“பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ ஒபாமா”

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ஆல்பர்ட் பெர்னாண்டோ


Image1985ல் சிகாகோ நகரில் ஒரு கோவில் நிர்வாக அமைப்பில் ஒரு அசாதரண பங்களிப்பாளராக இருந்த ஒருவர், சிகாகோ நகரில் ஒரு இல்லத்தை வாங்குவதற்கு போதிய விலை தர இயலாத நிலை இவற்றையெல்லாம் தாண்டி ஒரு செனட்டராகிய நான்குவருடங்களில் அந்த அவைக்கும் அமெரிக்காவுக்கும் அதிபரான முதல் கறுப்பின அதிபராக, அமெரிக்காவில் அரசியல் செல்வாக்கு எதுவுமில்லாத ஒரு செனட்டர் அமெரிக்காவால் நன்கறியப்பட்ட ஹிலாரி கிளிண்டனை புறம்தள்ளி, செல்வாக்குள்ள செனட்டர் ஜான் மெக்கைனை எதிர்கொண்டு, அமெரிக்க அதிபர்களின் 104 வருட‌ வரலாற்றில் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க அதிபராக, முதல் இளம் அதிபராக, மார்ட்டின் லூதர் கிங் கனவு கண்ட மாமனிதராக… பராக் ஒபாமா அதிபராகியுள்ளார். எத்தனையோவிதங்களில் முதல்..முதல்..முதல் அதிபராக வெள்ளை மாளிகையில் காலடி எடுத்துவைக்கிறார் அமெரிக்காவின் 44வது அதிபராக‌ ஒபாமா!

முதல்..முதல்..முத‌ல்வ‌ர்!

பராக் ஒபாமா 349 (ஜான் மெக்கெய்ன் 163) வாக்குக‌ள் பெற்று ச‌ரித்திர‌ம் ப‌டைத்த‌ முத‌ல்வ‌ர்!

புஷ் வெற்றிபெறாத‌,அல்கோர் வெற்றி பெறாத‌ மாநில‌ங்க‌ளிலெல்லாம் வெற்றிவாகை சூடிய‌ முத‌ல்வ‌ர்!

மெக்கெய்ன் ந‌ம்பிக்கையோடு எதிர்பார்த்த‌ மாநில‌ங்க‌ள் எல்லாம் வெற்றிக்க‌னியை வென்றெடுத்த‌ முத‌ல்வ‌ர்!

க‌றுப்பின‌ பாதிரியார் ரெவ‌ரெண்ட் ஜெஸ்ஸி ஜாக்ச‌ன் அதிப‌ர் தேர்த‌லில் நின்று தாக்குப்பிடிக்க‌முடியாம‌ல் ஓடிய‌ வ‌ர‌லாற்றைத் த‌க‌ர்த்து வென்ற‌ முத‌ல்வ‌ர்!

ஹிலாரி கிளிண்ட‌னை தானாக‌வே வில‌க‌வைத்து அவ‌ர் வாயாலேயே த‌ன‌து தேர்த‌ல் முழ‌க்க‌த்தை செய்ய‌ வைத்த‌தில் முத‌ல்வ‌ர்!

த‌ன‌து தேர்த‌ல் பிர‌ச்சார‌ யுத்தியை இதுவ‌ரை எந்த‌ அதிப‌ரும் மேற்கொள்ளாத‌ வ‌கையில் திற‌ம்ப‌ட‌ அமைத்து எந்த‌ச் சிறு பிச‌கும் இல்லாம‌ல் வ‌ழிநட‌த்திய‌தில் முத‌ல்வ‌ர்!

பேர‌ணி, பொதுக்கூட்ட‌ம் எதுவானாலும் மாநாடுபோல‌ பிர‌ம்மாண்ட‌மாக‌ ந‌ட‌த்தி வெள்ளையின‌த்த‌வ‌ரை புருவ‌ம் உய‌ர்த்திப் பார்க்க‌ச் செய்த‌தில் முத‌ல்வ‌ர்!

