போதி நிலா

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

மாதவராஜ்


ஊரிலிருந்து இன்று அப்பா வந்திருக்காவிட்டல் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு ஆஷ்ட்ரேயில் சாம்பல் தட்டியபடிதான் சிகரெட் குடித்திருப்பேன். கதவைச் சாத்திவிட்டு இரண்டாவது தளத்தின் வராந்தாவில் நின்ற அந்த சமயம் பார்த்து எதிர்த்த போர்ஷன் அறுவை மனுஷன் அந்த ராமானுஜம், ‘வாங்க…கீழே போகலாம் ‘ என்று கூப்பிட்டுத் தொலைத்திருக்காவிட்டால் நிச்சயம் கீழேதான் போயிருப்பேன்.மூன்றாவது தளத்துக்கும் மேலே இருந்த இந்த மொட்டை மாடிக்கு வந்திருக்க மாட்டேன். இப்படி ஒரு அபூர்வகணம் ஏற்பட்டும் இருக்காது. அதற்கப்புறம் எனது மொத்த வாழ்க்கையிலுமே நிகழ்ந்திருக்குமா என்பது கூட சந்தேகம்தான்.

டியூப்லைட் பிரகாசத்திலிருந்து வந்ததால் மொட்டை மாடி இருட்டாய் இருந்தது. தலைமுடியெல்லாம் பறக்க நதியின் பிரவாகமாய் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. விரிந்து கிடந்த தனிமையின் மூச்சாய் மெல்லிய இரைச்சல் காதோரங்களில் கேட்க, கண்ணை மூடிக்கொண்டு அப்படியே கரைந்து போகலாம் போலிருந்தது. அடியெடுத்து வைக்காமல் ஒரே இடத்தில் நின்றேன்.

‘பழகுகிற வரைக்கும் எதுவும் இருட்டுதானப்பா ‘

தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கும்போது கரையிலிருந்து கத்துகிற குரல்கள் இப்படித்தான் கேட்கும். சுற்றியும் பார்த்தேன். யாரும் தெரியவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை உடைந்து சிதறிப் பொடிபொடியாகக் கிடந்த வெளிச்சங்களுக்கு ஊடே நகரம் பிரம்மாண்டமாய் உறைந்து போயிருந்தது. தீப்பெட்டி உரசலில் பற்றிய நெருப்பு சடசடத்து அடித்தது. சிகரெட் பற்றவைத்துக் கொண்டேன்.

அண்ணாந்து புகைவிட்டபோது வெளிறிய இருட்டு ஆகாயத்தில் அரைநிலா தனி ஒளித்துண்டாய் கண்ணை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த நகரத்தின் மேலேயும் நிலா இருக்கிறது என்பது ஒரு ஆச்சரிய உணர்வையே இப்போது எனக்குத் தந்தது. அதிசயம் போல பார்த்தேன். எல்லைகளற்ற பெருவெளியில் அசைவது தெரியாத நகர்தலோடு நிலா உயிர்ப்புடன் இருந்தது. இத்தனை நாளாய் இது எங்கே போயிற்று ?

‘நான் இங்கேதான் இருக்கிறேன். நீ எங்கே போனாயப்பா ? ‘

கொஞ்ச நேரத்துக்கு முன் கேட்ட அதே குரல்தான்! நிலாதான் பேசியதா ? இந்த விசித்திரத்தை என்னவென்று அறிவதற்குப் பதிலாக அடிபட்ட வலியில் கவனம் போனது. எல்.ஐ.சி ஏஜண்டாக வேலை தொடங்கி சென்னைக்கு வந்து பதினான்கு வருசங்கள் ஆகிறது ஏப்ரல் வந்தால். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதைத் தவிர வேறேதுவும் என்னிடம் இல்லாமலிருந்தது. காலில் சக்கரம் கொண்டு அலைந்தேன். அது ஒரு கொடூரமான தேடல். பூவாசம் கொண்ட சந்திரா அறுபது பவுன் நகையோடு வந்தாள். சுதிர், கவீஷ் என உயிர் ஊற்றுக்கள் கிடைத்தன. டெவலப்மெண்ட் ஆபிஸர் பிரமோஷன் கிடைத்தது. இந்த ஃபிளாட்டில் ஒரு போர்ஷன் கிடைத்தது. பையன்களுக்கு டான்பாஸ்கோவில் இடம் கிடைத்தது. இன்றைக்கு டி.வி, வாஷிங்மெஷின்,ஃப்ரிட்ஜ், ஹிரோஹோண்டா எல்லாம் நனவாகிவிட்டன. இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். அருமையான நிலாவைத்தான் பார்க்கவே முடியவில்லை. ஊரிலிருந்து முதன் முதலாய் புறப்பட்டு வந்த அன்றைக்கு டிரெய்னில் ஜன்னலோரத்தில் இரவு நெடுநேரம் கூடவே வந்து ஆறுதல் சொன்ன நிலாவைத்தான் கடைசியாகப் பார்த்த நினைவிருக்கிறது.

