பீற் ட்ரேவர்ஸ் (தமிழில் : பிரேமிள்)
தனது ஜன்ம பூமியான இந்தியாவிலிருந்து கி பி 1000- அளவில் பெளத்தம் பெருமளவுக்கு மறைந்து விட்டது. முஸ்லிம் படையெடுப்பு , பெளத்த பிட்சுக்களின் வீழ்ச்சியுற்ற ஒழுக்கம், அரசர்களின் போஷணைகளை இழந்தமை என்பன போன்ற வித வித விளக்கங்கள் இதற்குத் தரப் பட்டுள்ளன. இப்பொழுது இந்தப் பிரசினையைச் சந்திக்கிற சிறு நூல் ஒன்று வந்திருக்கிறது. (How and Why Buddhism declined in India, A S Ahir, Published by Ven . L. Ariyawasana, The Mahabodhi Society of India , Buddha Vihara, New Delhi 110011). மேலுள்ள ஒவ்வொரு உண்மையான காரணத்தையும் , இந்த சிறு நூல் ஆய்கிறது. ஒவ்வொரு வகையான முக்கியத்துவத்தை மேலுள்ளவற்றுக்குத் தந்தபடி , நூலாசிரியர் ஒரு தனிப் பட்ட சிரேஷ்ட காரணத்தை நோக்கி மிகுந்த கனத்துடன் வருகிறார். புத்தரின் அரசியல் சமூக சமத்துவம் ஹிந்துக்களாலும் அவர்களது பிராமணப் பூசகத் தலைவர்களாலும் சளைக்காமல் எதிர்க்கப் பட்டமை. ஜாதீய நிர்ணயத்துக்கு புத்தர் கொடுத்த எதிர்ப்பினுள் இந்த சமத்துவக் கொள்கை பிரதிஷ்டை பெற்றுள்ளது.
புத்தரின் காலமான கிறிஸ்துவுக்கு முந்திய ஆறாம் நூற்றாண்டில் , இந்திய சமூகம் (பல்வேறு வகைகளில் இன்று கூட ) மாற்றத்துக்கு இடந்தர இயலாத மரத்த நிலையில் இருந்திருக்கிறது. (திவ்ய உணர்வினால் ஊக்கமடைந்து பிறந்ததாகக் கூறப்பட்ட ) வேதங்களைக் கற்க யோக்கியதை உள்ள ஒரே வகுப்பினராக முதலில் பிராமணர்கள் , பிறகு போர்வீரர்களான க்ஷத்திரியர்கள் , மூன்றாவதாக வியாபாரிகளான வைசியர்கள், பின்பு கீழ் தொழில்களைச் செய்கிற சூத்திரர்கள் எனப் பிரிக்கப் பட்டிருந்த சமூகம் அது. இந்த ஜாதீய நிர்ணயத்துக்கு வெளியே தீண்டப் படாதோர் (ஹரிஜனங்கள்) என்று ஒதுக்கப் பட்டவர்கள் இருந்தனர். அநாதரவாக பிரஷ்டிக்கப் பட்ட இவர்கள் அன்று (இன்றும்) சமூகத்தின் அடிமட்ட வாசிகள் குடிமக்களது குப்பை , கழிவுகளை அகற்றும் கடன் இவர்களுடையது. இன்று அவர்கள் ஜாடை மொழியில் ‘Scheduled Castes ‘ என்று அழைக்கப் படுகின்றனர். சமூகத்தின் எல்லாச் சீரழிவுக்கும் மொத்தமாகப் பழி ஏற்பவர்களும் இவர்கள் தான். இந்த சமூக நிர்ணயத்திற்கு ஒரு புராண ரீதியான நியாயம் அன்று ( இன்று கூட என்று நினைவூட்டுகிறார் ஆசிரியர்.) வேதங்களில் காட்டப் பட்டுள்ளது. இவ்விதமாக மரத்துப் போய்க் கிடக்கும் சமூகம் ‘சதுர்வர்ணம் ‘ என்று அழைக்கப் படுகிறது.
தமது முழு பலத்தையும் கொண்டு புத்தர் இந்த ஜாதீய நிர்ணயத்தை எதிர்த்து பெருமளவுக்கு இந்தியாவில் அதை அழிவடையச் செய்தார். இதைச் செய்ததன் மூலம் பிராமணப் பூசகர்களின் ஆதிக்கத்தைத் தீர்க்கமாக வலுவிழக்க வைத்தார். சமூகத்தில் தங்களுக்கு இருந்த உயர் நிலை , ஜாதீய நிர்ணயத்தை பொருளாதார ரீதியில் உபயோகித்துப் பெற்ற செல்வம் ஆகியவற்றை எல்லாம் பூசகர்கள் இழந்தனர். இதனால் புத்தரை அவர்களால் மறக்க முடியவில்லை.