குடிய‌ர‌சுக் க‌ட்சியின் சார்பில் துணை அதிப‌ருக்கு போட்டியிட்ட‌ சாராபைலின் த‌ன‌து கவர்னர் அதிகார‌த்தை துஷ்பிர‌யோக‌ம் செய்திருக்கிறார் என்ற நிலையில் ஒபாம‌வை முஸ்லிம் என்றும்,பொய்யாக‌ கிறித்த‌வ‌ர் என்று ப‌திவு செய்கிறார் என்றும், ஒசாமா பின்லேட‌னுட‌ன் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ட‌ கூட்ட‌த்தோடு தொட‌ர்புடைய‌வ‌ர் என்றெல்லாம் பேசிய‌ போதும்கூட‌ அதைப்ப‌ற்றி எதுவும் சொல்லாம‌ல் நாக‌ரீக‌மாக‌ உய‌ர்வாக‌ப் ப‌த்திரிக்கையாள‌ர்க‌ளிட‌ம் பேசிய‌ ஒபாமா இம‌ய‌ம் போல் உய‌ர்ந்து நின்ற‌தில் முத‌ல்வ‌ர்தான்! இப்ப‌டி அடுக்கிக்கொண்டே போக‌லாம்.

எந்த‌க் கூட்ட‌த்திலும் எவ‌ரையும் இழித்தோ ப‌ழித்தோ ஒருவார்த்தை சொல்லாத சபை நாக‌ரீகம், மேடை நாகரிகம் காப்ப‌வ‌ராக‌வே இறுதிவ‌ரை இருந்தார்.

அமெரிக்காவில் அறுதிப்பெரும்பான்மை பெற்ற முதல் அதிபராக, 40 வருடங்களாக‌ அதிபர் தேர்தலில் எவரும் பெறாத‌ அறுதிப்பெரும்பான்மை வாக்குகள் பெற்றவராக ஒபாமா! தடைக்கல்லை எல்லாம் சாதனைக்கல்லாக மாற்றி இந்த உயர் நிலையை அடைந்த சாதரணர் ஒபாமா!

எண்ண அதிர்வுகள்….

1900ங்களில் அமெரிக்கா எப்படி எழுச்சியுடன் எழுந்து நின்றதோ, அத்தகைய நிலை இடைப்பட்டகாலத்தில் வீழ்ந்து வசதியுள்ளவர்கள் மேலும் வசதியுள்ளவர்களாக, ஏழைகள் ஏழைகளாகவே இருக்க என்ன காரணம்? இவர்களுக்கான விடிவு எப்போது? எப்படி? யாரால்? என்று ஒபாமா சிந்தித்திருக்காவிட்டால் அமெரிக்காவில் அவரும் ஒரு வழக்கறிஞராக தன் வாழ்க்கையை எங்கோ ஒரு மூலையில் நடத்திக் கொண்டிருந் திருப்பார்!

“முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனப் பேராளர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல; அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” என்பது அவரது மேடைப்பேச்சுகளில் எதிரொலித்தது அவரின் அடிமனத்தின் எண்ண அதிர்வுகளை எழுச்சியோடு எடுத்தியம்பும் வைர வரிகள்!
Imageஒபாமா தந்தையுடன்….

ஈராக் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் அதிபர் புஷ்ஷின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஒபாமா உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு தீவிர சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வில் போட்டியிட்ட அவர் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனை எதிர்த்து களம் இறங்கினார்.

அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி மிகச் சிறப்பு வாய்ந்தது என்பதை எவரும் மறுக்கவியலாது. அமெரிக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்படும் இவரது அளப்பரிய வெற்றி!

