஷ் தான் பேசினார். விமானப் படையின் ஒய் பிரிவிற்கு

தலைமைதாங்கி வழி நடத்துவது பற்றி தெரிவித்து விட்டு தாம்பரம் விமானப்படை

விமான தளத்திற்கு இரவு ஏழு மணிக்கு வந்துவிடவேண்டுமென்றும் இரகசியக்

குழுக் கூட்டத்திற்குப் பிறகு ஒன்பது மணிக்கு கிளம்பவேண்டும் என்றவர்

தமது வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.

ஐந்து மணித்துளிக்கெல்லாம் விமானப்படையின் வாகனம் வீட்டுக்கு

வந்துவிட்டது. எப்போதும் தயார் நிலையில்

இருக்கும் ஒரு சூட்கேஸ், இன்னொரு தோல்பை, படுக்கை, மறவாமல் கவிதைப்

புத்தகத்தினைத் தோல் பைக்குள்

பத்திரப்படுத்திக்கொண்டான். அவ்வளவுதான். கிரி கிளம்பிவிட்டான். வாகன

ஓட்டியை அடையார் அஞ்சல் நிலையத்தின் ஓர் ஓரமாய் நிறுத்தச் சொல்லிவிட்டு ‘

ரோஸி ‘க்கு இன்னொரு கவரை அஞ்சல் பெட்டியில் சேர்த்தான்.

தீபாவளி நேரத்துப் பட்டாசு வெடிப்பதுபோல துப்பாக்கிக் குண்டுகளின்

அலறல்; வழி தவறி மேகம் தரையிறங்கி

விட்டதோ என்பது போன்ற புகை மூட்டம்; அப்போது தொலைவில் விமானம் ஒன்று

தீப்பந்தாக வெடித்துச் சிதறியது. இத்யாதிகளுடனான சூழலில் யாழ் நகருக்கு

அறுபது கல் தொலைவில் இருந்த முகாமில் இறங்க இடம் பார்த்து இவனது விமானம்

வட்டமடித்துக்கொண்டிருந்தது.

உயிருக்கு உத்திரவாதமில்லாத இடம். முப்பது சிப்பாய்கள் சென்ற டிரக் ஒன்று

கண்ணி வெடியில் மாட்டி இரண்டு

பேர்களை மட்டுமே இரத்தமும் சதையுமாக கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

முகாம் முழுக்க பரபரப்பு;

முகங்கள் இருகி, சிரிப்பிழந்து சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகளாக இயங்கிக்

கொண்டிருந்ததை அவனால்

பார்க்க முடிந்தது.

ஸ்லோ மோசனில் நாட்கள் நகர்ந்ததாக கிரி எண்ணியது ரோஸியிடமிருந்து கடிதம்

வரும் வரைதான்.

பலாலி விமானதளத்தருகேயுள்ள முகாமில் நள்ளிரவில் மின் விளக்குகள்

மின்சாரத்தை விவாகரத்து செய்த இருட்டில் கிரி, மெழுகுவர்த்தி ஒளியில்

தூக்கம் தொலைத்திருந்தான். கைகளில் கற்றையாக கடிதங்கள். சென்னையிலிருந்து

வந்த இருபதாவது நாள் ரோஸியிடமிருந்து முதல் கடிதம் வந்தது.

‘ கவிதைகள் எழுத, படிக்கப் பிடிக்கும்; கவிதைகளை நேசிக்கத்

தெரிந்தவர்களையும் எனக்குப் பிடிக்கும். என்று

எழுதத் துவங்கியவள், பத்து நாளைக்கு ஒரு கடிதமாகி, இப்போது இரண்டு

நாளைக்கு ஒரு கடிதமாக எழுதி

அனுப்பிக்கொண்டிருக்கிறாள். கிரியும் அதற்கு ஈடாக

எழுதிக்கொண்டிருக்கிறான். இரவு பகலின்றி பறந்து, திரிந்து அலுத்துச்

சலித்து வருபவனுக்கு ரோஸியின் கடிதங்கள் களைப்பைப் போக்கி புத்துணர்வைப்

பூக்க வைக்கும்.

அவள் எழுதியிருந்தாள்:-

அன்பே!

