தேவமைந்தன்
‘புலமைக் காய்ச்சல்’ என்பது புலமை தோன்றிய மறுகணமே தானும் உண்டாகியிருக்கும் போலிருக்கிறது. எனக்குத் தெரிந்தவரை தமிழில் ‘புலமைக் காய்ச்சல்’ என்பதற்கான சான்றுகள் சோழர் காலத்திலிருந்துதான் கிடைக்கக்கூடும்.
ஆங்கிலத்தில் எலிசபெத் காலத்திலிருந்து இதே புலமைக்காய்ச்சல் தோன்றியிருக்கிறது. அந்தக் காலத்தில் நாடக ஆசிரியர்களுக்கு இடையே இது நிலவியிருக்கிறது. ‘Poetomachia’ என்று இதற்குப் பெயர் சூட்டினார்கள்.
கவிஞர்கள் கொண்டாடும் ‘கவிஞருக்கான உரிமம்’ எனப்படும் ‘Poetic License,’ புலமைக் காய்ச்சல் கண்ட புலவர்களுக்குத் தாங்கள் அகத்துள் காயும் ஒருவரைக் குற்றம் சாட்ட உதவியிருக்கிறது. கம்பனுக்கும் ஒளவைக்கும் இடையிலும் கம்பனுக்கும் காளமேகத்துக்கும் இடையிலும் இது நிலவியிருக்கிறது. இதிலிருந்து காளமேகப் புலவரை விடுவித்து, கம்பனுக்கும் ஒளவைக்கும் இடையில்தான் புலமைக் காய்ச்சலே என்று வரையறுக்கும் மரபும் உள்ளது. காளமேகம் சார்பாக ஒரே பாடல் சான்றாக இருப்பதும் அதுவும் ஒளவை நடையில் அமைந்திருப்பதுவுமே இக் கூற்றுக்கு ஊற்றம் அளிக்கின்றன.
‘கவிஞருக்கான உரிமம்’ குறித்து, பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜான் டிரைடன் இவ்வாறு மொழிந்தார்:
“உரைநடை, தயவு தாட்சணியம் அற்ற செறிவைக் கொண்டது. அது தொய்வான செய்திகளையும் நெகிழ்வான பொருள்களையும் புலப்படுத்த இடம் கொடுக்காது. இப்படிப்பட்டவற்றைத் தங்கள் கவிதைகளில் பேசுவதற்கு என்றே காலங்காலமாகக் கவிஞர்கள் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு வரும் உரிமைதான் இது”
பரந்துபட்ட பொருளில், ‘கவிஞருக்கான உரிமம்’ மொழிக்கு மட்டும் தொடர்புடையதாகக் கருதப்படுவதில்லை. கவிஞர்கள் மட்டுமல்லாமல் ஏனைய இலக்கியப் படைப்பாளர்களும் இலக்கியம் குறித்தும் அதுசார்ந்த மொழி இனத்தின் வரலாறு குறித்தும் விரும்பியோ, விரும்பியும் முடியாமலோ இழைக்கும் மரபு வழுக்களையும் மீறல்களையும் இத்தொடர் குறிக்கிறது.
சேக்ஸ்பியர், ‘நான்காம் ஹென்றி” பகுதி – ஒன்றில், நமக்கு உள்ளபடியே தெரிந்ததற்கு மாறாக தீரமிக்க ஹாட்ஸ்பரை மிகவும் இளையவனாக்கி இருந்தார். இதற்கு அவருக்கு சாமுவேல் டேனியலின் வரலாறு (‘ரோஜாக்களின் போர்’) பெரிதும் உதவியது.
ஏனென்றால், அப்பொழுதுதான் அவன், மிக வெளிப்படையாகவே ஒழுங்குவிதிகளை மீறும் இயல்புடைய இளவரசன் ஹாலி(Hal)ன் பின்புலத்தில் செயல் புரிபவனாகச் சித்தரிக்கப் பெறல் இயலும். இந்த மரபு – உண்மைமீறலுக்கு அடுத்த வளர்ச்சியாகிய ‘கால இட வழு'(anachronism)வும் ஷேக்ஸ்பியரிடம் உண்டு.
