ரிச்சர்ட் பி. ஃபெய்ன்மான்
ஒரு மலரின் அழகு
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு கலைஞர். சிலசமயம் நான் உடன்பட முடியாத ஒரு நிலைபாட்டை அவர் மேற்கொள்வதுண்டு. ஒரு மலரைக் காட்டி ‘இதோ பார் இந்தப் பூ எவ்வளவு அழகாய் இருக்கிறது. ‘ அவர் மேலும் சொல்வதுண்டு : ‘ஒரு கலைஞனாக என்னால் இந்தப் பூ எவ்வளவு அழகென்று உணரமுடிகிறது. ஆனால் விஞ்ஞானியாக நீ இதை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து விடுவதால் பூ, அழகை இழந்து, மிக அலுப்புத் தரும் ஒன்றாக மாறிவிடுகிறது. ‘ இது பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறது. ஒரு மலரின் அழகு என்பது எல்லோருக்கும் – நான் உட்பட – காணக் கிடைக்கின்ற ஒன்று. நான் நண்பரைப் போல அழகியலில் தோய்ந்திராவிட்டாலும், எனக்கும் இந்த அழகு உணர முடிகிறது. அதே சமயம் ஒரு மலரை நான் பார்ர்கும் பார்வையில் என நண்பனுக்குப் பார்க்கக் கிடைப்பதைக் காட்டிலும், எனக்கு ஏராளமான அழகான விஷயங்கள் காணக் கிடைக்கின்றன. இந்த மலரின் செல்களைக் காணமுடியும், என்னால், இந்த மலருக்கும் நிகழும் செயல்களின் அழகையும் காணமுடியும். வெளிப்பார்வைக்குக் காணக் கிடைக்கும் அழகைக் காட்டிலும் , இதன் உள்ளழகு இன்னமும் பிரமிப்பு ஊட்டுவது. அதில்லாமல் இதனடியில் நடக்கும் பல விஷயங்களும் அழகியவையே. உதாரணமாக மலரின் நிறம் வண்டுகளைக் கவர்கிறது. மகரந்தச் சேர்க்கைக்குக் காரணமான இந்தச் செயல் வண்டுகளுக்கு நிறம் அர்த்தமாவதாகக் கொள்ளலாம். இது இன்னொரு கேள்வியையும் எழுப்புகிறது : அழகியல் உணர்வு மனிதர்களுக்குக் கீழே உள்ள ஜீவராசிகளிடமும் உள்ளனவா ? எனில் ஏன் இது அழகியல் ? இது போன்ற சுவாரஸ்யமான கேள்விகள், ஒரு மலர் பற்றிய விஞ்ஞான ஆய்வு . மலர் மீதான வியப்பையும், மர்மத்தையும் அதிகப் படுத்துகிற வியப்பான விஷயம் அல்லவா ? விஞ்ஞான அணுகல் மலரின் அழகியலுக்கு மேலும் அணி சேர்க்கிறதே தவிர, எப்படி அதன் அழகியல் துய்ப்பைக் குறைக்கும் என்று எனக்கு விளங்கவில்லை.
*******
கலைத் துறைகளைத் தவிர்ப்பது பற்றி
நான் விஞ்ஞானத்தைக் குறித்து கொண்டுள்ள பார்வை விஞ்ஞானத்துக்கு ஒருதலைப் பட்சமான முக்கியத்துவம் கொண்டது தான். நான் இளைஞனாய் இருந்த போது என் கவனம் முழுதும் விஞ்ஞானத்தின் மீதே நான் செலவிட்டேன். இதனாலேயே (விஞ்ஞானம் தவிர்த்த , வரலாறு, பொருளாதாரம் போன்ற) கலைத்துறைகள் பயில எனக்குப் பொறுமை இல்லை. ஆனால் பல்கலைக் கழகங்களில் இந்தப் பாடங்களையும் பயில வேண்டுவது கட்டாயம். இவற்றைத் தவிர்க்கத்தான் நான் முயன்று வருகிறேன். வயதானபின்பு, ஓய்வு கிடைக்கும் போது, பரவலாய் அறிய முயன்றிருக்கிறேன். நான் வரையவும், கொஞ்சம் மற்றதைப் படிக்கவும் செய்யலானேன். ஆனாலும் நான் ஒருதலைப் பட்சமான ஆள் தான். என் சொல்ப அறிவை ஒரு குறிப்பிட்ட திசையில் தான் செலுத்த முயல்கிறேன்.