பெருவாரியாக….
நிறம்,இன வேற்றுமையை புறம்தள்ளி, ஒபாமாவின் மீது வாரி இறைக்கப்பட்ட அவதூறுகள், தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட கொச்சைப்படுத்தி எதிரணி மோசமாக சித்தரித்த கேலிக்கூத்தை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு இன்று அமெரிக்க மக்கள் தமது வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் பெருவாரியாக வாக்களித்து…..மிகத் தெளிவாக வாக்களித்துத் தேர்வுசெய்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தி்ல் பேராசிரியராக உள்ள கார்த்திக் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழு நடத்திய ஏசியன் அமெரிக்கன் சர்வேயில் 60 சதவீதத்துக்கும் அதிகமான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்கள் பராக் ஒபாமாவுக்கே வாக்களித்துள்ளது தெரிய வந்துள்ளது.

மார்ட்டின் லூத்தர் கிங்காக….

அவரது சொந்த மாநிலமான இல்லிநாய்ஸின், சிகாகோவின் கிராண்ட் பார்க்கில் சுமார் இரண்டு இலட்சம் பேர்கள் அவரது வெற்றியை எதிர்பார்த்து அந்தக் குளிரையும் பொருட்படுத்தாது குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் கூடியிருந்தனர்.

ஒபாமா வெற்றியடைந்த செய்தி வெளி வந்ததும் அவரது ஆதரவாலர்கள் பலர் ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார்கள். பாஸ்ட்ட‌ர் அருட்திரு.ஜெஸ்ஸியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியவண்ணமிருந்தது! “இந்த வெற்றி, இந்த இரவு என்னுடையது அல்ல உங்களுடையது!” ஆபிரகாம் லிங்கன் சொன்ன வாசகங்களை மேற்கோள் காட்டி உங்களின் ஊழியனாக இருப்பேன் என்று மகிழ்ச்சி பொங்க ஒபாமா அவர்களிடையே தோன்றிச் சொன்னபோது ஒபாமாவை மற்றொரு மார்ட்டின் லூத்தர் கிங்காக எண்ணினர். நடுக்கும் குளிரிலும் கடல் அலைபோல் திரண்டிருந்த‌ அமெரிக்கர்களின் கரவொலி விண்ணைத் தொட்டது.

“இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட மாற்றம் வந்துவிட்டது. நமக்கு புதிய உத்வேகமும் பலமும் கிடைத்துள்ளது. நம் நாட்டை உருவாக்கியவர்களின் கனவுகள் நம் காலத்தில் நிறைவேறியிருக்கின்றன. இது நம் ஜனநாயகத்தின் பலத்தை காட்டுகிறது. இப்போது வரலாற்றின் இதயத்தில் கையை வைத்துப் பார்த்தால் அதன் மகிழ்ச்சித் துடிப்பை நீ்ங்கள் உணர முடியும்.
பணத்தை மக்கள் தந்தார்கள். 5 டாலர், 10 டாலர் என தங்களது சிறிய சேமிப்புகளை அன்புடன் தந்தார்கள். சிறுவர், சிறுமிகளும் நிதி கொடுத்தார்கள். தேர்தல் பிரச்சாரத்தை கட்சியினரோடு சேர்ந்து மக்களே நடத்தினார்கள். இதனால் கிடைத்த வெற்றி இது.

__________________________________________________________________________________________________

“சாதாரண மக்கள் வளமாக இல்லாவிட்டால் வால் ஸ்ட்ரீட் வாழ முடியாது. சாதாரண தெருக்களில் நடமாடும் மக்களை தவிர்ததுவிட்டு வால் ஸ்ட்ரீட் மட்டும் செழித்துவிட முடியாது.” ஒபாமா.
___________________________________________________________________________________________________

அமெரிக்காவின் இனவாதம் குறித்த கேள்விகளுக்கு இந்த வெற்றி ஒரு பாடம். இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல். உங்கள் குரலை தொடர்ந்து கேட்பேன், அதன்படியே செயல்படுவேன்.” என்ற ஒபாமாவின் உணர்வுப்பிழம்பான சொற்பொழிவை உலகெங்கும் தொலைக்காட்சியில் கேட்டு ஆனந்தக் கூத்தாடினர். அதே நேரத்தில் அவருடைய தேர்தல் கால உறுதிமொழிகள் சில நாடுகளை அச்சமடையவும் வைத்துள்ளது!

