பொறுப்பின்மையும் போதையும் (எனக்குப் பிடித்த கதைகள்-17 -பிரேம்சந்த்தின் ‘தோம்புத்துணி ‘)

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

பாவண்ணன்


பத்து வயதிருக்கும் போது நடந்த சம்பவம். அன்று நல்ல மழை. கேழ்வரகு மாவும் முருங்கைக் கீரையும் கலந்த அடையைச் சுட்டுத் தந்தாள் அம்மா. அப்பாவும் நானும் தம்பி தங்கைகளும் சாப்பிட்டோம். மழை நீர் விழும் இடங்களில் எல்லாம் பாத்திரத்தைச் சரியாக வைத்து விட்டு, ஈரம் படாத இடத்தில் சாக்குகளை முதலில் விரித்து அவற்றின் மீது பாய்களை விரித்துப் படுக்கத் தொடங்கிய நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. நான்தான் ஓடிப்போய்த் திறந்தேன் . எங்கள் தெருவிலேயே வசித்த சிவகாமியின் அப்பா நின்றிருந்தார். மழைக்கு அவர் கொண்டு வந்த தட்டி வாசலில் இருந்தது. நான் அவசரமாக அம்மாவையும் அப்பாவையும் அழைத்தேன்.

குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்றும் காய்ச்சல் அனலாகக் கொதிக்கிறது என்றும் சொல்லி, மருந்து வாங்கப் பணம் கடன் கேட்டார். தன்னிடம் பணமில்லை என்று அப்பாவும் அம்மாவும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர் தன் புலம்பலை நிறுத்தவில்லை. யாரும் எதிர்பாராத தருணத்தில் சட்டென்று காலில் விழுந்து விட்டார். அம்மாவுக்குப் பதற்றம் கூடிவிட்டது. ‘உன் வயசென்ன, அவரு வயசன்ன, இப்படி நேரம் கெட்ட நேரத்துல வந்து கால்ல விழற. மொதல்ல எழுந்திரு ‘ என்று அதட்டினாள் அம்மா. வேகமாக உள்ளே சென்று பானைக்குள் கையை விட்டு இரண்டு ரூபாயை எடுத்து வந்து ‘இந்தா விடிஞ்சதும் அரிசிக்காரம்மா கடன அடைக்கணும்ன்னு எடுத்து வச்சிருக்கேன். இத வேணுமின்னா எடுத்தும் போ. ஆனா நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள எனக்குத் திருப்பித் தந்துடணும் ‘ என்று நுாறுதரம் சொல்லிவிட்டுத் தந்தாள். பணத்தைப் பார்த்ததும் அவர் உடலில் சுறுசுறுப்பு கூடியது. ‘தந்துடறேன் தங்கச்சி, தந்துடறேன் தங்கச்சி ‘ என்று சொன்னபடி கைநீட்டி வாங்கிக் கொண்டார். மழையில் நனையாத வண்ணம் தட்டியை எடுத்துத் தலைக்கு மறைப்பாக வைத்துக் கொண்டு நகர்ந்தார். நாங்கள் மறுபடியும் உள்ளே வந்து படுத்துக் கொண்டோம்.

விடிகிற நேரத்தில் ஒரே அழுகைச் சத்தம். அந்தக் குழந்தை இறந்து விட்டிருந்தது. எல்லாரும் போய்ப் பார்த்து விட்டு வந்தார்கள். குழந்தையின் தாய் அழுவதற்கும் தெம்பில்லாமல் சோகமாக உட்கார்ந்திருந்தாள். மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தாள் அவருடைய மூத்த மகள் சிவகாமி. மருந்துக்கென்று கடன் வாங்கிச் சென்றவர் மருந்து வாங்கவில்லை என்றும் சாராயக்கடையில் குடித்து விட்டு நிதானமின்றி விழுந்து கிடந்ததாகவும் காலையில்தான் விஷயத்தைச் சொல்லி யாரோ கைத்தாங்கலாகக் கூப்பிட்டு வந்தார்கள் என்றும் பேசிக் கொண்டார்கள். குழந்தை இறந்த விஷயம் கூடத் தெரியாமல் போதை தெளியாமல் வாசலில் நிலைகுலைந்து சரிந்திருந்தார் சிவகாமியின் அப்பா. என்னால் அச்சித்திரத்தை மறக்கவே முடியவில்லை. மதுவைப் பார்க்கிற ஒவ்வொரு கணமும் அச்சித்திரம் ஒருகணம் மனத்தில் மின்னிமறையும். அந்தப் பொறுப்பின்மையையும் போதையையும் எண்ணும்தோறும் பிரேம்சந்த்தின் ஒரு கதையும் நினைவுக்கு வருவதுண்டு.

அக்கதையில் இடம்பெறுபவர்கள் ஒரு தந்தையும் மகனும். கையில் காலணா இருந்தாலும் வேலைக்குப் போதாக சோம்பேறிகள். ஏதாவது ஒரு வயலுக்குள் புகுந்து உருளைக்கிழங்கைத் திருடிச் சுட்டுத் தின்று வயிறு வளர்ப்பவர்கள். எப்படியாவது தகிடுதத்தம் செய்து பணம்புரட்டிக் குடித்துப் போதையில் புரள்பவர்கள். அந்த மகனையும் மணந்து கொள்கிறாள் ஓர் இளம்பெண். கட்டிக் கொண்ட பாவத்துக்காக, தானே உழைத்து அவர்களுக்குச் சோறு போடுகிறாள். வாழ்வில் எந்தக் கட்டத்திலும் அவர்களுக்குப் பொறுப்பு வரவே இல்லை. போதையும் இறங்கவே இல்லை. பிரசவ வலியில் ஒருநாள் இறந்து போகிறாள் அவள். அந்தத் துக்கம் கூட அவர்களுக்கு இல்லை. அவளுடைய அடக்கச் செலவுக்காக ஊரார்கள் கொடுத்த பணத்தைச் சாராயக்கடையிலும் உணவு விடுதிகளிலும் செலவு செய்து விடுகிறார்கள். இறந்தவள் மீது விரிக்க கோடித்துணி வாங்குவதெற்கென்று கெஞ்சிக் கைநீட்டிப் பெற்ற பணம் முழுக்கக் கரைந்து விடுகிறது. முதலில் விலையுயர்ந்த துணியை வாங்கலாம் என்று பேசிக் கொள்கிறார்கள். பிறகு செத்தவள் தன் மீது போர்த்தப்பட்டிருப்பது சாதாரண துணியா, விலையுயர்ந்த துணியா என்று கவனிக்கவா போகிறாள் என்று பேசிக் கொள்கிறார்கள். இப்படி பேசிக் கொண்டே கடைகடையாக ஏறி இறங்குகிறார்கள். கடைசியில் எதையும் வாங்கவில்லை. இருட்டிய பின்னர் துணியே போர்த்தாமல் எடுத்துச் சென்றால் போயிற்று என்று தம்மையே சமாதானம் செய்து கொள்கிறார்கள். சாவைக் காட்டி மறுபடியும் கேட்டால் பணம் தாராளமாகக் கிடைத்து விடும் என்றும் ஒரு திட்டம் ஓடுகிறது அவர்கள் மனத்துக்குள். துளியும் குற்ற உணர்ச்சி இல்லை. இறுதியில் கால்கள் தாமாகச் சாராயக் கடைக்குள் நுழைந்து விடுகின்றன. காலம் முழுக்க இவர்கள் வயிற்றை நிரப்பவென்று பாடுபட்ட பெண் குடிசையில் இறந்து கிடக்கிறாள். அவள் சாவையே மூலப்பொருளாக்கிப் பணம் திரட்டிய புருஷனும் மாமனாரும் சாராயக்கடையில் போதையில் கிடக்கிறார்கள்.