சேக்ஸ்பியரின் கிளியோபாத்ரா, முதலாம் – இரண்டாம் எலிசபெத் காலத்திய ‘க[ர்]செட்'(corset) என்னும் உள்ளாடை வகையை அணிகின்ற வழக்கம் உடையவளாக சேக்ஸ்பியரால் குறிக்கப்பட்டிருப்பதும்; பழங்கால ரோமாபுரியில் கதை நிகழும் ‘ஜூலியஸ் சீசர்’ நாடகத்தில் தவறாமல் மணி ஒலிக்கும் கடிகாரம் ஒன்று அவரால் அறிமுகப்படுத்தப் பட்டிருப்பதும் வரலாற்று மரபு / கால இட வழு வகையைச் சார்ந்தவைதாம். அறியாமையிலிருந்தும் அதேபோல் வடிவுறுத்துதலாலும் உண்மையைக் கவிஞர் திரித்தல் வரையும் இந்தக் ‘கவிஞருக்கான உரிமம்’ விரிவாக்கப் படுகிறது.
‘தெ விண்டர்ஸ் டேல்’-இல், இயல்பாகவே நிலத்தால் சூழப்பெற்ற பொஹீமியாவுக்குப் பரந்த மனத்துடன் கடற்கரையை வழங்கியிருப்பார் சேக்ஸ்பியர். அதனால் சேக்ஸ்பியர் வாசிப்பில் எந்தவொரு களங்கமும் நேர்ந்துவிடவில்லை.
கீட்ஸ் மட்டும் இதனை விட்டு வைத்தாரா! தான் 1816-இல் எழுதிய “On First Looking into Chapman’s Homer”-இல் பசிபிக் பெருங்கடலைக் கண்டுபிடித்த புகழை பல்போவா(Balboa)வுக்குப் பதில் கார்டெஸ்(Cortez)ஸுக்கு நல்கினாரே!
தமிழுலகைப் பொறுத்த அளவில் புலமைக் காய்ச்சல் ஒருவருக்கு வர இவ்வளவு வலிமையான காரணிகள் தேவையில்லை. ஒருவரின் சமயச் சார்போ, ஒருமை பன்மை மயக்கமோ, மரபியல் முரணோ போதுமானவை.
சோழர் காலத்தில்தான் புலமைக் காய்ச்சல் தமிழகத்தில் தோன்றியிருக்கும் என்று இந்தக் கட்டுரையின் முதற் பத்தியிலேயே சொன்னேன். ‘திருவிளையாடல்’ படத்தில் வரும் நக்கீரர் – பொற்றாமரைக்குளம் முதலான சேதிகளெல்லாம் ‘செவிவழி’ வந்தவையே. இலக்கியச்சான்று என்று பார்த்தால், சோழர் கால ஒளவை, காளமேகப் புலவர் தனிப்பாடல்களிலிருந்துதான் கிடைக்கும்.
“காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி
ஆசுக்குக் காளமுகில் ஆவாரே – தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன் உவக்கப் புகழேந்தி
கூழுக்கிங்கு ஒளவையெனக் கூறு”
என்ற பாடலை ஒளவை பாடியதாகக் கூறுகிறார்கள். ஆனால் ‘நூற்றாண்டு முறை தமிழ் இலக்கிய வரலாறு’ வகுத்தெழுதிய மு.அருணாசலம் அவர்கள் இப்பாடலை யார் எழுதினார் என்று குறிப்பிடாமல் விட்டார். ‘காலந்தோறும் ஒளவையார்’ என்ற விரிவான ஆய்வை வெளியிட்ட இ.செயராமன் அவர்களும் முன்னவர் வழியே அப்பாடலை ஆசிரியர் பெயர் சுட்டாது விட்டார். ‘காலந்தோறும் ஒளவையார்’ நூலில்தான் பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளின் இடையில் வாழ்ந்த பந்தன் என்பவரைப் பற்றிய ஒளவையின் ‘பந்தனந்தாதி”யும் முழுமையாகத் தரப்பட்டுள்ளது.
