தெலுங்கு மூலம் எண்டமூரி வீரேந்திரநாத் தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
“வணக்கம். என் பெயர் சரேஜா.” கைகளை கூப்பிக்கொண்டே சொன்னாள் அந்தப் பெண். சத்யவதி அவளைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
“உங்கள் வீட்டில் வாடகைகு போர்ஷன் இருப்பதாய் … ” பாதிலேயே நிறுத்திவிட்டாள்.
“வாங்க … வாங்க” என்று வெளியே வந்தாள் சத்யவதி. முன் பக்கத்தில் இருந்த சாமந்தி பூஞ்செடிகளுக்கு நடுவில் இருந்த பாதை வழியாக பக்கத்தில் இருக்கும் போர்ஷனுக்கு அழைத்துப் போனாள். சாத்தியிருந்த தாழ்பாளை திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.
“மூன்று அறைகள். கடைசியில் இருப்பது சமையல் அறை. கொல்லையில் குழாய் இருக்கு.”
“வாடகை எவ்வளவு?” சரோஜா கேட்டாள்.
“அறுநூறு. கரெண்ட் சார்ஜ் தனி.”
“எனக்குப் பிடித்திருக்கு. நாளைக்கே வந்துவிடுகிறேன்” என்றாள் சரோஜா.
சரோஜாவின் புடவைத் தலைப்பைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த மூன்று வயது பாலு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான். வெளியில் பேச்சுக் குரல் கேட்டு சத்யவதியின் கணவன் சுதாகர் உள்ளே இருந்து வெளியில் வந்து இருவரையும் பார்துவிட்டு மறுபடியும் உள்ளே போய்விட்டான்.
சரோஜா பாலுவின் கையை விட்டுவிட்டு ஹேண்ட்பேக்கில் கையை நுழைத்து “ஒருமாத வாடகையை அட்வான்ஸாக தரட்டுமா?” என்றாள்.
“கொடுங்க” என்றாள் சத்யவதி. சரோஜா பணத்தை எடுத்துக்கொண்டிருந்த போது “உங்களுடைய மகனா?” என்று கேட்டாள்.
“ஆமாம்.”
“ஒரே குழந்தைதானா?”
“ஒரே குழந்தைதான்.”
இந்தப் பதிலைக் கேட்டு சத்யவதி திருப்தி அடைந்தாள். எவ்வளவு குறைந்தபேர் இருப்பாங்களோ அவ்வளவு நன்றாக இருக்கும் வீடு. “மொத்தம் மூணுபேர்தான் இருக்கீங்களா?” சாதாரணமாக கேட்பது போல் கேட்டாள்.
“இல்லை. இருவர்தான்.”
சத்யவதி திடுக்கிட்டாள். “இருவர் மட்டும்தானா?” சரோஜாவை கூர்ந்து பார்த்துக்கொண்டே கேட்டாள். “அப்படி என்றால் உங்கள் கணவர்…”
“இல்லை.” தாழ்ந்த குரலில் சொன்னாள்.
“ஐயோ பாவம்!” வருத்தப்பட்டாள். “எத்தனை வருடங்களாச்சு?” சரோஜாவின் நெற்றியைப் பார்த்துக்கொண்டே கேட்டாள். சிவப்பு வண்ணத்தில் குங்குமம் சரொஜாவின் நெற்றியில் பளீரென்று மின்னிக் கொண்டிருந்தது. கணவர் இறந்து போய் ஒருவருடம் கூட ஆகாமல் மறுபடியும் குங்குமப்பொட்டு வைத்துக் கொள்பவர்களை அவள் பார்த்ததில்லை. அதனால்தான் கேட்டாள், எத்தனை வருடங்களாச்சு என்று.
“எது?” ”
“அதான். அவர் இறந்துபோய்.”
“இல்லை என்றால் இறந்து போய் விட்டார் என்று அர்த்தம் இல்லை.” பதில் சொன்னாள் சரோஜா.
“அப்படி என்றால் திருமணம் ஆகவில்லையா?”
“ஊஹ¤ம். ஆகவில்லை.”
சத்யவதிக்குப் புரியவில்லை. “அப்போ …. இந்தப் பையன்?” என்றாள்.