*********
ஜன்னலில் டைரனாசரஸ்
வீட்டில் ‘பிரித்தானியக் கலைக் களஞ்சியம் ‘ இருந்தது. நான் சிறுவனாக இருக்கும்போதே, என் அப்பா என்னை மடியில் இருத்தி ‘கலைக் களஞ்சிய ‘த்திலிருந்து படிப்பார். உதாரணமாக, டைனோசார், ப்ராண்டாசரஸ் போன்ற பழைய உலகின் பிரமாண்டமான விலங்குகளைப் பற்றிப் பேசும் போது, கலைக் களஞ்சியத்தில் ‘இதி இருபது அடி உயரம். தலை ஆறடி முன்னால் நீளவல்லது ‘ என்று இருக்கும். இந்த இடத்தில் அப்பா படிப்பதை நிறுத்திவிடுவார். ‘ இதன் அர்த்தம் என்ன என்று பார்க்கலாம். இந்த மிருகம் நம் வீட்டின் வெளியே நின்றால் முதல் மாடி ஜன்னல் வரை உயரமாய் இருக்கும். ஆனால் ஜன்னலுக்குள் தலையை நீட்ட முடியாது, தலை பெரிதாய் இருப்பதால், ஜன்னலை உடைக்க வேண்டியிருக்கும். ‘
அதனால் நான் படித்ததெல்லாம் ஒரு விதமான மொழியாக்கம் செய்யபப்ட்டு எனக்குக் கிடைத்தன. இதனால் நான் படிப்பதெல்லாம் எப்படி அர்த்தமாகின்றன என்று யோசிப்பதும் எனக்கு வாய்த்தது. கலைக் களஞ்சியத்தை மொழியாக்கத்துடன் படித்ததால், இப்படிப்பட்ட மிருகங்களைக் கற்பனை செய்வதே வியப்புத் தரும் விஷயமாய் இருந்தது. உடனே இது என் ஜன்னலில் எட்டிப் பார்க்கும் என்ற பயம் எனக்கில்லை, ஆனால் சுவாரஸ்யமாய் இருந்தது. திடாரென்று இந்த பிரமாண்டமான மிருகங்கள் இறந்து போய் விட்டன, ஏனென்று யாருக்கும் தெரியவில்லை.
நாங்கள் கேட்ஸ்கில் மலைக்குப் போவதுண்டு. நாங்கள் நியூ யார்க்கில் இருந்தோம். கோடைக் காலத்தில் பலரும் கேட்ஸ்கில் மலைக்குப் போவது வழக்கம். மற்ற பையன்களின் அப்பாக்கள் நியூயார்க்கிற்கு வர நாட்களில் போய்விட்டு, வார இறுதி விடுமுறைக்கு வருவார்கள். என் அப்பா வார இறுதிக்கு வரும்போது என்னை காட்டுப்பகுதிக்குள் நடத்தி அழைத்துச் செல்வார். மற்ற அப்பாக்களும் தம் மகன்களை அழைத்துச் செல்ல முயன்றாலும், அவர்களுடன் சுவாரஸ்யமாகப் பேச முடியாது. என் அப்பாவும் தம்முடைய மகன் மகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள். ஆனால் என் அப்பா என்னுடன் ஒரு சிறப்பான உறவைக் கொண்டிருந்தார் என்பதால் , என்னை மட்டுமே அழைத்துச் செல்ல விரும்புவார். ஒரு திங்கள் கிழமை எல்லா அப்பாக்களும் போய்விட்ட பிறகு, ஒரு பையன் காட்டில் ஒரு பறவையைக் காட்டிக் கேட்டான். ‘ அந்தப் பறவையைப் பற்றி உனக்குத் தெரியுமா ? ‘ ‘எனக்குத் தெரியவில்லை ‘ என்று நான்சொன்னேன். ‘அது பழுப்புக் கழுத்துக் குருவி. உன் அப்பா உனக்கு எதுவுமே சொல்லித்தரவில்லை. ‘ என்றான். ஆனால், உண்மை என்னவென்றால் என் அப்பா எனக்குக் கற்பித்திருந்தார். ஒரு பறவையைப் பார்த்து அவர் சொல்கிறார் ‘ அது பார்த்தாயா ? இது பழுப்புக் கழுத்துக் குருவி. ஆனால் போர்த்துகீசிய மொழியில் … இதாலிய மொழியில் இதை … என்று அழைப்பார்கள். சீன மொழியில் இதன் பெயர்… ‘ சொல்லிவிட்டுச் சொல்வார். ‘ இப்போது பல மொழிகளில் இந்தப் பறவையை எப்படி அழைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாய். ஆனால் அந்தப் பறவையைப் பற்றி உனக்கு எதுவுமே தெரியாது. ஒவ்வொரு மொழியிலும் அதன் பெயர் என்ன என்று தெரிந்து கொள்வது அந்தப் பறவையைப் பற்றிய அறிவல்ல. இப்போது நாம் பறவையைப் பார்க்கலாம் ‘ என்பார்.
