எஸ் ஜெயலட்சுமி
”பெத்தமனம் பித்து பிள்ளை மனம் கல்லு’’ என்ற பழமொழியைக் காலம் காலமாகக் கேட்டு வருகிறோம். பிள்ளை என்பது பொதுவாக ஆண் பிள்ளையைக் குறிக்கிறது என்றாலும் இது பெண் பிள்ளைக்கும் பொருந்தும்.
ஆண்டாளைப் பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை என்று போற்றுகிறார்கள். திருக் கோளூர் பெண் பிள்ளை ரஹஸ்யம் என்று ஒரு நூல் இருக்கிறது. எப்படியானாலும் பெற்றதாய் தன் குழந்தை களைப் பற்றி அது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும்., அவர்கள் எங்கே யிருந்தாலும் கவலைப் படுவது போல் அந்தப் பிள்ளைகள் கவலைப்படுவ தில்லை என்பதே உண்மை. குழந்தைப் பருவம்தான் என்றில்லை. அவர்கள் வளர்ந்த பிறகும் கூட அந்தத் தாய் கவலைப் படுவது போல் பிள்ளைகள் தாயைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இந்த நிலை இன்று மட்டும் இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முன்னும் இதே நிலை தான் இருந்திருக்கிறது என்பதைப் பெரியாழ்வார் அனுபவத்தால் அறிகிறோம்.
தாயின் கரிசனம்
ஒரு தாய். இவள் தன் மகளைப்
பார்த்துப் பார்த்து பொத்திப் பொத்தி வளர்த்திருக்கிறாள். அவளுக்குத் தேவையான நகைகளையெல்லாம் செய்து அழகு பார்த்திருக்கிறாள். தலைவாரிப் பூச்சூட்டி, சீராட்டி
வளர்த்திருக்கிறாள். உறவிலேயே நல்ல வரனாகப் பார்த்து ஊர் மெச்சும்படி திருமணம் செய்ய வேண்டு மென்று பணமும் சேர்த்து வைத்திருக்கிறாள் ஆனால் மகளோ வேறு விதமாக நினைக்கிறாள். அவள் தனக்குப் பிடித்த, தனக்கு ஏற்ற வரனைத் தானே தேர்ந் தெடுத்து விட்டாள். அதைத் தாயிடம் தெரிவிக்கவும் இல்லை.
ஆனால் தாய் எப்படியோ அதைத்
தெரிந்து கொண்டு விடுகிறாள். ‘தாயை ஒளித்து ஒரு சூலில்லை’ என்று சொல்வார்கள். மகளின் நடவடிக்கை களைப் பார்த்தே தாய்க்கு சந்தேகம் தோன்றுகிறது. ஆனால், தன் பெண் இப்படியெல்லாம் செய்வாளா? அவளுக்கு என்ன தெரியும்? (எல்லாத் தாய்மார்களுமே தன் மகள் ஒன்றும் தெரியாதவள். சூது வாது அறியாத வள், கள்ளங் கவடு தெரியாதவள் அவள் சின்னக் குழந்தை) என்று தான் நினைப்பார்கள்.
அப்படியே ஏதாவது நடந்தாலும் அதற்கெல்லாம் மகளுடைய தோழிகளும், மகள் நேசிக்கும் அந்தப் பையனும் தான் காரணம் என்று அவர்களைத்தான் குற்றம் சாட்டுவார்கள். இதையும் நடை முறையில் பார்க்கிறோம்
இந்த நிலை ஆயிரம் வருடங்
களுக்கு முன்பும் ஒரு தாய்க்கு (பெரியாழ்வார்) இருந் ததைப் படம்பிடித்துக் காட்டுகிறார் பெரியாழ்வார்..
தன்னை ஒரு தாயாகப் பாவித்துத் தன் மகள் மாயவன் மேல் மையல் கொண்டதையும் அவனோடு உடன் போனதையும் எண்ணிப் பார்க்கிறார். ஆற்றாமை மேலிடத் தன் நிலையைப் பேசுகிறார். இந்தத் தாயின்
பேச்சைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்போமா?