காலஞ்சென்ற அம்பேத்கர் வார்த்தைகளில் ‘பிராமணீயத்தின் காரியார்த்த சித்தாந்தம் ஏற்றத் தாழ்வு தான். வேரும் கிளையுமாக அதை வெட்டியவர் புத்தர் பிரான். சமத்துவத்தை மிக உறுதியாகக் கடைப் பிடித்தவர் அவர்.. ஜாதீயத்துக்குச் சார்பான எந்த வாதமும் அவரால் தகர்க்கப் படாமல் விட்டு வைக்கப் பட்டதில்லை. ‘ பெளத்தவாதத்தை அழிப்பதற்காகச் செய்யப் பட்ட முயற்சிகளுக்கு மத ரீதியான காரணம் இல்லை என்பது நூலாசிரியரின் முடிவு. நீதியுணர்வு இல்லாத ஒரு பொருளாதார முறையிலிருந்து பிறந்த சமூக அரசியல் உணர்வே காரணம் என்கின்றார் அவர்.
ஹிந்துக்களும் அவர்களுடைய பிராமணப் பூசகர்களும் இந்தியாவிலிருந்து பெளத்தத்தை மொத்தத்தில் அகற்றி விட்டார்கள் என்றால் எவ்விதம் அதை அவர்கள் செய்தார்கள் ? நூற்றாண்டுக் கணக்காக காலங்களினூடே பிரச்சாரம் என்ற கருவி பலன் தரத் தக்க விதமாக உபயோகிக்கப் பட்டது என்று கூறி , ஆசிரியர் அதற்குப் பல உதாரணங்களைக் காட்டுகிறார். மனு தர்மத்தில் , ஒரு உதாரணமாக, ‘பெளத்தனைத் தீண்டி விட்டவன் . .ஸ்நானம் செய்து தன்னைச் சுத்திகரித்துக் கொள்ள வேண்டும் ‘ என்ற வார்த்தைகள் காணப் படுகின்றன. பெளத்தத்தை இழிவு படுத்த எந்த சந்தர்ப்பம் வந்தாலும், அதைப் பெளராணிகர்கள் விட்டு வைக்க வில்லை. பேராபாயத்திலிருந்து தப்பிப்பதற்குக் கூட ஒரு பெளத்தனின் வீட்டிற்குள் ஒரு பிராம்மணன் காலெடுத்து வைப்பது மகாபாவம் என்று கூறுகிறது பிருஹண்ணார்த்திய புராணம். விஷ்ணு புராணம் புத்தருக்குக் ‘காமன் ‘ என்று பட்டயம் அளிக்கிறது.
பெளத்தத்துடன் சம்பந்தப் பட்டது எல்லாமே ஊழலும் இழிவும் தான் என ஹிந்துக்களை நம்ப வைப்பதற்காக புத்த மடங்களுக்கும், ஸ்தூபிகளுக்கும் தூஷனையான நாமகரணங்கள் அவ்வப்போது சூட்டப் பட்டன. உ-ம்: ஆந்திரப் பிரதேசத்திலுள்ள காந்தசீல ஸ்தூபி , ‘ வேசிமலை ‘ என்று பெயரிடப் பட்டமை. உத்தர்ப் பிரதேசத்தில் உள்ள குஸீநாரா , புத்தர் மறைந்த ஸ்தலம் என்பது பலரும் அறிந்த விஷயம். நூற்றாண்டினது காலங்களாக, கோடிக் கணக்கான பெளத்தர்கள் இந்த இடத்திற்கு குழுமி வந்திருக்கிறார்கள். இது பிராமணர்களுக்குக் கலக்கம் தந்ததினால் , குஸீநாராவிற்குப் போனவன் நரகத்துக்குப் போவான், அவனுக்கு மறு ஜன்மம் கழுதை ஜன்மம் தான் என்ற வதந்தியைப் பரப்பினார்கள். நூற்றாண்டு நூற்றாண்டாகத் தொடர்ந்து நடந்த இந்தப் பிரசாரம், சொன்னது எதையும் நம்புகிற மக்களிடையே ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.