“என் மகன்.”
தலையில் பெரிய குண்டைப் போட்டாற் போலிருந்தது சத்யவதிக்கு. அதே நேரத்தில் சுதாகரின் தந்தை ஆ·பீஸிலிருந்து வந்தார். சைக்கிளை திண்ணையில் தூக்கி வைத்துவிட்டு உள்ளே போனார். மறுபடியும் வந்து சைக்கிள் ஸ்டாண்ட் சரியாக போட்டிருக்கிறோமோ இல்லையோ என்று பார்த்தார்.
“அப்படி என்றால் கல்யாணம் ஆகாமலேயே…” இந்தக் கேள்வியைக் கேட்கும் போது சத்யவதிக்கு அருவருப்பாக இருந்தது.
சரோஜா உடனே பதில் சொல்லவில்லை. தலையைக் குனிந்துகொண்டு தாழ்வான குரலில் “ஆமாம்” என்றாள்.
“உனக்கு அப்பா அம்மா இல்லையா?”
பன்மையிலிருந்து ஒருமைக்கு மாறியதை சரோஜா கவனித்தாள். இருந்தாலும் பதில் சொன்னாள். “இருக்காங்க.”
“எங்கே?”
“இதே ஊரில்.”
“அப்போ அவர்களுடனே இருக்கலாமே?”
“வெளியில் போகச் சொல்லிவிட்டார்கள்.” தீனமான குரலில் சொல்லவில்லை. ஆனால் கண்களில் வேதனை தென்பட்டது.
மேற்கொண்டு என்ன கேட்பது என்று சத்யவதிக்குப் புரியவில்லை. இவ்வளவு இன்ட்ரெஸ்டிங்காக இருந்த அவளை இப்படி பாதியில் அனுப்புவதற்கும் மனம் வரவில்லை.
“எத்தனை நாளாச்சு?
“மூன்று வருஷம் எட்டு மாதம் ஆகிறது.”
மூன்று வருஷம் இரண்டு மாதங்கள் வயதுடைய பாலு இருவரின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
“அப்போ இத்தனை நாள்?”
“காந்தித் தெருவில் குடியிருந்தோம். வீட்டுக்காரர்கள் ரொம்ப நல்லவர்கள். ஆனால் அவர்கள் அந்த வீட்டை விற்கப் போகிறார்கள். அதான் வீடு மாற வேண்டியதாகிவிட்டது” என்று சொல்லிக்கொண்டே ஹேண்ட்பேக்கிலிருந்து பணத்தை எடுத்தாள். “இந்தாங்க அறுநூறு.”
சத்யவதி வாங்கிக்கொள்ளவில்லை. “வீட்டில் அவரைக் கேட்கணும்” என்றாள்.
“உங்க கணவர் உள்ளே இருக்கிறார் போலிருக்கே? கேளுங்கள்.”
உண்மையில் யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த வீட்டில் சத்யவதி வைத்ததுதான் சட்டம். ஆனால் இவளிடமிருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லிவிட்டாள். இனிமேல் எந்தச் சாக்கு சொல்லித் தப்பித்துக் கொள்வது என்று தெரியவில்லை.
ஆனால் அதைப் புரிந்துகொண்ட சரோஜா, “உங்களுக்கு வாடகை விஷயத்தில் எந்தப் பிரச்னையும் வராது. மாதா மாதம் முதல் தேதி அன்றே கோடுத்துவிடுவேன். வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு பதில் இரண்டு மாத வாடகையை அட்வான்ஸாகத் தருகிறேன். கடவுள் கிருபையால் கிட்டத்தட்ட மூவாயிரம் ரூபாய் சம்பளம் வருகிற வேலைதான் செய்து வருகிறேன்” என்றாள்.
“அது வந்து .. வாடகையைப் பற்றி இல்லை.”
“பின்னே?”
சத்யவதியால் உடனே பதில் சொல்ல முடியவில்லை. உண்மையில் தன்னுடைய பிரச்னை என்னவென்று அவளுக்கே புரியவில்லை. வீட்டை வாடகைக்குக் கொடுப்பதில் மட்டும் விருப்பம் இல்லை. “ஏதாவது ·பேமிலிக்குக் கொடுக்கலாம் என்று இருக்கிறோம்” என்றாள்.