குழந்தைப் பெண்
’என் பெண்ணின் தோழி என்னென் னவோ சொல்கிறாளே! என்னால் நம்பவே முடிய வில்லை. அவள் சின்னக் குழந்தை. ஒன்றும் அறியா தவள். இப்பொழுதும் செப்பு வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். பேச்சு கூட நன்றாக வரவில்லை. மழலை மொழி மாறவில்லை. பாவாடையைக் கூட நன்றாக உடுக்கத் தெரியாதவள். வாசலில் போய் விளையாடி மேலெல்லாம் புழுதியோடு வருகிறாள். இவளையா தோழி அப்படிச் சொல்கிறாள்!
ஐய புழுதி உடம்பளைந்து இவள்
பேச்சும் அலந்தலையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பம்
உடுக்கவும் வல்லள் அல்லள்
வாயில் பல்லும் எழுந்தில மயிரும்
கூடிற்றில.
முற்றத்தில் சிறுவீடு கட்டி விளையாடினாலும் அங்கே யும் மாயவனின் பஞ்சாயுதங்களைத் தான் வரைந்து விளையாடுகிறாள்
பொங்கு வெண் மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத்து இழைக்கலுறில்
சங்கு, சக்கரம், தண்டு, வாள் வில்லும்
அல்லது இழக்கலுறாள்.
தோழிகள் சூழ்ச்சி
இப்படி அறியாப் பெண்ணாகிய, உலகம் தெரியாத என் பெண்ணை அவளுடைய தோழி கள் பலரும் கூட்டிக்கொண்டு போய அந்த சூழ்ச்சிக்கார மாயவனுடன் பழக விட்டு விளையாட விட்டார்கள். இவள்தான் உலகம் தெரியாதவளா யிற்றே! அவனு டைய மாய வலையில் அகப்பட்டுக் கொண்டாள். குழம்புப் பாத்திரத்தில் இருக்கும் அகப்பைக்கு (கரண்டிக்கு) அதிலுள்ள உப்பு, புளிப்பு, காரம் இவை தெரியுமா? அந்த மாயன் வலையில் விழுந்த இவளோ, ஊரெல்லாம் தெரியும்படி வீட்டை விட்டுப் போய் அவனைத்தேடி அவன் பின்னாலேயே போகிறாள். மணமகன் வந்து பெண் கேட்க வேண்டும்
என்ற நியதி கூடத் தெரியவில்லையே!
பெண் வளர்த்த பெருமை
இந்தப் பெண்ணைத்தான் கொஞ்சமாகவா சீராட்டி வளர்த்தேன்? சுட்டி என்ன, பாடகம் என்ன பொன் தோடு என்ன, சூடகம், சிலம்பு, தண்டை என்று இவளுக்காகத் தேடித் தேடிப் பார்த்துப் பார்த்து நகை செய்து பூட்டி நடக்க விட்டு அழகு பார்த்தேன். ஆனால் அவளோ? என்னோடு இருக்காமல், அம்மா வருத்தப் படுவாளே என்ற எண்ணம் கொஞ்ச மும் இல்லாமல் சட்டென்று போய்விட்டாளே! ‘பூவைப்
பூ வண்ணா!’ என்று அவனிடம் மயங்கி அவனைத் தேடிப் போய் விட்டாளே!
’பட்டம் கட்டி பொற்றோடு பெய்து
இவள் பாடகமும் சிலம்பும்
இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்(கு)
என்னோடு இருக்கலுறாள்
பொட்டப்போய் புறப்பட்டு நின்றிவள்
பூவைப் பூ வண்ணா ! என்னும்
வட்டவார் குழல் மங்கைமீர்! இவள்
மாலுறுகின்றாளே.
