S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்
S.D. நெல்லை நெடுமாறன், அ. கணேசன்
அந்தக் காலத்தில் புஷ்பக விமானங்கள் இருந்தன என்ற தலைப்பில் கற்பக விநாயகத்தின் கருத்துகள் வெளிவந்துள்ளன. அதில் “பருத்தியின் விளைவால் நிகழ்ந்த சமூகவியல் அசைவையும் இவ்விடத்தே நினைவு கூறத்தான் வேண்டும்” என்று குறிப்பிடுகின்ற கற்பக விநாயகம், “பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதி வரையில் பொருளாதார, சமூக ரீதியிலாக கடும் ஒடுக்குமுறைக்கு ஆளான சாணார் சமூகம், பருத்தி வாணிபத்தில் இடைத் தரகர்களாகவும் சிறுவாணிபர்களாகவும் பரிணமித்து தன்னைப் பொருளாதார ரீதியாக உயர்த்திக்கொண்டது. பஞ்சங்களால் பாதிப்பு பெரிய அளவில் இச்சமூகத்துக்கு ஏற்படவில்லை. கடம்பூர், ஒட்டநத்தம், கோவில்பட்டி ஆகிய இடங்களில் பருத்தியை பஞ்சு, கொட்டை எனப் பிரித்தெடுக்கும் ஆலைகள் உருவாகிட இச்சமூகத்தினர் முன் நின்றனர். இவ்வாணிபர்களின் சுரண்டல் அதிகரித்ததும், சமூகத்தில் தன்னை விடத் தாழ்வான நிலையில் இருந்த ஒரு சமூகம் முன்னை விடப் பலமாய் எழுந்து நின்றதும், மறவர், வடுகர், வேளாளர் ஆகிய ஆதிக்க சாதியிடையே புகைச்சலை உண்டுபண்ணியது. அமெரிக்க உள்நாட்டுப் போர், பருத்திக்கு அமெரிக்காவில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கிடவே, திருநெல்வேலி மாவட்டப் பருத்தி ஏற்றுமதி வாணிபம் பெரிய அளவில் விருத்தி அடைந்தது. இவ்வியாபாரத்தில் வெள்ளையர்களுக்கு நிகரான லாபத்தை சாணார்கள் எனப்பட்ட நாடார்கள் ஈட்டி, மகமைப் பேட்டைகளையும் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கினர். அடுத்தபடியாக இச்சமூகம் கோவில்களில் நுழையவும், கோவில்களில் பார்ப்பனப் பூசாரிகளை நியமிக்கவும், தம்மை சத்திரியர் எனக்கூறிக் கொண்டு பூணூல் அணியவும் தொடங்கியது மறவர்களால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. இதன் விளைவாக உருவானதே கழுகுமலை, சிவகாசிக் கலகங்கள்.” – எனக் குறிப்பிடுகிறார்.
கற்பக விநாயகம் பயன்படுத்தியுள்ள இவ் வாசகங்களில் ஓட்டுமொத்த சான்றோர் சமூகத்தவரையும் “எரிகிற வீட்டில் பிடுங்கியவரை ஆதாயம்” என்ற மனப்பாங்குடைய கொள்ளைக்காரர்கள் போல சித்திரிக்கின்ற தொனி அடங்கியுள்ளது. அதற்குப் பின்னர் பதில் கூறுகிறோம். முதலில் அவர் கூறியுள்ள கருத்துகள் தொடர்பான எங்களது மறுப்பினைப் பின்வரும் ஆதாரங்களோடு பதிவு செய்ய விரும்புகிறோம்:
சான்றோர் சமூகத்தவருள் சில பிரிவினர் முழு அளவில் வாணிகத்தினை மேற்கொள்ளத் தொடங்கியது எந்த நூற்றாண்டில் என ஆராயும்போது, கி.பி. 11-12ஆம் நூற்றாண்டுகளிலிருந்தே இந்தப் போக்குக்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வணிகக் குழுக்களுக்குப் பாதுகாப்புப் படையினராகச் செயல்பட்ட வலங்கை உய்யக்கொண்டார் பிரிவுப் போர் வீரர்கள் மற்றும் முன்னூற்றுவர், எழுநூற்றுவர் என்று எண்ணிக்கை அடிப்படையில் பெயர் பெற்றிருந்த படைப்பிரிவினர் பற்றிக் கி.பி. 11ஆம் நூற்றாண்டிலிருந்தே கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் சோழராட்சி முழுமையாக வீழ்ச்சியடைந்து பாண்டியர் ஆட்சி, கர்நாடக ஹொய்சளர் மேலாதிக்கம் ஆகியவை ஏற்பட்ட போது, மேற்குறித்த படைப்பிரிவினருள் பலர் தமது வணிகத் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு தாமே வாணிகத்தில் இறங்கியிருக்க வேண்டும் என்று தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாகத் திருச்செந்தூர் அருகிலுள்ள அங்கமங்கலம் என்ற ஊர் அங்கைப் போர் எனப்படும் வர்மக் கலையும் களரிப் பயிற்சியும் கலந்த மிக உயரிய போர்க்கலையில் தேர்ச்சி பெற்ற அங்கக் காரர்கள் எனப்பட்ட சான்றோர் சமுக போர் வீரர்களுக்காக வழங்கப்பட்ட மானிய கிராமமாகும் (சதுர்வேதி மங்கலம் என்ற தொடர் பிராம்மணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட ஊர்களைக் குறித்தது போல, அங்கை மங்கலம் என்பது அங்கக்காரர்களுக்கு வழங்கப்பட்ட மானிய கிராமமாகும்). இவ்வூர் “அங்கைமங்கலமான வீரபாண்டியன் மடிகை மாநகரம்” எனக் கி.பி. 13ஆம் நூற்றாண்டையப் பாண்டிய மன்னர்கள் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது. மடிகை என்ற சொல் மளிகைப் பொருள்களைக் குறிக்கும். நகரம் என்ற சொல் வணிக முதன்மையுடைய ஊரைக் குறிக்கும் (நகரத்தார் என வணிகர்கள் அழைக்கப்படுவதை நினைவு கூர்க). அங்கமங்கலம் என்ற இவ்வூரில் புன்செய்ப் பயிர்களான நவதானியங்கள், புளி, கடற்கரையில் காய்ச்சப்பட்ட உப்பு, கருப்புக்கட்டி, வெற்றிலை போன்ற பல்வேறு பொருள்கள் சேமித்து வைக்கப்படும் காவலோடு கூடிய கிடங்குகள் இருந்தன என்பதை மடிகை மாநகரம் என்ற சொல்லாட்சியின் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம் (Angamangalam – Its historical perspective, S. Ramachandran, Studies in Indian Place Names Vol XVI, Published by the Place Names Society of India, Mysore, 1996). இவற்றுள் உப்பு குறித்த வரலாற்றுச் செய்தி நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். “உப்புக் கோச் செய்கை” என்ற தொடர் கல்வெட்டுகளில் இடம் பெறுவது வழக்கம். உப்பு என்பது முதன்மையான ஒரு பண்டமாகக் கருதப்பட்டதால் உப்பளத் தொழில் என்பது அரசரின் நேரடிக் கண்காணிப்பில் நிகழ்ந்த ஒரு தொழிலாக இருந்தது. எனவே, வீரபாண்டியன் மடிகை மாநகரத்தில் இருந்த வீரர்கள்/வணிகர்கள் பாண்டிய அரச குலத்துடன் ரத்த சம்மந்தமுடையவர்களே எனத் தெரிகிறது. (இப் பகுதியில் உப்பளத் தொழிலில் ஈடுபட்ட தொழிற் சாதியினர் பண்ணையார் என்றும் சித்திரவில்லி என்றும் அழைக்கப்பட்டனர்). அங்கை மங்கலத்தை ஒட்டி மூக்குப்பீறி என்று அழைக்கப்படும் ஓர் ஊர் உள்ளது. சடையவர்மன் சுந்தர பாண்டியனின் மனைவியர் பலருள் ஒரு பெண்மணியின் பெயர் தேசி முக்ய நாச்சியார் என்பதாகும். இது தேசி முக்க நாச்சியார் என்றும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசி முக்யர் அல்லது தேஷ்முக் என்ற பட்டப்பெயர் வணிக சமூகத்தவருக்கு உரியதாகும். தேசி முக்ய நாச்சியார் பேரேரி என்பதே மூக்குப்பீறி என்று திரிந்திருக்க வேண்டும். இதே போல், கச்சி நாச்சியார் என்ற அரசியின் பெயர்த் தொடர்பில் கச்சி நாச்சியார் விளை என்ற ஊர் (தற்போது கச்சினா விளை) இவ்வூரை அடுத்துள்ளது. இக் கட்டுரை ஆசிரியர்களுள் ஒருவரின் ஊரான நாலுமாவடி இவ்வூர்களை அடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்குறித்த மடிகைப் பொருள்களில் ஏற்றுமதிக்குரிய பணப்பயிரான பருத்தி இடம் பெற்றிருந்ததா என்பது நமக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இம்மாவட்டத்தின் பிற பகுதிகளிலுள்ள கல்வெட்டுகளில் கரிசல் நிலம் எனப் பொருள்படும் கருஞ்செய் நிலம் என்ற குறிப்பும், பஞ்சு பீலி என்ற வரி இனமும் குறிப்பிடப்படுவதிலிருந்து பருத்தி முக்கியமான ஒரு விளை பொருளாகவும், வணிகப் பொருளாகவும் இருந்துள்ளது எனத் தெரிகிறது. பஞ்சு பீலி என்ற தொடர்தான் Cotton Bale என ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டது. இந்த இடத்தில் நாம் விவாதிக்கின்ற தலைப்புப் பொருளிலிருந்து சற்று விலகி ஒரு குறளுக்கான பொழிப்புரை கூறும் முயற்சியில் இறங்குவது தவறாகாது என நினைக்கிறோம். “பீலி பெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” என்று திருக்குறளில் குறிப்பிடப்படும் பீலி பஞ்சு பீலி என்று பொருள் கொள்வதே பொருத்தமாகும் எனக் கருதுகிறோம். மயிற் பீலி (துகிம்) என்பதும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது என்றாலும், வண்டி வண்டியாகச் சுமையேற்றிச் சென்று விற்கக் கூடிய எடை குறைந்த பொருள் பஞ்சு பீலியாகவே இருக்க முடியும்.