காளமேகப் புலவர் கம்பனை இகழ்ந்து பாடியதாக இப்பொழுதுள்ள தனிப்பாடல் திரட்டுகளில் இடம்பெறும் –
“நாரா யணனை நராயணனென் றேகம்பன்
ஓராமற் சொன்ன உறுதியால் – நேராக
வாரென்றால் வர்என்பேன் வாளென்றால் வள்என்பேன்
நாரென்றால் நர்என்பேன் நான்”
[பொருள்: ‘நாராயணன்’ என்ற பெயரைக் கம்பர் கொஞ்சமும் யோசியாமல் மோனைக்காக ‘நராயணன்’ என்று சொன்னதை வைத்துக்கொண்டு நானும் இனிமேல் ‘வார்’ என்பதற்குப் பதிலாக ‘வர்’ என்றும் ‘நார்’ என்பதற்குப் பதில் ‘நர்’ என்றும் சொல்லப் போகிறேன்.]
– என்ற பாடலைவிட புலமைக் காய்ச்சலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்? மேற்படிப் பாட்டை (சோழர்கால) ஒளவைதான் பாடியிருக்க வேண்டும் என்பதற்கு வைராண பிள்ளை அவர்கள்[‘தனிப்பாடற்றிரட்டு’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாகத் தனிப்பாடல்களைத் தொகுத்து முதன்முதல் வெளியிட்டவர்] காட்டும் பாடல்கள் பின்வருகின்றன:
சோழன், கம்பன் பாட்டை வியந்து ஒளவையிடம் பெருமைப்பட, அவர் மொழிந்தது:
“விரகர் இருவர் புகழ்ந்திடவே வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் – அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும் அவர்கவிதை
நஞ்சேனும் வேம்பேனும் நன்று”
[பொருள்: தன் கவிதை பாராட்டப்பட வேண்டுமானால், கவிஞர், தன்னைப் புகழ்ந்து பேசத் தந்திரவாதிகள் இருவரை ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். தன் விரல்கள் நிறைய மோதிரங்கள் அணிந்திருக்க வேண்டும். இடுப்பில் உயர்ந்த பஞ்சாடையையோ பட்டாடையையோ அணிந்திருக்க வேண்டும். அப்புறம் — அவர் கவிதை நஞ்சைப் போலக் கொடுமை செய்வதானால் என்ன? வேம்பு போலக் கசப்பைத் தருவதானால் என்ன? ‘நல்லது’ என்றே பாராட்டப்பெறும்.]
கம்பனைப் போல ‘பாரகாவியம்'[அளவிலும் புலமையிலும் இலக்கணத்திலும் ஆகப்பெரிய காப்பியம்] பாடுவார் உளரோ என்று சோழன் கம்பனுக்கு முன் வியந்துகொண்ட பொழுது ஒளவை சோழனுக்கு அறிவுறுத்தியது:
“வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால் – யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது”
[பொருள்: தூக்கணங்குருவியின் கூடும், அரக்குப்பூச்சியின் வலிமையான அரக்கும், கரையான்கள் சேர்ந்து கட்டும் புற்றும், தேனீக்கள் கட்டும் கூடும், சிலந்தி கட்டும் இறுகிய வலையும் எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல. ஆகவே யாம் மிகவும் திறமையுடையோம் என்று ஒருவர் தனக்குதானே ‘பீற்றி’க் கொள்ளவே கூடாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் அவரவர்க்கேற்ற செயலைச் செய்தல் எளிது.]
இவைபோக (சோழர் கால)ஒளவைக்கும் கம்பனுக்கும் இடையில் எழுந்த புலமைக் காய்ச்சலுக்குச் சரியான சான்று ஒன்றுள்ளது. சோழன் அவையில் எல்லோர் முன்னும் – கம்பன், இன்றைய இருபொருள் படும் திரைப்பாடல் அடியின் பாணியில்,
“ஒரு காலில்அடீ! நாலிலைப் பந்தலடீ!”