சரோஜா சிரித்தாள். “ஸ்டேட் கவர்ன்மெண்ட் டி.ஏ. ரூல்ஸ் படி நாங்களும் ·பேமிலிதானே?”
அந்தச் சிரிப்பு சத்யவதிக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. “கௌரவமான குடும்பத்துக்கு” என்றாள். ‘கௌரவம் ‘ என்ற சொல்லை வேண்டுமென்றே அழுத்தமாக உச்சரித்தாள்.
சரோஜாவின் முகம் ஒரு வினாடி களையிழந்தது. ஆனால் இந்த அவமானங்களுக்கெல்லாம் பழக்கப்பட்டு விட்டதால் உடனே தேறிக்கொண்டு. “மனிதன் கௌரவத்துடன் வாழ்வதற்கும், மனதளவில் ஒரு நிமிடம் பலவீனமாகி விடுவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? பலவீனம் என்பது எல்லோரிடமும் இருக்கும்” என்றாள்.
தன்னுடைய பாயிண்டையே பிடித்துக்கொண்டு வாதம் செய்துகொண்டிருந்த சரோஜாவைப் பார்க்கும் போது சத்யவதியின் கோபம் மேலும் அதிகரித்தது. வீட்டுக்காக அவள் கண்ணீர் விடடு வேண்டுகோள் விடுப்பாளோ என்று எண்ணியிருந்தாள். அதனால் சட்டென்று சொல்லிவிட்டாள். “அவ்வளவு பலவீன மனம் படைத்தவர்கள் எங்கள் வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாம்.”
அந்த வார்த்தையை சரோஜா முன்னாடியே ஊகித்திருந்தாள் போலும். அதனால் இந்த முறை நிலை தடுமாறாமல், உணர்ச்சியற்ற குரலில் நிதானமாக சொன்னாள். “ஒரு காலத்தில் இருந்த பலவீனம் அது. அப்பொழுது உலகத்தைப் பற்றி அதிகம் தெரியாது. காதலுக்கும் கல்யாணத்திற்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு விதமாக பார்த்தால் அதை பலவீனம் என்று கூட சொல்ல முடியாது. உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கு? இது போன்ற விஷயங்களில் ஆண்தான் பெண்ணை வழி நடத்துவான். தன்னுடைய எதிர்காலம் ஒரு கேள்விக்குறியாக இருக்கப் போகிறது என்ற விஷயம் ஒரு பெண்ணுக்கு எல்லாம் முடிந்த பின்தான் தெரியும். நீங்க சொன்னீங்க இல்லையா பலவீன மனம் படைத்தவர் உங்க வீட்டு போர்ஷனில் குடியிருக்க வேண்டாமென்று? எனக்கு இப்பொழுது எந்த பலவீனங்களும் இல்லை. அப்படி ஏதாவது இருந்தால் இந்நேரத்திற்கு மறுபடியும் …”
“சிவ சிவா ” என்று சொல்லிக்கொண்டே காதுகளைப் பொத்திக்கொண்டாள் சத்யவதி.