அதே நேரத்தில், ஜான் மெக்கெய்ன் அரிசோனாவில் தனது தோல்வியால் அதிருப்தியாகிய தன் கட்சியின் ஆதரவாளர்களிடையில் பேசும்போது, “தேர்தல் முடிவின் மூலம் அமெரிக்க மக்கள் தமது கருத்தை மிகத் தெளிவாக பகிரங்கமாகச் சொல்லிவிட்டார்கள். ஒபாமாவை தொலைபேசியில் அழைத்து என் வாழ்த்தைச் சொல்லிவிட்டேன். தேர்தல் கூட்டங்களில் எவ்வளவோ கருத்துக்களை ஒபாமாவுக்கு எதிராகப் பயன்படுத்தியிருந்தாலும், ஒபாமா அடுத்த நான்குவருடங்கள் அமெரிக்க அதிபராக பணியாற்ற எனது வாழ்த்துக்கள்” என்றார்.

புஷ் வ‌ர‌வேற்பு…

எதிர் வரும் ஜனவரி 20ம் தேதி பதவியிலிருந்து விலகப் போகும் தற்போதைய அதிபரான புஷ்,”5ம்தேதி காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு விடுத்த செய்தியில் புதிய அதிபருக்கு வாழ்த்தையும், அலுவல் மாற்றத்துக்கான ஒத்துழைப்பை ஒபாமவுக்கு முழுமையாக அளிப்பேன், ஒபாமவையும் அவரது மனைவி மிச்செல் ஆகியோரை வெள்ளைமாளிகைக்கு வரும்படி தொலைபேசியில் பேசும்போது கேட்டுக்கொண்டேன்,” என்று செய்திவிடுத்தார். ( அய்சன் ஹோவர் அதிபராக இருந்தபோது ஜான் கென்னடி புதிய அதிபராக பதவி ஏற்கவிருந்த நிலையில் அலுவல் மாற்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.)

புதிய‌ பாதை…புதிய மாற்றம்….
Imageதாய்வழி பாட்டியுடன்….

“இன்று அமெரிக்க‌ ம‌க்க‌ள் த‌ம‌க்கான‌ புதிய‌ பாதையை தெளிவாக ஏற்படுத்தி
விட்டார்கள். இந்தப் பாதையானது அமெரிக்காவின் புதிய‌ மாற்ற‌த்திற்கான‌து” என்று க‌லிபோர்னியாவின் சென‌ட்ட‌ர் நான்சி பெல்லோசி கூறியுள்ளார். இது நான்சியின் கருத்து மட்டுமல்ல; அமெரிக்க மக்களும் அந்தப் புதியபாதையை, புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்!

“ஒபாமாவும், ‌ டெலாவரைச் சேர்ந்த‌ சென‌ட்ட‌ர் ஜோச‌ப் பைடனும், இன்னும் 76 நாட்களில் அதாவது எதிர் வ‌ரும் ஜ‌ன‌வ‌ரி மாத‌ம் 20ம் தேதி , 2009ம் ஆண்டு முறையே அமெரிக்காவின் அதிபராக‌‌வும், துணை ஜ‌னாதிப‌தியாக‌வும் ச‌த்திய‌ப் பிர‌மாண‌ம் எடுத்துக் கொள்வார்க‌ள்.

ஒபாமாவின் முன்….
அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஒபாமாவின் முன்,” ஈராக்கிலும்,ஆப்கானிஸ்தானிலும் ந‌ட‌த்தும் நீண்ட‌கால‌ப் போர் ப‌ற்றிய‌ தீர்வுகள், பயங்கரவாதம், பெட்ரோல், மருத்துவ காப்பீடு,பொருளாதாரத்தை மேம்படுத்தல், வேலைவாய்ப்பு ஏற்படுத்தல், வருவாய்க்கு விதிக்கப்படும் வரிவிகிதங்களில் மாற்றம், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு, மேம்படுத்தப்பட்ட கல்வி முறை மாற்றங்கள்….இப்படி எண்ணற்ற சவால்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. இந்தக் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வெள்ளைமாளிகைக்குள் நுழையவிருக்கிறார்.