எனக்கு விஷயங்களை உன்னிப் பார்க்கக் கற்பித்திருந்தார். ஒரு சிறு ஊர்தியைத் தள்ளிக் கொண்டு நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, என் வண்டியில் ஒரு பந்து இருந்தது. நான் வண்டியை இழுத்தபோது அந்த பந்தும் அங்குமிங்கும் அசைந்தது. இது பற்றி நான் அப்பாவிடம் கேட்டேன் , ‘ அப்பா நான் இதைக் கவனித்தேன். என்வண்டியை இழுக்கும் போது பந்து வண்டியின் பின்னால் போய் விடுகிறது. திடாரென்று வண்டியை நிறுத்தினால் பந்து வண்டியின் முன்னால் போய் விடுகிறது. இது ஏன் ? ‘ அப்பா சொன்னார், ‘ இது ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக ஒரு பொருள் நகரும் போது நகர்ந்து கொண்டே இருக்கும், நிலையாய் இருந்தால் நிலையாய் இருக்கும். நீ அதைத் தள்ளினால் தான் இது மாறும். இதை ‘இனெர்ஷியா ‘ என்று அழைக்கிறார்கள். ஆனால் இது ஏன் என்று யாருக்கும் தெரியாது. ‘ இது மிக ஆழமான புரிதல். அவர் உடனே எனக்கு ஒரு பெயரைச் சொல்லிவிடவில்லை. ஒரு பொருளின் பெயரைத் தெரிந்து கொள்வதும், அந்தப் பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதும் வேறு வேறு என்ற விஷயம் எனக்கு மிக இளமையிலேயே அவர் கற்பித்திருக்கிறார். அவர் மேலும் சொன்னார். ‘ இன்னும் நீ கவனமாய்ப் பார்த்தால், அந்தப் பந்து நகரவில்லை. உன் வண்டி தான் முன்னால் நகர்கிறது. பந்து முன்னால் இருந்த இடத்தில் வண்டியின் முன்பகுதி அல்லது பின்பகுதி வந்திருக்கிறது என்று உனக்குப் புரியும் ‘ என்றார். நான் ஓடிப் போய் மறுபடியும் பந்தை வண்டியில் இருத்தி முன்னும் பின்னும் இழுக்கலானேன். அப்பா சொன்னது சரிதானா என்று கவனமாய்ப் பார்த்தேன். பந்து நகரவில்லை. வண்டி தான் முன்னும் பின்னும் நகர்ந்தது. நடைபாதையுடன் ஒப்பிடும் போது பந்து நகரவில்லை, வண்டி தான் முன்னும் பின்னும் போகிறது, பந்து முன்னால் இருந்த இடத்தில் இழுவையால் வண்டியின் பின் பகுதியும் முன்பகுதியும் இருக்கக் கண்டேன்.என் அப்பா தான் எனக்கு அருமையான ஆசிரியர். உதாரணமும், விவாதமும் தந்து எனக்கு மிக சுவாரஸ்யமாய் கற்பித்தார்.
********
(தமிழில் : கோ.ராஜாராம்)
- 33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
- முதியவனை நினைவிருக்கிறத ‘ ?
- தனிமை வேண்டுகிறேன்
- அறிவியல் மேதைகள் இராமாநுஜம் (Ramanujam)
- புதியன அறிதலின் மகிழ்ச்சி
- பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டாஃபென் ஹாக்கிங்
- புளூட்டோவைத் தாண்டி இருக்கும் கிரகம் ?
- சுடர் விட்டெரியும் வாழ்வு
- மனசாட்சியின் கதவு (எனக்குப் பிடித்த கதைகள் -32 -மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘மஸுமத்தி ‘)
- கண் உறங்கா….!
- திண்ணை அட்டவணை- அக்டோபர் 13, 2002
- அழுக்கும் நானும்
- ஈரம் தொற்றிய இருப்பின் கவிதைகள்
- மழைத்துளியா ?மறுபிறவியா ?
- மருந்து
- பாரதியாக முயன்று….
- சூத்ரதாரியின் மூன்று கவிதைகள்
- தொல்லை
- சொல்லே வெடிகுண்டு : தேவை பொறுப்புணர்வு
- நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)
- பரிசு
- ஒரு பேனா
- கோபம்
- நடந்தாய், வாழி
- பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடிகுண்டுகள் உடைக்கின்றன
- வருக… அடுத்த முதல்வர் டாக்டர் பாரதிராஜா அவர்களே…
- மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்
- தெளிவு
- 33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா
- இன்னுமா மெளனம் ?
- சில விவாதங்கள்
- குறும்பாக்கள்
- இயலை விஞ்சி விட்ட செயல்
- முல்லை = பாலை
- அம்மா நீ ரொம்ப மோசம்!