சரோஜா மேலும் ஏதோ சொல்லப் போனாள். அதற்குள் பாலு சுண்டு விரலைக் காட்டி” அம்மா!” என்றான். “ஒரு நிமிஷம் இரு கண்ணா!” என்று சொல்லிவிட்டு சத்யவதியை நோக்கித் திரும்பினாள். “நீங்கள் சொல்லலாம். இப்போ எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருப்பதால் அப்படி எதுவும் ஆகாமல் முன் ஜாக்கிரதையாக இருக்கிறேனோ என்று. மனச்சாட்சியை ஏமாற்றும் மனப்பான்மை படைத்தவளாக இருந்தால் இவனை என் தம்பி என்று சொல்லி இருப்பேன். இல்லையா பிறந்ததுமே ஏதாவது அநாதை இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்திருப்பேன். நீங்களும் ஒரு பெண்தானே? ஒரு தடவை ஏமாந்துபோன பெண் இனி ஜென்மத்தில் ஆணை அருகில் வரவிடமாட்டாள் இல்லையா? இப்போ எனக்கு எந்த பலவீனங்களும் இல்லைங்க” என்றாள். பலவீனம் என்ற வார்த்தையை அழுத்திச் சொன்னாள். “அதெல்லாம் எனக்கு பதினெட்டு வயது இருக்கும் போது நடந்த கதை. காலையில் உதிக்கும் சூரியனின் அழகில், கனவுலகில் கரைந்து போவதை பலவீனம் என்று நீங்கள் சொன்னால் அப்போ எனக்கு இருந்தது அதுதான். இப்போ என்னுடைய லட்சியமெல்லாம் இவனை வளர்த்து ஆளாக்குவதுதான். உண்மையை விட ஒழுக்கம் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் உண்மையை மாற்ற முடியாது இல்லையா. போகட்டும், உங்களுக்கு அவ்வளவு அவநம்பிகையாக இருந்தால் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் எங்கள் வீட்டு வாசற்கதவை வெளியே பூட்டிக்கொண்டு விடுங்கள். அதற்குப் பிறகு உங்களுக்கு என்ன ஆட்சேபளை இருக்கப் போகிறது? உங்களுக்கு இன்னொரு சந்தேகமும் வரலாம். ஆ·பீஸ¤க்குப் போவதாக சொல்லிவிட்டு மதிய நெரத்தில் நான் யாருடனாவது சுற்றலாமே என்று. இந்த பிராபபிலிடீ நீங்க ஒரு ·பேமிலிக்குக் கொடுத்தாலும் இருக்கும் இல்லையா?”
சத்யவதிக்கு திடீரென்று அடுப்பின் மீது வைத்த குழம்பு பற்றி நினைவுக்கு வந்தது. அதன் கமரல் வாசல் வரை வந்து மூச்சுத் திணறுவது போல் தோன்றியது. இவ்வளவு துணிந்தவளுடன் தனக்கு பேச்சு எதற்கு என்று நினைத்தவளாய், கைகளை கூப்பி வணங்கிவிட்டு, “போயிட்டு வாம்மா. நீ நல்லவளாகவே இருக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பலவீனங்கள் இருக்கலாம்” என்றாள்.
சரோஜா சிரித்தாள். வேதனையும், இரக்கமும் கலந்த சிரிப்பு. நதியில் மூழ்கிக்கொண்டிருப்பவன் துரும்பைப் பிடித்துக்கொண்டு நீந்திக் கொண்டிருப்பனைப் பார்த்து சிரித்த சிரிப்பு. “உங்கள் வீட்டு ஆண்களுக்கு பலவீனங்கள் இருக்கு என்று ஒப்புக்கொள்கிறீர்கள் இல்லையா. பலவீன மனம் படைத்த ஒரு பெண் பக்கத்து போர்ஷனுக்குக் குடிவருவதை விரும்பாத நீங்கள் பலவீனங்கள் இருக்கும் ஆணின் பக்கத்தில் எப்படி தினந்தோறும் படுத்துக்கறீங்க? வேதனை கலந்த புன்முறுவல் அவள் இதழ்களில் நெளிந்தது. “இப்படி வெளிப்படையாக கேட்டதால் உங்கள் கண்களுக்கு நான் ஒரு அரக்கியைப் போல் தென்படுகிறேன் இல்லையா?” சட்டென்று அவள் குரல் தழுதழுத்தது.
“நானும் உஙகளைப் போல் அப்பாவியாய், மலரைப் போன்ற சுகுமாரத்துடன் கனவுலகில் ஆடிபாடிக் கொண்டிருந்தவள்தான். கண்மூடி திறப்பதற்குள் எல்லாம் நடந்து முடிந்து விட்டது. இதில் பலவீனம் எதுவும் இல்லை. எல்லாம் ஹீனம்தான். தாலி கட்டவில்லை என்பதால் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அப்பாவின் முதுகிற்குப் பின்னால் மறைந்து நின்றபடி வெடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகன், தனக்கு நியாயம் வழங்கும்படி கேட்க வந்த பெண்ணைக் கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளிய மாமனார், தவறு செய்தவள் சம்பாதிக்கும் மகள் என்பதால் ரொம்பவும் கோபித்துக் கொள்ளமுடியாமல் அபார்ஷன் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாக சொன்ன தந்தை. இவர்கள் எல்லோரும் சேரந்து ஒரு பதினெட்டு வயதுப் பொண்ணின் மென்மையான மனதை காலடியில் போட்டு நசுக்கிவிட்டார்கள்.