திரும்பவும் உருவெடுத்த ஜாதீய நிர்ணயத்தைக் காப்பாற்றியபடி , அது பாதிக்கப் படாத விதமாக புத்தரின் தத்துவங்களை ஹிந்துத்துவத்துடன் இணைப்பதற்குப் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்கள் பிராமணர்கள். ஒரு புறம் புத்தரைப் பழித்த அதே இயக்கத்தின் இன்னொரு புறத்தில் , விஷ்ணுவின் அவதாரமாக்கப் பட்டு ஹிந்துக் கடவுளர்களுடன் சேர்க்கப் பட்டமை கூட ஆசிரியரால் குறிக்கப் படுகிறது. பெளத்தர்கள் ஹிந்துக்களிடமிருந்து இரவல் வாங்கியிருந்தார்களெனினும் அது இயற்கையான அவ்வப்போதைய சில்லறை விஷயமாகும். ஆனால் பெளத்தத்திடமிருந்து திட்டப்பிரகாரம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை கவனத்தில் கொண்டு பிராமணர்கள் இதைச் செய்துள்ளனர். நாகர்சுனரின் தத்துவம் உரியபடி தண்ணீர் கலக்கப் பட்டு சங்கரரின் ஆசிரியரான கெளடபாதரினால் வேதாந்தத்திற்குள் உறிஞ்சப் பட்டுள்ளது. மேலைத் தேய பெளத்தர்களுக்கு இந்த சரித்திரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றன.
மஹாபாரதம் , பிரசார நோக்கங்களினால் பிராமண இனவாதிகள் மூலம் திருத்தப் பட்டிருக்கிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக பகவத் கீதை திரும்ப எழுதப் பட்டுள்ளது. தம்மபதம் என்ற பிரசித்தமான பெளத்த நூலில் உள்ள எத்தனையோ பகுதிகள் கீதையுள் அப்படியே தூக்கி வைக்கப் பட்டமை இந்த இயக்கத்தின் மூலம் நடந்த ஒன்று. இதற்குப் பல விதமான உதாரணங்களை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார் என்பதும் இந்த விபரம் எனக்கு அதிர்ச்சி தந்த ஒன்று என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கன. பெளத்தத்திற்கு மிக முக்கியமான ‘தர்மம் ‘ என்ற வார்த்தை கீதையில் ‘நான்கு ஜாதியினரும் உலக வாழ்வில் கடைப் பிடித்தாக வேண்டிய கடமைகள் என்று திருகலாக மொழிபெயர்ப்படைந்துள்ளது. தெளிவாகவே இது ஒரு அபத்தமாகும்.
ஹிந்து வெறியர்களால் பெளத்தம் இழிவு படுத்தப் பட்டு திருகலாக்கி பயன் படுத்தப்பட்டது மட்டுமல்ல. அது வெவ்வேறு ஹிந்து அரசர்களின் கொடுமைகளுக்கும் பலியானமை கூட , அதன் வீழ்ச்சிக்குக் காரணமாகும். கிறிஸ்துவுக்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் புஷ்ய மித்ரனும், கி.பி.ஆறாம் நூற்றாண்டில் சசாங்கனும் செய்த கொடுமைகள் தனித்து குறிப்பிடப்பட வேண்டும். புத்த பிட்சுக்கள் கூட்டம் கூட்டமாகக் கொன்று குவிக்கப் பட்டமை, பல புத்தக் கோயில்களும் , விஹாரங்களும் கொளுத்தப் பட்டமை ஆகியன அஹிர் அவர்களால் சுட்டிக் காட்டப் படுகின்றன. புத்த சந்நிதிகள் நூற்றுக் கணக்கான வருஷங்களாக , இன்று கூட நிர்ச்சாந்நித்தியப் படுத்தும் கைகளினால் பாதிக்கப் பட்டு வருகின்றன. ராஜீயக் கொடுமைகள் ஓரொரு காலங்களில் திரட்சி கொண்டவை. இவற்றின் காட்சிப் பிரம்மாண்டம் இல்லாததெனினும் , இந்தியாவில் பரந்து பட்டு நூற்றாண்டுக் கணக்காக திட்டமிட்டுத் தொடர்ந்த சலியாத பகைமை மொத்த முடிவில் மேற்படி கொடுமைகளினால் அழிவையே ஏற்படுத்தியிருக்கிறது.