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கரையார் அல்லது முக்குவர் எனப்பட்ட கடற்படை வீரர்களுக்கும், வணிகச் செட்டியார்களுக்கும் ஏற்பட்ட ஒரு பூசலின் போது வலங்கை உய்யக்கொண்டார் எனப்பட்ட சான்றோர் குல வீரர்கள் கரையார்களை வீழ்த்திச் செட்டியார்களைக் காத்தனர். செட்டியார்கள் இதற்கு நன்றியாகச் சான்றோர் குல வீரர்களைத் தம் தோளில் சுமந்து கெளரவித்தனர். ‘செட்டி தோளேறும் பெருமாள்’ என்று சான்றோர் குல வீரர்கள் பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சியை வர்ணிக்கின்ற 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை மாலை என்ற தலைப்பில் அமைந்த வில்லுப்பாட்டு இலக்கியம் கீழ்வருமாறு குறிப்பிடுகிறது:
வணிகர் மனைபுகுந்து வைத்த முதலுள்ளதெல்லாம்
அணியாக சென்று அருந்தி கரையான் வடிவாம்
பட்டு பருத்தி பசுமை முதலுள்ளதெல்லாம்
வெட்டிக் கரையான் வடிவாய் வீரத்திரம் பண்ணுகையில்
கண்டு வணிகர்களும் கலங்கி கிலேசமுத்து
தொண்டுசெய்து யாவரையும் தொளுது அடிபணிந்து
வந்த வகையின்று வகை வகையே தானுரைத்து
எந்தன் வினை தீர்ப்பார் யாவரோ வென்று சொல்லி
வாடி வணிகர் மனைதோறும் போயிருந்து
தேடி எழுநூத்துவரை சென்று கண்டு ஏதுரைப்பார்
தாருதனை வென்று தரணிதனிலீரேளும்
வாரிதனில் நீராடி வந்த குலச் சான்றோரே
பத்திரகாளி முலைப்பாலையுண்ட பாலகரே
வித்தியாதரன் யீன்ற வீரரே கேட்டருள்வீர்
தரைமீதிலெங்கள் சகல முதலுள்ளோரும்
கரையானருந்த கலங்கிகுடி யிளந்தோம்
போக வளிதேடி பொறி கலங்கி தட்டளிந்து
சாகமதியின்றி தலந்தோறும் போயிருந்தோம்
எங்கள் வினைதீர்த்து ரெட்சிக்க வல்லவராய்
உங்களுடை நாமம் ஒருநாளும் நாம்மறவோம்
என்றுயியல் வணிகர் எல்லோரும் செப்பியபின்
சென்று வலங்கையுள்ளோர் சிவன் கொடுத்த வித்தையினால்
கரையானை வெல்ல கெளதாரியாய் சமைந்து
அரையாமல் கொத்தி அருந்தி கரையான் குலத்தை
சேர்த்து துவைத்து திசை எட்டுந் தான் புகள
பாரில் வணிகருக்கு பசுமை விளங்க வைத்து
மண்டலத்தில் நன்றாய் வணிகர் கலி தீர்ந்து
பண்டுபோல் செல்வம் மிகு பாக்கியமுண்டான பின்பு
வாளும் புவியில் வணிகர் எழுநூத்துவரை
தோள்மேல் எடுத்து சுமந்தனர்காண் சோளன்முன்னே
வாளேறு மன்னா வாழ்த்தி குலசோள மன்னன்
தோளேறும் குமாரர் என்று தொல்புவியார் மெய்த்திடவே
(‘வலங்கை மாலை சான்றோர் குல விளக்கு’ மாநாடு சுந்தரம் புலவர் இயற்றியது. பதிப்பித்தவர்: ஆர். சாமி நாடார், பூவன்னூர், 1904)
வலங்கை மாலை என்ற இவ் வில்லுப்பாட்டில் குறிப்பிடப்படுகின்ற மேற்குறித்த செய்தி போன்ற பல வரலாற்றுச் செய்திகள் சான்றோர் குலச் செப்புப் பட்டயங்கள் பலவற்றிலும் குறிப்பிடப்படுகின்றன. இச் செப்புப் பட்டயங்கள் 16-17ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை அல்ல எனத் தொல்லியல் ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். கொங்கு நாட்டுத் திருமுருகன் பூண்டி மற்றும் கருமாபுரம் சான்றோர் மடச் செப்பேடுகள் மேனாள் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறைப் பேராசிரியர் செ. இராசு அவர்களால் ‘கொங்கு நாட்டுச் சமுதாய ஆவணங்கள்’ என்ற நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன. கொங்கு நாட்டு அவல்பூந்துறை சான்றோர் மடச் செப்பேடும், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சான்றோர் மடச் செப்பேடும், வலங்கை மாலையும் சான்றோர் சமூகச் செப்பேடுகளும் (ஆசிரியர்: எஸ். இராமச்சந்திரன், பதிப்பு: உலகத் தமிழாய்வு நிறுவனம், சென்னை) என்ற நூலில் பதிப்பிக்கப்பட்டுள்ளன.
பருத்தி வாணிபம் மட்டுமின்றிப் பருத்தி நெசவினை அறிமுகம் செய்தவர்களும் சான்றோர்களே எனக் கொள்வதற்கு ஆதாரங்கள் உள்ளன. கலிங்க நாட்டிலிருந்து விஜயன் தலைமையில் 700 வீரர்கள் இலங்கைக்குச் சென்று குடியேறி ஆட்சி புரிந்ததாக இலங்கை வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த விஜயனுடன் சென்ற எழுநூறு வீரர்களும் சான்றோர் குல வீரர்கள் என்றும் இவர்களுக்குச் சிங்க வீரர் மெய்த்துணைவர் எழுநூற்றுவர் என்று பெயரென்றும் சான்றோர் குலப் பட்டயங்கள் குறிப்பிடுகின்றன. இந்த எழுநூற்றுவர் தலைவன் குருபோளனி என்ற இயக்கர் குலப் பெண்ணைத் திருமணம் புரிந்ததாக வலங்கை மாலை குறிப்பிடுகிறது. குருபோளனி என்று வலங்கை மாலையில் குறிப்பிடப்படும் இயக்கர் குலப் பெண்ணின் பெயர் குவேணி என்று மஹாவம்சம் போன்ற சிங்கள வரலாற்று நூல்களில் குறிப்பிடப்படுகிறது. குவேணியே நெசவுக் கலையை அறிமுகப்படுத்தியதாகவும் பாரம்பரியக் கதைகள் உள்ளன. வலங்கை மாலையோ இந் நிகழ்வுகளையெல்லாம் ஒன்று கலந்து சிவனுக்குத் தூசு (ஆடை) நெய்து கொடுத்ததன் மூலம் தூசோர் என்று பட்டப்பெயர் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. தமது சிறுகுடியினர் எனப்படுகின்ற (சட்ட திட்டமான மண உறவு அல்லாத உறவில் பிறந்த) இளந்தாரி மக்களுக்கு ஈழவர் என்ற பட்டம் கொடுத்ததாகவும், நெசவுத் தொழிலை அவர்களுக்குரிய தொழிலாகச் சான்றோர்களே நிர்ணயம் செய்ததாகவும் வலங்கை மாலை குறிப்பிடுகிறது.
கி.பி. 18-19ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியரின் ஆவணங்களிலும், பின்னர் பிரிட்டிஷ் நிர்வாகத்தினரின் ஆவணங்களிலும் நெல்லைச் சீமையிலிருந்த மூன்று வகையான தறி நெசவு நிலையங்கள் குறிப்பிடப்படுகின்றன. செங்குந்தர் தறி, இஸ்லாமியர் தறி, சாணார் தறி என்பவையே அவை. இவற்றுள் சாணார் தறி என்பது சான்றோர் குலத்து நெசவாளர்களின் தொழிற்கூடங்களாக இருந்த தறி மையங்கள் அல்ல. சான்றோர்களின் சிறு குடியினராகிய இல்லத்துப் பிள்ளைமார் என்றும், நெசவுப் பணிக்கர் என்றும், சிறுகுடி வேளாளர் என்றும் அழைக்கப்படுகின்ற ஈழவர் குலத்தவரின் தறிகளே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன. ஈழவர்கள் நெய்து கொடுத்த ஆடையை உடுத்துக் கொண்டு ஊர்ப் பஞ்சாயத்தில் அமர்ந்து நீதி செய்த சான்றோர்களைக் குறித்து “ஈழவன் கொடுத்த முண்டுடுத்து நாட்டாமை செய்யறாரு நாடார்” என்று நெல்லை மாவட்டம் ஆலங்குளம் வட்டாரத்திலுள்ள கீழப்பாவூரில் நாட்டுப் பாடல் ஒன்று வழங்குகிறது.
18ஆம் நூற்றாண்டிலேயே சான்றோர்கள் பருத்தி மட்டுமின்றிப் புகையிலை போன்ற பணப் பயிர்களையும் விளைவித்து, வணிகம் செய்து வந்திருக்கிறார்கள் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. கி.பி. 1729ஆம் ஆண்டுக்குரிய இராமநாதபுரம் மாவட்டம் ஏறுவாடிக்கு அருகிலுள்ள வைகை சுப்பிரமணியர் கோயிலிலைச் சேர்ந்த செப்பேடு ஒன்று குமாரமுத்து ரகுநாத சேதுபதி காத்ததேவரால் வெளியிடப்பட்ட ஆவணமாகும். இப் பட்டயத்தில் வரி 48-39இல் தன்ம முக்குந்தர் புகையிலைத் தோட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. முக்குந்தர் அல்லது முக்கந்தர் என்பது சான்றோர் சமூகத்தவரில் ஒரு பிரிவினருக்குரிய சாதிப் பட்டமாகும். இதற்கான ஆதாரம் சான்றோர் சமூகச் செப்புப் பட்டயங்களில் உள்ளது. “மாவலி வாணண் ஆட்சிப் பகுதியான வைகைக் கரைப் பகுதியில் முகுந்துப் பட்டம் பெற்றவர்கள்” என்று சான்றோர் சமூகத்தவர்கள் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்பூவணம் அருகிலுள்ள மடப்புறத்தில் முக்கந்தமார்களுக்கு மட்டுமே பாத்தியப்பட்ட பத்ர காளியம்மன் கோயில் உள்ளது. இக் கோயில் மருது சகோதர்கள் வரலாற்றில் இடம் பெற்ற கோயிலாகும். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியையடுத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள ஓரியூர்ச்சீமையில் 18ஆம் நூற்றாண்டில் ஓரியூர், மங்கலக்குடி ஆரக்கோட்டைப் பகுதிகளில் பெருநிலக்கிழார்களான பிள்ளைமார், அம்பலக்காரர்களோடு நிலக்கிழார்-வணிகர்களாகச் சான்றார் குல முக்கந்தர்கள் இருந்தனர் என்பதைப் பொன்னெட்டிமாலைச் சக்கரைப் புலவர் பட்டயம் குறிப்பிடுகிறது. (‘நாட்டார் பட்டயம்’ – பா. சுப்பிரமணியன், சீ. இலட்சுமணன், ஆவணம் – இதழ் 2, ஏப்ரல் 1992, தமிழகத் தொல்லியல் கழக வெளியீடு.)
சான்றோர் குலத்தின் மகமைப் பேட்டைகளின் தோற்றம் என்பது இந்தப் பின்னணியில் பார்க்கப்பட வேண்டியதாகும். கி.பி. 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சியின் விளைவாகத் தமிழ் மூவேந்தர் ஆட்சியின் எச்சமாக ஊசலாடிக் கொண்டிருந்த பாண்டியர் ஆட்சியின் உயிரும் ஓய்ந்து போனதால் சான்றோர் சமூகத்தவர்கள் தமது அடையாளத்தை மீட்டெடுக்கின்ற முயற்சியாக முற்கால மடிகை மாநகரங்கள் போன்ற வணிகப் பேட்டைகள், வண்டிப் பேட்டைகள் அமைத்துப் பொதி மாட்டு வாணிகம் போன்ற சுதந்திரமான வணிக முயற்சிகளில் ஈடுபட்டுத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். இக் காலகட்டத்தில் வணிகம் மட்டுமின்றி, தொழிற் சாதியினராகிய பட்டடையார் எனப்பட்ட ஈழவர் (நெசவுப் பட்டடையார்), விஸ்வகர்மாக்கள் முதலிய சமூகத்தவரை வைத்துத் தொழிற் கூடங்கள் அல்லது பட்டறைகள் அமைத்து முதலாளித்துவ சமூக அமைப்பை நோக்கி இச் சமூக அமைப்பு முன்னேறுவதற்கும் வழிகண்டனர். இப் பகுதிகளிலெல்லாம் பெரும்பாலான இஸ்லாமிய நெசவாளர்கள் ஈழவர் சமூகத்தவராகவே இருந்திருக்க வேண்டும். கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இவர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறியிருக்கலாம்.
சிவகாசி இன்றைக்கு குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறதென்றால், இது ஏதோ இடைத் தரகர்களின் செயல்பாடுகளால் விளைந்தது அல்ல. அவ்வாறு நினைப்பதே அரைவேக்காட்டுச் சிந்தனையின் அறிகுறியாகும். சிவகாசியைப் பொறுத்தவரை இவ்வூரிலுள்ள விசுவநாத சுவாமி கோயில் கி.பி. 1668இல் வியாபாரிகளும் விவசாயிகளும் சேர்ந்து மகமை ஏற்படுத்திப் புதுப்பித்துக் கட்டியதாகும். இச் செய்தி இக் கோயிலின் வாயில் நிலையில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டுள்ளது என்று Virudunagar District – An Archaeological Source Book (Authors: V. Vedachalam, Sethuraman and Madhuca Krishnan) என்ற நூல் குறிப்பிடுகிறது. மகமை என்பது மகன்மை என்ற சொல்லின் திரிபாகும். சுவீகரித்தல் என்பது இதன் பொருள். 1668ஆம் ஆண்டுக்கு முன்பு இவ்வூரும் இக்கோயிலும் தென்காசிப் பாண்டிய மன்னர்களோடு தொடர்புடையவனவாக இருந்துள்ளன. சிவகாசியைப் பற்றிய புராணக் கதையும், இவ்வூரைத் தென்காசிப் பாண்டியரின் வான் வழியான காசிப் பயணத்தோடு தொடர்புபடுத்தியே குறிப்பிடப்படுகின்றன. சங்கரன்கோயில் தல புராணம் கி.பி. 1564இல் (சக வருஷம் 1486 ரக்தாக்ஷ¢ சித்திரை மாதம் 20ஆம் தேதி புனர்பூச நட்சத்திரத்தில்) முடிசூட்டப்பெற்ற சீவலமாற பாண்டியன் என்ற சிவகாசியிலிருந்து அரசு செலுத்திய பாண்டிய மன்னனால் இயற்றப்பட்டது எனத் தி.அ. முத்துசாமிக் கோனார் என்ற அறிஞரின் ‘கொங்குநாடு’ என்ற நூல் குறிப்பிடுகிறது (பக்கம் 156). பாண்டியர் ஆட்சி முடிந்த பிறகு – கி.பி. 17ஆம் நூற்றாண்டில் – இவ்வூர் வாணிக அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும் முதன்மை பெறத் தொடங்குகிறது எனில் இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகக் கருதிப் பொருத்திப் பார்ப்பதில் எந்த விதத் தவறும் இல்லை. ஆட்சியதிகாரத்திலிருந்து வீழ்ச்சி அடைகின்ற ஒரு சமூகம் அமைப்புகளைக் கட்டி நிர்வகிக்கின்ற ஆட்சி அனுபவம், விடா முயற்சி, சுயச் சார்பு ஆகியவற்றின் அடிப்படையில் புதிய களங்களில் புகுந்து வெற்றிக் கொடி நாட்டுவதென்பது கற்பக விநாயகத்தின் பார்வையில் தரகு வேலையால் பொருளீட்டுவது என்று பொருள்படும் போலும். வேறு எந்த ஒரு சமூகத்துடனும் ஒப்பிட்டு ஏற்றத்தாழ்வு கற்பிப்பதற்கு நாங்கள் விழையவில்லை. சான்றோர் சமூகத்தைப் பற்றிய ஒரு தவறான சித்திரம் சிலரால் தொடர்ந்து வலியுறுத்தப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்பத்தான் விழைகின்றோம். எத்தனை ஆதாரங்களை அடுக்கடுக்காக எடுத்து வழங்கினாலும் அவற்றையெல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் தாங்கள் சொன்னதையே திரும்பித் திரும்பி வலியுறுத்திச் சொல்வதென்பது கிளிப்பிள்ளைத்தனமாகும்.
சிவகாசி நகரைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர் 1779ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் கோயிலின் மேலைக் கோபுரம் அமைப்பதற்குப் பெரும் தொகையினை திருவாவடுதுறை ஆதீனகர்த்தர் வசம் வழங்கியுள்ளனர். அது குறித்த செப்பேடு திருவாவடுதுறை ஆதினத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் அலுவலராகப் பணிபுரியும் திரு. ச. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ‘திருவாவடுதுறை ஆதினச் செப்பேடுகள்’ என்ற நூலில் அச் செப்பேட்டின் வாசகங்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. இக் காலகட்டத்தில் சேதுபதி மன்னரின் ஆட்சியில் சிவகாசி அடங்கியிருந்தது. திருச்செந்தூர் மேலைக் கோபுரக் கட்டுமானப் பணியில் முதன்மையாக பங்கேற்ற பிறர், பாஞ்சாலங்குறிச்சி ஜெகவீர பாண்டிய கட்டபொம்மன் என்ற கம்பளத்து நாயக்கர் சமூகத் தலைவரும், ஏழாயிரம் பண்ணை முத்துசாமி ஆண்டுகொண்டார் என்ற வன்னியக் கள்ளர் சமூகத் தலைவரும், சாத்தூர் எரபாப்ப நாயக்கர் போன்றவர்களும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்திலுள்ள ஏழூர் தட்டாப்பாறை வணிதம் சூழ்ந்த மகாஜனம் பிள்ளைமார், சாண்நாடார்கள் முதலாகிய 18 சாதியினரும் ஆவர். பாளையக்காரர்களுடைய ஆட்சியே இப்பகுதியில் வலிமையாக வேரூன்றி இருந்த போதும், இவர்களுக்குச் சமமாகச் சிவகாசிச் சான்றோர் சமூகத்தவர் திருச்செந்தூர் மேலைக் கோபுரம் கட்டுவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், தமது பட்டயத்தில் “சேர சோழ பாண்டியர் பூமியான இந்நாட்டில் உள்ள சிவகாசியைச் சேர்ந்த நாடாக்களும் பட்டடைக் குடிகளும் சேர்ந்து இந்த தர்மத்தைச் செய்வதாக”த்தான் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது, சேதுபதியின் ஆட்சியையோ நாயக்க மன்னர்கள் ஆட்சியையோ அங்கீகரிக்காமல் பண்டொழிந்துபோன மூவேந்தர் ஆட்சியை மறக்காமல் நினைவு கூர்ந்து குறிப்பிடுவதிலிருந்து, சிவகாசிச் சான்றோர் சமூகத்தவர் தம்மையும் மூவேந்தர் வழிவந்த ஆட்சிக் குடியினர் என்றே தெளிவாக உணர்த்தியிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. சேதுபதி மன்னர்களுடைய எந்த ஆவணத்திலும் தமது நாட்டைச் ‘சேர சோழ பாண்டியர் பூமி’ என்று தொனிப் பொருளாகக் குறிப்பிடுவதைக் கூட நாம் காண இயலாது.
இப்படியெல்லாம் சொல்வதால் சான்றோர் சமூகத்தவர் மூவேந்தர் குடியினரே என்று பொருள் கொண்டுவிட முடியுமா என்று சிலர் கேட்கக் கூடும். நாயக்கர்கள் வடுகர்கள் என்பதால் அவர்கள் மூவேந்தர் பரம்பரையினராக இருக்க முடியாது. எஞ்சி இருக்கின்ற ஒரே தமிழ் அரசு என்று சொன்னால் மறவர் சமூகத்தவராகிய சேதுபதியின் அரசைத்தான் குறிப்பிட முடியும். சேதுபதி மன்னர்களுள் முதன் மன்னராகிய சடைக்கத்தேவன் கி.பி. 1605இல் மதுரை நாயக்க அரசர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் ராமேஸ்வரம் திருத்தலத்தையும், திருத்தலப் பயணம் மேற்கொள்வோரையும் கள்வர்களிடமிருந்தும், போர்ச்சுக்கீசியர் தாக்குதலில் இருந்தும் காத்தவர்கள் என்ற பொருளில் ‘சேதுபதி காத்த தேவர்’ என்று பட்டம் சூட்டப் பட்டவராவார். சேதுபதி என்பது ராமேஸ்வரத்தின் மறுபெயர். எனவே, சேதுபதி காத்த தேவர் என்பது காலப்போக்கில் சுருங்கி சேதுபதி என நின்றுவிட்டது. இவர்களுக்கும் மூவேந்தர் வம்சத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. Ancient Tamil Monarchy and the Sethupathi Kings என்ற கட்டுரையில் (Authors: S. D. Nellai Nedumaran & S. Ramachandran, published in the Journal of the Epigraphical Society of India, Vol 26, Mysore, 2000) இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் தமிழினத்தின் தனித்தன்மையுடைய அடையாளத்திற்குக் கருத்தியல் தளத்தில் உரிமை கொண்டாடுகின்ற வேளாளர் சமூகத்தவரை எடுத்துக்கொண்டால் அவர்கள் தங்களுடைய சமூக ஆவணங்களில் மூவேந்தரைச் சிறை வைத்து தமிழ் பாட வைத்த களப்பிர வம்சத்தவரைத்தான் தங்கள் முன்னோர்களாகக் குறிப்பிடுகிறார்களே தவிர மூவேந்தர் குடியினரையோ, வேளிர் குடியினரையே தங்களுடைய வம்சத்தவர் என்று உரிமை கொண்டாடவில்லை. (தஞ்சை மாவட்டம் அரித்துவாரமங்கலம் செப்பேடு, கி.பி. 17ஆம் நூற்றாண்டு.)
சான்றோர் சமூகத்தவர் சத்திரியர் என்று உரிமை கொண்டாடுவதும், பூணூல் அணிவதும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டு விருத்தியடைந்து வெள்ளையர்களுக்கு நிகரான லாபத்தை ஈட்டியதால்தான் என்று கூறுவது சிரிப்பை வரவழைக்கின்ற சிறுபிள்ளைத்தனமான வாதமாகும். ஒரு வேளை, வியாபாரம் செய்தது போக எஞ்சி நின்ற பருத்தியைப் பூணூலாகத் திரித்துப் போட்டுக் கொண்டார்கள் என்றும் சொல்வார்கள் போலும். வரலாற்றைத் திரிப்பது, கயிறு திரிப்பது என்பதைத்தான் கேட்டிருக்கிறோம். முதன்முதலாக பூணூலையே வடகயிறாகத் திரிப்பது என்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறோம். இக் கிளிப்பிள்ளை வாதக்காரர்கள் வேதநூலாகக் கொண்டாடுகிற History of the Nadars of Tamil Nadu (by Robert Hardgrave) என்ற நூலில்கூட, அடிக்குறிப்பாகச் சிவகாசி நாடார்கள் 1880ஆம் ஆண்டுக்கு முன்னரேயே பரம்பரையாகக் குடுமி வளர்த்துக் கொண்டு பூணூல் அணிந்து வந்திருந்ததை மூதாட்டியர் சிலர் நினைவு கூர்ந்தது பற்றிய குறிப்புள்ளது. கி.பி. 17ஆம் நூற்றாண்டைய சான்றோர் சமூகப் பட்டயங்களில் “குலமும் முப்புரி நூலும் உடையோர்” என்று இச் சமூகத்தினர் உரிமை கொண்டாடியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் பழையகோட்டைப் பட்டக்காரர் ஊரான ஆனூர்க் காளியம்மன் கோயிலில் காளியம்மனின் முதன்மையான அடியாரான செல்லமூப்பன் என்ற சான்றோர் சமூகத்தவரின் கற்சிற்பம் உள்ளது. இச் சிலை கி.பி. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். இச்சிலையில் முப்புரிநூல் தெளிவாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. (பனையேறுதல் போன்ற கடுமையான உடலுழைப்பின் போது, பூணூல் அறுந்துவிடுமே என கற்பக விநாயகம் கவலைப்படக்கூடும். பாரம்பரியமாக உடலுழைப்பின் போது கழுத்தைச் சுற்றி ‘நிவீத’மாகப் போட்டுக் கொள்வார்கள். கவலைப்படத் தேவையில்லை.) சான்றோர் சமூகத்தவர் உழைப்பாளர்கள் என்பது உண்மையேயாயினும், பனையேறும் தொழில் ஒன்றுதான் சான்றோர் குலத்தவரால் மேற்கொள்ளப்பட்ட ஒரே கடினமான உடலுழைப்பு என்று கருதுவது உழைப்பு என்ற கருத்தோட்டத்தைப் புரிந்து கொள்ளாத மனநிலையையே காட்டும். போர்ப்பயிற்சி, இக் கட்டுரையில் முன்னரே குறிப்பிட்ட வர்மக்கலையுடன் இணைந்த அங்கைப் போர்ப்பயிற்சி போன்றவையும் உடல் உழைப்பின் பாற்பட்டவையே மட்டுமின்றி, சலிப்பு ஏற்படுத்துகின்ற செயல்பாடே – பழைய காலச் சொற்களில் சொல்வதானால் – செக்குமாடு போன்ற வேலையே – உழைப்பு என்று கருதுவது அரைகுறைப் புரிதலே ஆகும். சலிப்புத் தருகின்ற ஒரு வேலையைக் கூட ஈடுபாட்டுடனும், சலிப்பு ஏற்படாத வகையிலும் செய்ய வைப்பது எப்படி என்று கண்டுபிடிக்கிற முயற்சியில் ஈடுபடுவதுகூட, உயராய்வு தொடர்பான உழைப்பே ஆகும். உழைப்பு என்பதற்கான பொருளே மறுவரையறை செய்யப்பட்டு வருகின்ற இக் காலகட்டத்தில் இதுபோன்ற வாதங்களை மேற்கொள்வது எந்தச் சூட்டுக்கும் இளகாத உறைந்து போன மனநிலையையே காட்டும்.
19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அமெரிக்க உள்நாட்டுப் போரை ஒட்டி அங்கு பருத்திக்குச் செயற்கையான தட்டுப்பாடு உருவானதன் விளைவாகவே திருநெல்வேலி மாவட்டப் பருத்தி வாணிபம் பெரிய அளவில் விருத்தியடைந்தது என்றும், சான்றோர் சமூகத்தவர் இவ் வியாபாரத்தில் இக் காலகட்டத்தில் ஈடுபட்டு விருத்தியடைந்தனர் என்றும் சொல்வதும் தவறான செய்திகளாகும். Robert Hardgrave தமது நூலில் 19ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே திருநெல்வேலி, ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் புதுக்கோட்டை சமஸ்தானம் வரை பெரும்பாலான பருத்திக் கிடங்குகள் சான்றோர் சமூகத்தவருக்கு உரிமையாக இருந்தன என்று Thoman Turnbull என்பவரின் Geographical and Statistical Memoirs தரும் புள்ளிவிவரத்தை மேற்கோள் காட்டுகிறார். ஓட்டப்பிடாரம் பகுதியைச் சேர்ந்த சான்றோர் குலத்தவர்களின் மரபு வழிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் 1760ஆம் ஆண்டில் தம்முடைய பொதிமாட்டு வாணிபத்தின் பொருட்டு பஞ்சுப் பொதி, கருப்புக்கட்டிப் பொதி போன்ற பொதிகளை அமர்த்துகின்ற ஒரு கிடங்கினைப் புதியம்புத்தூரில் சான்றோர் குலத்தவர் அமைத்திருந்ததாகத் தெரிய வருகிறது. மேலும், எட்டயபுரத்தின் ஒரு பகுதியாகிய கான்சாபுரம் முதலான ஊர்களில் சான்றோர்களுக்கு உரிய நெசவுத் தறிக்கூடங்கள் அமைந்திருந்தன என்றும் அங்கு ஈழவர் நெசவுப் பணி புரிந்து வந்தனர் என்றும் தெரிய வருகின்றன. 1827ஆம் ஆண்டைச் சேர்ந்த ஆறுமுகனேரி தட்சிண மாற நாடு சீர்மை ஆயிரம் நாடாக்கள் செப்பேடு, மதுரையில் நெல்பேட்டைப் பகுதியில் சான்றோர் வணிகப் பேட்டை முன்பிருந்தே செயல்பட்டு வந்தமை பற்றியும், அங்கு ஒரு விநாயகர் கோயில் கட்டப்பட்டிருந்தமை பற்றியும் குறிப்பிடுகின்றது. இச் செப்பேடு தற்போது திருநெல்வேலி சிந்து பூந்துறையில் உள்ள தட்சிண மாற நாடார் சங்க அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது (இச் செப்பேட்டின் வாசகங்களைத் திரு. எஸ். இராமச்சந்திரன் வாசித்துள்ளார். இச் செப்பேடு குறித்து Social movements of Nadars of Thoothukudi District என்ற ஆய்வுக் கட்டுரையில் S.D. நெல்லை நெடுமாறன் & எஸ். இராமச்சந்திரன் ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது). இச் செப்பேட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியாரின் ஆட்சி குறிப்பிடப்படுகிறது. சான்றோர் சமூகத்தவரில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இப்பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சியினை எதிர்த்து எந்தப் போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பது உண்மையே. ஆறுமுகநேரி, குரும்பூர்ப் பகுதி நாடார்கள், தாமே பூர்விகத் தென்பாண்டி நாடாள்வார்கள் என்று உரிமை கொண்டாடி வந்தமையால் அவர்களுக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பகைமை நிலவிற்று. கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர் அவர்கள் தக்ஷ¢ணமாற நாடார்கள் (தென்பாண்டி நாடாள்வார்கள் என்பதன் வேறு வடிவம்) என்ற பெயரில் வணிகர் சங்கம் அமைத்து, ஆங்கிலேய வணிகக் கும்பினியின் ஆதரவுடன் தமது பொருளாதார நலன்களைக் காத்துக் கொண்டனர். (குரும்பூர் நாடாக்கள் எனப்படும் புராட்டெஸ்டென்ற் கிறிஸ்துவச் சான்றோர்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கு அருகிலுள்ள இராஜாவின் கோயில் ஊரில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷார் ஆதரவுடன் குடியேற்றப்பட்டனர்.)
அதே வேளையில், திருவைகுண்டம் வட்டத்திலுள்ள பெருங்குளத்தையடுத்துள்ள ‘நட்டாத்தி’ எனும் ஊரைத் தலைமையிடமாகக் கொண்டு வாழ்ந்த சான்றோர் குலப் பிரிவினர் ஊமைத்துரை, செவத்தையா தலைமையில் அணிவகுத்ததோடு, ஆங்கிலேயக் கும்பினியரால் இடிக்கப்பட்ட பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை ஒரு வார கால அளவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதற்கும் உதவினர். (கோட்டை மீண்டும் விரைந்து எழுப்பப்பட்டது குறித்துப் பக்கம் 204, South Indian Rebellion by K. Rajaiyyan காண்க.) இவர்களால் வழங்கப்பட்ட கோழி முட்டையின் வெள்ளைக் கரு, பனை வெல்லம் (கருப்புக்கட்டி) ஆகியவையே கோட்டைக் கட்டுமானப் அணிக்கு முதன்மையாகப் பயன்பட்டன. நட்டாத்தி நாடார்கள், ஊமைத்துரையின் தம்பி செவத்தையா, குமாரசாமித் தளவாய், மருது வம்சத்தவராகிய சிவஞானம் ஆகியோருக்கு அடைக்கலம் அளித்ததன் அடையாளமாக இவர்களின் ஊரையொட்டிச் செவத்தையாபுரம் (சிவத்தையாபுரம் என்று 19ஆம் நூற்றாண்டைய கல்வெட்டுக் குறிப்பு உள்ளது. அண்மைக் காலமாகச் சிலர் செபஸ்டியான்புரம் எனக் கூறிவருகின்றனர்), குமாரகிரி, குமாரபுரம், சிவஞானபுரம் – ஆகிய ஊர்கள் உள்ளன. 1801ஆம் ஆண்டில் செவத்தையா தலைமையில் சான்றோர் குலத்தவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது குறித்து 13-03-1801 தேதியிட்ட Madras Council, ‘Military Consultations Vol 280 p. 1481 – சென்னை ஆவணக் காப்பகப் பதிவேட்டில் ஆதாரம் உள்ளது.
‘தற்கால தமிழகத்தில் சமூக வன்முறைகள்’ என்ற தலைப்பில் (பாரதி புத்தகாலயம், சென்னை – 15) பேராசிரியர் டாக்டர் கா.அ. மணிக்குமார் குறிப்பிட்டுள்ள சில ஆய்வுக் குறிப்புகளை கற்பக விநாயகம் அப்படியே எடுத்தாண்டிருக்கிறார் எனத் தெரிய வருகிறது. அந்த நூலைப் பற்றி ஒரு முழுமையான விமர்சனம் செய்வதற்கு இது பொருத்தமான இடமன்று. ஆயினும், சான்றோர் சமூகம் குறித்த ஒரு தவறான கருத்து மீண்டும் மீண்டும் பல அறிஞர்களால் வலியுறுத்தப்பட்டு வருவதாலும், அதனை அப்படியே எந்தக் கேள்வியுமின்றி பிரச்சாரத் தொனியில் பலர் பயன்படுத்தி வருவதாலும் இது குறித்து நாம் விமர்சனக் கருத்துகளை முன்வைக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. சான்றோர் சமூகத்தவர் தமிழக மூவேந்தர் குலத்தவர்கள் என்ற அடிப்படையில் 1874ஆம் ஆண்டிலிருந்தே பல ஆய்வுகள் எழுதப்பட்டு வந்தாலும் கூட அவற்றைப் பற்றியெல்லாம் இந்த அறிஞர்கள் கண்டுகொள்வதே இல்லை. எஸ். வின்·ப்ரெட் ஐயரால் எழுதப்பட்ட ‘சான்றோர் குல மரபுக் கட்டளை’ என்ற நூல் 1874ஆம் ஆண்டில் வெளிவந்தது. சாமுவேல் சற்குணர் என்பவரால் 1880ஆம் ஆண்டில் ‘திராவிட க்ஷத்திரியர்’ என்ற ஆய்வு எழுதி வெளியிடப்பட்டது. பி. டேவிட் நாடார் என்பவரால் 1883இல் ‘திருநெல்வேலி சாணார்கள்’ என்ற நூல் எழுதி வெளியிடப்பட்டது. 1900ஆவது ஆண்டில் கொர்னிலியூஸ் நாடார் என்பவரால் ‘அமரர் புராணம்’ என்ற நூல் எழுதப்பட்டது. இவர்கள் அனைவரும் புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்களாக இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்க ஓர் உண்மையாகும். புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயம் என்பது அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுத்த ஒரு சமயமே என்பதில் ஐயமில்லை. ஆனால், சான்றோர் சமூகத்தவரிடையே புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயம் பரப்பப்பட்டது இந்த அடிப்படையில் அல்ல. 1797ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியிலுள்ள முதலூரில் முதல் புராடஸ்டண்ட் மதமாற்றம் நிகழ்ந்தது என்றாலும் கூட, சான்றோர் சமூகத்தவர் மத்தியில் புராடஸ்டண்ட் சமயத்தை வேரூன்ற வைக்க வேண்டும் என்ற முயற்சியின் முதல் அடி நாசரேத்தில்தான் எடுத்து வைக்கப்பட்டது. 1800ஆம் ஆண்டில் தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த புராடஸ்டண்ட் கிறிஸ்தவச் சான்றோர்கள் இப் பகுதியில் குடியேற்றப்பட்டனர். வாழையடி – வகுத்தான் குப்பம் சாண்பற்று நாடாக்களிடம் ஒரு பெரும் நிலப்பகுதியை விலைக்கு வாங்கி நாசரேத் என்ற பெயரைச் சூட்டித் தஞ்சைப் பகுதிக் கிறிஸ்தவர்களை இங்கு ஐரோப்பியப் பாதிரிமார் குடியமர்த்தினர். தஞ்சையிலிருந்து இங்கு கொண்டு வந்து குடியமர்த்தக் காரணம் என்ன என்பதற்கு மிஷனரி வரலாறு குறித்த எந்த நூலிலும் ஆதாரமில்லை. பார்வை மிருகத்தை வைத்துக் காட்டு மிருகங்களை வளைத்துப் பிடிக்கும் ஓர் உத்தியாக இது இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஏனெனில், தஞ்சைப் பகுதியிலேயே தங்கி விட்ட கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றிய சான்றோர்கள் தொடர்ந்து தமது செல்வாக்கான நிலையைக் காத்து வந்ததோடு 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் காங்கிரஸ் இயக்கத்தின் சார்பில் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். சமூக அமைப்பில் அவர்கள் சமூக அந்தஸ்தில் குறைந்தவர்களாகக் கருதப்படவில்லை.1 வேளாங்கண்ணி மாதா கோவில் கட்டுவதற்கு நிலம் வழங்கியவரே தஞ்சைப் பகுதிச் சான்றோர் சமூகத்தவர் ஒருவர்தாம். பெரும்பண்ணையூர், மடப்புரம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த கத்தோலிக்கச் சான்றோர்கள் பொருளாதார நிலையிலும் சமூக அந்தஸ்திலும் உயர்வாகவே மதிக்கப்பட்டு வந்தனர். 1967இல் தஞ்சைத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த A.Y.S. பரிசுத்த நாடார் மற்றும் அருளானந்த நாடார் குடும்பங்கள் அப் பகுதியைச் சேர்ந்தவையாகும்.
