பொடாவுக்கு ஒரு தடா!

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

ஜெ. ரஜினி ராம்கி


ஒரு வழியாக பொடா சட்டத்தை வாபஸ் பெறுவது என்கிற புரட்சிகரமான முடிவை எடுத்திருக்கிறது மத்திய அரசு. இந்திய ஜனநாயகத்தின் கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்து ஒரு விஷப் பாம்பிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டது என்று பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். அதே நேரத்தில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த ஒரு கடுமையான சட்டத்தை அமல் படுத்த முடியவில்லை என்று நினைக்கும்போதுபோது வெட்கப்படவும் வேண்டியிருக்கிறது. ஒரு சட்டத்தை சரியாக அமல்படுத்தப்படவில்லை என்பதற்காக சட்டத்தை வாபஸ் பெறுவது புத்திசாலித்தனமான விஷயமாக தெரியவில்லை. மூட்டைப் பூச்சிக்கு பயந்து பாஜக அரசு ஓடி ஒளிந்தது என்றால் காங்கிரஸ் அரசு வீட்டையே கொளுத்திவிட்டது!

இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்க பிரிட்டிஷார்கள் கையாண்ட வன்முறைகளோ பலவிதம். இன்றைய இந்தியக் குடிமகனோ அவற்றையெல்லாம் மிஞ்சிய வன்முறைகளை சக மனிதர்களின் மீது பிரயோகித்து வருகிறான். ஆனால், இந்திய சட்டங்களோ அரதப் பழசான பிரிட்டிஷார்களின் சட்டங்களை அடிப்படையாக கொண்டவைதான். பிரட்டிஷார்களின் சட்டங்கள் கூட காலத்திற்கேற்ப ஏகப்பட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், இந்தியாவிலோ புதிதாக சட்டங்கள் வருவதுமில்லை; குறைந்த பட்சம் பழைய சட்டங்களையாவது முறைப்படுத்தி நடைமுறைப்படுத்துவதுமில்லை.

பொடா சட்டம் என்பது புதிதாக உருவாக்கப்பட்டதில்லை. ஏற்கனவே இருந்த தடா சட்டத்தையே கொஞ்சம் கடுமையாக்கி கொண்டுவந்ததுதான். தடா சட்டத்தை கொண்டு வந்ததும் மத்தியிலிருந்த காங்கிரஸ் அரசுகள்தான். தற்போது பொடா சட்டத்தை வாபஸ் பெற்றிருப்பதற்கு வலுவான காரணங்களை மத்திய அரசினால் எடுத்து வைக்க முடியுமா ? அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுகள் அதை தவறாக பயன்படுத்தினால் அதை கண்டுகொள்ளாமல் இருந்த பாஜக அரசைப் போல் செயல்படாமல் மாநில அரசை கண்டித்து நடவடிக்கை எடுக்க முடியுமே!

சட்டங்கள் சரிவர கையாளப்படுகிறதா என்பதை கண்காணிப்பது மட்டுமல்ல எல்லா சட்டங்களுக்கும் விதிவிலக்குகளும் உருவாக்கப்படுவது அவசியம். விதிவிலக்கு எப்போதும் தவிர்க்க முடியாதது. எத்தகைய சட்டமாக இருந்தாலும் அது இயற்றப்படும் காலத்திலும் சூழ்நிலையிலும் கால மாற்றத்தால் வரும் விளைவுகள் எல்லாவற்றையும் கருத்தில் கொள்ள முடியாது. சமூகத்தில் சகல விதமான நிகழ்தகவுகளும் சாத்தியம். பெரிதாக அநீதி ஏதாவது நிகழும் பட்சத்தில் அதை எதிர்கொள்வதற்காக சில விதிவிலக்குகள் வேண்டும். அதே சமயம் விதிவிலக்குகள் சட்டம் பிறப்பிக்கப்பட்டதன் நோக்கத்தை சிதைத்துவிடக் கூடாது என்பது முக்கியம்.

அரசியலமைப்புச் சட்டம் 19-1A பிரிவின் கீழ் அனைத்து குடிமக்களுக்கும் தரப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பொடா சட்டம் பதம் பார்ப்பது தெரிந்துதான் பாஜக அரசு பொடா மறு ஆய்வு குழுவை கொண்டுவந்தது. வைகோ மீது தமிழக அரசு தொடுத்திருக்கும் வழக்கிற்கு எந்த முகாந்திரமும் இல்லையென்று பொடா மறு ஆய்வுக் குழுவும் தெரிவித்தது. தீவிரவாத குழுவின் செயல்களில் சம்பந்தப்படாமல் அதற்கு ஆதரவு தேடுகிற வகையில் பேசுவது குற்றமல்ல என்றெல்லாம் சொல்வது பொடா போன்ற சட்டத்தை கேலிக்கூத்தாக்கிவிடும்.

வைகோவின் பேச்சு பொடா சட்டத்தின் படி குற்றம்தான் என்று மத்திய அரசு தெரிவித்ததற்கும் பின்னர் முன்னர் எடுத்த நிலையை மாற்றிக்கொண்டதற்கும் காரணமெல்லாம் அரசியல்தான். பொடா சட்டத்தை அரசியலாக்கியது பாஜக, அதிமுக கட்சிகள் என்றால் பொடா சட்டத்தின் பல்லை பிடுங்கியது காங்கிரஸ் கூட்டணியின் சாதனைதான். இனி சட்டத்தையும் நீதியையும் அரசியல்வாதிகளிலிருந்து மக்கள்தான் காப்பாற்றியாகவேண்டும்.

rajni_ramki@yahoo.com

Series Navigation

ஜெ. ரஜினி ராம்கி

ஜெ. ரஜினி ராம்கி