பொய் சொன்ன ஹிர்ஸி அலி!

This entry is part [part not set] of 48 in the series 20060519_Issue

இப்னு பஷீர்



நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் அயான் ஹிர்ஸி அலி ஒரு பொய் சொன்னதால் தமது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டிருக்கிறது. சோமாலியாவின் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்தார். இஸ்லாத்தை தாக்கி இவர் எழுதியும் பேசியும் வந்ததால் மிக விரைவில் இவர் புகழ் அடைந்தார். நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். இவர் எழுதிய ஒரு கதையை படமாக எடுத்த இயக்குனர் தியோ வான்கோ கோபம் கொண்ட முஸ்லிம் ஒருவனால் கொல்லப்பட்டார். ஹிர்ஸி அலியின் ‘புகழ்’ மேலும் உலகெங்கும் பரவியது.
1992-ல் நெதர்லாந்தில் தஞ்சம் அடைவதற்காக ஹிர்ஸி அலி சமர்ப்பித்த விண்ணப்பத்தில் அவர் பொய்யான பெயர் மற்றும் தகவல்களை தந்திருந்தது சமீபத்தில் கண்டு பிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அவரது குடியுரிமை பறிக்கப் படலாம் என நெதர்லாந்தின் குடியுரிமை அமைச்சர் மறைமுகமாக தெரிவித்தார். தனது குட்டு வெளிப்பட்டதால் வேறு வழியில்லாமல் ஹிர்ஸி அலி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தார்.

தான் பொய் சொன்னதை ஒப்புக் கொண்ட ஹிர்ஸி அலி, தான் நெதர்லாந்தில் இருப்பதை தன் குடும்பத்தினர் கண்டுபிடித்து விடுவார்களோ என தாம் பயந்ததாலேயே அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார். (கொலை மிரட்டல்களுக்கெல்லாம் பயப்படாமல் இஸ்லாத்தைப் பற்றி விமரிசனம் செய்து வந்த ஹிர்ஸி அலியையே பயப்பட வைத்த அவரது குடும்பத்தினர் நிச்சயமாக பயங்கரமான ‘பயங்கரவாதி’களாகத்தான் இருக்க வேண்டும்!!)

ஹிர்ஸி அலிக்கு அடுத்த புகலிடம் தயாராகி விட்டது. ‘அ’வில் ஆரம்பித்து ‘கா’வில் முடியும் நாடு அவரை வரவேற்று, தங்க இடம் கொடுத்து ஒரு வேலையும் போட்டுக் கொடுக்க தயாராக உள்ளது. (சரியான நாட்டை கண்டு பிடிப்பவர்களுக்கு பரிசெல்லாம் கிடையாது!).

மேலே குறிப்பிட்ட அதே நாடுதான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாரிக் ரமதான் என்ற சுவிஸ் நாட்டு முஸ்லிம் அறிஞர் ஒருவரின் விசாவை கேன்சல் செய்து அவரை தன் நாட்டில் பணிபுரிய விடாமல் தடுத்தது. தாரிக் ரமதான் Times பத்திரிக்கையால் உலகின் 100 தலைசிறந்த விஞ்ஞானிகள் மற்றும் சிந்தனாவாதிகளுள் ஒருவர் என குறிப்பிடப்பட்டவர். அ….கா நாட்டு பல்கலைக்கழகம் ஒன்றின் அழைப்பை ஏற்று அங்கு பேராசிரியராக பணிபுரிய அவர் ஒப்புக் கொண்டபின் விசா வழங்கப்பட்டது. தாரிக் ரமதான் அ…கா நாட்டில் ஒரு வீட்டை வாங்கி, தனது நான்கு பிள்ளைகளுக்கு அங்கு பள்ளிகளில் இடம் பிடித்து, வீட்டிற்கு வேண்டிய பொருட்களை விமானமேற்றி அனுப்பி விட்டு தானும் கிளம்ப தயாரானபோது…. விசா கேன்சல் செய்யப்பட்டு விட்டது.

பொய் சொன்ன ஹிர்சி அலியை வரவேற்கும் நாடு, புகழ் பெற்ற அறிஞரான தாரிக் ரமதானை மறுக்க காரணம் என்ன? ஹிர்சி அலி போல அல்லாமல் ஒரு உண்மையான முஸ்லிமாக அவர் இருப்பதுதானோ!

ibnubasheer@gmail.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்