‘நான் என்ன பாலிஸியா எடுக்கப் போறேன்..நீ எதற்கப்பா என்னை பார்க்கப் போகிறாய் ? ‘

நேர்கொண்டு பார்க்க முடியாதபடிக்கு நிலவின் ஒளி கண்ணைக் கூசச் செய்தது. ஒரே மனித முகத்தை எத்தனை தடவை போய்ப் பார்த்திருக்கிறேன். புதுசாக வருகிற ஏஜண்டுகளிடம் நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் பெருமையோடு சொல்லிக்கொண்டு இருக்கிறேன். அவர்களும் அது மாதிரியே அலைந்து கொண்டிருக்கிறார்கள். கனவுகளிலும் கமிஷன் வரும்.

பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு தடவை தேவி தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது எனக்குள் ஓடிய நினைப்பை நிலாவிடம் சொல்லத்தான் வேண்டும். புழுக்கத்தில் துவண்டு ஈரம் உறிஞ்சப்பட்டவர்களாய் அந்த மனிதர்கள் பெருங்கூட்டமாய் நடந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் ஆளுக்கொரு பாலிஸி என்னிடம் எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும் என்றுதான் தோன்றியது.

கால்குலேட்டரில் பிரிமியத்தை, கமிஷனை, வீட்டுச்செலவை கணக்குப்பார்த்து, எண்களின் உருவமாய் மாறிவிட்டது போல இந்த நேரத்தில் தெரிகிறது. மூளையை விரல் நுனிக்கு இறக்கி வைத்து விட்டது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது. யாரோடு தொடர்பு வைத்தால் பிரயோஜனம் உண்டு என்று கணக்குப் பார்க்கச் சொல்லுகிறது வாழ்க்கை. மனித உறவுகள்கூட ஷேர்பிஸினஸ் போலாகிவிட்டது. அதுதான் இன்பம் சித்தியை அதற்கப்புறம் போய் பார்க்கவேயில்லை. ஊரில் பக்கத்து வீட்டில் இருந்தாள். கல்யாணமாகி கிருஷ்ணாம்பேட்டையில் இருந்தாள். ஒரே ஒரு தடவை போய் பார்த்தேன் . சமையலறையோடு சேர்ந்து அந்த இன்னொரு சின்ன ரூமில் மூன்று குழந்தைகளோடு குடும்பம் கசகசவென்றிருந்தது.

ஊரில் இருக்கும்போது அவளிடம் இருந்த பாசம் அப்படியே இருந்தது . பார்த்ததும், ‘ஏந்தங்கம்… ‘முகமெல்லாம் மலர்ந்து ஓடிவந்து கையை பிடித்துக் கொண்டாள். உடல் மட்டும் தேய்ந்திருந்தது. குழந்தைகள் நான் கொண்டு போயிருந்த பிஸ்கட் பாக்கெட்டையே பார்த்தபடி இருந்தன. இன்பம் சித்தி எங்கோ ஒடிப்போய் கலர் வாங்கி வந்தாள். ‘அம்மா.. எனக்கு.. ? ‘ ஒருவன் அழுதான். பாதியைக் கஷ்டப்பட்டு குடித்துவிட்டு பாட்டிலை அவனிடம் கொடுத்தேன். மற்ற இரண்டு குழந்தைகளும் அவனிடம் பாய்ந்து சென்று சண்டை போட்டன. சித்தி அதை கவனிக்காத மாதிரி என்னிடம் பழக்கம் விட்டுக் கொண்டிருந்தாள். அதன்பிறகு நான் அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்த்ததில்லை. உண்மையில் இதுவரை மறந்தே போயிருந்தேன்.