சமூக ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்பட்டுப் புராடஸ்டண்ட் சமயத்தைத் தழுவியமையால் தஞ்சைப் பகுதிச் சான்றோர்கள் நாசரேத்துக்குக் குடியேற்றப்பட்டார்கள் என்று அவசரப்பட்டு முடிவு செய்துவிடுவது தவறாகும் என்பதற்காகவே மேற்சொன்ன ஆதாரத்தைக் குறிப்பிட்டோம். மேலும், சாண்பற்று நாடாக்கள் எனப்பட்ட நெல்லைச் சீமையின் பூர்வகுடிச் சான்றோர்கள், 17ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்கர் ஆட்சியின் விளைவாகப் பெருமளவு பாதிக்கப்பட்டது உண்மையேயானாலும், அவர்கள் முற்றிலும் ஒடுக்கப்பட்டு விடவில்லை என்பதோடு தமது பாரம்பரியப் பெருமைகளைத் தவறாமல் பேசி வந்தார்கள். இவர்களில் பலர் கத்தோலிக்க சமயத்துக்கு மாறியபோதும் கூட, தமது பூர்விக அந்தஸ்தை விட்டுக் கொடுத்து விடவில்லை. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். 1530-35ஆம் ஆண்டுகளுக்கு இடையில் முத்துக்குளிதுறைப் பரதவர்கள் கத்தோலிக்க சமயத்திற்கு ஒட்டு மொத்தமாக மாறியதற்குச் சாதிய ஏற்றத்தாழ்வுகள், வருணாஸ்ரம ஒடுக்குமுறை என்பவை காரணமாக இருந்தன என்று கூறினால் அது எவ்வளவு தவறான வாதமாக இருக்குமோ அது போன்றேதான் சான்றோர் சமூகத்தவருள் ஒரு பகுதியினர் கத்தோலிக்க சமயத்துக்கு மாறிய நிகழ்வுக்கும் சாதிய ஒடுக்குமுறை காரணமாக இருந்ததில்லை. 1298ஆம் ஆண்டில் முத்துக்குளிதுறைப் பகுதிக்கு வருகை புரிந்த வெனிஸ் பயணி மார்க்கோ போலோ பாண்டிய மன்னனுடைய கருவூலத்தில் ஏராளமான முத்துகள் எப்படிக் குவிந்தன என்பதற்கான ரகசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். குளித்தெடுக்கப்படும் முத்துகளுக்குப் பரதவர்களும் பிற வணிகர்களும் என்ன விலை கேட்டாலும் பேரம் பேசாமல் பாண்டிய மன்னனின் அதிகாரிகள் அந்த விலையைக் கொடுத்து அந்த முத்துகளை வாங்கிக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாண்டிய மன்னர் வம்சத்தவருக்கும் முத்துக்குளிதுறைப் பகுதி மக்களுக்கும் சுமுக உறவு நிலவிற்று என்றும் மார்க்கோ போலோ குறிப்பிட்டுள்ளார். 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மதுரையில் நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. வடுகர்களும், மறவர் சமுகத் தலைவர்களும் (பின்னாளைய பாளையப்பட்டுகளின் முன்னோர்கள்), கடற்கரைப் பகுதி இஸ்லாமிய மரக்கல நாயர்களும் (மரக்காயர்) அணி சேர்ந்து கொண்டு பாண்டிய அரச குலத்தவரின் வீழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு முத்துக்குளிதுறைப் பரதவர்களைச் சூறையாடினர். பரதவர்களைப் பாதுகாத்து வந்த பாண்டிய குலச் சான்றோர்களும் தம் அதிகாரத்தை காத்துக் கொள்வதற்கே போராடிக் கொண்டிருந்த சூழலில் பரதவர்களைக் காக்க முடியாமல் கைவிட்டு விட்டனர். (பாண்டிய மன்னர்களின் கடற்படை என்பதே பெரும்பாலும் இஸ்லாமிய மரக்கல நாயர்களைச் சார்ந்திருந்தது.) இந்நிலையில் பரதவர்கள் உதவி தேடித் தவித்த போது உதவிக் கரம் நீட்டியவர்கள் கடற்படை வலிமை மிக்க போர்ச்சுக்கீசிய வணிகக் கும்பினியாரே. எனவேதான், ஒட்டு மொத்தப் பரதவர் சமூகமும் கத்தோலிக்கக் கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிற்று. இந்த உண்மை ஆங்கிலேயர் காலத்தில் எழுதப்பட்ட Tirunelveli District Gazetteer போன்ற நூல்களிலும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் சமூக வன்முறை பற்றி ஆராய்பவர்கள் இந்த ஒட்டு மொத்த மதமாற்றத்தைத் தான் முதல் எதிர்ப்புக் குரலாகக் கருத வேண்டும். ஏன் இந்த உண்மையை குறிப்பிடாமல் மறைக்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை. இஸ்லாமிய மரக்கல நாயர்களுக்கும், பரதவர்களுக்கும் நிலவிய பகைமை 17ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நீடித்தது. 1687ஆம் ஆண்டைச் சேர்ந்த இராமநாதபுரம் மாவட்டம் ஏறுவாடி அருகிலுள்ள வேதாளை கூரைப்பள்ளிக் கல்வெட்டு இத்ரீஸ் மரக்காயர் என்பவரால் படிக்கப்பட்டு ‘வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும்’ என்ற நூலில் (ஆசிரியர்: என். ஏ. அமீர் அலி, பதிப்பு: சீதக்காதி ட்ரஸ்ட், 1983) பக்கம் 96இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ‘ஆவணம்’ இதழ் 4, ஜனவரி 1994, பக்கம் 50இல் இது மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இது சீதக்காதி மரக்காயர் எனப்பட்ட ஷேக் அப்துல் காதர் மரக்காயரின் தம்பி ஷேக் இப்ராஹிம் மரக்காயரின் கல்லறைக் கல்வெட்டாகும். ஷேக் இப்ராஹிம் மரக்காயர் “நசுருக்கள் ஏழு கரை துறைக் கோயிலும் சுட்டு இடிச்சு கீர்த்தியும் மிக விருதும் பெற்ற பெரிய தம்பி மரைக்காயரின் குமாரர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார். இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் ‘நசுருக்கள் ஏழு கரை துறைக் கோயில்’ என்பது ‘ஏழு கடல் துறை ஏக அடைக்கலமாதா’ எனப்படும் தூத்துக்குடிப் பனிமய மாதா ஆலயமே ஆகும். இவ்வாறு இஸ்லாமிய மரக்காயர்களால் தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் கொளுத்தி அழிக்கப்பட்டபோது பனிமய மாதா சொரூபம் ஏழு ஆண்டுகள் பாண்டியனின் முன்னாளைய கோநகரான கொற்கையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது.
18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (உத்தேசமாக கி.பி. 1700) தூத்துக்குடி பனிமய மாதா ஆலயம் சீர் செய்து கட்டப்பட்டது. சிறிய சப்பரம் ஒன்றும் மாதாவுக்காக அமைக்கப்பட்டது. அந்தச் சப்பரத்தை வடம் பிடித்து இழுக்கின்ற சடங்கினைத் தொடக்கி வைப்பதற்கு கயத்தாற்றுப் பாண்டிய மன்னர் வம்சத்தைச் சேர்ந்தவரும், அண்மையில் கத்தோலிக்க கிறிஸ்தவ சமயத்துக்கு மாறியவருமான ஒரு பெரியவர் அழைத்து வரப்பட்டு மாதா சப்பர பவனியைத் தொடக்கி வைத்தார் என்று நம்பப்படுகிறது. பனிமய மாதா ஆலயத்தின் முதன்மையான அடியார்களான பரதவர் சமூகத்தவரும் சரி – பாண்டிய வம்சத்தைச் சேர்ந்த கத்தோலிக்க சமயச் சான்றோரும் சரி – தாம் முன்னர் பின்பற்றி வந்த இந்து சமய வழக்காறுகளின்படி தேர் வடத்தைத் தொட்டுத் தேரோட்டத்தைத் தொடக்கி வைக்கின்ற சான்றோர் குலப் பரம்பரை உரிமையை கத்தோலிக்க சமயத்திலும் அறிமுகப்படுத்தி கெளரவித்திருக்கிறார்கள் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. புராடஸ்டண்ட் சமயத்திற்கு மாறிய சான்றோர் சமூகத்தவரும் தாம் தாழ்த்தப்பட்ட சாதியினர் என்று எக்காலத்திலும் கருதியதில்லை. மூவேந்தர் குடியினைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்ற பாரம்பரிய நினைவை அவர்கள் போற்றி வந்தததே வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் சான்றோர் சமூகத்தவருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதற்கான காரணங்களுள் முதன்மையானதாகும். இதனைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள் பாளையக்காரர்களுக்கு எதிரான ஓர் அணியை உருவாக்குகின்ற விதத்தில் சான்றோர் சமூகத்தவரைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமென்று கணக்கிட்டனர். ஆனால், அதே நேரத்தில் தாம் சார்ந்திருந்த புராடஸ்டண்ட் சமயத்தைச் சான்றோர் சமூகத்தவரிடையே பரப்புவது எளிதான பணியாக அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய உயர்குடிப் பாரம்பரியப் பிரக்ஞை புராடஸ்டண்ட் மிஷனரிமார்களுக்கு முள்ளாக உறுத்திக்கொண்டே இருந்தது. நாசரேத் என்ற ஊரை உருவாக்கித் தஞ்சைப் பகுதிச் சான்றோர்களைக் குடியேற்றிய பின்னர் கூட, மிகவும் ஏழ்மை நிலையிலிருந்த பனையேறிச் சான்றோர் சிலரைத்தான் அவர்களால் மதம் மாற்ற முடிந்தது. அவ்வாறு மாறிய பின்னரும் கூட, தம்முடைய பூர்விக தெய்வங்களைப் பற்றிய பாசம் அவர்கள் மனதில் சற்று ஒட்டிக் கொண்டுதான் இருந்தது. பெருங்குளம் என்ற ஊரை அடுத்த பண்டாரவிளை, பண்ணைவிளை போன்ற ஊர்களிலிருந்து புராடஸ்டண்ட் சமயத்திற்கு மாறிய சான்றோர்களுள் சிலர் அவ்வப்போது பெருங்குளம் காளி கோயிலிலும் வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில் லண்டன் மிஷனைச் சேர்ந்த பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1841ஆம் ஆண்டில் இப் பகுதிக்கு வந்து சேர்ந்தார். அவர் இப் பகுதிக்கு வந்தபோது, விபூதி சங்கம் என்ற ஒரு சங்கம் துடிப்புடன் செயல்பட்டு வந்தது. பிராமணர், வேளாளர், கோன்கள்மார் மற்றும் இந்து