மகளின் நடவடிக்கைகள்.
கொஞ்ச நாடகளாகவே இவளைக்
கவனிக்கிறேன். இவள் போக்கே ஒரு மாதிரியாகத்தான் இருக்கு. எப்போ பார்த்தாலும் கண்ணாடி முன் நின்று அழகு பார்க்கிறாள். பொன் காறை (நெக்லஸ்) யைப்
போட்டுப் போட்டு அழகு பார்க்கிறாள். கைவளையல் களைக் குலுக்கிக் கொண்டே யிருக்கிறாள். எப்படி உடுத் தினாலும் திருப்தி யடையாமல் திரும்பத் திரும்ப உடுத் துகிறாள். கொவ்வைச் செவ்வாயை மேலும் மேலும் சிவக்கும்படி செய்கிறாள். அந்த மாயவன் பெயர்களை மறுபடியும் மறுபடியும் ஆயிரம் தடவை யாவது சொல்கிறாள்.
காறை பூணும், கண்ணாடி காணும்,
தன் கையில் வளை குலுக்கும்
கூறை யுடுக்கும், அயர்க்கும்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்றாயிரம் பேர்த்
தேவன் திறம் பிதற்றும்
மாறில் மணி வண்ணன் மேல்
இவள் மாலுறுகின்றாளே!
தாய் ஒன்று நினைக்க
மகள் ஒன்று நினைக்க
’இந்தப் பெண்ணுக்கு ஊரே மெச்சும்படி கல்யாணம் செய்து இவளை என்னுடனே
வைத்துக் கொள்ள வேண்டும் என்று நிறையப் பணம்
சேர்த்து வைத்திருக்கிறேன். பணம் பூராவும் செலவா னாலும் பரவாயில்லை என்றும் நினைத்திருந்தேன். ஆனால் இவளோ வேறு விதமாக நினைத்திருக்கிறாள்.
பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து
பேணி நம் இல்லத்துள்ளே
இருத்துவான் என்ணி நாமிருக்க
இவளும் ஒன்றெண்ணுகிறாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும்
வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்து இduடுமின் இவளை
உலகளந்தான் இடைக்கே.
மருந்து தயாரிக்கும் போது பதம் பார்த்து சரியாகத் தயாரிக்கா விட்டால் மருந்தே கெட்டு விடுவது போல இவளையும் சரியான நேரத்தில் அந்த மாயனிடம் (கண்ணனிடம்) ஒப்படைக்கா விட்டால் இவள் நம்மை விட்டு நீங்கிப் போவாள். இந்த வார்த்தை ஊர் உலகத் தில் பரவும் முன்பே இவளை அந்த மாயக்கண்ணனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்’ என்று உறவின ரிடம் கூறுகிறாள் தாய்.
பாகம் 2.
தாயும் உறவினரும் பேசித் தீர்மானம் செய்கிறார்கள். காதல் பித்தேறிய
மகளை அம்மாயனிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட வேண்டியதுதான் என்று இவர்கள் நினைத்திருக்கும் போது அம்மகள் அம்மாயவனுடன் சென்று விடுகிறாள்.
அப்படி உடன்போன பெண்ணை நினைத்து நினைத்துத் தாய் வருந்துகிறாள்.
வெறிச்சோடிய வீடு.
ஒரு தாமரைத் தடாகத்தில் பூக்கள் நிறைந்து மிகவும் அழகாகக் காட்சி யளிக்கிறது.
அதிகமாகப் பனி பொழியவே அப்பூக்களிலுள்ள பூந்தாது கள் எல்லாம் உதிர்ந்து போய் விடுகிறது. தடாகத்தின் அழகே போய் விடுகிறது. அது போலவே இந்த வீடும் வெறிச்சோடிப்போய் விட்டதே!
நல்லதோர் தாமரைப் பொய்கை
நாண் மலர் மேல் பனிசோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந்ததால் ஒத்ததாலோ!
