வெளி ரெங்கராஜன்.
எழுபதுகளில் சிறுபத்திரிக்கைகளின் வரவால் நவீனத் தமிழ் இலக்கியத்தில் புதிய எழுச்சிகள் உருவாகிக் கொண்டிருந்த கால கட்டத்தில் கரிசல்புற வாழ்க்கை நிலைகளை மிகையின்றி ஒரு யதார்த்தமான, இயல்பான தொனியில் நெகிழ்ச்சியுடனும் தீவிரத்துடனும் வெளிக்கொணர்ந்த எழுத்தாளர்களில் பூமணி குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவர். தான் கடந்துவந்த வாழ்க்கை முறைகளின் உணர்வுகளைப் பதிவு செய்யும் ஒரு கலைஞன் ஒரு தீவிர நிலைப்பாட்டில் உணர்ச்சி வயப்படும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் பூமணி உணர்ச்சிவசப்படாமல் பாதிக்கப்பட்ட தன்னுடைய சுற்றுப்புற மக்களின் உணர்வுநிலைகளை ஒரு இயல்பான ஓட்டத்தில் சித்தரிப்பின் கலைத்தன்மை குறித்த புரிதலுடன் வெளிப்படுத்துகிறார். அதனூடாக அவரது பரிவுகளும் கோபங்களும் பதிவுபெறுகின்றன.
அவருடைய பிறகு, வெக்கை, நைவேத்தியம் ஆகிய நாவல்களில் சுதந்திரத்திற்குப்பிறகு கிராமிய சமூக, கலாச்சார உறவுத்தளங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், மாறாத வாழ்க்கை நிலைகளும், சரிந்து வரும் பிராமணீய மதிப்பீடுகளும் பேசப்படுகின்றன. வெக்கை நாவல் உணர்ச்சி வயப்பட்டு வெகுண்டெழும் ஒரு கிராமப்புற சிறுவனின் குற்றம் ( ?) குறித்த மனநிலையை ஆராய்கிறது. நாவல்களைத் தவிர நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் அவர் எழுதியிருக்கிறார். ஒரு தனித்துவம் வாய்ந்த வெளிப்பாட்டுமுறையில் அவருடைய பாத்திரங்களின் சிக்கல்கள் அவர்களுக்குரிய நிலவெளி மற்றும் வாழ்க்கைச் சூழலுடன் இணைந்து ஒரு செறிவான தளம் அவருடைய கதைகளில் சாத்தியப் படுகிறது.
போலீஷ் எழுத்தாளர் ஸ்லாவோமீர் ம்ரோஜெக்கினால் கவரப்பட்டு அவருடைய கதைகளை பூமணி மொழிபெயர்த்திருக்கிறார். ம்ரோஜெக்கின் அதிகாரத்திற்கெதிரான கிண்டல் தொனி எந்த சூழலுக்கும் பொருந்தகூடியதென்பதை வெளிப்படுத்தும் கதைகள் அவை.
தீப்பெட்டி தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களின் நிலையை வெளிப்படுத்தும் ‘கருவேலம்பூக்கள் ‘ படத்திற்கு N.F.D.C உதவி பெற்று தமிழில் ஒரு மாற்று யதார்த்த சினிமாவிற்கான முயற்சி மேற்கொண்டவர். நாடகத்தை மக்களுக்கு நேரடியாக எடுத்துச் செல்லும் முயற்சியில் வீதி நாடக இயக்கத்துடன் இணைந்து பணியாற்றியவர். ஒரு யதார்த்தபாணி எழுத்தாளராக, மாற்று நாடக மற்றும் சினிமா படைப்பாளியாக தமிழ்ச்சூழலில் பூமணியின் பங்கு முக்கியம் வாய்ந்தது.