வெளி ரெங்கராஜன்
நாடகம் என்பது இசை மற்றும் நாட்டிய வடிவங்களின் வாயிலாகவே நீண்ட காலமாக அறியப்பட்டு வந்திருக்கிறது. இசை மற்றும் நடனப் பின்னணியில் கதை சொல்வது என்பது புலன்களை கிளர்ந்தெழச் செய்யும் ஒரு அனுபவமாகவே காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் நன்கு பரிச்சயமான தொன்மக் கதைகளும், புராணக் கதைகளும் பலமுறை நிகழ்த்தப்பட்டாலும், அவை எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதைக் கண்டு களிக்கவே மக்கள் கூடினர். இச்சூழ்நிலையில் நாடகப் பிரதியின் எழுத்துவடிவம் என்பது கோரப்படவில்லை. இவ்வாறு இந்திய நாடகம் என்பது நாட்டுப்புற இசை மற்றும் நடன மரபுகளையே பெரிதும் சார்ந்திருந்தது. இங்கும் சமஸ்கிருதத்தில் மிகச் சிறப்பான நாடகப் பிரதிகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றாலும் அவை பேச்சு வழக்கில் இல்லாத மொழியில் எழுதப்பட்டிருந்ததால் தொடர்ந்த நாடகமரபாக உருப்பெறவில்லை. இந்நிலையில் நம்முடைய நாட்டுப்புற நாடகங்களின் நிகழ்வுக் குறிப்புகள் தொகுக்கப்பட்டு அவற்றின் ஊடாக நம்முடைய நாடக வரலாறு இனம் காணப்பட்டிருந்தால் தமிழில் வளமான நாடகமேடை மரபுகள் உருவாகியிருக்கும். பிரிட்டிஷ் வருகையால் இடையில் புகுந்த ப்ரொசீனிய நாடக அமைப்பு என்பது இந்திய நகர்ப்புற வடிவமாக அடையாளம் கொண்டிருக்க முடியாது.
இத்தகைய சூழ்நிலையில் நாடகத்துக்காக நோபல் பரிசு பெற்ற ஜெர்மன் நாடகாசிரியர் பெர்டோல்ட் பிரெக்டின் ‘ஒரு பயணத்தின் கதை ‘ (Exception and the rule) நாடகம் ஒரு நிகழ்த்து பிரதியாக (Performance Text) சென்னை பல்கலை அரங்கத்தால் வெளியிடப்பட்டிருப்பது ஒரு வரவேற்கப்படவேண்டிய முயற்சியாகும். ஒரு நாடகப் பிரதியை உருவாக்க ஒரு படைப்பாளிக்கு எவ்வளவு படைப்பு சக்தி தேவைப்படுகிறதோ அதே அளவு படைப்பு சக்தி அதை காட்சிப்படுத்தி நிகழ்வாக மாற்றுவதற்கும், நாடகப் பொருள் காட்சி வடிவில் கொள்ளும் பரிமாணத்தை முறையாக அர்த்தப்படுத்துதலிலும் இருக்கிறது. பிரதியை மேடையில் மறு உற்பத்தி செய்வதல்ல நாடகம், நாடகம் என்பது வெறும் கதை சொல்லல் அல்ல, அல்லது வசனத்தை மடக்கிப் போட்டு பாத்திரங்களை உரையாட விடுவதும் அல்ல அதற்கும் மேல் ஒரு நிகழ்வுத்தளத்தில் பாத்திரங்கள் உருவாக்கும் அசைவுகளும், எழுப்பும் பிம்பங்களும், வெளிப்படும் முரண்களுமே ஒரு நாடகத்திற்கான சலனத்தை வழங்குகின்றன. இவ்வாறு பிரதியை உள்வாங்கி, வகைப் படுத்தி, காட்சிப்படுத்தும் நிலையில் ஒரு படைப்புக் கலைஞன் தான் உருவாக்க விரும்பும் நாடகச் சலனத்துக்கு ஏற்ப பிரதிக்கு இணையான ஒரு நிகழ்த்து பிரதியையும் (Performance Text) உருவாக்க நேரிடுகிறது. இன்று ஷேக்ஸ்பியர், பிரெக்ட், காம்யூ, சார்த்தர் போன்றவர்களுடைய பல நாடகப் படைப்புகள் மேடையில் சூழலுக்கேற்ற பல்வேறு அர்த்தங்கள் பெறுவதற்கு காலப்போக்கில் உருவாக்கப்பட்ட பல நிகழ்த்து பிரதிக்ள் காரணமாக இருந்திருக்கின்றன. இவ்வகையில் பிரெக்டின் தொழிலாளி, முதலாளி மற்றும் இடைநிலை ஊழியர் உறவுநிலைகள் குறித்த அடிமன பிம்பங்கள் ஒரு பயணத்தின் ஊடாக வெளிப்படுவதை இயங்கு தளமாக எடுத்துக்கொண்டு அதற்கான வண்ணத்தை நம்முடைய மரபு இசை நடன வடிவங்களின் வாயிலாக இப்பிரதி வழங்குகிறது. தமிழ் மற்றும் இலங்கைப் பகுதிகளில் நிலவி வரும் நாட்டுப்புற வடிவங்களின் ஊடாக காட்சிப் படுத்தப்பட்டு அந்த காட்சிக் குறிப்புகள் இங்கு பிரதியாக இடம் பெற்றுள்ளன.