இல்லம் வெறியோடிற்றாலோ?
என் மகளை எங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின் போய்
மதுரைப் புறம் புக்காள் கொ(ல்)லோ?
குடிப்பழி
அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம் என்று சொல்கிறார்களே, அதற்கேற்றாற்போல் இந்த மாயன் (கள்வன்) என் மகளைக் கொண்டு போனான். ஆயர்கள் இருட்டிலே அழகிய கன்றுகளைக் கடத்திக் கொண்டு போவதுபோல் என் அழகிய மகளைக் கொண்டு போனான். அவள் முன்பெல்லாம் நான் சொல் வதைக் கேட்டு எனக்கு அடங்கி யிருந்தாள். ஆனால் அம்மாயன் அவளை மயக்கிக் கொண்டு போய் விட் டான். தன் மகள் தானாகவே மனம் ஒப்பி அவனுடன் போனதாக எந்தத் தாயும் ஒப்புக் கொள்ள மாட்டாள். இவள் பெண் தான் ஒன்றும் அறியாதவளாயிற்றே! (எந்தத் தாயும் தன் பெண் தவறு செய்ததாகச் சொல் லவே மாட்டாள்.) இந்த நாராயணன் செய்த தீமை எங்கள் குடிக்கு அழியாத பழியைத் தந்து விட்டதே!
(இது நாராயணன் செய்த தீமை, மகள் செய்த தீமை அல்ல!)
ஒன்றும் அறிவில்லாத உருவரைக்
கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே
கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறி செய்து போனான்!
நாராயணன் செய்த தீமை
என்றும் எங்கள் குடிக்கோர்
ஏச்சுச் சொல்லாயிடுங் கொலோ?
தாயின் சந்தேகம் கவலை:
இந்தத் தாய்க்கு இப்பொழுது வேறு விதமான கவலை வந்து விட்டது. என் மகள் அங்கு போயிருக்கிறாளே, அவளுக்கு முறைப்படி செய்ய வேண்டிய சடங்குகளை யெல்லாம் செய்வார்களா? கோத்திரம் மாற்றி முறையாகத் திருமணம் செய்து கைப்பிடித்துக் கொடுக்காமல், உடன் ஓடி வந்தவள் தானே? கல்யாணக் கொண்டாட்டம் எல்லாம் எதற்கு? என்று சடங்கு சம்பிரதாயங்கள் எதுவுமே செய்யாமல் இருந்து விடுவார்களோ? தோரணம் நாட்டி, கால் நாட்டி,
மேளம் கொட்டி ஊரும் உற்றாரும் அறிய அரசமரத்தை
வலம் வந்து திருமன விழா கொண்டாடுவார்களா?
குமரி மணம் செய்து கொண்டு
கோலஞ் செய்து இல்லத்திருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோதரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணியை வழிபட்டுத்
துமிலம் எழப் பறை கொட்டித்
தோரணம் நாட்டிடும் கொ(ல்)லோ?
ஒருமகள், திருமகள்.
இந்தத் தாய்க்கு ஒரே வருத்தம்.
இவளுக்கு இருப்பதே ஒரு மகள் தான். .அதனால் அவளைச் செல்லமாக வளர்த்தாள் ஆனால் இன்று அவளையும் இழந்து விட்டாள். சரி போனது போகட்டும். அந்தப் பெண் எங்கேயாவது நன்றாக இருந்தால் அது போதும். ஆனால் போன இடத்தில் என் பென்ணுக்குச் செய்ய வேண்டிய மரியாதைகள் கிடைக்குமா?
யசோதையும் பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்றவள் தானே. அவ ளுக்குத் தெரியாதா? அவள் தன் மருமகளை (என் மகளை ஆரத்தி எடுத்து வரவேற்பாளா?) சடங்கு சம்பிரதாயங்களை யெல்லாம் விடாமல் செய்வாளா? இந்தத் தாய்க்குத் தன் மகளுக்கு ஒரு குறையும் வைக்காமல் எல்லாம் முறைப்படி நடக்க வேண்டு மென்று ஆசை, (அந்தப் பெண் இவளிடம் சொல்லிக் கொள்ளாமல் போயிருந்தாலும் கூட பெத்தமனம் அடித்துக் கொள்கிறது!)
