காஞ்சனா தாமோதரன்
தென்னமெரிக்காவின் வடமேற்கு முனையிலிருக்கும் எக்வடோர் தேசத்து மழைக்காடுகள்.
நேப்போ நதிக்கரையோரம் வெட்டப்பட்ட அடிமரத்தின் மேல் வசதியாய் உட்கார்ந்திருக்கிறேன் நான். அமேஸான் மகாநதியின் தலைநீர். சுற்றிலும் முன்னிரவின் அடர்த்தி. பின்னணியில் ஓலைக்கூரையிட்ட குடிசைகள். இங்கிருக்கையில் இந்த இடம் நிஜமாய்த் தெரிகிறது. எல்லாவற்றிலிருந்தும் விலகியதாய் இல்லாமல் மையமானதாய்த் தெரிகிறது.
இலைநிழலின் அடியாழத்திலிருந்து துவங்கும் இரவுப்பூச்சியின் ஆரோகணம் மூன்றே ஸ்வரங்களுடன் முடிந்து போகிறது. அருகிலிருக்கும் கொட்டகையில் தொங்கும் ஒற்றை பல்பைச் சுற்றும் விட்டில்பூச்சிகளை, உள்ளங்கை அகலத்திலான கருந்தேள் அவசரமில்லாமல் பிடித்து விழுங்குகிறது. பச்சை மின்மினிகள் அங்குமிங்குமாய் மினுக்கும் ஒளியில் அடிமரப் பட்டைகள் வெளிறித் தெரிகின்றன. காலடியில் கலங்கியோடும் நேப்போ நதி மட்டம் மெளனமாய் உயர்ந்து கரைமணலின் மேல் வளைகிறது. காட்டிலிருந்து நீண்டு அலையும் கொடிகளின் மீதும் கரையில் முடிச்சிடும் வேர்களின் மீதும் நுரை படருகிறது.
இரவின் ஒவ்வொரு மூச்சும் இனிமையாய் மணக்கிறது. எந்தச் சமையலறையையும் தோட்டத்தையும் தொட்டிலையும் விட இனிமையாய். ஈரமாய். என் ஒவ்வொரு மூச்சுடனும் மேலே நட்சத்திரங்கள் நடுங்குகின்றன. பின்னிருக்கும் குடிசையிலிருந்து ரிக்கார்டர் குழலின் நாதம். வார்த்தையற்ற பாடல் குக்கிராமத்து நடுமைதானத்தின் மேலே மிதந்து, பெருமரங்களின் இலைக்கூரைகளில் சிக்கி விடுபட்டு, எங்கள் பேச்சை அடக்கி, நதிப்பரப்பில் திரிந்து கரைகிறது.
இது போதும். இப்போதைக்கு இது போதும்.
பிரேஸில் நாட்டு ஆறுகளில் உள்ள ஒரு மீனினம் இரண்டு குவியாடிகள் ( ‘லென்ஸ் ‘) பொருந்திய கண்ணுடையது. சூரிய ஒளியும் காற்றுமாய் நீர்மட்டத்துக்கு மேலுள்ள உலகைப் பார்க்க ஒன்று; தான் வாழும் ஆழநீர் உலகைப் பார்க்க மற்றொன்று. இரண்டு யதார்த்தங்களையும் ஒருங்கே காணும் இந்த மீன், இந்தப் பிளவுண்ட அறிதலை எப்படி உள்வாங்குகிறதென்பது எனக்குத் தெரியாதது. மனிதர் இந்த மீனைப் போன்றவரோ ? தனது உடனடி யதார்த்தத்தையும் அதற்கு அப்பாற்பட்ட சாத்தியங்களையும் பார்க்கும் சக்தி மனிதருக்கு உண்டு. புலன்களுக்குப் பிடிபடும் இயற்கை/ பூமியென்பது முதல் உலகம். அதிலிருந்து விலகி மனிதரே உருவாக்கிய கலாச்சாரச் சமூக மூடுபனி உலகம் தனி. இந்த இரண்டாவது உலகம், பெருநகரங்களும் மேகமூட்டங்களும் மொழிகளும் கருத்துகளும் சட்டங்களும் சாத்தியங்களுமாய்ப் பயமுறுத்துவது; கலாச்சார மனிதரின் முடிவுடன் தானும் புழுதியில் மடிந்து, முதல் உலகமான இயற்கைக்கு மீளுவது. அந்தப் பிரேஸிலிய மீனைப் போல் இரண்டையும் அணைத்து முழுமையாக்கி வாழுவது சாத்தியமா ? அல்லது, கலாச்சாரச் சமூக உலகத்து மனிதர், தம் முதல் உலகத்தின் வளத்தை உறிஞ்சும் பூமித்தின்னிகள்தாமா ?