என்று நொடி(புதிர்)போட, ஒளவையார் அதற்கு விடையாகவும் கம்பன் செருக்கு அடங்கவும் பின்வருமாறு பாடினாராம்:
“எட்டேகால் லட்சணமே! எமன்ஏறும்பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாய் அது?”
[பொருள்: அவலட்சணமாக உள்ளவனே! எமன் ஏறிவரும் வாகனமாகிய எருமைக் கடாவே! அளவு கடந்த ஒழுங்கீனமான, மூதேவியைத் தாங்கி வரும் வாகனமாகிய கழுதையே! மேலே கூரையில்லாத குட்டிச் சுவரே! குரங்கே, அது ஆரைக்கீரையடா நீ போட்ட நொடியின் விடை/யாரைப் பார்த்து இருபொருள்பட இழிவாக இவ்வாறு சொன்னாயடா?]
வயல் புறமாகப் போகும் வழக்கமுடையவர்களுக்கே ‘ஆராக்’கீரையின் [‘ஆரைக்கீரை’யின் பேச்சுவழக்கு; ஆரை = வண்டியின் ஆரக்கால்] வடிவும் விடுத்த நொடியின் இருபொருளின் தரமும் புரியும்.
சரி. இனி, பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு வருவோம்.
சமயச் சார்பு காரணமாகத்தானே, ஆறுமுக நாவலர் – வள்ளலாரின் படைப்புகள் ‘திருவருட்பா’ என்ற தலைப்பில் வரக்கூடாதென்றும் அவை அருட்பாக்கள் அல்ல மருட்பாக்களே என்றும் வழக்காடும் அளவுக்குப் போனார்? சைவத் திருமுறைகள் பன்னிரண்டே என்றும் நம்பியாண்டார் நம்பி பகுத்துத் தொகுத்த அவற்றைத் தவிர மற்றவற்றுக்குத் ‘திரு’ என்ற அடை பொருந்தாது எனவும் வாதிட்டார். ஆறுமுக நாவலர் மிகவும் புலமை பெற்ற தமிழறிஞர். அவர் சிறார்களுக்காக உருவாக்கிய ‘பாலபாட’த்தின் நான்கு பகுதிகளும்; இளையோர்க்கு உதவிய – தமிழைப் ‘பிழையில்லாமல் எழுத இலக்கணச் சுருக்க’மும்; தமிழ் அகராதிக் கலை வளர்ச்சிக்கு வழங்கிய ‘சூடாமணி நிகண்டு’ப் பதிப்பும்; புலவர்களுக்கு நல்கிய தொல்காப்பியச் சூத்திர விருத்தி – இலக்கண விளக்கச் சூறாவளி – இலக்கணக் கொத்து என்னும் ‘முப்பெரும் இலக்கண நூல்க’ளும் — என்றும் அவர் புகழைப் பறைசாற்றுவன. 1960களின் தொடக்கத்தில் வந்த ‘குமுதம்’ இதழொன்றில்(குமுதம் இதழ் ‘சைவ’மாக விளங்கிய காலகட்டம் அது) இந்த அருட்பா – மருட்பாப்போர் தெளிவானதொரு கட்டுரையாக வெளிவந்தது. நீதிமன்றத்துக்கு வள்ளலார் வந்தபொழுது நீதிபதி வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் ஆறுமுக நாவலரும் எழுந்து நின்று வள்ளலாருக்கு மரியாதை செலுத்தினார் என்ற சேதி அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சமயச் சார்பு என்பது, புறத்தே எழுந்த காரணம் மட்டுமே. புலமைக் காய்ச்சல் அகத்தே நின்று வருத்தவில்லை என்றால் நீதிமன்றம் செல்லும் அளவுக்கு அருட்பா அவரை மருட்டி இருக்குமா?
தமிழ்க் கவிஞர்களில் பாரதி அளவுக்குக் குறைகூறப்பட்டவர்கள் இருந்தார்களா என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்ப் புலவர்கள், “தேன் வந்து பாயுமா காதில்? பாய்ந்தாலும் அது தொண்டையில் இனிக்குமா?” என்று பகடி செய்தது தொடக்கம் தாம்பரம் வீரமணி என்பவர் இதற்குமேல் பாரதியை வசை பாட முடியாது என்ற அளவு புத்தகம் எழுதியது வரை, தமிழகத்தில் 1975 வரை பாரதிமேல் புலமைக் காய்ச்சல் கடுமையாக நிலவியது. காது – மூக்கு – தொண்டை மருத்துவம் தெரிந்தவர்கள், தேன் காதுக்குள் புகுந்தால் தொண்டையில் இனிக்கவே இனிக்கும் என்று தீனக்குரல் எழுப்பினார்கள். தாம்பரம் வீரமணியின் புத்தகத்தை 1974இல், சென்னை அண்ணா சாலையிலுள்ள அன்றைய அரசினர் கலைக் கல்லூரியில்(இன்று, காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி) கல்லூரிக் கல்வி தொடர்பான புத்தறிவுப் பயிற்சியின் பொழுது கண்டேன். இன்று நிலை மாறிவிட்டது.
அடுத்து, கண்ணதாசன் மிகப் பரவலாகக் குறைகூறப் பட்டார். “கோட்டையிலே ஒரு ஆலமரம் – அதில் / கூடு கட்டும் ஒரு மாடப்புறா” (திரைப்படம்: ‘முரடன் முத்து’) என்று அவர் எழுதிய திரைப்பாட்டு வரியைச் சொல்லி, “மாடப்புறா என்ற பெயர் வந்ததே, அவ்வகைப் புறா, மாடத்தில் கூடு கட்டுவதால்தான்; அதுகூடத் தெரியாதவர் கவிஞராம்!” என்று பேசினார்கள்.
இயற்கையமைப்பில் நிலத்தால் சூழப்பெற்ற பொஹீமியாவில், கடற்கரையைச் சித்தரித்த (‘தெ விண்டர்ஸ் டேல்’-இல்) சேக்ஸ்பியர் இங்கு பிறந்திருந்தால் புலமைக் காய்ச்சல் அவரை எப்படியெல்லாம் படுத்தியிருக்கும்?
உவமைக் கவிஞர் சுரதா, ”மாடு முட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை!” என்று எழுதியபொழுது ‘துக்ளக்’ இதழில் சுரதாவுக்கு ஒருமை பன்மையே தெரியவில்லை என்று நையாண்டி செய்து கட்டுரை வந்ததாக நினைவு.
இப்பொழுதுள்ள திரைக்கவிஞர்களுள் வைரமுத்து எழுதிய “இந்திரன் தோட்டத்து முந்திரியே!”வும்(திரைப்படம்: ‘ராஜபார்வை,’ 1981) முத்துலிங்கம் எழுதிய ‘வேப்பந் தோப்புக் குயிலும்'(திரைப்படம்: ‘கிழக்கே போகும் ரயில்,’ 1978) நையாண்டிக்குள்ளாயின. “தேவருலகம் என்பதே பொய். அதில் குடிமுந்திரியோ(முந்திரிப்பழம்) கொடிமுந்திரியோ(திராட்சை) முளைக்குமா? இந்திரனுக்கு எதுகையாக முந்திரி என்று போட்டுவிட்டு எப்படியெல்லாம் விளக்கங்கள்…” என்றார்கள். “மாந்தோப்பைத் தான் தோப்பு என்ற சொல் உணர்த்தும். வேப்பந்தோப்பு என்பது அபத்தம். மாந்தோப்பில் இருந்துதான் குயில் கூவும்..வேப்ப மரத்திலிருந்து காக்கைதான் கரையும்!” என்றார்கள்.