ஒருமகள் தன்னை உடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண் மால்தான் கொண்டு
போனான்.
பெருமகளாய்க் குடி வாழ்ந்து
பெரும் பிள்ளை பெற்ற அசோதை
மருமகளைக் கண்(டு) உகந்து மணாட்டுப்
புறம் செய்யுங் கொ(ல்)லோ?
நல்லதோர் கன்ணாலம்
யசோதை வரவேற்றாலும் மாம னாராகிய நந்த கோபாலன் என் மகளை அன்போடு தழுவிக் கொள்வானா? என்மகள் நாணித் தலை கவிழ்ந்து நிற்கும்போது. “மகளே! நேராக இரு” என்று சொல்லி முகத்தை நிமிர்த்தி என் மகளுடைய அழகைப் பார்த்து, “இவளைப் பெற்ற தாய் இவளைப் பிரிந்து எப்படி யிருக்கிறாளோ?” என்று சொல்லுவாரா?
என் மகளைக் கடத்திக் கொண்டு
போனானே, அந்த மாமாயன், நாடும் நகரமும் அறிய நல்லபடியாக, அக்கினி சாட்சியாகக் கல்யாணம் செய்து கொள்வானா? அல்லது வேடர்கள், மறவர்கள் போலச் சேர்ந்து வாழ்ந்தால் போதும் என்று ஒன்றுமே செய்யா மல் விட்டு விடுவானா?
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்தென் மகளை
கூடிய கூட்டமேயாகக் கொண்டு
குடி வாழுங் கொ(ல்)லோ?
நாடும் நகரமும் அறிய நல்லதோர்
கண்ணாலஞ் செய்து
தக்கவா கைப்பற்றுங் கொ(ல்)லோ?
பட்டமகிஷியா, பரிசாரகியா?
தாய்க்கு இன்னுமொரு சந்தேகம். என் அருமை மகளைக் கூட்டிக் கொண்டு போனானே ஆழியெம் பெருமான். அவனுக்கு ஏற் கெனவே பட்ட மகிஷிகளாக எட்டுப் பேர் இருக்கிறார் களே! இவளையும் கூட்டிக் கொண்டு போய் அந்தப் புரத்திலே அவர்களோடு சேர்த்து இருக்க வைக்கப் போகிறானா? அல்லது ஏதாவது குறைகளைச் சொல்லிக் கழித்து எடுபிடி வேலை செய்பவளாக, ஏவல் மகளாக நடத்துவானோ? அப்படி வேலை செய்யச் சொன்னால் என் பெண் இருபக்கமும் மாறி மாறி வளைந்து தயிர் கடைய வேண்டுமே! அப்படித் தாம்புக் கயிற்றை மாறி மாறி இழுக்கும் போது அவள் கையெல்லாம் காய்த்துப் போகுமே! தழும்பேறி விடுமே!’’ என்று வருந்துகிறாள்.
அண்டத்தமரர் பெருமான் ஆழியான்
இன்றென் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசர ஆண்டிடுங் கொ(ல்)லோ?
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டங்கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகாவல் வைக்குங் கொ(ல்)லோ?
இந்தத் தாய்க்குத் தன் ஏக்கத்தை
யாரிடமாவது சொல்லி ஆறுதல் பெறவேண்டும் என்று தோன்றுகிறது. எனவே பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் சென்று, “நங்காய்!
இடையிரு பாலும் வணங்க
இளைத்து இளைத்து என் மகள் ஏங்கி
கடைக் கயிறே பற்றி வாங்கி
கை தழும்பேறிடுங் கொ(ல்)லோ?