ஒரு நல்ல நாடக நிகழ்வு என்பது இலக்கியம், கவிதை, இசை, நடனம், ஓவியம் ஆகிய பலகலைகளின் சங்கமமாக இருக்கிறது. அவ்வகையில் இந்த நிகழ்த்து பிரதியில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ள சில கவிதைகளும் நாட்டுப்புற இசைப் பாடல்களும் பிரெக்ட் நாடகத்தின் காவியத்தன்மையை வெளிக்கொணர உதவுகின்றன.
குறிப்பாக உங்களிடம் கேட்பதிதுதான். ஏதும் தொடர்ந்து
நிகழ்வதாலே இயல்பாகாது.
ஏதும் இயல்பானதென்று கொள்ள வேண்டாம்
படுமோசமான குழப்பம்மிக்க இந்தக் காலத்தில்
ஒழுங்கான ஒழுங்கீனம், திட்டமிட்ட தடுமாறல்
மனிதம் அழிந்துபோன மானிடங்கள்.
நடவாதென்னும் எண்ணத்தை முன்னதாய்க் கொண்டே
ஏதும் மாற்ற முடியாதெனப் பெற்ற அறிவு.
என்பதுபோன்று ஆங்காங்கே இடம்பெறும் வரிகள் நாடகத்தின் சாரத்தை உள்வாங்கியதாக இருக்கின்றன. நாடகத்துக்குள் ஒன்றிவிடாமல் இடையிடையே வெளியே வந்து பார்வையாளனை சிந்திக்கத் தூண்டும் உத்திகள் கொண்ட பிரெக்ட் ஆதாரமான உறவுநிலைகள் குறித்த இந்த நாடகத்தில் மொழியை கையாளுவதின் மூலமே ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறார் பிரெக்டின் ஆதார பிரதியின் மொழியாக்கமும் இணையாகத் தரப்பட்டிருந்தால் ஆதார பிரதி மற்றும் நிகழ்த்து பிரதியின் தன்மைகள் குறித்த நாடக ரீதியான அனுமானங்களை வாசகன் பெற்றிருக்க முடியும். இந்த நிகழ்த்து பிரதி பிரெக்டை மிகவும் எளிமைப் படுத்திவிட்டதான தோற்றம் கொண்டு உறவுச் சிக்கலின் மற்ற பரிமாணங்களுக்குள் நுழைய குறைவான சாத்தியங்கள் கொண்டதாக இருக்கிறது. இன்று உறவுநிலைகள் மேலும் சிக்கலாகி அதிகாரங்கள் இடம் பெயர்ந்துள்ள நிலையில் அதிகாரம் என்பதுதான் கேள்விக்குறியதாக இருக்கிறது. பிரெக்டின் பிரதி அதிகாரம் குறித்த கேள்வியாகவே எதிர்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
நம்முடைய நாட்டுப்புற வடிவங்களின் பின்னணியில் பிரெக்டை அணுகிப் பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை இந்த நிகழ்த்து பிரதி வழங்குகிறது இதுபோன்று பல நிகழ்த்து பிரதிகள் அச்சு வடிவம் பெறுவது நாடகமாக்கல் குறித்த அணுகுமுறையை மேலும் செழுமைப்படுத்துவதோடு நாடகக் குழுக்கள் மிகவும் அருகிப்போன தமிழ்ச் சூழலில் நல்ல நாடகக் குழுக்கள் காலப்போக்கில் உருவாக வாய்ப்பளிப்பதாக இருக்கும்.