கொஞ்சம் கொஞ்சமாய் மொட்டைமாடி துலங்க ஆரம்பித்திருந்தது. சுற்றுப்புற சுவர்கள் பிடிபட இடம் விஸ்தாரமாக இருப்பதை உணர்ந்தேன். மெல்ல ஒரு பக்கம் நடந்து போய் கீழே பார்த்தேன். காற்றில் அசைந்தபடி இருந்த அசோகா மரங்களுக்கும், தென்னை மரங்களுக்கும் வெகு கீழே நியான் விளக்குகள் வெளிச்சத்தில் தெரு அமைதியாய் இருந்தது. இரண்டு பேர் சின்ன உருவங்களாக நடந்து போக ஸ்கூட்டர் ஒன்று புகை கக்கி அவர்களைக் கடந்து போனது.

என்றைக்கும் இல்லாத திருநாளாக இன்று ஒரு தனிமையும்,ஏகாந்தமும் கிடைத்திருப்பதாக உண்ர்ந்தேன். பைத்தியத்தில் இருந்து தெளிந்துவிட்ட மாதிரி நிதானம் வந்திருந்தது. கிராமத்து வீட்டின் முற்றத்து இரவுகள் பாலொளி வீசி வந்தன. அப்பா கொண்டு வராத ஊரின் வாசத்தை நிலா தருவித்திருந்தது. பொங்கல் சமயங்களில் மந்திரந்தாத்தா போட்டுத் தந்த வடத்தில் என்னை உட்கார வைத்து இன்பம் சித்தி ஆட்டினாள். புதுக்குளத்தின் நடுவில் அடர்ந்திருந்த சம்புகளில் தொங்கிகொண்டிருந்த தூக்கணாங்குருவிக் கூடுகளை பறித்து வந்தேன். தொலைதூரத்துக்கு அப்பால் போய்விட்ட ஊர் நிலாவுக்கு இந்த நேரத்திலுங்கூட தெரிந்தபடிதானே இருக்கும்.

நிலா சிரித்தது எனக்குப் புரிந்தது.

நிலாவுக்கு என்னைத் தெரியும். அப்பாவைத் தெரியும். தாத்தாவை தெரியும். தாத்தாவின் அப்பா, தாத்தாவின் தாத்தா என வழிவழியாய் எல்லோரையும் தெரியும். சரி. சுதிரையும், கவீஷையும் தெரியுமா ? நிலா எங்கே பார்த்திருக்கப் போகிறது. ஸ்கூல் விட்டால் வீடு. வீடு விட்டால் ஸ்கூல். வீட்டில் புஸ்த்தகம், நோட்டு. அப்புறம் டி.வி தான் உலகம். உலகம் வீட்டிற்குள்ளேயே சுருங்கிப் போயிருக்கிறது. இரண்டு வருசத்துக்கு முன்பு ஒரு தடவை இங்கு அம்மா வந்தபோது ரொம்ப வருத்தப்பட்டு விட்டாள். ‘சாயங்காலமானா புள்ளைங்க தெருவுல வெளையாடும் கண்டிருக்கு…இங்கே தெருவே மூளியாட்டம்லா இருக்கு.. ‘ சந்திராவோடு அப்போது நானும் சேர்ந்து அம்மாவைப் பார்த்து சிரித்திருக்கிறேன்.

நிலாவைப்பார்த்தால் குழந்தைகளுக்கு இப்போது என்ன தோன்றும் என்று தெரியவில்லை. எனக்கு பாட்டியின் ஞாபகம்தான் வரும். வெற்றிலை வாசமும் கதகதப்புமாக பாட்டியின் அரவணைப்பை உணர முடியும். நிலாவில்கூட ஒரு பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக்கொண்டு இருப்பதாய் கதை சொல்லியிருக்கிறாள். மகாபாரதம்,ராமாயணம் எல்லாம் சொல்வாள்.