கலைஞர் எழுதினார்: “கம்பனால் கவிஞர் வைரமுத்துவைப் போல் கவிதை தொடுக்க முடியுமா? நிச்சயமாக முடிந்திருக்காது. அப்படிச் சொல்வதால் கம்பனின் கற்பனை வளத்தையும், கவிதைத் திறத்தையும் குறைத்து மதிப்பிடும் குறைமதி எனக்கில்லை. கம்பன் காலம் வேறு; அவனுக்கிருந்த வசதிகள் வேறு. வைரமுத்துவின் காலம் வேறு; அவருக்குள்ள வசதிகள் வேறானவை மட்டுமல்ல; அதிகமும்கூட.”
அடுத்து பா.விஜய். மிகவும் நேரம் எடுத்துக் கொண்டு ஆழ்ந்து சிந்தித்து அவர் எழுதியதும்; விருது பெற்றதும்; வாழ்க்கையில் பலர் படும் பின்னடைவுகளின் பொழுது இதமாகவும் பதமாகவும் தட்டிக் கொடுத்து ஆறுதல் சொல்லும்படியாக வெண்சாமரம் வீசியதும்; திரைக்கதையிலும் காட்சியிலும் நடிகையின் பாவனை உதடசைப்பிலும்கூட உயிர்ப்பைச் சிந்தியதுமான “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே / வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!”(திரைப்படம்: ‘ஆட்டோகிராப்’) என்ற பாடல் எப்படியெல்லாம் ‘நக்கலடிக்கப் பட்டது?’ “Each and every” என்றவாறு ஆங்கிலத்தில் சிந்தித்து எழுதினாலும் ‘flower’ என்றுதானே அடுத்து வரமுடியும்…” என்று ஆங்கில இலக்கணம் வேறு…..
நோம் சோம்ஸ்கி மொழிந்த ‘மொழிக் கட்டுமானம்’ பற்றிய கருத்தியல்தான் நினைவுக்கு வருகிறது! அரசியல், பொருளியல், சமூகவியல்(தற்பொழுது சூழலியலும் சேரும்) காரணிகளால் மொழி தன் கட்டுமானத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறது என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். திருக்குறள் காலத்தில் ‘நன்றி’ என்ற சொல்லுக்குப் பொருள் ‘நன்மை’ என்பதே. ‘உள்ளம்’ என்றால் ‘ஊக்கம்’ மட்டுமே. கலித்தொகை, ‘பண்பு’ என்ற சொல்லுக்குப் பொருளாக ‘பாடறிந்து ஒழுகுதல்'(empathy) என்பதையே அறிவுறுத்தியது.
கால வளர்ச்சிக்கு ஏற்பவே ஒரு சொல்லின் பொருள் வளர்ச்சியும் உருவாகிறது. ஒரு மொழியின் இலக்கணமும் காலம் செல்லச்செல்ல மாறி வருகிறது. ஏவல் வினைமுற்றுகள் எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் மொழியின் பயன்பாட்டிலும் குறைந்து போயின. வாக்கியங்கள் செய்வினையிலிருந்து செயப்பாட்டு வினைக்குப் பேரளவு மாறியுள்ளன. அதே சமயம் அமெரிக்க ஆங்கிலத்தில் செயப்பாட்டு வினைகள் மட்டந்தட்டப்பட்டு, செய்வினைகள் ஊக்குவிக்கப்பெறுகின்றன. பழங்காலத்திய நுட்பமான தமிழ் வினையெச்ச முற்று வகைகள் மலையாள மொழியில் இன்று தக்கவைக்கப் பெற்றுள்ளன. துணைவினைகளும் அடைமொழிகளும் பெருகியுள்ளன. இடக்கரடக்கல்களும் அவாய்நிலைகளும் புறந்தள்ளப் பட்டுவிட்டன. சிலேடை வீறிழந்து கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது. காலமாற்றம் சாதிக்காததுதான் எது?