நேப்போ நதி போன்ற இடங்களுக்குப் போவதற்குக் குறிப்பிட்ட காரணமென்று ஒன்றுமில்லை. அங்கே இருப்பதை உணர்ந்து இந்தப் பூமியைப் புரிந்து கொள்ள முயலுவதற்காக மட்டும்தான்.
நேப்போ நதி அகலமானது. மண்ணிறமானது. காட்டின் மரக்கிளைகளையும் கொப்புகளையும் அடித்துப் புரட்டி நுரைத்தோடுவது. கரையோரமாய் வீழ்ந்திருக்கும் செத்த மரங்களின் மேல் கழுகுகள் கூனி அமர்ந்திருக்கும். கிளிக்கூட்டங்கள் காட்டின் இருளிலிருந்து வெளிச்சத்துக்குள் பாய்ந்து மீண்டும் மறையும். நதியின் நீருக்கடியே, வருடாவருடம் சில ஊர்க்குழந்தைகளை விழுங்கும் அனக்கோண்டா பெரும்பாம்புகள். நீர்ப்பாம்புகள், முதலைகள், பல மீனினங்கள்.
நதிக்கரையிலிருந்து பார்க்கையில் எல்லாத்திசைகளிலும் சுவர் போலுயர்ந்து தொடரும் மழைக்காடுகள்–ஆண்டாஸ் மலைத்தொடரிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வரை. மரங்களைப் பற்றிய ரசனை மெல்ல உருவாகி விடுகிறது. கறுத்த நெல்மூட்டை போன்ற எறும்புக் கூடு தொங்கும் மரங்கள். (எறும்புகள் மண்ணில்தான் புற்றுவீடு கட்டுமென்று அது வரை நினைத்திருந்தேன்.) விதவிதமான பறவைக்கூடுகள் ஊசலாடும் மரங்கள். தேக்கு மரம். பவள மரம். பட்டுப் பருத்தி மரம். சமோனா ஈச்ச மரம்.
நதிக்கரையிலிருந்து விலகிக் காட்டுக்குள் நுழையவும் காட்சி மாறுகிறது. ஒரே பச்சையாய்த் தெரிந்த காடு பல்வேறு பச்சைகளாய்ப் பிரிந்து காட்டுகிறது. கொத்தாய்க் கீற்றாய் விசிறியாய்த் தூவலாய்ப் பளபளக்கும் இலைகளை நிமிர்ந்து பார்க்க மறந்து போகிறது. பூத்திருக்கும் கொடிகள் அடிமரங்களைச் சுற்றி மேலேறுகின்றன. முப்பது நாற்பதடி அகலத்துக்கு விடியும் பட்டுப் பருத்தி மரத்தின் அடிமரங்கள், ஓர் அகலமான அறையின் மூன்று சுவர்களைப் போல் வளைந்து நிற்கின்றன. மரங்களின் மடியிலுள்ள இவ்வறைகளில் சந்தோஷமாய் வாழ்நாளைக் கழிக்க இயலும். கண்ணைப் பறிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் காட்டுப்பாதைகளில் பறக்கின்றன. காலடியில் ஊரும் எறும்புகள் முக்கோண வடிவ இலைத்துண்டுகளைச் சுமந்திருக்கின்றன; கண்ணுக்கெட்டும் தூரம் வரை, பச்சைப் பாய்மரக் கப்பல்வரிசையாய் எறும்புச்சாரை நீளுகிறது. எங்கும் பச்சை. ஒவ்வொரு கணமும் வளர்ந்து செழித்து அடரும் பச்சை. நீண்ட வெட்டரிவாளின் உதவியுடன் பச்சையின் ஆழத்துள் புக முடிகிறது.