அமெரிக்காவுக்கு “ஒரு அரசியல் மாற்றம் தேவை” என்று முழங்கி அந்த முழக்கத்தின் எதிரொலிதான் அவரை இன்று வெள்ளை மாளிகையில் நுழையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசியல் இந்திய அரசியலிலிருந்து வெகுவாக மாறுபட்டது. ஒபாமா செய்யவிரும்பும் எந்த ஒரு செயலுக்கும் அமெரிக்க அரசியல் கழுகுகள் எளிதில் இடம்கொடுத்துவிடாது. இந்தக் கழுகுகளுக்கு மத்தியில் தானும் இரையாகிவிடாமல், தன்னை நம்பி வாக்களித்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பருந்தைப் பறந்து தாக்கி குஞ்சுகளை மீட்கும் கோழியாக…… இரட்சகராக வருவாரா, ஒபாமா? என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.

Imageஒபாமா – மிச்செல் இராபின்சன் – திருமணம்

அமெரிக்க‌ காங்கிர‌ஸ் ச‌பையிலும் ஒபாமாவின் க‌ட்சியின‌ரே பெரும்பான்மையாக‌ தேர்வாகியிருக்கின்ற‌ன‌ர். 349இடங்களை ஒபாமவும் 173 இடங்களை எதிரணிக்கும் கொடுத்து துடிப்பு மிக்க இளைஞரான பராக் ஒபாமாவின் சிந்தனைகள் அமெரிக்காவில் நிச்சயம் பெரும் மாற்றத்தைக் கொண்டுவருவார் என்று நம்புவோம்! மார்ட்டின் லூத்தர் கிங்கின் மறுவுருவாக அவரின் எண்ணப் பிரதிபலிப்பாக வெள்ளை மாளிகைக்குள் கால‌டி எடுத்து வைக்கும் ப‌ராக் ஒபாமா அமெரிக்க வரலாற்றில் புதிய சரித்திரம் படைக்க வாழ்த்துகள்!!

வல்லரசை நல்லரசாக்க….!

ஒ(து)டுக்கப்பட்ட மக்களிலிருந்து ஒருவன் மேலெழுந்து வந்து, உலகின்
வல்லமை மிக்க ஒரு அரசின் தலைவனாக எழ முடியும் என்பதை அமெரிக்க மக்கள் நடத்திக்காட்டி இருக்கிறார்கள்.

ஒபாமா அமெரிக்காவை அடியோடு மாற்றி பேர‌ற்புத‌த்தை செய்துவிடுவார் என்று சொல்வ‌தை விட‌ ஒரு பெரும் மாற்ற‌த்தை ஏற்ப‌டுத்தும் துவ‌க்க‌ப் புள்ளியாக‌ அவ‌ர் இருப்பார் என்ற‌ கோண‌த்தில் ந‌ம்பார்வை இருப்ப‌து ந‌ல்ல‌து! ஒபாமாவின் வெள்ளை மாளிகை நுழைவு ஒரு வல்லரசை நல்லரசாக்குவத‌‌ற்கான‌ ஆர‌ம்ப‌ம் என்று உர‌த்துச் சொல்ல‌லாம்!