இவ்வளவும் நிச்சயமாக ஹிந்துக்களுக்கு எதிரான ஒரு மாபெரும் குற்றச் சாட்டாகவே சேர்ந்து நிற்கின்றன. (நம்) மேலைத் தேயங்களில் இவ்வளவு உண்மை விபரங்களும் தெரியாத படி எவ்வளவு தூரம் மறைக்கப் பட்டுள்ளது என்பதைப் பார்த்து மலைப்பு ஏற்படுகிறது. இருந்தும் பெளத்தர்கள் விரும்பியிருந்தால் ஹிந்துக்களின் இந்த இயக்கத்தைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் என்கிற முடிவையும் மறுக்க இயலவில்லை. சம்சார வாழ்வில் ஈடு பட்டிருந்தவர்களுக்கு பெளத்தம் அனுசரனையாக எதுவும் செய்யவில்லை என்பதும், இதனால் சுயமாக பெளத்தத்தை போஷிக்கவென எவரும் முன்வரவில்லை என்பதும் திடுக்கிட வைக்கிற உண்மைகள். இதே போல வியப்பை அளிக்கும் விபரமாக, பெளத்த சம்சாரிகள் பிராமண அனுஷ்டானங்களை ஜனன, கல்யாண , மரணச் சடங்குகள் எதிலும் கைக்கொள்ள வில்லை என்பதும் நிற்கிறது. டாக்டர் Conze சுட்டிக் காட்டுவது போல, பெளத்த மடங்கள் எந்த வகையில் பலம் குன்றினாலும் , அதைத் தொடர்ந்து பிராமணீயத்தினால் இழைக்கப் பட்ட இறுகிய சமூகத்துக்குள் பெளத்த சம்சாரிகள் உறிஞ்சப் பட்டிருக்கிறார்கள்.
ராஜீய போஷணையிலேயே பெளத்தம் பெருமளவுக்குத் தங்கியிருந்தது என்பதில் சந்தேகமில்லை. கி மு மூன்றாம் நூற்றாநில் இந்த போஷணை முதன் முதலில் அசோகச் சக்கரவர்த்தியினால் அளிக்கப் பட்டிருக்கிறது. கி பி 647-ல் கனிஷ்கரின் மரணத்தோடு இந்த ராஜீய போஷணை மறைகிறது. அரசனின் தயவை மட்டுமே நம்பியிருந்த இந்நிலை அரண்மனைச் சதிகளுக்கும் கொந்தளிப்புகளுக்கும் பெளத்தத்தை இலக்காகியுள்ளது. அரச போஷணையினால் கிடைத்த செல்வம் பெளத்தத்தை சமனிய ஜனங்களிடத்திலிருந்து தனிமைப் படுத்தியதுடன் பெரிய மடாலயங்களின் எல்லைகளை மீறிப் பிட்சுக்களைக் காண முடியாத நிலையும் பிறந்தமை கவனிக்கப் பட வேண்டும்.
இன்னொரு விசித்திரமான உண்மையையும் அஹிர் அவர்கள் நினைவூட்டுகிறார்கள். புத்தர் பிரானின் அன்றைய ஜீவ வேகத்துக்கு முரணான மரணப் பீதி பெளத்தர்களைப் பீடித்திருந்தது. ஒரு ஆயிரம் வருஷங்களாகவே பெளத்தத்தின் மறைவு பற்றிய தீர்க்க தர்சன வதந்திகள் பெளத்தவட்டாரங்களில் பரவியதன் விளைவு இது. ஹிந்துக்கள் தங்கள் பிரசாரங்கள் மூலம் அழுத்தமாகக் குறிப்பிட்ட ஒழுக்கக் கேடுகளுக்கும் இதற்கும் சம்பந்தம் இருந்ததா என்பது சந்தேகத்திற்கு உரிய ஒன்று. அஹிர் அவர்கள் தரும் சாட்சியங்கள் வேறு வகையானவை. நிச்சயமாகக் கடைசி வரை புத்த நிறுவனங்கள் திபேத் போன்ற இடங்களுக்கு புத்த தர்மத்தின் பிரதிநிதிகளாக மிக உந்நத நிலையடைந்தவர்களை அனுப்ப முடிந்திருக்கிரது என்பது , ஹிந்துக்களின் குற்றச் சாட்டுகளுக்கு மிகவும் முரணாக கனம் கொண்டு நிற்கிறது.
முஸ்லிம் படையெடுப்பு பிராமணர்கள் ஆரம்பித்த கைங்கரியத்தை நிறைவேற்றியது எனினும் அந்தப் படையெடுப்பால் பாதிக்கப் பட்டிராத தென்னிந்திய பிராந்தியங்களில் ஹிந்துத்துவத்தின் பகைமையும் பிரஷ்ட உபாயங்களுமே பெளத்தத்தின் மறைவுக்கு முக்கிய காரணம் ஆகும்.