என்று தன் மனக் குமுறலைப் பகிர்ந்து கொள்கிறாள்.
இப்படி யெல்லாம் தவிக்கும் தாய், அவர்கள் வீட்டில் (யசோதை வீட்டில்) தயிர் கடை வதென்றால் கோழிகூவும் முன்பே எழுந்திருந்து கடைய வேண்டியிருக்குமே! எவ்வளவு தயிர் கடைய வேண்டி யிருக்கும்! அவ்வளவு அதிகாலையில் தூக்கத்திலிருந்து
எழுந்திருப்பளா? அப்படியே எழுந்திருந்தாலும் தயிர் கடையும் பொழுதே தூங்கி விடாமல் இருக்க வேண் டுமே! அப்படித் தூக்கத்தைக் கட்டுப் படுத்தும் வலிமை யுள்ளவளா? சரியாகக் கடையா விட்டால் அவளை மரியாதைக் குறைவாக நடத்துவானோ? அப்படி எதுவும் என் மகளுக்கு நேரக் கூடாது என்று தவிக்கிறாள்.
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை
வெள்வரைப்பின் முன் எழுந்து
கண்ணுறங்காதே யிருந்து கடையவும்
தான் வல்லள் கொ(ல்)லோ?
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந்தான் என் மகளைப்
பண்ணறையாப் பணி கொண்டு
பரிசற ஆண்டிடுங் கொ)ல்)லோ?
இந்தத் தாயின் அருமை மகள் இவளிடம் சொல்லிக் கொள்ளாமலே தன் உளங் கவர்ந்த வனோடு சென்றுவிட்ட போதிலும் ’பெற்ற மனம்’ பித்து என்பதற்கேற்ப அந்தப் பெண்ணைப் பற்றியே இந்தத் தாய் கவலைப் படுகிறாள்.
ஒருவேளை பெரியாழ்வாரும் தன் அருமை மகள் ஆண்டாளைப் பிரிந்த மன நிலை யில் இந்தப் பாடல்களைப் பாடியிருப்பாரோ?
*********************************************************
- ஆ·பிரிக்காவின் ஓக்லோ யுரேனியச் சுரங்கத்தில் இயங்கிய பூர்வீக இயற்கை அணு உலைகள் கண்டுபிடிப்பு ! (Fossil Reactor & Geo-Reactor)(கட
- வேத வனம் விருட்சம் 85
- சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
- ஆபிதீனின் கதை, “அங்கண ஒண்ணு, இங்கண ஒண்ணு”
- பட்சியும் கனகாம்பரமும்
- அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் எழுத்தாளர் விழா 2010
- என். எஸ். எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து -சிறுகதையைப் புரிந்து கொள்வதற்கான ஆரம்பநிலைக் குறிப்பு
- பெத்தமனம் பித்து
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -14
- பத்துப்பாட்டில் தொழிலும், தொழிலாளர்களும்
- கொங்குநாட்டுத் தமிழ் குழந்தை (புலவர் குழுந்தை)
- பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஆலயத்தின் வாசலில் = கவிதை -28 பாகம் -3
- அஜ்னபி
- உயிர்பெருக்கில் குளிர்காய்தலை குறித்து
- அம்மா
- உருமாறிச் செல்கிறேன் சில மௌனங்களுடன்
- காதலி எனும் கிறுக்கல்கள்!
- இந்திய வரலாற்றுப்போக்கை மாற்றிய 27 வருட மராத்தா முகலாயர் போர் – முடிவுரை
- திராவிட அரசு திராவிடச் சான்றோர் வேண்டுகோளைச் செவிமடுக்குமா?
- காற்றாடிகளுடன் உறவாடிய நாட்கள்
- முள்பாதை 29
- விஸ்வரூபம் : அத்தியாயம் அறுபத்தொன்று
- ஆயுத மனிதன் (The Man of Destiny ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -17