தேவமைந்தன்
சில மாதங்களுக்கு முன்னர், பிரான்சு நாட்டிலிருந்து உயர்கல்வியியல் வல்லுநர்கள், புதுவையிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு, கல்வி மதிப்பீட்டு வருகையை மேற்கொண்டார்கள். பிரஞ்சுத் துறையொன்றுக்குச் சென்று பலவகையான மதிப்பீடுகளைச் செய்த பின்பும் மனநிறைவு பெறாமல், அத்துறைப் பேராசிரியர்களை நோக்கிக் கேள்வியொன்றை எழுப்பினார்கள்.
“நாங்களும் வந்திருந்ததிலிருந்தே பார்க்கிறோம். நீங்கள் உங்கள் துறையின் தலைவராக உள்ளவரைப் பெயர் சொல்லாமல் பதவிப் பெயரைக் குறிப்பிட்டே சொல்கிறீர்கள். அப்படி என்ன உங்களுக்கும் அவருக்கும் பணிஉறவில் நெடுந்தொலைவு? இப்படி இருந்தால் எப்படித் தங்குதடைகளற்று மேற்கல்விப் பணிகளுக்கு நீங்கள் திட்டமிடுதலும் செயலாற்றலும் சாத்தியம்?”
இதுதான் அந்தக் குழுவினரின் முத்திரைக் கேள்வி. நண்பர்களால் உரிய பதில் சொல்ல முடியவில்லை. எப்படிச் சொல்ல முடியும்? அந்தத் துறைத் தலைவர்தாம் மற்றவர்களிடமிருந்து தன்னைப் பலவகைகளிலும் பிரித்துக் கொள்பவராயிற்றே! பெயரைச் சொல்லி அழைத்தால் என்ன ஆகும்? புதுச்சேரி மாநிலத்தின் பகுதிகளான மாஹிக்கோ ஏனாமிற்கோ பணியிடமாற்றலுக்குப் பரிந்துரையாக வேண்டி வந்தாலும் வரும்.. எதற்கு வீண்வம்பு? அழகாகப் புதுவையில் வாழ்வதா? அதை விட்டுவிட்டு கோதாவரிக்கரையில் உள்ள ஆந்திர ஏனாமுக்கும் தலைச்சேரி அருகில் உள்ள மாஹிக்கும் போய் ‘லோல்’படுவதா? துறைத் தலைவர் விரும்பினால் ‘ஞானிகளின் ஞானியே!’ என்றோ ‘நிர்வாக மாமேதையே!’ என்றோ அழைத்து விடுவதில் என்ன தவறு இருக்கப் போகிறது? ‘பாய்சோன்'(Boyzone Pop Singers) பாடகர்கள் பாடியதுபோல் “சொற்கள்…அவை வெறும் சொற்களே…” (“Words… it’s only words…”) என்று நினைத்துக் கொண்டால் போகிறது!
நம் குடும்பங்களில் கூட இப்பொழுதெல்லாம் பலருக்கு உறவுமுறைப் பெயர்களைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. சொல்லப்போனால் முப்பது வயதுக்கும் முப்பத்தைந்து வயதுக்கும் உட்பட்டவர்கள் கூட (அதாவது இன்றைய தேதியில் இந்த வயதுடைய இளைய தலைமுறையினர்) தங்கள் சொந்தபந்தங்களின் உறவுப் பெயர்களை உடனடியாகச் சொல்ல முடியாமல் திண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. குறிப்பாக நகர நாகரிகம் இவ்வாறு இவர்களை ஆக்கி இருக்கிறது.
பெருநகரங்களுக்கு ஒரு பத்துப் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி உள்ள சிற்றூர்களில் வாழும் இதே வயதுடையவர்கள், வயணமாக உறவுப் பெயர்களை இட்டு அழைப்பதிலும் சொல்லுவதிலும் அத்துப்படியாக இருக்கிறார்கள். இதற்கு ஒரு புதிர்க்கதையும் உண்டு.
பெண் ஒருத்தி, பேருந்து நிலையத்தில் குழந்தையோடு நின்றிருந்தாளாம். கிராமத்துப் பெண் அவள். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அவளை வளரிளம் பருவத்தில் பார்த்திருந்த ஒருவர், “ஏன்’மா! இந்தக் குழந்தை உன் குழந்தையா?.. ஆனால் வளர்த்தியாக இருக்கிறதே என்று கேட்க, அவள் உறவு முறையைப் பயன்படுத்திப் புதிராகப் பதில் சொன்னாளாம். ‘இந்தக் குழந்தையின் தகப்பனார், யாருக்கு மாமனாரோ அவருடைய தகப்பனார் எனக்கு மாமனார்!”