இந்தப் பச்சைக்குள்ளிருந்தும் குகைகளிலிருந்தும் வெளியேறித்தான் மனிதர் தம் இரண்டாம் உலகைப் படைத்தது. ப்ளேட்டோவின் குகைக் கதை நினைவுக்கு வருகிறது. நெடுங்காலமாய்க் குகையில் அடைக்கப்பட்ட கைதிகள். குகைச்சுவர்களில் நடமாடும் நிழல்களின் அடிப்படையில் உருவாகிறது இவர்களின் அறிவு. வெளிச்சத்தை முழுமையாகப் பார்த்ததும் கைதிகள் அதிசயிக்கிறார்கள். இருளிலிருந்து ஒளிக்கு வருகையிலும், ஒளியிலிருந்து இருளுக்குத் திரும்புகையிலும் அறிவுக்கண் குழப்பமடையும் என்கிற முடிவுக்கு வருகிறார் ப்ளேட்டோ. குகைகள், பச்சைக்காடுகளின் இதமான நிழலிருந்து சமவெளிக்கு மனித முன்னோடிகள் நகர்ந்தது வெறும் இடம்பெயர்தல் மட்டுமல்ல. இரண்டாம் உலக உருவாக்கத்தின் ஆரம்பகட்டம். மாபெரும் பயணம். சுமார் நான்கு மில்லியன் வருடங்களாய்த் தொடர்ந்த பயணம். அதிசயமும் அதிர்வும் நிரம்பிய பயணம். மனிதப் பிரக்ஞையென்னும் ஒளிக்குள் அந்த மனித முன்னோடிகள் தம் முதல் அடியை எடுத்து வைக்கையில், இந்த முதல் உலகம் விதிர்விதிர்த்து நடுங்கியிருக்கும். பின் அமைதியாகி, வாழ்த்தி விலகி வழிவிட்டிருக்கும். உன் புது உலகத்தைப் படைத்த பின், அதன் வழியே என்னை மீள்கண்டுபிடிப்புச் செய்வாய், ஒரு படைப்பாளியின் கண்ணுடன் என்னருமையைப் பன்மடங்கு புரிந்து கொள்வாய், என்று நம்பி ஆறுதல்பட்டிருக்கவும் கூடும்.
கண்ணுக்குத் தெரியாத பலவும் காட்டினுள் ஒளிந்திருக்கின்றன. பல்வேறு விலங்கினங்கள், பாம்புகள், பறவைகள், பூச்சிகள். சில புதர்களுக்குள்ளிருந்து கண்கள் மினுமினுக்கின்றன. சில மரங்களின் பின்னே உருவமற்ற பாய்ச்சல்கள் கேட்கின்றன. சற்றுத் தொலைவிலுள்ள கச்சா எண்ணெய்க் கிணறுகளும் குழாய்களும் கூடக் கண்ணுக்குத் தெரிவதில்லை. இங்குள்ள ஆள்தின்னிச் செவ்விந்தியர்களும்.
காட்டின் நடுவே பெரும் ஏரிகள். நீர்ப்பரப்பிலிருந்து இரண்டங்குல உயரமுள்ள, தாழ்ந்த ‘கனூ ‘ படகுகளில் துடுப்புப் போட்டு அழைத்துச் செல்லுகிறார் எங்கள் செவ்விந்திய வழிகாட்டி. வாய்பிளந்த மலைப்பாம்புத் தலையைக் கம்பில் செருகிப் படகு முகப்பை அலங்கரித்திருக்கிறார். மழைக்காட்டின் இலைகளைப் போலவே ஒளி ஊடுருவ முடியாத ஏரிப்பரப்புகள். நீரின் அசைவுகளையும் வடிவங்களையும் வைத்தே உள்ளிருப்பதை ஊகிக்க முடியும். ஏரிக்கரையினருகே கொதித்துயருவது போல் நீர் பொங்கி அலைக்கிறது. அடியில் சுமார் நானூறு பவுண்டு எடையுள்ள பைச்சி என்னும் கறுப்பு மீன். நாரைகளும் கழுகுகளும் மீன்கொத்திகளும் வான்கோழி போன்ற பறவைகளும் இன்னும் அடையாளம் தெரியாத பல பறவைகளும் வெயிலுக்கும் நிழலுக்குமாய் மாறி மாறி இடம்பெயர்கின்றன. வழிகாட்டியின் மகன் கவண்கல்லால் ஏதோ பறவையை அடித்து வீழ்த்துகிறான். மேலே மெல்லிய சிறகுத்துடிப்பு. ஆமையொன்று மெதுவாய் நீரினுள் நழுவுகிறது.