தாத்தா வெளிளைக்காரர்களை எதிர்த்து ஊருக்குள் போராட்டம் பண்ணியதையும், பாளையங் கோட்டையிலிருந்து மலபார் போலீஸ் வந்து தேரிக்குள் வைத்து தாத்தாவை பிடித்துப் போனதையும் கதைகதையாய் சொல்வாள்.வெளிளிப்பூண் போட்ட தாத்தாவின் கைத்தடி இன்னமும் ஊரில் இருக்கிறது. இந்த குழந்தைகளுக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது. அப்பாவையே ஊரிலிருந்து வந்தபோது அடையாளம் தெரியாததாய் விழிக்கிறார்கள். நகரத்தின் சாயல் படிந்திருக்கும் இந்த வீட்டில் தன் கனவெல்லாம் நனவாகிப் போனதாய் அப்பா நிம்மதியாய் உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டு இருக்கிறார்தான். குழந்தைகள் அவரோடு ஒட்டிகொள்ளாமல் இருப்பதில் உள்ளுக்குள் வருத்தமிருக்கிறது. அடிக்கடி தூக்கிக் கொஞ்சி பார்க்கிறார். எப்போது இறக்கிவிடுவார் என்று குழந்தைகள் முகம் சுளிக்கிறார்கள். யாரோ ஒரு அன்னியர் வீட்டுக்குள் பிரவேசித்துவிட்ட மாதிரி சந்திராவிடமே ஒட்டிக்கொண்டு திரிகின்றன. அப்பாவை பார்க்க பாவம்போல் இருக்கிறது. ‘அடிக்கடி நானும் இங்க வர்றதிலயா.. ? ‘ என்னைப் பார்த்து சமாதனமாகிக் கொள்கிறார். கடைசியாக ஊருக்குப் போனது ஐந்து வருசத்துக்கு முன்னால். ஒரு நாள் இருப்பதற்குள்ளேயே சந்திரா முணுமுணுத்துவிட்டாள். பாத்ரூம் இல்லையென்று வருத்தப்படாள். குழந்தை எப்போதும் அழுது கொண்டே இருந்தது. புழுதி படிந்த சுதிரின் கால்களைப் பார்த்து ‘என்ன…ஊரோ..எழவோ.. ‘ என்றாள்.

சிகரெட் சுட்டது. கீழே போட்டு அணைத்தேன். ஒரு விசாகம் அன்றைக்கு ஊருக்கு வெளியே மணலில் உட்கார்ந்து சாலமன்தான் சிகரெட் பிடிக்கக் கற்றுக்கொடுத்தான். அப்போது பெளர்ணமி ஒளி நிறைந்திருந்தது.

தூரத்து ரோட்டில் திருச்செந்தூர் கோவிலுக்குப் போகிற வில்வண்டிகளின் மணிச்சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. நண்பர்களில் முதன்முதலாய் ஊரைவிட்டு வெளியேறியவன் சாலமன் தான். திருச்சியில் பேங்க் வேலை கிடைத்துப் போனான். உச்சிப் பிள்ளையார் கோவிலுக்கு அங்குள்ள நண்பர்களோடு போய்விட்டு ‘உயரே இருக்கும்போது எல்லாமும் அழகாக இருக்கிறது ‘ என்று கடிதம் எழுதியிருந்தான். எபனேசரைப் பற்றி அதில் கேட்டிருந்தான். காலேஜுக்குப் போகும்போது சாலமன் எபனேசரைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பான். ‘தேனினும் இனிய ஏசுவின் நாமம் திவ்ய மதுரமாமே ‘ பாடல் புல்புல்தாராவில் வாசிக்கும்போது அவன் காதல் வயப்பட்டிருப்பது கிறங்கிப்போகும் அவன் கண்களில் தெரியும். இப்போது சாலமன் எங்கேயிருப்பான் ? நிலாவைப் பார்த்தேன். பூமியின் மனசாட்சியாக அது நகர்ந்து கொண்டிருந்தது. வாழ்வின் மென்மையான பிரதேசங்களை கிளறிவிட்டுக் கொண்டு ஒளிவீசியது. அதையே பார்த்தபடி நின்றிருந்தேன். சந்திராவின் குரல் கீழே கேட்டது. நடந்தேன். படி இறங்குமுன் திரும்பவும் நிலாவை பார்த்தேன். ‘போய் வருகிறேன் ‘

ஹாலில் சுதிரும், கவிசும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒருவன் சன் டி.வி என்றான். இன்னொருவன் ஸ்டார் டி.வி என்றான். அப்பா சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். வருகிற பெளர்ணமியன்று மறக்காமல் எல்லோரையும் அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் போய் காற்றாட இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.

கட்டிலில் போய் படுத்துக்கொண்டு கைகள் இரண்டையும் தலைக்கு அரண் கொடுத்தவாறு மேலே வெறித்துக் கொண்டிருந்தேன். உள்ளே வந்த சந்திரா என்னை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ‘என்னங்க..எதையோ பறி கொடுத்தமாரி இருக்கீங்க.. ‘ என்றாள்.

***

jmr_111@yahoo.com

Series Navigation

மாதவராஜ்

மாதவராஜ்