இது வரை எனக்குப் புரியாமலிருந்த ஒரு விஷயத்தை ஆசிரியரது ஆய்வு மையம் விளக்குகிறது.; இந்தியாவில் பெளத்தம் அழிந்திருந்தும் அதன்தத்துவச் சாயம் உள்ள ஜைனம் ஏன் அழியவில்லை ? இதற்குப் பதில் ஜைனர்கள் ஜாதியத்தை ஏற்றுக் கொண்டவர்க:ள் என்பது தான். வேதங்களின் திவ்யம், ஹிந்துத்துவத்தின் இறைமைக் கொள்கை ,ஆன்மீகக் கொள்கை ஆகியவற்றை ஜைனம் நிராகரித்தும் கூட அதனை நோக்கி பிராமணீயத்தின் விஷம் செலுத்தப் படாதது இதனால் தான். ஜைனர்கள் ஸ்தாபன ரீதியாக் சம்சாரிகளுடன் உரிய உறவுகளும் கொண்டு பெற்ற உறுதியும் இருந்திருக்கிறது. இந்த உண்மைகளின் ஒளியிலே ‘புத்தர் அநாதியான இறைவனை தேசீய நிலத்திலிருந்து அகற்றியமையால் பெளத்தம் இந்தியாவில் இயற்கை மரணம் அடைந்தது ‘ என்ற சுவாமி விவேகானந்தாவின் வார்த்தைகள் உண்மைகளை அலாதியாகத் திருகிக் காட்டுகிறவையாகத் தெரியவருகின்றன.
மொத்தத்தில் இது ஒரு சோகக் கதை. இது மேலை நாட்டு பெளத்தர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். பிறப்பு அல்ல திறனே முக்கியமானது என்ற புத்தர் பிரானின் சமத்துவக் கொள்கைக்கு எதிரான பிராமண இயக்கம் , அடிப்படையில் ஒரு அரசியல் இயக்கம் தான். அகில சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் போதித்த முதல் மதம் பெளத்தமே தான்.
தீண்டாமையை அன்று புத்தர் பிரானின் இயக்கம் ஒழித்த பின்பு இன்று மீண்டும் இந்தியாவில் ஐந்து கோடி மக்கள் தீண்டப்படாதவர்களாக உள்ளனர். இவர்களுள் ஐம்பது லட்சத்திலிருந்து ஒரு கோடி வரை பெளத்தர்கள் என டாக்டர் Trevor Ling கணிக்கிறார். இவர்களுள் பலர் அம்பேத்கர் காலத்திய இதிஹாஸ பரிமாணமுள்ள இயக்கத்தின் மூலம் ஹிந்துத்துவத்திலிருந்து பெளத்தர்களானவர்கள். இவர்கள் இன்று உயர் ஜாதி ஹிந்துக்களால் கொடுமையும் கொலையும் செய்யப் படுகிறார்கள். இது மேலை நாட்டுச் செய்தி உலகை எட்டாத விஷயம்.
ஒரு அகலப் பார்வையில் ஹிந்துத்துவம் கடந்த காலத்துக்குரிய மதம் என்பதில் சந்தேகமில்லை. பெளத்தம் எதிர் காலத்துக்கும் நம்பிக்கை மூலம் எதையும் ஏற்காத மேலை நாட்டு விஞ்ஞான பூர்வமான உள்ளத்துக்கும் ஏற்றது. ஆனால் இந்தியாவில் ஹிந்துக்களின் ஜெயிப்பு , காலத்தைத் தலைகீழாக ஓடவிடக்கூடிய சாத்யத்திற்கு நிரூபணமாகும். இது இங்கே மேலை நாடுகளில் நடக்கக் கூடாது. மேனாட்டு பெளத்தத்தை உறிஞ்சி விட ஹிந்துத்வமும் இதர இயக்கங்களூம் செய்யக் கூடிய முயற்சிகள் தடுக்கப் பட வேண்டும். பல இந்திய அறிஞர்களின் எழுத்துகளில் முக்கியமாக காலஞ்சென்ற டாக்டர் ராதா கிருஷ்ணன்னின் எழுத்துகளில் மேற்படி முயற்சிகள் தெரிகின்றன. இந்திய க்ஷீணம் இங்கே நிகழக் கூடாது.
தீண்டத் தகாதவர்களென ஒதுக்கப் பட்டவர்கள் பெளத்தர்களோ அல்லவோ , அவர்களது துயர் கவனிக்கப் பட வேண்டும் . புத்தர் பிரான் சமூக ரீதியான மாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர். மேனாட்டு பெளத்தர்களான நாம் அவர்களுக்கு உதவ முடியாதா என்பது பரிசீலிக்கப் பட வேண்டும்.
(லயம் சிற்றேடு – சூன் 1994)