புலமைக் காய்ச்சலுக்கும் கவிஞருக்கான உரிமத்துக்கும் நேரடித் தொடர்பு இல்லாதது போலத் தோன்றும். ஆனால் காலங்காலமாக அவை ஒன்றையொன்று ஊக்குவித்துக் கொண்டும் தாக்கிக்கொண்டுமே வந்துள்ளன. புலமைக் காய்ச்சல் வெளிப்பட உதவுபவை — கவிஞர்க்கான உரிமத்தைக் கையிலெடுத்துக்கொண்டு அறிந்தோ அறியாமலோ கவிஞர்கள் விளைவிக்கும் கால – இட – வரலாற்று – இலக்கண வழுக்களே என்பது இக்கட்டுரையின் முடிநிலை.
******
உதவிய நூல்கள்(கருத்து வரிசைப்படி):
செயராமன், இ., காலந்தோறும் அவ்வையார், வேமன் பதிப்பகம். 19, நியூ காலனி, ஜோசியர் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை – 600 034. முதற் பதிப்பு 2002.
Universal Deluxe Dictionary, 72, Ashtalakshmi Nagar, MadukkaraiRoad, Sundarapuram, Coimbatore – 641 024. name of the author and date of publication – not noted.
Abrams, M.H., A Glossary of Literary Terms, Harcourt, Inc. Reprint 2001.
அருணாசலம், மு., தமிழ் இலக்கிய வரலாறு[நூற்றாண்டு முறை], காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை. முதற் பதிப்பு 1977.
மாணிக்கம், புலவர் அ., தனிப்பாடல் திரட்டு (இரு பகுதிகள்), பூம்புகார் பதிப்பகம், 63, பிராட்வே, சென்னை – 600 108. முதற் பதிப்பு 1977.
வைரமுத்து, வைரமுத்து கவிதைகள்(கலைஞர் ஆய்வுரை), சூர்யா வெளியீடு, #22 நான்காம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை-24. முதற் பதிப்பு 2000.
வைரமுத்து, வைரமுத்து திரைப்பாடல்கள், மேலது. முதற் பதிப்பு 1993.
சிலோன் விஜயேந்திரன், மறக்க முடியாத திரைப்பாடல்களும் பாடலாசிரியர்களும், சோனம் பதிப்பகம், 243, T.H. சாலை, [ரத்னா கேப் அருகில்], திருவல்லிக்கேணி, சென்னை-5. முதற் பதிப்பு 1992.
****
karuppannan.pasupathy@gmail.com
- சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை ! -6
- விநாயகர் துதி!
- மரணம் அழகானது
- (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -1 ஆண்டனி & கிளியோபாத்ரா இறுதிக் காட்சி (கிளியோபாத்ராவின் முடிவு)
- கடிதம்
- கடிதம்
- கலைச்செல்வன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு நிகழ்வு
- ஒரு தாயின் புலம்பல்
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 16
- ஈரோடு புத்தகத் திருவிழா – 2007
- நல்லடியாருக்கு / மலர்மன்னனுக்கு நான்கு கேள்விகள்:
- தமிழ் இலக்கியத் தோட்டம் – வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது
- அரவிந்தன் நீலகண்டனின் அற நெறி!?
- கவிதை சுடும் !
- பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் – 9
- சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ்
- புலமைக் காய்ச்சலும் கவிஞருக்கான உரிமமும்
- அன்பாதவனின் ‘மாயவரம்’ (ஹைபுன்கள்), ‘மனத்தினுள் மழை’
- மைதாஸ்
- ஓவியத்தில் இருந்து நான் ஓவியத்தை எடுப்பதில்லை ஓவியர் கா. பாஸ்கருடனான கலந்துரையாடல்
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 20
- வீராயி
- தீர்வு
- நாட்டாண்மை, பஞ்சாயத்து மற்றும் ஜமாத்தார்களுக்கு!
- வெள்ளை மாளிகை வல்லரசர் !
- காதல் நாற்பது – 31 என்னை நெருங்கி நில் !
- மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்புகளும், கோவை எதிர்பார்ப்புகளும்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபது: இந்திராவின் சந்தேகம்!
- போர் நாய்
- புரிந்துகொள்ளல்