நாடாக்கமார் ஆதரவுடன் செயல்பட்ட விபூதி சங்கம் சிறிது காலத்திற்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருந்த பனையேறிச் சான்றோர் போன்ற ஏழ்மை நிலையிலிருந்த சான்றோர்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்த்து வந்தது. இதனைக் கண்டு எரிச்சலடைந்த கால்டுவெல் ஆங்கிலேயக் கும்பினி அரசின் மறைமுகமான உதவியுடன் இப் பகுதியிலிருந்த புராடஸ்டண்ட் கிறிஸ்தவச் சான்றோர்களைத் திரட்டிப் பண்ணைவிளை, பண்டாரவிளை கிறிஸ்தவச் சான்றோர்களை முன்னணியில் நிறுத்தி, இந்து மதத்திற்குத் திரும்பியிருந்த பல சான்றோர்களை மீண்டும் கிறிஸ்தவர்களாக்கினார். அவருடைய ஆலோசனையின்படி, தாம் முன்னர் வழிபட்டு வந்த தம் முன்னோர்களால் கட்டப்பட்ட இந்து சமய ஆலயங்களெல்லாம் அப்படியே இருப்பதால்தான் மீண்டும் இந்து சமயத்துக்கு மாறி விடுகிற அசம்பாவிதம் நேர்கிறது என்பதால் அக் கோயில்களையெல்லாம் இடித்து சிலைகளையெல்லாம் பூமிக்குள் புதைத்துவிடுவது என்று முடிவு செய்தனர். ஆறு ஊர்களில் அவ்வாறே செய்தும் முடித்தனர். இவ் விவரங்களெல்லாம் Nazareth Mission History என்ற நூலில் பதிவாகியுள்ளன. தம் முன்னோர்கள் கட்டிய ஆலயங்களைத் தாங்களே கைவிடுவது என்பதை ஒரு குற்றமாகக் கூறிவிட முடியாதுதான். ஆனால், இதன் பின்னர் கால்டுவெல் மேற்கொண்ட பிரச்சார முயற்சிகள் முறையானவை அல்ல. இந்து சமயத்தின் பேய்க் கோயில்களில் வழிபட்டு வந்ததால்தான் இழிந்த சாதியினருக்குரிய பண்புகள் சாணார் சமூகத்தவரிடம் காணப்படுவதாகக் கருதிய கால்டுவெல் தமது அக் கருத்தினை எழுத்திலும் பதிவு செய்துள்ளார். ஆனாலும் கூட, விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பள்ளர், பறையர் போன்றோர் ஆண், பெண் பாகுபாடின்றி மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள் என்று குறிப்பிடுகின்ற கால்டுவெல் சாணார் சமூகத்தைப் பொருத்தவரை பிராமணர்களைப் போலவே இவர்களும் மது அருந்துவதைத் தவிர்க்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். கள் இறக்குகின்ற சாணார்கள் கூட கள் அருந்துவதைத் தவிர்க்கின்றனர் என அவர் குறிப்பிடுகின்றார். சாணார்கள் இந்து சமயத்தில் மிக இழிந்த சாதியினராகவே கருதப்பட்டனர் என வலியுறுத்துகின்ற கால்டுவெல், சாணார்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களாக இருப்பதால்தான் இந்நிலை நீடிக்கின்றது என்று குறிப்பிடுவதன் மூலம் மதமாற்றத்துக்கான தூண்டில் போடும் கால்டுவெல், சாணார் சமூகத்தவரிடம் மது அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் அதைத் தமது பிரச்சாரத்துக்குச் சாதகமாக நிச்சயமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார். எனவே, பிரத்தியட்சமான ஒரு நிலைமையைத்தான் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார் என Dennis Templeman என்ற மானிடவியல் ஆய்வாளர் குறிப்பிடுகிறார் (p. 22, The Northern Nadars of Tamil Nadu, Oxford University Press, 1996). இத்தகைய பின்னணியில் பார்க்கும்போதுதான் சான்றோர் சமூகத்தவர் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் புராடஸ்டண்ட் சமயத்தைத் தழுவியதற்குரிய காரணமாகச் சாதிய ஏற்றத்தாழ்வுகளையோ, வர்ணாஸ்ரம ஒடுக்கு முறையையோ குறிப்பிட முடியாது என்பதும், அரசியல் அதிகார அடுக்கில் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தவர்கள் ஆங்கிலேயர் ஆதரவுடன் தமது அதிகாரத்தை மீட்டெடுக்கின்ற ஒரு முயற்சியாகவே இதனைக் கருத வேண்டும் என்பதும் தெரிய வருகின்றன.
சான்றோர் சமூகத்தவரின் உயர்குடிப் பாரம்பரியப் பிரக்ஞை குறித்து விளங்கிக் கொள்வதற்குரிய ஒரு விவரத்தினை Samuel Mateer என்பார் The Land of Charity என்ற நூலில் (பதிப்பு: 1875) குறிப்பிட்டுள்ளார். மலபார் மற்றும் திருவிதாங்கூர்-கொச்சி பிரதேசங்களில் திருமணம் மற்றும் முறையான குடும்ப உறவுகளைப் பேணிக் காக்கின்ற சமூகத்தவராக பிராமணர், சாணார் ஆகிய இரு சமூகத்தவரையே மேற்குறிப்பிட்ட சமயப் பிரச்சாரகர் குறிப்பிட்டுள்ளார். “சான்றோர் சமூகத்தவர் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட நிலைமையில் இருந்த போதும், பெருமை மிக்க உயர்குடி மரபுகள் பலவற்றிற்கு உரிமை கொண்டாடி மேற்கோள் காட்டி வருகின்றனர்” என ஜான் ஓபஸ் என்பவர் குறிப்பிடுவதாக முனைவர் கே. ராஜய்யன் எழுதியுள்ளார்.
சிவகாசி நகரத்தைச் சேர்ந்த சான்றோர் சமூகத்தவர் 1899ஆம் ஆண்டில் மறவர் சமூகத்தவரின் மிகப் பெரும் தாக்குதலுக்கு ஆளாயினர். ஆனால், அவர்கள் பருத்தி போன்ற பணப்பயிர் வியாபாரத்தில் ஈடுபட்டு மிகக் குறுகிய கால அளவில் பெரும் பணக்காரர்களாக ஆனதுதான் இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று டாக்டர் கா.அ. மணிக்குமார் கூறுகின்ற கருத்தையே கற்பக விநாயகம் மறு-ஒலிபரப்பு செய்துள்ளார். சிவகாசி நகரில் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஒரு கலகம் ஏற்பட்டுப் பலர் தப்பியோடி நெய்யாற்றின் கரை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் குடியேறினர் என்றும், 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாளையக்காரர்கள் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின், இவர்களுள் பலர் திரும்பி வந்து சிவகாசி, கமுதி, விருதுபட்டி (விருதுநகர்), மதுரை ஆகிய ஊர்களில் குடியமர்ந்தனர் என்றும், இப்போதும் கூட, நெய்யாற்றின் கரை, திருவனந்தபுரம் ஆகிய ஊர்களில் வாழும் சான்றோர் சமூகத்தவர் பலர் தம் முன்னோர் சிவகாசியைப் பூர்விகமாகக் கொண்டவர்கள் எனக் கூறிக் கொள்கின்றனர் என்றும் கே. ராஜய்யன் எழுதியுள்ளார். முதுபெரும் பேராசிரியரான டாக்டர் கே. ராஜய்யன் எழுதியுள்ள வரலாறு ஆதாரபூர்வமானது மட்டுமன்றித் தென் தமிழகத்தின் பிற்கால வரலாற்றுப் போக்குடன் மிகவும் பொருந்துவதாகவும் உள்ளது.
இக் கட்டுரையின் தொடக்கத்தில் கற்பக விநாயகம் சான்றோர் குலத்தைப் பற்றிக் கூறியுள்ள குற்றச்சாட்டின் தொனி குறித்து ஒன்று சொல்ல விரும்புகின்றோம். சான்றோர் சாதியினரை இழிவுபடுத்திப் பேசுவதற்கு அவருக்கு ஆசையாக இருந்தால், அதை நேரடியாகச் செய்து விட்டுப் போகட்டும். முத்துராமலிங்கத் தேவரின் வாயில் இவர் சொல்ல விரும்புகின்ற வார்த்தைகளைத் திணிக்க வேண்டாம். முத்துராமலிங்கத் தேவரின் ஆளுமையில் போற்றிப் பாராட்டத்தக்க, பின்பற்றத்தக்க அம்சங்களும் நிரம்ப உண்டு. குலசேகர பட்டினம் லோன் துரை கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்று, பின்னர் நூலிழையில் தப்பிய தூக்குமேடை ராஜகோபால் என்ற சான்றோர் சமூகப் போராளியுடன் வேறொரு தருணத்தில் சிறையில் இருந்த போது முத்துராமலிங்கத் தேவர் பண்டைய நெல்லைச் சீமையின் தென்பகுதி சான்றோர் சமூகத்தவரைப் பற்றி மிக உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நிகழ்வுகள் முத்துராமலிங்கனாரின் வாழ்க்கையில் உண்டு. அவரது தியாகப் பண்புகளும், தேசிய உணர்வும், சுதந்திரப் போராட்டத்தில் அவர் தலைமை வகித்த வரலாறும் போற்றத் தக்கவை. முத்துராமலிங்கத் தேவரின் சாதனைகளை (சாதியை அல்ல) கெளரவிக்கும் விதத்தில்தான் முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கம் மாவட்டம் என்று பெயரிட்டு ஒரு மாவட்டத்தை உருவாக்கினார். எம்.ஜி.ஆருடைய இந்த செயலைக்கூட கற்பக விநாயகம் போன்றவர்கள் ஓட்டு வங்கி அரசியல் என்று குறிப்பிடக்கூடும். இராமநாதபுரம் மாவட்டத்தில் ஜில்லா போர்டு தலைவராக இருந்த சவுந்தரபாண்டியனார், பேருந்துகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் பயணம் செய்ய இயலாத நிலை இருந்தபோது அவர்களை அனுமதித்தாக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். காமராஜர் முதல்வராக இருந்தபோது காவல்துறையின் கடிவாளத்தையும், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் நிர்வாகத்தையும் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் பொறுப்பில்தான் கொடுத்திருந்தார். ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்ட நியாய உணர்வும், துணிச்சலும் உள்ள தலைவர்களால்தான் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். எம்.ஜி.ஆர். அவர்களுடைய அரசியல் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று உண்டு.