நேரம் திறந்தவெளியாய்ப் பரந்து கிடக்கிறது. தொலைபேசியும் தொலைநகலும் இங்கில்லை. இப்படியும் ஓர் உலகம்.
வெளியுலகம் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நான் பிறந்த காலத்துக்கும் இப்போதிருக்கும் காலத்துக்கும் இடையேயான வேறுபாடுகளை நினைத்துப் பார்க்கிறேன். வியக்கிறேன். பல நூற்றாண்டு காலத்து அளவிலான மாற்றங்கள், ஒரு சில பத்தாண்டுகளில் நடந்திருக்கின்றன. அதனினும் குறுகிய காலத்தில் இம்மாற்றங்களை நான் உள்வாங்கியிருக்கிறேன்; என் குழந்தைப்பருவத்தை இப்போதே நூற்றாண்டு காலப் புகைமூட்டத்தினூடேதான் நான் பார்க்கிறேன். இன்னும் சில பத்தாண்டுகளில் வரவிருக்கும் என் இளமூப்புக் காலத்தில், மனிதனால் படைக்கப்பட்ட காலம் என்னை வேகமாய்க் கடந்து போயிருக்கும்: இயற்கையான இறப்பு வருமுன்னரே நான் இறந்திருப்பேன். இயந்திரமயத் தொழில்நுட்பத்தால் உந்தப்பட்டு, அதீத வேகத்தில் பரிணாம வளர்ச்சியடையும் சமூகத்தில் இதுதான் இயல்போ ?
கருக்கலில் மறைந்திருந்து பறவைகள் மீட்டும் பாடல்களில் ஏக்கம் தெரிகிறது. கிராமத்தார் இரவு உணவுக்கு அரிசிச்சோறும், கோழிக்கறியும், மரவள்ளிக்கிழங்கும், வெங்காயமும், பீட்ரூட்டும், பல்வேறு பழங்களும் பரிமாறுகிறார்கள். என் தலைமுடியைச் சீவிப் பின்னி விளையாடிக் கொண்டிருக்கும் சிறுமிகளை அம்மாமார் இழுத்துப் போய் வரிசையாய் நிறுத்துகிறார்கள். சிறுவர் சிறுமிகள் எங்களுக்காகப் பாடும் ஸ்பானிஷ் பாடலில் இசையை விடத் தூய்மையின் இனிமை ஓங்கித் தொனிக்கிறது. நாங்களும் பதிலுக்கு ஓர் ஆங்கிலச் சிறுவர் பாடலைப் பாடுகிறோம்: ‘ஓல்ட் மாக்டானல்ட் ஹாட் அ ஃபார்ம்… ‘ என்று. பாடலில் வரும் மிருக ஓசைகள் சிறுவர்களுக்குப் புரியவில்லை; மிருகமொழி ஆங்கிலத்திலும் ஸ்பானிஷ்ஷிலும் வேறு வேறு போலும்; நான் தமிழின் மிருக ஓசைகளை முயன்று பார்க்கிறேன். சிறுவர் சிறுமிகளுக்குப் பெருத்த உற்சாகம். சிரித்துக் கொண்டே எங்களைச் சுற்றி வருகிறார்கள். மேலும் பாடுகிறார்கள். எல்லார் முகத்திலும் புன்னகைகள்.