இந்தக் கதை, கே.பாலச்சந்தர் அவர்களின் திரைப்படம் ஒன்றில் சற்று மாற்றிப் பயன்படுத்தப்பட்டிருப்பதை இதை வாசிக்கும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
இப்பொழுது பத்து வயதுள்ள பிள்ளைகள் பலர், பெருநகரங்களில் இந்த வயதுள்ளோர் அனைவருமே, தங்கள் நெருங்கிய உறவுகளை அவர்களின் இயற்பெயர்களைக் கொண்டே அழைக்கின்றனர். அப்பா, அம்மாவைக் கூட… குறிப்பாக அத்தை மாமாவை…’மாமா’ என்று சொல்ல அசிங்கப்படுகிறார்கள். தவிர, யாரை அவர்கள் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்களோ அவர்களோடுதான் அவர்களுக்கு நெருக்கம் இருக்கிறதாம்.. மற்றவர்களிடம்?…’டிஸ்டன்ஸ்’ உள்ளதாம்…
என்ன சொல்ல..? பண்பாட்டு மூலக்கூறுகள் பல அழிந்து வருவதில் இது அண்மையது. “எல்லாம் ஆங்கிலக் கல்வியால்தான்!” என்று மொழிவாணர்கள் கூறுகிறார்கள்; முற்போக்குவாதிகள், இதுவும் நகர்மயமாதல் + எந்திரமயமாதல் + நுகர்வுக் கலாச்சாரத்தையடுத்த ‘தாராளமயமாத’லின் அடையாளங்களே என்று கருதுகிறார்கள்.
இவற்றுக்கு அப்பால் நண்பர்களை, ‘மச்சான்’..அப்புறம், ‘மச்சி’.. என்றெல்லாம் உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டது போய், ‘நாயே!’ என்று அன்பாக(?) அழைக்கும் முறை வந்துள்ளதை வளரிளம் பருவத்தினரிடம் காண முடிகிறது. உயிரிரக்கம்(ஜீவகாருண்ணியம்) என்று இதை நாம் பெருமைப் படுத்தலாம். அவ்வளவுதான்.
****
karuppannan.pasupathy@gmail.com
- கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்
- புதுக்கோட்டை மன்னர் கல்லூரி கருத்தரங்கம் – 11/12/2006
- இலை போட்டாச்சு! – 5 – அவியல்
- ‘இளைஞர் விழிப்பு’
- அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..
- சூபியின் குழப்பம்
- ஜார்ஜ் ஒர்வலின் 1984
- கடித இலக்கியம் – 35
- சிங்கப்பூர் கணையாழி விருது-2006
- ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்
- ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை
- புதுமைப் பித்தன் இலக்கிய சர்ச்சை(1951-52)
- ‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது’ -தொகுப்பின் கதை
- புதிய நாகரிகம்: சொந்தப் பெயர்களுக்கே முதன்மை
- தமிழன் (கி . மு . 2000, கி . பி . 2000)
- ஒன்று ! இரண்டு ! மூன்று !
- மனு நீதி
- பெரியபுராணம் – 115 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (102) உன் மர்மங்களை அறியேன்!
- தேவதையின் கையில்
- இயான் ஹாமில்டன் கவிதைகள்
- சுஜாதா பட் கவிதைகள்
- கற்றுக் கொள்ள – “எதிர்ப்பும் எழுத்தும்- துணைத் தளபதி மார்க்கோஸ்”(தமிழில் மொழிபெயர்ப்பு: எஸ்.பாலச்சந்திரன்)
- அரபுநாடுகளில் கம்யூனிஸ்ட் இயக்கம்
- எது ‘நமது’ வரலாறு?
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:7) ஜூலியஸ் சீஸர் படுகொலை.
- சுயம்பிரகாசம்
- அவல்
- எஸ். ஷங்கரநாராயணன் புதிய நாவல் “நீர்வலை” : வலைகளினால் பின்னிய நாவல் (முன்னுரை)
- ம ந் தி ர ம்
- மடியில் நெருப்பு – 15
- வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 14