1977ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு, தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் அருப்புக்கோட்டைத் தொகுதியில் நடைபெற்றது. எம்.ஜி.ஆர். உரை நிகழ்த்துவதற்கு முன்பு அவரிடம் தொகுதி மக்கள் பெருமளவில் மனுக்கள் கொடுத்தனர். அந்த மனுக்களைப் புரட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். மைக்கைப் பிடித்தவுடன், தம் வழக்கமான பூர்வபீடிகை முடிந்தவுடன் தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களை தேவர் சமூகத்தவர் துன்புறுத்துவதாக குறிப்பிட்டிருந்த மனுக்கள்தாம் என்ற உண்மையைத் தமது பேச்சில் தெரிவித்து விட்டு, தாம் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று யாருக்காவது தெரியுமா என்று கேட்டார். கூட்டத்தில் இருந்த மக்கள் தெரியாது என்று உரத்த குரலில் பதிலளித்தனர். “என்ன சாதி என்றே தெரியாத என்னை உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஆக்கியதோடு தமிழகத்தின் முதலமைச்சராகவும் ஆக்கி இருக்கிறீர்கள். ஆனால் உங்களோடு காலம் காலமாக வாழ்கிற தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை உங்கள் உடன்பிறப்பைப் போல நடத்தாமல் இருப்பது வேதனைக்கும் வெட்கத்துக்கு உரியதல்லவா?” என்று கேட்டார். உண்மையை எடுத்துச் சொல்வதற்கு ஓட்டு வங்கிக்கு அப்பாற்பட்ட துணிச்சலும் நியாய உணர்வும் வேண்டும். அதைவிட முக்கியமாக உண்மைகளைப் புரிந்து கொள்ளும் மனம் வேண்டும். தலைவர்களுடைய சொற்களில் தமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதையும் ஊதி ஊதி பெரிதுபடுத்தி தம்முடைய குறுகிய கண்ணோட்டத்திற்கேற்ப அதனைப் பயன்படுத்துவதென்பது ஆக்கபூர்வமான சிந்தனையின் அடையாளம் அல்ல. பெண்ணுரிமை தொடர்பாக பெரியார் தெரிவித்த பல முற்போக்கான கருத்துகளைக் கூட மறைத்து அல்லது தமக்குச் சாதகமாகத் திரித்துக் கூறி மாற்றுக் கருத்துள்ளவர்களை இழிவுபடுத்துவதற்கும் அச்சுறுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் பழக்கமுடையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை. நாங்கள் முன்பே பலமுறை குறிப்பிட்டது போல வெளிப்படையான விவாதத்துக்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் கருத்துகளைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் பார்வைக்கு வைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். விமர்சனங்களே இல்லாமல் ஒரு கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற மடமையோ, விமர்சனம் என்ற பெயரால் மாற்றுக் கருத்து கொண்டவர்களை வரம்புமீறி இழிவுபடுத்தி அச்சுறுத்துகின்ற கயமையோ எங்களிடம் இல்லை. அதே நேரம், தங்கள் கருத்துக்கு உகந்த அரைகுறை உண்மைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து ஜோடனை செய்து வெளியிடுவதற்குப் பெயர்தான் ‘வரலாற்றை முறைகேடாகப் பயன்படுத்துவது’ (Abuse of History) என்பதாகும். வரலாற்றை இவ்வாறு முறைகேடாகப் பயன்படுத்தி விமர்சனம் என்ற பெயரில் மாற்றுக் கருத்துள்ளவர்களை அவதூறு செய்வதைத்தான் கற்பக விநாயகம் போன்றவர்கள் செய்து வருகின்றனர். இத்தகைய அவதூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதுதான் இன்றைய தமிழ்ச் சமூக வரலாற்று ஆய்வில் ஈடுபடுபவர்கள் எதிர்கொள்ள நேர்கிற முதன்மையான அவலம் ஆகும்.
அடிக்குறிப்பு:
[1] கத்தோலிக்கக் கிறிஸ்தவ சமயத்தைத் தமிழகத்தில் பரப்ப முயன்ற மதுரை மிஷனைச் சேர்ந்த மிஷனரிமார்கள் (தத்துவ போதகர் எனப்பட்ட ராபர்ட் டி நொபிலி போன்றோர்) இந்து சமயத்தின் சாதி அமைப்பினைக் குறித்து எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லை என்பதோடு தாமே பூணூல் அணிந்து இந்து சமயச் சடங்குகளை ஒத்த சில வழக்கங்களை மேற்கொண்டனர் என அறிகிறோம். கத்தோலிக்கக் கிறிஸ்தவ மிஷனரிமார்களுள் தலைசிறந்தவரான தைரியநாதர் அல்லது வீரமாமுனிவர் எனப்பட்ட கான்ஸ்டன்ஷியஸ் பெஸ்கி மிகச் சிறந்த தமிழறிஞராக விளங்கியவர். இவரது சமகாலத்தில் புரொடஸ்டண்ட் மிஷனரிமார் தாழ்த்தப்பட்ட சமூகத்தவரிடையே தமது மதப் பரப்பல் முயற்சிகளை மேற்கொண்டு வருவதை வீரமாமுனிவரால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை. ‘வேத விளக்கம்’, ‘பேதகமறுத்தல்’ போன்ற நூல்களில் இதனைக் குறித்து அவர் கடுமையான சொற்களைப் பயன்படுத்திச் சாடியுள்ளார். “தொல்காப்பியத்திலும் நன்னூலிலும் ஏற்படுகின்ற சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்குக் கற்றறிந்த பண்டிதர்களிடம் செல்ல வேண்டுமே தவிர, பள்ளத்தியின் பின்னாலும் பறைச்சியின் பின்னாலும் ஓடக்கூடாது” என்று வீரமாமுனிவர் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: பக்கம் 284, The Contribution of European Scholars to Tamil, Dr. K. Meenakshi Sundaram, University of Madras, 1974.) சமூகத்தின் அடித்தட்டு மக்களிடம் புராடஸ்டண்ட் கிறிஸ்தவ சமயத்தின்பால் ஏற்பட்ட ஈர்ப்புக்குப் புராடஸ்டண்ட் சமயத்தின் நிறுவன எதிர்ப்புத் தன்மை ஒரு காரணமாக இருக்கக் கூடும். ஆனால், அதே வேளையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அதனைத் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டது ஒரு விசித்திரமான முரண்பாடாகும். பிஷப் ராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழியியியல் குறித்த ஆய்வுகளில் காணப்படும் கட்டுத்திட்டமான ஆய்வு நெறிமுறையும் வெள்ளை இனம் குறித்த அவருடைய உயர்வு மனப்பான்மையும் இத்தகைய ஒரு முரண்பாட்டுக் கலவையே ஆகும்.
nellai.nedumaran@gmail.com
- கீதாஞ்சலி (81) கடந்ததின் மீது கவலை!
- கபாலகார சுவாமி கதைப்பாடல் அறிமுகம்
- 500 டாலர் நகைச்சுவை
- SIVANANDA ORPHANAGE IN CHENNAI TAMIL NADU
- சூடேறும் கோளம், மேலேறும் கடல் உஷ்ணம், உருகிடும் பனிப்பாறை, தாக்கிடும் இயற்கைச் சீற்றங்கள்-4
- ஆனந்தவிகடனுக்கு என்ன நேர்ந்தது?
- விரைந்து தமிழினி வாழும்
- வானலையில் நூல் வெளியீடு
- ஜெயந்தி சங்கரின் கதை மாந்தர்கள்
- பெண்ணின் இடம் அல்லது அழியும் பூர்வீக வீடு
- தமிழ் இணைய இதழ்கள் – ஒரு முன்னோட்டம்
- கடித இலக்கியம் – 13
- கலக்… கலக்… கானிஸ்பே
- வண்ணக் கோலங்கள் !
- ஒரு கோரிக்கை
- அல்லாவை மொழியியல் ரீதியாக புரிந்துக் கொள்வது
- கண்ணகியும் ஐயப்பனும்
- கஅபா ஒரு சிறுவிளக்கம்
- மனிதகுல எதிரிகள்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 29
- பெரியபுராணம் – 96 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மரணத்தை எதிர் கொள்ளுவது பற்றி
- இன்னும் எஞ்சி இருக்கவே இருக்கிறது
- முத்தம் போதும்
- “ஹாங்காங் தமிழ்க் கல்வியின் மேன்மை அதன் தொடர்ச்சியில் இருக்கிறது”
- கணிதம் என்பது அறிவியல் மொழி
- பொய்யை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை
- இணையமில்லா இடைவெளியில் – புஸ்பராஜா, ம்!, புத்தவேடு விகாரம், மும்பாய், ·பனா.
- புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 6 : யோகியின் பார்வையினூடே வாழ்க்கை
- தமிழ்வழி வாழ்வு மெல்லப் போகும் பொருட்காட்சியகத்துக்கு!
- யு க ங் க ள்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-2, பாகம்-9)
- க ட வு ளே !