வாழ்க்கைக் குறிப்பு:-

பாரக் ஒபாமா 1961 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம்தேதி ஹவாய் மாகாணத்தில் உள்ள ஹோனலூலு என்ற இடத்தில் பிறந்தார். ஒபாமாவின் தந்தை கென்யா நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் ஒரு அமெரிக்கர்! அவரது முழுப்பெயர் பராக் ஹுசைன் ஒபாமா ஜூனியர்!Image
ஒபாமா இரண்டு வயதாக இருக்கும்போது பெற்றோர் இருவரும் பிரிந்தனர்.
Imageமலியா, ஸாஷா மகள்கள் – ஒபாமா – மிச்செல்

ஒபாமாவின் தந்தை ஹார்வார்ட் பலக்லையில் படிக்கச் சென்று பின் ஜாகர்த்தா திரும்பிவிட்டார். பெரும்பாலான காலம் தனது தாயுடனேயே ஒபாமா வசித்து வந்தார். தனது தாய்வழி பாட்டியுடன் வசித்து வந்த பாரக் ஒபாமா இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவிலும் ஹோனலூலுவிலும் தனது பள்ளிப்படிப்பை பயின்றார்.

ஒபாமாவின் 21 வயதின் போது ஒரு விபத்தில் தந்தை இறந்தார். 1995ல் ஒபாமா தன் தாயையும் பறிகொடுத்தார். கொலம்பியா பல்கலையில் பயின்ற ஒபாமா சிறிது காலம் வழக்கறிஞராக பணிபுரிந்தார். சிகாகோவிலுள்ள சட்டக் கல்லூரியில் சிறிது காலம் விரைவுரையாளராகவும் அவர் பணிபுரிந்தார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு ஹார்வர்ட் சட்டக் கல்லூரியில் பயின்ற மிச்செல் இராபின்சனை ஒபாமா காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
அவருக்கு மலியா, ஸாஷா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு கடந்த 1996, 1998 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும் 2000 ஆம் ஆண்டில் அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார்.

அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தபோதிலும் கடந்த 2004 ஆம் ஆண்டு தான் ஒபாமா வெளிச்சத்திற்கு வந்தார். அந்த ஆண்டு பாஸ்டனில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் அவர் ஆற்றிய உரைக்கு பெரும் வரவேற்பும், பாராட்டும், புகழும் கிடைத்தது.

2005ம் ஆண்டு பிரிட்டிஷ் ஜேர்னல் இதழில் நியூ ஸ்டேட்மேன் இப்படி எழுதினார். “உலகை மாற்றம் செய்யக்கூடிய பத்துப்பேர்களில் “ஒபாமா”வும் ஒருவர் என்று எழுத உலகம் ஒபாமாவின் பால் விழிகளை அகலத் திறந்து பார்க்கவைத்தது.

2007ல் செனட் சபையில் பொறுப்பேற்ற மூன்று மாதங்களே ஆன நிலையில் “டைம்ஸ்” இதழ் “உலகின் அதிக கவனத்தை ஈர்த்தவர்களுள் ‘ஒபாமா’வும் ஒருவர் என்று எழுதியது. இது அவருக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மிகையில்லை.

இன்று கென்யா நாடே விடுமுறை விட்டு ஒபாமா..ஒபாமா என்று உர‌க்க‌ குர‌ல் எழுப்பி ஆன‌ந்த‌க் கூத்தாடுகின்ற‌ன‌ர். இந்தோனேசியாவில் கோலாக‌லாமாக‌ ஒபாமா எங்க‌ள் நாட்டில், எங்க‌ள் ப‌ள்ளியில் ப‌டித்த‌வ‌ர் என்று அக‌ம‌கிழ்கிறார்க‌ள்!மரணப்படுக்கையிலிருந்த ஒபாமாவின் பாட்டி ஒபாமாவின் வெற்றியைப் பார்க்க கொடுத்துவைக்காமல் ஒருநாள் முன்னதாக இற‌ந்த‌து அவ‌ருக்கு ஒரு இழ‌ப்புதான்.

– ஆல்பர்ட் பெர்னாண்டோ,விஸ்கான்சின்,அமெரிக்கா.

Series Navigation

ஆல்பர்ட் பெர்னாண்டோ.

ஆல்பர்ட் பெர்னாண்டோ.