பிரேம்சந்த் இச்சித்திரத்தை இத்துடன் நிறுத்தி விடுகிறார். ஆனால் இக்கதை நமக்குள் ஆழமாக இறங்கி விடுகிறது. இதில் சுட்டிக் காட்டப்படுகிற பொறுப்பின்மை நமக்குள் ஆத்திரமூட்டுகிறது. கட்டிய மனைவியைப் பட்டினிபோடவும் மருந்தின்றிச் சாக விடவும் இந்த ஆண்களுக்கு உரிமை எங்கிருந்து கிடைத்தது ? கட்டியவளைப் பணயப் பொருளாக வைத்துச் சூதாடிய மகாபாரதக் காலத்திலிருந்தே பெண்ணைப் பற்றிய பார்வை இப்படித்தான் இருந்து வருகிறதா ? திருமணம் என்கிற ஒரு உறவின் வழியாகக் கிடைக்கும் உரிமைகளை இவர்களால் தந்திரமாகவும் சுயநலத்தோடும் பயன்படுத்திக் கொள்ள எப்படி மனம் வருகிறது ? இவள் விபச்சாரி என்று ஆத்திரத்தோடு ஒருத்தியன் மீது கல்லெறிந்தபடி துரத்தி வந்த கூட்டத்தைப் பற்றிய கதையைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல, இவன் பொறுப்பில்லாத சோம்பேறி, மனைவியின் சாவைக் காட்டி அடக்கத்துக்கு வாங்கிய பணத்தைக்கூடக் குடித்து விட்டுக் கூத்தடித்தவன் என்று கல்லெறிந்த கதை எங்காவது நடந்ததுண்டா ? ஏன் நடக்கவில்லை ? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி என்று ஏன் பிரித்து வகுக்கப்பட்டது ? இக்கதையின் ஞாபகம் எழும்போதெல்லாம் இந்தக் கேள்விகளும் மனத்தில் மூண்டு வாட்டும்.

உதவியின்றி, ஆதரவின்றி மாண்டு கிடக்கும் அப்பெண்ணைப் பாரதத் தாய்க்கு நிகரானவளாக நினைத்துக் கொள்ளும் போது கதையின் வலிமை மென்மேலும் கூடுவதாகத் தோன்றுகிறது. ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரதத் திருநாட்டைப் பற்றிய கவலையோ, அக்கறையோ, பொறுப்புணர்வோ சிறிதுமின்றி, சாதி,மதம்,இனம் என வெவ்வேறு போதைகளில் திளைத்துச் சோம்பலுடன் திரிந்த பாரதப் புதல்வர்களுடைய பொறுப்பின்மையின் சித்திரத்தை கதையின் முடிவில் நம் மனத்தில் தீட்டிப் பார்த்துக் கொள்ள முடியும்.

****

இந்தி இலக்கியத்தின் முக்கியமான எழுத்தாளர் பிரேம்சந்த். அவரை அறியாத தமிழ் வாசகர்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள். ஆனால் அவருடைய படைப்புகள் தமிழில் குறைவாகவே மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. எளிய மக்களின் மனஉலகும் அவலமும் இவரது படைப்புகளில் பதிவாகிற அதே நேரத்தில் கூர்மையான சமூக விமர்சனமாகவும் விளங்குகிறது. பிரேம்சந்த்தின் படைப்புத் திறனை எடுத்துக்காட்டும் வகையில் அவருடைய 13 கதைகளைக் கொண்ட மொழிபெயர்ப்புத் தொகுதியொன்றை (மொழிபெயர்ப்பாளர் : ரதுலன்) 1961 ஆம் ஆண்டில் தமிழ்ப்புத்தகாலயம் ‘ப்ரேம்சந்த் கதைகள் ‘ என்கிற தலைப்பில் வெளியிட்டது. ‘தோம்புத்துணி ‘ அத்தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

***

paavannan bhaskaran [mailto:paavannan@hotmail.com]

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்