நியூயார்க் மன்ஹாட்டன் ஃப்ளாட்டும் பாரிஸில் வீடுமாய் வாழும் சகா ஒருத்தர் மெல்லச் சொல்லுகிறார்: ‘எக்வடார் காட்டின் நடுவே, நேப்போ நதிக்கரைக் குக்கிராமத்தில், மரத்தடிக் கூடாரத்தில், குழந்தைகளுடன் உரக்கப் பாடிக் கொண்டிருக்கிறேன் என்பது அதிசயமாய்த் தெரிகிறது. ‘ ஒரு கணநேர மெளனத்துக்குப் பின் மேலும் சொன்னார்: ‘இதை விட்டுவிட்டு நான் வீடு திரும்புவது அதையும் விட அதிசயம். ‘
மிஞ்சியிருக்கும் மழைக்காட்டின் பச்சை வெல்வெட் இலைகள் தூரத்தில் சலசலக்கின்றன.
பூமித் தின்னிகள்தாம் நாம்.
ஆனால்….
சூரியன் முத்தமிடும் புல்வெளிக்கு இடம்பெயர்ந்த மனித முன்னோடிகள், தமது முதல் உறைவிடங்களான குகைகளிலிருந்தும் பச்சைக்காடுகளிலிருந்தும் நுட்பமான ஏதோவொன்றைத் தம்முள் சுமந்து வந்திருக்க வேண்டும். அது இன்னும் நம்முள் உயிர்த்திருக்கிறது. ஆள்காட்டி விரல் வளைத்துத் திரும்பக் கூப்பிடுகிறது. காற்றோடு காற்றாய்க் காதில் ஓதுகிறது: பசுமை காத்து இரு.
( ‘உயிர்மை ‘, ஏப்ரல் 2004)
uyirmmai@yahoo.co.in
KanchanaThamo@aol.com
- நிறமற்றவனின் குரல் : சுடலை மாடன் வரை-கவிதைத்தொகுதி அறிமுகம்
- கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்
- பலியர்களுடன் உரையாடல்
- தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்
- வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்
- தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்
- பூமித்தின்னிகள்
- தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?
- ஈரோட்டுப் பாதை சரியா ? – 3
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7
- குண்டலகேசி – சில குறிப்புகள்
- ஜெயமோகனும் ஸ்ரீரங்கத்து தேவதைகளும்….
- மந்திர உலகின் தந்திரங்கள்
- கலிங்கத்துப்பரணி- சில குறிப்புகள்
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)
- ஃ –> இளமையான பழைய(ஆயுத) எழுத்து.
- மெய்மையின் மயக்கம் – 1
- தண்டவாளங்கள்
- இருதுளி கண்ணீர்
- சமீபத்தில் வாசித்த நூல்கள்- 4 -சக்கரியா(தமிழாக்கம் சுகுமாரன்), சிவகுமார் , எம் ஜி சுரேஷ் , வசந்த், அ. கா. பெருமாள் , தேவதேவன் ,
- ஆயுத எழுத்து பற்றி
- Dahi pasanday
- ஜஃப்ராணி ஷாமி கபாப்
- கடிதங்கள் மே 27,2004
- கடிதங்கள் மே 27, 2004
- கடிதம் மே 27,2004
- பொன்விழாக் கொண்டாட்டம்- 3
- கவிதைகள்
- தமிழவன் கவிதைகள்-ஏழு
- கவிக்கட்டு 8 – யார் நீ ?
- தீவு
- பூமகன்
- கவிதைகள்
- அறை
- இல்லம்…
- அன்புடன் இதயம் – 19 – அம்மா வந்தாள்
- நாய்கள்
- பார்த்தசாரதியும் பகவத்கீதையும்
- கவிதைகள்
- உள் நோக்கு
- தாய் மனம்
- வதை
- … உலக போலீஸ் …
- ரேடியோவின் கதை
- தேனீ – மொழியும் பணியும்
- அமெரிக்காவின் ஐம்பெரும் ஏரிகளை அட்லாண்டிக் கடலுடன் இணைக்கும் ஸெயின்ட் லாரென்ஸ் கடல்வீதி [St Lawrence Seaway Connecting The Great
- சீதைகளைக் காதலியுங்கள் !
- பிறந்த மண்ணுக்கு – 3
- நீலக்கடல் -(தொடர்) அத்தியாயம் 21
- இலவசம்
- வலை
- காத்திருப்பு
- வள்ளி வோட்டு போட போறா!
- மஸ்னவி கதை — 09சிங்கமும் முயலும்