புயல் சூறாவளி எதுவும்

நம்மைத் தடுக்க முடியாது – இந்த

உலகமே காதலர்களை உதறிவிட்டு,

ஓடினாலும் நாம் மட்டும் இருவர்,

ஒருவராக இணைந்திருப்பதை – எந்த

சக்தியாலும் தடுக்க

பிரிக்க முடியாது..! – ஒரு கணம் சிலிர்த்துக் கொண்டான், கிரி. காரணம்,

அன்று உச்சி வேளையில் நடந்த சம்பவமும் ரோஸியின் எந்தச் சக்தியாலும்

பிரிக்க முடியாது, என்ற வரிகளையும் நினைத்துதான் அந்தச் சிலிர்ப்பு

ஏற்பட்டது.

வவுனியாக் காடுகளின் அடர்ந்த பகுதியொன்றில் தற்காலிகமாக சிறு விமான தளம்

அமைப்பது தொடர்பாக மூன்று

டிரக்குகளில் சிப்பாய்களோடு கிரி சென்று கொண்டிருந்தான். வழியில்

பச்சிளம் பாலகர்களோடு தாய்மார்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்து நடந்து

கொண்டிருந்தனர். டிரக்கை நிறுத்தி விசாரித்தான். காட்டைக் கடந்து ஒரு

சிறு கிராமத்திற்குப் போய்க் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள்

தலைச் சுமையைவிட, கொடுமையான மனச்சுமையைச் சுமந்து, பசி பட்டினியோடு

பயணித்துக் கொண்டிருக்கிற அவர்களின் நரக வாழ்க்கையை எண்ணி

மனத்துயரப்பட்டான். தனக்குப் பின்னால் வந்த டிரக்கில் அவர்களை

ஏறிக்கொள்ளும்படி சொன்னன். 18 பெண்கள், 12குழந்தைகள். தங்களிடமிருந்த

பிஸ்கட், பழங்களை எல்லோர்க்கும் கொடுக்கச் செய்தான். எதைப் பற்றியும்

கவலையில்லாத சிறு பிள்ளைகளிடம் தமாஷாகப் பேசி சிரிக்க வைத்தான், கிரி.

அதில் ஒரு சிறுவனை, நீ பெரியவனாகிஎன்ன செய்யப் போகிறாய் ? என்று கேட்டான்.

‘ இந்த நாட்டுக்கு ஜனாதிபதியாகி, முதல்ல சண்டைய நிறுத்தி

அம்மா,அப்பாக்களோடு எல்லாரும் சந்தோஷமா

அவங்கவங்க வீட்டுல இருக்கச் செய்வேன். மிலிட்டிரியே வேணாம்னு

சொல்லிருவேன். புலியும் வேணாம், பூனையும் வேணாம் அப்டான்னு சொல்லீருவேன் ‘

என்றான்.

அந்தப் பிஞ்சு உள்ளம் கூட எந்த அளவு ரணமாகி இருக்கிறது என்பதனை எண்ணி

கண்களில் நீர் துளிர்க்க கட்டி அணைத்துக் கொண்டான் கிரி. அவர்களை வழியில்

அந்தக் கிராமத்தில் இறக்கிவிட்டுவிடும்படி சொல்லிவிட்டு, கை அசைத்து வழி

அனுப்பினான்.

அவர்களை அனுப்பிவிட்டு உடன் வந்த அந்தப் பகுதிப் பொறுப்பாளியான

கர்னல்.வீரசிங்க நாயகா விடம் வரைபடத்தைக் காட்டி எந்த இடத்தில்

இருக்கிறோம் என்று கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சில நிமிடங்களில் அந்தக்

கொடூரம் மிக மோசமாக நடந்தேறிவிட்டது.

தூரத்தில் காதைச் செவிடாக்கும் வெடியோசை. இது கண்ணி வெடியோசை

போலிருக்கிறதே என்று கிரியும் மற்றவர்களும் அங்கு விரைந்தனர். என்ன

கொடுமை ? சற்று முன் பேசிச் சென்றவர்கள் வெடித்துச் சிதறி வெந்து

கொண்டிருந்தார்கள். கவலையில்லாமல் சிரித்துப் பேசிய அந்தச்

சின்னஞ்சிறுசுகள் வெளிச்சப் பந்துகளாய்

வெந்துகருகிக் கொண்டிருந்ததைக் காணச் சகிக்காமல் மனதைக் கல்லாக்கி

ததும்பியெழும் கண்ணீரைக் கட்டுப்

படுத்தி மனசுக்குள் ‘ஓ ‘வென கதறியழுதது வேறு யாருக்கும் தெரியாது. அவர்களை

வழியில் பார்க்கவில்லை

யென்றால் இவனுமல்லவா எரிந்து கருகிக் கொண்டிருப்பான். நாளும் நடக்கும்

அவலங்கள் தான் என்றாலும்

யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாத பிஞ்சுகள் கண்ணெதிரே கருகியதை அவனால்

தாங்க முடியவில்லை.

கண்ணீர் வழிய ரோஸிக்கு இதை எழுதினான். இப்படி நாளும் நடக்கும்

சம்பவங்களை, அனுபவங்களை கடிதங்க

ளில் பகிர்ந்து கொள்வான்.

காலச் சக்கரம் சுழன்றதில் ஒரு வருடம் தாண்டிப்போயிருந்தது. அடுத்த மாதம்

14ம் தேதி இரவு சென்னை வருகிறேன். இரவு 9லிருந்து 9.30க்குள் உன்னை எங்கு

சந்திக்கலாம் ? இடத்தை எனக்குத் தெரிவி. அங்கு அந்த

நிமிடத்தில் உன் முன்பு நானிருப்பேன்.

ஓ! அனைத்திற்கும் அற்புதம் நீ!

வேறெந்த அற்புதமும் வேண்டாம் எனக்கு

இந்த உலகில் எல்லாமுமாக நான்,

விரும்புவது உன்னை மட்டும் தான்

என் தேவதை நீ! வேண்டும் நீ!

எனக்கு எப்போதும்…எப்போதும்… எப்போதும்… ‘ – உன் ப்ரியமுள்ள

வாலண்டைன் என்று எழுதினான். இந்தியப்படை சுமந்த தபால்களில் இவன் தபாலும்

பறந்துபோனது. போன வேகத்தில் பதிலும் பறந்து வந்தது.

‘ உங்களைப் பார்க்கவேண்டுமென்கிற தவிப்பு நாளும் அதிகரித்து வருகிறது.

னாலும் நாம் ஏன் சந்திக்கவேண்

டும் ? கடிதங்களில் சந்திப்பது மட்டுமே தொடர்ந்தால் போதாதா ? என்ற எண்ணமும்

எனக்குள் எழுகிறது. மடல்களில் நாம் பரிமாறிக்கொள்ளும் ஏராளமான எண்ணப்

பகிர்வுகளில் இல்லாத சந்தோஷம் நம் சந்திப்பில் ஏற்பட்டுவிடுமா என்ன ? நம்

சந்திப்புக்குப் பிறகும் இந்த சந்தோஷம் தொடருமா ? ஒரு வேளை தொடராது போனால்

இருக்கிற சந்தோஷத்தை விட்டுவிட்டு இல்லாத சந்தோஷத் தேடலில் நாம் இறங்க

வேண்டுமா ? நேற்றிரவு முழுக்கத் தூங்காமல் யோசித்தேன். பொழுதும்

புலர்ந்தது; முடிவும் முகிழ்த்தது. நாம் சந்திக்கிறோம். அண்ணா சாலை

ஸ்பென்ஸர் ப்ளாசாவில் மூன்றாம் தளத்தில் 3425வது எண் ஷாப்பிங் சென்ட்டர்

முன்பு இருப்பேன். மாம்… என்னை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பீர்கள் ?

என் புகைப்படத்தைக்கூடப் பார்த்ததில்லை. இந்த ரோஸியிடம் ஒரு

‘ரோஜா ‘இருக்கும். அன்று இரவு என்னோடுதான் சாப்பிடுகிறீர்கள்! – பாதி

பயமுறுத்தியும் மீதியை சந்தோஷத்திலும் முடித்து இருந்தாள் ரோஸி.

அன்று பலாலி விமான தளத்திலிருந்து சென்னைக்கு கிளம்பும் கிரி மனசு

முழுக்க மகிழ்ச்சித் துள்ளல்கள். இவன்

சாதனை என எதைஎதையோ பட்டியலிட்டு யார் யாரோ பாராட்டினார்கள்;

வாழ்த்தினார்கள். மாலைகள், நினைவுப் பரிசுகள் கொடுத்து யார் யாரோ

கைகுலுக்கினார்கள். முகம் சிரித்துக் கொண்டிருந்தது. மனம் மட்டும்

ஸ்பென்சர் ப்ளாசாவில் பறந்து திரிந்தது.

‘ என் மேனி சிலிர்க்க வைத்த அந்தக் கவிதை நல்லாள் எப்படி இருப்பாள் ?

கனவுக்கு உயிர் கொடுத்த காரிகையன்றோ! எடுத்த காரியம் யாவினும் வெற்றி

தேடிக் கொள்ளக் காரணமாயிருந்த அவள் பாரதி கண்ட புதுமைப் பெண்ணோ! என் கனவு

தேசங்களில் மட்டுமே கர்வமாக உலவியவள் இன்னும் சிறிது நேரத்தில் என்

முன்னே… ‘ அவன் மனம், அவன் செலுத்தும் விமானத்தைவிட வேகமாக ஸ்பென்சர்

பிளாசாவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

‘ஸ்பென்சர் பிளாசா ‘ – வேகமாக வெளியேறிக் கொண்டிருந்த ஜனத் திறளைக்

கடந்து, மேலேறும் தானியங்கிப்

படிகளில் நிற்கப் பொறுமையின்றி தாவி ஓடி மூன்றாம் தளம் வந்தான். கடை எண்

3415… 20… 24 … அவளா ?

வானத்துத் தேவதை வழிதவறி இங்கு இறங்கிவிட்டதா ? குஷ்பு,ரம்பா,சிம்ரன்

இவர்களெல்லாம் சேர்ந்த கலவையோ! என அவன் மூளைக்கணினி ப்ராஸஸ் செய்து

கொண்டிருந்தபோது ‘டமால் ‘ என அந்தத் திருப்பத்தில் வந்தவர் மீது இடித்து

ஸாரி சொல்லித் திரும்பிய வேளையில் அந்தத் தேவதையைக் காணோம். கடை எண் 3425

என்றிருந்ததைப் பார்த்த அந்த இடத்தில் கையில் ஒற்றைச் சிவப்பு ரோஜாவோடு

ஓர் வனிதை. அந்த வனிதைக்கு வயது அறுபதுக்கு குறையாமல் இருக்கும்.

சட்டென்று முகம் வாடிப் போனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாமல் மறைத்து

செயற்கைப் புன்னகையை படரவிட்டுக் கொண்டு,

‘ வணக்கம். நான்… கிரி… கிரிதரன், ‘ கைகூப்பினான். கைகோர்க்க வந்தவன்

கை கூப்பி நின்றான்.

‘ வணக்கம். வாங்க… நீங்க தான் கிரியா ? ‘

‘ மாம். வாங்க…. நாம போய் சாப்ட்டுக்கிட்டே பேசுவோமே… ‘ என்றான் கிரி.

‘ என்ன ? என்னெப் பாத்ததும் தெகச்சுப் போயிட்டாங்களா ?! ‘

‘ இல்லையே நா எதுக்கு தெகைக்கணும் ? நீங்க தான் எல்லாம்… ‘ அவன் முடிக்கவில்லை.

‘ மா. ரோஸிக்கு எல்லாம் நாந்தான். ரோஸியோட அத்தை. இப்பத்தான் ஹோட்டல்ல

டின்னர் ரெடியான்னு பாக்கப் போனாள் ‘ என்று மூதாட்டி சொன்ன போது ஒரு நூறு

மெர்குரி விளக்குகள் கிரியின் முகத்தில் பிரகாசிக்க ‘போகலாமே என்று கிரி

குனிந்து ரோஸியின் அத்தை வைத்திருந்த பையை எடுத்து நிமிர்ந்தான்.

அங்கே…அப்போது…

‘ நான் ரோஸி ‘ உதடு குவித்துச் சொல்லியதே கவிதை போலிருந்தது. கிரியை

நோக்கி கை நீட்டினாள்.

கை கோர்த்து நடந்தார்கள்.

‘ நம்மை வினோதமாகப்

பார்க்கிறவர்களைப் பற்றி

நான் கவலைப் படவில்லை – உன்

கையை என் கையோடு கோர்த்து

நட; திரும்பிப் பாராமல் நட; உலகமே

நம் பின்னால் திரண்டு வருகிறது! ‘ – ஸ்பென்சர் ப்ளாசா மூடுகிற

நேரமாகிவிட்டதால் உள்ளிருந்து திமுதிமுவென கூட்டம், கிரி-ரோஸிக்குப்

பின்னால் வந்து கொண்டிருந்தது.

—-

albertgi@gmail.com

Series Navigation

ஆல்பர்ட் பெர்னாண்டோ.

ஆல்பர்ட் பெர்னாண்டோ.