அப்பொழுதுகூட எனக்கு வேதனை ஏறபடவில்லை. செய்த தவறை ஒப்புகொண்டு இத்தனை ஆண்களை தைரியமாக எதிர்த்து, சொந்த கால்களில் நின்று தன் மகனை வளர்த்துவரும் ஒரு பெண்ணை, நீங்களும் ஒரு பெண்ணாக இருந்தும் பக்கத்து போர்ஷனுக்கு குடி வரக்கூடாது என்று தடுப்பதை பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. அவ்வளவுதான். எனக்கு வீடு வேண்டாம். நீங்களே வீட்டிலிருந்து வெளியில் வந்து பாருங்கள். பெண்களுக்கு நிகழும் அநியாயங்களுக்கு மறைமுகமாக துணைபுரிவது ஒரு பெண்தான் என்று புரியும். ஆண்களின் உலகத்திலிருந்து பெண் இனத்தை தனியாக பிரித்து அவர்களை அந்நியப்படுத்துவதும் பெண்ணேதானோ என்று தோன்றுகிறது.” அவள் திரும்பினாள்.
அவள் கையைப் பிடித்துக்கொண்டு பாலுவும் நகர்ந்தான்.
முற்றும்
“தி பெஸ்ட் ஆ·ப் எண்டரி வீரேந்திரநாத்” சிறுகதைத் தொகுப்பு
அல்லயன்ஸ் பதிப்பகம்
தெலுங்கு மூலம் எண்டமூரி வீரேந்திரநாத்
தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்
email: tkgowri@gmail.com
url: http://gowri.kirubanandan.com
- கீதாஞ்சலி (94) நான் பிரியும் வேளை!
- மகா அலெக்ஸாண்டர் இந்தியப் போரில் தோல்வி அடைந்தாரா?
- உருமாறும் புகார்கள் – சல்மாவின் “பச்சைத் தேவதை”
- சு.ரா.வுக்கு இறப்பே இல்லை! ( சுந்தர ராமசாமியின் முதலாம் ஆண்டு நினைவுடன்.)
- போராளியின் பயணம்
- கடித இலக்கியம் – 26 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- ‘கவிபாஸ்கரி”ன் தொட்டில் கனவு!
- பெண் மொழி ≠ ஆண் மொழி
- சம்பங்கி – சண்பகம் – சண்பகராசன் கதை
- கீதாரிகள் உலகம்
- இதமிழிசைப் பாடல் -. தொட்டுத் தொட்டுப் பார்க்கட்டுமா சிட்டுக்குருவியே
- தோளைத் தொட்ட கைகள்
- நான் தான் நரகாசூரன் பேசறேன்….
- கணக்கு !
- இராஜேஸ்வரி- பெண்கள் சிறுகதைப்போட்டி. 2006
- தொடரும் இலக்கிய இதழின் இந்தக் காலாண்டிற்குரிய இதழ்
- அறிவிப்பு:
- நேச குமார் என்ற பெயரில் எழுதுபவர் கவனத்திற்கு:
- பேசும் செய்தி – 3
- சாமிச்சண்ட
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 6
- பெண்/பெண்
- மடியில் நெருப்பு – 7
- இரவில் கனவில் வானவில் 6
- திருக்குர்ஆனின் புனிதம் சார்ந்த கற்பிதங்கள்…
- வடகொரியாவின் அணுஆயுதச் சோதனையும் கிழக்காசியாவின் ஆயுதப் பரவலும்.
- பிரச்சினைக்குள்ளான, போப்பின் சமீபத்திய உரையின் தமிழாக்கம
- “கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?”
- அப்சல் மரண தண்டனை – ஓர் அலசல்
- திரிசங்கு
- கயிற்றரவு
- தாஜ் கவிதைகள்
- நான் ?
- நன்றி. மீண்டும் வராதீர்கள்.
- பெரியபுராணம் – 107 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி